அதிகாலை பொழுது. அந்த அடுக்குமாடிக் குடியிருப்பே அமைதியில் ஆழ்ந்திருக்க ஒரு ஃப்ளாட்டில் மட்டும்
“அண்டமாய் அவனியாகி அறியொணாப் பொருளது ஆகித்
தொண்டர்கள் குருவுமாகித் துகள் அறு தெய்வமாகி
எண்திசை போற்ற நின்ற என் அருள் ஈசன் ஆன
திண்திறள் சரவணன்தான் தினமும் என் சிரசைக் காக்க… ”
என்று ஷண்முக கவசத்தைப் பாடிக்கொண்டிருந்தது தொலைக்காட்சி.
குளித்து முடித்த கூந்தலில் ஈரம் சொட்டிக் கொண்டிருக்க, தன்னுடைய நீண்ட கூந்தலைக் குனிந்து தட்டிக் கொண்டிருந்தாள் மாதங்கி. செயற்கையாகத் திருத்தப்படாமலே அழகூட்டும் புருவங்கள். பாலில் விழுந்த திராட்சை போன்ற கண்கள். கூர்மையாய் இல்லாவிட்டாலும் எடுப்பான மூக்கு. கோவைப்பழமெனச் சிவந்த இதழ்களுக்கு ஒளியூட்டியது அதில் உறைந்திருக்கும் கள்ளச்சிரிப்பு. ஆக மொத்தத்தில், அவள்
“தேவதை அவள் ஒரு தேவதை
அழகிய பூ முகம் காணவே ஆயுள் தான் போதுமோ
காற்றிலே அவளது வாசனை
அவளிடம் யோசனை கேட்டுத் தான்
பூக்களும் பூக்குமோ
நெற்றி மேலே
ஒற்றை முடி ஆடும்போதும்
நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும்
பார்வை ஆளைத் தூக்கும்
கன்னம் பார்த்தால்
முத்தங்களால் தீண்டத் தோன்றும்
பாதம் இரண்டும் பார்க்கும் போது
கொலுசாய் மாற தோன்றும்…”
தலைமுடி நுனியில் கொண்டையிட்டு கொண்டு சமையல் வேலைகளை ஆரம்பித்தாள். காலை சிற்றுண்டியாக இட்லியும் வத்தக்குழம்பும் மதியத்திற்குச் சாதம் உருளைக்கிழங்கு பொரியல் செய்து முடித்து இரண்டு சம்படத்தில் எடுத்து வைத்தாள். வேகமாக மணியைப் பார்த்தாள் 7.40எனக் காட்டியது. அவசரமாகச் சென்று மற்றொரு அறையின் வாயிலிலிருந்த அழைப்பு மணியை அழுத்தினாள். அறைக்குள் அரவம் எதுவும் கேட்கிறதா என்று கவனித்தாள். அமைதியாகவே இருக்கவும் மீண்டும் ஒருமுறை பலமாக அழுத்தினாள். இப்போது அறைக்குள் அரவம் கேட்கவே, விரைந்து சென்று அடுப்படிக்குள் மறைந்தாள்.
ஆழ்ந்த நித்திரையிலிருந்த விதுரன் அழைப்புமணி ஒலியில் துயில் கலைந்தான். பின்னர் காலைக்கடன்களை முடித்து, யோகாசனம் செய்ய அமர்ந்தான். அதை வெளியே இருந்தவாறே கவனித்த மாதங்கி தினமும் அவன் அருந்தும் சத்துணவு கஞ்சியைக் கொண்டுவந்து அவன் அறைவாயிலில் இருந்த மேசையில் வைத்தாள். பின் அறைக்கதவில் மாட்டியிருந்த வெள்ளைப் பலகையில் எதையோ எழுதினாள். பின்னர் மீண்டும் சமையலறைக்குள் புகுந்தாள்.
விதுரன் ஆறடி ஆண்மகன். உயரத்திற்கேற்ற உடல். சுருக்கமாகச் சொன்னால் அவன் ஒரு கருப்பு பேரழகன். உடற்பயிற்சியை முடித்த விதுரன் அறை வாயிலில் அவள் வைத்துச் சென்ற கஞ்சியை எடுத்துப் பருகினான். அவன் கண்கள் அந்த வெள்ளை பலகையில் பதிந்தது. அதிலிருந்த செய்தியைப் படித்தவன் ஒரு பெருமூச்சுடன் சமையலறையை நோக்கினான். அவனும் அந்தப் பலகையில் அங்கிருந்த பேனாவால் சரி(✓) என்ற குறியை வரைந்தான். மேலும் பல சிரித்த முகம் கொண்ட பொம்மைகளையும் வரைந்தான்.
பின்னர் அறைக்குள் சென்று குளித்துக் கிளம்பி வந்தான். அவன் அலுவலகம் செல்ல தயாராகி வெளியே வரும்போதே வீட்டு வாயிலில் மாதங்கியும் கிளம்பி ஒருகையில் அவனுக்குச் சாப்பாட்டு பை மற்றொரு கையில் தனது கைப்பையுடன் நின்றாள். (இடையில் அவன் வரைந்த பொம்மைகளில் அவள் பொழிந்த முத்த மழை அவன் அறியாதது.) அவன் மனதில் ஒரு மெச்சுதல். சாவி மாட்டுத்திடத்தில் சாவியெடுக்க போனவன் கேள்வியாக அவளைத் திரும்பிப் பார்த்தான். அவள் சிறிதும் சலனமின்றி நின்றாள். சிறு தலையசைப்புடன் கார்ச்சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பி மின்தூக்கியில் கீழே வாகனம் நிறுத்துமிடம் சென்றனர்.
அவள் ஏற கார்கதவை திறந்தவனைத் தலையசைப்புடன் மறுத்து தனக்காக வரச் சொல்லியிருந்த ஆட்டோவில் ஏறிக்கொண்டாள்.அவன் முகத்தில் எரிச்சல் மண்டியது. ‘கிராதகி பாடா படுத்துகிறாள். எல்லாம் நீ பார்த்த வேலை தான். போதும் நிப்பாட்டு.’ என்று தன் மனசாட்சியை அடக்கியவன் ஆட்டோ ஓட்டுநரிடம் செல்ல வேண்டிய கோவிலைக் கூறி காரில் சென்று அமர்ந்து அதனைக் கிளப்பினான்.
காரை ஓட்டும் போதும் அவன் சிந்தனை முழுவதும் அவனவளே ஆக்கிரமித்தாள். ‘திமிறு! உடம்பெல்லாம் திமிறு! ஏன் பிறந்தநாள் வாழ்த்தக் கூட வாயால் சொல்லமாட்டாளோ! ராங்கிக்காரி! படித்தது பத்தாங்கிளாஸ்தான் ஆனால் பிடிவாதத்தில் பி.எச்டி பண்ணிருப்பாள் போல.’
‘அமைதியா கங்கா மாதிரி இருந்த பிள்ளையை சந்திரமுகி பேயா மாற்றின பெருமை உன்னையே சேரும் டா.’
‘டேய்! நீ எனக்கு மனசாட்சியா இல்லை அவளுக்கா?’
‘உண்மையை யார் வேண்டும் என்றாலும் வாதிடலாம் ப்ரோ.’
‘நீ ஒரு டேஷும் வாதிட வேண்டாம். மூடிட்டு கிளம்பு.’ அவன் மனசாட்சியை அடித்து விரட்டியபடியே கோவிலில் தன் காரை நிறுத்தினான்.
சரியாக அதே நேரம் ஆட்டோவும் கோவிலை அடைந்தது. இருவரும் சேர்ந்தே கோவிலுள் சென்றனர். அங்கே பூ விற்றுக் கொண்டிருந்த அம்மாவோ,”எப்பா பார்க்க இவ்வளவு டிப்டாப்ப இருக்கியே! பொண்டாட்டிக்குக் கோயிலுக்கு வந்தால் பூ வாங்கி தரனும்னு தெரியலையா? இந்த காலத்து ஆம்பளைங்க அப்படி இருக்காங்க! எங்க காலத்திலெல்லாம் வெளிய வந்தாலே பொண்ணுங்களுக்கு முதல் வேலையா பூதான் வாங்கிக் குடுப்பாங்க அவுங்க புருசங்க! இப்போ என்னடான்னா லவ்விர்ஸ் டேக்கு மட்டும் தான் பூவே வாங்கி தாராய்ங்க அதுவும் பத்து ரூபா ரோசாப்பூவோட முடிச்சிக்கிறாங்க!”
‘கிளவி வேற எறிகிற நெருப்பில் கிருஷ்ணாயில ஊத்துறாளே! நம்மளையே இப்படி பேச்சிலையே பொரிச்செடுக்குதே புருசனா இருக்கவன்லாம் செத்தான்! நம்மாளு எவ்வளவோ பரவாயில்லை!’ என்றவாறே மாதங்கி பார்த்தான்.
அவனது மனதிலிருப்பதை ஊகித்தவளோ அவனை முறையோ முறையென முறைத்தாள்.
‘ஆகா! கர்டுபுடிச்சிட்டாளோ? சரி சரி சமாளிப்போம்.’
“இப்ப என்ன பாட்டி என் பொண்டாட்டிக்கு பூ வாங்கிக் குடுக்கனும் அவ்வளவு தான? மல்லிப்பூ அஞ்சு முழம் குடுங்க” என்று வாங்கினான்.
‘கிழவி பேசுனதுல வீராப்பா வாங்கிட்டோம் வச்சுக்குவாளா? தெரியலையே!’ என்றவாறே பூவை நீட்டினான் அவளிடம். மற்றவர்கள் முன் காட்சிப்பொருளாக விரும்பாத மாதங்கி அவனிடமிருந்து வாங்கிக்கொண்டாள்.
‘ஜடம்! இதுவா வாங்குமாக்கும் பூவை ஏதோ அந்த பாட்டி அறிவுரைனு அறோஅறுனு அறுத்ததுல வாங்கிருக்கான்.’
‘இல்லாட்டி மட்டும் அவன் வாங்கிகுடுத்தா நீ வச்சுட்டு தான் மறுவேலை பார்ப்ப பாரு. நீயே அவன் மேல கோபமாதான இருக்க அப்பறம் என்னடி?’
‘உன்னை இப்போ யாராச்சும் வந்து விளக்கவுரை கொடுக்க கூப்பிட்டாங்களா? உன் வேலையைப் பார்த்துக்கிட்டு போயேன்!’ என்று மனசாட்சியை விரட்டி விட்டு கணவனுடன் கோவிலிற்குள் சென்றாள்.
நொந்துபோன இருவரின் மனசாட்சியும் ‘இவிங்க இரண்டுபேரும் எக்கேடும் கெடட்டும் வாடா டார்லிங் நாம ஸ்விட்சர்லாந்துல போய் சுத்தி சுத்தி டூயட் பாடுவோம்’என்று பறந்தன.
கோவிலில் அர்ச்சனை தட்டை பூசாரியிடம் கொடுத்து எப்படியும் பெயர் நட்சத்திரம் சொல்லனுமில்லை என மனதுக்குள் ஆர்ப்பாட்டம் பண்ணிக்கொண்டு இருந்தான். அவளோ அர்ச்சனை தட்டைக் கொடுத்து அவனின் பெயரும் நட்சத்திரமும் எழுதிய சீட்டை அவரிடம் கொடுத்து அர்ச்சனை செய்தாள்.
‘ரொம்ப பண்ணுறாளே! காலையில் பிறந்தநாள் வாழ்த்துக்களை அறைக்கு வெளியில் எழுதி வைக்கிறாள். அதுக்குகூட பேசமாட்டாளாமா? எதாவது பண்ணியே ஆகனுமே இதுக்கு.’
‘ஏற்கனவே நீ பண்ணக் காரியத்துக்குத் தான் இந்த மௌனவிரதம் இன்னும் ஏதாச்சும் பண்ணி சொதப்புச்சு அவ்வளவு தான் ஜீவசமாதி தான் உனக்கு’ என்று சிரித்தது வேறுயாருமில்லை அவன் மனசாட்சியே தான்.
‘இன்னுமா நீ போகலை?’என்றவாறே அடிப்பதற்குப் பொருள் தேடினான்.
‘வாங்க டார்லிங் நாம போகலாம்’ என்று இழுத்துச் சென்றது மாதுவின் மனசாட்சி.
‘காரில் வேற வரமாட்டேன்னு ஆட்டோவில் போகிறாள், திமிர்பிடித்தவள்!’ ஒருவழியாக அவன் தான் வேலை பார்க்கும் மென்பொருள் அலுவலகத்துக்கும் அவள் தனது வீட்டிற்கும் தனித்தனியாய் சென்றனர்.
மாலைநேரம் வீட்டு வேலையில் ஈடுபட்டிருந்தவளை தொலைப்பேசி அழைப்பு கலைத்தது. ‘வேற வேலையே இல்லை நான் தான் பேச மாட்டேன் தெரியும் ல அப்பறமும் ஃபோன் போட்டு டார்ச்சர் பண்ணுறது. தூ! என்ன தான் மனுசனோ!’
இந்த தொலைப்பேசி இலக்கம் விதுரனிற்கு மட்டுமே தெரியும். அவளுக்குப் பாட்டியைத் தவிர வேறு சொந்தம் என்று யாருமில்லை. பாட்டியும் விதுரன் கைப்பேசிக்கே அழைப்பார். இது விதுரன் அவளுடன் பேசுவதற்காக மட்டுமே வாங்கிய இணைப்பு.
ரிசீவரை காதுக்குக் கொடுத்தவள் மறுமுனையில் கூறிய செய்தியில் அதிர்ந்து போனாள்.”எங்கே?”
“எப்படி?” அவள் கண்களிலோ இருதுளிக் கண்ணீர்.
???????
தொலைப்பேசி அழைப்பு சொன்ன செய்தியைக் கேட்டதிலிருந்து படபடப்புடன் காத்திருந்தாள். அழைப்பு தாங்கி வந்த விசயம் யாதெனில் விதுரனின் கேபின் அருகிலிருந்த சி.ஃஎப்.எல் பல்ப் உடைந்ததால் கண்களில் ஒவ்வாமை தொற்று பரவியுள்ளது.
ஆகையால் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குக் கண்களை சிரமப்படுத்தக் கூடாதென்றும் ஒரு பத்து நாளைக்காவது கண்களை முடிந்த அளவு மூடியே வைத்திருக்க வேண்டுமென்றும் மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.
வாயிலில் கேட்ட அழைப்பு மணியோசையில் நினைவு வந்தவளாக விரைந்து சென்று கதவைத் திறந்தாள். வெளியே கண்களில் கருப்புக் கண்ணாடியுடன் விதுரன் நண்பனின் தோளை ஆதரவாய் பற்றியபடி நின்றிருந்தான்.
“வாங்கண்ணா! உங்க ஃப்ரண்ட உள்ள கூட்டிட்டு வாங்க!” என்றவாறே கதவை விசாலமாகத் திறந்து வைத்தாள்.
‘பயங்கர வரவேற்பா இருக்கிறதே இந்த மாமனுக்கு! சீலாக் குட்டி! உன்னுடைய ஐடியா சூப்பர்டா தங்கம்!’ என்ற நினைத்தவாறே தன் நண்பனிடம் கண்ணடித்தான். இருவருமாகச் சேர்ந்து அவளறியாமல் வெற்றிக் குறி செய்தனர்.
“ராஜாண்ணா! அவங்கள இங்க டைனிங் டேபிளுக்கு கூட்டிட்டு வாங்க. இரண்டு பேரும் சாப்பிடுங்க.”
“இல்லைம்மா டைம்மாச்சு இன்னொரு நாள் வந்து சாப்பிடுறேன்மா. இப்பொழுது கிளம்புறேன்” என்றுவிட்டு விதுரனிடம் இரகசிய மொழியில்,”மச்சான் அனுபவி ராஜா அனுபவி! நான் எதற்குப் பூஜை வேலை கரடி மாதிரி?”என்று கேட்டுவிட்டுக் கிளம்பினான்.
பல நாட்களுக்குப் பிறகு கிடைக்கப் போகும் மனைவியின் பரிவும் பாசமும் அவனைப் பித்தனாக்கியது. ஆசையும் காதலும் போட்டிப்போட அவள் அருகாமைக்காகக் காத்திருந்தான். அவன் காத்திருப்பைப் பொய்யாக்காமல் சாப்பாட்டுப் பாத்திரங்களைக் கொண்டு வந்து வைத்தாள்.
சாப்பாட்டைத் தட்டில் எடுத்து வைத்தவாறே,”இந்தாங்க சாப்பிடுங்க! கண்ணுக்குக் கீரை வகைகள் தான் நல்லதுங்க. அதான் முருங்கை கீரை சூப், பொண்ணங்கண்ணி துவையல், மணத்தக்காளி கீரை குழம்பு, அறைக்கீரை பொரியல், குமிட்டிக் கீரை கடைசல் எல்லாம் வைக்கலாமென்று கீரை நிறைய வாங்கிட்டு வந்தேன். சமைச்சத விடப் பச்சையா சாப்பிட்டா தான் ரொம்ப நல்லதாம்ங்க! அதான் உங்களுக்காகச் சமைக்காமல் கீரையை நல்லா கழுவிக் குட்டி குட்டியாக நறுக்கி சாலட் பண்ணிருக்கேன்ங்க. சாப்பிடுங்க!” என்று பச்சை இலைகளால் நிறைந்த ஒரு கிண்ணத்தை அவனிடம் நீட்டிவிட்டு தனக்காக ஒரு தட்டை எடுத்து சாதம் வைத்தாள்.
‘ஐயோ! கடவுளே கீரையா? சும்மாவே சாப்பிடமாட்டேன். இதில் பச்சையா வேற குடுக்குறாளே! புருசனை ஆடு மாடு மாதிரி ட்ரீட் பன்றாளே. எல்லாம் இந்த சீலா கொடுத்த ஐடியாவால வந்த வினை.’
‘அது அந்த மென்டல் கிட்ட ஐடியாக் கேட்கிறதுக்கு முன்னாடியே தெரிந்ததுதான்!’என்று சிரித்தது யாருனு உங்களுக்கே தெரியும் அவனோட மனசாட்சியே தான்.
விதுரன் முறைத்த முறைப்பில்,’டார்லிங் வாங்க ஓடிருவோம்! இவன் பார்வையே சரியில்லை’ என்றது மாதுவின் மனசாட்சி.
‘கடுப்பேத்தாம இரண்டு பேரும் ஓடிருங்க! சிக்குனீங்க நான் இருக்கிற பசியில உங்களைச் சில்லி பொடி தடவி ஃப்ரை பண்ணி சாப்பிட்டுறுவேன். ஜாக்கிரதை!’ என்றவன் கோபத்தில் ஜெர்க்கான அந்த ஜோடி இருவரும் ஜெட் பிடித்து பறந்தனர் ஜப்பானிற்கு.
புலம்பியவாறே கரண்டியில் பச்சை இலைகளைச் சாரி கீரைகளை அள்ளி வாயில் வைத்தான். அடுத்த நொடி குமட்டிக் கொண்டு வந்தது. மாது இருந்த பக்கம் திரும்பி,”என்னடி இப்படி கேவலமா வாடை வருது. இதை எப்படி சாப்பிடறது?” என்றான்.
“அது ஒன்னுமில்லைங்க விளக்கெண்ணெய் கண்ணுக்கு ரொம்ப நல்லதாம் அதான் கீரை சாலட்ல கொஞ்சமா ஒரு கப் விளக்கெண்ணெய் ஊத்துனேன். இதுக்கே இவ்வளவு ஆச்சரிய படுறீங்களே இன்னும் நிறையா சமையல் குறிப்பு பார்த்து வச்சிருக்கேன் கண்ணுக்கு. முப்பது என்னங்க முப்பது இன்னும் மூனே நாளுல உங்களை ஒரு வழியாக்கி சாரி சாரி சரியாக்கிக் காட்டுறேன்! இது உங்க மேல சத்தியம்!”
‘கண்ணு சரியாகுதோ இல்லையோ! நான் இதைத் திண்ணா என் வயிறு பீதியாகி பாதியகிரும் டி! பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காதென்று தான் சொல்லுவாங்க! கேவலமான சாப்பாட்டை போட்டாக் கொல்லுவாங்க!’
‘உப்பு திண்ணா தண்ணி குடிச்சு தான் ஆகனும் ப்ரோ!’
‘இருடி இன்னிக்கு நீ ஃப்ரை தான்!’
‘முதல்ல இந்த கீரையைச் சாப்பிடு ப்ரோ அப்புறம் உன் பொண்டாட்டியே நிறைய புதுசு புதுசா சாப்பாடு செஞ்சி தந்து உன்னைக் கொஞ்சப் போறாங்களாம்.’
‘என் நிலைமையை பாரேன், கேவலம் என்னோட சொந்த மனசாட்சி கூட என்னை வச்சு செய்யுது! எல்லாம் விதி!’
‘சரி சரி ரொம்ப புலம்பாத அவ சாப்பிட தந்த இலைகளை எப்படியாவது சாப்பிட்டு முடி. அவளுக்குள்ள இருக்கும் என்னோட டார்லிங் சரியான முறையில் அதை ஓர்க்கவுட் பண்ணி இரக்கப்படவச்சு சமாதான உடன்படிக்கையில் கையெழுத்து வாங்கிருவோம்!’
