IV22

IV22

இதய ♥ வேட்கை 22

 

தந்தையைப் பிடித்துத் தள்ளியவன் வண்டியை எடுத்துக் கொண்டு பெட்ரோல் தீரும்வரை கவனிக்காமல் பயணத்தைத் தொடர்ந்திருந்தான் கண்ணன்.

அதன்பிறகும் வீடு திரும்பும் எண்ணமில்லாமல் மனம்போனபடி பயணத்தைத் தொடர்ந்தான்.

தள்ளிவிட்டதும், தாய் கத்திய கத்தலின் சத்தம், வீதியில் நின்றிருந்த வண்டியில் ஏறிய கண்ணனின் காதுவரை கேட்டதும், அவ்வப்போது மனதில் வந்து பயமுறுத்தியது.

தன்னால் தந்தைக்கு எதுவும் ஆகியிருக்குமோ?  அசம்பாவிதங்கள் நடந்திருந்தால் தாய் தன்னைக் கண்டதும், அதைக்கூறியே தன்னை நிராகரிப்பார் என்பதும் புரிய, தந்தையின் நிலையை எண்ணிய தயக்கமும் வந்திருந்தது.

தான் ஒன்று நினைத்துச் செய்யப்போக, அனைத்தும் தவிடுபொடியாகி, தனக்கே திரும்பிய எதிர்பாரா நிகழ்வால் மனம் காயப்பட, தாயும் அதை எள்ளி நகையாடுவதுபோல பேசிட, என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் அனைத்தையும் செய்துவிட்டு வெளியேறியிருந்தான்.

ஏமாற்றம் என்பதைவிட, தனது செயலால் விஷ்வா, திலாவின் வாழ்வில் இடையூறு உண்டாகும், அதில் தான் குளிர்காயலாம் என்கிற எண்ணத்தில் விழுந்த அடியை ஏற்றுக்கொள்ள இயலாமல் தன்மீதே கழிவிரக்கமும், இயலாமையும் ஒருங்கே சேர விரக்தியின் எல்லைக்குச் சென்றிருந்தான்.

இனி எதுவும் தனக்கில்லை என்பதை அவனால் ஏற்றுக்கொள்ள இயலாமை!

தனது அவா நிறைவேறாத ஏமாற்றம்!

பெற்றவர்களை குறிப்பாக, தனது திருமணத்திற்கு தடையாக இருந்த தாயை அறவே வெறுத்தான்.

தற்போதைய அவனது நிலையை எண்ணவே மனம் விரும்பாது, கைவிட்டுச் சென்றதையே நினைத்து, அவன்மீதே அவனுக்கு கட்டுங்கடங்காத கோபம் வந்தது.

தைரியமில்லாததால் ஆரம்பத்திலேயே மனதை திலாவிடம் சொல்லாமல் விட்டிருந்தான்.

அதன்பிறகும், தாயை எதிர்த்துப் பேச முடியாமல் அமைதியாகச் சென்றிருந்தான்.

மொத்தத்தில் தான் வாழ்வதே வீண் என்கிற மனநிலைக்கு  தற்போது வந்திருந்தான்.

இனி என்ன செய்து அவளை தன் வசப்படுத்த முடியும்? 

எல்லாவற்றையும் தான் பேசக் கேட்டிருந்தவள், தன்னை எப்படி இனி நம்புவாள் என்பதும் மனதில் வந்து போக, தன்னையே வெறுத்தான்.

அதற்குமேல் விஷ்வாவை கொன்றுபோடும் வெறி வந்தது. எல்லாவற்றிற்கும் அவன்தான் காரணம்.  விஷ்வா மட்டும் தங்களுக்கு இடையில் வராமல் இருந்திருந்தால் தனது வாழ்வு நன்றாக இருந்திருக்கும் என இப்போதும் எண்ணுகிறான்.  ஆனால் இனி அவனை எதிர்த்து துரும்பைக்கூட அசைத்து எதுவும் செய்ய முடியாத இயலாமை!

கோழையால் நேர்மையாக எப்படி சிந்திக்க இயலும்?

வாழ விரும்பாத மனதில் நிலை!

சாக பயந்த மனதின் தயக்கம்!

இரண்டிற்கும் இடையே புரியாமல் அல்லாடினான்.

கையில் இருந்த பணமும் கரைந்து கொண்டேயிருந்தது.  இன்னும் எத்தனை நாள்களுக்கு இப்படியே தெரிவது? என எதுவும் புரியாமல், வீட்டிற்குச் செல்லவும் தைரியமில்லாமல் விரக்தியோடு வீதிகளில் தெரிந்தான்.

……….

திருநாவு தலையில் உண்டான காயத்தால் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டு ஒரு வாரத்தில் வீடு திரும்பியிருந்தார்.

அதுவரை கண்ணன் வீட்டிற்கு திரும்பியிருக்கவில்லை.

கணவனின் உடல்நிலை கருதி மனதிற்குள் புலம்பியவாறு இருந்த கண்ணனின் தாய், வீட்டிற்கு வந்ததும் கேட்ட கணவனிடம் உண்மையைக் கூற, அமைதியாகி விட்டார் திருநாவு.

