IV2

இதய ♥ வேட்கை – 2

திருமணமாகி சில ஆண்டுகள் குழந்தைப் பேறின்றி இருந்த சத்யநாதன், சரஸ்வதி தம்பதிக்கு, இறைவனை நெக்குருகி வேண்டி பிறந்த மகனானதால், விஷ்வேஸ்வரன் என்று பெயர் வைத்து மகிழ்ந்திருந்தனர்.

மேல்நிலைப் பள்ளிக் கல்வி பயிலும் வயது வந்த போது, தானாகவே தனது பெயரின் இறுதியில் இருந்த ஈஸ்வரனை எடுத்துவிட்டு விஷ்வா என்று தனது பெயரை ஸ்டைலாக மாற்றிக் கொண்டிருந்தான் நமது நாயகன்.

டிம்பர்ஸ், ஷா மில், டைல்ஸ் என தனித்தனியாக ஒன்றையொன்று சார்ந்த மரம் சார்ந்த, சாராத, கட்டுமானம் தொடர்பான தொழில்கள் விஷ்வாவினுடையது. 

ஓடுகள், டைல்ஸ் இவற்றின் ஷோரூம் என்று அவனது தொழில் பரிவர்த்தனை தென்இந்தியாவில் மட்டுமன்றி, வெளிநாடுகளிலும் இருந்தது.

தென்காசி மாவட்டத்தில் அமைந்திருக்கும்  தாலுகாவான செங்கோட்டையை பூர்வீகமாகக் கொண்டவர், விஷ்வாவின் தந்தை சத்யநாதன்.

திருமணத்திற்குப் பிறகு, ஒற்றை மகளாகப் பிறந்த தனது மனைவியின் வீட்டிற்கு, வீட்டோடு மாப்பிள்ளையாக வந்திருந்தார் நாதன்.

 

ஆரம்பத்தில் சிறு அளவில் செங்கோட்டையில் மட்டும் செய்து வந்த மரத்தொழிலை, தனது உழைப்பால், அடுத்தடுத்த அதன் கிளை நிறுவனங்களை, தனது ஊரில் மட்டுமன்றி, மனைவியின் பிறந்த ஊரான சென்னையிலும் தொடங்கியிருந்தார்.

கடின உழைப்பாளியான சத்யநாதன், உழைப்பை மட்டுமே முழுநேரமும் கருத்தில் கொண்டு வாழ்ந்ததால் அடுத்தடுத்து, இழைப்பு மில்கள், ஓடுகள், டைல்ஸ் நிறுவனம் என திருமணத்திற்கு முன்பே சிறிய அளவில் தங்களது சொந்த ஊரில் விஸ்தரித்திருந்தார்.

நாதன் குருப் ஆஃப் கம்பெனியின் கீழ், ஒரு அறுவை மில், ஒரு இம்போர்ட்டர்ஸ் நிறுவனம், ஒரு மர சாமான்கள் விற்கும் நிறுவனம், இரண்டு டைல்ஸ் நிறுவனம் என செங்கோட்டையிலும், ரெடிமேட் மரசாமான்கள் விற்கும் பர்னிச்சர் ஷோரூம் இரண்டும், மரவேலைகள் செய்யும் தச்சுப் பட்டறை ஒன்றும் சென்னையிலும் துவங்கி வெற்றிகரமாக நடத்தி வந்தார். 

இவை அனைத்திற்கும் ஏகபோக வாரிசு, விஷ்வா மட்டுமே.

ஐந்து வயது சிறுவனாக விஷ்வா இருந்தபோது, தனது சுகவீனத்தை அசட்டையாகக் கவனிக்காமல், குடும்பம், குழந்தை என்று பொறுப்பாக இருந்து, நோய் முற்றிய நிலையில் மருத்துவர்களின் போராட்டங்களையும் மீறி இறந்திருந்தார், சரஸ்வதி.

சத்யநாதன், மனைவியின் மறைவிற்குப் பின் வீட்டுப் பொறுப்புகளோடு, தனது வளர்ந்து வரும் சாம்ராஜ்யங்களின் ஏக வாரிசையும், வேலை செய்யும் தொழிலாளர்களை நம்பி ஒப்படைத்து இருந்தார். 

பெரும்பாலும், தொழில்களில் தனது கவனத்தைத் திருப்பி, துணைவியின் பிரிவை மறக்க எண்ணி, தங்களது ஒற்றை மகனைக் கவனிக்க மறந்திருந்தார்.