‘உனக்குள்ள இவ்வளவு அறிவா? நம்பமுடியலையே! இதில் ஏதாச்சும் உள்குத்து இருக்குதா?’
‘ஐடியா குடுத்தா அதை யூஸ் பண்ணி முன்னேறப் பார். அதை விட்டுட்டு அதை ஆராயாதடா!’
‘சரி ட்ரைப் பண்ணுவோம்.’
முகத்தைச் சுளித்தவாறே நான்கு வாய் சாப்பிட்டான். அடுத்த வாய் வைக்கப் போனவனை திடீரென்று மாதுவின் கைத் தடுத்தது நிமிர்ந்து என்னவென்று பார்த்தான். அவள் அவனுக்கு மற்றொரு உணவுத்தட்டை நீட்டினாள். அதைப் பார்த்தவன் அசந்துபோனான்.
பக்குவமாய் வடித்த சாதத்தில் சாம்பாரும் நெய்யும் கலந்து ஊற்றியிருந்தாள். பச்சைப் பட்டாணி கூட்டும் அவியலும் வைத்திருந்தாள். அருகில் ஒரு கிண்ணத்தில் பாசிப்பருப்பு பாயசம், மற்றும் மாவடு ஊறுகாய் அலங்காரமாய் அமர்ந்திருந்தது.
தட்டை வாங்கியவன் கையில் ஓர் காகிதம் தட்டுப்பட்டது. அதை விரித்துப் பார்த்தான் மாது தான் எழுதியிருந்தாள். மாதுவைக் கேள்வியாகப் பார்த்தான்.
“நான் கண்ணைச் சிரமப்படுத்தாமல் இருக்கனும்னு டாக்டர் சொல்லிருக்கார்.”
அதைக் கேட்டவளோ அவனை கண்களிடுங்க முறைத்துப் படிக்குமாறு சைகை செய்தாள். அதில் தடுமாறிய விதுரன்,”இ..தோ.. படிக்கிறேன்!” என்றான்.
‘வீணாப்போன விதுரா,
உன்னோட ஆபிஸில் பல்பெல்லாமே கண்ணாடி தடுப்புகளோட பயங்கர பாதுகாப்போட தான் இருக்கும்னு எனக்குத் தெரியும். பாதுகாக்கப் படாமல் ஆஃப் பாயில்டா திரியும் ஒரே பல்பு நீ தான் டா மட்டி. ஏற்கனவே கோபமா இருக்கிற என்னை இன்னும் இன்னும் காண்டாக்குற நீ! இதுவும் அந்த சீலா குடுத்த கேவலமான ஐடியா தான!
இனம் இனத்தோடதான சேரும். நீ ஒரு ஹாஃப் பாயில்னா? அந்த சீலா ஒரு ஃபுல் பாயில். இனியும் அந்த சீலாக் கிட்ட ஐடியாக் கேட்டு என்ன எரிச்சல் படுத்துன மவனே! உண்மையிலேயே கண்ணு இரண்டையும் நொல்லையக்கிடுவேன் பார்த்துக்க! பார்த்து சூதானமா இருந்ததுக்கோ!! இதுவே உன் பிறந்தநாளுக்காகக் கொடுத்த வாய்ப்பு தான்.
இப்படிக்கு,
உன் மண்டையை உடைக்கிற
அளவு கோபத்தோடு மாது’
திருதிருவென விழித்தான் விதுரன். ‘கரெக்டா கண்டுபிடிச்சுட்டாளே இந்த காக்கா முட்டை! சீலா இவ நம்ம இரண்டு பேரையும் ரொம்ப டேமேஜ் பண்ணுறாடா டார்லிங்! சீக்கிரமா ஊருக்கு வா!’
‘மவனே! உன்னோடா ஆளு இதைமட்டும் கேட்டா உனக்கு மறுபடியும் அந்த விளக்கெண்ணெய் விட்ட கீரை சாலட் தான் டா! ஒழுங்கு மரியாதையா மைண்ட் வாய்ஸ ஆஃப் பண்ணிட்டு சாப்பாட்டை வச்சி கைக்கும் வாய்க்கும் சண்டை போடு போ!’
அதை ஆமோதித்த விதுரனோ கைக்கும் வாய்க்கும் சண்டையிடத் தொடங்கினான் சாப்பாட்டை வைத்து. மாதுவோ கள்ளச்சிரிப்போடு அவனைக் கண்களுள் நிறைத்தாள் அவனறியாமல்.
வாழ்க்கை வழக்கம் போல் பலகை விடு தூதாகச் சென்றது மாதுவிற்கும் விதுரனுக்கும். காலையில் கண்விழித்த மாதங்கி தன் அன்றாட பணிகளைத் தொடங்கினாள். திடீரென வாயிலில் அழைப்பு மணி அழைத்தது. மணியைப் பார்த்தவள் இவ்வளவு காலையில் யார் வந்திருப்பார்கள் என்று யோசித்தவாறே கதவைத் திறக்கச் சென்றாள். கதவைத் திறந்தவள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் கலந்த நிலையில் நின்றாள். வெளியே சீலாவும் மதுராவும் நின்றனர்.
‘என்னாச்சு ட்ரிப் முடிய இன்னும் ஒரு வாரம் இருக்குதே! அதுக்குள்ள எப்படி வந்தார்கள்? இரண்டு மென்டலும் சேர்ந்து என் மதுராக் குட்டியுடைய ப்ளான கெடுத்துடுச்சோ?’
“மாது! வழி விடாம என்ன திங்க் பண்ணிட்டு இருக்கிற?” என்று தன் மழலையில் கேட்டாள் மதுரா.
“சாரி, அம்முடா! உங்க ட்ரிப் இன்னும் முடியலையே அதுக்குள்ள எப்படி வந்தீங்கனு யோசித்தேன் டா குட்டி!”
“டோன் கால் மீ குட்டி. ஜஸ்ட் கால் மீ மதுரா. ஏன் நாங்க எங்கள் இஷ்டப் படி வீட்டுக்கு வரக்கூடாதா? உன் கிட்ட பெபர்மிஷன் வாங்கிகிட்டு தான் வரனுமா?”
அவள் பேச்சில் அதிர்ந்த மாது,’பிள்ளையை அவளை மாதிரியே அடாவடியா வளர்த்திருக்கிறதை பார். அப்படியே இந்த சீலாவுடைய ஜெராக்ஸ் காப்பி! முதல் வேலையா மதுராக் குட்டிய ஸ்கூல்ல சேர்க்கனும்.’
“அதில்லைடா செல்லம்! பாதியிலேயே வந்துட்டீங்களே ட்ரிப்ல ஏதாச்சும் ப்ராப்ளமோனு பயந்தேன் அதான் கேட்டேன். உள்ள வாடா செல்லம் பால் குடிக்கிறயா? ஜூஸ் குடிக்கிறயா?”
“பேபி! இந்த பட்டிக்காடு கிட்ட என்ன தேவையில்லாமல் பேசி டைம் வேஸ்ட் பண்ணுற? வா பேபி போய் ரெஸ்ட் எடுப்போம்.” என்று இடைமறித்துக் கூறினாள் சீலா (குழந்தை பாட்டுக்கு உண்மை உளறிவிடுமோ என்ற பயம் தான்).
அப்போது தான் அங்குச் சீலா என்றொரு ஜீவன் இருப்பதையே கவனித்தாள் மாது. அவளைப் பார்த்த மாத்திரத்தில் அதிர்ந்தாள். ‘யோக்… என்ன ஹேர் ஸ்டைலோ இதெல்லாம். கருமம்! கருமம்!! ஸ்டைல்ன்ற பேரில் காமெடி பண்ணுறாளே. ஷண்முகா நீதான் என்னை இதுங்க கிட்ட இருந்து காப்பாத்தனும்.’
மாதுவின் பார்வையைப் புரிந்த சீலாவோ,”என் ஹேர் ஸ்டைல் எப்படியிருக்கு மாது? உனக்கும் வேண்டுமானால் வாயேன் என் கூட ‘லேக் மீ’ பார்லர்க்கு. ‘வொன்டர் லா’ல லக்கி கூப்பன் விண் பண்ணோம் நானும் மதுராவும். சோ ஃப்ரீ கட்டிங் தான். ஆனால் உன்னுடைய பட்டிக்காட்டுப் புத்திக்கு இந்த மாதிரி ட்ரெண்டி ஃபேஷன் எல்லாம் தெரியாது பிடிக்கவும் செய்யாது. சோ சேட்!” என்று அவளைச் சீண்டினாள்.
அவள் பேச்சில் எரிச்சல் எல்லையைக் கடக்க மூக்கு கோபத்தில் விடைக்க,”இப்படியே ஏதாச்சும் பேசி கடுப்பேத்திட்டே இருந்தனு வச்சிக்கோ காவல்துறையில் நாத்தனார் கொடுமைனு புகார் மனு எழுதிக் குடுத்துட்டு வந்துருவேன். ஒழுங்கா இருக்கிற இடம் தெரியாமல் இருந்தீங்கன்னா உனக்கும் நல்லது உன் தம்பிக்கும் நல்லது. நான் வந்து உன்கிட்ட நின்னு கெஞ்சுனனா இந்த பட்டிக்காட்டுச் சிறுக்கிக்கு உங்க வீட்டு வெள்ளைக்கார துறையைக் கட்டி வைங்கனு அழுதேனா? சிவனேன்னு இருந்தவளை மிரட்டி உன் தம்பிக்குக் கல்யாணம் பண்ணிவச்சுட்டு ஐந்தாறு வருசங் கழிச்சு வந்துதான் நான் பட்டிக்காட்டு கிறுக்கினு உனக்கும் உன் தம்பிக்கும் தெரியுதா?”
“மாது ஏன் இவ்வளவு கோபப் படுற? உன்னை யார் என்னச் சொன்னாங்க சொல்லு டார்லிங். மாமா நான் கேட்கிறேன்!” என்றபடியே வந்தது யார் சாட்சாத் நம்ப விதுவேதான்.
போதும் என்றவாறு கையை உயர்த்தி இருவருக்கும் பொதுவாகக் காட்டிவிட்டு மதுராவிற்கு சாப்பாடு செய்வதற்காகச் சமையலறைக்குள் சென்றாள். சீலாவும் விதுவும் அதிர்ந்து நின்றனர் மாதுவின் கோபத்தில். பின்னர் இரகசியமாக இருவரும் பேசினர்.
“எப்படிடா தம்பி இந்த சீலாவுடைய ஃபெர்பாமன்ஸ்? சும்மா தெரிக்கவிட்டேன்ல? இன்னும் போகப்போகப் பார் களைக்கட்ட போகிறது!”
“கிழிச்ச என் வாழ்க்கையில் ஒரு லாரி மண்ணள்ளிக் கொட்டிட்டு களைக்கட்டுமாம். அக்கானு சும்மா விடுகிறேன். ஓடிரு!”
“என்னடா போன் போட்டு அழுதியேனு மதுக் குட்டிய சமாளித்து ட்ரிப்ப பாதியிலேயே விட்டுவிட்டு ஓடி வந்தால் புருசனும் பொண்டாட்டியும் டர்ன் போட்டு திட்டுறீங்க? இந்த சீலா என்ன காஜா போடுற நூலா? ஆளாளுக்கு வந்து அக்குறீங்க!”
“அப்படி இல்லை சீலா டார்லிங், மாதுவ சமாதானம் பண்ண வரச் சொன்னால் நீ அவளைக் கூடக்கொஞ்சம் காண்டாக்கிட்ட! அதான் டென்சன்ல அப்படி பேசிட்டேன்.”
காதல் மனைவியின் ஒதுக்கம் அவனைப் பெரிதும் வாட்டியது. இந்நிலையில் நேற்று இரவு என்னவென்றால் அவனது மற்றொரு காதலியான நித்திராதேவியும் அவனை ஒதுக்கினாள் காரணமின்றி.
“என்னடா! இது, குட்டிக் கரணம் கூட அடிச்சுப் பார்த்துட்டேன் தூக்கம் வரமாட்டிக்குது! என்னவா இருக்கும்?” என்று தனக்குத் தானே பேசிக்கொண்டிருந்தான்.
‘குட்டிக் கரணம் அடித்தால் இடுப்பு வலி தான் வரும்! தூக்கம் எப்படி வரும்?’
“வந்துட்டான்டா! சீய்…. வெறுப்பேத்துறதுக்குனே வருவானே மூக்கு வேர்த்த மாதிரி.”
‘நான் உன்னைப் பிரிவதும் இல்லை! உன்னை விட்டு விலகுவதுமில்லை!’ (சிங்கம் புலி ஸ்டைலில் படிக்கவும்?)
“போடாங்க! சரி விடு எதோ நீயாச்சு என் கூட பேசுரியே!”
‘விடுடா ரொம்ப ஃபீல் பண்ணாத ஃப்ரீயா விடு! எல்லாம் சரியாகிடும். சீக்கிரமே உன்னுடைய ஆள் உன்கிட்ட பேசிடும் டா.’
“ம்ம்ம்… அதற்கு ஏதாச்சும் ஐடியா குடுடா.”
‘ஃபர்ஸ்ட் அவங்க தனி அறையில் படுக்குறத தடுக்கவேண்டும். இந்த ரூம்லையே அவங்களும் இருந்தாதான் ஏதாச்சும் கோமாளித்தனம் செஞ்சாச்சு சரி பண்ண முடியும்.’
“ஆமாடா! அவ என்கிட்ட பேசாட்டிக்கூட பரவாயில்லை. என்கிட்டையே இருந்து அவளை பார்த்துட்டே இருந்தால் கூட போதும்.”
‘சரி எதாச்சும் ஃப்ளான் பண்ணி அவங்களும் இந்த அறையிலேயே இருக்க மாதிரி பண்ணனும். உனக்கு ஏதாச்சும் ஐடியா வருதா?’
முதலில் யோசிப்பது போல் பாவனை செய்து பின்னர் இல்லை என்பது போல் உதட்டைப் பிதுக்கினான் விதுரன். அதைச் சலிப்புடன் பார்த்த அவனது மனசாட்சி,’உனக்கெல்லாம் யோசிக்கத் தெரிந்திருந்தால் நீ ஏன் போயும் போயும் அந்த சீலா கிட்டயெல்லாம் ஐடியா கேட்கிற! அதுவும் கேவலமான மட்டமான மடத்தனமான ஐடியாதான் எல்லாம்!’
“சீலா டார்லிங்க அவ மட்டமா பேசலாம் பிகாஸ் அது நாத்தனார் சண்டைனு வந்துரும். அதுவும் சீலாவுடைய தம்பியா இருந்துகிட்டு நீ பேசலாமா? தாய்ப் பாசத்தையும் மிஞ்சியது தமக்கையார் பாசம்! தெரிஞ்சுக்கோ!”
‘என்ன நேத்து இராசராச சோழன் ஹச்டி பிரிண்ட்ல பார்த்தியா? நானும் பார்த்தேன். நான் சீலாவ ஒன்னும் திட்டல. அவர்கள் குடுத்து நீர் செயல்படுத்திய திட்டங்களைப் பற்றியும் அவை தழுவிய தோல்விகளைப் பற்றியும் தான் பேசுகிறேன்.’
“டேய்! ஐடியா! சீலாவைப் பத்தி பேசிக்கிட்டு இருந்ததுல எனக்கு மண்டைல ஒரு ஸ்பார்க் அடிக்குது. சீலாவும் மதுராவும் வந்துட்டாங்கன்னா மாது ரூம்க்கு வந்துதானே ஆகனும். எப்படி என் ஐடியா?”
‘ஐடியா நல்லாத்தான் இருக்கு. பட், அவங்க ட்ரிப் முடிஞ்சாதான வருவாங்க. அதுக்குத் தான் இன்னும் ஒரு வாரம் இருக்கே!’
“இதெல்லாம் ஒருமேட்டரா! சீலா தான் போகும் போது சொல்லிட்டு தான போயிருக்கு,’எனி ப்ராப்ளம்! ஒன் கால்! சீலா வில் அப்பியர்!’ சோ, போன் போடு கொண்டாடு! எப்படி?” இத்தோட முடிவு தான் காலையில் சீலா மற்றும் மதுராவின் திக்விஜயம்.
ஐந்து வயது மதுராவிற்கு ஒன்றாம் வகுப்பு பள்ளியாண்டு துவங்க இரண்டு வாரம் இருந்த நிலையில் சீலா அவளை தன் தோழிகளுடன் சுற்றுலா அழைத்துச் சென்றாள். முதலில் தோழிகள் மட்டும் செல்ல நினைத்த பயணம் சீலாவால் சிறுவர்களுக்காக மாறியது. முதல் வாரம் பெங்களூரில் உள்ள சுற்றுலா தளங்களைச் சுற்றிவிட்டு கோவில்களையும் வலம் வந்து இறுதியாக வொன்டர்லா சென்று பின் அப்படியே மறு வாரம் மைசூரைச் சுற்றுவதாகத் திட்டம். விதுவின் தொலைப்பேசி விடு தூதில் மைசூர் போகாமல் திரும்பியிருந்தனர்.
“ஆனாலும் தம்பி நீ ஒருவிசயம் கவனிச்சியா? இத்தனை நாள் மௌனராகம் படம் காட்டிட்டிருந்தவ இப்போ உரிமைக்குரல் குடுக்குறா!”
“ஆனாலும் அக்கா நீ இப்படி உன் பெண்ணை இவ்வளவு அடாவடியா பெத்திருக்க வேண்டாம்! முடியலை!”
இதனை மறைவில் நின்று கேட்டிருந்த மதுவின் முகத்திலோ குழப்ப ரேகை என்றால் மாதுவின் முகத்திலோ அனல் சிவப்பு.
??????
மதியம் மணி பதினொன்று, மாதுவின் வீடே அமைதியில் அழகாய் இருந்தது. விதுரன் அலுவலகம் சென்றிருந்தான். சீலாவோ தாங்கள் வென்ற ‘லேக் மீ’ சலுகையை வீணாக்க விரும்பாமல் ஃபேசியல் மெனிக்கியூர் பெடிக்கியூர் என்று பல க்யூரை செய்வதற்கு க்யூவில் நின்றாள். மாது வீட்டு வேலைகளை முடித்து விட்டு ஸோஃபாவில் அமர்ந்தாள். மது விளையாடிக் கொண்டிருந்தாள். அம்மாவைப் பார்க்கவும் அவள் அருகில் வந்து அமர்ந்தாள்.
அதனைக் கவனித்த மாது,’என்னமோ ப்ளான் பண்ணுறாளே! என்னவா இருக்கும்?’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே,”என்னடா பட்டு… என்ன வேணும்?” என்றாள்.
மதுவோ தயங்கியவாறே,”ட்ராயிங் பண்ணுவோமாம்மா?” என்றாள்.
“அம்மாவா இத்தனை நாள் நான் பட்டிக்காட்டு மாது உங்களுக்கு அம்மானு ஞாபகம் வந்துருச்சா?” என்று அவளிடம் வம்பிழுத்தாள்.
“ம்மா! ஜஸ்ட் ஃபார் ஃபன் மா. ப்ளீஸ் மா ட்ராயிங் பண்ணுவோமா!” என்று கண்களைச் சுருக்கி கொஞ்சினாள்.
மகளின் செய்கையில் மயங்கிய மாதுவோ அவளைத் தூக்கி அணைத்து நெற்றியில் முத்தமிட்டாள். மகளும் அதே செய்தாள்.
“நல்லா ஐஸ் வைக்கிற குட்டி மா! சரி வா ட்ராயிங் பண்ணுவோம்” என்று மகளை அழைத்துச் சென்றாள். ட்ராயிங் நோட்டை எடுத்து ஒரு பக்கம் மாது வரைய அதை பார்த்து மதுரா வரைந்தாள். பூனையில் ஆரம்பித்த அவர்கள் ஓவியக்கலை பல்வேறு பொருட்களைக் கடந்து வந்து வீட்டில் நுழைந்தது.
“அம்மா! அப்பாக்கூடப் பழம் விட்டுடீங்களாம்மா?” என்று கேட்டு மாதுவை அதிர வைத்தாள் மது.
“நாங்க தான் சண்டையே போடலையே குட்டி. அப்புறம் எதுக்குப் பழம் விடனும்?” என்று சமாளிப்புடன் கூறினாள்.
“சண்ட போடலை. ஆனா பேசாம இருந்தீங்கள்ள. நேத்தும் அப்பாவ நீங்க அடிச்சீங்கதான? பாவம் அப்பா மெடிக்கல் கிட்ட எடுத்து அழுதுகிட்டே மருந்து போட்டாங்க. ரொம்ப வலிச்சது போல!” என்று மது அழுகையுடன் கூறினாள்.
முதல் நாள் இரவு, மதுராவும் சீலாவும் இருந்ததால் மாது விதுரன் அறையிலேயே உறங்க வந்திருந்தாள். அவனுக்காக மெத்தையில் போர்வையை சிரிப்புடன் விரித்து விட்டு சோஃபாவில் சென்று படுத்துக் கொண்டாள்.
