umuv2

Banner-62a78878

umuv2

அத்தியாயம் 2

மறுமுனையில் கைப்பேசியை வெறித்திருந்த வர்ஷா ‘பாவம் என்னால சம்பந்தமே இல்லாத ஒருத்தர் அழற மாதிரி செஞ்சுட்டேன்’ தன்னை தானே நொந்து கொண்டிருந்தாள்.

தொலைப்பேசியில் பேசியவன் சொன்னது போலவே, ‘அவர்களது சேவை மிகவும் திருப்தி அளிப்பதாகவும், கவுன்சிலரிடம் பேசியபின்பு தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டதாகவும்’ எழுதியவள், அவனைப் பாராட்டியும் இரண்டு வரிகள் எழுதிப் பத்திற்கு பத்து மதிப்பெண்கள் கொடுப்பதாக மெசேஜ் அனுப்பி வைத்தாள்.

அன்று நடந்த நிகழ்வுகள் அவள் மனதில் தீராத வடுவையும், வலியையும் கொடுத்திருந்தாலும் ஏனோ அந்த ஹெல்ப்லைனில் பேசியவனின் குரலோ வார்த்தைகளோ அவள் மனவருத்தத்தைத் துளி குறைத்திருந்தது.

***
கண்ணாடி முன்னின்று சட்டை ஸ்லீவை மடித்துவிட்டபடி தயாராகி கொண்டிருந்த ரிஷி விஷ்ணுவிடம், “இப்ப வரியா இல்லையா? எவ்வளோ நேரம்தான் குளிப்பே? லேட் ஆகும்னா கேப் புக் பண்ணி போயிக்கோ!” என்று கடுகடுக்க, 

“ப்ளீஸ் டா வந்துடறேன்!” குளியறையிலிருந்து விஷ்ணு கெஞ்ச,

“அஞ்சே நிமிஷத்துல நீ ப்ரேக்பாஸ்ட் சாப்பிட வரலன்னா நான் கிளம்பி போய்கிட்டே இருப்பேன்” என்றபடி, படுக்கையறையை விட்டு வெளியேறினான்.

தட்டில் உணவைப் பரிமாறிக்கொண்டவன் ஏனோ வர்ஷாவின் நினைவாகவே இருந்தான்.

‘ஒருவேள மனசு மாறி எதாவது… ச்சேச்சே அப்படிலாம் இருக்காது… இருந்தா?’

உடனே அவளுக்குக் கால் செய்ய, சில ரிங்குகள் சென்று தானே அணைந்தது. அதில் மறுபடி அவன் கற்பனை தாறுமாறாக ஓட நெஞ்சை தட்டிக்கொண்டவன், ‘ஒன்னும் இருக்காது, பாத்திருக்க மாட்டா…’

அவன் மொபைல் ஒலித்தது. தன் குரலில் இருந்த பதற்றத்தை அவனே உணரவில்லை. “வர்ஷா?”

“எஸ் நீங்க?”

“நான் நேத்து ராத்திரி பேசினேன், ரீ…” இரவு அவன் பெயரைச் சொல்லாமல் சுதாரித்தவன், “ஹெல்ப்லைன் கவுன்சிலர் பேசறேன்” என்றான்.

“சார் நீங்களா? சாரி நம்பர் புதுசா இருக்கவே கேட்டேன். எதாவது பிரச்சனையா சார்”

தன் தந்தை மொபைலிலிருந்து அழைத்திருந்ததை உணர்ந்து, ‘மடத்தனம் பண்ணிட்டியேடா’ நெற்றியில் தட்டிக் கொண்டவன்,

“நேத்து உங்க ரேட்டிங் பார்த்து சூப்பர்வைசர் ரொம்ப பாராட்டினார். தேங்க்ஸ்”

“பரவால்ல சார் நீங்க எனக்காக எவ்வளோ நேரம் பேசிருக்கீங்க, உங்களுக்காக இது கூடவா பண்ண மாட்டேன். எதுக்கு ஃபார்மாலிட்டி”

“ஏதோ சொல்ல தோனிச்சு. சரி நீங்க இப்போ கொஞ்சம் ரிலாக்ஸ்டா ஃபீல் பண்றீங்களா?”

“தெரியல சார். முடிஞ்சவரை யோசிக்காம இருக்க பாக்குறேன்” எந்தவொரு உணர்வுமின்றி ஒலித்தது அவள் குரல்.

