KarisalKaatuPenne21

கரிசல் காட்டுப் பெண்ணே 21

 

விடியற்காலை பிரம்ம முகூர்த்த வேளையில் பந்தகால் நடுதல் சடங்கு மணமக்கள் இருவீடுகளிலிலும் சுபமாக நடந்து முடிந்தது. முகூர்த்தகால் நடுதல் திருமண வீட்டின் முதல் துவக்கமாக அமைகிறது.

அன்றைய காலை பொழுதில் மாப்பிள்ளை, பெண்ணுக்கு அவரவர்கள் வீட்டில் நலங்கு வைக்கும் சடங்கும் ஏற்பாடாகி இருந்தது.

எளிமையான சேலையில் எவ்வித அலங்காரமும் இன்றி சீதாவை மணையில் அமர்த்தி, மங்கல வாசனை திரவிய பொடிகளான சந்தனம், குங்குமம், கதம்பம், நலங்குமாவு போன்றவற்றை அவளின் நெற்றி முதல் கால் வரை பூசி, நலங்கு வைத்து, உச்சந்தலையில் நல்லெண்ணெய் வைத்து, பெண்கள் அனைவரும் முறைப்படி சடங்கு செய்து, மஞ்சள் நீரில் மணப்பெண்ணை நீராட்டினர். திருமண வைபவத்தின் முதல் நலங்கு இது.

பெரிய வீட்டில் வெள்ளை வேட்டி, கையற்ற பனியனில் ஸ்ரீராமையும் மணையில் அமர்த்தி இவ்விதமே நலங்கு வைத்து, மஞ்சள் நீராட்ட, சடங்கு இனிதாகவே முடிந்ததிருக்க, இதழில் விரிந்த மென்னகை மறையவே இல்லை ஸ்ரீராமிற்கு.

இரவு இவன் மீது சாய்ந்தபடி உறக்கத்தை தழுவி இருந்த சீதா, சேவலின் கொக்கர கொக்கர கோ கூவலிலும் பறவைகளின் கீச்சு கீச்சு இசையிலும் தான் கண்விழித்தாள். அவள் பதறி விலகிட, “ஹே ரிலாக்ஸ் பாப்பு” என்று அவளை நிதானப்படுத்த முயன்றான்.

“அச்சோ சாரி சின்னா, நான் தெரியாம… தூங்கிட்டேன்” சங்கடமாக சொல்ல,‌ “இதுக்கு போய் சாரி கேப்பியா” என்று அவளின் தலையில் தட்டியவன், “எந்த சஞ்சலமும் இல்லாம ராத்திரி முழுக்க நிம்மதியா என் தோள்ல நீ தூக்கினதில இருந்து உனக்கு என்மேல இருக்க நம்பிக்கை தான் தெரிஞ்சது… உன்னோட அந்த நம்பிக்கையை நான் கடைசிவரைக்கும் காப்பாத்துவேன் சீதா” அவள் கையை அழுத்தி பிடித்தான் வாக்களிப்பவனாய்.

இருள் சுண்ணம் பூசிய ஒளியில் அவன் முகத்தை இமையசையாது பார்த்தவள், “நேரமாச்சு… நான் போகட்டுமா சின்னா” என்று கேட்க, அவன் ஆமோதித்து தலையசைக்க, மேல் கிளையில் இருந்து குதித்து ஓடி வீட்டுக்குள் மறைந்து விட்டாள்.

அதை நினைத்து சிரித்தபடி உடைமாற்றிக் கொண்டு ஸ்ரீராம் வெளிவர, அங்கே சக்திவேல் நின்றிருந்தான்.

“வா சக்தி, என்னாடா சொல்லு” அவன் முகம் வீழ்ந்து இருப்பதை கவனித்து கேட்டான்.

“நீ எப்படி அக்காவ கல்யாணம் செஞ்சுக்க சட்டுனு சம்மதம் சொன்ன? முன்ன கேட்டதுக்கு கீர்த்தி அக்காவ தான கல்யாணம் கட்டிக்க போறதா சொல்லி இருந்த அப்ப‌ அது பொய்யா?”

சிறியவன் கேள்வியில் பெரியவன் துணுக்குற்று, “அது… கீர்த்தியும் நானும் நல்ல ஃப்ரண்ஸ் டா, வேற… எதுவும் இல்ல” சிறுவனிடம் தெளிவாய் விளங்க வைக்க முடியாத நிலை அவனுக்கு.

“அக்காவும் நீயும் கூட சின்ன வயசு ஃப்ரண்ஸ்னு தான சொன்ன, இப்ப மட்டும் எப்படி கல்யாணம் செஞ்சுக்க சம்மதிச்ச?” சக்திவேல் சுற்றி அதே கேள்வியில் வந்து நிற்க,

“ஏன் சக்தி, நான் சீதாவ கல்யாணம் செஞ்சுக்க கூடாதா?” ஸ்ரீராம் கேள்வியை அவனிடம் திருப்பி விட்டான்.