விதுரன் மதுவிடமும் குட்நைட்டும் சீலாவிடம் வெற்றிக்குறியும் செய்துவிட்டு அறைக்குள் நுழைந்து கதவடைத்தான். அவன் முகத்தில் நிம்மதியும் சந்தோஷமும் போட்டிப் போட்டுப் பொங்கியது. அதில் கடுப்பான அவன் மனசாட்சியோ,’டேய்! அவள் இன்னும் அதே மௌற விரதம் ரேஞசில தான் இருக்கா. நீ என்னமோ அவள் ஓடி வந்து உன்னை கட்டிக்கொண்டு ஐ லவ் யூ சொன்ன மாதிரி மூஞ்சியை வைத்திருக்க. டேய் முடியலை டா! பட் அவளை நம்பாத அவ கேடி, எதாச்சும் பெரிசா ப்ளான் பண்ணிருப்பா! பீ ஃகேர்ஃபுல்!’
“டேய்! நானே இன்னைக்கும் தான் ரொம்ப நாள் கழித்து நிம்மதியா தூங்கப் போறேன். டென்சன் பண்ணாமல் போயிரு!” என்றவாறே குளியலறையில் சென்று குளித்து இரவு உடைக்கு மாறி வந்தான். சிறிதுநேரம் உறங்கும் தன் மனைவியையே பார்த்துக் கொண்டிருந்தான். ‘சாரிடி இனிமே குடிக்க மாட்டேன்! நான் உன்ன ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன். என்கிட்ட பழையபடி பேசுடி!’ என்று மனதிற்குள் புலம்பவிட்டு பெருமூச்சுடன் சென்று கட்டிலில் படுத்தான்.
மாதுவை பார்த்தபடியே படுத்திருந்தான். திடீரென்று ஏதோ ஓர் குறுகுறுப்பு உடலெங்கும் உணர்ந்தான். என்னவென்று கண்டுகொண்டதும் அடித்துப் பிடித்து எழுந்தான். தன் உடுத்திருந்த மேல் சட்டையை கலைந்தவாறே எழுந்து குளியலறைக்குள் மீண்டும் புகுந்தான்.
“இராட்சசி! இராட்சசி! இப்படி பண்ணிட்டாளே!”
‘நான்தான் முதல்லையே சொன்னேன்ல பார்த்து எச்சரிக்கையா இருந்துக்கோனு. கேட்காமல் என்னைத் திட்டி விரட்டிவிட்ட. இப்போது நீ தான் அவஸ்தை படுகிறது.’
“ஐயோ! இப்படி பண்ணுவான்னு நானென்ன கனவா கண்டேன். வச்சி செஞ்சிட்டா டா!” என்றவன் குளித்துவிட்டு வேறுடை அணிந்து வெளியேறினான். தலையணையை எடுத்துக்கொண்டு மாதுவை ஓர் பார்வை பார்த்தான். பின் அறைக்கதவைத் திறக்க முயல்கையில் தான் கவனித்தான் கதவினை வெளிப்புறம் தொங்கிய பலகை இப்போது உட்புறம் தொங்கியது.
அதில்,”என்ன மாமா! இன்றைக்கு அருமையான சத்தான ருசியான விருந்துபோல எறும்புகளுக்கு!” என்று எழுதியிருந்தாள். திரும்பி அவளை முறைத்து விட்டு வெளியே சென்று சோஃபாவில் சாய்ந்தான். கதவு மூடும் இடைவெளியில் மாது விழுந்து விழுந்து சிரிப்பது தெரிந்தது. தன் கோபம் மறந்து அவளை ரசித்தான் அவள் கணவன்.
‘என்னடா இப்படி பார்க்கிற கோபத்துக்குப் பதிலா காதல் கொஞ்சுதே உன் மூஞ்சியில்.’
“இல்ல! இப்படி எப்பவுமே அவ சிரிச்சுகிட்டே இருக்கனும் அத்தாண்டா என்னாசை!”
‘அப்போ நாளைக்கு ஐம்பது தேனீ பார்சல்!’
அதைக்கேட்டு பேய் முளி முழித்தான் விதுரன். நடு இரவில் வலி தாங்காமல் கொசுக்கடி ஒவ்வாமைக்கான மருந்தில் குளித்தது வேறு விசயம். இதை மகள் கவனித்திருக்கிறாள் என்றுணர்ந்த மாது மிகவும் சங்கடப்பட்டாள்.
மகளின் செயலில் பரிதவித்த மாது,”செல்லம்மா அப்பிடிலாம் இல்லைடா அம்மா உன்னை எப்பையாவது அடிச்சிருக்கேனா? இல்லைல. ராஜூ மாதிரி ஸ்மால் பேபிஸையே அடிக்க மாட்டேன் அப்புறம் எப்படி காலிய்யா மாதிரி இருக்கிற அப்பாவ அடிப்பேன் சொல்லுடா?” என்று மகளைச் சமாதானம் செய்தாள்.
அவள் கூறிய விளக்கத்தில் சமாதானமடையாத மதுரா,”அப்போ மிட்ஸில்லாம் ஹேரி நொகோராவை அடிக்கிறா?” என்றாள்.
அவள் கேள்வியில் நொந்துபோன மாது,’அடக்கடவுளே! இவள் கார்ட்டூனை பார்த்துட்டு என்னை கதறவிடுறாளே!’ என்று புலம்ப, அவள் சிந்தனை வலையில் சிக்கினான் சின்சான்.
“அதுவந்துடா குட்டி மிட்ஸி வந்து சின்சானையும் தான அடிப்பாள். சோ ஹேரியவும் அடிக்கிறாள். நான் உன்னை அடிக்க மாட்டேன். சோ யாரையுமே அடிக்க மாட்டேன்.”
அவள் கூறியதைக் கேட்ட மதுரா தன் நாடியில் ஆட்காட்டி விரலால் தட்டியவாறே யோசித்தாள். அதில் பதறிய மாது,’அய்யோ வேறென்னமோ யோசிக்கிறாளே!’ அவள் யோசனையைத் தடுக்கும் வகையறியாது மலைத்தாள். திடீரென்று யோசனை வந்தவளாக, மதுவின் சிந்தனையைக் கலைப்பதற்காக,”அம்முடா! நீங்க ட்ரிப்ப ஏன் பாதியிலேயே விட்டுவிட்டு வந்தீங்க?” என்று கேட்டாள்.
அவள் கேள்வியில் திருதிருவென விழித்தாள் சின்னவள். அதை ஆராய்ச்சிப் பார்வை பார்த்தாள் பெரியவள். சட்டென்று தன்னை சமாளித்த மதுரா,”ரொம்ப டைர்ட் ஆகிட்டோம் நானும் சீலாவும். சீலாவுக்குக் கொஞ்சம் உடம்புக்கு வேற முடியவில்லை. சோ கிளம்பிட்டோம்.”
“வழியில் பார்த்ததெல்லாம் வாங்கி திண்ணுருப்பா! வயிறு வலி வந்திருக்கும். வயசானாலும் வாயடக்கம் வரலை! சீ… என்னமோ போ!”
“அம்மா பாவம் சீலா! திட்டாதம்மா! தி பெஸ்ட் கிராணி இன் தி வேர்ல்ட் மா!”
“கிரானினு நீ சொல்கிற அவங்க என்னமோ வடிவேலுடைய யூத்தாமா லுக்கோட சுத்துறாங்க.”
‘அழகான பெயர் சீதா லாபன். அதை சுருக்குகிறேன் பேர்வழியென்று சீலானு வச்சுட்டு சுத்துது இந்த கிளவி. நல்ல வேளையாக எங்கப்பா இவகிட்ட இருந்து தப்பித்து மேல போய்ட்டார்.’
“அம்மா நீ அப்பாவிடம் பேசுமா! ப்ளீஸ்மா! அன்னைக்கு அப்பா சொன்னதை நான் உன்கிட்ட கேட்டதுனால தான அப்பா மேல் கோபமா இருக்க? எனக்குத் தெரியும்!” என்று அழுகையுடன் கூறினாள்.
அவளது செயலில் மாதுவின் கண்கள் கலங்கியது. ஆனாலும் அவனிடம் பேச மனம் வரவில்லை. ஆதலால் தயக்கமும் கலக்கமும் போட்டியிட எதுவும் பேசாது நின்றாள். அவளையே பார்த்தவாறு அழுது கொண்டிருந்த மது,’நான் இவ்வளவு தூரம் அழுகிறேன் பேசுகிறேன் சொல்லுறாங்களா? செண்டிமெண்ட் சீனுக்கு என்ட் கார்ட் போட்டுட்டு ஆக்ஷன் ப்ளாக்ல என்ட்ரி குடு மதுரா.’ அழுது கொண்டிருந்த மகள் திடீரென்று அமைதியாகக் கண்ணைத் துடைக்கவும் அவளை ஆராய்ச்சி பார்வை பார்த்தாள்.
‘ஐயோ பயபுள்ள எதையோ ஹெவியா ப்ளான் பண்ணுது போலையே! ஷண்முகா காப்பாத்துப்பா!’
“இப்போ முடிவா கேட்கிறேன்மா! பேசுவியா மாட்டியா?”
மாதங்கி எந்த பதிலும் அளிக்கவில்லை. மதுராவோ தன் தாய்க்கு பத்து நிமிடங்கள் வரை கெடு கொடுத்தாள். ‘இவ வந்து பாசமா உரசையிலேயே நெனச்சேன் எதாவது ப்ளான் பண்ணி லாக் பண்ணுவான்னு. உசாரா இருந்திருக்கனும். என் தப்புதான். எந்த குண்டத் தூக்கி என் தலைல போடப்போகிறாளோ.’
மாதுவையும் கடிகாரத்தையும் மாறி மாறி பார்த்தவள், பத்து நிமிடங்கள் கடக்கவும்,”என்னம்மா? பேசுறியா அப்பாகிட்ட. ஃபோன் போட்டுத்தறேன்!” என்றாள். இம்முறையும் மாதுவிடம் பதிலில்லை.
“சோ பேச மாட்ட அப்படித்தான்? ஒகே” என்று நிறுத்தி இடைவெளிவிட்டாள்.
‘படம் பார்த்து ரொம்ப கெட்டுபோச்சு பேச்சை பாரு ஏதோ வில்லன் பேசுற மாதிரி. போன ஜென்மத்தில் எனக்கு மாமியாரா இருந்திருப்பா போல!’ என்று மனதிற்குள் புலம்பினாள் மாது.
மதுவோ மறுபடியும் பேச ஆரம்பித்தாள். அவள் கூறியதைக் கேட்ட மாதுவோ அதிர்ந்தாள். மறுநொடி அவள் தொலைப்பேசியிலிருந்து தன் கணவனை அழைத்துச் சிரித்துச் சிரித்து பேசினாள். இவளது திடீர் மாற்றத்தில் திகைத்த விதுரன் ஃபோனை வைத்தவுடன் மயங்கி விழுந்தான்.
‘பொண்டாட்டி ஃபோன் போட்டதுக்கே மயங்கி விழுகிறான். இவனெல்லாம் என்ன படைப்போ. ஏம்மா இவனுக்குப்போய் என்னை மனசாட்சியா போட்டு இன்சல்ட் பண்ணுற'(சாரி ப்ரோ! இருந்தாலும் நீங்க என் ஹீரோவை இவ்வளவு டேமேஜ் பண்ணவேண்டாம்!?)
????????
மனைவி பேசியவுடன் மயங்கியவனை மற்றவர் பார்க்கும் முன் தட்டி சுயநினைவிற்குக் கொண்டு வந்தான் அவனது நண்பன் ராஜா. மயக்கத்திலிருந்து அவன் தெளிந்தாலும் அவன் மனமோ இன்னும் மனைவி பேசிய மயக்கத்திலேயே மகிழ்ந்து இருந்தது.
“டேய்! மாப்ள என்னாச்சு டா? ஏதாச்சும் ப்ராப்ளமா? எதற்கு டா ஃபோன் பேசவும் மயங்கி விழுந்த? அக்காக்கு எதாவது முடியலையா? யாருக்கு என்னடா?” என்று பதற்றமாக வினவினான் ராஜா.
“எல்லாரும் நல்லா தான் இருக்காங்க மச்சி! இப்போ மாது ஃபோன் பண்ணிருந்தாள்டா.”
“என்னாச்சுடா மாது திட்டிட்டாளா? கோபத்தில் கிராமத்துக்கே மறுபடியும் போய்ட்டாளா? மதுராவை விட்டுட்டா? இல்ல கூட்டிட்டு போய்ருக்காளா?” என்று படபடத்தான் ராஜா.
“உனக்கு ரொம்ப நல்லெண்ணம் டா ராஜா! நல்ல்ல்லா வருவடா!” என்று நல்லாவை நல்லா அழுத்திக் கூறினான்.
‘இவனையெல்லாம் ஃபரண்டா வச்சிருக்க உன் வாழ்க்கை எப்படிடா உருப்படும்! சீ ஃபில்ட் வித் நெகட்டிவிட்டீஸ்! ரொம்ப கஷ்டம்தான்.’ என்று புலம்பியது அவன் மனசாட்சி.
‘உன் வேலையை மட்டும் பார்த்துட்டு போறியா! என் ஃபரண்ட்ஸ் பத்தி பேச நீயாருடா? ஓடிரு!’ என்று மனசாட்சியை விரட்டி அடித்தான் விது.
‘கேவலம் பொண்டாட்டி பேசினதுக்கு மயங்கினவன் கிட்டப்போய் பேச்சு வாங்குகிறேன் என் விதி!’
“இல்லைடா மாது சமாதானம் ஆகிட்டா டா சிரிச்சு சிரிச்சு பேசுறா! அதான் சந்தோசத்தில் மயங்கிட்டேன்!” என்று நண்பனிடம் தெளிவுபடுத்தினான்.
“வாவ்! சூப்பர் டா! ரொம்ப ஹாப்பி மூட்ல இருக்கப் போல! மச்சான்… பா..ர்..டி.. பண்ணுவோமா?”
“என்னது பா…ர்…டீ…யா??? டேய் செத்துச் செத்து விளையாடுவோமா னு கேட்கிற மாதிரியே இருக்குடா!”
‘ஏம்பா ஹெட்செட் மாட்டி படம் பார்த்துட்டே பேசுறியா?’
‘இப்ப நீ போகலை! நாளைக்கு ஹெட்லைன்ஸ்ல மனசாட்சியை மர்டர் பண்ண மாவீரன்! மைன்ட் வாய்சில் டார்ச்சர் பண்ணியதால் விழைந்த விபரீதம்!! னு வந்துசரும் பார்த்துக்கோ!’
(இதுக்கும் மேல நம்மாளு அங்க நிப்பாரு! ஒரே ஓட்டமா ஓடிப் போய் அவன் சட்டைப் பையில் ஒளிந்து கொண்டார்து.)
தன் நண்பனைப் பார்த்து முறைத்தான். “அய்யோ சும்மா கிண்டலுக்கு கேட்டேன் டா! ஆமா அப்படி அன்னைக்கு என்னதான் டா ஆச்சு? சிஸ்டர் ஏன் இவ்வளவு கோபமா இருந்தாங்க உன்மேல!”
“அதை ஏன்டா கேக்குற! அன்னிக்கு அடிச்ச சரக்கு தான் எல்லாத்துக்ர்கும் காரணம். தண்ணிய தொட்டுக்கூட பார்க்காதவனை அன்னைக்கு எல்லாருமா சேர்ந்து உசுப்பேற்றி விட்டு என் வாழ்கையில் விளையாண்டுடீங்கடா எல்லாரும் சேர்ந்து!”
“டேய் மச்சான் இப்படி வாழ்க்கையையே வெறுத்துப் போய் பேசுகிற அளவிற்கு என்ன நடந்ததுடா??”
“டேய் நான் எங்கடா வாழ்க்கையை வெறுத்தேன்! என் பொண்டாட்டியை நீங்க எல்லாரும் சதி பண்ணி என்னைய வெறுக்க வச்சுட்டீங்கடா பாவிகளா! உங்களைச் சொல்லி என்ன பிரயோஜனம்! என் புத்தி அப்போ புல்லு மேய போயிருச்சா? நான் குடிச்சிருக்க கூடாது, தப்பு பண்ணிட்டேன்! எல்லாம் விதி!” இதைக் கேட்டவுடன் விளக்கைத் தேய்த்ததும் வரும் பூதமாய் வந்து பாடியது அவன் மனசாட்சி.
‘உன்னைச் சொல்லி குற்றமில்லை!
என்னைச் சொல்லி குற்றமில்லை!
காலம் செய்த கோலமடி!
கடவுள் செய்த குற்றமடி!’
“மச்சான் இந்த துடைப்பு கட்டை எங்க இருக்கும்? ஒரு பெருச்சாளி ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது!” இதைக் கேட்ட மாத்திரத்தில் சோப்பு தேய்த்த நுறையாய்ச் சிதறி மறைந்தது வேறயாரு நம்மாளு தான்.
“மச்சான் இருடா நான் வேணும்னா நம்ம முனியம்மா கிட்ட வாங்கிட்டு வாரேன்.”
“டேய்! தேவையில்லைடா! நீ ஆணியே புடுங்க வேண்டாம்.”
“சரி விடுடா! நீ உன் வீட்ல நடந்த பிரச்சினையை சொல்லு டா!”
அன்று மாலை நண்பர்களுடன் கேளிக்கை விடுதிக்கு சென்றிருந்தான். இது அவன் வேலை பார்க்கும் மென்பொருள் அலுவலகத்தில் வழக்கமாக நடக்கும் ஒன்றுதான். பிறந்தநாள் மற்றும் திருமண நாள் கொண்டாட்டம் என்றாலே பார்ட்டி என்று அங்கே தான் ஏற்பாடு செய்வார்கள்.
அப்படி ஒரு நண்பனுக்குப் பிறந்தநாள் வரவே அதனைக் கொண்டாட அனைவரும் அங்கு கூடியிருந்தனர். பெரிய கேக்கை கொண்டு வந்து வைத்தனர் அந்த பப்பின் ஊளியர் இருவர்.
கேக் வெட்டி முடிந்தவுடன் குளிர் பானங்களும் சிற்றுண்டி வகைகளும் வழங்கினர். அனைவரும் தங்களுக்குத் தேவையான குளிர்பானங்கள் (மதுபானங்களும் தான்) எடுத்துக் கொண்டனர். விதுரனோ மதுப்பழக்கம் இல்லாததால் ஆரஞ்சு பழச்சாறு எடுத்துக் கொண்டு அமர்ந்தான்.
நண்பர்கள் அனைவரும் சிறு சிறு குழுவாகப் பிரிந்து பேசிக் கொண்டிருந்தனர். திடீரென்று அங்கே ஒரு சலசலப்பு ஏற்பட்டது. ஆர்வமாகப் பேசிக்கொண்டிருந்த விதுவும் ராஜாவும் அதில் கலைந்து என்னவென்று பார்த்தனர்.
அரவிந்த் என்பவன் தன் நெருங்கிய நண்பன் ப்ரதீப்புடன் மதுபானக் கோப்பைகள் நிறைந்த தட்டை கையில் ஏந்தி பாட்டிற்கு ஏற்றபடி ஆடிக்கொண்டே இவர்கள் இருந்த மேஜையை நோக்கி வந்தனர்.
“என்னடா இவனுங்க எதுக்கு இப்படி கேவலமா ஆடிக்கிட்டு நம்மகிட்ட வராங்க? எதாவது ப்ளான் பண்றீங்களா?”
‘அய்யய்யோ அலர்ட்டா இருக்கானே! என்ன பண்ணலாம்!’
“அதுவந்து மாப்ள! அவனுங்க உன்னை ரொம்ப கலாய்ச்சானுங்க மாப்ள! அதான்…”
“என்னடா அதான்னு ஜவ்வுமிட்டாயா இழுக்குற? ஆமா அவனுங்க எதுக்காக என்னை கலாய்ச்சானுங்க?”
“அதுவந்து மாப்ள! நீ ரொம்ப நல்லவனாம்… அழகானவனாம்… அறிவானவனாம்… பண்பானவனாம்… ஆனால்.. ரொம்ப ரொம்ப கோழையாம்!!”
“அதுக்கு! ஸார் என்ன சொன்னீங்க?”
“டேய்! என் ஃப்ரண்ட என்கிட்டயே கோழை சொல்றீங்களா? உங்கள இன்னைக்குனு… சட்டைக் காலரை பிடிச்சுட்டேன் மாப்ள!”
‘டேய்! ராஜா நீ அந்த மாதிரில்லாம் பேசிருக்கமாட்டியே!’
“அப்படியா!அப்புறம் என்னாச்சு!” என்று நம்பாத பார்வை பார்த்தான்.
“அது இதுன்னு ரெண்டு பேரும் வாக்குவாதம் பண்ணினோம்..”
“அப்பறம்!”
“அப்பறம்! அவன் சொன்னான்… இந்த வாரம் வரும் ரமேஷோட பர்த்டே பார்ட்டில சரக்கடிச்சா உன்னை வீரன் ஒத்துக்குவாங்களாம்!”