அவளின் ஒட்டுதலின்மை அவனை வாட்டியது போலும். சில நொடிகள் மௌனம் நீடிக்க, அவளே பேசினாள். “ஆமா நான் ஹெல்ப்லைனுக்கு தானே கால் பண்ணேன், உங்களுக்கு எப்படி என் நம்பர் கெடைச்சுது?”

“நேத்துதான் நான் வேலைக்கு சேர்ந்தேன். நீங்க தான் என் முதல் காலர்! நீங்க கொடுத்த வாக்கை மறந்து ஏதாவது செஞ்சுகிட்டா அப்புறம் என் நிலைமை? அதான் ரிஸ்குன்னு தெரிஞ்சும் உங்க நம்பரை எடுத்து, ஃபோன் பண்றேன். நீங்க என்னடான்னா இப்படி சந்தேக படுறீங்க?” ஒருவாறாக சமாளித்தவன் அவளை எதிர் கேள்வி கேட்க,

“அய்யோ அப்படி இல்லை சார். ஜஸ்ட் கேட்டேன்”

“விடுங்க நல்லதுக்கே காலமில்லை”

“ப்ளீஸ் என்னை மன்னிச்சுடுங்க”

“பரவால்ல விடுங்க நல்லவனா இருக்கறது கூட தப்புதான் போல இருக்கு, ஒரு நிமிஷம் என்னை ஏதோ பொறுக்கின்னு நினைச்சுட்டீங்க தானே?”

“ஐயோ சத்தியமா அப்படியில்ல சார், ஜஸ்ட் தெரிஞ்சுக்க கேட்டேன்”

“விடுங்க”

“…”

“சரி. நான் ஆஃபீஸ் போகனும், இதான் என் நம்பர், எப்போ ஸ்ட்ரெஸ்டா  இருக்கோ அப்போ பேசனும்னு தோனிச்சுன்னா ஃபோன் செய்ங்க”

“ரொம்ப தாங்க்ஸ்”

“பை”

“பை” என்று காலை கட்செய்துவிட்டு நிமிர்ந்தவன் முன்னே முறைத்தபடி நின்றிருந்தான் விஷ்ணுவர்தன்.

“அந்த லவ் ஃபெய்லியர் பொண்ணுதானே?”

ஆமென்று தலையசைத்த ரிஷி, சாப்பிட துவங்க, விஷ்ணுவோ அவனை முறைத்துக்கொண்டே, “சரியில்ல” என்று தட்டை பார்க்க,

“சின்ன பொண்ணா தெரியுதுடா… ஏதாவது பைத்தியக்காரத்தனமா செஞ்சுக்கிட்டா? மனசு கேக்கல, மத்தபடி நீ நினைக்கிற மாதிரி தப்பா எதுவுமில்லை”

அவனை குறும்பு புன்னகையுடன் பார்த்த விஷ்ணு, சற்று உரக்கவே சிரிக்க, அதில் கடுப்பான ரிஷி, “என்னடா இப்ப?” என்று முறைக்க,

“உப்பு கம்மியா இருக்கு, சோ சட்னி சரியில்லன்னு சொன்னேன். அந்த பொண்ண பத்தி கேக்கவேயில்லயே” என்றவனின் நக்கல் புன்னகையில் பதற்றமடைந்த ரிஷி,

“அதெல்லாம் இல்ல, நான் ஏன் நினைக்கணும்?” என்று அவனை முறைக்க, “சரி விடு” என்ற விஷ்ணு புன்முறுவலுடன் சாப்பிட, சில நிமிடங்கள் மெளனமாக கழிந்தது.

“ஆமா நீ அந்த பொண்ணை பாத்தியா? எப்படி இருக்கா?” திடீரென்று  விஷ்ணு கேட்க,

“நான் எப்படிடா பாக்க முடியும்?” தட்டை எடுத்துக்கொண்டு சென்றவனின் பின்னால், சென்ற விஷ்ணு,

“ஃபோன் நம்பர் இருக்கு, வாட்ஸாப்ல டிபி இருக்குமே, பாத்திருப்பேன்னு நினைச்சேன்”

‘நேத்தே பாத்தேன், டிபில கார்ட்டூன் தான் இருக்குனு எப்படி சொல்ல?’
“அதெல்லாம் எனக்கு எதுக்குன்னு பாக்கலடா” என்றபடி கைகழுவி, புறப்பட,

“சரி விடு. எப்படியும் அவ உன்ன பாத்திருப்பா” என்றவன் தோளைகுலுக்க, எப்படி என்று கேட்கும் முன்னே அவசர அவசரமாக வாட்ஸாப்பை திறந்த ரிஷி கண்களை மூடிக்கொள்ள,

“இது பெரிப்பா நம்பர்தானே ஏன் இப்படி” சிரித்துவிட்ட விஷ்ணு, “பட் மிஸ்டர் அண்ணா அதுலயும் டிபில நீயும் நானும் தான் இருக்கோம்” என்றபடி கிளம்பினான்.