“எனக்கு புடிக்கல… அக்காவ கிருஷ்ணா மாமா தான கல்யாணம் செஞ்சுக்க இருந்தாரு, நீதான்… உன்னால தான் மாமா கோச்சிட்டு போயிட்டாரு” அவன் இவனை குற்றம் சாட்ட,

“இல்ல சக்தி, நீ தப்பா புரிஞ்சிருக்க…”

“நான் சரியாதான் புரிஞ்சு இருக்கேன். பிரண்ட்ஸ் கூட இதையே தான் பேசிக்கிறாங்க, நீ இந்த ஊருக்கு வந்ததால தான் அக்காவ கூட… எல்லாரும் தப்பா பேசுறாங்க தெரியுமா?” என்று ஆதங்கமாக சொல்லி பெரியவன் வயிற்றில் குத்த, ஸ்ரீராம் சங்கடமாக நின்றிருந்தான்.

“முதல்லயே நான் சொன்னே இல்ல, என் அக்காவ தப்பா பாக்காதன்னு” என்று சக்தி மேலும் குத்தியபடி இருக்க, அவன் கையை தடுத்து பிடித்து, “உனக்கு எப்படி டா சொல்லி புரிய வைக்கிறது? சீதாவ நான் தப்பா பாக்கலடா… உன் மாமா தான் சீதாவையும் என்னையும் தப்பா நினைச்சது… கிருஷ்ணாவோட முன் கோபமும் ஆத்திரமும்‌ அவன் கண்ணை மறச்சிடுச்சு, என்ன செய்யறோம், என்ன பேசுறோம்னு தெரியாம புத்தி கெட்டு நடந்துக்கிட்டான்” ஸ்ரீராம் நொந்தபடி சொன்னான்.

“நீ பொய் சொல்ற, உன்னால தான் இங்க பிரச்சனை, இப்ப கிருஷ்ணா மாமா வந்துட்டாரு, எல்லாம் சரியாயிடும் பாரு” என்க.

“வாட்? கிருஷ்ணா வந்திருக்கானா?” என்று நொந்தபடி விரைந்தான் சீதா வீட்டை நோக்கி.

இங்கே ராமகிருஷ்ணா, புகையும் எரிமலையாய் நேராக வீட்டுக்குள் புகுந்தான். இந்நேரம் பார்த்து சங்கரன் வெளியே சென்றிருக்க, வீட்டு பெண்கள் மட்டுமே அங்கிருந்தனர்.

“உங்களுக்கு எல்லாம் என்னை பார்த்தா எப்படி தெரியுது? இளிச்சவாயன் மாதிரியா?”

“அன்னிக்கு ஏதோ ஆத்திரத்தில வாய் விட்டேன் தான் இல்லன்னு சொல்லலையே, அதுதான் சாக்குன்னு மாப்பிள்ளைய மாத்திடுவீங்களா?” கொதித்தவனாக கத்தினான்.

“சீதாவ கட்டிக்க முடியாதுன்னு தான போனீரு? இப்ப என்ன மாத்தி பேசறீக?” பவுனு பாட்டி முன்வந்து கேட்க,

“ஆமா, வேணான்னு சொன்னா அப்படியே விட்டுடுவீங்களா? வந்து சமாதானம் பேச மாட்டீங்களா?” என்று கேட்டவன், “என்ன அத்த, மாப்பிள மாப்பிளனு கூப்பிட்டு இப்ப சட்டுனு மாப்பிள்ளய மாத்திட்டிங்களோ?” அவன் கேட்டதில் மரகதம் நெருடலாக தலை கவிழ்ந்தார்.

“உங்கள குறை சொல்லி என்ன? உங்களுக்கு என்னாச்சும்மா? பேய் பிசாசு ஏதாவது பிடிச்சு போச்சா? உங்க ஆச மருமகள வேற வீட்டுக்கு மருமகளாக்க மனசு எப்படி வந்துச்சு? நீங்க பெத்த மகன் தான நானும் என்னபத்தி அக்கறை இல்லாம போச்சா?” என்று குரல் உயர்த்த,

“பெத்த புள்ளயா இருந்தாலும் நீ ஆம்பளடா, அடிச்சு புடிச்சு உன் வாழ்க்கைய அமைச்சுக்குவ, ஆனா பொட்ட புள்ள மேல ஒத்த சொல்லு ஒருமுறை விழுந்துட்டா அப்புறம் அதை அழிக்க முடியாது. இப்ப சீதா வாழ்க்கைய காப்பாத்தறது தான் எனக்கு முக்கியமா பட்டுச்சு” கோதாவரி அசராமல் பதில் பேசினார்.

“ஓஹோ என்னை துறத்திட்டு உங்க அருமை மருமகளுக்கு வேற வாழ்க்கைய அமைச்சு வைக்கிற அளவுக்கு வந்துட்டீங்க, அதானே?” அங்கே யாரும் எதிர் பதில் தரவில்லை அமைதியாக நின்றிருக்க,

“எங்க? என் ஆச மாமன் மக? சீதா… ஏய் சீதா வெளியே வா” அவனிட்ட கத்தலில் சீதா வெளியே வந்து அவனெதிரில் நின்றாள் சங்கடமாக.