“நான் அந்த கருமத்தைக் குடிக்கவும் வேண்டாம். அவனுங்க குடுக்குற வீரன் பட்டமும் வேண்டாம். இவனுங்க பெரிய மிஸ்டர் சென்னை ஜட்ஜஸ் நான் இவிங்கள இம்ப்ரஸ் பண்ணி அவார்ட் வாங்கப்போறேன். போடா டேய்!”
“மச்சான் ஒரு பீர் மட்டும் தான் டா! ப்ளீஸ் டா எனக்காக!”
“உனக்காகவா என்னடா உளறிகிட்டு இருக்குற?”
“ஆமா மச்சான்! பெட்ல தோற்றா என்ன செய்யனும்னு அவன் கிட்டக் கேட்டேன்.”
“ம்ம்ம்ம்ம்ம்..”
“என் ஃப்ரண்ட பத்தி இனிமே எதுவும் இப்படி நக்கலா பேசக்கூடாதுனு சொன்னேன்.”
விதுரனின் நம்பாத பார்வையில்,”அதுவும் கேட்டேன் மச்சான்! சத்தியமா!” என்றான்.
“அதுவும் கேட்டியா? அப்போ இன்னும் வேறென்ன கேட்ட?” என்று அவனை ஆழ்ந்து பார்த்தான்.
“உனக்கும் எனக்கும் தனித்தனியா ஒரு மட்டன் பிரியாணி, சிக்கன் விங்க்லெட்ஸ், நண்டு கிரேவி, ப்ரான் 65, காடை வறுவல், சிக்கன் சுக்கா,…..”
“டேய் போதும்டா போதும். என்னடா இரண்டு பேருக்குனு சொல்லிட்டு ஒரு ஊருக்கே ஆர்டர் பண்ணிருக்க!”
“இதே தான் அவனும் சொன்னான் மச்சி. ஆனா வாங்கித் தரேன்னு சொல்லிட்டான்.”
“வாங்கித்தரேன்னு சொல்லிட்டானா? சோ நீ விதவிதமா சோறு திங்க நான் தண்ணியடிக்கனும். ஏன்டா? சரி விடு இதெல்லாம் மொத்தமா வாங்கித்தராட்டியும் ஒன்னொன்னாவாச்சு நான் வாங்கித்தரேன். அதுக்காக எல்லாம் என்னை தண்ணியடிக்க சொல்லாத டா!”
“மாப்ள இதுக்காக உன்னைச் சரக்கடிக்கச் சொல்லலை டா!”
“அப்புறம்??? இன்னுமென்னடா??”
“பதிலுக்கு நானும் கேட்டேன் அப்படி நான் தோத்துட்டா உனக்கென்ன வேணும்னு!”
“ஓ இப்படித்தான் எல்லார்கிட்டயும் பகுமானம் பண்ணி பந்தா காட்டுறியா? இந்த என்னுடைய க்ரெடிட் கார்ட் எந்த ஹோட்டல்னு கேட்டு கூட்டிட்டுப் போ! பாத்துடா என் காசுதானன்னு ஓவரா திங்காத லிமிட்டா முடிச்சுக்கோ!”
“மச்சான்….”
“இன்னுமென்ன டா நானும் வந்து சர்வ் பண்ணாதான் வருவாய்ங்களா?”
“அதில்லைடா…” என்று ராஜா எதுவோ சொல்லவரவும் அரவிந்த் மற்றும் ப்ரகாஷ் மதுக் கோப்பையுடன் அருகில் வரவும் சரியாக இருந்தது. அதைப் பார்த்த விதுரன் எரிச்சலின் எல்லையை எட்டினான்.
“டேய் பெட் தான என்னால குடிக்க முடியாது! சோ உங்க பெட்ட நீங்க தாராளமா கேரி அவுட் பண்ணலாம்” என்று கூறித் தோளைக் குலுக்கினான்.
விதுரனின் பேச்சில் கடுப்பான இருவரும் தங்கள் கையில் தயாராக வைத்திருந்த ரேஸரை எடுத்து ராஜாவை நெருங்கினர். இதனைக் கண்டு ராஜா பயந்தானென்றால் விதுரனோ அதிர்ந்தான்.
“டேய்! எதுக்கு டா ரேஸரை எடுத்துட்டு அவன் கிட்ட போறீங்க? என்னதான் டா உங்க பெட்?”
“ஓஹோ! உனக்கு பெட் என்னன்னே தெரியாமதான் ஃபெயில்னு டிக்ளேர் பண்ணியா??” என்று சிரித்த அரவிந்த் அவர்கள் பந்தயத்தை விம் போட்டு விளக்கினான்.
ராஜா பந்தயமாக முனியாண்டி விலாஸ் ஆர்டர் குடுத்ததும் அரவிந்திற்கு என்ன பந்தயம் என்று கேட்டான். அரவிந்தோ,”விதுரன் தண்ணியடிச்சுட்டான்னா நீ கேட்டதெல்லாம் வாங்கி தரேன். பட் குடிக்கலைன்னா… உன்னோட முகத்தில் வலது பக்க மீசையும் இடது பக்க தாடியும் எடுத்துட்டு ஒன் வீக் ஃபுல்லா பாதி தாடி பாதி மீசையோட தான் நீ சுத்தனும்.”
இதனைக் கேட்டு அதிர்ந்த ராஜாவோ,”முடியவே முடியாது!” என்று அழுத்திக் கூறினான்.
“அப்போ உன் விது மாப்பிள்ளையைச் சரக்கடிக்க சொல்லுடா என் பொட்டேட்டோ!” என்று கோரஸ் பாடியவாறே அரவிந்தும் ப்ரகாஷும் சென்றனர்.
???????
அவர்களின் பந்தயத்தைக்கேட்டு விழுந்து விழுந்து சிரித்தான் விதுரன். அனைவரும் அவனை ஒருமாதிரி பார்க்க,”சாரி ட்யூட்ஸ்! யூ ஜஸ்ட் கேரி ஆன்!” என்று சமாதானம் சொல்லிவிட்டுச் சிரிப்பை அடக்கியவாறே ராஜாவைப் பார்க்க, மீண்டும் வெடித்து வந்தது சிரிப்பு.
ராஜாவோ அவனைப் பரிதாபமாகப் பார்த்தான். அவன் பார்வையில் தன்னை அடக்கிய விது,”சாரி மச்சான்! நான் உன்னை அந்த கெட்டப்பில் நினைத்து பார்த்துட்டேன்!”என்றான் பாவம் போல் முகத்தை வைத்து.
அவன் பாவனையில் ராஜாவிற்கே சிரிப்பு வந்தது, அதை மறைத்தவாறு,”மச்சான்!” என்று அரவிந்தையும் அவன் கையிலிருந்த ரேஸரையும் கண்களால் காட்டினான் விதுரனிடம். அதை உணர்ந்த விதுரனும் தான் பார்த்துக்கொள்வதாகச் சமிக்ஞை செய்தான் கண்ணை மூடி.
இவர்கள் கூத்தைக் கவனித்த அரவிந்தோ,’இது வேலைக்காகாது!’ என்றெண்ணி மீண்டும் ரேசருடன் ராஜாவை நெருங்கி அவன் மீசையில் வைத்த நேரம், நான்கு ஷார்ட் கிளாஸ்கள் பறந்து வந்து அவன் கைகளிலேயே விழுந்தது. அனைவரும் திரும்பிப் பார்த்து அதிர்ந்தனர்.
விதுரன் தான் அந்த நான்கு ஷாட் கிளாஸையும் குடித்துவிட்டு எறிந்திருந்தான். பக்கத்தில் அவர்களுடன் பணியாற்றும் முகேஷ் என்பவன் பாவமாக அழுவது போல் அமர்ந்திருந்தான். ஆம் முகேஷ் ஆசையாக ‘பட்டியாலா ஷாட்’ அடிக்க வைத்திருந்த வோட்கா கலந்த காக்டெய்லை தான் நம் விதுரன் எடுத்துக் குடித்து வீசினான்.
“டேய்! மாப்ள என்னடா இப்படி பண்ணிட்ட?!!”
ராஜாவின் கேள்வியில் திகைத்த விதுரன்,”உனக்காகத் தான் மாப்ள குடிச்சேன்!”
“டேய் விது பெட்டே பீர்க்கு தான். நீ ஏன்டா விஸ்கி கலந்த காக்டெய்லைப் போய் குடிச்ச!” என்று தலையில் கை வைத்தான்.
“டேய் ராஜா அது வோட்கா மிக்ஸிங் டா!! எனக்கு விஸ்கி பிடிக்காதுடா..” என்று புலம்பினான் காக்டெய்லை பறிகொடுத்த முகேஷ்.
“நாட்டுக்கு ரொம்பத் தேவை!!! பேசாமல் இருடா பேல்பூரிவாயா!” என்று ராஜா முகேஷை அடக்கும் போது சத்தமாக சிரித்தான் விது.
“ஓ அப்போ நீ மாறு கால்.. மாறு கை.. மாதிரி மாறு மீசை.. மாறு தாடி…யோட தான் திரியனுமா?”என்று சிரித்தான்.
“ஏன்டா உனக்கு இந்த நல்லெண்ணம்? நீ தான் சரக்கடிச்சு பெட்ல வின் பண்ணிட்டியே அப்புறம் எதுக்கு நான் அப்படி திரியனும்? நீ தான் இனிமே புலம்பிட்டு திரியப்போற!”
“நா..னா.. என்னத்துக்கு யுவர் ஆனர்? காய்லான் கடை ஸ்பானர்? டோன்ட் யு ஹாவ் மேனர்? இனிமே உன் மீசைக்கும் தாடிக்கும் நான்தான் ஓனர்!!!” என்று கூறி வெடிச் சிரிப்புடன்,”மச்சான் ஹவ் இஸ் மை கவிதை?”என்று கேட்டான் ராஜாவிடம்.
இதில் நொந்துபோன ராஜா மனதினுள்,’என்னது கவிதையா!! போச்சு இன்னும் எந்த ஏழறையையெல்லாம் கூட்டப் போறானோ!’
“என்னடா இன்னும் இவன் எந்த முக்கால் டெகேட்ட (decade) கூட்டப் போறானோன்னு மனசுக்குள்ள புலம்புறியா! கவலைப் படாத நானெல்லாம் கணக்கில் புலி கரெக்ட்டா கூட்டுவேன்!” என்று ராஜாவின் தோளில் சென்று சாய்ந்தான்.
‘டேய் ராஜா! இவன் நம்மள உடைச்சி ஊத்தி பெப்பர் தூவி ஆம்லெட் போடுறதுக்குள்ள நாம இவனை உரிய இடத்துல டெலிவர் பண்ணிரனும்!’ என்று முடிவு செய்த ராஜா,”மச்சான் வாடா வீட்டுக்கு போவோம்! சிஸ்டர் தேடுவாங்க!” என்று விதுவைக் கிளப்பினான்.
“மச்சான் உன் சிஸ்டர் என்னை எதுக்கு டா தேடுவாங்க? உனக்கு சிஸ்டர்னா எனக்கும் சிஸ்டர் மச்சான்! அதுவுமில்லாம எனக்கு ஒரு அழகான பொண்டாட்டி வேற இருக்கா தயவு செஞ்சு உன் சிஸ்டர் மனசைமாத்திரு!”
“டேய் உன் அழகாற் பொண்டாட்டியைத்தான் டா நான் தங்கச்சி சொன்னேன் சாவடிக்காம வாடா!” என்று பப்பின் வாயிலை அடைந்தான் விதுவை இழுத்துக் கொண்டு.
“டேய் மச்சான்! சூட்டிங் நடக்குது போல விளம்பரம் எடுக்காங்க டா வாடா போய் பார்ப்போம்!”
“ஷூட்டிங் பெரிய இதாடா நீ பார்த்ததே இல்லையா என்ன? பேசாமா வாடா!”
“மச்சான் ப்ளீஸ்டா! சின்ன பிள்ளைல இருந்தே இந்த விளம்பரம் ரொம்ப பிடிக்கும் டா! இதுக்காகவே ஒனிடா டீவி புதுசா வாங்குனேன்டா! ப்ளீஸ்டா!”
விதுரனின் கெஞ்சலில் இளகிய ராஜா,”சரி வா!” என்று அவன் காட்டிய திசையில் திரும்பினான். அங்குக் கண்ட காட்சியில் அதிர்ந்து நின்றான்.
“அடப்பாவி டேய்! ஷூட்டிங் இன்னிக்கு நடக்குதோ இல்லையோ நீ பார்க்குற வேலைக்கு நாளைக்கு நமக்கு ஆஃபிஸ்ல ஷூட்டிங் ஆர்டர் கன்பார்ம். உன் நொல்ல கண்ணை வச்சு நல்லா பாரு ஷூட்டிங் எங்கடா நடக்கு அது நம்ம பாஸ் ப்ளே க்ரௌண்ட் மண்டையன் டா! ஒனிடா மண்டையன் வேற டா வா போவோம்.”
இருவரும் சென்று கார் நிறுத்துமிடத்தை அடைந்தனர். ராஜா ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து விதுவை திரும்பிப் பார்த்து அதிர்ந்தான். விதுவோ இருக்கை பிடித்து இழுத்துக் கொண்டே,”அண்டா… கா.. கசம்! அபூ.. கா.. கசம்! திறந்திடு சீசே!! சீ…சே! ஒழுங்கா… திறந்திடு சீ…சே!” என்று மல்லுக்கட்டிக் கொண்டிருந்தான்.
இருக்கையிலிருந்து எழுந்த ராஜா விதுவின் அருகில் சென்று, “என்னடா பண்ணுற?” என்று வினவினான்.
“டேய் பக்கி பார்த்தா தெரியல! கதவை திறக்குறேன் லாக் ஆகிருச்சு போல! டிஸ்டர்ப் பண்ணாம ஓடிரு!” என்று தன் வேலையைத் தொடர்ந்தான்.
“மாப்ள! கதவு அல்ரெடி நான் திறந்துட்டேன் டா! நீ சீட்டைதான் பிடிச்சு இழுக்குற! டார்ச்சர் பண்ணாம உள்ள போய் உட்காரு டா!”
அவன் கெஞ்சலை புரியாத பார்வை பார்த்த விதுவோ எதுவும் சொல்லாமல் உள்ளே அமர்ந்து கதவடைத்தான். நிம்மதி பெருமைச்சுடன் ராஜா மறுபுறம் சென்று கதவை திறந்தான். திறக்க முடியவில்லை.
“அச்சச்சோ லாக் ஆயிருச்சு போலையே!” என்றவாறே விதுவை பார்த்தான். அவனோ இருக்கையை பின்னுக்குத் தள்ளிக் கண்மூடி சாய்ந்திருந்தான். ‘போச்சு இன்னைக்கு வீட்டுக்கு போன மாதிரிதான்’ என்று புலம்பியவாறே தனது பாக்கெட்டில் பர்ஸை தேடினான். காரினுள்ளேயே பர்சை வைத்துவிட்டு வந்த தன் மடத்தனத்தை எண்ணி நொந்தான்.
“டேய் மாப்ள! விதுரா! மச்சான்! மாமா! அட ராமா! மட்டையாயிட்டானா?” என்று புலம்பிவிட்டு விதுவை எழ வைக்க பிரம்ம பிரயத்தனம் செய்து பல முயற்சிகள் மேற்கொண்டான். பரிதாபமென்னவென்றால் அனைத்தும் தோல்வியைத் தழுவின. திடீரென்று,
‘பாசம் வெக்க நேசம் வெக்க
தோழன் உண்டு வாழவைக்க
அவனைத்தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லே’
“வாழவைக்கிறானோ இல்லியோ நல்லா புலம்பவிடுறான்”
‘உள்ளமட்டும் நானே
என் உசிரக் கூடத்தானே
என் நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு சொல்லுவேன்’
“இவன் எங்க சார் பெர்மிஷன்லாம் கேக்குறான்? அவனாவே என் உயிர வாங்கிட்டு தான் இருக்கான்.”
‘என் நண்பன் போட்ட சோறு
நிதமும் தின்னேன் பாரு
நட்பைக் கூடக் கற்பைப் போல எண்ணுவேன்’
“சோறு போடுறான் இல்லீங்கல ஆனால் பிரச்சனைகளையும் அனுகுண்டு மாதிரி தூக்கி தலையில போடுறானே! அது சரி இப்ப யாரு இந்த சிச்சுவேசன் சாங்குக்கு டீஜே?”என்றவாறு சுற்றிச் சுற்றித் தேடினான். பின் தனது கைப்பேசி தான் அந்த டீஜே என்பதைக் கண்டுகொண்டான். செல்பேசியை எடுத்துப் பார்த்தவன் அதிர்ந்தான். ‘தளபதி’ காலிங் எனக் காட்டியது.
‘இவன் தான் மட்டையாயிட்டானே அப்புறம் யாரு காலிங் அதுவும் இவன் நம்பர்ல இருந்து…’ என நினைத்தவன் தன்னை பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்த விதுரனைப் பார்த்தவுடன் முறைத்தான்.
சிரித்துக்கொண்டே அழைப்பை ஏற்குமாறு சைகை செய்தான். ராஜா அழைப்பை ஏற்றதும்,”நான் தண்ணியடிச்சேன்னு மாதுகுட்டிட்ட சொல்லமாட்டேன்னு சத்தியம் பண்ணாத்தான் லாக்க ரிலீஸ் பண்ணுவேன்!” என்று பேரம் பேசினான் விதுரன்.
இப்போது விழுந்து விழுந்து சிரிப்பது ராஜாவின் முறையானது. சத்தமாகச் சிரித்தவாறே,” சத்தியம் தான பண்ணிட்டாப் போச்சு! சத்தியமா மேன்மை பொருந்திய உன் பொண்டாட்டி மாதங்கியிடம் நீ சரக்கடிச்சத பத்தி நான் சொல்லவே மாட்டேன்!!” என்று வெளியில் கூறி,’ஆனால் அவளாகவே கண்டுபிடிச்சுருவா!’ என்று மனதிலும் சொல்லிக்கொண்டே கதவைத் திறக்க முயன்றான். லாக் ரிலிஸ் ஆகியிருந்தது. ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து வண்டியை முடுக்கினான்.
விதுரன் அமைதியாகவே வருவதைப் பார்த்த ராஜா,’அப்பாடா வைப்ரேட்டிங் மோடில் இருந்து சைலன்ட் மோடுக்கு போய்விட்டான். அடுத்து ஃப்ளைட் மோடுக்குப் போனாலும் பரவாயில்லை! சவுண்ட் மோடுக்குப் போகாமல் பார்த்துக்கோ கடவுளே!!’ என்று மனதிற்குள் வேண்டினான்.
‘இன்னும் கொஞ்ச பிட் இருக்கிறது ராஜா இல்லாவிட்டால் கதைக்குப் பக்கங்கள் பற்றாக்குறை வந்துசேரும்.. சோ இன்னும் கொஞ்ச நேரம் அவன் டார்ச்சரில் இருக்கக் கடவாய்!’ என்ற கடவுளின் மனமொழி இவனுக்குக் கேட்டதா கேட்கவில்லையா என்று அறியுமுன்னே மௌனம் கலைத்தான் விதுரன்.
“டேய் வண்டியை நேராப் போலிஸ் ஸ்டேசன் விடுடா! ஒரு கம்ப்ளைன்ட் கொடுக்கவேண்டும்!”
“போலிஸ் கம்ப்ளைன்டா யார் மேலடா?” என்று பதறினான் ராஜா.
“உனக்குத் தெரியாதா மச்சி! குற்றம் செய்றவங்கள விடக் குற்றம் செய்ய தூண்டுறவங்களுக்கு தான் அதிக தண்டனை. குடிக்கிறதும் ஒரு குற்றம் தான அதான்…”
“அது…னால…”
“அதுனால அந்த தன்யா மேல் ஒரு குற்றம் செய்யத் தூண்டினாள் அப்படியென்று ஒரு கம்ப்ளைன்ட்ட போடுவோம் மச்சி!”
“தன்யா மேலையா அவள் நமது டீமில் கூட இல்லையே! ஆகாஷ் டீம்ல தான இருக்கா! அவ எதற்கு தூண்டினா உன்னை?” என்று சந்தேகமாகக் கேட்டான் ராஜா.
“டேய் லூசு! அறிவே இல்லையா உனக்கெல்லாம்! மூளையை என்ன முனியாண்டி விலாஸ்ல வித்துட்டியா??”
“ஆத்தாடி! மூலையை முனியாண்டி விலாஸ்லயா? டேய் என்னடா இப்படி அபசகுனமா பேசுற!”
“அப்புறம் என்னடா! நான் அந்த தான்யாவை சொல்லுறேன்! நீ இந்த தான்யாவை சொல்லுற! எருமை மாட்டுக்கிட்ட ஏ பி சி டி சொன்ன மாதிரி இருக்கு உன்கிட்ட சொல்லுறது!”
“மச்சி என்னை டேமேஜ் பண்ணது போதும்! எந்த தான்யா எதுக்கு கம்ப்ளைன்ட் அதை முதலில் சொல்லு.”
“அதான் மச்சி நம்ம சூர்யா இருக்கான்ல?”
“மச்சி எந்த சூர்யாடா?”
“டேய் அதான் அந்த ஃபோன் கம்பனில வேலை பாக்குறான்ல!”
