Ithayam – 4

Ithayam – 4

அத்தியாயம் – 4

கல்லூரி என்றாலே ஆயிரம் வண்ண கனவுகள் கண்முன்னே படமாக விரியும். அதே மாதிரி தன் படிப்பைப் பற்றிய ஆயிரம் கனவுகளுடன் கல்லூரிக்குள் அடியெடுத்து வைத்தாள் பெண்ணவள்.

தன் லட்சியத்தை நோக்கி அடியெடுத்து வைத்ததை நினைத்து மனதிற்குள் பூரிப்புடன் வகுப்பறை நோக்கி சென்றாள். அங்கிருந்த பெரிய பெரிய மரங்களுக்கு கீழே மாணவர்களின் பட்டாளம் கூட்டம் கூட்டமாக அமர்ந்து எல்லோரையும் ராகிங் செய்து கொண்டிருந்தனர்.

அதைக் கண்டு பயப்படாமல் சென்றவளைக் கண்டு, “ஏய் நீ இங்கே வாங்க” என்றதும் அவள் எதுவும் பேசாமல் அவர்களின் அருகே சென்றாள்.

“என்ன நீ சீனியர் உட்கார்ந்து இருப்பதை கூட கவனிக்காமல் போற” என்று கேட்க அவளோ அமைதியாக நின்றாள். உள்ளுக்குள் உதறல் இருந்தாலும் அதை அவள் வெளிகாட்டி கொள்ளவில்லை.

“ஸாரி சீனியர்” என்றவளிடம், “உன்னோட பெயர் என்ன” என்றான் ஒருவன்.

“அபூர்வா” என்றாள் அவனை பார்த்தபடி.

“அப்படின்னா என்ன அர்த்தம்” என்று கேட்டான் மற்றொருவன்.

“ஒரு நிகழ்வு ஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும். அந்த மாதிரி நிகழ்வுகள் நடக்கும் வேளையில் இதெல்லாம் ரொம்ப அபூர்வமான விஷயம் என்று சொல்வாங்க” என்று தனக்கு தெரிந்த அர்த்தத்தை அவள் கூறினாள்.

“அப்போ நீ ஆயிரம் வருஷம் கழிச்சு பிறந்திருக்கிறாயா” என்று ஒருவன் ஏளனமாக கேட்க அப்போதும் அமைதியாக இருந்தாள்.

அவள் மெளனமாக நின்றிருப்பது மற்றவர்களுக்கு கோபத்தை கொடுக்க, “என்ன எது சொன்னாலும் அழுகாமல் நிற்கிற” என்று ஒருத்தன் அவளிடம் சண்டைக்கு வந்தான். அப்போதும் அவள் மரம்போலவே நின்றாள்.

சிலரது பார்வைகள் அவளின் மேனியில் ஊர்வலம் போவதை உணர்ந்தாலும், ‘இவனுங்க பார்வையால் என் கற்பு ஒண்ணும் பறிபோகாது’ என்ற எண்ணத்துடன் சிலைபோல நின்றாள்.

அவளை கேவலமான பார்வை பார்த்தவன், “உன்னை மாதிரி ஒரு சூப்பர் பிகர் கிடச்சா செமயா இருக்கும்” என்றதும் மற்ற பெண்கள் அழுதபடி அபூர்வாவை பார்த்தனர். அவனின் கீழ்ந்தனமான பேச்சில் மற்ற பெண்களுக்கு காது கூசிட அழுகை தொடந்தது. அபூர்வா மட்டும் அழுகவே இல்லை.

அவளை அழவைக்க நினைத்து என்னென்னவோ செய்து பார்த்தவர்கள் கடைசியில் தோல்வியை தழுவினர். அவளின் கண்ணில் இருந்து துளியும் கண்ணீர் வரவில்லை.

அதில் எரிச்சலடைத்த கும்பலை சேர்ந்த ஒருவன், “ஏய் உனக்கு எல்லாம் அழுகையே வராதா?” என்று கேட்டான்.

“எனக்கு கண்ணீர் வராததை நினைத்து நானே கவலைபடல. நீ எதுக்கு தேவை இல்லாமல் எரிச்சல் படுற” என்று சாதாரணமாக கேட்டவளை மற்றவர்கள் புரியாத பார்வைப் பார்த்தனர்.