ஷூவை கையிலெடுத்து அதன் லேசை கழற்றிய விஷ்ணு, “எவன்டா இதெல்லாம் கண்டுபிடிச்சான்? சென்னை வெயிலுக்கு ஷூ சாக்ஸ்” முணுமுணுத்தபடி ஷூ அணிய,

வேகமாக மொபைலில் வாட்ஸாப் புகைப்படத்தை மாற்றி, தன் தந்தையின் புகைப்படத்தை வைத்த ரிஷி, தன்னை ஏளன பார்வை பார்த்துக்கொண்டிருந்த தம்பியின் நக்கல் சிரிப்பைக் கவனிக்கவில்லை.

தன் பைக்கை துடைத்து கொண்டிருந்த ரிஷியிடம், “இந்த நம்பரை அந்தப் பொண்ணுகிட்ட கொடுத்திருக்கியே அப்போ பெரிப்பா கேட்டா என்ன பண்ணுவ?”

“அதெல்லாம் புதுசா வாங்கிக்கொடுத்துக்கலாம்” என்றபடி பைக்கில் அமர்ந்தான் ரிஷி, அவன் பின்னே அமர்ந்த விஷ்ணு, 

“இது டூமச்! அந்த பெண்ணுக்காக இவ்வளோ செய்யனுமா?” 

“புது சிம் தானேடா, வேற வாங்கி இந்த ஃபோன்ல போட்டு கொடுத்தனுப்பிட்டா போகுது. ஆமா உன் பைக் எப்ப வரும்?” பேச்சை மாற்றினான்.

“அதை பைக்கை எடுத்துட்டு வர ட்ரெயின்கிட்ட தானே கேட்கணும்?” தோளைக் குலுக்கினான் விஷ்ணு.

“விளையாடாம ஃபாலோ பண்ணு” என்றபடி பைக்கை உயிர்பித்தான் ரிஷி.

***

வர்ஷா முடிந்தவரை தன்னை இயல்பாகக் காட்டிக்கொள்ள முயன்று கொண்டிருந்தாள். அலுவலகத்தில் தன் வேலைகளை செய்து கொண்டிருந்தவள் கவனத்தை சிதைத்தது ஆதேஷின் குரல்.

நிமிர்ந்து பார்க்கத் தூண்டிய மனதை கட்டுப்படுத்திக் கொண்டவள், கைபேசியில் மதுவிற்கு மெசேஜ் செய்ய, அவளோ ஜோக்ஸ் அனுப்ப, சிரித்துவிட்ட வர்ஷா, தனக்கு பக்கத்துக்கு சீட்டிலிருக்கும் பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்த அதேஷின் மீதே கவனம் செல்வதை உணர்ந்து, எழுந்து செல்ல எத்தனிக்க, அவளை வழிமறித்த ஆதேஷ்,

“ஒரு நிமிஷம்” என்றுவிட்டு முன்னே நடக்க, குழப்பத்துடன் அவனைப் பின்தொடர்ந்தாள்.

அலுவகத்தை விட்டு வெளியே சென்றவன், அந்தக் காரிடாரின் ஓரத்திலிருந்த லவுஞ்சில் அமர்ந்துகொண்டான், மெளனமாக நின்றபடி அவனையே பார்த்திருந்தவளை முறைத்தவன்,

“நாம பிரேக்கப் பண்ணதை ஊரெல்லாம் சொல்லிட்டு சுத்துறியா?”

“இல்ல…”

“பொய் சொல்லாத!” அவர்கள் இருந்த இடத்தையும் பொருட்படுத்தாது குரலை உயர்த்தி, “நான் உன்ன வேண்டாம்னு சொன்னதை அக்செப்ட் பண்ணாம, நான் விட்டுப்போனதா சொல்லி அனுதாபத்த சம்பாதிக்க பாக்குறேல்ல?”

“இல்ல. நான் யார்கிட்டயுமே ஷேர் பண்ணல, சொல்லப்போனா நாம…டேட் பண்ணதே யாருக்கும் தெரியாது”  

“இதெல்லாம் நம்ப நான் ஒன்னும் முட்டாளில்ல, நீ சொல்லாம அவன் எப்படி என்னை வந்து கேட்டான்?” ஆதேஷ் கத்த,

“யார் கேட்டா?”