புலம்பிய மனைவியிடம், “இனி புலம்பி என்ன பண்ண?  ஒத்த புள்ளை.  அவன் பிரியப்பட்டதை செஞ்சிருந்தா இன்னிக்கு இவ்ளோ பெரிய அசிங்கம் வந்திருக்குமா?  அந்த டாக்டரம்மா நீங்கள்லாம் கிளம்பி வந்ததும், எங்கிட்ட வந்து, “உங்க பையன் மனசளவுல ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கான்.  சீக்கிரமா ஒரு நல்ல டாக்டரை கன்சல்ட் பண்ணுங்க.  மேற்கொண்டு வீட்டுலபோயி இதைப்பத்திப் பேசி பெருசு பண்ணாதீங்கனு சொன்னாங்க”, என்று சற்றே தாமதித்தார்.

பிறகு மனைவியை நோக்கி, “வந்து வீட்டுக்குள்ள நுழைஞ்சதும் நுழையாததுமா, நீ அதத்தான் பேசி… அவனை கோபப்படுத்திட்ட! அவனும் நடந்ததை எதிர்பாக்காம அவனுக்குள்ள போராடிகிட்டு இருக்கும்போது நீ அப்டிப் பேசலாமா? பெத்தவளும் பேசுனதைக் கேட்டவுடனே மூர்க்கத்தனமா மாறிட்டான்.  நான் வந்து தடுக்கலைன்னு உன்னைக் கொன்னிருப்பான்”, என்க

“பெத்தவளைக் கொல்ற அளவுக்கு நான் எம்புள்ளைய ஈவு இரக்கம் தெரியாதவனா வளக்கலை!”, என அந்நேரத்திலும் மகனின் செயலை மறந்து வாதிட

“என்னைத் தள்ளி விட்டதுலயே தெரியலையா உனக்கு? அவன் முன்ன மாதிரி இல்லைனு!”, என்றவர்

“அப்ப ஈவும் இரக்கமும் எங்க போச்சு?”, என மனைவியிடம் கேட்க

என்ன சொல்லுவதென்று புரியாமல் நின்றவரிடம், “நீ அன்னைக்குத்தான் அப்டி பேசுனியா?  எப்பவுமே அப்டித்தான் பேசுவ.  அப்டிப் பேசும்போது எதித்து ஒன்னுஞ்சொல்லாம கண்டுக்காம போயிருவான்.  ஆனா அன்னைக்கு உன்னைக் குரல்வளையை எதுக்குப் பிடிச்சான்?”, திருநாவு வினவ

“அது ஏதோ கோவத்துல அப்டிப் பண்ணிட்டான். எம்புள்ள இப்ப எங்க இருக்கானோ?….”, என அங்கலாய்ப்போடு துவங்கிட

“புலம்பாத நிறுத்து.  வரணும்னு இருந்தா வருவான்”, என்று விட்டேற்றியாக திருநாவு பேசிட

மேலே கையிரண்டையும் தூக்கி “எம்புள்ளைக்கு மட்டும் எதுக்கு கடவுள் இவ்வளவு கஷ்டத்தைத் தரான்”, என கண்ணனின் தாய் புலம்பலைத் தொடர

“நினைச்ச புள்ளைய கட்ட முடியலைன்னா என்ன?  வேற புள்ளையக் கட்டிக்கிட்டு சந்தோசமா வாழறதைவிட்டுட்டு, அறிவுகெட்டுப்போயி அடுத்தவன் குடும்பத்தைக் கெடுக்க நினைச்சா இது மட்டுமில்ல.  இன்னும் நிறைய அனுபவிக்க வேண்டியிருக்கும்”, நிதர்சனத்தை திருநாவு கூற

“நீயெல்லாம் ஒரு அப்பனா?  பெத்த புள்ளைக்கே சாபம் விடுற? புள்ளையக் காணோம்னு சொன்னா போயி போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணி கண்டுபிடிக்கற வழிய விட்டுட்டு இப்டி அபசகுனமா பேசுற”, என கண்ணனின் தாய் கணவனின் பேச்சைக் கேட்டுச் சாட

“உன்னைக் குரல்வளையப் பிடிச்சப்ப தடுக்காம விட்ருக்கனும். இந்நேரம் கொன்னுருப்பான்!”, என்றவர், “சின்னப்புள்ளை வழி தெரியாம காணாம போயிருச்சு… போயி காணாம்னு கம்ப்ளைண்ட் பண்ண… கூறுகெட்ட மூதி… எல்லாம் உன்னால வந்தது”, தனது பங்கிற்கு மனைவியை திருநாவு பேச

இருவருக்கிடையே வாக்குவாதம் தடிக்க, ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி பழிசொல்லி பேச்சு வளர்ந்தபடியே சச்சரவோடு இருந்தது.

இடையிடையே திலாவையும், அவளது குடும்பத்தையும் இழுத்து கண்ணனின் தாய் பேச, “இனிமே அந்தப் புள்ளையப் பத்திப் பேச வேண்டிய அவசியம் உனக்கென்ன!”, என்று கண்டித்த திருநாவுவிற்கு

அர்ச்சனைகள் வந்து விழுந்தபடி இருக்க, வீடே இருவருக்கும் நரகமாகிப் போனது.