“இந்த காலேஜ் விட்டு போவதற்குள் உன்னை அழுக வைக்கிறேன் பாரு” என்று ஒருவன் கர்வத்துடன் சொல்ல இகழ்ச்சியாக சிரித்தவள், “உன்னால முடிஞ்சதை செஞ்சுக்கோ” என்று சர்வ சாதாரணமாக கூறினாள். அந்தநேரம் அடித்த காலேஜ் பெல் சத்தம்கேட்டு மாணவ, மாணவிகள் பட்டாளம் கலந்து அவரவர் வகுப்பறைகளுக்கு சென்றனர்.

அவளின் கலகலப்பான பேச்சிற்கு அன்றே சித்ரா மற்றும் மைதிலி தோழியாக கிடைக்கவே கல்லூரி முதல்நாள் அவளுக்கு நல்ல நாளாகவே அமைந்தது.

அபூர்வா தன் கவனம் முழுவதையும் படிப்பில் திருப்பிவிட்டாள். வீட்டில் சில நேரங்களில் நடக்கும் சண்டைகளுக்கு தீர்வு சொல்ல அபூர்வாவை தேடியது சிறியவர்கள் பட்டாளம்.

கல்லூரி வாழ்க்கை அவளுக்கு அதிகம் கற்றுக்கொடுத்தது. தன்னை சுற்றி இருக்கும் மனிதர்களின் பொய்யான முகமூடியை கண்டு பயந்து பின்வாங்க கூடாது என்ற விதியை முதலில் கற்றுக் கொண்டாள்.

அபூர்வா, மைதிலி, சித்ரா மூவரும் நெருங்கிய தோழியாகவே மாறிவிட்டனர். இடைப்பட்ட நாட்களில் அவர்களுக்குள் ஒரு நல்ல புரிதல் வந்தது.

மாலை கல்லூரி விட்டு கிளம்பும்போது மைதிலி பார்வை பிரணவ் மீது நிலைக்க கண்ட அபூர்வா, “என்னடி பார்வை எல்லாம் எங்கேயோ போகுதே”என்று தோழியை வம்பிற்கு இழுத்தாள்.

அவள் என்ன சொல்கிறாள் என்று புரியாமல் திருதிருவென்று விழித்த மைதிலி, “என்னோட பார்வை இங்கேதான் இருக்கு” என்று ஏதோ வாய்க்கு வந்ததை உளறுவதைக் கண்டு சித்ரா தலையில் கைவைத்து, ‘இவளுக்கு மரம் கழண்டு போச்சு’ என்று குறும்புடன் சிரித்தாள்.

“அதுதான் எனக்கு தெரியுமே” என்று அபூர்வா சத்தமாக சொல்ல, “நான் காதலிக்கும் விஷயம் உனக்கு எப்படி தெரியும்” என்று அவளே வாயைக் கொடுத்து வசமாக மாட்டிகொண்டாள்.

“ஏய் மைதிலி நீ காதலிக்கிறீயா? யாருடி அந்த அடி முட்டாள்” என்று சித்ரா வேண்டுமென்றே அவளை வம்பிற்கு இழுக்க அவளுக்கு சுர்ரென்று கோபம் வந்துவிட்டது.

“யாரைப் பார்த்து என்ன சொல்ற? என் ஆள் காலேஜ் டாப்பர் தெரியும் இல்ல” என்றதும் அபூர்வாவிற்கு விஷயம் புரிந்துவிட்டது. அவள் பிரணவ்வை விரும்புகிறாள் என்ற உண்மை அறிந்தும் நிம்மதியுடன் பெருமூச்சுவிட்டாள்.

அதன்பிறகு மைதிலியும், சித்ராவும் தங்களுக்குள் சண்டையிட்டு கொள்ள அதெல்லாம் கண்டு கொள்ளாமல் அங்கிருந்த செங்கொன்றை மரத்தை வேடிக்கை பார்க்க தொடங்கினாள். அந்த மரத்தில் பூவில்லாமல் இலைகள் மட்டும் இருக்க பச்சை பசையேல் என்று காட்சி தந்தது.

‘எனக்கு இந்த மரத்தின் பூக்கள் ரொம்ப பிடிக்கும்டி. மழை காலத்தில் பார்க்கும் போது பூக்கள் தீ பற்றி எறிவது போலவே தோன்றும். என் மனசுக்கு கஷ்டமாக இருக்கும்போது இந்த மரத்தின் அருகே சிலநொடி அமர்ந்தால் கவலையெல்லாம் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிடும்’ என்றவனின் குரல் அவளின் காதோரம் ஒலித்தது.

இந்த ஒரு வருடத்தில் அவனை நினைக்காத நாட்கள் இல்லை. அவன் ஊரைவிட்டு சென்ற விஷயம் அறிந்தபிறகு அவளின் உணர்வுகள் எல்லாம் மரத்துப்போனது.