புது பெண்ணுக்கு உண்டான களையும் சற்று முன் வைத்த நலங்கின் பொலிவும் அவளின் மௌனித்த அழகை கூட்டி காட்டிட, பாந்தமாய் புதுச்சேலை உடுத்தி கலக்கமாய் எதிர் நின்ற பதுமையைக் கண்டு இவன் மனமும் இறங்கத்தான் செய்தது. நிதானமாகவே அவளிடம் பேசினான்.

“அன்னிக்கு நான் உன்மேல கோபபட்டது மட்டும் தான உனக்கு தெரியும், அவனுங்க என்ன பேசினாங்கன்னு உனக்கு தெரியாதில்ல, தெரிஞ்சிருந்தா நீ என்முன்ன இப்படி வந்து நின்னிருக்க மாட்டல்ல?”

“சரி அதை விடு, உன்மேல‌ கோபப்படவோ அடிக்கவோ எனக்கு உரிமையில்லையா சீதா? ஆமா ஆத்திரத்தில‌ உன்ன அதிகமாகவே பேசிட்டேன் தான் மன்னிச்சுக்க, அதுக்காக வேற ஒருத்தனை‌ கட்டிக்க ஈஸியா சம்மதிச்சிடுவியா? ஒருவேளை நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் நமக்குள்ள பிரச்சனை வந்திருந்தா அப்பவும் இப்படி தான் முடிவு எடுத்திருப்பியா?” அவன் கேள்வியில் சீதா‌ திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.

“நம்ம நிச்சயத்தில ‘உங்கள நினச்சு தான் அந்த பாட்டு பாடினேன்னு’ நீ சொல்லி இருந்தா நான் அப்பவே அமைதியாகி இருப்பேன். நீ சாமியை நினச்சு பாடினேன்னு சொல்ல எனக்கு கோபம் வந்திடுச்சு…” ராமகிருஷ்ணன் பேசிக்கொண்டு போக, முள்மேல் நிற்பது போல அவள் நின்றிருந்தாள். இப்போது தான் தன் அப்பா, மாமாவிற்கு தகவல் தந்து விட்டு ஸ்ரீராம் அங்கே வந்து நின்றான்.

“அட வாடா புது மாப்பிள, காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் தள்ளிட்டு போன கதையா, சைக்கிள் கேப்ல‌ கடா வெட்ட பாக்கிற இல்லடா” என்று எரிச்சலும் ஏளனமுமாக பேச,

“கிருஷ்ணா, பிரச்சனை வேணாம், எதுவா இருந்தாலும் பொறுமையா பேசிக்கலாம் வா” என்றழைக்க,

“டேய் என்னை பார்த்தா பிரச்சனை செய்யறவன்‌ மாதிரி தெரியுதா?‌ இதுவரைக்கும் பொறுமையா தான்டா பேசிட்டு இருக்கேன். நீதான் என்னை வெறுப்பேத்திவிட்டு நல்லவன்னு பட்டத்தை தட்டிட்டு போலாம்னு பிளான் பண்ணற… என் தாய்மாமன் பொண்ணு கிட்ட நான் பேசிக்கிறேன், நீ குறுக்க மூக்க நுழைக்காம இருந்தாலே போதும்” என்று அவனை அடங்கும் படி கைகாட்டி விட்டு திரும்பினான்.

“எப்படி சீதா உன்னால முடிஞ்சது? ஆறு வருசம்… நமக்கு தான் கல்யாணம்னு ஆசைகாட்டி இப்ப ஒரே வாரத்தில இவனை கட்டிக்க தயாராகி நிக்கிற? அப்ப‌ இவனைவிட பெட்டரா வேற ஒருத்தன் கிடைச்சா அவன்கூட போக தயாராகிடுவியா?” ராமகிருஷ்ணன் கொடுக்கு பேச்சில், “மாமா…”, “கிருஷ்ணா…” சீதா, ஸ்ரீராம் உட்பட அங்கு பல குரல்கள் அலறின.

“சீதாவ பத்தி இன்னொரு முறை கண்டபடி பேசுனா நல்லா இருக்காது கிருஷ்ணா” ஸ்ரீராம் அவனை கைநீட்டி எச்சரிக்க, “என்னடா பண்ண முடியும் உன்னால? உள்ளதை சொன்னா பத்திகிட்டு வருதா உனக்கு? என் சீதாவ குறுக்கு வழியில தட்டி பரிச்சவன் தான நீ” ராமகிருஷ்ணனும் சண்டைக்கு நின்றான்.