பொருளாதார அந்தஸ்து, தாயில்லாத குறையைத் தவிர நிறைவான வாழ்க்கை, சிறப்பான கல்வியை விஷ்வாவிற்குத் தந்திருந்தது.

ஐந்து வயது வரை தாயின் அன்பு, கரிசனையுடன் கூடிய கண்டிப்பால் வளர்ந்தவன், அதன்பின் கேட்பாரன்றி, தனது மனம் போன போக்கில் வளர்ந்திருந்தான்.

முதுகலையில் நிர்வாக மேலாண்மையைக் கற்றதோடு அதனைக் கற்கச் சென்ற இடங்களிலெல்லாம் ஊக்க ஊதியம் போல மது, மாது, ஊது என்று தன்னிலையை உயர்த்திக் கொண்டிருந்தான், விஷ்வா.

இன்றைய இளைஞர்களின் மதிப்பு மிகுந்த சமூக அந்தஸ்தான செயலாக மதுப்பழக்கம் மாறி இருப்பது நவீன காலக் கொடுமைகளுள் ஒன்று. 

மதுவோடு உறவாடாதவன் சமூகக் குற்றவாளி போல தோழமை வட்டாரத்தில் நடத்தப்படுவது சில மேல்தட்டு மக்களிடையே இயல்பாக நடைபெற்று வருகிறது.

கவனிக்க, கண்டிக்க யாருமில்லாத நிலையில், கண்ணியமற்ற, பண்பாடு குறைந்த, கலாச்சாரத்தை மறந்து போன சில செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தான் விஷ்வா.

கேட்பாரற்று வளர்ந்த தனது வளர்ப்பினாலும், கையில் அதிகமான பணப்புழக்கத்தாலும், சமுதாயம் சீரழிந்து கொண்டிருக்கும் வழியில், விஷ்வாவும் ஒரு அங்கமாகி இருந்தான்.

அப்போது, தொழில்முறை சார்ந்த அதீத அலைச்சல் மற்றும் சுய உடல்நலன் சார்ந்த அக்கறையின்மை காரணமாக உண்டான முதல் அட்டாக்கிலேயே இறைவனடியைச் சேர்ந்திருந்தார், சத்யநாதன்.

தந்தை உயிருடன் இருந்த காலம் வரை தொழில்களை அவ்வப்போது வந்து பார்த்துக் கொண்டும், மிச்ச நேரங்களை வெளிநாடுகளில் தனது பொழுதுபோக்கு பயணமாகவும் செலவிட்டிருந்தான் விஷ்வா.

தந்தை மறைந்த பிறகு, தான் படித்த நிர்வாக மேலாண்மையை தனது புத்திக்கூர்மையால், மதி யூகமாகக் கையாண்டு, முதலில் கஷ்டப்பட்டு, அதோடு நஷ்டப்பட்டு, பிறகு கற்றுத் தெளிந்து, ஓராண்டு காலத்திலேயே, தொழிலைக் கற்றுத் தேர்ந்திருந்தான்.

நம்பிக்கையோடு கூடிய இடைவிடா முயற்சியினால், அக்காலகட்டத்தில் நட்டத்தோடு, தொழில் நுணுக்கங்களை திறம்பட கற்றுக் கொண்டிருந்தான்.

ஆரம்பத்தில், அறியாமையினால் பல இலகரங்களை நட்டமாக அடைந்திருந்தாலும், தனது விழிப்புநிலையால் மீண்டு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைத்திருந்தான் விஷ்வா.

இடறல்களை இடைவிடாது கண்காணித்து அப்புறப்படுத்தியதோடு, தவறுகளை மீண்டும் செய்யாமல், விழிப்போடு சரிசெய்து, தொய்வடைந்த தனது நிறுவனங்களை தூக்கி நிமிரச் செய்ததோடு, திறம்பட நிறுவனங்களை நடத்தத் துவங்கியிருந்தான்.

தாயின் அருமை புரிந்திருந்தும், பாசம் அறியாமல் சிறுவயதில் ஏக்கத்தோடே வளர்ந்திருந்தான்.  வீட்டில் பசிக்கும் நேரங்களில் டைனிங்கில் சென்று அமர்ந்தால், அவர்களின் வீட்டில் வேலை செய்யும் நாகம்மாள் மட்டுமே கருத்தாக அவனுக்கு தேவையானவற்றைக் கவனிப்பார்.