/////////////

விஷ்வா கேட்டுக் கொண்டதற்கிணங்க வீட்டிற்கு வந்திருந்த மாலினியும், அனைவரும் பேசி ஒரு முடிவுக்கு வந்தவுடனே, சொல்லிக் கொண்டு மருத்துவமனைக்கு கிளம்பியிருந்தார்.

அனைவரும் சென்ற பிறகு ஆளுக்கொரு புறமாக தம்பதியர் இருவரும் அவரவர் சார்ந்த விசயங்களில் மனதைச் செலுத்தி, ஊசலாடிய மனதில் பல எண்ணங்கள் வந்துபோக, அடுத்த கட்ட திட்டமிடலோடு விஷ்வாவும், குழப்பமும், கோபமுமாக திலாவும் அன்றைய தினத்தைக் கடந்திருந்தனர்.

திலாவிற்கு மனதிற்குள் வைத்துக் கொண்டே தனக்குள் கேள்வியும், பதிலுமாக நேரத்தைக் கடத்தியவள், அடுத்து வந்த நாள்களிலும் கணவனிடத்திலும் ஒதுக்கத்தைக் கடைபிடித்தே, எதிலும் ஒட்டாமல் ஒதுங்கியே இருந்தாள்.

விஷ்வா வழமைபோல அவனது பணிகளுக்கிடையே ஒதுங்கிச் சென்ற திலாவையும் கவனித்துக் கொண்டான்.

இடைவெளி இருந்தாலும், அதனைச் சரிசெய்ய இருவரும் முனையவில்லை.

விஷ்வாவைப் பொறுத்தவரை தான் தங்களது நலனுக்காக எடுத்துச் செய்தது, சுபமாகிவிட்டது என்கிற அளவில் நிறைவு வந்திருந்தது.

என்ன நினைத்து பெண் ஒதுங்கி நிற்கிறாள் என்பதே தெரியாமல், தானாகச் சென்று வாயைவிட்டு, வாங்கிக் கட்டிக்கொள்ள விஷ்வா ஆர்வம் காட்டவில்லை.

கடந்து போன நாள்களில் சேர்ந்திருந்த பணிகளும் வரிசை கட்டிக் கொண்டு நிற்க, அதைப் பார்க்க, அது சம்பந்தமாக மேற்கொண்டு செய்ய என விஷ்வாவின் பொழுதுகள் அதிவிரைவாகச் சென்றது.

என்றாகினும், தான் மட்டுமே இதற்கு முடிவு கண்டாக வேண்டிய தங்களது தாம்பத்ய வாழ்க்கை நிலையையும், நன்றாகப் புரிந்து கொண்டே இருந்தான் விஷ்வா.

அதில் அவனுக்கு எள்ளளவும் வருத்தம் இல்லை.  தங்களது வாழ்க்கை செழிப்பாக இருக்க, அகந்தையோ, கர்வமோ, தன்முனைப்பு இங்கு அவசியமில்லாதது என்பதனை தெளிவாகப் புரிந்து கொண்டிருந்தான்.

திலாவிற்கு அந்தப் புரிதல் சற்றுக் குறைவு என்பதனையும் கடந்து போன நாள்கள் விஷ்வாவிற்கு எடுத்துரைந்திருந்தது.

ஆகையினால் திலாவாகவே இறங்கி வந்து, இதற்கு சமரசம் காண முயல்வாள் என நம்புவது நடவாத காரியம் என்பதனையும் அறிந்தேயிருந்தான் விஷ்வா.

ஒற்றைப் பிள்ளையாகவே இருவரும் வளர்ந்திருந்தாலும், திலா வளர்ந்த முறையில் சில விசயங்களை அறிந்து கொள்ளாமலேயே என்பதனைவிட, சமரசம் என்பதனைப் பற்றி அறியாமலேயே வளர்ந்திருந்தாள்.

கணவனிடமேயானாலும் வலியச்சென்று தானாகவே பேசுவதை இன்றுவரை பெண் விரும்பாத நிலையிலேயே இருந்தாள். அதில் திலாவிற்கு உடன்பாடு இல்லை.

விஷ்வா தனித்து வளர்ந்திருந்தாலும், வியாபாரம் என்று வந்தபின்பு பல விசயங்களைக் கற்றுக் கொண்டிருந்தான்.

சமூகம் சார்ந்த கொடுக்கல் வாங்கலில் நெளிவு, சுழிவு இல்லையெனில் நினைத்த காரியம் கைகூடுவது தாமதமாகும், அல்லது தட்டிப்போகும் என்பதனை அனுபவப்பூர்வமாக அறிந்து கொண்டிருந்தான்.

அதனையே வாழ்விலும் கடைபிடித்தால்தான் வாழ்வு சிறக்கும் என்பதை ஆட்சேபிக்க முடியாத அளவு ஆணித்தரமாக நம்பினான் விஷ்வா.

அதனாலேயே ஆரம்பம் முதல் திலா பிரிந்து செல்லும் எண்ணத்தைக் கூறியபோதும் அதை ஏற்றுக் கொள்ளாமல் தள்ளிப் போட்டிருந்தான்.

அதன்பிறகும் அதற்கான வாய்ப்பு அமைந்தபோது, அதை சரியான நேரத்தில், சரியான விதத்தில் பயன்படுத்திக் கொள்ள முனைந்தான்.

