Jeevan 12

12
அலர்மேல்மங்கை இறந்து ஒரு மாதம் ஆகவும் உறவினர்களை அழைத்து திதி கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அனைத்து ஏற்பாடுகளையும் அர்ஜுனும் ஸ்ரீராமும் இணைந்து செய்ய, உறவினர்களை ஃபோனில் அழைத்திருந்தார் சரஸ்வதி.

திதி கொடுக்கும் நாளன்று அதிகாலையிலேயே தேனியில் இருந்து வந்து இறங்கினார் அலர்மேல்மங்கைக்கு ஒன்றுவிட்ட தங்கையான தேவகி. தன் அக்காவின் இறப்புக்கு வந்திருந்தவரின் உடல்நலம் சற்று பாதிக்கப்பட்டிருந்ததால் உடனே கிளம்பியிருந்தவர், இம்முறை இரண்டு நாட்களுக்கு தங்கிச் செல்லும் முடிவோடு தன் மருமகளுடன் வந்திருந்தார்.

உறவினர்களிடம் மரியாதையோடு பாசமாகப் பேசி அன்போடு நடந்து கொள்ளும் அர்ஜுனை அனைவருக்குமே பிடிக்கும்.

அலர்மேல்மங்கையின் வளர்ப்பு அப்படி என்று எண்ணிக் கொள்வர்.

பேரனுக்கு நடந்த திடீர் கல்யாணம் அவரை வருத்தியிருந்தாலும் தன் அக்கா முன்னின்று நடத்தி வைத்திருந்ததால் எதுவும் கூறவில்லை அவர். அதுவுமில்லாமல் கோமதியின் மகள்தான் அர்ஜுன் மனைவி என்பதும் அவரை சமாதானப் படுத்தியிருந்தது.

திதி கொடுக்க வரும் போதாவது பேரன் மற்றும் பேரன் மனைவியுடன் இரண்டு நாட்கள் தங்கிச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்து வந்திருந்தார்.

தேனீயின் சுறுசுறுப்போடு சரஸ்வதியுடன் இணைந்து பூஜைக்குத் தேவையானவற்றை எடுத்து வைத்துக் கொண்டிருக்கும் சுபத்ராவை வெகுவாக ரசித்துக் கொண்டிருந்தவருக்கு, வந்ததில் இருந்து கவனித்ததில் அர்ஜுனும் சுபத்ராவும் புது மணமக்களுக்கு உண்டான நெருக்கத்தோடு இருக்கவில்லையோ என்ற சந்தேகம் உண்டாயிற்று.

ஸ்வேதா அன்று கேவலமாகப் பேசியதில் இருந்து அர்ஜுனுடன் சாதாரணமாகப் பேசுவதைக் கூட தவிர்த்திருந்தாள் சுபத்ரா. அவன் இருக்குமிடத்தில் கவனமாக தான் இல்லாதவாறு பார்த்துக் கொண்டாள். அவனிடம் ஏதாவது கேட்க வேண்டியிருந்தால்கூட சரஸ்வதியைதான் நாடினாள்.

இதை வெகுநேரமாக கவனித்து வந்த தேவகி, பூஜையறையில் பூக்களை சுவாமி படங்களுக்கு வைத்து விட்டு வெளியே வந்த சுபத்ராவிடம், “அர்ஜுன் எங்கம்மா போயிருக்கான்?”

“தெரியல பாட்டி.. இருங்க அத்தைகிட்ட கேட்கறேன்.” என்றவளைப் பார்த்து நொடித்துக் கொண்டவர்.

“இது என்னாடியம்மா அதிசயமா இருக்கு. கட்ன புருஷன் எங்க போயிருக்கான்னு பொண்டாட்டி உனக்குத் தெரியல. அவன் பெரியம்மாவுக்குத் தெரிஞ்சிருக்கு.”
பதில் கூற முடியாமல் சங்கடமாக நின்றிருந்தவளிடம், “அவனுக்கு ஃபோனைப் போட்டு வரும் போது ஜாதிமல்லி வாங்கி வரச் சொல்லு.