“அதெல்லாம் உனக்கெதுக்கு, மறுபடி வேறேதாவது திருட்டுத்தனம் பண்ணவா?”

“ப்ளீஸ் ட்ரஸ்ட் மீ” 

“என் லெவெலுக்கு உன்கூட நான் பழகிருக்கவே கூடாது!” வேகமாக எழுந்து நின்றான்.

“ஆதேஷ் ப்ளீஸ் நான் சொல்றத…”

“ஜஸ்ட் ஷட்அப்! நீ பேசறத கேக்க நான் ஒன்னும் கேனையன் இல்ல!  இப்போ எனக்கு ப்ரோமோஷன் வந்ததால மறுபடி என்னை வளைச்சுப்போட்டா. கம்பெனில ஈஸியா முன்னேறலாம்னு கீழ்த்தனமா யோசிக்கிற. அதானே?” அவன் குற்றம் சாட்ட, கண்கள் கலங்கியவள் வார்த்தைகள் வராமல் மறுப்பாகத் தலையசைத்தாள்.

“உன்கூட ரெண்டு வருஷம் ரிலேஷஷிப்ல இருந்தேன்னு யோசிச்சாலே…ச்சே வெறுப்பா இருக்கு. இதுல ரொம்ப நல்லவ மாதிரி கல்யாணம் வரை டிஸ்டன்ஸ் மெயின்டெயின் பண்ணுன்னு எப்போவும் ஒரு நடிப்பு வேற”

“கண்டிப்பா நான் எதுவுமே பண்ணல நம்புங்க”

“ஒரு வார்த்த பேசாத யூ ***!” கேவலமான சொல்லால் அவளை ஏசி, வார்த்தைகளால் அவன் அனலை உமிழ, மனம் மொத்தமும் நொறுங்குவதை உணர்ந்து கண்கள் கலங்க தலை குனிந்துகொண்டவள் ஆதேஷின் முகத்தில் ஒரு நொடி தோன்றிமறைந்த புன்னகையை கவனிக்க தவறினாள்.

சற்றுமுன் வர்ஷாவின் டீம் மேட்டிடம் வேலை நிமித்தம் பேசிவந்த ஆதேஷின் கண்ணில் கைபேசியில் எதையோ பார்த்துச் சிரித்த வர்ஷாவின் புன்னகை, தனலை அள்ளிக்கொட்டியது.

அவனைப் பிரியமுடியாமல் தவித்துத் தன்னை ஏற்றுக்கொள்ளும் படி வந்து மன்றாடுவாளென்று நினைத்தவனுக்கு, அவர்கள் பிரிந்து ஒருவாரமாகியும் வர்ஷா அவனை எவ்விதத்திலும் தொடர்புகொள்ள முயற்சிக்காதது அவனுக்கு பெரிய ஏமாற்றமே.

அவள் புன்னகையை குலைக்கவே காரணமின்றி பெண்ணவளை வார்த்தைகளால் வதைத்து, அவள் கண்ணீரில் திருப்தி அடைந்தவன் வெற்றி புன்னகையுடன் தன் இருக்கைக்குத் திரும்பினான்.

லவுஞ்சில் சிலர் தன்னை உற்றுபார்பதைபோல் உணர்ந்தவள், தன் கண்ணீரை மறைக்க அருகேயிருந்த வாஷ்ரூமிற்குள் புகுந்துகொண்டாள்.

ஒருவாரம் போராடி கொஞ்சமாகத் தேறியவளின் மனம் இன்று மீண்டும் நொறுங்க, சத்தம் போட்டு அழக்கூட முடியாமல் தவித்தவள் சில நிமிடங்கள் ஆசுவாசமடையும்வரை அங்கேயே ஒடுங்கினாள்.

ரிஷிநந்தன் தன் அலுவலகத்தில் நாற்காலியில் அமர்ந்தபடி பேனாவால் நெற்றியை தட்டி கொண்டிருந்தான். கைபேசி ஒலிக்க அதை எடுத்தவன்,

“ஸ்ஸ் சாரி டா இதோ டென் மினிட்ஸ் அங்க இருப்பேன்” தன் லேப்டாப் பையை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினான்.

