Ithayam – 3

அத்தியாயம் – 3

இதற்கிடையில்..

சென்னையில் பிரதான சாலையில் அமைந்திருந்த அந்த வீடு. கேட்டில் வாட்ச்மேன், தோட்ட வேலை செய்ய தனியாக ஆட்கள் என்று வீடு முழுவதும் வேலையாட்கள் அதற்கு அதற்கென்று பணியில் நியமித்து இருந்தார் ரகுபதி.

சென்னையில் அவரின் ஆர்.பி.கன்ஸ்ட்ரக்ஷன் தான் முன்னணியில் இருக்கிறது. அவர்கள் வீடு வழக்கத்திற்கு மாறாக ரொம்ப அமைதியாக இருப்பதைக் கண்டு விமலா, ‘இவ இன்னும் எழுந்திருக்கவில்லையா?’ என்ற சந்தேகத்துடன் ஹாலுக்கு வந்தார்.

அவர் தேடி வந்த வானரம் சோபாவில் வாலை சுரிட்டிகொண்டு அமர்ந்திருப்பதைக் கண்டு கேள்வியாக புருவம் உயர்த்தினார். ரேவதி அப்படி அமைதியாக இருக்கும் பெண்ணல்ல என்று அங்கிருந்த அனைவருக்கும் தெரியும். அப்படி இருக்கும் போது அவள் அமைதியாக இருந்தது அவருக்கும் ஆச்சர்யமாகவும் கொஞ்சம் அதிர்ச்சியாகவும் இருந்தது.

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான பிறகும் தன் தந்தை இன்னும் கல்லூரி பற்றிய பேச்சை எடுக்கவில்லை என்ற கோபத்தில் முகத்தை தூக்கி வைத்துகொண்டு செம கோபத்தில் அமர்ந்திருந்தாள் ரேவதி.

காலையில் அவள் அப்படி உட்கார்ந்து இருப்பதைக் கண்டதும், “இது புயலுக்கு முன்னாடி வருகின்ற அமைதி மாதிரி இருக்கே. இன்னைக்கு என்ன பண்ண போறாளோ” என்று தன் போக்கில் புலம்பிக்கொண்டு மீண்டும் சமையலறைக்கு சென்றார்.

‘இந்த அம்மாவுக்கு இதே வேலையாக போச்சு’ என்று நினைத்தவள் இரண்டு இரண்டு படிகளாக தாவி வேகமாக மாடி ஏறியவள் சிலநொடிகளில் தயாராகி கீழே வந்தாள்.

அவளை கண்காணித்தபடி சமையல் செய்து கொண்டிருந்த விமலா, “ஏய் எங்கே கிளம்பிட்ட” என்றார்.

தாயை நிமிர்ந்து பார்த்தவள், “அப்பா ஆபீசிற்கு போறேன். நான் வர கொஞ்சம் லேட்டாகும்” என்று கத்திக்கொண்டு வாசலை நோக்கி செல்ல, “ஏய் தனியாக போகாதடி” என்றார் விமலா அக்கறையுடன்.

“நான் தனியாக எல்லாம் எங்கேயும் போகலம்மா. என்னோட பார்வதி வரலாம். சோ நீங்க என்னை பற்றி கவலைபடாமல் சமையலை கவனிங்க” என்ற ரேவதி காரில் ஏறியதும் டிரைவர் வந்து வண்டியை எடுத்தார்.

ரகுபதி – விமலாவின் ஒரே மகள். ரொம்ப செல்லம் என்று சொல்லலாம். அதனால் கண்டிப்பு அதிகம் இல்லாமல் வளர்த்துவிட்டனர். தான் வைத்தது சட்டம் என்று வளர்ந்தவளுக்கு மட்டும் இரட்டை புத்தி. அவள் இதுதான் வேண்டும் என்று எதிலும் நிலையாக நிற்கவே மாட்டாள். அவளின் மனசு மாறிக்கொண்டே இருக்கும்.

இந்த உண்மை அறிந்தும் கூட பின்னாளில் சரியாகிவிடுவாள் என்று பெரியவர்கள் அவளை நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

காரின் கதவு வழியாக வெளியே வேடிக்கைப் பார்த்த ரேவதியின் மனம் முழுவதும் அவனின் நினைவுகளே. சிவாவின் சிபாரிசில் வேலைக்கு சேர்ந்த ஆதித்தாவை பார்த்த நாளில் இருந்து அவளின் மனதிற்குள் சிறு சலனம்.