அவர்கள் குறுக்கே வந்த கோதாவரி, “நல்ல நாள் அதுவுமா ரெண்டு பேரும் இப்படி சண்டைக்கு நிக்காதீங்க, கிருஷ்ணா, இந்த கல்யாணத்தை முடிவு பண்ணது நடத்தி வைக்கிறது எல்லாம் நான் தான்… அன்னிக்கு நீ கோவபட்டது, கத்தி பேசினது ஏன் சீதாவ அடிச்சது கூட எனக்கு பெருசா படல… ஆனா, சுத்தி நிக்கற இத்தனை பேருக்கு முன்ன, அவளை சந்தேகப்பட்டு கேள்வி கேட்டு குறுக வச்சியே… நானும் ஒரு பொண்ணா என்னால அதை தாங்க முடியல டா, ஒருத்தி மேல உண்மையா நேசம் இருக்க எவனும் அவளை மத்தவங்க முன்ன ஈவு, இரக்கம் இல்லாம அவமானபடுத்தி பாக்க மாட்டான்”

“அதான் தப்புனு நான் மன்னிப்பு கேக்குறேனேம்மா‌, நான் வேணும்னு பேசல, ஏதோ கோவத்துல தான்” ராமகிருஷ்ணன் ஆதங்கமாக தன்னிலை விளக்கம் தர,

“எப்படி டா, கழுத்த அறுத்துட்டு வந்து மன்னிப்பு கேட்டா எல்லாம் சரியா போயிடுமா? பேசி துடைச்சிட்டு போறது ஆம்பள உனக்கு வேணா சுலபமா இருக்கலாம், பொம்பள உள்ளுக்குள்ள நொறுங்கி சிதைஞ்சு போயிடுவா, அந்த வேதனைய எப்படி சொன்னாலும் உங்களுக்கு புரிய போறது‌ இல்ல”

“எங்களை பெத்தெடுத்த ஆத்தாவோட மறுவுருவமா சீதாவ நாங்க தாங்கறோம், அதால தான் அவக பேரு மஹாலட்சுமியையும் சேர்த்து சீதாமஹாலட்சுமின்னு பேர வச்சோம், எங்க குலசாமிடா இவ, சீதாம்மாவ நாங்க யாராவது அதட்டி பேசி நீ பாத்திருக்கியா? இல்ல நாங்க குத்தங்குறை சொல்ற மாதிரி அவ ஒருமுறையாவது நடந்து இருக்காளா? நீ‌ அரட்டி உருட்டும் போது பொறுத்து போனோம்பாரு எங்களை சொல்லணும்” நீளமாக உணர்ச்சிவசப்பட்டு பேச அவருக்கு மூச்சிரைத்தது.

“இதோ உன்னவிட வயசுல சின்னவன் தான, ஊருக்குள்ள சீதா மேல தன்னால ஒத்த பழிச்சொல்லு விழுக கூடாதுன்னு, தன் சோட்டு புள்ளைய கட்டிக்க போறவனு பொய் சொல்லி அழைச்சு வந்து ஊர் வாயை மூடி இருக்கான். நீதான் அன்னிக்கு வீணா ஏதோ குலங்கெடுக்கற பயலுவகிட்ட அசப்பியம் பேசி, அணைஞ்சு போனதை ஊதி எரிய வச்சிருக்க”

“இப்ப என்ன தான் ம்மா சொல்ல வரீங்க? தப்பெல்லாம் என்னோடதுன்னா?” ஆத்திரமாக கேட்டான்.

“ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு பா, சீதா நம்ம வூட்டு மருமகவளா வரணும்னு நான் ஆசபட்டு கேட்டதால தான நீ வேண்டா வெறுப்பா இவளை கட்டிக்க சம்மதிச்ச… பொருந்தாத உங்களை பொருத்தி பாக்க ஆசபட்டது என் தப்புதான் ப்பா”

“அவ அவமானபட கூடாதுன்னு என்னை அவமானப்படுத்தி பார்க்கறீங்களாம்மா! எனக்குன்னு ஆனவள இவனுக்கு தூக்கி கொடுக்க நான் ஒண்ணும் சோட போனவன் கிடையாது, இவ அவனோட ஊர்சுத்த போயி தான பேச்சு வந்துச்சு, தப்பெல்லாம் இவங்கமேல வச்சிகிட்டு தண்டனை மட்டும் எனக்கா?” ராமகிருஷ்ணன் எதற்கும் அடங்காமல் குரலுயர்த்தி பேசினான்.

“ஏன் நரம்பில்லாத நாக்க சுழட்டி சாட்டையா பேசுறீக, இப்ப தான் சிரிப்பும் பூரிப்புமா நிறைஞ்சிருந்த பொண்ண அழ வச்சு பாக்கவே வண்டி கட்டி வந்தீகளா?” மரகதம் கலங்கி கதற,

“எனக்கு நிச்சயம் பண்ண பொண்ண இவனுக்கு கட்டி வைப்பீங்க, நான் வேடிக்கை பார்த்துட்டு நிப்பேன்னு நினச்சீங்களா? என்னை மீறி இந்த கல்யாணம் நடக்கும்?” ராமகிருஷ்ணன் எச்சரித்து பேச, “நடக்கும் கிருஷ்ணா, வீணா பிரச்சனை செஞ்சு உன் தகுதியை நீயே குறைச்சுக்காத” ஸ்ரீராம் உறுதியாக பேசினான்.