இப்போதெல்லாம் அவள் சிரிப்பது மற்றவர்களுக்காக மட்டுமே.
இவளாக மனம் திறந்து சிரித்து வெகுநாளானது. அவன் சென்றபோது அவளின் இதயத்துடன் சேர்த்து அவளின் உணர்வுகளையும் எடுத்து சென்றுவிட்டான்.

இப்போதெல்லாம் அவளுக்கு அழுகை கூட வருவதில்லை. கண்ணில் கண்ணீர் வற்றிவிட்டது போல.

மற்றவர்களின் கண்களுக்கு சிரிக்கும் பொம்மை போல நடமாடிய அபூர்வாவின் உயிர் அவனிடம் இருந்தது. அவனை நேரில் பார்க்கும் வரையில் தான் இப்படித்தான் இருப்போம் என்று அவளுக்கு தெளிவாக புரிந்து போனது.

நாட்கள் மாதங்களாக மாறி வருடங்களாக உருண்டோடியது.

பகலவன் தன் பணியை முடித்துவிட்டு ஓய்வெடுக்க சென்றான். அவனை வழியனுப்ப மனமில்லாத வானமோ கோபத்தில் முகம் சிவக்க, உன்னால் மட்டும் தான் சிவக்க முடியுமோ நான் சிவக்க மாட்டேனா என்று வானத்துடன் போட்டி போட்டுகொண்டு வெண்ணிற மேகங்களும் சிவந்தது.

ரம்மியமான மாலை பொழுதில், பகல் முழுவதும் வேலை செய்த களைப்புடன் வீடு திரும்பிய மகனைக் கண்டு மஞ்சுளாவின் மனம் வருந்தியது. ஆனால் அவர் அதை வெளிகாட்டி கொள்ளாமல் அவனுக்கு சூடாக காபியும், கொஞ்சம் சுண்டலும் சூடாக கொண்டு வந்து கொடுத்தார்.

அவன் சிந்தனையுடன் காபியை குடிக்க திடீரென்று செல்போன் சிணுங்கியது. அவன் எடுத்து பார்த்தும் புதிய எண்ணில் இருந்து கால் வருவதைக் கண்டு, “யாராக இருக்கும்” என்ற கேள்வியுடன் போனை எடுத்தான்.

“ஹலோ ஆதியா?” என்று சந்தேகத்துடன் மறுபக்கம் ஒலித்த குரலைக்கேட்டு, “ம்ம்” என்றான்.

“டேய் நீயெல்லாம் நல்ல இருப்பியா? ஒரு போன் பண்ணின என்னடா பக்கி பரதேசி. குற்றாலத்தில் இருந்து போனதும் ஊரையும் மறந்துட்ட ஊரோடு சேர்த்து எங்களையும் மறந்துட்ட இல்ல” என்று கோபத்துடன் அவனோடு சண்டை போட்டான் அவன்.

தன்னை இவ்வளவு மரியாதையாக திட்டுவது யாரென்று நொடியில் புரிந்துபோக, “பிரவீன் சொல்லுடா” என்றான் நண்பனை கண்டுகொண்ட சந்தோசத்துடன்.

“என்னத்தை சொல்ல ஏன்டா ஊரைவிட்டு போன எங்களை எல்லாம் மறந்துவிடுவாயா?” என்று கடுப்புடன் தன் கோபத்தைக் காட்டினான் பிரவீன்.

அவனின் கோபம் கண்டு ஆதிக்கு சிரிப்பு வந்தாலும் அதை அடக்கிக் கொண்டான். அவன் மட்டும் சிரித்த விஷயம் தெரிந்தால் கோபத்தில் வண்ண வண்ணமாக பேசுவதை யார் காதில் வாங்குவது என்ற பயம்தான்.

“எப்படிடா இருக்கிற” என்று ஆதி அக்கறையுடன் விசாரிக்க, “நான் எல்லாம் நல்லத்தான் இருக்கேன். நீதான் எங்களை மறந்துட்ட” என்று மீண்டும் தொடங்கிய இடத்திற்கு வந்து நின்றான்.

‘ஸ்ஸ்.. இனி இவனை சமாளிக்க முடியாது’ என்று எழுந்து பின் வாசலின் படிக்கட்டில் சென்று அமர்ந்தவன், “என்ன விஷயம் திடீர்னு கால் பண்ணிருக்கிற?” என்றான் குறுஞ்சிரிப்புடன்.