சிவாவின் தங்கை என்பதாலோ என்னவோ அவன் அவளிடம் இயல்பாக பழகினான். தமையன் தன்னை கிண்டல் செய்யும் வேலைகளில் தனக்கு பக்கபலமாக நிற்கும் ஆதியை அவளுக்கு ரொம்ப பிடித்திருந்தது.

அதுவும் பார்க்க அழகாக இருந்ததால் உடனே அதை காதல் என்ற முடிவுக்கு வந்துவிட்டாள் அந்த பதினேழு வயது பாவை. அவனை பார்க்காத நேரங்களில் அவனை தேடியே அலைபாயும் மனதை கட்டுபடுத்த வழி தெரியாமல் அவனை தேடி செல்வதே இவளின் வெளியாகி போனது.

இரண்டு முறை அண்ணனுடன் வெளியே சென்றபோதும், ஒரு முறை அவனை தங்களின் ஆபீஸிலும் பார்த்தாள். இன்றும் அவனை காண முடியுமா? என்ற சந்தேகத்துடன் நிறுவனத்தை நோக்கி பயணித்தாள்.

அதே நேரத்தில் வீட்டில் இருந்து கிளம்பிய ஆதியின் மனம் முழுவதும் அவளின் நினைவில் நின்றது. இன்று கல்லூரி தொடக்க நாள். அவள் கல்லூரியில் சேர்ந்திருப்பாளா என்ற எண்ணம் மனதிற்குள் தோன்றி மறைந்தது. அதெல்லாம் ஒதுக்கிவிட்டு ஆபீஸ் நோக்கி பயணித்தான் ஆதி.

திடீரென்று அறையின் கதவுகளைத் திறந்துகொண்டு, “அப்பா” என்ற அழைப்புடன் புயல் வேகத்தில் வந்தாள் ரேவதி. ரகுபதியின் ஒரே மகள். சிவாவின் செல்ல தங்கை.

“என்ன ரேவதி அப்பா வீட்டுக்கு வரவே மாட்டேன்னு முடிவு பண்ணிட்டியா?” என்று மகளைக் கடிந்துகொள்ளவே, “அதெல்லாம் அப்பாவுக்கு ஞாபகம் இருந்தா நான் எதுக்கு உங்களைத் தேடி இங்கே வரேன்” என்று நொடித்துக் கொண்டாள் மகள். தன் கல்லூரி விஷயத்தை பேச தந்தையை தேடி நிறுவனத்திற்கு வந்திருந்தாள் ரேவதி.

“உனக்கு இங்கே சென்னையில் ஆர்ட்ஸ் காலேஜில் சீட் வாங்கியிருக்கேன்” என்றதும்,

“தேங்க்ஸ்” என்று கூறியவள் அவரின் அறையைவிட்டு வெளியே வந்தாள்.

அன்றுடன் அவன் அந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து ஆறு மாதம் சென்றிருந்தது. ஏதோ முக்கியமான விஷயம் பேசவேண்டும் என்று சிவாவின் சித்தப்பா ரகுபதி ஆதியை நேராக நிறுவனத்திற்கு வர சொல்லியிருந்தார்.

அவன் நிறுவனத்திற்குள் நுழைவதைக் கண்டு சிலநொடி தன்னை மறந்து நின்றுவிட்டாள். ரெட் கலர் சர்ட், சந்தன நிற பேண்டில் ஹென்சமாக இருந்தவனை கண்டதும், ‘என்ன அழகாக இருக்கிறான்’ என்று பெருமூச்சு விட்டாள்.

அவன் வேகமாக தன்னருகே வருவதைக் கண்டு, “ஹாய் ஆதி” என்றாள். அவனும் பதிலுக்கு ஒரு ஹாய் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டான்.

அவன் கதவை தட்டி அனுமதி பெற்றுகொண்டு உள்ளே நுழைய, “வா ஆதி. உன்னைத்தான் பார்க்கணும்னு நினைச்சுட்டே இருந்தேன்” என்றார் புன்னகையுடன்.
“என்ன சார் விஷயம்” என்று பளிச்சென்ற புன்னகையுடன் கேட்டவனிடம், “நம்ம நிறுவனத்திற்கு கவர்மென்ட் டெண்டர் கிடைச்சிருக்கு ஆதி. நீங்க இந்த டெண்டரை நல்ல செய்து கொடுக்கணும்” என்றார்.