‘ஐயோ எந்த சூர்யானு தெரிலையே! குத்துமதிப்பா ஊம் போடுவோம் இல்லாட்டி சிறு மூளையை சிக்ஸ்டி ஃபைவ் போட்டியா! பெருமூளையை பேரிச்சம்பழத்துக்கு போட்டியானு கேப்பான்!’ என்று நினைத்த ராஜா,”ம்ம்ம்…” ஆமாம் சாமி போட ஆரம்பித்தான்.
“அவன் ஒரு காலேஜ் பொண்ணு கூட பிரச்சினை ஆகி கடைசில அவளையே லவ் பண்ணிட்டான். அந்த பொண்ணு பேருகூட.. ம்ம்ம்!”
“ரெஜினா!” என்றான் ராஜா எதையோ புரிந்து கொண்ட பாவனையில். (நீங்க கெஸ் பண்ணது ரொம்ப கரெக்ட் ராஜா ராணி படமே தான்?)
“ம்ம் அவ தான். அவ ஃப்ரண்ட் தான் தான்யா.”
“தான்யா தெரியுதுடா. பட் கம்ப்ளைன்ட் எதுக்கு?”
“எதுக்கா? அவதான மச்சான் ஷாட் க்ளாஸ்ல எதோ ஒரு சரக்க கப் கப் னு அடிச்சு அடுக்குவா. அந்த மாதிரி க்ளாஸ்ல எதாச்சும் குடிக்இனும்னு ஆசையா இருக்கும். அதான் பீர் பாட்டில எடுக்காமல் அந்த முக்காப்படி முகேஷோட பட்டாணி பெக்க எடுத்து குடிச்சுட்டேன்.”
“அடப்பாவி! தெரிஞ்சே தான் குடிச்சியா நீ! அது பட்டியால பெக் பட்டாணி இல்லை. சோ உங்களைச் சரக்கடிக்க தூண்டுன தான்யா மேல் கம்ப்ளைன்ட் பண்ணப் போற!”
“ஆமாடா!”
“சரி டா இறங்கு!”
“அதுக்குள்ள ஸ்டேசன் வந்துருச்சா? வாடா இன்றைக்குக் கண்டிப்பாக கம்ப்ளைன் பண்ணவேண்டும்!” என்றபடியே கார்க் கதவைத் திறந்து இறங்கினான்.
“நீ என்ன கம்ப்ளைன் பண்ணாலும் யாரை கம்ப்ளைன் பண்ணாலும் இந்த ஸ்டேசனில் உனக்கு மட்டும் தான் டா அரெஸ்ட் ப்ரொடெஸ்ட் பெட்ரெஸ்ட் எல்லாம்!” என்றான் ராஜா நக்கலாக.
“அப்படி என்னடா புது ஸ்டேசன்?” என்று கேட்டவாறே வெளியே கண்களைச் சுழற்றி பார்த்தான்,”டேய்! மச்சான் இந்த ஸ்டேசன் பாரேன் அப்படியே எங்கள் ஃப்ளாட் மாதிரியே இருக்கு!” என்று ஆச்சரியப்பட்டான்.
“கொஞ்ச நேரத்தில் பாரு இன்ஸ்பெக்டர் அம்மா வருவாங்க! அவங்களை பாரு உனக்கு ஷாக்கே அடிக்கும்.”
“என்னது??”
“இல்லைடா ஷாக்கிங் ஸர்ப்ரைஸா இருக்கும்னு சொல்ல வந்தேன்..” என்று கூறி அவனை அழைத்துச் சென்றான். லிப்டில் ஏறி அவன் ஃப்ளாட் இருக்கும் தலத்தின் எண்ணை அழுத்தினர்.
“இங்க பாருடா லிஃப்ட் கூட எங்க அபார்ட்மெண்ட் லிஃப்ட் மாதிரியே இருக்கு. எதுக்கு டா ஸ்டேசன்ல லிஃப்ட் வச்சிருக்காங்க?”
“அது… வந்து மச்சான்.. அக்யூஸ்ட் தப்பித்து போனாங்கனா படியிலென்றால் போலிஸால துரத்திப் பிடிக்க முடியலையாம்! அதான் லிஃப்ட். லிஃப்டில் தப்பிச்சா லிஃப்ட லாக் பண்ணிறலாம்ல அதான் டா.”
“ஓ! பரவாயில்லையே போலீஸ் எல்லாம் முன்னேறிட்டாங்க போல! நல்ல நல்ல திட்டம் செயல்படுத்துறாங்க.”
“ம்ம்ம்” என்று அவனை இழுத்துக்கொண்டு அவன் வீட்டு வாயிலில் நின்று அழைப்பு மணியை அடித்தான். சீலா வந்து கதவைத் திறந்தார். விது நின்ற நிலையைப் பார்த்து வருந்தினார். மாது இதைப் பார்த்தாள் மிகவும் உடைந்து விடுவாள் என்று நினைத்தவர். அவனை அவள் வருமுன்னரே தன் அறையில் படுக்க வைக்க அழைத்துச் சென்றார்.
யாரின் கெட்ட நேரமோ! மாது மதுவிற்குப் பால் எடுத்துப்போக அறையிலிருந்து வெளியே வந்தவள் இந்த காட்சியைக் கண்டு பதறினாள். அவள் அவனுக்கு உடல் நிலை சரியில்லை என்றே நினைத்து அவர்களிடம் விரைந்து வந்தாள்.
“மாமா! என்னாச்சு மாமா?” என்று கேட்டபடியே வந்தவள் அவன் முகத்தைப் பார்த்ததுமே நடந்ததை அறிந்துகொண்டாள். எதிலோ தோற்றுப்போன உணர்வு அவளுள் எழுந்தது.
“எந்த சோகத்தை மறக்க இப்போ இவர் குடிச்சாராம்மா?”
“இல்லமா..” என்று சூழ்நிலையை விளக்க வந்த ராஜாவை மாது விது இருவரும் ஒருசேரத் தடுத்தனர். தன் நிலையை மனைவியிடம் புரியவைக்க மூன்றாம் நபரின் தலையீட்டை அவன் விரும்பவில்லை. தன்னவனை தன்னிடம் மூன்றாம் நபர் நியாயப் படுத்துவதை அவள் மனம் ஏற்கவில்லை.
“சரிடா மச்சான் நான் கிளம்புகிறேன்! பார்த்துக்கோங்க மா! வரேன் சிஷ்டர்!” என்று விது, சீலா, மாது மூவரிடமும் விடைபெற்றுச் சென்றான் ராஜா.
இருவரும் மற்றவரைப் பார்த்தவாறு நின்றனர். அவன் கண்களில் குற்றவுணர்வு பொங்கியதென்றால் இவள் கண்களில் ஏமாற்றம் கண்ணீராய் வடிந்தது. இவர்கள் நிலையை உணர்ந்த சீலா இருவரையும் கலைத்தார்.
“மாது! நீ போ பாப்பாவைப் பார்ப் போ! விது வாடா இன்னைக்கு என் அறையில் நீ படு நான் மாது கூட படுத்துக்குறேன்.” அவனை அழைத்துச் சென்று தன்னறையில் படுக்க வைத்தார்.
பின் மாது வை தேடி அவள் அறைக்குள் நுழையும்போது மாதுவின் கண்களில் கண்ணீர் தன் அணையை உடைக்க காத்திருந்தது. அவள் கைகளை விரைவாகச் சென்று பற்றி அழுத்திக் கொடுத்தார். அவள் அவரை என்னவென்று பார்த்தாள். அவரும் கண்களாலே மதுராவை சுட்டிக்காட்டினார்.
“மது பேபி! நீ போய் அப்பாவை பார்த்துக்க டா! என் ரூம்ல படுத்திருக்கிறான். அவனுக்கு ஃபீவர் சோ தொந்தரவு பண்ணாமல் பார். ஓகேவா?”
“டன்! பைம்மா. பை கிரானி.” என்று ஓடினாள் நம் மதுக் குட்டி.
கதவைத் திறந்து உள்ளே தந்தையை எட்டிப்பார்த்தாள் மதுரா. அவனோ தன் பர்சில் மறைத்து வைத்திருந்த தன்னவளின் புகைப் படத்தைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தான்.
“டாடி அது யாரு?” என்று அவனிடம் சென்றாள்.
மகளை எதிர்பார்க்காத விதுரன் பதற்றமாக தன்னவளின் புகைப் படத்தை மறைத்து,”யாருமில்லை டா க்யூட்டி.” என்றான்.
“டாடி! நான் பார்த்தேன் ஃபோட்டோல யாரோ ஒரு லேடி இருந்தாங்க காட்டுங்க.”
மகளைப் பலவகையில் சமாளித்தும் பயனின்றி கடைசியாக அந்தப் புகைப்படத்தைக் காட்டினான்.
“இவுங்க..” என்ற மகளின் யோசனையைத் தடுத்தது விதுரனின் பதில்,”உங்க அம்மா!”. பின்னர் மகளை சமாதானப்படுத்தித் தூங்க வைத்து தானும் தூங்கினான் விதுரன். அன்றே நடந்ததை வரிசை மாறாமல் தன் நண்பனிடம் கூறினான்.
ஆனால் அவன் தூங்குவதற்காகவே காத்திருந்த மது எழுந்து அவன் பர்சில் வைத்த தன் தாயின் புகைப்படத்தை எடுத்து தனது ட்ராயிங் டைரியில் மறைத்து வைத்ததோ மறுநாள் மாதுவிடம் அதைக் காட்டியதோ அவனறியவில்லை.
அவன் கூறியதைக் கேட்ட ராஜா,”மச்சான்! எனக்காகத் தான் குடிச்ச, இருந்தாலும் இனிமே நீ குடிப்ப!?” என்று கேட்டுச் சிரித்தான். அதில் எரிச்சலடைந்தாலும் தன் தலையை இல்லையென்பது போல் ஆட்டோ ஆட்டென்று ஆட்டினான்.
???????
அன்பில் நிறைந்து சொக்கரும் மீனாட்சியும் ஆண்ட மாமதுரைச் சீமை. அதைச் சுற்றிப் பல குக்கிராமங்கள் எழிலும் பொழிலும் கொஞ்ச நிமிர்ந்து நின்றன. அப்படி ஒரு கிராமம் தான் பூம்பொழில்.(யாரும் இந்த ஊரை மதுரையில் தேடிராதீங்கோ?). விவசாயத்தை நம்பி வாழும் மக்களைப் பெற்ற ஊர். குழந்தைவேலு லட்சுமியம்மாள் தம்பதியினர் தங்களுக்குச் சொந்தமான பதினைந்து ஏக்கர் நிலத்தில் ஐந்து ஏக்கரில் மாந்தோப்பும் ஐந்து ஏக்கரில் தென்னையும் வளர்த்து தோட்டங்களாய் உருவாக்கி மீதி ஐந்து ஏக்கரில் பயிரிட்டு விவசாயம் செய்தனர். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் மகள் சீதா, மகன் விதுரன்.
குழந்தைவேலு ஐயாவிற்கு விவசாயம் செய்வது வெல்லம் என்றால் கதை கேட்பதோ கற்கண்டு போல். வானொலியில் வரும் சொற்பொழிவுகள் முக்கியமாகக் கதைகள் கேட்பது அவரது தினசரி பழக்கங்களில் ஒன்று. அப்படிக் கதை கேட்டதில் அவரை மிகவும் பாதித்த இருவர் சீதா(இராமாயணம்), விதுரன்(மகாபாரதம்). ஆகையால் தன் பிள்ளைச் செல்வங்களுக்கு அந்த பெயர்களையே சூட்டினார்.
குழந்தைகள் இருவரும் தான் அவர்களின் உலகம். ஆனாலும் விதுரனைச் சிறுவயதிலேயே வெளியூர் பள்ளியில் சேர்த்து விடுதியிலேயே அவனை வளரவிட்டார். அவனைப் பிரிந்து வாழும் வேதனையைத் தெரிந்தே ஏற்றனர் பெற்றோர் இருவரும். அதற்கு முக்கிய காரணம் சீதாவிற்கும் விதுரனிற்கும் உள்ள வயது வித்தியாசமே. ஆம்! சீதாவிற்கும் விதுரனிற்கும் பன்னிரண்டு வயது வித்தியாசம்.
லட்சுமியம்மாளுக்கு சீதா பிறந்த பின் இரண்டு குழந்தைகள் இறந்தே பிறந்தன. அதன் பிறகு அவர் கருத்தரிக்கவேயில்லை. சீதா ஆறாம் வகுப்பு வந்ததால் மேல்நிலைப் பள்ளியில் சேர்த்தனர். மகளைப் பள்ளிக்குத் தினமும் லட்சுமியம்மாவே சென்று அழைத்து வருவார். அப்படி ஒரு நாள் அழைத்து வந்தவர் மயக்கம் வருவது போல் இருக்கவும் அங்கங்கே அமர்ந்து இளைப்பாறிக் கொண்டே அழைத்து வந்தார் மகளை. இதை தன் கணவரிடம் கூற மறந்துவிட்டார். ஆனால் சீதா தந்தை வீட்டிற்கு வந்ததும் வராததுமாகத் தாயின் உடல்நிலையைப் பற்றிக் கூற, உடனே மருத்துவச்சியை அழைத்து வந்தார் குழந்தைவேலு.
மருத்துவச்சி வந்து பார்த்து விட்டுப் புன்னகை முகமாக, “லட்சுமி! மறுபடியும் உண்டாயிருக்குத் தம்பி. பக்குவமா பார்த்துக்கோங்க!” என்று கூறிச் சென்றார்.
மருத்துவச்சி கூறிய செய்தியைக் கேட்டுச் சந்தோசமடைந்த குழந்தைவேலு அவருக்குப் பணமும் நெல்லும் காய்கறிகளும் கொடுத்தனுப்பினார். மனைவியைக் காணச் சென்றவர் அவர் இருந்த நிலையைக் கண்டு அதிர்ந்தார். தான் மறுமுறை தாயாகப் போவதை அறிந்து முதலில் மகிழ்ந்த லட்சுமியம்மா பின்னர் தான் இரண்டு முறை கருவுற்று குழந்தை இறந்தே பிறந்ததை நினைத்து இந்த குழந்தைக்கும் எதுவும் ஆகிவிடுமோ என்ற பயத்தில் அழத்தொடங்கினார்.
மனைவியின் முகத்தை வைத்தே அவர் மனதில் உள்ளதை அறிந்த குழந்தைவேலு, அவரை அணைத்து ஆறுதல் படுத்தினார். பின்பு அவரிடம்,”ஏம்புள்ள இப்படி அழுவனும்? சந்தோசமா இருக்க வேண்டிய நேரத்துல இப்படி அழுது வடிஞ்சு வயித்துக்குள்ளாற இருக்குத புள்ளையவும் வெளியாற இருக்குத புள்ளையவும் மிரளவைக்குறவ! கண்ணைத் துடைச்சிபுட்டு சிரிப் புள்ள. சீதா கண்ணு பயந்துகிடுச்சு பாரு.”
அவர் கூறிய பின்னர் தான் சீதாவைத் தேடினார் லட்சும்மா(லட்சுமியம்மா டைப் பண்ணக் கஷ்டமா இருக்குதுப்பா!?). அந்த அறையின் மரக்கதவின் குமிழைத் திருகிக்கொண்டு உம்மென்று நின்றிருந்தாள். அவளைக் கண்டவுடன் வேதனைகள் அனைத்தும் தூரம் சென்றது.
“ஏன் ஆத்தா! எப்பப் பிடிச்சு இப்படி உம்மனாம் மூஞ்சியா மாறுனாவ? இது என் தங்கமயிலு இல்லியே வேற புள்ளை போலையே! நான்பெத்த வைரம் சிரிச்சிட்டே பம்பரமா சுத்தி சுத்தி வருமே! நீ யாரு புள்ளத்தா? என் குட்டிக் கிளியைப் பார்த்தியாத்தா?”
அவர் கூறியதைக் கேட்ட குட்டி சீதா அவரை நோக்கிச் சிட்டாய் பறந்து வந்து அவரை கட்டிக்கொண்டு,”ஏம்மா அழுறீங்க? உங்க வயித்துக்குள்ள இருக்குற தம்பி பயந்துக்கப் போறான்! பாவம்மா தம்பி பையன். இனிமே இப்படி அழாதீங்க சொல்லிட்டேன். இல்லாட்டிக்கா உங்களுக்கு அழுமூஞ்சினு பட்ட பேரு வச்சு வீட்டு சுவத்துல எழுதி வைப்பேன்” என்று வம்பிழுத்தாள் சின்னவள்.
முதலில் அவளைப் பார்த்து முறைத்த லச்சும்மா, பின்னர் அவளை அணைத்தபடியே,”ஆத்தா மீனாட்சி ஏம்புள்ளைய ஒருவழியா கண்டுகிட்டேன். அந்த உம்மனாம் மூஞ்சி யாருனும் காட்டிக் கொடுத்துறு ஆத்தா!” என்றார் நக்கலுடன்.
அதில் சிணுங்கியவாறே,” ம்ம்மா..ஆ..!” என்று அவரை அணைத்துக் கொண்டாள். லச்சும்மாவும் அவளை அணைத்து முத்தமழை பொழிந்தார். தன் மனைவி மற்றும் மகள் நடத்திய பாச விளையாட்டில் கண் கலங்கிய வேலு (சேம் சோம்பேறித்தனம் ?) இறைவனிடம் அவர்கள் குடும்பம் என்றும் சந்தோசமும் நிம்மதியும் நிறைந்து இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.
லச்சும்மா வயிற்றில் நம் விதுரன் மூன்றுமாதக் குழந்தையாக வளர்ந்திருந்தான். வயலில் வேலை செய்வோரை மேற்பார்வையிட்டு வீடு வந்தார். அப்போது அவர் அங்குக் கண்ட விசயத்தில் அவர் கண்கள் கோபத்தில் சிவந்தது. லச்சும்மா வீட்டின் நடவிலிருந்த வானவெளியில் அமர்ந்து அழுதுகொண்டிருக்க, அவரின் அக்கா பவளமோ அவரை பேச்சிலேயே சித்ரவதை செய்து கொண்டிருந்தார்.
“இது என்னடீ புதுக் கூத்தா இருக்கு… மக இன்னும் நாளே வருசத்துல குத்த வச்சுருவா! மறுமாசமே அவளுக்கு எவனையாச்சு புடிச்சு கட்டி வச்சோம்னா அவ மரு வருசம் புள்ள பெத்துருவா! இப்பப் போய் ஆத்தா வைத்த தள்ளிக்கிட்டு நின்னா என் தம்பி குடும்ப மானம் சந்திச் சிரிச்சுரும்… இப்படி அவனை நாலு பயலுக நக்கலா பேசத்தான் நல்லூர் சீமையில இருந்து உன்னக் நலங்கு வச்சு கூட்டியாந்தோமா?”
“அக்கா..ஆ!” என்று கத்தினார் வேலு.
“எய்யா! வேலு இதென்னய்யா இப்படி ஒரு சங்கடம் உனக்கு. இப்படி நாலு பேரு முன்னாடி தலை குனியத்தேன் நாங்க உன்ன ராசாவாட்டம் வளத்தோமா?”
“நாலு பேரு முன்னாடி தலை குனியிற மாதிரி சோலி ஒண்ணும் இங்க நடக்கல! எங்க வீட்டுக்கு இன்னோரு புது உசுரு வரப்போவுது! என் பொஞ்சாதி சதையில முளைச்சு என் ரத்தத்துல பூத்து என் மகள மாதிரியே சிரிக்கப் போற இன்னோர் பூ! அத கொண்டாடி சீராட்டாட்டிக் கூட பரவாயில்லை… அசிங்கப் படுத்தி தூத்தாத!”
“அதில்லய்யா…” என்று தொடங்கிய பவளத்தைத் தடுத்தது வேலுவின் கர்ஜனைக் குரல்.
“இன்னும் நா பேசி முடிக்கலைக்கா! நீ வந்து ஒப்பாரி வைக்குரியே உன் தம்பி என்ன செத்தா போயிட்டேன்! நான் இன்னொரு தடவை அப்பாவாயிட்டேன்! நான் செத்ததுக்கப்பறம் வந்து ஒப்பாரி வச்சிக்க. இப்போ போயி வேலையைப் பாரு!”
அவர் பேச்சில் அரண்டு போன பவளம் கண்களாலேயே இருவரிடமும் விடைபெற்றுச் சென்றார். லச்சும்மாவோ பதறி விரைந்து வந்து,”என்சாமி எதுக்குய்யா அபசகுனமா பேசுறீக! அத்தாச்சி ஏதோ கோவத்துல பேசுறாக, அதுக்கு இப்படி பேசனுமா?” என்று கண்களில் நீரோடு கணவனை அணைத்தார். இருவரும் ஒருவருக்கொருவர் சமாதானம் கூறி அமைதியடைந்தனர்.