“தகுதிய பத்தி நீ பேசுறீயா? துரோகி, என் கல்யாணத்தை கெடுத்துட்டு, என் வீட்டு ஆளுங்கள எனக்கெதிரா திருப்பி விட்டு ச்சே, எனக்குன்னு நிச்சயம் ஆனவள கட்டிக்க வெக்கமா இல்லடா உனக்கு”

“மறுபடியும் சொல்றேன் வார்த்தைய விடாத கிருஷ்ணா அள்ள முடியாது. இப்ப கூட நீ வீண் பிடிவாதத்துக்கு தான் சீதாவ அடைய நினைக்கிறியே ஒழிய, அவமேல இருக்க விருப்பத்தால இல்ல. வீம்புக்கு நம்ப வாழ்க்கைய வினையாக்க வேண்டாம் கொஞ்சம் பொறுமையா யோசிச்சு பாரு கிருஷ்ணா” ஸ்ரீராம் நிதானம் தவறாமல் சொல்ல,

“அவளை நான் விரும்பறேனோ இல்லையோ அவ எனக்கானவ, இதுவரைக்கும் வேற பொண்ணுமேல என் பார்வை போனதில்ல டா, காரணம் நான் கட்டிக்க போறவ இருக்கும் போது வேற பார்க்க தோணல, என் ஆசைபடி அவ மாறணும்னு நினச்சேன், இப்ப நிதானமாவே சொல்றேன் ஸ்ரீ, நீ மரியாதையா ஒதுங்கி போயிடு” ராமகிருஷ்ணா சொல்ல,‌ ஸ்ரீராம் பார்வை சீதாவிடம் சென்றது. அவளும் அவனை தான் பார்த்து இருந்தாள் கலங்கிய கண்களுடன்.

“நான் சீதாவ விட்டு ஒதுங்கி போகும் போதெல்லாம் வீணுக்கு என்னை இழுத்து வச்சு பேசிட்டு, இப்ப விலகி போக சொன்னா என்னால முடியாது டா, நான் சீதாவ விரும்புறேன்…” ஸ்ரீராம் சொல்லியது தான் தாமதம் அவன் சட்டையை இழுத்து பிடித்து, “எவ்வளவு தைரியம் இருந்தா இதை என்கிட்டயே சொல்லுவ…” ராமகிருஷ்ணன் அவனை அடிக்க தொடங்க, ஸ்ரீராம் லாவகமாக தப்பிக்க, பெண்கள் இருவரையும் விலக்கி கூச்சலிட, சங்கரனும் பரமேஸ்வரனும் வந்து இருவரையும் பிரித்து விட்டனர். அவர்கள் வீட்டின் முன் வேடிக்கை பார்க்க கூட்டமும் கூட தொடங்கியது.

“நீங்கெல்லாம் இவனுக்கு சப்போட் பண்ணிட்டு என்னை விரட்டுறீங்க இல்ல… உங்களை எல்லாம் கவனிக்க வேண்டிய விதத்துல கவனிச்சுக்கிறேன்” என்று சூளுரைத்து விட்டு அவர்கள் சமாதானம் எதையும் காதில் வாங்காமல் அங்கிருந்து கோபமாக சென்று விட்டான் ராமகிருஷ்ணன்.

மறுபடி அனைவரின் முகத்திலும் சோகம் அப்பிக் கொண்டது. ராமகிருஷ்ணனால் இன்னும் என்ன பிரச்சனை வருமோ என்ற பதட்டம் ஒருபுறமும், நம் வீட்டு பிள்ளையே நமக்கு எதிராக நிற்கிறதே என்ற கழிவிரக்கமும் அவர்கள் ஒவ்வொருவரின் மனதை கனக்க செய்திருந்தது.

ஆற்றுதல் தேற்றுதலின்றி சீதா ஒருபுறம் ஓயாமல் அழுது கரைந்து கொண்டிருந்தாள். இங்கு நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தான் மட்டுமே காரணம் என்ற குற்றவுணர்வு அவளை அனலிலிட்ட புழுவாய் துடிக்க செய்தது.

வரமாட்டேன் என்று முரண்டு பிடித்த சக்திவேலை வம்படியாக இழுத்து கொண்டு நடந்தான் ஸ்ரீராம்.

“என்னை விடுன்னு சொல்றேன் இல்ல ஸ்ரீ” என்று கையை உதறியவன், “அக்கா சாப்பிடாம கொள்ளாம அழுதுட்டே இருக்கு எல்லாத்துக்கும் நீதான் காரணம்” என்று அவனை தூர தள்ளி விட்டான்.

“ஏன் டா எல்லாத்தையும் உல்டாவா புரிஞ்சுக்கிற! சீதா அழறத்துக்கு உன் மாமா தான் காரணம், என்னால சீதாவோட அழுகைய ரெண்டு நிமிசத்தில நிறுத்த முடியும்” ஸ்ரீராம் சவாலாக பேச,

“அப்ப வந்து அக்காவோட அழுகைய நிறுத்து முதல்ல வா” என்று சக்திவேல் இழுக்க, “ப்ச் நலங்கு முடிஞ்சு கல்யாணம் வரைக்கும் நானும் அவளும் சந்திக்க, பேசிக்க கூடாதுன்னு சொல்லி தான என்னை விரட்டி விட்டாங்க” ஸ்ரீராமிற்கு சீதாவின் கண்ணீர் சுமந்த முகம் மிகவும் ஆற்றாமையை தந்தது.
அவளை அணைத்து ஆறுதல் படுத்த உள்ளம் பரபரத்தவனை சம்பிரதாயம் என்று சொல்லி அவளிடம் பேசவும் விடாமல் இவனை வெளியேற்றி இருந்தனர்.