எங்க அக்காவுக்கு ஜாதிமல்லின்னா இஷ்டம் வச்சு படைக்கனும்.”
சரி என்று தலையசைத்தபடி உள்ளே செல்ல முயன்றவளைத் தடுத்து,

“எங்க உள்ள போற? இங்கயே என் முன்னாடி நின்னு போட்டுச் சொல்லு.”
பெரியவரின் வார்த்தையை தட்ட முடியாமல் தனது அலைபேசியில் அர்ஜுனுடைய நம்பருக்கு ஃபோன் செய்தாள். அவள் மில்லுக்கு வேலைக்கு வந்த போது அவளைத் தொடர்பு கொள்ளத் தேவைப்படும் என்று அர்ஜுன்தான் வாங்கித் தந்திருந்தான்.

இதுவரை அவளாக அவனுக்கு அழைத்துப் பேசியதே இல்லை. முதல் முறை அவனுக்கு அழைத்துப் பேசுவதால் தன்னைப் போல தயக்கம் வந்து ஒட்டிக் கொண்டது.

அவன் அழைப்பை ஏற்றதும் மெல்லிய குரலில் ஜாதிமல்லிப் பூ வாங்கிவரச் சொன்னதைக் கேட்டவனுக்கு அவன் காதுகளையே நம்ப முடியவில்லை.
சுபத்ராவின் எண்ணை அலைபேசியில் கண்டதும் என்ன அவசரமோ… இவள் அழைத்ததே இல்லையே என்று எண்ணியபடி அழைப்பை ஏற்றவனின் காதுகளில் மயிலிறகை வைத்து வருடியது போல பூ வாங்கி வரச் சொன்னவளின் குரல் வசியப் படுத்தியது.

“உனக்கா சுபா…” குரலில் குழைவைத் தேக்கி கேட்க…

“இல்ல… படைக்கறதுக்கு வேணுமாம். தேவகி பாட்டி வாங்கி வரச் சொன்னாங்க.” பூமியில் இருந்து ஒரு அடி உயரே மிதந்தவன் அவசரமாகத் தரையிறங்கினான்.

“வரும்போது வாங்கி வரேன். வேற எதுவும் வேணுமா?”
பாட்டியிடம் வேறு எதுவும் வேண்டுமா எனக்கேட்டு அவர் வேண்டாம் என்றதும் அலைபேசியை அணைத்தாள்.

பூக்கடையையே மொத்தமாக விலைபேசி வாங்கி வந்தவன் போல அவ்வளவு பூவை வாங்கி வந்திருந்தவனைப் பார்த்து நமுட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்ட தேவகி சுபத்ராவை அழைத்து அவளிடம் கொடுக்கச் சொன்னார்.

“அந்தப் பூவுல ஒரு இரண்டு முழம் மட்டும் எடுத்து எங்க அக்கா ஃபோட்டோவுக்குப் போட்டுட்டு, மீதியை நீ தலையில வச்சிக்கோ” என்றார். இவ்வளவு பூவையுமா என்று மலைத்தபோதும் சொன்னதைச் செய்தாள்.

அதற்கப்புறமும் விடாமல் சுபத்ராவை விரட்டிக் கொண்டே இருந்தார் தேவகி. அர்ஜுனை விட சுபத்ராதான் வெகுவாக ஒதுங்கிப் போவது போல அவருக்குத் தோன்றியது.

“ஐயர் வந்துடுவாரு. அவனைப் போய் மறுபடி ஒருமுறை குளிச்சிட்டு வரச் சொல்லு.”
அவர் பேச்சை மறுக்க முடியாமல் அவனிடம் போய் குளிக்கப் போகச் சொல்லிவிட்டு வந்தாள்..

“குளிக்கப் போறான் உன் புருஷன். நீ இங்க என்ன பண்ற? போய் அவனுக்கு என்ன தேவையோ எல்லாம் எடுத்துக் குடு.”
அந்த வேலையிருக்கு, இந்த வேலையிருக்கு, அப்புறமா போறேன் என்று அவள் கூறிய எந்த சாக்குபோக்கையும் ஏற்றுக் கொள்ள மறுத்தவர்,

“இந்த வீட்ல எத்தனை வேலைக்காரங்க இருக்கறாங்க. அவங்களை செய்யச் சொல்லு. அவனுக்கு எல்லாமே நீதான் பார்த்துப் பார்த்து செய்யனும்.

பத்மாலாம் எப்படி இருப்பா. அவ மருமக உனக்கு அந்த சூட்டிகை இல்லையே. போ முதல்ல அவனை கவனி.”
அவர் போட்ட போடில் அரண்டு போய் இதுவரை காலே வைத்திராத மாடிப் படியில் கால் வைத்தாள். மாடியேறி அவன் அறைக்குப் போகவும் தயக்கமாக இருந்தது. கீழே இருந்து விரட்டும் பாட்டியையும் சமாளிக்க முடியவில்லை.