இவ்வாறு கலவையான சூழலில் வாழ்க்கை நகர்ந்தது அவர்களுக்கு. விதுரன் பிறந்ததை ஊருக்கே விருந்து வைத்துக் கொண்டாடினார். பெற்றோரின் பாசத்திலும் தமக்கையின் அன்பிலும் இனிய சூழலில் வளர்ந்தான் விதுரன். ஊராரின் ஏச்சுகளும் பேச்சுக்களும் தங்கள் குடும்பத்தை அண்டாமலிருக்க தங்கள் தோட்டத்திற்குள்ளேயே வீடு கட்டி குடியேறினர்.
விதுரனிற்கு மூன்று வயதிருக்கையில் பள்ளிக்குச் சென்ற சீதா உம்மென்று வந்தாள். வந்ததிலிருந்து யாருடனும் பேசாமல் விதுரனுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். இரவு உணவு முடிந்ததும் தன் முடிவைப் பெற்றவரிடம் கூறி அவர்களை அதிரவைத்தாள் சீதா.
“ப்பா.. நான் இனிமே பள்ளிக்கூடத்துக்கு போகமாட்டேன்ப்பா!”
அவள் கூற்றில் அதிர்ந்த லச்சும்மா,”என்னடீ இது பேச்சு பத்தாங்கிளாஸ் பரீட்சையை அடுத்த மாசம் வச்சுகிட்டு!” என்று மகளை அதட்டினார்.
அவரை பார்த்த வேலு அமைதியாக இருக்கும்படி சைகை செய்துவிட்டு மகளிடம்,”எதுனாலம்மா இனி பள்ளிக்கூடத்துக்கு போகமாட்ட? வாத்தியார் யாரும் வஞ்சாய்ங்களா? இல்ல கூட்டாளிகள் கூட சண்டையா? என்ன காரணம்னு சொல்லுடா!” என்று வினவினார்.
“அப்பா பள்ளிக்கூடத்துல கூட படிக்கிறவளுங்க என்கிட்டவந்து என்னடீ உங்க தம்பிக்கு ஆயா வேலை பார்த்துட்டே படிக்கப் போறியா?னு கேக்கறாளுகப்பா.. அவளுங்க தங்கச்சி தம்பிலாம் எங்க பள்ளிக்கூடத்திலேயே சின்ன கிளாஸ் படிக்குறாய்ங்கப்பா... நம்பத் தம்பி மட்டும் குழந்தையா இருக்கான்னு என்னிய ஆயான்னு ஏடாசி பண்ணுதாகப்பா.. ” என்று சிணுங்கினாள் சீதா.
மகளைச் சமாதானப்படுத்த வேலு முயல்கையில், “இதுக்குத்தான் சொன்னேன் இந்த புள்ளய பெத்துக்குற வேணாமுன்னு யாரு கேட்டீக! புள்ள எப்படி வெக்கப்படுது பாருங்க! இப்படி பச்சை மனச வெசனப்பட விட்டுடீகளே!” என்றபடியே வந்தார் வேலுவின் தமக்கை பவளம்.
“இதிலென்ன ஐயித்த வெக்கமும் வெசனமும் பட? என் தம்பியை பார்த்து கிட இந்த பாழாய்ப்போன படிப்பு தடையா இருக்கு.. அதான் படிப்ப விடலாம்னு தோனுச்சு!” என்று தன் அத்தையை அதிர வைத்தாள்.
மகள் பள்ளிப் படிப்பை விட முடிவெடுத்தது வருத்தமளித்தாலும் அவளது சகோதரப் பாசம் அவர் நெஞ்சில் அளப்பரிய ஆனந்தத்தை வாரி இறைத்தது. மகளின் பக்குவப்பட்ட மனதை நினைத்து அந்த பெற்றோர் பெருமிதம் கொண்டனர். இதே சூழலில் தன் மகனை நினைத்த அந்த தந்தையுள்ளம் பிஞ்சு மனதில் வெறுப்பும் பேதைமையும் வராதிருக்க அவனை உறவுகளை விட்டுத் தள்ளி வளர்க்க முடிவு செய்தார்.
விதுரனிற்கு நான்கு வயதிலிருந்தே விடுதி வாசம்தான். அவன் மனதில் குடும்பம் என்ற பிடிப்பும் பாசமும் விட்டுப் போகுமோ என்று பயந்த லச்சும்மா, இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சென்று அவனைப் பார்த்துக் கொஞ்சி விட்டு வருவார். இப்படி இருக்கையில் ஒரு நாள் சீதா வயதிற்கு வந்தாள். அவளுக்குச் சீரும் சிறப்புமாய் ஊரே வியக்கும் அளவிற்குத் தலைக்குத் தண்ணீர் ஊற்றினார் லாபேஸ்வரன், லச்சும்மாவின் ஒன்றுவிட்ட தம்பி. மறுமாதமே சீதாவைப் பரிசம் போட்டனர் லாபேஸ்வரன் வீட்டினர்.
சீதாவைத் தங்கத் தட்டில் வைத்துத் தாங்கினார் லாபேஸ்வரன். அவள் தோழிகளிடம் பேசும்போதெல்லாம், “தாய்மாமனென்றால் சும்மாவா! அதான் உன்னை இந்த தாங்கு தாங்குறார். நீ ரொம்ப குடுத்து வச்சவ புள்ள!” என்று கூறி பெருமூச்செறிந்தனர். இதனால் சீதாவின் மனதில் ஓர் ஆசை வேரூன்றி வளர்ந்ததை யாரும் அறியவில்லை. ஆம் தனக்கு மகள் தான் பிறக்க வேண்டும் என்றும் அவளை விதுரனிற்குத்தான் மணமுடிக்க வேண்டும் என்றும் பிள்ளை பெருமுன்னரே தீர்மானம் செய்தாள் சீதா.
மதுரையைச் சுற்றியுள்ள ஊர்களில் திருமணம் நடந்தாள் தாலி பெருக்கி கட்ட தாய் மீனாட்சி அம்மன் சன்னதியில் வைத்துக் கட்டுவதே வழக்கம். சீதாவையும் தாலி பெருக்கி கட்ட அங்கு அழைத்துச் சென்றனர். அப்போது தனக்கு மகள் தான் பிறக்க வேண்டும் என்றும் அப்படிப் பிறந்தாள் அன்னை மீனாட்சியின் பெயரையே வைப்பதாகவும் மனமுருகி வேண்டினார்.
அடுத்த பத்தாம் மாதம் அவள் கைகளில் தவழ்ந்தாள் மாதங்கி. அன்று மீனாட்சி தாயிடம் வேண்டியபடியே தனக்கு மகள் பிறக்கவும் அந்த இராச மாதங்கியின் பெயரையே தன் மகளுக்குச் சூட்டினாள். விதுரனோ அந்த பிஞ்சு கைகளையும் கால்களையும் கொஞ்சிக்கொண்டே திரிந்தான். அவனுக்குப் பரீட்சை விடுமுறையும் அமையக் குதூகலமாக விளையாடித் திரிந்தான்.
பத்து வருடங்களில் அவர்கள் குடும்பத்தில் சந்தோஷத்துக்கும் மகிழ்ச்சிக்கும் பஞ்சமேயில்லாமல் நாட்கள் நகர்ந்தது. அந்த கருப்பு நாள் அவர்கள் வாழ்கையில் வரும் வரை. லாபேஸ்வரன் விவசாயம் செய்தாலும் அவருக்குக் கட்சியில் அதிக ஈடுபாடு இருந்தது. அவர் அவ்வப்போது கட்சி பணியாற்றியும் வந்தார்.
அவர் தொண்டில் குளிர்ந்த கட்சி மேலிடம் அவருக்குப் பதவி வழங்கத் தீர்மானித்து அழைப்பிதழ் விடுத்தது. அதனை தன் மாமனும் மைத்துனருமான குழந்தை வேலு ஐயாவிடம் சென்று கூறி கலந்தாலோசித்து இருவரும் சேர்ந்து இன்னும் சில கட்சித் தொண்டர்களையும் அழைத்துக்கொண்டு காட்சி தலைமையகம் சென்றனர்.
லாபேஸ்வரனுக்கு மாவட்ட நிர்வாகி பதவியை அளித்தது அக்கட்சி. லாபேஸ்வரனுக்கும் குழந்தை வேலுவிற்கும் இருப்புக் கொள்ளவில்லை சந்தோசத்தில். வீடு திரும்பும் வழியில் அனைவரும் மது விருந்து கேட்டனர். லாபேஸ்வரனோ தயக்கமாகக் குழந்தைவேலுவை பார்த்தார். அளவிலா மகிழ்ச்சியிலிருந்த குழந்தைவேலுவும் சம்மதம் தந்தார். அனைவரும் மது அருந்தினர். குழந்தைவேலு மதுப் பழக்கம் இல்லாவிடினும் மருமகனுக்காகச் சிறிதளவு மட்டும் அருந்தினார்.
??????
அனைவரும் மது விருந்தை முடித்துக்கொண்டு வீடு திரும்ப வண்டியில் ஏறினர். குழந்தைவேலு முன்னிருக்கையில் அமர மற்றவர் பின்னால் அமர லாபேஸ்வரன் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து வண்டியைக் கிளப்பினார். என்னதான் நாம் வாகனத்தை நன்றாக விதிமுறைகளை கடைப்பிடித்து உபயோகித்தாலும் எதிரே வரும் வண்டிக்காரனும் நல்லமுறையில் வந்தால்தான் பிரச்சினை இல்லை.
இங்கோ இவரும் விதிமுறைகளை மறந்து சிறிதளவேயாயினும் மது அருந்தி வண்டியோட்டினர். எதிரே வந்தவனும் கவனமின்றி வண்டியோட்டியதில் இரண்டு வண்டியும் மோதிக் கவிழ்ந்தது. குழந்தைவேலு வயதானதாலும் பழக்கமில்லாத மதுவைக் குடித்ததாலும் இரத்த அழுத்தம் கூடி மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனை செல்லும் வழியில் இறைவனடி சேர்ந்தார்.
லாபேஸ்வரனுக்கு பலமாக பின் மண்டையில் அடிபட்டதால் உடனடியாக அறுவை சிகிச்சை பண்ண வேண்டும். ஆனால் அவர் அதிகமாக மது அருந்தியிருந்ததால் அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க முடியவில்லை. நேரம் சென்று செய்ததால் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் தன் கூட்டை விட்டுப் பறந்தது. செய்தி கிடைத்து ஓடிவந்தது இரு குடும்பமும். தன் கணவனின் இழப்பைத் தாங்க முடியாத அந்த இளகிய இதயம்(லச்சும்மா) தன் துடிப்பையும் நிறுத்தியது.
விதுரனே மூவருக்கும் இறுதிச் சடங்குகள் செய்தான். பத்து வயதான மாதங்கி என்னும் சுட்டிப்பெண், தொடர்ச்சியான இழப்புகளில் மனமுடைந்து அமைதிப் பாவையானாள். விதுரன் காரியங்கள் அனைத்தும் முடிந்ததும் அக்காவிடம் சொல்லிக் கொண்டு பள்ளி விடுதிக்குத் திரும்பினான்.
அவனைத் தடுக்க நினைத்த சீதாவும் அவனுக்கு இடமாற்றம் தேவை என்று எண்ணி வழியனுப்பி வைத்தார். அவன் உடனே ஊருக்குப் புறப்பட்டதே தன் தமக்கையின் இந்த கோலத்தைப் பார்க்க விரும்பாமல் தான். அவரை அப்படிப் பார்க்கும் ஒவ்வொரு நொடியும் அவன் இதயத்தை யாரோ ஊசி வைத்துக் குத்தியது போல் வலித்தது. பெற்றோரின் பிரிவையே தாங்க முடியாமல் தத்தளித்த அந்த பதினைந்து வயது வாலிபன் தன் தமக்கையின் விதவை கோலத்தில் மறித்துப்போனான். அவளோடு துள்ளித் திரிந்து விளையாடிய குழந்தைப்பருவ நினைவுகள் அவன் இமைகளை நனைத்தன.
தன் தமக்கைக்குப் பிடிக்குமெனப் பக்கத்துத் தோட்டத்தில் திருட்டுத்தனமாகத் தான் பறித்து வந்த மல்லிகையும், கோவில் திருவிழாவில் அவள் ஆசையாய் வாங்கும் வண்ண வண்ண சாந்துப் பொட்டுகளும், ஆடைகளுக்கு ஒத்துப்போகும் நிறங்களில் கைகளில் சிணுங்கும் கண்ணாடி வளையல்களும் அவன் நினைவுகளில் அணிவகுத்தன. தன் கண்ணீர் கொண்டு அதனை அவன் நினைவுகளிலிருந்து அழித்தான்.
கிராமத்திலோ அமைதியாகத் திண்ணையில் அமர்ந்து தன் சிந்தனையில் மூழ்கிய சீதா தாய் தந்தை கணவன் மூவரும் தன்னை விட்டுச் சென்றதை நினைத்து வருந்தியவர் தன் தம்பியை மகளையும் நினைத்துத் தெளிந்தார். அவசரமாக எழுந்தவர் தன் மகளைத் தேடி அவளறைக்குச் சென்றார். அவள் நிலையைப் பார்த்து சீதாவின் பெற்ற வயிறு பற்றியெரிந்தது. ஆம் ஒருநிமிடம் கூட நிற்காமல் ஓடிக்கொண்டிருந்த அவள் கால்கள் இப்போது நிற்கவே தெம்பில்லாமல் மெலிந்திருந்தது. பாலும் தயிரும் உண்டுக் குண்டுக் குண்டு குழந்தை கண்ணங்கள் சாப்பாட்டையே பார்க்காதது போல் வறண்டு ஒட்டிப்போய் இருந்தது.
மகளின் இத்தகைய நிலைக்குத் தான் அவளைக் கவனிக்காமல் விட்டதும் ஒரு காரணம் என்று புரிந்து தன்னையே ஏசினார். ஒரு முடிவெடுத்தவராக அவளருகில் சென்று மாதுவை எழுப்பினார்.
“மாது! எழுந்திரு டா கண்ணம்மா! வா சாப்பிடலாம். உனக்கு பிடிச்ச மாதிரி முறுகலா தோசை ஊத்தித் தாரேன்! காரச்சட்னி வச்சிருக்கேன்.”
“ம்ம்ம் எனக்கு பசிக்கலைமா!”
“பசிக்கலையா! சரி அப்போ நீ சாப்பிட்டதும் குடிப்பியேனு கருப்பட்டி பால் கலந்து வச்சேன். நானே குடிச்சுகுறேன்!” என்று கிளம்பினார்.
அவர் கையை பிடித்துத் தடுத்த மாது,”உனக்குத் தான் கருப்பட்டி பால் பிடிக்காதுல்ல… எப்படிக் குடிப்ப? இரு நானே வந்து குடிக்கிறேன்…” என்று எழுந்தாள் மாது.
மகளின் செயலில் வந்த சிரிப்பை அடக்கிய சீதா,”சாப்பிடாமல் கருப்பட்டி பால் குடிக்க கூடாதே!” என்று அவளைச் சீண்டினார்.
“அப்போ ஒரு முறுகல் தோசை மட்டும் போதும்மா!” என்று செல்லம் கொஞ்சினாள்.
“சரிடா! வா!” என்று மகளை உண்ண அழைத்துச் சென்றார்.
நாட்கள் நகர நகர அவர்கள் மனதிலிருந்த சோகமும் நகர்ந்து சென்று ஓர் ஓரமாய் மறைந்தது. விதுரன் பொறியியல் கல்லூரியில் கணினி பொறியியல் பாடத்தில் சேர்ந்து இரண்டு வருடமும் முதல்நிலையில் தேர்ச்சி பெற்று மூன்றாம் வருடத்தில் அடியெடுத்து வைத்தான். பத்தாம் வகுப்பு பரிச்சையில் தத்தி பித்தி தேறினாள் மாது. பதினோராம் வகுப்பு சேராமல் அடம்பிடித்தவளை விதுரனே நேரில் வந்து கெஞ்சிக் கூத்தாடி பள்ளியில் சேர்த்துவிட்டான்.
சீதா தங்கள் நிலத்தில் நடக்கும் விவசாயத்தைத் தானே முன்னின்று பார்த்துக்கொண்டார். தந்தையின் தென்னந்தோப்பையும் மாந்தோப்பையும் மட்டும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு தந்தையின் விவசாய நிலத்தை நம்பிக்கையான ஒருவருக்குக் குத்தகைக்குக் கொடுத்தார்.
விதுரன் மூன்றாவது வருடத்தின் முதல் பருவத்தேர்வு முடிந்து தமக்கை வீட்டிற்குச் சென்ற நேரம் மாதங்கி பெரிய பெண்ணானாள். தாய் மாமன் சீராக நகைகளும் தந்தையின் தோட்டத்தில் பாதியையும் அவளுக்குக் கொடுத்து அமர்க்களப் படுத்தினான்.
உறவினர்களுக்கும் ஊரார்களுக்கும் விருந்தே ஒரு வாரம் உபசரித்தனர். சடங்கு சுற்றும்போது தண்ணீர் ஊற்றி சீர் கொடுக்கையில் திடீரென வந்த சீதா அவன் வாங்கியிருந்த நகைப் பெட்டியோடு மற்றொரு பெட்டியையும் வைத்துக் கொடுத்தார். விதுரன் கேள்வியாகப் பார்த்தான்.
“நம்ப பரம்பரை நகை.. அம்மா மாதுக்குட்டிக்கு இத அவங்க கையால் கொடுக்க ரொம்ப ஆசைப்பட்டாங்க! நம்ப குடுத்துவச்சது அவ்வளவுதான்!” என்று பெருமூச்செறிந்தார்.
“அக்கா இப்ப என்ன? அம்மா அப்பா மாமா மூனுபேரும் சாமியா நின்னு பிள்ளையை ஆசீர்வாதம் பண்ணுவாங்க! தேவையில்லாமல் மனசை கஷ்டபடுத்திக்காத! நல்லநாளும் அதுவுமா! போக்கா வேலையைப் பாரு!” என்று சீதாவைத் தேற்றினான் விதுரன்.
தண்ணீர் ஊற்றி முடிந்ததும் அவளிற்கு அத்தை முறை வரும் பெண்கள் மூவர் அவளுக்குத் தாய்மாமன் சேலையை உடுத்தி விட்டனர். நகைகளைப் போடப் போன சமயம் அவர்களைத் தடுத்த சீதா,”சீர் குடுத்தத சபையில் வச்சி என் தம்பியே போட்டுவிடட்டும்! அது தான அத்தாச்சி முறை!” என்று கேட்டாள். அவர்களும் அதை ஏற்று மாதுவை வெளியில் அழைத்து வந்தனர்.
அனைவர் முன்னிலையில் விதுரன் தான் மாதுவிற்கென வாங்கிய நகைகளை அவனே அணிவித்தான். காசு மாலை, மாங்காய் மாலை, பிச்சிப்பூ ஆரம், ஆறு வகை வளையல் ஜோடிகள், ஜிமிக்கி கம்மல், அதற்கு ஏற்ற அடுக்கு மாட்டல், மோதிரங்கள், மேலும் பல நகைகளை அடுக்கியிருந்தான் சீராக தன் அக்கா மகளுக்கு. அதில் அனைவர் கவனத்தையும் ஈர்த்ததென்றால் அவன் அவளுக்காய் வாங்கியிருந்த தங்க ராக்குடி(ஹேர் க்ளிப்) தான். அனைவரும் அவன் அளித்த சீரைப் பார்த்து வாயைப் பிளந்தனர். சிலர் பொறாமையுடன் பெருமூச்சு விட்டனர்.
மாதங்கிக்கு நகைகள் பூட்ட விதுரனுக்கு உதவினர் சில பெண்கள். மாதுவின் குழந்தை முகத்திலோ வெக்கமும் பெருமையும் ஒருங்கே சேர்ந்து போட்டிப்போட்டது. கடைசியாக தன் தமக்கை அளித்த அந்த பரம்பரை நகைப் பெட்டியைத் திறந்த விதுரன் திகைத்தான்.
அந்த பெட்டிக்குள் ஒரு கணவனும் மனைவியும் கைகோர்த்திருந்தனர். அவர்களுக்கு இரு பக்கமும் லட்சுமி கரமாக இரு பெண்கள் அமர்ந்திருந்தனர். இரு பெண்களுமே தங்களுக்கருகில் ஒரு கிளி வைத்திருந்தனர். அந்த இரு கிளிகளுமே மாங்கனிகளைத் தின்றவாறு நின்றது. இரு கிளிகளின் பக்கவாட்டிலும் ஒரு சிவப்பு பாறையிலிருந்து உடைபட்ட கல். (அய்யோ தாலின்னு சொல்லாமல் இவ்வளவு மொக்கை தேவையா என்று எல்லோரும் என்ன அசிங்கமா கழுவி ஊத்துறது எனக்கு புரிகிறது என் சிந்தனை வளையத்துக்கு புரியமாட்டிக்குதே)
அதிர்ச்சியிலிருந்து வெளிவந்த விதுரன், தன் தமக்கையைப் பார்த்தான் உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட முகத்தோடு. அவரோ நின்ற இடத்திலேயே முட்டியிட்டு அமர்ந்து இருகரத்தையும் அவனை நோக்கி நீட்டினார். அவர் செயலை யூகித்த விதுரன், அவர் முட்டையிடத் தொடங்கியதுமே தன் பார்வையை மாதுவை நோக்கித் திருப்பினான். அவளோ அவனையும் தன் அன்னையையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள்.