ஆனாலும், ஒரு அளவிற்கு மேல் அவனிடம் உரிமை எடுத்துப் பேச, அவனைத் திருத்துவதான பேச்சுக்களோடு அவனை அணுக யாரையும் அனுமதிக்கமாட்டான்.

அத்தகையவன், தனது திருமண வாழ்வில் வந்து போன வசந்தத்தின் பிரிவால், அவனறியாமலேயே கடந்த ஓராண்டில் மாறத் துவங்கியிருந்தான்.  ஆனால் அவனது மாற்றம் அவனே அறியாதது, உணராதது.

***

அதிகாலையில் எழுந்தவன், ஏழரை மணிக்கெல்லாம் செங்கோட்டையில் உள்ள அவனது வீட்டிற்கு கிளம்பியிருந்தான்.

அவளைக் கண்டால் போதும் என்று உடலின் ஒவ்வொரு செல்லும், மூளையின் செயலைத் துரிதமாக்கி அவனை உந்தித் தள்ளியது.

நிச்சயமாக அது எதனால் என்பது இன்று வரை புரியவில்லை என்பதைவிட, என்றாவது புரிந்து கொள்ள இயலுமா என்ற கேள்விகூட மனதில் எழாது கிளம்பியிருந்தான் விஷ்வா.

இது வழமையாக மாறியபோது, கண்ணனும் ஆரம்பத்தில் அதிசயித்து, பிறகு ஓய்ந்து ஒடுங்கி, சாதாரணமாக எடுத்துக் கொள்ளத் துவங்கியிருந்தான்.

வீடு, விஷ்வா தனித்து இருந்த காலத்தைவிட, பராமரிப்பு கூடி பளபளப்போடு, லட்சுமி கடாட்சத்தோடு விளங்குவதை ஒவ்வொரு வரவிலும் தனது பார்வைக்கு புலனாகும் வித்தியாசத்தை வித்தியாசமாக உணர்கிறான்.

எல்லாம் அவளால் என்று ஆழ்மனம் கூறினாலும், அதை அவளிடம் பாராட்டலோடு பகிரும் வகையிலானதொரு இயல்பான சூழல் இல்லாமல், அதைப் பகிராது மனதோடு பத்திரப்படுத்தியிருக்கிறான்.

மனதோடு வைத்துக் கொள்ளப்பட்ட, உரியவர்களிடம் பகிராத உணர்வுகளுக்கு மரியாதையிராது என்பதை புரிந்து கொள்ளாத ஆண்களுள் அவனும் ஒருவன்.

பெண்ணும் அதையெல்லாம் விஷ்வாவிடம் எதிர்பார்க்கவில்லை என்பதைவிட அவளின் எதிர்பார்ப்பு முரணானது.

வண்டியிலிருந்து இறங்கியவன், தனக்கும், அவளுக்கும் காலஅவகாசம் வழங்கும் விதமாக, சற்றே வீட்டைச் சுற்றியுள்ள இடங்களைப் பார்வையிட்டு, ஆசுவாசம் கொள்கிறான்.

பெண்ணிற்கு, வழமைபோல இதமான காலை உதயமாகியிருந்ததோடு, கணவனின் வருகையை கேட்டறிந்தவுடன், பரபரப்பும் உடலில் வந்து ஒட்டிக் கொண்டு தயக்கத்தைத் தந்திருந்தது.

வேண்டாமென்று அறிவு முடிவு செய்து பிரகனப்படுத்த ஆயத்தமானதை, மனம் வேண்டுமென்று ஆசை கொள்ளும் கொடூரம்.

ஆனாலும் அறிவு வெல்கிறது.

மனம் அவளைக் கொல்கிறது.

வீட்டிற்குள் விஷ்வா எட்டு மணிக்கு வரவும், கணவனின் வருகைகையை அவளின் அறையிலிருந்தபடியே அறிந்து கொண்டவள், சமையலறையை நோக்கி, “செல்லம்மா…! அவங்க வந்துட்டாங்க…!” என்று அழைக்கவும் சரியாக இருந்தது.

மனைவிக்குரிய பரிமாறல் சார்ந்த அழைப்பல்ல அது.

பணிப்பெண்ணுக்குரிய பதவிசான அழைப்பு.