யாரொருத்தர் விட்டேற்றியாக இருந்தாலும், இருவரது எதிர்காலமும் பாழாகும் என்பதால், யாராவது ஒருத்தர் விட்டுக் கொடுத்து அனுசரித்துப் போனால் வாழ்வு வசமாகும் என்கிற நம்பிக்கையின் பேரில், தனது தேவைக்காகவும், மனைவியின் உடல்நலனில் அக்கறை கொண்டதாலும், தற்போது திலாவின் வயிற்றில் வளரும் தனது வாரிசின் நலன் கருதியும், இயல்பாக எதுவும் நடவாததுபோல திலாவிடம் பேச முயன்றான்.

ஆரம்பத்தில் எதோ நினைவுகளில் கணவனின் பேச்சைக் கவனிக்காதவள், பிறகு  தன்னிலை உணர்வு பெற்று, திரும்பி கணவனை நோக்கி என்னவெனப் பார்க்க,

“இன்னும் எத்தனை நாளுக்குத்தான் இப்டியே இருக்கப்போற திலா?  எதாவது எங்கிட்ட கேக்கணும்னா கேளு!  பதில் சொல்லுறேன்.  எதுவும் பேசாம இப்டி ஒரே வீட்டுக்குள்ள இன்னும் எத்தனை நாள் இருக்கறது? இருக்கற ரெண்டுபேரும் முகத்தைத் திருப்பிட்டு ஆளுக்கொரு பக்கமா இருந்தா நல்லாவா இருக்கு?”, விஷ்வா

“…”, கணவனிடம் பார்வையை வீசிவிட்டு பழையபடி திரும்பிக் கொண்டாள் திலா.

‘நாந்தான திருப்பிட்டு தெரியறேன்.  நீங்க எப்பவும் போலத்தான இருக்கீங்க’, என மனம் சொன்னாலும் திலா வெளியில் கூறவில்லை.

மனைவியின் அருகில் வந்தவன், “எதுவும் ஒரு முடிவுக்கு வரணும்னா, மனசுக்குள்ளயே போட்டு வச்சிட்டேயிருந்தா வருமா?”, என வினவ

தலையை மறுத்து ஆட்டியவள் வாயைத் திறந்து பதில் பேசவில்லை.

“எதுனாலும் எங்கிட்ட பேசு.  இப்டியே இருக்காத மிதிலா”, ஏறத்தாழ விஷ்வாவின் இயல்பைத் தொலைத்திருந்தது அவனது குரல்.

“இதைப்பத்தித்தான் பேசப் போறோம்ங்கிறதை, நீங்க முன்னமே எங்கிட்ட சொல்லியிருக்கலாம்!”, மெல்லிய குரலில் தன் மனதில் தோன்றியிருந்த ஆதங்கத்தை விஷ்வாவிடம் வெளிப்படுத்தினாள் திலா.

“சொல்லியிருக்கலாந்தான்…”, என விஷ்வா இழுக்க

‘அப்ப ஏன் எங்கிட்ட சொல்லலை?’, என்பதான பார்வையை விஷ்வாவை நோக்கி திலா வீச

“ஏன் நான் சொல்லலைனு கொஞ்சம் யோசிக்கலாமே!”, விஷ்வா பெண்ணைத் தூண்ட

மறுத்து யோசிக்க மாட்டேன் என தலையை அசைத்தவள், “உங்க நியாயம் உங்களுக்கு!”

“இதுல நாம்மட்டும் எங்கடீ தனியா வந்தேன்”, பாவம்போல நின்றுகொண்டு கேட்டான் விஷ்வா.

‘என்ன பேசுகிறான்?’, என்பதுபோல திலா விஷ்வாவை நோக்க

“கண்ணனால உனக்கு எந்த விதமான ஹராஸ்மெண்டோ இன்கன்வீனியன்டோ இருக்கறதா எங்கிட்ட நீ இதுவரை எங்கிட்ட சொன்னியா?”

‘தனக்கு அவ்வாறு தோன்றாதபோது எப்படிச் சொல்ல’, என்பதாக திலா நோக்க 

“உங்க குடும்பம், அவங்க குடும்பத்தோட ரொம்ப காலமா நல்ல பழக்கம்னு எதையும் நான் பெரிசா எடுத்ததில்லை! ஆனா…”, எனத் துவங்கி தோளைக் குலுக்கியவன்

“ஆனா எம்போக்குல என் வேலையப் பாத்திட்டு இருந்தப்போ… கண்ணனா வந்து வாலண்டியரா எதாவது உன்னைப் பத்தி சமீபகாலமா சொல்ல ஆரம்பிச்சான்” என்கிற விஷ்வாவின் பதிலைக் கேட்டு, வினா இல்லாமல், முகத்தில் கேள்வியோடு திலா நோக்க

“சொன்னதை ஆரம்பத்திலே சாதாரணமாத்தான் நான் கேட்டுக்கிட்டேன். அதையும் பெரிசா கண்டுக்கல.  ஆனா அதுவரை அப்டி எதையும் எங்கிட்ட கொண்டு வராதவன், திடீர்னு ஒரு நாள் மட்டும் பேசினா எனக்கு ஒன்னும் தோணியிருக்காது.  ஆனா தினசரி ஒரு முறையாவது உன்னைப் பத்தி எதையாவது வந்து சொல்லுவான்”, என்று சில விசயங்களை மட்டும் எடுத்துக் கூறினான் விஷ்வா.