அப்போது தான் தன்னுடைய போன் நம்பர் இவனிடம் எப்படி கிடைத்தது என்ற சந்தேகம் அவனின் மனதில் எழுந்தது.

பிரவீன் ஏதோ சொல்ல வரும் முன்னே, “டேய் என் நம்பர் உனக்கு எப்படி தெரிஞ்சிது” என்றான் குழப்பமாக.

“நீதான் நாங்க எல்லாம் வேண்டாம்னு பழைய நம்பரை தூக்கி வீசிட்ட. ஆன சிவாவோட நம்பர் எங்கிட்ட இருந்துச்சு. அவனிடம் இருந்து நம்பர் வாங்கித்தான் இப்போ உன்னிடம் பேசிட்டு இருக்கேன்” மீண்டும் குற்றம் சாட்டிவிட்டு நம்பர் கிடைத்த விசயத்தையும் கூறினான் பிரவீன்.

“ஆதி எனக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணிருக்காங்க” என்று உற்சாகத்துடன் ஒலித்தது அவனின் குரல்.

தன் நண்பனுக்கு திருமணம் என்றதும் அந்த சந்தோஷம் இவனையும் தொற்றிக்கொண்டது.

“சிஸ்டர் எந்த ஊரு” என்று விசாரிக்க, “எல்லாம் நம்ம ஊருதான்” என்றவன் சிறிதுநேரம் தன்னுடைய காதல் காவியத்தை கூறுகிறேன் என்று ஆதியை தொல்லை செய்தான்.

“நீ என் கல்யாணத்திற்கு வரணும்” என்றதும் சட்டென்று அமைதியானான் ஆதி.

அவனின் மௌனம் எதனால் என்று காரணம் தெரிந்தும், “உன்னோட நிலை எனக்கு புரியுது ஆதி. ஆனால் அதுக்காக பழகிய நட்பு வட்டாரத்தை எல்லாம் மறந்துட்டு வாழாதே. நீ திருமணத்திற்கு வந்தால் ரொம்ப சந்தோசப்படுவேன்.” என்றான்.

ஆதிக்கும் மீண்டும் குற்றாலம் செல் ஆசை இருந்தபோதும், “பிரவீன் என்னால வர முடியாதுடா. நான் வேலை செய்யும் ஆபீஸில் லீவ் கிடைக்காது” என்றவன் மறுக்கவே, “அதெல்லாம் எனக்கு தெரியாது. நீ ஒழுங்கா ஊருக்கு வா. நான் சென்னை வந்தா நீ தாங்க மாட்ட” என்று கோபத்துடன் பேசியவனை அப்படி இப்படியென்று பேசி சரிகட்டினான்.

இறுதியாக ஆதி குற்றாலம் செல்வது உறுதியாகிவிட, “ஆதி” என்று பிரவீன் எதையோ சொல்ல தயங்கினான்.
“என்னடா” என்றதும், “அபூர்வாவிடம் நீ கொடுத்த கடிதத்தை கொடுத்தேன். அவ வாங்கி படிச்சிட்டு எந்த ரியாக்ஷனும் இல்லாமல் போனாடா” என்றான்.

அபூர்வா என்ற பெயரைக் கேட்டதும் ஆதி அமைதியாகிவிட, “சரியான நெஞ்சழுத்தம் பிடிச்சவ போல. இன்னைக்கு வரைக்கும் அவள் குற்றாலம் வரவே இல்ல தெரியுமா? ஒரு ரோபோ மாதிரி கடிதத்தை படிச்சவளை பார்த்து எனக்கு எவ்வளவு கோபம் வந்துச்சு தெரியுமா?” என்று பிரவீன் அந்த நாளின் தாக்கத்தில் பேசிக் கொண்டிருந்தான்.

ஆதிக்கு அவன் சொன்ன விஷயம் புரியாத புதிராகவே அமைந்தது. எப்போதும் காலில் சலங்கை கட்டிக்கொண்டு அன்று பூத்த புதுமலர் போல வலம்வரும் பெண் ஏன் இப்படி மாறிப்போனாள் என்ற கேள்வி அவனின் மனதில் மின்னி மறைந்தது.

“விடு பிரவீன். இனிமேல் பேச எதுவும் இல்ல. நான் குற்றாலம் வரேன்” என்று சொல்லிவிட்டு ஆதி போனை வைத்துவிட்டான். அவனின் மனம் அவளை சுற்றி வர சிந்தனையுடன் அமர்ந்திருந்தவன், ‘அவ மதுரையில் தானே இருக்கிறா.. அப்போ நான் குற்றாலம் போனால் என்ன தப்பு?’ என்ற எண்ணத்துடன் ஊருக்கு செல்வது என்ற முடிவிற்கு வந்தான்.