வந்தவனை எதிர்கொண்டவள், “வாங்க…”, என்ற ஒற்றை அழைப்போடு ஹாலில் இருந்த சோபாவில் அமரும் நோக்கத்தோடு வந்த கணவனை வரவேற்றவள், “சாப்பிட்டு அப்புறம் வந்து இங்க உக்காருங்க”, என்று மிதமானதொரு குரலில் வினவினாள்.

“ம்… உன்னிஷ்டம்!”, என்று தோளைக் குலுக்கியவன், கை அலம்பி வந்து டைனிங்கில் பேசாது அமர்ந்தான்.

‘செல்லம்மா’ என அழைக்கப்பட்டவர், அன்று காலை ஆகாரத்திற்கு செய்த பட்சணங்கள் அனைத்தையும் எடுத்து வந்து வைத்திருக்க, ஒவ்வொன்றாக கேட்டுப் பரிமாறினாள் பெண்.

“மிதிலா!”, என்று கணவனின் அழைப்பில் நிமிர்ந்து தன்னை நோக்கியவளிடம், “நீயும் உக்காரு… என்னோட நீயும் சாப்பிட வேண்டியதுதான?”, என்று கேள்வி எழுப்பியவனிடம்

“இல்ல…! நீங்க சாப்பிடுங்க…! நான் இன்னும் ஹாஃப் அன் அர் கழிச்சுதான் சாப்பிடுவேன்!”, தயக்கமாகவே கூறினாள்.

“அப்போவே நானும் சாப்பிட்டுக்கறேன்”, என்றவன் அத்தோடு அவ்விடத்தைவிட்டு எழுந்திருந்தான்.

“ஏன்…”, என்று பதறியவள்,

“.. நீங்க சாப்பிடுங்க… அதுக்கு எதுக்கு சாப்பாட்டுல உக்காந்தவுடனே எழுந்தீங்க”, பதற்றம் மாறாது கேட்டவளை செய்கையால் அமர்த்தி அகன்றிருந்தான்.

ஹாலை நோக்கிச் சென்று வழமைபோல அமரும் இடத்தில் சென்று அமர்ந்திருந்தான்.

எடுத்து வைத்ததை, செல்லம்மாவிடம் எடுத்துச் செல்லப் பணித்துவிட்டு, விஷ்வா இருந்த இடம் நோக்கி வந்தாள் மிதிலா.

கடந்த ஓராண்டு காலத்தில், விஷ்வா எப்படி எந்த நேரத்தில் என்ன செய்வான் என்பதை உணரமுடியாதவளால், இன்று உண்டான நிகழ்வால், ஏற்பட்ட  திணறலோடு வந்து தயக்கமாக எதிரில் வந்து நின்றாள்.

மிதிலாவின் திணறல் அதிகாலை வேளையில் அவளின் முகத்தில் வெண்ணிற வியர்வைத் துளிகளை உண்டு பண்ணியிருந்தது.

அதிகாலை வெயிலின் கதிர் பாய்ந்த இடத்தில் நின்றவளின் மீது விழுந்து வியர்வைத் துளி மின்னியது.

அதைக் கண்டவனுக்கோ கள்வெறி உண்டானது.

எந்த அரிதாரமும் இன்றி பளிச்சென்றிருந்தவளை அணைத்துக் கொள்ள மனம் ஆசை கொண்டது.

ஆனாலும், இடம், சூழல், பெண்ணின் ஒட்டாத தன்மை கண்டு ஆணவன் தள்ளியிருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தான்.

தனக்காக அவன் உணவை தவிர்த்ததை எண்ணி பெண்ணின் மனம் சந்தோசம் கொள்ளவில்லை.  பயப்பந்து மனதில் உருண்டது. 

விஷ்வாவின் திடீர் செயலிலிருந்த பிடிவாதம் புரிந்தது.  உடன் பயமும் வந்து மனம் சோர்ந்தாலும் அதை மறைத்தவாறு, முந்தைய தினம் வரை சரி செய்யப்பட்ட அனைத்து கணக்கு சார்ந்த ஆவணங்களை டேபிளின் மீதிருந்து எடுக்க முனைந்தாள்.

பெண்ணை ரசித்தவன், பதற்றத்தை தவிர்க்கும் விதமாகா, “சாப்பிட்டு அப்புறம் வந்து ரிலாக்சா பாக்கலாம்.  உக்காரு மிதிலா”, என்று கோபம், வருத்தம் எதுவுமில்லா குரலில் கூறியவனை, எப்படி எதிர்கொள்வது எனப்புரியாமல் பார்த்தவாறே, அமர்ந்தாள் பெண்.