“என் முன்னாடி, இல்லைனா… எங்கிட்ட உன்னைப் பத்திப் பேசும்போது மேடம்னு உன்னைச் சொல்றவன், நான் இல்லாத நேரத்தில உன்னைப் பேரு சொல்லிக் கூப்பிடுவான்.  அதெல்லாம் தெரிஞ்சாலும் நான் என்னைக்குமே தப்பா நினைச்சதில்லை”, என்று விஷ்வா விளக்க

அப்போதுதான் அதைக் கவனித்தாற்போல சற்றுநேரம் திலா அமைதி காத்தாள். 

“என் பார்வைக்கு கண்ணன் கொண்டு வந்த விசயத்தை ஆரம்பத்தில அதேமாதிரிதான் கண்டுக்கலை.  பட் அவன் கொண்டு வந்த விதம் மாறுபட்டதோட, வேற ஏதோ இன்டென்சனோடதான் பண்றாங்கற மாதிரியான அவனோட சில ஆக்டிவிட்டிஸ் என்னை யோசிக்க வச்சிது”, என தலையைக் கோதிக் கொண்டவன்,

“அதை அப்டியே விடுன்னு என் மனசு சொல்லலை.  அதனால என்னதான்னு பாக்கலாம்னு தோணுச்சு.  எடுத்தேன்.  எனக்கு தப்புன்னு தோணுனதை மட்டும் சால்வ் பண்ண நினைச்சு நானே ஹேண்டில் பண்ணிட்டேன்”, என தனது எண்ணத்தை மறையாது கூறினான்.

சற்று நேரம் கணவனின் வார்த்தைகளைக் கேட்டு அமைதியாக இருந்தவள், “எப்டி கண்ணன் எங்கிட்ட பேசின அந்த ரெக்கார்டட் வாய்ஸ் உங்களுக்கு கிடைச்சது?”, திலா வினவ

சற்றே தயங்கியவன், சொல்வதா வேண்டாமா என யோசித்து, பிறகு, அலைபேசி வாங்கித் தந்தபோதே அப்போதிருந்து தங்களுக்கிடையேயான இடைவெளியை சரிசெய்ய வேண்டி, விஷ்வா மேற்கொண்ட அனைத்தையும்  சுருக்கமாக பெண்ணின் முகம் பார்த்தபடியே உரைக்க

திலாவின் முகம் பலமாறுதலுக்குட்பட்டு அருவருப்பான பார்வையை விஷ்வாவின் மீது வீச,

“எதுக்குடீ என்னை அப்டிப் பாக்குற?”, விஷ்வா தனது பேச்சை இடையில் நிறுத்தி திலாவிடம் வினவ

“எப்டிப் பாத்தேன்?”, திலா பதிலுக்கு வினவ

“அருவருப்பா…”, விஷ்வ

மறுத்து குனிந்தபடியே தலையை அசைத்தவள், சற்று நேரம் அதே நிலையில் அமர்ந்திருக்க,

“ம்… நீதான் வாயத் தொறக்கவே வருசமாகுது.  அப்டியே தொறந்தும் வாழ ஆசைப்பட்டு எங்கிட்ட எதுவும் கேட்டதுமில்லை.  பேசினதுமில்லை.  எப்பப்பாரு டிவோர்ஸ்னுதான் கேப்ப.  அப்ப உன்னைப் பத்தி எதுவும் தெரியாம, குழம்பி நின்ன எனக்கு வேற வழி தெரியலை.  எதுக்கு என்னை வேணாங்குறங்கறதைத் தெரிஞ்சுக்கத்தான் அப்டியொரு ஏற்பாடு பண்ணேன்.  அப்டி செய்தும் ஒரு இன்ச் கூட நல்ல முன்னேற்றம் இல்ல.  ஆனாலும் ஏதோ சில நல்ல மனுசங்களோட ஆதரவில எல்லாத்தையும் சரி பண்ணா, இவன் இடையில சகடை மாதிரி வந்து எதாவது சொல்லிக்கிட்டே இருந்தான்.  நீயானா எதுவும் எங்கிட்ட சொல்லலை.  அப்ப நானும் பொறுத்துப் பார்த்து அதுக்குமேல என்னால பொறுமையா இருக்க முடியாம அந்த ரெக்கார்டட் வாய்சை எடுத்துக் கேட்டா, என்னையப்பத்தி உங்கிட்ட போட்டுக் குடுக்குது அந்த நாயி.  சரி அதுக்கு நம்ம பொண்டாட்டி என்ன சொல்றான்னு கேப்போமுன்னு கேட்டா உன்னோட பதில் எனக்கு ஃபேவராத்தான் இருந்தது”, என இதழ்கடையோரம் சிரிப்போடு கூறியவன்

“நமக்குள்ள எந்த பிரச்சனையும் இல்லைனாலும், இவன் இதை உங்கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இப்ப என்னனு யோசிச்சேன்!”