முடிவெடுக்கத் தடுமாறினான் விதுரன். அவனது தடுமாற்றத்தை அறிந்த அவனுடன் விடுமுறையைக் கழிக்க வந்திருந்த அவன் கல்லூரித்தோழன் ராஜா (இப்போது இருக்கிற அதே ராஜா தான் தங்கம்),”டேய் மாப்ள! என்ன யோசிக்கிற? மாதுவைப் பிடிக்கலையா?” என்று கேட்டான்.
“பிடிக்காமல் இல்லைடா! ஆனால் அவ குழந்தை டா! அவளை எப்படி டா! அவ முகத்தை பார்டா! பச்சை மண்ணுடா அது!”
“அவ பச்சை மண்ணுதாண்டா அதான் அக்கா உன் பொறுப்பில் அவளை குடுக்குறாங்க! காலமிருக்கிற கோலத்தில் அடுத்தவனுக்கு பொண்ணு கொடுக்கத் தாயா அவங்க மனசு தயங்குதுடா. அதான் உன்னையவே அவங்க மாப்பிள்ளையாக்கனும்னு முடிவெடுத்திருபாங்க!”
“மாது மனசில் என்ன இருக்கோடா? அந்த பிள்ளைக்கு சம்மதமான்னு தெரியலையே! அதான்டா தயக்கமா இருக்கு!”
“ஃப்….பூ இவ்வளவு தானா! இந்தா வாரேன்.” என்றவாறே மாதுவை அழைத்து,”மாது தங்கச்சி! இவனைக் கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமாம்மா?” என்று கேட்டான்.
“ம்ம்ம்… நல்ல வேளை அண்ணா என்கிட்ட நீங்களாச்சும் கேட்டீங்களே!” என்று இடை வெளி விட்டு தாயையும் மாமனையும் முறைத்தாள். அவள் செயலில் விதுவிற்குச் சிரிப்பு வந்தது. இருந்தாலும் ஏதோ ஒரு படபடப்பும் தவிப்பும் அவனை முட்டிக்கொண்டே இருந்தது.
“எனக்குனு நிறைய ஆசையிருக்கு கனவிருக்குண்ணா! அதையெல்லாம் விட்டுவிட்டு எப்படி இவரைக் கல்யாணம் பண்றது?”
“மாதும்மா நீ கல்யாணம் செய்துகொண்டு கூட படிக்கலாம். என்ன படிக்கனும்னு ஆசையிருக்கோ சொல்லு மாப்ள கண்டிப்பா சேர்த்து விடுவான். சொல்லு மாப்ள!” என்று விதுரனையும் துணைக்கு அழைத்தான். அதற்கு விதுரனோ அவனைப் பார்த்து நக்கலாகச் சிரித்தான். அதன் அர்த்தம் புரியாத ராஜா என்னவென்று வினவும் முன்னர், அவன் கூற்றை மறுத்தாள் மாதங்கி.
“என்னது படிக்கனுமா?? அதுவும் கல்யாணம் பண்ணிட்டா! ம்மா எனக்கு இந்த மாப்பிள்ளையை பிடிக்கவில்லை!! இப்போதே வேற மாப்பிள பாரு!”
“சரிடீ நீ படிக்க வேண்டாம். என்ன கனவு கொஞ்சம் சொல்லு.” என்று அவளைச் சமாதானம் செய்தார் சீதா.
“சொல்கிறேன் கேட்டுக்கோங்க! முதல் கனவு என்னன்னா எனக்கு மச்சு வீடுதான் (மாடி வீடு) வேண்டும்! அங்க நிறையா ரோசாப்பூச் செடி கலர்கலரா வச்சி வளர்க்கனும் அதுக்கு நடுவில் ஒரு பெரிய ஊஞ்சல் மாட்டனும். முக்கியமா என்னைய அதுல உட்கார வச்சி உசரமா ஆட்டிவிடனும் எனக்குத் தோணும் போதெல்லாம்.”
“அடுத்து சொல்லுமா…” என்று அதிர்ச்சியை அடக்கிக் கொண்டு கேட்டான் ராஜா.
“அப்போ மாமாவை உம்னு சொல்லச் சொல்லுங்க! அதான் என்னோட ரெண்டாவது ஆசை… நான் என்ன சொன்னாலும் உம்னு சொல்லி ஏத்துக்கனும்!”
“மச்சி மோர் ஓவர் ஷீ நீட்ஸ் ய சின்சாக் போடுறவன்”என்று விதுரன் காதை கடித்தான் ராஜா.
“அப்புறம் எனக்குத் தோணும் போதெல்லாம் ஊட்டி விடனும். தண்ணி தவிச்சா தண்ணியெடுத்துக் குடுக்கனும். நிறையா புதுத்துணி வாங்கிக் குடுக்கனும். ம்ம்ம்… இப்போதைக்கு இவ்வளவுதான் அப்பறமா தோணும் போது சொல்றேன் மீதியை!”
“உன்னோட ஆசையெல்லம் செயல்படுத்த எனக்குச் சம்மதம்!” என்று திடமாகவும் கள்ளச் சிரிப்புடனும் கூறினான் விதுரன். ஆம் அவள் ஆசைகளைக் கேட்டவன் மனதில் அவளது குழந்தைத்தனமும் தூய்மையான மனதும் நன்கு புரிந்தது. அவளை மற்றவரிடம் விட்டுக்கொடுக்க அவன் மனம் தயங்கியது. அதற்கு அவன் மனம் கூறிய காரணம் யாதெனில் காதல். ஆனால் மூளையோ அதைத் தவிர்த்து அவளின் பாதுகாப்பும் நல்வாழ்க்கையும் தான் பிரதானமானது என்று காரணம் கூறியது. அதுவோ ஒரு காரணம், ஆனால் அவனது முடிவு திருமணத்தை நடத்துவது.
அனைவர் முன்னிலையிலும் அந்த தங்கத் தாலியை அவள் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு இருவர் வாழ்க்கையையும் ஒரே கோட்டில் முடிந்தான். அனைவரும் மகிழ்ச்சியும் ஆனந்தமும் போட்டிப் போட வாழ்த்தினர் இருவரையும்.
??????
சென்னையில் தனதுக் கல்லூரிக்கு அருகேயே ஒரு ஃப்ளாட் வாங்கி மனைவி மற்றும் தமக்கையுடன் குடியேறினான். காலையில் எழுந்ததும் சில பயிற்சிகள் செய்பவன் மனைவியை பால்கனிக்கு அழைத்துச் சென்று அங்குள்ள ஊஞ்சலில் அமர்த்தி அவள் போலுமென்கிற வரையில் ஆட்டி விட்டு அதன் பிறகு தான் கல்லூரிக்கே கிளம்புவான். காலை உணவும் இரவு உணவும் அவளுக்கு அவனே ஊட்டி விடுவான்.
குழந்தைத் தனமாக இருந்தாலும் அவன் மனம் அதை ரசிக்கவே செய்தது. அவன் வாழ்க்கை மிகவும் ரம்மியமாகச் செல்வதை அவன் மனம் உணர்ந்தது. அதற்குக் காரணமான அவன் தேவதையைக் காதல் உலகிற்கு அறிமுகம் செய்ய அவன் ஒரு மனம் துடித்ததென்றால் மற்றொரு மனமோ பொறுமை காக்கச் சொன்னது.
இவ்வாறாக அவன் தன் நான்காவது வருடக் கடைசி தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று ஒரு மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப அலுவலகத்தில் பணியில் அமர்ந்தான். ராஜாவும் அவனுடன் அதே அலுவலகத்தில் பணியில் சேர்ந்தான். அதற்கிடையில் மாதுவை வற்புறுத்தி ஆங்கிலம் பேச கற்குமிடத்தில் சேர்த்துவிட்டார் சீதா. தடுத்த விதுரனை அவளுக்குத் தன்னம்பிக்கை வர வேண்டும் என்று கூறி அமைதிப் படுத்தினார்.
ஆரம்பத்தில் பிடிக்காமல் சென்றாலும் அங்கு வரும் பெண்களுடன் பழக ஆரம்பித்த பின் விரும்பியே கற்றாள் ஆங்கிலத்தை மட்டுமல்ல அவர்களின் நாகரீக வாழ்க்கை முறையையும் தான் ஆரோக்கியமான வகையில்தான். அவளது மாற்றத்தை விதுரன் ரசித்தாலும் அவனுக்கு அந்த பட்டிக்காட்டு மாதுவைத்தான் பிடித்தது.
ஆனாலும் விதுரன் மற்றும் மாதுவின் காதல் வாழ்வு நிலைப்படியிலேயே தான் நின்றது. அதனை உணர்ந்த சீதா சீலாவாக அவதாரம் எடுத்தார். என்னதான் அவள் நாகரீகமான வாழ்க்கையை அங்கீகரித்தாலும் அது எளிமையான தொல்லையின்மைக்காக மட்டுமே தான். ஆனால் ஆடம்பரத்திற்காகவோ சுகாதாரக் கேடாகவோ வரும் இடத்தில் அவள் நாகரீகத்தை வெறுத்தாள் என்பதைவிட அவள் மனது அதை ஏற்க மறுத்தது.
சீதா அவள் தன்னை விட்டு விலகினாள் மட்டுமே விதுரனை நெருங்குவாள் என்பதை உணர்ந்து அவளை தன் நடவடிக்கையால் சீண்டி வெறுப்பேற்ற ஆரம்பித்தார். அதன் அடிக்கல் நாட்டு விழா தான் சீதா லாபேஸ்வரன் சீலாவானது. யாரவது கேட்டாள் மார்டனான ஆள் என்று விடுவார். அடுத்த அடியாக அவளை பட்டிக்காடு என்று கேளி செய்யத் தொடங்கினார்.
இப்படி இவர் பல அடியெடுத்து வைத்தாரென்றால் விதுரனோ தன் காதலை நிலைப்படியிலிருந்த மேல் நோக்கி நகர்த்த அடுத்த அடியை எடுத்து வைத்தான். ஆம் அவன் வேலைக்குச் செல்ல ஆரம்பித்ததிலிருந்து அவளுடன் பழகும் நேரம் குறைந்தது. அன்று மாது மட்டும் தனியாக வீட்டிலிருந்தாள். சீலா அழகு நிலையம் செல்கிறேன் என்று கூறிவிட்டு கோவிலிற்குச் சென்றிருந்தார்.
மாது வரவேற்பறையில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தாள். திடீரென மின்தடை ஏற்பட்டு வீடே இருள் சூழ்ந்தது. ஆரம்பத்தில் தைரியமாக இருந்த மாது நேரமாக ஆகப் பயமென்னும் ஆழியில் மூழ்கத் தொடங்கினாள். அவளை மேலும் அச்சுறுத்தும் வகையில் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. மீண்டும் தாழிடும் சத்தமும் கேட்டது. பின்னர் மீண்டும் பலத்த அமைதி. மாதுவோ தன்னை எதிராளி எந்த பக்கமிருந்து தாக்கக்கூடும் என்ற சிந்தனையில் வாயை கையால் பொத்தியவாறு அமர்ந்திருந்தாள்.
நேரம் கடந்தும் எந்த ஒரு தாக்குதலும் இல்லை என்ற உடன் மாது சிறிது ஆசுவாசம் அடைந்தாள். வாயை மூடிய கையை வாயிலிருந்து பிரித்த நேரம் ஒரு கை சட்டென அவள் கையையும் வாயையும் துணி கொண்டு கட்டியது. மாதுவின் உடல் பயத்தில் விரைத்தது. பின்னர் அந்த கைக்குச் சொந்தக்காரன் அவளைத் தூக்கிச் சென்று எதிலோ அமர்த்தினான். பின்னர் அவள் கண்கட்டையும் வாய்க்கட்டையும் அவிழ்த்தவன் மின்சாரத்தையும் இயங்கவிட்டான்.
மாதுவின் கண்கள் அவள் கண்ட காட்சியில் விரிந்து மலர்ந்தது. அவர்கள் வீட்டு மேல்மாடத்தில் பல வர்ண மலர்கள் பூத்துக் குலுங்க அவளுக்காகவே அவன் வாங்கிய ஊஞ்சல் மலர் அலங்காரத்தில் கண்களுக்கும் மனதிற்கும் உற்சாகமூட்டியது. அவளின் ஒவ்வொரு முகபாவனைகளையும் விதுரன் தன் கண்கள் கொண்டும் கைப்பேசி கொண்டும் நினைவு பெட்டகங்களில் சேமித்தான்.
ஆச்சரியத்திலிருந்து வெளிவராதவளை உலுக்கி ஓர் புடவையை அவளிடம் கொடுத்து அணிந்து வரச் சொன்னான். அவள் புரியாது விழித்தாள். அதற்கு அவனோ, “சரியா பதினெட்டு வருசத்துக்கு முன்னாடி எனக்காக எங்க அக்கா ஒரு விலைமதிப்பற்ற ஒரு புனிதமான மாசுமறுவில்லாத நல்ல மனசுடைய ஒரு மரகத கல்லை எனக்குப் பரிசா கொடுத்தாங்க! அதுக்கு என்னுடைய வாழ்க்கையில் முக்கிய பங்கு இருக்குனு சாரி சாரி.. என் வாழ்க்கையே அது தானென்று நான் இப்போது தான் புரிந்துகொண்டேன்.”
“அம்மா குடுத்தாங்களா? எங்க மாமா அந்த மரகதக் கல்?”
“நீ போய் இந்த சேலையை கட்டிட்டு வா. நான் உனக்கு அதை காட்டுறேன்.”
அதையேற்று அவளும் அந்த சேலையை வாங்கிக் கொண்டு சென்றாள். அவள் தயாராகி வருமுன்னர் அவன் செய்ய வேண்டிய மீதி வேலைகளைச் செய்தான். அவள் அவனளித்த சேலையில் கிளம்பி வந்தாள். அவள் அழகை ரசித்தவன் மெய்மறந்தான்.
“மாமா சேலை கட்டிட்டு வந்தா அந்த மரகதக் கல்லை காட்டுவேனென்று சொன்ன! காட்டு மாமா நான் மரகத கல்லைப் பார்த்ததே இல்லை மாமா!” என்று அவனிடம் கொஞ்சினாள்.
அவள் சலுகையாய் கொஞ்சியதில் மீண்டெழுந்த விதுரன் அவளை அழைத்துச் சென்று அவளுக்காக அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் அவளை அமர்த்தினான். பின் அவள் காலடியில் அமர்ந்து தன் கைப்பேசியை எடுத்தான். பொறுமையிழந்த மாதுவோ,”மாமா நான் என்ன கேட்கிறேன்! நீ என்ன செய்துகொண்டு இருக்கிற! மாமா…” என்று படபடத்தாள்.
அவளது படபடப்பையும் ரசித்தான் அந்த காதல் கள்வன். “பொறுடா! காட்டுறேன்…” என்று அவளை அமைதி படுத்திவிட்டு அந்த மரகத பட்டுடுத்திய அழகு மரகதச் சிலை முழுதாக தெரிய அவள் காலடியில் அவன் தெரிய ஒரு சுயமியை எடுத்தான். பின் அவளிடம்,”என்னுடைய அந்த தூய்மையான மரகதக் கல் கூடத்தான் இப்போ நான் பேசிட்டுருக்கேன் டீ!” என்று கூறி அவளருகில் அவனும் அமர்ந்து ஊஞ்சலைக் காலால் உந்தி ஆட்டிவிட்டான். அவன் திடீர் செயலில் அவள் அதிர்ந்து தெளியும் முன்னரே அவளை மீண்டும் அதிரவைத்தான் விதுரன் அவள் மடியில் தலைசாய்ந்து. அதில் பதறிய மாது தன் வலது காலை கீழூன்றி ஊஞ்சலை நிறுத்த எத்தனிக்கையில் அவன் அவளை விட விரைந்து அவள் பாதத்தைப் பற்றினான் தன் வலக்கையால்.
அவன் மடி சாய்ந்ததில் அவளில் உண்டான குறுகுறுப்பு அவனின் இச்செயலில் வார்த்தையில் விவரிக்க முடியாத ஓர் உணர்வு பிரவாகத்தால் அவளது உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை கூசி சிலிர்த்தது. ஆயிரம் தடவை தொட்டு பேசிய தன் மாமன்தான் என்றாலும் அவனது இந்த காதல் அவதாரத்தை ஏற்க முடியாமல் என்பதை விட ஏற்கத் தெரியாமல் தவித்தாள் அந்த பேதை. அவள் நிலை உணர்ந்த விதுரனோ அவள் மடிக்கும் பாதத்திற்கும் விடுதலை தந்து எழுந்தான்.
மேல்மாடத்தின் ஒரு ஓரத்தில் பூக்குவியலிற்குள் கிடத்தப்பட்ட மேசையில் அழகிய கேக் வீற்றிருந்தது. அதை நோக்கி அவளை அழைத்துச் சென்று,”இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பொண்டாட்டி!!” என்று கூறி அவள் பிறை நுதலில் தன் காதல் சாசனம் எழுதி இதழ் ரேகை பதித்தான் மாதுவின் காதல் அடிமை. கேக்கை வெட்டி அவனுக்கு ஊட்டத் தயக்கத்துடன் அவனை நோக்கி கேக்கைக் கொண்டு சென்றாள்.
“எனக்கு நெத்தியாலா சாப்பிடுகிற பவர்லாம் இல்லைம்மா! உன் ஆசை பட்டியலில் அதுவும் இருக்கா?” என்று பயந்ததுபோல் நடித்தான் விதுரன்.
அவன் சொன்னதும் அவனை நிமிர்ந்து பார்த்த மாது தன் கை அவன் நெற்றியைக் குறிவைத்திருப்பதைக் கண்டு சிரித்தாள். பின் தயங்கிய படியே அவன் வாயருகில் கொண்டு சென்றாள். அவள் கையை பற்றிய விதுரன் அவள் முகத்தையே ஊன்றிப் பார்த்தான். எதுவோ தோன்ற அவளும் அவனைப் பார்த்தாள். அவன் விழிகளில் எதை உணர்ந்தாளோ சட்டென்று அவன் மார்பில் தன் முகம் புதைத்தாள்.
“என்னாச்சு டீ பொண்டாட்டி மாமா முகத்தைப் பார்க்க மாட்டிக்குற என் மூஞ்சி அவ்வளவு கேவலமாகவா இருக்கிறது?”
“என்னன்னு தெரியலை மாமா! நீ கையை பிடிக்கும் போது உன் கையை இறுக்கிப் பிடிச்சிக்கனும்னு தோனுது ஆனால் ஏதோ ஒன்னு தடுக்கிறது! நீங்க மடியில் படுக்கும்போது உங்க தலை முடியைக் கோதி விடனுமென்றுத் தோனும் ஆனால் மறுபடியும் ஏதோ வந்து தடுக்கும். இப்போ கூடப் பாருங்க உங்க முகத்தை பார்க்கனும்னு நினைக்கிறேன் ஆனால் முடியலை!” என்று வருந்தினாள்.
“அடி மக்கு அது வெக்கம் டீ! இந்த மாமன் கிட்ட சொல்லிட்டைல நான் பார்த்துக்கொள்கிறேன் இனி!” என்று அவளை சமாதானம் செய்து அவள் நீட்டிக் கொண்டிருந்த கேக்கை சுவைத்தான். இடையிடையே அவள் விரல்களையும் தான்.
மாதுவின் பிறந்த நாளை இனிமையாக இருவரும் சேர்ந்தே கொண்டாடி இரண்டு வருடம் கழித்து தங்கள் மதுராக்குட்டிக்கும் பிறந்தநாள் கொண்டாடத் தயாராகினர். தன் வாழ்க்கையின் நடந்த சம்பவங்களையும் தன் மனைவி தன் வாழ்க்கையை வரமாக வளமாக மாற்றியதையும் அசைபோட்டபடியே வீடு வந்தான் விதுரன்.
ஆசையும் மகிழ்ச்சியும்
போட்டிப் போட்டுச் சாமரம் வீச…
ஆச்சரியமும் குழப்பமும்
முட்டி மோதி பதற்றம் பூச…
விரைவாய் வாசல் வந்தேன்
என்னவளிடம் காதல் பேச…
வாசலில் அழைப்பு மணியை அழுத்தும் பொழுதே ஓர் அற்புத உணர்வு வந்து அவனை ஆட்கொண்டது. ஆவலுடன் காத்திருந்தான் மனைவியின் காதல் கனிந்த முகத்தைக் காண. அவன் ஏக்கத்தைத் தீர்க்கும் காதல் தடாகமாய் வந்து கதவு திறந்தாள். வாசலில் நின்றவனைச் சிரித்த முகமாக வரவேற்றுத் தேநீரும் சிற்றுண்டியும் அளித்துவிட்டு அவனுடன் சிறிது நேரம் வழக்கமான கலகலப்புடன் பேசினாள். பின் அவனிடம் சொல்லிவிட்டுச் சமையல் வேலைகளைக் கவனிக்கச் சென்றாள். அவனும் குளித்து இளைப்பாறி வரச் சென்றான்.