அவனைப்போல ஊடுரும் பார்வையை அவன்மீது நிலைக்கவிட இயலாமல் தலை நிமிரவும் ஏதோ ஒன்று தடுக்க, தர்மசங்கடமான உணர்வோடு விஷ்வாவின் உரையாடலுக்கு காத்திருந்தாள்.

“எப்போ சென்னை வர…?”, என்ற தனது கேள்வியை முன்வைத்தான்.

‘வேற எதாவது கேட்டா தேவலை’, மிதிலா

“…”, பேசாது அமைதியாக இருந்தவள், தலையை மறுத்து வரவில்லை என்றதைப் பார்த்திருந்தவன்

“எதையும் நேரடியா பேசித் தீக்கறது நல்லது மிதிலா… வருசமே போயிருச்சு… ஆனா இன்னும் காரணம் எதுவும் சொல்ல மாட்டேங்கற”, எரிச்சல் எட்டிப் பார்த்தது  விஷ்வா வார்த்தையில்.

கணவனின் பேச்சைக் கேட்டவள், “நீங்க என்னை டிவோர்ஸ் பண்ணிட்டு வேற யாரையாது மேரேஜ் பண்ணிக்கங்க”, என்ற விஷ்வாவின் ஒவ்வொரு பயணத்தின்போதும் கூறும் அதே வாக்கியத்தை, கீரல் விழுந்த ரிகார்டைவிட மிக தெளிவான குரலில் மிதிலா கூற,

“வேறு என்ன வேணா சொல்லு செய்யறேன்.  ஆனா டிவோர்ஸ் பண்ணற அளவுக்கு என்ன கொடுமை உனக்கு நடந்ததுன்னு எங்கிட்ட சொல்லு.  அப்புறம் அதைப் பத்தி யோசிக்கலாம்”, என்று விஷ்வா வழமைபோலவே பெண்ணின் பேச்சை மறுத்துப் பேசினான்.

“…”, எதையும் பேசினாளில்லை.

‘கொடுமையெல்லாம் சொல்ல எனக்கு கொடுப்பினை இல்ல’, என்று பெண்ணின் மனம் சொன்னது.

சில விசயங்களைப் பற்றிப் பேச இயலாமல் பெண் மனம் முரண்டியது.

“ஒவ்வொரு தடவையும் வரும்போது இதைத் தவிர வேற எதுவும் எங்கிட்ட உனக்கு கேக்கத் தோணலையா?”, என்று மிகவும் இறங்கிய குரலில் வினவியவனின் வார்த்தையில் இருந்த வருத்தம், பெண்ணையும் வருத்தியது.

ஆனாலும், பெண் அதைப்பற்றி பேச விரும்பவில்லை.

“உங்களோட நல்லதுக்குத்தான் சொல்றேன்.  எதுவும் என்கிட்ட கேக்காதிங்க… எனக்கு மியூசுவல்ல டிவோர்ஸ் கொடுத்திட்டு… உங்க விருப்பப்படி வேற யாரையாது கல்யாணம் செய்துக்கங்க”, என்று மீண்டும் அவளது நிலையில் இருந்து மாறாது பேசினாள்.

“என்னோட நல்லது நீதான். என் விருப்பம் நீதான்…!”, என்று கூறி பெண்ணை திக்குமுக்காடச் செய்தான்.

மை தீட்டாத விழிகளில், அடர்ந்து கருத்திருந்த முடிகள் அந்தக் குறையை களைந்து கண்கள் வசீகரமாக இருக்க, ஆணது பேச்சில் படபடவென்று அடித்த இமைகள் பெண்ணின் திக்குமுக்காடலைச் சொல்லியது.

விஷ்வா இதழ் முறுவலோடு பெண்ணை ரசித்தவாறே கேள்விக் கணைகளை வீசுகிறான்.

“… வேற என்ன உன் மனசுல இருக்குங்கறதை மனசு விட்டு சொன்னா பேசித் தீக்கலாம்.  அதை விட்டுட்டு ஒவ்வொரு தடவையும் இதையே சொன்னா கட்டுனவளையே கடத்திட்டுதான் போகணும்போல”, என்ற விஷ்வாவின் வார்த்தையைக் கேட்டவள்

இமை சிமிட்டாது கணவனை நிமிர்ந்து பாவம்போல பார்க்கிறாள். 