“ஏதோ நெருடல்!”

“இன்னொன்னு கண்ணனும் அமைதியா இருக்கல.  மேற்கொண்டு மேற்கொண்டு எங்கிட்ட எதையாது வந்து சொல்லி இம்சை பண்ணான்.  அதை அப்டியே விட மனசில்ல!  அதுக்கு ஒரு முடிவு கட்ட நினைச்சு எல்லாத்தையும் எவிடென்ஸ்ஸோட கலெக்ட் பண்ணேன்.  சும்மா சொன்னா யாரும் நம்புவாங்களா?”, என்க

மறுத்து தலையசைத்தவளைப் பார்த்தபடியே, “அதான் முக்கியமான சில நபர்களோட முன்ன கூப்பிட்டு பேசி கண்டிச்சு அனுப்பியாச்சு!  இனியும் எதையாது பண்ணா வார்னிங்கெல்லாம் கிடையாது! ஸ்ட்ரெய்ட்டா புழல்தான் அவனுக்கு”, என்று கோபமாக மொழிந்தவன்,

திலாவை நோக்கி, “வேற வழி தெரியல எனக்கு!”, என பெருமூச்சு ஒன்றை வெளிவிட்டான்.

ஆனாலும் பழைய இளக்கமின்றி யோசனையோடு இருந்தவளைப் பார்த்தவன்,  “இன்னும் மூஞ்சைத் தூக்கி வச்சிட்டு மூஞ்சிறு கணக்கா தெரியாத”, என்றவன் அதற்குமேல் அங்கு நிற்காமல், கைகளை மேலே தூக்கி நெட்டி முறித்ததோடு, வெளியில் கிளம்பியிருந்தான்.

ஆசுவாசப்படுத்த விஷ்வாவிற்கும் அவகாசம் தேவைப்பட்டது.

///

கணவன் தன்னிடம் பேசிச் சென்ற அனைத்தையும் மறு ஒளிபரப்புபோல மனதில் ஓடவிட்டு, அலசி ஆராய்ந்து, ஒரு வழியாக மனதைத் தேற்றி இயல்பு வாழ்க்கையில் ஈடுபட தன்னை ஆயத்தப்படுத்த முனைந்தாள் திலா.

விஷ்வா கூறியதில் அவனது நிலையைப் புரிந்து கொண்டாலும், நடந்த விசயங்கள் உண்டாக்கிய பாதிப்பு மனதின் ஓரத்தில் விட்டகலாமலேயே இருந்தது.

வெளியிலிருந்து வந்த விஷ்வா, எதுவும் நடவாததுபோல இரவு உணவை உண்டுவிட்டு சற்று நேரம் தொலைக்காட்சியின் முன் அமர்ந்துவிட்டான்.

கணவன் வந்ததும் விட்டுப்போன இன்னும் சில விசயங்களைப் பற்றிக் கேட்க வேண்டும் என்று எண்ணியவாறு இருந்தவள், விஷ்வா அறைக்கு வருமுன்னே, நீண்ட நாள் அலைப்புறுதல் போயிருக்க, அசதியில் உறங்கியிருந்தாள்.

திலா உறங்கியதும் அறைக்குள் உறங்க வந்தவன், மனைவியின் முகத்தினைக் கண்டு, ‘என்னதான் யோசிப்பாளோ’, என எண்ணியவாறு, உறங்குபவளுக்கு உபத்திரவம் தராத வகையில் அமைதியாகச் சென்று படுத்திருந்தான்.

அடுத்து வந்த நாளிலும் விஷ்வா திலாவை எதிர்பார்க்காமல் அலுவலகம் கிளம்பிச் சென்றிருந்தான்.

அதன்பிறகு எழுந்தவளுக்கு கணவன் வீட்டில் இல்லாதது ஏமாற்றமே.  நேரத்தைக் கண்டு தன்னை ஆசுவாசப்படுத்தினாள் திலா.

அன்று மாலை திரும்பியவனின் கையில் டீ கோப்பையைக் கையில் தராமல், அருகில் இருந்த டீபாயின் மேல் வைத்துவிட்டு நகர,

‘ஒரு வாரத்துக்குப்பின்ன இப்பதான் நம்ம பக்கமா வரா’ என எண்ணியவாறு மனைவி எடுத்து வரும் கோப்பையை கையில் வாங்க எதிர்பார்த்திருக்க, கோப்பையைத் தன்னிடம் தராமல் சென்றவளின் மீது கோபம் வர, “ஏன் கையில குடுக்க மாட்டியா?”, குமுறலோடு கேட்டான்.