வெளியே குழுவாக அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்த தன் பணியாளர்களிடம் “கைஸ் நீங்க யாருமே இன்னும் கிளம்பலையா? எனி ப்ராப்ளம் சஞ்சய்?” அவன் பார்வை குறிப்பாக ஒருவன் மேல் விழ,

சஞ்சையென்று அழைக்கப் பட்டவன், “இல்ல கொஞ்சம் லாஸ்ட் மினிட் டச்சப் பண்ணிகிட்டு இருக்கோம். நாளைக்கு லைவ் போகனுமே” என்று சொல்ல, மற்றவன் ஒருவன்,

“நாளைக்கி நல்லபடியா லைவ் போனா, டீம் அவுட்டிங் போலாம்னு சொன்னீங்களே, எங்க போறோம் நந்தா சார்?” ஆர்வமாகக் கேட்க, மென்மையாகப் புன்னகைத்த ரிஷி,

“நீங்களே எங்க போகனுமோ டிசைட் பண்ணுங்க, வீக்கென்ட் போகலாம்” அனைவரையும் பார்த்து சொன்னவன், “எனிவேஸ் சீக்கிரம் கிளம்புங்க” என்று மெல்லிய தலையசைப்புடன் அலுவலகத்தை விட்டு கிளம்பினான்.

ரிஷிநந்தன் சில வருடங்கள் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு இப்பொழுது சென்னையிலுள்ள ஐடிபார்க் ஒன்றில் சிறிய மென்பொருள் நிறுவனமொன்றை மூன்று வருடங்களாக நடத்தி வருகிறான்.

ரிஷிநந்தனின் சித்தப்பா மகனான விஷ்ணுவர்தன் படிப்பை முடித்துவிட்டு, அதே ஐடி தொழில் வளாகத்தில் வேறொரு நிறுவனத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருக்கிறான்.

விஷ்ணு வேலை செய்யும் அலுவலகத்தின் முன்னே தன் பைக்கை நிறுத்திய ரிஷி, விஷ்ணுவின் வருகைக்காகக் காத்திருந்தான். சிலநிமிடங்கள் கழித்து, மொபைலை நோண்டியபடி வந்த விஷ்ணுவை முறைத்தவன்,

“கீழ வந்து நிக்குறேன்ன?”

“சாரி டா, கிளம்பும்போது தான் அந்த டிஎல் வந்து ஒரு மெயில் அனுப்பிட்டு கிளம்புன்னு பிடிச்சுக்கிட்டான்”

“இவ்வளோ நேரம் என்ன பண்ணானாம்?” முறைத்தபடி ஹெல்மெட்டை அணிந்துகொண்டான் ரிஷி.

“விடு விடு உன்னமாதிரி எல்லாரும் கூல் பாஸா இருப்பாங்களா?” தானும் ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டு பைக்கில் ஏறிக்கொண்டான் விஷ்ணு.

“இப்போவும் ஒன்னும் ஆகல, வந்து நம்ம கம்பெனில சேர்ந்துக்கோ டா”

“எத்தனை தடவ சொல்றது, சொந்தக்காரன்னு சொல்லிக்கிட்டு வந்து ஒட்டிக்க மனசு வரல. கொஞ்சம் டைம்தா இன்னும் நல்லா எக்ஸ்பீரியன்ஸ் ஆகினதும் நீயே வேணாம்னாலும், நானா வந்து சேர்ந்துக்கிறேன்” ரிஷியின் தோளில் கைவைத்து சொன்னான்.

“போடா நீயும் உன் கொள்கையும், எப்போ மனசு மாறினாலும் ஒழுங்கா வந்து சேறு அவ்வளோதான்”

“பாக்கலாம்” என்றபடி விஷ்ணு எங்கோ வெறிக்க, பதிலேதும் சொல்லாமல் பைக்கை கிளப்பிக்கொண்டு புறப்பட்டான் ரிஷி.

தங்கள் ஃபிளாட்டிற்கு செல்லும் வழியில் ஏரியா மார்க்கெட்டில் காய்கறிகளை வாங்கிகொண்டவர்கள் வீடு சேரும்பொழுது நேரம் ஒன்பதை கடந்திருந்தது.

சமையலை முடித்துக்கொண்டு தட்டுடன் டிவியின் முன் அமர்ந்த ரிஷி, சாப்பிடாமல் தட்டுடன் ஆர்வமாக டிவியை பார்த்தபடி இருந்த விஷ்ணுவிடம்,

‘மேட்ச் வைடா, ஹைலைட்ஸ் இருக்கும்”

“ச்ச் இன்னிக்கி எவ்வளோ முக்கியமான எபிசோட் தெரியுமா? ராகினியோட சாப்பாட்ல விஷம் வச்சுருக்காங்க! அதை சாப்படறாளா இல்லையான்னு பாக்கணும்”