“அப்போ அக்கா அழுதுட்டே தான் இருக்குமா?” சக்திவேலின் மற்றய கவலைகள் தூரம் போயின.

“கவலைபடாத சக்தி, அவ சமாதானம் ஆகிடுவா”

“ஆகலன்னா?”

“நான் வந்து பேசுறேன் போதுமா”

“அதான் உன்ன பாக்க, பேச கூடாதுன்னு சொல்லிட்டாங்களே!”

“ம்ம் அவங்க சொன்னது சரிதான் அதுக்காக பேசாம இருக்க முடியுமா என்ன? இந்த மொபைல நீ சீதாகிட்ட கொடு, நான் பேசுக்கிறேன் சரியா?” என சட்டேன வந்த யோசனையில் அவன் சொல்ல, சின்னவன் அரைமனதாக வாங்கி கொண்டு, “சரி” என்றான்.

“நான் கேட்டதுக்கு நீ பதில் சொல்லவே இல்ல, சட்டுனு எப்படி அக்காவ கட்டிக்க நீ சம்மதம் சொன்ன?” சக்தி மறுபடி அதையே கேட்க, ஒரு பெருமூச்செறிந்து சிறுவனின் முன் மண்டியிட்டு அமர்ந்த ஸ்ரீராம், “முன்ன என்னையும் சீதாவையும் சிலபேர் சேர்த்துவச்சு பேசும்போது, அந்த வதந்தி பேச்சை ஒண்ணுமில்லாம பண்ணிட்டா பிரச்சனை தீர்ந்திடும்னு நினைச்சேன். அதான் டெடிய இங்க வர வச்சேன். நான் எதிர்பார்த்த மாதிரி பேச்சு அடங்கி போச்சுனு நிம்மதியா இருந்தது, கிருஷ்ணா எங்களை சந்தேகப்பட்டு பேசுற வரைக்கும்…”

“நீ சின்ன பையன் சக்தி, உனக்கு நான் சொன்னா புரியுமானு தெரியல, அன்னிக்கு கிருஷ்ணா நடந்துகிட்ட முறை, பேச்சு நிச்சயமா அவனால சீதாவ சந்தோசமா வச்சுக்க முடியாதுன்னு தோணுச்சு. அவன் பிடியிலிருந்து சீதாவ மீட்டாலே போதும்னு தோணுச்சு… அதான் பெரிம்மா கேட்ட உடன வேற எதையும் யோசிக்காம கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்… என்னை நம்புடா நான் சீதாவ உன்னவிட சந்தோசமா பார்த்துப்பேன்” என்று சின்னவன் தலையைக் கலைத்து விட்டான்.

சக்திவேல் ஏதும் பதில் பேசாமல் யோசனையோடு அங்கிருந்து நகர்ந்து சென்றான்.

“ஸ்ரீ உன்கூட பேச மொபைல் குடுத்து விட்டுச்சுக்கா” என்று துவண்டு அமர்ந்து இருந்தவள் அருகில் கைப்பேசியை வைத்துவிட்டு சக்திவேல் நகர்ந்து விட்டான்.

அவள் அசையவில்லை. சுவரில் பின்னந்தலை சாய்த்து, கால்களை மடக்கி கைகளால் ஒடுக்கி அமர்ந்தபடி, எண்ண அலைகளில் சிக்குண்டு சிதறிக் கொண்டிருந்தாள்.

சில நிமிட இடைவெளியில் கைப்பேசி ரீங்காரமிட்டது. வெறுமையாக அதனை பார்த்தவளின் கனத்த மனதின் பலுகூட கண்களை மூடி கொண்டாள். ஓயாமல் இரண்டு மூன்று முறை அடித்து ஓய்ந்தது அது.

ஸ்ரீராம் பொறுமை கடக்க, அழைப்பு ஏற்கப்பட்டது.

“பாப்பு…” அவன் அழைக்க,

“யாருங்க பேசறது?” மறுமுனையில் வேறு பெண் குரல் கேட்டு குழம்பினான்.

“நான் ஸ்ரீராம் பேசுறேன், சீதா இல்லையா?”

“அண்ணா நீங்களா? சீதா இங்கிட்டு தான் அழுதுவடிஞ்சு உக்காந்து கிடக்கு. அது தொணைக்கு இப்ப தான் நான் வந்தேன். இந்த போனு கத்துச்சுன்னு எடுத்து பேசிபுட்டேன்”

“பரவால்ல மா, சீதா கிட்ட ஃபோனை கொடுத்து பேச சொல்லு”

“சரிங்க ண்ணா” என்று அந்த தோழிப்பெண் சீதாவிடம் போனை நீட்ட, அவள் சோர்வாக இடவலமாய் தலையசைத்தாள்.