குளித்து முடித்து வந்து வரவேற்பறையில் அமர்ந்தான். அவன் முகத்தில் மனைவி தன்னிடம் பேசியதில் மகிழ்ந்துபோய் இருந்தது. அவன் மகளும் அவனை இடித்துக்கொண்டு வந்து ஃசோபாவில் அமர்ந்தாள். மகளின் செயலை இரசித்துச் சிரித்தவன்,”என் குட்டி தங்கத்துக்கு என்ன வேணுமாம்?”என்று கொஞ்சினான்.
“டின்னர்க்கு வெளிய கூட்டிட்டுப் போங்க டாடி!” என்று கட்டளையிட்டாள் மதுரா.
“டின்னரா? ம்ம்ம்.. சன்டே போகலாம் குட்டி!” என்றான் விது.
“டாடி! நீங்களா கூட்டிட்டுப் போனால்தான் உங்கள் சாய்ஸ். பட் இது வந்து ஃபீஸ், உங்கள் மாதுவை உங்கள் கூட பேசவச்சதுக்காக நீங்க எனக்கு தரப்போகிற ஃபீஸ்! அதுனால நான் தான் என்றைக்கு போகனும்னு சூஸ் பண்ணுவேன்!” என்று வழக்காடினாள் மதுரா.
“பேச வச்சியா??”
“ஆமா! அதுவும் ப்ளாக் மெயில் பண்ணி!”
“ப்ளாக் மெயிலா?? என்னடா சொல்ற குட்டிமா!”
“ஆமாப்பா ப்ளாக் மெயில் தான். அன்றைக்கு ஒரு ஃபோட்டோ காட்டுனீங்களா நீங்க அதை நான் அம்மாவிடம் காட்டினேன். அதான் அம்மா உங்க கிட்ட பேசாமல் இருந்தாங்க.. அதுனால அவங்களை அப்பாகிட்டப் பேசலைனா அந்த ஃபோட்டோவ ஸ்டேடஸ் வச்சி ‘மை அம்மா பை மதுரா’னு ஸ்டேட்டஸ் போடுவேனென்று மிரட்டினேன்! உடனே உங்க கிட்ட பேசிட்டாங்க! எப்படி என் ப்ளான்?” என்று மார்தட்டிச் சிரித்தாள் மதுராக்குட்டி.
‘ஹா… ஹா… ஹா… அப்போது இன்றைக்குப் பாம்பு படுக்கை கன்பார்ம்!’ என்று சிரித்த மனசாட்சி விதுரனின் முறைப்பில், ‘குறைந்தபட்சம், தேனீ படுத்கையாச்சு உண்டென்று நினைக்கிறேன்!’ என்று கூறிவிட்டு ஓடியது.
இரவு உணவு வரை இனிதாகவே அனைவருக்கும் பொழுது கழிந்தது. சீலா தன் மகளின் மனமாற்றத்தில் மகிழ்ந்தாலும் விதுரனிற்கு அறிவுரை வழங்கவும் மறக்கவில்லை. தன் அறிவுரையை முடித்துக்கொண்ட சீலா இறுதியில்,”இனிமே நீ குடிப்ப?!” என்று கேட்டார். அவர் கேட்ட மாத்திரத்தில் விதுரனின் தலை வேகமாக இல்லையெனும் விதமாக ஆடியது.
??????
இரவு அனைவரும் உறங்கச் சென்றனர். சீலா மதுராவை தன்னுடன் படுக்க அழைத்துச் சென்றார். அறைக்குள் வந்த விதுரன் தலையணையை மட்டும் நன்றாக உதறி எடுத்துக்கொண்டு கதவைத் திறக்கவும் மாது உள்ளே வரவும் சரியாக இருந்தது. அவனைக் குழப்பமாகப் பார்த்த மாது,” என்ன மாமா? எங்க போறீங்க? அதுவும் தலகானியோட…” என்று கேட்டாள்.
அவள் கேள்வியில் விழித்த விதுரன்,”இல்லை மாதும்மா நீ பாப்புக்காக தான என்கிட்ட பேசுற! இப்போது பாப்பாதான் இல்லையே! நீயும் பாவம் சோபாவில் கஷ்டப்பட்டு படுக்கனும். அதான் நான் வேண்டுமானால் வெளியில்..” என்று கூறியவனை இடைமறித்தது மாதுவின் சிரிப்பு.
அவன் அவளைப் புரியாமல் பார்க்க அவளோ,”மாமா அன்றைக்கு எறும்பை வைத்து விளையாண்டது மாதிரி இன்றைக்கும் பண்ணுவேன் பயந்துட்டியா? அய்யோ ஆனால் உண்மையிலேயே வேறவொன்னு ப்ளான் பண்ணேன் அதை செயல்படுத்துகிறதுக் குள்ள உன் தரப்புல ஒரு திடீர் திருப்பம் வந்து தீர்ப்பு மாறிருச்சு. சோ! நீ தப்பிச்சுட்ட!” என்று கூறிக் கண் சிமிட்டினாள்.
“அப்படி என்னாச்சு?”
மத்தியான நேரம் மாதுவும் சீலாவும் வரவேற்பறையில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தனர். மது விளையாடிய சோர்வில் உறங்கிக் கொண்டிருந்தாள். அப்போது அழைப்புமணி அழைத்தது. யாரென்று பார்க்க கதவைத் திறந்தவள் பயத்தில் வெளிறினாள்.
யாரோ ஒருவன் தலையில் தலைக்கவசமுடனும் கையில் இனிப்பு பெட்டியுடனும் நின்றிருந்தான். அவளுக்கு காலையில் செய்தியில் வந்த சம்பவம் நினைவில் வந்தது. யாரோ ஒருவன் தலைக்கவசத்துடன் வந்து நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றதாகவும். தெரிந்தவர் போல் மயக்க மருந்து இனிப்பு பெட்டியைக் கொடுத்து ஏமாற்றியதாகத் தகவல் என்று செய்தியாளர் சொன்னது மனதில் வந்தது. சீலாவிற்குச் சைகை செய்து அவனிடம் பேச்சுக் கொடுக்க சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.
வரும்பொழுது ஒரு கையில் மிளகாய்ப் பொடியும் மற்றொரு கையில் துடைப்பக்கட்டையையும் எடுத்து வந்தாள்.அவனும் இனிப்பு பெட்டியையும் நீட்டியவாறே உள்ளே வந்தான். உள்ளே நுழைந்தவனைத் துடைப்பத்தாலேயே நான்கு போடு போட்டு தலைக்கவசத்தை கழட்ட வைத்து மிளகாய்ப் பொடியைக் கண்களுக்கு அருகில் கொண்டு சென்றாள். அவன் முகத்தைப் பார்த்துத் திகைத்தனர் இருவரும்.
“ராஜாண்ணா! அய்யோ மன்னிச்சுருங்க அண்ணா! நான் ஏதோ திருடனென்று நினைச்சுக்கிட்டு இப்படியெல்லாம் பண்ணி சாரிண்ணா! எதுக்குண்ணா ப்ளாட்டுக்கு ஹெல்மெட் போட்டுட்டே வந்தீங்க அதான் குழம்பிட்டேன்…” என்றவள் சற்றென்று தன் பேச்சை நிறுத்தி அவனை ஊன்றிப் பார்த்தாள்.
“என்னண்ணா? இது கோலம்! ஆம்பளைங்க இப்படி இருந்தால் அது எங்க ஊரப் பொருத்தவரை ஏதோ பெரிய தப்பு செஞ்சி தண்டனை வாங்கிருக்கான்னு சொல்லுவாங்க! நீங்க எதற்கு இப்படி இருக்கீங்க!”
“அது வந்துமா…”
“இருப்பா! முதலில் அந்த பாத்ரூம்ல மூஞ்சியை ஒழுங்கு பண்ணிட்டு வா!” என்று விரட்டினார் சீலா. ஆம் எந்த நிலையில் தன் நண்பனைப் பார்க்கக் கூடாது என்று விது குடித்தானோ, அதே நிலையில் மாறு மீசை மாறு தாடியோடு வந்திருந்தான். தன் நண்பனைக் குற்றமற்றவன் என்று நிரூபித்து அவன் குடும்பத்தில் தன்னால் எழுந்த குழப்பத்தைச் சரி செய்யும் வேகம் அவனில்.
முகத்தில் முழுதாக சவரம் செய்து வந்தவனை அமர்த்தி காபி கொடுத்தனர் தாயும் மகளும். அவன் காபியை அருந்தும் வரை அமைதி காத்தனர் இருவரும்.
“எதற்குப்பா அப்படி ஒரு கோலத்தில் வந்த? என்னாச்சு?” என்று வினவினார் சீலா.
“அன்றைக்கு மட்டும் நம்ப விது குடிக்கவில்லையென்றால் நான் இப்படித்தான் ஒரு மாசம் ஆபிஸ் போயிருப்பேன்ம்மா! எனக்காகத்தான் விது குடித்தான். அதுவும் ரொம்ப கம்மியாத்தான் குடிச்சான். பட் ஃபர்ஸ்ட் டைம்ல அதான் கொஞ்சம் பிரச்சினை ஆகிருச்சு.” என்று நடந்தது அனைத்தையும் விளக்கிக் கூறினான். அதைக்கேட்டவுடன் மாதுவின் மனதில் விதுவின் மேலிருந்த கோபம் வருத்தம் ஊடல் எல்லாம் பாறையில் அடிக்கும் அலையாய் சிதறித் தெறித்து மறைந்தது.
விதுரனிடம் நடந்ததைக் கூறி முடித்த மாது அவன் தோளில் சாய்ந்தாள். பின்பு எதுவோ நினைவு வந்தவளாக அவள் சாய்ந்திருந்த அவன் தோளிலேயே தன்னால் இயன்றவரை அழுந்த கிள்ளினாள். அவளை விட்டுத் துள்ளி விலகினான்.
“இப்போ என்னடி!”
“மதுக்குட்டி கிட்ட எதுக்குடா மாமா அந்த ஃபோட்டோவை காட்டி உங்கம்மானு சொன்ன? பக்கி! அவ என்கிட்ட வந்து அந்த ஃபோட்டோவை காட்டி வாட்சப் ஸ்டேட்டஸ் போடுவேன்னு சொல்லுறா!!”
“ம்ம் அது நீ தான… ஊரில் காட்டுப்பக்கம் திரியும் போது இப்படித்தான இருந்த! ஆயிரம் சொல்லு எனக்கு இந்த அப்கிரேடட் வெர்சனை விட அந்த ஓல்டர் வெர்சன் மாதுவைத்தான் ரொம்ப பிடிக்கும்!!” என்றவாறே அவளைத் தூக்கிச் சுற்றினான்.
“முதலில் என்னை இறக்கி விடுங்க மாமா!” என்று சிடுசிடுத்தாள்.
“எதுக்குடி மறுபடியும் ஆங்கிரி பேர்டா (angry bird) மாறிட்ட?” என்று அவளை இறக்கி விட்டான் விது.
“நீங்க என்ன பண்ணுவீங்கன்னு தெரியாது! ஆனால்…”
“பத்து மாசத்தில் மதுரா குட்டிக்கு விளையாடத் தம்பி வேண்டும்.. அதான!” என்று பல்லைக்காட்டினான்.
“ஒரு ஆணியும் தட்ட வேண்டாம்… போய் உங்க பொண்ணுக்கிட்ட இருந்து அந்த ஃபோட்டோவை எப்படியாச்சும் வாங்கிட்டு வாங்க! இல்லாவிட்டால் என் பனிஸ்மன்ட்ஸ் பத்திதான் உங்களுக்கே நல்லா தெரியுமே!” என்று சிரித்தாள்.
“என்னது மறுபடியும் பனிஸ்மென்டா? தெய்வமே இரு காலையில் உன் கையில் அந்த ஃபோட்டோ இருக்கும். பனிஸ்மென்ட்லாம் எதற்கு வேஸ்ட் பண்ணுறீங்க?” என்று இறங்கிய குரலில் பேசினான்.
“பனிஸ்மென்ட்ட யூஸ் பண்றதா வேஸ்ட் பண்றதானு நான் முடிவு பண்ணிக்கிறேன். நீங்க போய் ஃபோட்டோவை எப்படி வாங்குவதென்று இல்லாத உங்க மூளையைத் தட்டி தட்டி முடிவு பண்ணுங்க… போங்க!” என்று கூறி அவனை அறைக்கு வெளியே தள்ளிக் கதவடைத்தாள்.
அவளது திடீர் தாக்குதலில் நிலை தடுமாறி கீழே விழப்போனவன், அருகிலிருந்த மேசையைப் பற்றி நின்றான். பின் பெருமூச்சுடன் சென்று இருக்கையில் அமர்ந்து மகளைச் சமாளிக்கத் திட்டமிட்டான். அவன் சிந்தனை சிற்பியாக மாறி தன் மூளைச் செல்களை செதுக்கிக் கொண்டிருப்பதை அவனுக்குத் தலையணையும் போர்வையும் கொடுக்க வந்த மாது பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாள். அவள் சிரிப்பொலி அவன் செதுக்கலைத் தடைசெய்து அவனை நினைவுக்கு அழைத்து வந்தது. அவள் சிரிப்பதைக் கண்டு அவளை முறைத்தான்.
“மாமா நீ குரு சிஷ்யன் படத்தில் வரும் ஷோவையே தாண்டிருவ போல ப்ளான் பண்ணுறதுல! ஹா… ஹா… ஹா..” என்று அவனை வம்புக்கு இழுத்தாள். அவன் அவள் சுதாரிக்கும் முன்னர் அவளருகில் விரைந்து அவள் இரு பக்கமும் கையூன்றி அவளைச் சுவரிலேயே சிறை செய்தான்.
அவன் செயலில் வாயடைத்துப் போனாள் அந்த வாய் பேச்சுக்காரி. அவன் அவள் இதழ் நோக்கிக் குனிய பெண்ணவள் இமைகள் தன் கயல் காதலிகளை மறைத்தது அங்கு அரங்கேறப் போகும் காட்சியைக் காணாதிருக்க. கண்மூடிச் சாய்ந்தவளின் விழிமீன்கள் நர்த்தனங்கள் நடத்தியதே ஒழிய அவற்றின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. அவள் இமைகள் பிரியக் காத்திருந்தவன் அவள் தலையில் குட்டி தலையணையையும் போர்வையையும் வாங்கிச் சென்று படுத்தான். அவளோ காதலின் மாயவலை அறுபட்டு விழச் சிரிப்புடன் தன் தலையைத் தடவியவள்,’இருடா மவனே நாளைக்கு வச்சுகிறேன் உன்னை… திருட்டு மாமா!!!’ என்று கொஞ்சிக்கொண்டே அறைக்குள் சென்றாள்.
மறுநாள் மாலை குடும்பத்துடன் கடற்கரை சென்றான் விதுரன். மதுராவும் மாதுவும் நன்கு விளையாடிக் களைத்த பிறகே கடற்கரையை விட்டு வந்தனர். அங்கிருந்து நேராக ஓர் உயர்தர உணவு விடுதிக்குச் சென்றனர். நான்கு பேர் அமரக்கூடிய மேசையில் அமர்ந்தனர். பணியாள் வந்து அவர்களுக்குத் தேவையானவற்றைக் கேட்டான். மாதுவும் மதுவும் ஒரு சேர விதுவைப் பார்த்தனர்.
‘ஒன்னுகூடிட்டாய்ங்களே டா விது… நம்மள இன்றைக்கு வேலை சொல்லியே வெள்ளாவிப் பானையில் வேகப் போட்ருவாங்களே! விது பார்த்து சூதானமா இருடா!!’
‘நானே கடுப்பில் இருக்கிறேன்! பேசாமல் போயிரு!’ என்று தன் மனசாட்சியை அடக்கியவன் மகளும் மனைவியும் கேட்டவற்றை வாங்கி வந்து அவனே பரிமாறினான். அவன் அவர்கள் கேட்டவற்றை வாங்கச் சென்ற ஒவ்வொரு முறையும் தாயும் மகளும் ஹய் ஃபை அடித்துக்கொண்டனர் சிரிப்புடன்.
அங்கு நடக்கும் காட்சியைக் கண்டு மனம் நெகிழ்ந்தார் சீலா. மகளும் தன் தம்பியும் மனமொத்து சந்தோசமும் நிம்மதியும் நிறைந்து வாழும் வாழ்க்கையை உணர்ந்த அந்த தாயுள்ளம் குளிர்ந்து போயிற்று. அவர்கள் வாழ்க்கையில் வரும் கஷ்ட நஷ்டங்களை இருவரும் சேர்ந்தே இருந்து சமாளிக்க வேண்டும் என்று கடவுளுக்கு ஒரு வேண்டுதல் வைத்தது அவர் மனம்.
தன் தம்பியை அவர்கள் இருவரும் படுத்தும் பாட்டை கண்டு பொறுமை இழந்தவர் இருவரையும் மிரட்டிச் சாப்பிட வைத்தார். தன் தம்பியையும் உணவுண்ண அமர்த்தினார். அவரின் செயலில் மாதுவும் மதுவும் உதட்டைச் சுழித்து முறைத்தனர். தப்பித்தோம் பிழைத்தோம் என்று அமர்ந்து உணவுண்ண ஆரம்பித்தான் விதுரன் காலையில் நடந்ததை எண்ணியவண்ணம்.
“மதுக் குட்டி குட் மார்னிங்!”
“குட் மார்னிங் பா!”
“பேபிம்மா டின்னர் போவோமா இன்றைக்கு. உனக்கு பிடித்த உணவகத்துக்கே போகலாம்.”
“என்னப்பா எதாச்சும் ப்ராப்ளமா? என் ஹெல்ப் தேவைப்படுகிறது போலையே!”
“ம்ம்ம்.. அன்றைக்கு அப்பா ஒரு ஃபோட்டோ உன்கிட்ட காட்டுனேன்ல அது மட்டும் உங்கம்மா கைலை கிடைச்சது நான் காலி! அதை அப்பாவிடம் கொடுத்திரு டா!”
“எதற்குப்பா? அந்த ஃபோட்டோ அம்மாவோடது தான. அப்பறம் என்ன?”
“அது மாது ஃபோட்டோ தான் பட் அது ஃபுல் அன்ட் ஃபுல் நான் எடிட் பண்ணது! வில்லேஜ் ஸ்டைல இருந்த எப்படி இருப்பாளென்று பார்க்கிறதுக்காக பண்ணேன்! அத மட்டும் அவள் பார்த்தாள் மறுபடியும் என்கிட்ட டூ விட்டுருவாள். போச்சு!”
“ஏன் டாடி இப்படி பண்ணீங்க? நான் அம்மா தானென்று நினைத்து அவங்களை ரொம்ப வம்பு பண்ணிட்டேன்! அம்மா பாவம்! எல்லாம் உங்களால் தான்.”
“சாரி டா அப்பா கிட்ட அந்த ஃபோட்டோவை கொடுத்திரு டா. ப்ளீஸ்!”
“சரிப்பா! ஆனால் ஒரு பனிஸ்மென்ட் உண்டு கண்டிப்பாக!”
‘அம்வை மாதிரி பனிஸ்மென்ட் கொடுக்க ஆசைப்படுகிறாளே! சரி குழந்தை தானே எதாச்சு குழந்தைத் தனமாக சொல்லுவா செய்வோம்’ என்று மனதில் நினைத்துக் கொண்டு வெளியே,
“சரிடா! டீல்!” என்று கூறி ஃபோட்டோவை பெற்றுக் கொண்டான். அந்த தந்தை மகளின் உடன்படிக்கையின் விளைவு தான் இந்த உணவு பரிமாறும் வேலை. இவ்வாறு எண்ண அலைகளில் நீந்தியவனைத் தோளில் தட்டி நினைவுக்குக் கொண்டு வந்தாள் மதுரா. பின்பு குடும்பமே ஒருசேர விதுவைப் பார்த்து,”இனிமே நீ குடிப்ப?!” என்று கேட்டுச் சிரித்தனர்.
அன்றிரவு தனிமையில் தன் மடியில் தலை சாய்ந்திருந்த தன் கணவனின் முடி கோதியபடியே பல கதைகள் பேசிக்கொண்டிருந்தாள் மாது. அவள் பேச்சை ரசித்தவாறே அவளைச் சீண்டிக் கொண்டிருந்தான் விதுரன். திடீரென ஏதோ நினைவு வர அவனை எழுப்பி,
“அதெல்லாம் இருக்கட்டும் மாமா! இனிமே நீ குடிப்ப!?” என்று கேட்டாள்.
“சாமி சத்தியமா பாட்டில் சரக்கைக் குடிக்க மாட்டேன் டீ!!!” என்றவன் நினைவில் பச்சைக் கீரை, விளக்கெண்ணெய் சாலட், மனைவியின் விலகல், அவளின் மௌன விரதம், எறும்பு படுக்கை, அதிமுக்கியமாக அவன் மனசாட்சியின் அத்துமீறல் எல்லாம் வந்து வந்து போனது.
“ஆனால் ….” என்றவன் தன் menஇதழால் அவள் மென்னிதழைச் சிறை செய்தான்.
இத்தோடு குடிக்குப் போட்டாயிற்று என்ட்கார்ட்!!!???