கண்டு கொள்ளாமல் அவளது வழியில் திலா செல்ல

“ஏய் உன்னைத்தாண்டீ கேக்கறேன்”, என இரைய

நின்று விஷ்வாவை ஒரு பார்வை பார்த்தவள் எழுந்த சிரிப்பைக் விஷ்வாவிடம் காட்டாமல், “இப்டித்தான் நீங்க பண்ணதும் எனக்கு இருந்திருக்கும்”, என மெல்லிய குரலில் இயம்ப

“எல்லாந்தான் சொன்னேனே! இன்னும் எம்மேல எதுக்குடீ கோபம்?”, என்று விஷ்வா வார்த்தை வளர்க்க

“கைதான் ஸ்பைடர்மேனுக்கு மாதிரி நீட்டமாதான இருக்கு”, என அதே முறைப்போடு பேசியவாறு அங்கிருந்து திலா நகர

பெண்ணது கன்னக்கதுப்பைக் கண்டு கொண்டு இலகுவானவன், சரசமாக “அதுக்கு”, என்றவன்,

“வர வர ரொம்பத்தான் பண்றடீ”, என்றபடியே,

“நீ எதுக்கு எங்கிட்ட இன்னும் முகத்தைத் திருப்பிட்டு இருக்கங்கறதை சொல்லிட்டு திருப்பிக்கோ!  ஒன்னுஞ் சொல்லாம என்னனு நான் புரிஞ்சிக்க!”, என  டீபாயின் மேலிருந்த கப்பை கையில் எடுத்தபடியே மனைவியின் பின்னால் வர

“நான் ஒன்னும் முகத்தைத் திருப்பல!”, என பொய்க்கோபத்தோடு உரைத்தவள்

“உனக்கு அவனை அடிச்சதுலயோ, இல்லை அப்டி கூப்டு விசாரிச்சதுலயோ வருத்தமா?”, என மனதில் தோன்றியதை விஷ்வா வினவ

கணவனது வாயைப் பொத்தியதோடு, தலையை மறுத்து அசைத்து, “எங்கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லியிருந்தா நானும் அதுக்கு ஏத்தமாதிரி பேச என்னைத் தயார் செய்திட்டுருந்திருப்பேன்.  திடீர்னு இப்டினதும் என்ன பேச, என்ன நடக்குதுங்கறதை புரிஞ்சுக்கவே முடியலை!   ரொம்ப தடுமாறிட்டேன்.  அதைவிட இவ்வளவு விசயம் என்னைச் சுத்தி நடந்ததே தெரியாம இப்டி ஒன்னுத்துக்கும் லாயக்கில்லாதவளா தத்தியா இருந்திருக்கேனு நெனைச்சு எம்மேலயே எனக்கு வருத்தம்.  அவ்வளவுதான்!”, என கூறியவள்

“அவன் எங்கிட்ட வேற மாதிரி எண்ணத்துல பேசறான்னு என்னால கணிக்க முடியலைங்கறதைவிட, நான் கூப்பிட்ட அண்ணன் அப்டிங்கற வார்த்தைய மட்டுமே நம்பிப் பேசிட்டு இருந்திருக்கேன்.  ஆனா அவன் அப்டி என்னை நினைக்கலைபோல.  அதுவே தெரியாம லூசு மாதிரி இருந்திருக்கேன்”, பேசியவளின் கண்ணிலிருந்து தாரை தாரையாக நீர் வடிய 

“ஆரம்பத்திலே இருந்தே அவங்கூட அதிகமா பேசாம இருந்துட்டு, உங்களை மேரேஜ் பண்ணதுக்குபின்ன ஆஃபீஸ் விசயமாவோ, இல்லை நீங்க கால் அட்டெண்ட் பண்ணாதப்போ சில நேரத்தில அவனுக்கு நமக்கு தெரிஞ்சவங்கதானேனு கூப்பிட்டு பேசியிருக்கேன்.  அப்போலாம் அவசியமில்லாம அடுத்த ஆம்பிளைக்கிட்ட என்ன பேசனு தேவைக்கு மேல ஒரு வார்த்தை கூட பேசினதில்லை.  அப்டியிருந்த எனக்கு ஏன் இவ்வளவு பிரச்சனைனு நினைக்கும்போது ரொம்ப வருத்தமா இருக்கு”, என்றவளை தோளோடு அனைத்து தேற்ற முயன்றான் விஷ்வா.

நடந்ததை எண்ணி இனி வருந்த வேண்டாம் என மனைவியைத் தேற்றினான்.

“வயித்துல புள்ளைய வச்சிட்டு கண்டதையும் யோசிக்காத.  இனி எதுக்காகவும் அழக்கூடாது”, என மனைவியின் கண்ணீரைத் துடைத்தான்.

கணவனது செயலில் சற்றே மனம் இலேசானதுபோல உணர்ந்தாள் திலா.

இனி வரும் காலங்களில் தற்போதுபோல, எதையும் மனதோடு போட்டு உழட்டாமல், உடனே தன்னிடம் விசாரித்து, உடனுக்குடன் அதற்கான தீர்வைக் காணுமாறு கூறி மனைவியைத் தேற்றினான்.

தலையை ஆட்டி ஆமோதித்தவள் மனதில் தோன்றியதை கேட்காமல் சற்று ஆறப்போட்டாள்.

ஒன்றிரண்டு வார்த்தைகள் என்பது அடுத்தடுத்து சற்று கூட, இயல்பிற்கு மீண்டிருந்தனர் இருவரும்.

திலாவிற்கு உடல்நிலையில் முன்பைக் காட்டிலும் முன்னேற்றமிருந்தது.

கணவன் இருக்கும்போது மனதின் கேள்விகளைக் கேட்கத் தயங்குவதும், பிறகு கேட்டிருக்கலாமோ என தன்னையே நோவதுமாக அன்றைய நாள் சென்றிருந்தது திலாவிற்கு.