கண்களை மூடிக்கொண்ட ரிஷி, “அவ அந்த சாப்பாட்டையே இன்னும் ஒருவாரம் பாத்துகிட்டு இருப்பா, இனி அவ சாப்பிட வேற ரெண்டு வாரமாகும், ஒவ்வொரு பருக்கையா ஜூம் போக வேண்டாமா?” கேலியாகச் சொன்னவன்,

“அவ தின்றா தின்னாம போறா , நீ ஏன்டா சாப்பிடாம இருக்க? கரகரன்னு தோசை கேட்ட அது இப்போ துணி மாதிரி இருக்கு, போத்திக்கிட்டு படுக்கலாம்”

“உனக்கிதெல்லாம் புரியாது, நீயும் என்கூட டெய்லி பாரு அப்போ தெரியும் எவ்வளோ இன்ட்ரெஸ்டிங்கா போகுதுன்னு” டிவியிலிருந்து கண்களை விலக்காமல் விஷ்ணு பெருமையாகச் சொல்ல,

“மூனு மாசத்துக்கு அப்பறம் பாத்தாலும் கதை அங்கேயே தான் இருக்கும், இதுக்கேன் டெய்லி பாக்கற? கடுப்படிக்காம சீக்கிரம் சாப்பிடு”

ரிஷியின் பேச்சைக் காதில் போட்டுக்கொள்ளாத விஷ்ணு, “ஐயோ! கைல சாப்பாட எடுத்துட்டா” என்று கத்த,

“தட்டுல போட்ட சாப்பாட கைல எடுக்க ரெண்டு நாளா? இவ எப்போ சாப்பிட்டு எப்போ விஷம் வேலை செஞ்சு ஸ்ஸ்ஸ்ஸ்” மறுப்பாக தலையசைத்தபடி ரிஷி சாப்பிட,

“விஷம்னதும் தோணுது, அந்த லவ் ஃபெயிலியர் பொண்ணு என்னென்னமோ ரெடி பண்ணான்னு சொன்னியே விஷத்தை ஏன் விட்டுவச்சாளாம்?”

“ம்ம் கசக்குமா இருக்கும்” சிரித்துக்கொண்டவன், வர்ஷாவை பற்றிய யோசனையில் மூழ்கினான்.

இரவு தூக்கம் பிடிக்காமல் தவித்திருந்தாள் வர்ஷா. செய்யாத தவறுக்கு குற்றம் சாட்டி ஏசிய ஆதேஷின் வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அவளை வதைத்தது. கண்களை இருக்க மூடிகொண்டவள் மனதில்,

‘எப்போ வேணும்னாலும் கால் பண்ணுங்க’ அன்று தற்கொலை எண்ணத்தை ஒத்திப்போடவைத்தவனின் வார்த்தைகள் நினைவிற்கு வர,

‘ஏஞ்சல்’ என்று சேமித்து வைத்திருந்தவனின் எண்ணிற்கு கால் செய்தாள். நீண்ட ரிங்கிற்கு பிறகு அழைப்பு தானாக துண்டிக்கப்பட, மீண்டும் முயற்சிக்க தயங்கியபடி அவளிருக்க, அவனே அழைத்தான்.

“எஸ் வர்ஷா என்ன இந்த நேரத்துல? எல்லாம் ஓகேவா?” அவன் குரல் கேட்டதும் ஏதோ நன்கு பரிச்சயமான நண்பனைப்போல் தோன்ற பொங்கிவந்த அழுகையை கட்டுப்படுத்தமுடியாமல்  அழத்துவங்கியவள், மெதுவாக நடந்ததை அவனுக்கு சொல்ல,

“நீங்க தான் எதுவுமே செய்யலையே ஏன் ஃபீல் பண்ணறீங்க? ப்ளீஸ் வர்ஷா…இதோ பாருங்க….” அவளை பாடுபட்டு சமாதானம் செய்தவன்,

“அவன் அப்படி கெட்டவார்த்தை சொன்னதுக்கு நீங்க அறையிற அறையில அவன் காது கொய்ன்னு போயிருக்கணும்! அத விட்டுட்டு இப்படி அழுதுகிட்டு இருக்குறது…சுத்தமா சகிக்கல”

“எப்படி முடியும், அவன வெறுக்க முடியலையே…லவ்…” அவள் தேம்ப,

“லவ்” சிரித்தவன் “சத்தியமா இதெல்லாம் வேலையத்த வேலை! வொர்த்லெஸ்!”