பெண்ணது பாவனையில் அவளின் மனம் உணர்ந்தவன், சற்றே இறங்கி, “உன் விருப்பம், சுதந்திரம் எதிலயும் தலையிடக்கூடாதுனு ஒதுங்கிப் போறதால… என்னைய இப்படி அலைக்கழிக்கிறியா?”, என்று விஷ்வா வினவ

“அப்டியில்ல… எனக்கு இதுதான் சரினு மனசுக்கு படுது”, மிதிலா

“எனக்கு இது சரினு படலையே, என்னதான் உன் பிரச்சனை… இல்லை என் சைட்ல எதாவது உனக்கு இன்கன்வீனியன்ட்னு யோசிச்சா அதையும் சொல்லு.  நான் சரி பண்ணிக்கறேன்”, என்று பெண்ணிடம் இறங்கிப் பேசினான் விஷ்வா.

இது நிச்சயமாக விஷ்வாவின் குணமல்ல.  ஆனாலும் மிதிலாவிடம் அவ்வாறு மட்டுமே அவனால் பேச முடிகிறது.

“எந்த இஸ்யூஸூம் இல்ல.  எனக்கு பேமிலி லைஃப் செட்டாகும்னு தோணலை.  அதனால…”, என்று பேசியவள் தனது பேச்சை முடிக்கும்முன் குறுக்கிட்டவன்

“அதை நம்ம மேரேஜ்கு முன்ன நீ சொல்லியிருந்தா உன்னை இப்டி கேள்வி கேட்டிருக்க வாய்ப்பு இல்லாம இருந்திருக்கும்.  கல்யாணம் பண்ணி மூனு மாசம் சும்மா இருந்தவ… திடீர்னு வேணானு சொன்னா… அது சாதாரண விசயமில்ல… எங்கிட்ட சொல்ல கஷ்டமா இருந்தா ஒரு டாக்டரைக் கூட கன்சல்ட் பண்ணுவோம்.  அதைவிட்டுட்டு டிவோர்ஸ் பத்தி இனி எங்கிட்ட பேசாத”, என்று கண்டிப்பான குரலில் கூறியவன்

“இந்த ட்ரிப்ல எனக்கு நல்ல முடிவு தெரிஞ்சாகணும்”, என்று அவ்விடத்தை விட்டு எழுந்து டைனிங்கை நோக்கி நகர்ந்திருந்தான்.

எதையும் பட்பட்டென்று பேசிப் பழகியவள், கடந்த ஓராண்டாக, தனக்குத்தானே வாய்ப்பூட்டிட்டி அமைதி காத்து வருகிறாள்.

எழுந்தவனின் பின்னோடு சென்றவள், மீண்டும் பரிமாறத் துவங்க…

“நானே எடுத்து போட்டுக்குவேன்… நீயும் உக்காந்து சாப்பிடு”, என்று எதிரில் இருந்த நாற்காலியை காட்டிக் கூறியவன் தானாகவே தனக்கு வேண்டியதை எடுத்து வைத்துக் கொண்டான்.

உண்டு முடிக்கும்வரை அமைதியாக இருந்தது அவ்விடம்.

உண்டு முடித்து ஹாலில் சென்று மீண்டும் அமர்ந்தவன், அன்றைய தினசரிகளை கையில் எடுத்து வைத்தவாறு, பெண்ணைப் பார்க்கும் வகையில் அமர்ந்து கொண்டான்.

விஷ்வா சென்ற ஐந்தே நிமிடத்தில் அவனிருந்த இடம் நோக்கி வந்தவளைப் பார்த்தவன், ‘சாப்பிடுவாளா, இல்லை எல்லாத்தையும் ஒரு பார்வை பார்த்துட்டு எழுந்திருச்சிருவாளா!  ஒரு வருசமா சின்ன இம்ப்ரூவ்மெண்ட் இல்லாம அப்ப பார்த்த மாதிரியே இருக்கா’, என்கிற நீண்ட நாள் கேள்வியை இன்றும் தனக்குள் எழுப்பிவிட்டு

“எப்டி போகுது”, என்று தனது வியாபாரம் சார்ந்த விசயங்களைப் பற்றி பேசத் துவங்கியிருந்தான்.