தங்கள் நிறுவனத்திற்கு டெண்டர் கிடைத்த சந்தோஷத்தில், “கண்டிப்பா நான் என் பெஸ்ட் தருவேன்” என்றவன் சிலநிமிடம் அந்த டெண்டர் பற்றிய சில விஷயங்களை தெளிவுபடுத்திக்கொண்டு எம்.டி.யின் அறையிலிருந்து வெளியே வருவதைக் கண்டு, “ஆதி ஒரு நிமிஷம் நில்லு” என்றவள் ஓடிச்சென்று வழியை மறித்து நின்றாள்.

அவன் எதுவும் பேசாமல் கேள்வியாக புருவம் உயர்த்திட அந்த கம்பீரத்தில் அவளின் மனம் அவனிடம் வீழ்ந்தது.
“இல்ல இப்போவெல்லாம் உன்னை இங்கே பார்க்கவே முடிவதில்லை..” என்றவள் இழுக்கவே, “லூசு எனக்கு வேலை இல்லன்னு நினைச்சிட்டு இருக்கிறாயா?”அவளின் நெற்றியில் தட்டிவிட்டு சிரித்தபடியே சென்றுவிட்டான்.

அவன் சென்றபிறகு அதே இடத்தில் நின்றவளை கண்டு, “ஏய் ரேவதி அவனை நினைச்சு கனவு கண்டுட்டே நின்னுட்டு இரு. அவன் போய் அரைமணி நேரம் ஆச்சு” என்று தன் தோழியை இழுத்து சென்றாள் அவளின் தோழி பார்வதி.

அவள் மெளனமாக இருப்பதைக் கண்டு, “என்னடி நான் பேசிட்டு இருக்கேன். நீ அமைதியா இருந்தா என்ன அர்த்தம்” என்றவள் அவளிடம் விளக்கம் கேட்டாள்.

“எனக்கு ஆதியை ரொம்ப பிடிச்சிருக்கு பார்வதி. அதை அவனிடம் எப்படி சொல்றதுன்னு தெரியல. அவன் இந்த நிறுவனத்திற்கு வந்த நாளில் இருந்தே என் மனசு அவன் பின்னாடியே சுத்துது” என்றாள் அவனோடு இணைந்து கற்பனை உலகத்தில் மிதந்தபடி.

அவள் பேசுவதைக் கண்டு, “ஏய் என்னடி திடீர்ன்னு இப்படி சொல்ற” என்று அதிர்ந்தாள் பார்வதி.
அவன் அந்த நிறுவனத்தில் சேர்ந்து ஆறு மாதமே கடந்த நிலையில் அவள் இரண்டு மூன்று முறை அவனை சந்தித்து இருப்பாள். அந்த சந்திப்பில் அவள் அதிகமாக அவனோடு பேசியதை அவளிடம் மறைக்காமல் கூறியிருக்கிறாள். இருவருக்கும் இடையே திடீரென்று எப்படி வந்தது காதல் என்று அவளுக்கே குழப்பமாக இருந்தது.

அவள் தனக்குள் கேள்வி கேட்டபடி அமர்ந்திருக்க, “பாரு” என்றழைத்தாள்.

அவளின் பக்கம் திரும்பி நின்ற ரேவதி, “நீ சொல்லுடி எனக்கும் அவனுக்கும் ஜோடி பொருத்தம் நல்லா இருக்கும் இல்ல” விழிகளை கனவுகளை தேக்கி கேட்டாள்.

அவளையும், அவனையும் மனக்கண்ணில் கொண்டு வந்து பொருத்தம் பார்த்த பார்வதி, “ம்ம் நல்லா இருக்குடி” என்றாள் வேண்டா வெறுப்பாக.

ஆதியின் அழகுக்கு முன்னாடி ரேவதி கொஞ்சம் டல்லடித்தால் பரவாயில்லை என்று சொல்லலாம். இவளோ அவனின் கம்பீரத்திற்கு துளியும் ஒத்து வராமல் இருந்தாள். இந்த உண்மையைச் சொல்லி அவளிடம் வாங்கி கட்டிகொல்வது யாரென்று வாயை மூடிக் கொண்டாள் பார்வதி.
ஆதி வேலை செய்யும் நிறுவத்தின் முதலாளியாக ரகுபதியின் ஒரே செல்ல மகள். இப்போது தான் கல்லூரியில் முதல் வருடம் பயில தொடக்கி இருக்கிறாள். அவள் அடிக்கடி நிறுவனத்திற்கு தந்தையைக் காண வரும்போது எதர்ச்சியாக ஆதியைப் பார்த்தவளுக்கு உடனே அவனைப் பிடித்துப் போனது.