அங்கே சும்மா அமர்ந்து டீவி பார்த்துக் கொண்டிருந்த ஸ்வேதாவுக்கும் திட்டு விழுந்தது.

அவளும் பேத்திதானே உரிமையோடு அதட்டினார். “வீட்ல சாங்கியம் நடக்கப் போகுது. ஆளாளுக்கு வேலை பார்க்கறாங்க. நீ டீவிய பார்த்துகிட்டு இருக்கற.

சரஸ்வதிகிட்ட கேட்டு என்னென்ன வேலை செய்யனுமோ செய்.”
ஏற்கனவே மாடியேறிப் போகும் சுபத்ராவைப் பார்த்து கடுப்பில் அமர்ந்திருந்தவள், எரிக்கும் பார்வை ஒன்றை சுபத்ராவை நோக்கி வீசிவிட்டு உள்ளே சென்றாள்.

ஸ்வேதாவே இதுவரை மாடிக்குப் போனதில்லை. அறியாத வயதில் போயிருப்பாளோ என்னவோ. வயது வந்தபின் அவளை மாடிக்கு விட்டதில்லை அலர்மேல்மங்கை.

இந்த விஷயத்தில் எல்லாம் அலர்மேல்மங்கை மிகவும் கண்டிப்பாக இருப்பார். வயதுப் பெண் என்பதால் ஸ்வேதாவுக்கு மாடிக்குச் செல்ல அனுமதியே கிடையாது.

அர்ஜுனும் அறைக்குள்ளே அடைந்து கிடக்கும் பழக்கம் உள்ளவன் கிடையாது. எப்பொழுதும் அனைவருடனும் ஹாலில் அமர்ந்துதான் இருப்பான் என்பதால் அவனுடைய அறைக்குப் போகும் அவசியமும் அவளுக்கு வந்ததில்லை.

ஸ்வேதாவின் பார்வையில் மேலும் தயங்கி நின்றவளை அதட்டி மாடிக்கு அனுப்பி வைத்தார் தேவகி.

இதையெல்லாம் கண்டும் காணாமல் பார்த்துக் கொண்டிருந்த சரஸ்வதிக்கு உள்ளூர வெகு சந்தோஷம். ஏதேனும் நல்லது நடந்தால் சரி என்று எண்ணிக் கொண்டார்.

மாடியில் விஸ்தாரமான ஹாலும் மூன்று அறைகளும் இருந்தன.

அர்ஜுன் அறை எது என்று தெரியாமல் சற்று நேரம் திகைத்தவள், உட்புறமாக பூட்டப் பட்டிருக்கும் அறைதான் அவனுடையதாக இருக்கக்கூடும் என்று எண்ணியபடி அந்த அறையின் முன் சென்று நின்றாள்.

அவனை எப்படி அழைக்க என்பது புரியாமல் தவித்தபடி கையைப் பிசைந்து கொண்டு நின்றிருக்க, கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான் அர்ஜுன்.

சட்டென்று கதவு திறக்கப்படவும் அதிர்ந்து போய் நின்றிருந்தாள் சுபத்ரா.

வெளியே வந்தவனுக்கு சுபத்ராவைக் கண்டதும் பெரும் ஆச்சர்யம் மேலோங்க, “ஹேய்… சுபா… என்ன ஆச்சும்மா. மாடிவரை வந்திருக்க?”

தன் முகம் பார்த்துகூட பேசாமல் தவிர்க்கும் பெண் தானாக தன் அறைவரை வந்திருப்பது ஆச்சர்யத்தைக் கொடுத்தது அவனுக்கு.

“ஒ… ஒன்னும் இல்லை. பாட்டிதான் நீங்க கிளம்பிட்டீங்களான்னு பார்க்கச் சொன்னாங்க. கிளம்பிட்டீங்க இல்ல. வாங்க கீழ போகலாம்.” என்றபடி கீழே போக எத்தனிக்க,

பாட்டி எதற்காக அவளை மாடிக்கு அனுப்பினார் என்பதை நொடியில் புரிந்து கொண்டவன், “ஹேய், இரு இரு… உடனே கீழ இறங்கிப் போனா சரிவராது. நீ என்னோட ரூம் பார்த்ததில்லை இல்லையா? உள்ளே வந்து பாரு.”