“அவ பேச மாட்டேன் சொல்றா ண்ணா”

“சரி, நான் சொல்றதை அவகிட்ட சொல்லு பேசுவா” என்று சொல்ல தலையாட்டிவள், “இந்தா புள்ள நீ இப்ப பேசலைன்னா அவகளே நேரா வந்து உன்கிட்ட பேசுவாங்களாம். சொல்ல சொன்னாக, உங்க ஆட்டத்துக்கு நான் வரல, ஆளவிடு” என்று அவள் கையில் கைப்பேசியை திணித்து விட்டு ஓடி விட்டாள்.

சற்று தயங்கி காதில் வைத்தவள், மறுமுனை அமைதியாக இருக்க, “என்கிட்ட பேசாத சின்னா… வேணா என்னைவிட்டு போயிடு” உடைந்த குரலில் உரைத்தாள்.

“இப்ப என்ன நடந்து போச்சுனு இப்படி உளரிட்டு இருக்க பாப்பு? கிருஷ்ணா இப்படி கோவபடுவான்னு தெரிஞ்சது தான” ஸ்ரீ அவளை சமாதானம் செய்ய முயல,

“அதுக்கில்ல சின்னா… என்னால தான் எல்லாருக்குமே கஷ்டம், உனக்கு, மாமாக்கு, அத்தைக்கு… இத்தனை பேரோட மனவேதனையோட எனக்கு கல்யாணம் அவசியமே இல்ல” அவள் கலங்கியபடி குரல் தேய பேசினாள்.

“மறுபடி உளர்ற, உன்னால எனக்கு என்ன கஷ்டம்?”

“எனக்கு தெரியும், என்னோட உன்ன சேத்து பேச்சு வந்ததால தான வேறவழி இல்லாம என்னை கட்டிக்க சம்மதிச்ச… இல்லைன்னா இந்நேரம் நீ ஊருக்கு கிளம்பி போயிருப்ப இல்ல”

“ம்ம் காரணம் சரிதான், ஆனா மனப்பூர்வமா தான் உன்ன ஏத்துக்கிட்டேன். உன்ன விரும்புறதா சொன்னதும் ஆழ் மனசுல இருந்து தான் சொன்னேன்”

“சின்னா… என்னை தப்பா எடுத்துக்காத, மாமாவ இப்படி கோபப்படுத்தி அவமானப்படுத்தி நமக்கு இந்த கல்யாணம் வேணாம்”

“…”

அவளின் புலம்பலுக்கு இவன் பதில் சொல்லாமல் இருக்க, “ஏதாவது சொல்லு சின்னா… என்னால முடியல, எங்காவது கண்காணாத தூரம் போயிடணும் போல இருக்கு!”

“எனக்கு ஒரு சந்தேகம், சாதாரணமா இருக்க சீதாக்கும், கிருஷ்ணா முன்னாடி இருக்க சீதாக்கும் நிறைய வித்தியாசம் தெரியுதே அதெப்படி?” ஸ்ரீராம் அவளின் மன அழுத்தம் புரிந்து கேள்வியை மாற்றி விட்டான்.

“அது… மாமா மேல எனக்கு பயம்!”

“பயமா? உனக்கா? கம்போட வந்த முரடனுங்கள பார்த்து உனக்கு வராத பயம், கிருஷ்ணாவ பார்த்து மட்டும் வருமா?”

“அது… நான் சொல்லிடுவேன். ஆனா நீ சிரிப்ப” சீதா தயங்கி மொழிய,

“இந்த சுவிட்சுவேஷன்ல எந்த பெரிய ஜோக் கேட்டாலும் எனக்கு சிரிக்க தோணாது. நீ சொல்லு” அவன் விட்டெத்தியாக சொன்னான்.

“எனக்கு மாமா மேல… ஒரு விதமான போபியா!”

அவள் சொன்னதை உள்வாங்கி கொண்டு யோசித்தவனுக்கு தன்னையும் மீறி சிரிப்பு வரத்தான் செய்தது.

“வாட்? உனக்கு கிருஷ்ணாவ பார்த்தா அவ்வளவு பயம் வருமா?”

“ம்ம் எல்லாரும் கூட இருக்கும் போது பெருசா தெரியாது. ஆனா அவர்கூட தனியா பேசும் போது, கை, கால் நடுங்கி, வேத்து கொட்டி, நெஞ்சு அடைச்சு, ஹார்ட்பீட் எகிரும்!” அவள் பயந்தபடியே சொல்ல,

“குறிப்பிட்ட ஒருத்தர்மேல மட்டும் போபியோ வர்றது ரேர் சீதா, எப்போ இருந்து உனக்கு இப்படி இருக்கு” ஸ்ரீ அவள் சொல்வதை நம்பமுடியாமல் கேட்டான்.

“சரியா சொல்ல தெரியல, சின்ன வயசுல இருந்தே இப்படி தான்”

“ஓ மை காட், எதனால கிருஷ்ணாவ பார்த்து இவ்ளோ பயம் வரும்? ஏதாவது ரீசன் இருக்கும் இல்ல” அவன் மேலும் விசாரிக்க,

“அது, ஒருதடவை கழனியில பேசிக்கிட்டு இருக்கும் போதே திடீர்னு மாமா என்னை கிணத்துல தூக்கி போட்டுடுச்சி. ரொம்ப பயந்து போயிட்டேன், குளீர், ஜுரம் வந்து படுக்கையில கிடந்தேன்னு அம்மா சொல்லுவாங்க” அவள் சிறுவயது சம்பவத்தை பகிர்ந்தாள்.