“வொர்த்தில்லையா?” ஏனோ அவன் சொன்னது அவளுள் கோவத்தைத்தூண்ட,

“கண்டிப்பா இல்ல! அதுவும் நம்ம நிம்மதியை குலைக்கும்னா சத்தியமா வொர்த் இல்ல. காதல் ஒரு உணர்வுதான் ஆனா அதுக்கு இவ்ளோ முக்கியத்துவம் கொடுத்து, எப்போவும் மனசுக்குள்ள புழுங்கி, மை காட்! இதெல்லாம் பைத்தியக்காரத்தனம்”

“லவ் பண்ணாத்தான் உங்களுக்கு புரியும்” அவள் பழித்தாள்.

மறுமுனையில் அவன் சிரிப்பு சத்தம் மட்டுமே கேட்க, வர்ஷா கோவமாக கண்களை மூடிக்கொள்ள, அவனோ சிரிப்பு மறையாத குரலில், “நான் உங்களையே வெளில வரச்சொல்றேன் நீங்க என்னையே அந்த பாழுங்கிணத்துல குதிக்க சொல்றீ ங்க?”

“உங்களுக்கெல்லாம்…வேணாம் விடுங்க கோவம் வருது, வேற எதாவது பேசலாம் இல்லைனா ஃபோன் வைக்கிறேன்” அவள் கடுகடுத்தாள்.

சிலநொடிகள் மெளனமாக இருந்தவன், உணர்ச்சி துடைத்த குரலில், “சொல்லுங்க வேற என்ன பேசணும்?”

“எனக்கு வண்டி வாங்கணும்” கோவமாக சொல்ல

“வாங்குங்க”

“என்ன மாடல் வாங்கலாம்னு தெரியல”

மெல்லிய சிரிப்பு சத்தம் கேட்க, ஏனோ அவள் முகத்திலும் புன்னகை அரும்பியது.

“பட்ஜெட் சொல்லுங்க மாடல்ஸ் பார்த்து சொல்றேன்” என்றவனிடம் அவள் தேவைகளை சொல்ல, சில இருசக்கர வாகன மாடல்களை அவன் சொல்ல குறித்துக்கொண்டாள்.

“நாளைக்கு தங்கையோட போயி பாக்கறேன்”

“பாத்தா போதாது, டெஸ்ட் ட்ரைவ் பண்ணிபாருங்க”

“கண்டிப்பா….”என்றவள், “தேங்க்ஸ் சார், மனசுக்கு என்னமோ கொஞ்சம் பெட்டரா இருக்கு” மனதாராவே சொன்னாள். 

“வெரி குட், இதே மூடோட தூங்குங்க. நாளைக்கு அவன் பேச வந்தாலோ கண்ல பட்டாலோ, விஷ ஜந்துவ பாக்குறமாதிரி பாருங்க. உங்க வேலையை பாத்துகிட்டு அவனை அவாய்ட் பண்ணுங்க.

பேசி சண்டை போடுறத விட பேசாம இருக்கறது தான் சரிவரும், அதுவும் உங்களை மாறி மனசு இருக்கவங்களுக்கு. நான் சொல்றது புரியுதா?”

“ம்ம் முயற்சி பண்றேன்”

“குட்! தூங்குங்க குட்நைட்”

“சார் ஒரு நிமிஷம்”

“எஸ்”

“உங்க பேரு என்னன்னு… நம்பர் சேவ் பண்ணிவச்சுக்க “ அவள் தயங்க

“ரிஷி”

‘ரிஷி’ தனக்குள்ளே சொல்லிப்பார்த்தவள், “தேங்க்ஸ் குட்நைட்”

அழைப்பை துண்டித்த கையோடு அவன் மொபைல் எண்ணிற்கு நேராக ரிஷி(ஏஞ்சல்) என்று மாற்றி பதிவேற்றி கொண்டாள்.

மறுமுனையில் பால்கனியில் ஊஞ்சல் நாற்காலியில் விஷ்ணுவுடன் அமர்ந்திருந்தான் ரிஷி.

“எனக்கென்னமோ அந்த பய வேணும்னே சாக்கு தேடி வர்ஷாவ அழ வச்சுருக்கான்னு தோணுது”

“ம்ம்”

“லவ் பண்றவங்க எல்லாரும் லூசா இருப்பாங்க போல இருக்கு”

“ம்ம்ம்”

“சுயமரியாதை கூடவா இல்லாம போகும்?”