அவள் முதலாளியின் மகள் என்ற எண்ணத்தில் அவன் கொஞ்சம் கவனமாகவே அவளுடன் பழகுவான். அந்த ஒதுக்கத்துக்கு காரணத்தை எல்லோரும் மரியாதை என்று தவறாக கணிக்க அவனுக்கு மட்டுமே தெரியும் அது சூடுகண்ட பூனையின் ஒதுக்கமேன்று!

அவன் எதற்காக இங்கே வந்து இவ்வளவு தூரம் பொறுமையாக வேலை செய்கிறான் என்ற விஷயம் அவன் மனதிற்கு மட்டுமே தெரியும்.

தன் நண்பனின் சொந்த சித்தப்பா மகள் என்ற ஒரே காரணத்திற்காக அவளிடம் இயல்பாக பழகினான்.
அது மட்டும் இல்லாமல் எந்த நேரமும் துருதுருவென்று இருக்கும் ரேவதி வாய் ஓயாமல் எதையாவது பேசிக்கொண்டே இருப்பாள்.

அவளின் இந்த பேச்சு அவனின் காயம்பட்ட மனதிற்கு மருந்தாக அமையவில்லை என்றாலும் கூட பழைய நிகழ்வுகளை நினைக்காமல் இருக்க வைத்தது.

அவன் சைட் நோக்கி சென்று கொண்டிருக்கும் நேரத்தில் அவனின் செல்போன் சிணுங்கவே, “சொல்லுடா சிவா” என்றான் எந்தவிதமான வேறுபாடும் இல்லாமல்.

“என்னடா ரேவதி ஏதோ உன்னிடம் பேசிட்டு இருந்த மாதிரி இருந்தது” என்றவன் கிண்டல் குரலில் கூறிட, “நான் முதல் மாதிரி கம்பெனிக்கு வருவதில்லைன்னு வந்து கேட்டா. நானும் எனக்கு வேலை இருக்குன்னு சொல்லிட்டு வந்துட்டேன்” என்றான்.
“அவ இங்கே பாருவிடம் என்னென்னவோ உளறிட்டு இருந்தா அதன் உன்னிடம் கேட்டு தெரிஞ்சுக்கலாம்னு கேட்டேன்” என்றவன் போனை வைத்துவிட ஆதிக்கு எதுவும் புரியவில்லை.

இதைப் பற்றி யோசிக்கும் நிலையில் அவனில்லை என்று சொல்லலாம். அடுத்தடுத்து என்று வரிசைகட்டி நின்ற வேலைகளை மனதில் பட்டியலிட்டபடி அங்கிருந்து கிளம்பினான்.

அவள் மனதில் இருக்கும் காதல் அறியாமல் அவன் விளையாட்டு பெண் என்ற எண்ணத்துடன் அவளுடம் பழகினான். இது எங்கே போய் முடியுமென்று அவனுக்கே தெரியாதது. இதற்குமேல் எல்லாம் இறைவன் விட்டவழி என்று செல்ல வேண்டியது தான்.

தன் மகனிடம் தெரிந்த மாற்றத்தில் நிம்மதியுற்ற மஞ்சுளாவும் வீட்டில் இருந்தபடியே மற்ற பிள்ளைகளுக்கு டியூசன் எடுக்கு வேலையைப் பார்த்தார்.

மாலை வழக்கம்போல வீடு திரும்பிய மகனிடம், “தம்பி கொஞ்சம் துணி எடுக்கணும். என்னை வெளியே கூட்டிட்டு போறீயா” என்ற கேள்வியுடன் வந்து நின்றார் மஞ்சுளா.

காலையில் இருந்து வேலை செய்ததில் களைப்புடன் நிமிர்ந்தவன், “ம்ம் போலம்மா” என்றவன் அறைக்குள் சென்று உடையை மாற்றிவிட்டு பைக்கில் பெரிய மாலுக்கு சென்றான்.

அவன் வண்டியை நிறுத்திவிட்டு அவருடன் கடைக்குள் செல்ல நினைத்து திரும்பியவனின் பார்வையில் விழுந்தது மஞ்சள்கொன்றை மரம். அதைப் பார்த்தவுடன் அவளின் நினைவுகள் மீண்டும் அவனின் மனதில் ஊர்வலம் போனது.