அந்த வாரத்தின் இறுதியில் ஆபிஸிற்கு லீவ் சொல்லிவிட்டு குற்றாலம் கிளம்பினான். மஞ்சுளா அவனை தடுக்கவில்லை. சென்னை வந்த நாளில் இருந்து வேலை வேலை என்று ஓடும் மகனுக்கு இந்த பயணம் புத்துயிர் தரட்டும் என்ற முடிவுடன் அவனை அனுப்பி வைத்தார்.

அதே நேரத்தில் பள்ளி கல்லூரி விடுமுறை விடவே பிள்ளைகளுடன் நேரம் கழிக்க நினைத்து பெரியவர்கள் இரண்டு நாள் லீவ் எடுத்துகொண்டு வீட்டில் இருக்க, “அப்பா நம்ம எல்லோரும் டூர் போலாமா” என்ற கேள்வியுடன் ரஞ்சித் அருகே வந்து நின்றாள் சஞ்சனா.

தன் மகளை அருகே அழைத்து, “என்ன திடீர்னு டூர் போகணும்னு சொல்ற” என்று கேட்டார்.

“எப்போ பாரு படிப்பு படிப்பு படிப்பு. சுத்த ஃபோர் அப்பா. பிளீஸ் நம்ம எல்லோரும் எங்காவது டூர் போயிட்டு வரலாமே” என்று தந்தையின் தாடையை பிடித்து செல்லம் கொஞ்சினாள் மகள்.

“சரி போலாம் சஞ்சனா..” என்ற ரோஹித், “இந்த வருடம் தாத்தா பாட்டிக்கு சாமி கும்பிடனும் ரஞ்சித். சோ நம்ம எல்லோரும் குற்றாலம் போலாம். பிள்ளைகளுக்கு டூர் மாதிரியும் இருக்கும்..” என்று சொல்ல அவருக்கும் அதுவே சரியென்று தோன்றிவிட்டது.

அந்த வார இறுதியில் அனைவரும் குற்றாலம் கிளம்ப தயாராகி கொண்டிருக்க அதில் எதிலும் ஈடுபாடு இல்லாமல் ஏதேதோ நினைத்தபடி மெளனமாக இருந்தாள் அபூர்வா. ஆனால் சிறியவர்கள் அவளை தனித்துவிடவில்லை.
அந்த விடுமுறையில் சிவரத்தினம் – காமாட்சி இறந்து ஒரு வருடம் சென்றதால் அவர்களுக்கு சாமி கும்பிட குற்றாலம் கிளம்பினார்கள்.

கோடைகாலத்தில் அதன் வெப்பத்தின் சூடு தெரியாத அளவிற்கு மிகவும் குளுமையுடன் காணப்பட்டது. அந்த ஊரில் திரும்பிய இடமெங்கும் மரங்கள் அணிவகுத்து நின்றிருந்தது.

வயல்வெளிகள் பச்சை பசையேல் என்று காட்சிதர தூரத்தில் மலையருவிகள் கொட்டுவதை வியப்புடன் சிறியவர்கள் பார்த்தனர்.
அவர்கள் குற்றாலம் வந்து சேர்ந்தும் ஆண்கள் மூவரும் வெளி வேலைகளை கவனிக்க சென்றுவிட, பெண்கள் மூவரும் வீட்டை சுத்தம் செய்யும் வேலையை கவனிக்க தொடங்கிவிட்டனர்.

சின்னவர்களுக்கு பொழுது போகாமல், “அங்கிருந்து கூட்டிட்டு வந்து இங்கே அடச்சு வெச்சிட்டாங்க. இதுக்கு அங்கேயே இருந்திருக்கலாம்” என்று புலம்பினான் ராகவ்.

“எல்லாம் இந்த பிசாசு பண்ணிய வேலைதான்” என்று சஞ்சனாவை அடித்தபடி கூறினாள் ரக்சிதா. சக்தி இயற்கையை ரசித்தபடி பின் வாசலின் நின்றிருந்தான்.

அந்த நேரத்தில் அபூர்வா வேறு யாரும் அறியாதபடி வேகமாக பின் வாசலைவிட்டு வெளியேறுவதைக் கண்டு, ‘அக்கா எங்கே போறா’ என்ற கேள்வியுடன் அவளை பின்தொடர்ந்தான் சக்தி.

error: Content is protected !!