“ம்ம்”

“அந்த மாறி ஆளுக்காக சாக நெனைச்ச இவ தான் பெரிய முட்டாள்”

“ம்ம்ம்”

“என்ன ம்ம்…” என்று திரும்பிய ரிஷியை மொபைலில் கேம் ஆடிக்கொண்டிட்ருந்த விஷ்ணு கவனிக்காமல், சீரான இடைவெளியில் “ம்ம்” “ம்ம்ம்” என்று சொல்லிகொண்டிருக்க, அவன் கையிலிருந்த மொபைலை பிடுங்கிய ரிஷி,

“நான் பேசிக்கிட்டு இருக்கேன் நீ கவனிக்கலன்னாவது சொல்லலாம்ல?”

“புதுசா ஏதாவது சொன்னா பரவால்ல, போன் வச்சதிலிருந்து இதையே சொன்னா போர் அடிக்குதுல்ல” மொபைலை மீண்டும் பிடிங்கிக்கொண்டான்.

“இது போரா? வர்ஷாவோட லைஃப் டா” ரிஷி புருவம் சுருக்க,

“இருக்கட்டும்டா!  நமக்கென்ன வந்தது? உதவி கேட்டா அட்வைஸ்தான் பண்ணமுடியும், அவ வாழ்க்கையை சரி பண்ண நம்மளால முடியுமா?”

வேகமாக எழுந்த ரிஷி பால்கனி கம்பியை பிடித்துக்கொண்டு வானை வெறித்தபடி நின்றான்.

“அந்த பொண்ணு மேல உனக்கென்ன இன்ட்ரெஸ்ட்? அட்ரேக்ஷனா?”

ஒரு நொடி திரும்பி விஷ்ணுவை முறைத்தவன், மறுப்பாக தலையசைத்துவிட்டு தன் அறைக்கு செல்ல, பின்னே சென்ற ரிஷி, 

“என்னவோ ஒன்னு” என்றபடி டிவியின் முன் அமர்ந்த மேஜையிலிருந்த ரிஷியின் மொபைலை எடுத்துப்பார்த்தான்.

“இதான் அந்த வர்ஷாவோட நம்பரா?” என்று கத்தி கேட்க, வேகமாக வந்த ரிஷி விஷ்ணுவின் கையிலிருந்த மொபைலை பிடுங்கிக்கொண்டு மீண்டும் தன் அறைக்குள் செல்ல,

விஷ்ணு “சரியில்ல” என்று கேலி புன்னகையுடன் சேனல்களை மாற்ற, மீண்டும் அறையிலிருந்து வெளிவந்த ரிஷி, “என்னடா சரி இல்ல?” என்று முறைக்க,

“எவ்ளோ நாள் உன் ஃபோனை எடுத்துருப்பேன் அப்போல்லாம் இப்படி பிடிங்கினியா?”

“அலாரம் வைக்க” மொபைலை ஷார்ட்ஸ் பேக்கெட்டில் வைத்துக்கொண்டான்.

“இதுவும் நம்புற மாதிரி இல்ல”

“டேய்”

“உனக்கு அலாரம் எதுக்கு? நீதான் சூரியன் வரதுக்குள்ளயே ஜாகிங் போறேன்னு தெருவுல இருக்குற நாயெல்லாம் எழுப்பி கொடுமைப்படுத்துற ஆளாச்சே”

“உன்கிட்ட வந்து கம்ப்லைன்ட்  பண்ணிச்சுங்களாக்கும்?”

“என்னிக்கோ ஒருநாள் உன்மேல இருக்குற கோவத்துல என்னை கடிச்சுவைக்க போகுதுங்க”

“போடா போய் தூங்கு” என்ற ரிஷி சோஃபா குஷனை எறிய, அதை கேட்ச் பிடித்த விஷ்ணு,

“ரொம்ப நாள் ஆச்சுடா”

என்னவென்று ரிஷி புருவம் உயர்த்த,

“ஒரு ஃபோன் பண்ணி எப்படி இருக்கானு கேளுடா” 

“யாரை?”

“யாழிஸ்…”

முகம் இறுகிய ரிஷி, “குட்நைட்” என்றுவிட்டு தன் அறைக்கு சென்றுவிட,

“எவ்ளோ நாள் இப்படி இருக்க போற, கொஞ்சம் பிடிவாதத்தை கொறச்சுக்க பாருடா” விஷ்ணு சொன்னது காற்றோடு கரைந்தது.

தன் அறைக்குள் புகுந்துகொண்டவன், கைபேசியில் சேமித்துவைத்திருந்த சில புகைப்படங்களை புரட்டினான்.

தன்னருகில் கழுத்தில் மாலையுடன் சிரித்தபடி நின்றிருந்தாள் அவள் யாழினி. “ப்ளடி லவ்” என்றவன் கைபேசியை மேஜையில் எறிந்துவிட்டு படுத்து கொண்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!