விஷ்வா வழமைபோல திலாவுடன் சீண்டலும், கிண்டலுமாக இயல்பிற்கு திரும்பியிருந்தான்.

படுக்கைக்கு வந்தவனிடம், “நீ என் மொபைலுக்கு வந்த கால்ஸ் எதுக்கு ரெக்கார்ட் பண்ண?  எம்மேல உனக்கு சந்தேகமா?”, என விஷ்வா அவ்வளவு விளக்கமாகக் கூறியிருந்தபோதும் சற்றே பதற்றத்தோடு விஷ்வாவிடம் வினவினாள் திலா.

‘என்னடா இது?  இன்னும் இது முடியலையா?’ என எண்ணியவன் கர்ம சிரத்தையோடு பதில் கூறத் தயாரானான்.

“நீயா எதுவும் எங்கிட்ட இங்க வந்ததில இருந்து எதுவும் கேட்டதில்லை.  சொன்னதில்லை.  உன் சார்பாவோ, என் சார்பாவோ பேசவும் நமக்குனு யாருமில்லை.  நீயும் எதையும் எங்கிட்ட சொல்லாம கிளிப்பிள்ளை மாதிரி டிவோர்ஸ் வேணுனு கேட்ட.  அப்ப என் நிலைமைல இருந்து யோசிச்சுப்பாரேன்.  வேற வழி தெரியலை எனக்கு.  உனக்கு குளோஸ் ஃபிரண்ட்ஸ் இல்லைனா ரிலேட்டிவ்ஸ்ட நம்ம ரிலேசன்ல இருக்கிற இஸ்யூஸ் இல்லைனா ஏதோ உன்னால அக்சப்ட் பண்ண முடியாத விசயத்தைப் பத்தி பேசினா, அதை நான் சரி செய்துக்க நினைச்சுத்தான் அப்டி செய்தேன்.  நான் செய்ததை எப்பவும் சரினு நியாயப்படுத்தலை.  ஆனா வேற வழி தெரியலை எனக்கு”, என்றவன் ‘இன்னும் என்ன?’ என்பதுபோல திலாவைப் பார்க்க

“நமக்குள்ள எல்லாம் சரியான பின்னாடியும் எதுக்கு எனக்கு வந்த கால்ஸை எல்லாம் ரெக்கார்ட் பண்ணறதை நீ நிறுத்தலை?”, என விஷ்வா கொடுத்த தைரியத்தில் அடுத்த கேள்வியைத் திலா கேட்க

“வச்ச பாம்மை எடுக்கபோயி நானே அதுல சிக்கிக்கிற வேணாமேன்னு இருந்துட்டேன்”, என விஷ்வா சிரிக்க

“பாம்மா…”, என திலா புரியாது கேட்க

“பின்ன… ஆரம்பத்தில செட் பண்ணி வச்சதை ரிமூவ் பண்றேன்னு சில ஆப்சன்சை எடுத்துவிட்டா உனக்கு டவுட் வரும்ல.  அப்டி வந்து, அதனால எதாவது பிரச்சனை வேணாமேன்னு அப்டியே விட்டாச்சு!  இன்னொன்னும் யோசிச்சேன்….”, என விஷ்வா இழுக்க

“என்ன?” திலா

“அப்டி ஒரு ஆப்சன் வச்சதே வேஸ்ட்டா போச்சேன்னு ரொம்ப ஃபீல் பண்ணேன்”, விஷ்வா சிரிக்க 

விஷ்வாவை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தவளிடம், “அப்புறந்தான் அதுவும் ஒரு நல்லதுக்குதான்னு தெரிஞ்சது!”, என மகிழ்ச்சியோடு விஷ்வா கூறினான்.

கண்ணன் தன்னோடு பேசியதைப் பற்றி தெரிந்து கொண்டதைத்தான் அவ்வாறு விஷ்வா கூறுகிறான் என்பது புரிந்து திலாவும் சிரித்தாள்.

தன்னைப் பார்த்து சிரித்தவாறு இருந்த திலாவின் மூக்கை விஷ்வா திருகிட, “ஸ் ஆஹ்… வலிக்குது”, என விஷ்வாவின் கையில் அடித்தவளை தடுத்தபடியே, “உம்மேல எனக்கு எப்பவும் சந்தேகம் வராது திலா”, என தனது நிலைப்பாட்டை தெளிவாக புரியும்படி எடுத்துக் கூறினான் விஷ்வா.

அனைத்தையும் கேட்டுக் கொண்டவள், “ஆனா எனக்கு இப்பவுமே வேறு ஒரு சந்தேகம் இருக்கு”, என்றவளை

அதிர்ச்சியோடு நோக்கியவன், ‘எல்லாம் என் நேரம்! இவளுக்கு மனசுல இருந்து சூறாவளி மாதிரி கிளம்பிவர சந்தேகத்தைத்தான் எம்மேல அள்ளி வீசுறா!’, என மனதோடு மருண்டவன்,

“என்னடீ இன்னும் சந்தேகம்னு அடுத்த குண்டைத் தூக்கிப் போடற?”, என வினவ

திலாவின் சந்தேகம் என்ன?

அடுத்த அத்தியாயத்தில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!