‘மஞ்சள் கொன்றை பூ. வானத்தை வளைத்து தோரணம் கட்டியது போலவே இருக்கும் ஆதி. என்ன இந்த பூ எல்லா நேரத்திலும் பூக்காது. இந்த பூக்கள் சித்திரை மாதத்தில் மட்டும் தான் பூக்கும். கேரளாவில் ரொம்ப பேமஸ்’ என்று புன்னகையுடன் கூறியவளின் பளிங்கு முகம் அவனின் மனதிற்குள் தோன்றி மறைந்தது.

அவன் சிந்தனை கலைந்து நிமிர அவனின் எதிரே வந்த பெண்ணொருத்தி அவனை அடையாளம் கண்டுகொண்டாள்.

அவனை பார்த்து புன்னகைத்தபடி அவனை நெருங்கி வந்தவளின் முகம் அவனுக்கும் பரிச்சியமானதாக மனதில் தோன்றவே அவனும் அங்கேயே நின்றான்.

“நீங்க ஆதிதானே” என்று அருகே வந்து கேட்டதும், “ம்ம்” என்றான்.

“அண்ணா நான் உங்களை இங்கே பார்ப்பேன்னு சத்தியமா நினைக்கல. என் மாமா பொண்ணுக்கு மேரேஜ் என்று சென்னை வந்தேன்” என்று அவள் பேசிக்கொண்டே செல்ல, “நீங்க” என்று சிந்தனையுடன் புருவம் சுருக்கினான் ஆதி.

“நான் அபூர்வா கிளாஸ்மேட்..” அவள் தன்னை அவனிடம் அறிமுகபடுத்திக்கொள்ள, “ஓ” என்பதோடு நிறுத்திக் கொண்டான்.

“அவளோட தாத்தா பாட்டி இறப்புக்கு கூட நீங்க ஊருக்கு வரவே இல்ல. பாவம் அபூர்வா ரொம்ப அழுதாள்” என்றாள் அன்றைய நாளின் நினைவில்.

அவள் சொன்னதைக்கேட்டதும் ஒரு நிமிடம் பதறியது ஆதியின் மனம். சிவரத்தினம் – காமாட்சியின் இறப்பு அவனே எதிர்ப்பாராத ஒரு விஷயம் தான். என்னதான் அவர்களின் மீது கோபம் இருந்தபோதும் அவர்களின் இறப்பை நினைத்து வருந்தியது அவனின் மனம்.

ஒருவரின் இறப்பை நினைத்து சந்தோசப்படும் கேவலமான புத்தி உடையவன் அவன் அல்ல. அதுதான் அவர்கள் தனக்கு கெடுதல் செய்தபோதும் அவர்களை மன்னித்துவிட்டான் ஆதி.

“எப்படி நடந்தது” என்று கேட்க அவளும் நடந்த அனைத்தையும் கூறிவிட்டு செல்ல நினைத்து திரும்பிட, “ஒரு நிமிஷம்” என்று அவளை தடுத்தான் ஆதி.

அந்தப்பெண் அவனை கேள்வியாக நோக்கிட,“அபூர்வா காலேஜ் சேர்ந்துவிட்டாளா” என்று ஆர்வத்தை அடக்கிய குரலில் கேட்டான்.

“மதுரையில் பி. ஆர்ச் படிக்கிறா. இன்னைக்கு காலேஜ் முதல் நாள் போவதாக சொல்லிட்டு இருந்தா” என்றதும் ஆதி நிம்மதியடைந்தவனாக அந்த பெண்ணை அங்கிருந்து அனுப்பி வைத்தான்.

தன்னை நினைத்து படிப்பை கெடுத்து கொள்வாளோ என்ற எண்ணம் மனதைவிட்டு மறைய நிம்மதியுடன் கடைக்குள் சென்றான். அதன்பிறகு வந்த நாட்கள் ரெக்கை கட்டிக்கொண்டு பறந்தது.

அவனுக்கு தொழில் இருந்த ஆர்வமும், அவனின் வேலையில் இருந்த நேர்த்தியும் அந்த நிறுவனத்திற்கு நல்ல ஒரு பெயரை பெற்று தந்தது.

அதன்பிறகு அவனின் வாழ்க்கையில் வந்தது வசந்தம். முதலில் வேலையில் இருந்து நுணுக்கங்களை கற்றுகொண்ட ஆதி மெல்ல அந்த துறையில் கால் ஊன்றும் அளவிற்கு முன்னேறினான்.