“சின்ன வயசுல அவன் விளையாட்டா கூட அப்படி செய்து இருக்கலாம்” இவன் எதார்த்தம் விளக்க முயற்சிக்க,

“ம்ம் அப்புறம் கூட நான் மாமா கிட்ட, ‘என்னய ஏன் கிணத்துல தூக்கி போட்டீகன்னு’ கேட்டேனா… அதுக்கு மாமா ஏதோ சொல்லி என்னை மிரட்டினாக, அதுல பயந்து ஓடி வந்துட்டேன், அதுக்கு அப்புறம் ரொம்ப நாள் ராத்திரில தூக்கம் வராம பயந்துட்டே முழிச்சு இருப்பேன்” அவள் பழையதை கிளறி விவரித்தாள்.

“நீ இருட்ட பார்த்து பயப்பறதில்லையே, அன்னிக்கு நடு ராத்திரி கிணத்தடில தனியா உக்கார்ந்து இருந்த இல்ல” ஸ்ரீராம் விடாமல் குறுக்கு கேள்வி தொடுக்க,

“இருட்டு பயமில்ல, தூங்க தான் பயப்படுவேனாம், அத்தம்மா சொல்லுவாங்க, பச்ச வச்சு, மந்திரம் போட்டதுக்கு அப்புறம் தான், பயப்படாம தூங்க ஆரம்பிச்சேனாம்” தன் அரைகுறை நினைவுகளை ஒப்புவித்தாள்.

“நீ முன்ன தூக்கம் வராம பயந்ததுக்கும், இப்பவும் கிருஷ்ணாவ பார்த்து பயப்படுறதுக்கும் என்ன சம்பந்தம்?” அவன் சந்தேகமாக கேட்க,

“எனக்கு தெரியல” என்று புரியாத பதில் தந்தாள்.

“போபியா லெவலுக்கு பயத்தை வச்சிகிட்டு எப்படி கிருஷ்ணாவ கல்யாணம் பண்ணிக்கிற தைரியம் மட்டும் வந்தது?” ஸ்ரீராம் பேச்சு இயல்பு நிலைக்கு வந்திருந்தது.

“கல்யாண பேச்சு வந்த உடன அம்மா, அத்தம்மா கிட்ட சொன்னேன், ‘மாமானா எனக்கு ரொம்ப பயமா இருக்குன்னு’ அதுக்கு அவங்க கல்யாணத்துக்கு அப்புறம் சரியா போகும்னு சொல்லிட்டாங்க, நானும் அப்படிதான் போலன்னு நினச்சுட்டேன்” அன்றைய பள்ளி பருவத்தில் அவளால் அவ்வளவு தான் நினைக்க முடிந்தது.

எதிர்முனை அமைதியாக இருக்க, இவளுக்கு புரிந்தது. “சின்னா, சிரிக்காத, சிரிக்க மாட்டேன்னு சொன்ன இல்ல” இவள் குரல் உயர்த்திக் கேட்க, அதுவரை வாய் மூடி சிரித்திருந்தவன் வாய்விட்டு சத்தமாக சிரித்து விட்டான்.
“அச்சோ முடியலடி என்னால” என்று ஸ்ரீராம் மேலும் சிரிக்க, இவளும் அசடு வழிய சிணுங்களோட சிரித்து வைத்தாள்.

“என்ன அந்த பக்கமும் சிரிப்பு வருது போல” அவன் குரல் இளகியது.

“இல்ல, கோவந்தான் வருது” இவள் குரல் முரண்டியது.

“பரவால்ல, அழுகாச்சிய விட, கோவத்துல கொஞ்சம் பார்க்கிற மாதிரி தான் இருப்ப” அவன் சீண்டலானான்.

“நான் போன வைக்கிறேன்” இவள் முறுக்கிக் கொள்ள,

“வச்சுக்கோ” அவனும் விளையாட்டு பேச்சை விடாமல் இருக்க, பட்டென வைத்து விட்டவள், தன்னையே நொந்து கொண்டாள்.

ஆனாலும் இப்போது முன்பு இருந்த மன அழுத்தமும் விரக்தியும் அழுகையும் தூர விலகி போயிருந்ததை நினைத்து சற்று திகைத்தும் கொண்டாள்.

அக்காவின் தெளிந்திருந்த முகத்தை கவனித்த சக்திவேலுக்கும் ஏதோ புரிவது போல தான் இருந்தது.

சுபமாக ஆரம்பித்த இந்த நாள் பெரிவர்களுக்கு கலக்கத்தையே கொடுத்து இருந்தது. ராமகிருஷ்ணனை எவ்வாறு சமாளிக்க என்று தங்களுக்குள் குழம்பி இருக்க, மாலை வந்த தகவல் அவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

சங்கரன், பரமேஸ்வரன் குடும்பத்தார் மீது ராமகிருஷ்ணன், கிராம பஞ்சாயத்தில் புகார் செய்திருந்தான்!

**************

வருவாள்…