செங்கோட்டையில் இயங்கும் நாதன் நிறுவன கிளைகளின் கணக்கு வழக்குகள் அனைத்தையும் அடுத்து வந்த அரைமணித் தியாலத்தில் மிகவும் நேர்த்தியாக விஷ்வாவிடம் ஒப்படைத்தவள், அமைதியாகக் காத்திருந்தாள்.

அனைத்தையும் அடுத்து வந்த நேரங்களில் பார்த்து முடித்து நிமிர்ந்தவன், வழமைபோல…

“என்னோட செட்டியூல்படி நான் போற எடத்துக்கு என்னோடயே வா மிதிலா”, என்றவன் எழுந்து, நாலே எட்டில் வெளியே சென்றிருந்தான்.

‘ரெண்டு நாளைக்கு இப்டி இவரு பின்னாடியே அலைய விடறதா வேண்டுதல்போல’, என்று மனதோடு நினைத்தவாறே உடன் கிளம்பியவள்

இரண்டு நாள்களை எண்ணிய பீதியோடு கிளம்பியிருந்தாள்.

/////////

மற்ற நேரங்களில், நாள்களில் ஓட்டுநரைக் கொண்டு தனது காரை எடுப்பவன், மிதிலா உடன் வருவதால் தவிர்த்து விட்டான்.

இயல்பான ஒன்றானாலும், மாதமொருமுறை நடக்கும் மனதிற்கும், அறிவுக்குமான போராட்டத்தில் பெண் அல்லாடிப் போகிறாள்.

நிறுவனம் சென்ற பிறகு, அங்கு உண்டான பணிகள், தேவைகள் சார்ந்த பேச்சுகள் அதிகமிருந்தாலும், கணவனோடு தனித்து இருக்கும் நேரங்களில் உண்டாகும் மனதின் அதிர்வு பெண்ணை சங்கடப்படுத்தியது.

கணினியில் பெண் வேலையாக இருக்கும்போது, பெண்ணின் பின்னோடு நெருக்கமாக நின்றபடி, மூச்சுக் காற்று முதுகில் படுமாறான விஷ்வாவின் வினாக்களுக்கு விடையளிக்க இயலாமல் மிதிலாவிற்கு சோதனைகள் வந்து போகிறது.

இயல்பாக மிதிலாவின் தோள்பிடித்தவாறு, கணினித் திரையில் தெரியும் எண்களைக் காட்டி தன்னிடம் பேசுகையில், பெண் பித்து பிடித்தாற்போன்ற நிலைக்குத் தள்ளப்படுகிறாள்.

‘தொடாமப் பேசினா என்ன? எதுக்கெடுத்தாலும் வந்து ஒட்டிக்கிட்டு, உரசிக்கிட்டு… முடியலைடா சாமி’, மிதிலா.

எப்போது நேரம் இரவாகும் என்று விடைபெறலுக்கு பெண்ணின் மனம் ஏங்குகிறது.

ஏன் இரவு விரைவில் வந்தது? என்று பெண்ணின் பிரிவை எண்ணி மனம் சோர்ந்து போகிறான் விஷ்வா.

மாறுபட்ட மனநிலைகளோடு, காலத்தை கழிக்கின்றனர் இருவரும்.

பத்து நிமிடங்கள் வியாபாரம் பற்றிப் பேசினால், ஐந்து நிமிடங்கள் பெண்ணை தன்னோடு அழைத்துச் செல்வதைப் பற்றிப் பேசி திணறடிக்கிறான்.

‘சிவசாசி பட்டாசா கல்யாணத்துக்கு முன்னாடி இருந்தவ… இப்பல்லாம் ஒரு வார்த்தை பேசவே யோசிக்கிறா’, என மனைவியைப் பற்றி கணவன் எண்ணுகிறான்.

இரவு உணவுக்கு வீட்டிற்கு வந்தவன், “என்ன மேடம்? இன்னிக்காது நான் இங்க ஸ்டே பண்ணலாமா? என் ரூம் அவெய்லபிளா இருக்கா?”, புன்னகையோடு பதில் தெரிந்தும் வினவுகிறான் விஷ்வா.

“இல்லை…”, என்பதையே இன்றும் பதிலாகக் கூறி, கணவனை அனுப்பிவிட்டு பெருமூச்சோடு படுக்கைக்கு சென்றாள் மிதிலா.

பொறுமை கடலினும் பெரிது.  அத்தகையை பொறுமையை கையாண்டவன் அடுத்து என்ன செய்யப் போகிறான்?

அடுத்த அத்தியாயத்தில்…