“இல்ல… அப்புறமா இன்னோரு நாள் பார்க்கறேன். கீழ நிறைய வேலையிருக்கு.”

“வேலையை போய் செய்துக்கலாம், இப்ப நீ வா” என்றபடி அவளது கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றான்.

நல்ல பெரிய அறையாக இருந்தது அவனுடைய அறை. நடுவே அளவில் பெரிய வேலைப்பாடுகளமைந்த கட்டில் போடப்பட்டிருந்தது.

தேவையற்ற பொருட்களைப் போட்டு இடத்தை அடைக்காமல் வெகு சுத்தமாக இருந்தது அறை.

அறைக்குள் இரண்டு கதவுகள் இருந்தது. ஒன்று பாத்ரூமாக இருக்கும் என்று ஊகித்தாள்.

அறையில் இருந்த மற்றொரு கதவைத் திறந்ததும் அழகிய பெரிய மாடித் தோட்டம் இருந்தது. பல வகையான பூச்செடிகள் அழகாக பராமரிக்கப்பட்டிருந்தது. அங்கே அமைக்கப் பட்டிருந்த கண்ணாடியினாலான ஊஞ்சலும் கண்ணைக் கவர்ந்தது. அந்த இடமே மனதை லேசாக்க…

“இந்த இடம் ரொம்ப நல்லாயிருக்கு.”

“ம்ம்… எனக்கும் பிடிக்கும். எவ்வளவு டென்ஷனா இருந்தாலும் இங்க வந்தா மனசு அமைதியாகிடும்.”

“இதெல்லாம் யார் இவ்வளவு அழகா பராமரிக்கிறாங்க?”

“ஏன்? நான்தான். ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலும் நான் இங்கதான் இருப்பேன். கூடவே ஹெல்ப்புக்கு நம்ம தோட்டக்காரரும் வருவாரு.”

“ரொம்ப நல்லாயிருக்கு. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.” முகம் மலரக் கூறியவளைப் புன்னகையோடு பார்த்துக் கொண்டவன், அடுத்த அறைக்கு அழைத்துச் சென்றான்.

“இது எங்கப்பா அம்மா ரூம்.” அர்ஜுன் அறையைப் போலவே இருந்த அந்த அறையினுள் நடுநாயகமாக சேதுபதி பத்மாவின் புகைப்படங்கள் மாட்டப்பட்டு இருந்தது. அந்த அறையிலிருந்தும் மாடித் தோட்டத்திற்கு செல்ல வழியிருந்தது.

அதற்கடுத்த அறை அவனது உடற்பயிற்சி அறையாக இருந்தது.

அனைத்தையும் பார்த்தபின் நேரமாகிவிட்டது என்று அவள் கீழே ஓடிவிட, மீண்டும் அவனறைக்குள் வந்தவனுக்கு அவளது வாசமும் ஜாதி மல்லியின் வாசமும் அறையெங்கும் நிறைந்திருப்பது போலத் தோன்றியது. உள்ளம் நிறைவாக இருந்தது.

அவளுக்கு கொஞ்சமாவது என்னைப் பிடித்தால் போதும் இருவருடைய வாழ்க்கையையும் சீர் செய்து விடுவேன். ஆனால் எப்போதும் அவளை நானாக நெருங்கவோ வற்புறுத்தவோ கட்டாயப்படுத்தவோ மாட்டேன் என்று எண்ணிக் கொண்டான்.

முதன் முதலில் அவன் அறைக்குள் வந்த பெண் சுபத்ராதான். அவளுக்கு உரிமையும் உறவும் இருந்தாலும் இயல்பாக வந்து போகும் சூழல் இன்னும் வரவில்லை என்று எண்ணிக் கொண்டான்.

ஸ்வேதாவுக்கு முதலில் நல்ல வாழ்க்கையை அமைத்துத் தரவேண்டும். இந்த ஒரு மாதத்தில் அவளை விட்டு எவ்வளவு தள்ளி இருக்க முடியுமோ அவ்வளவு தள்ளிதான் இருக்கிறேன்.

இப்பொழுதே அவள் என் மனதை உணர்ந்திருக்கக்கூடும். அனைத்தும் நல்லபடியே நடக்கும் என்று எண்ணியபடி கீழே இறங்கினான்.

இதுவரை எந்த வேலையையும் செய்திராத ஸ்வேதாவை தேவகி அதட்டி உருட்டி வேலை வாங்கிக் கொண்டிருக்க, கடுப்போடு செய்து கொண்டிருந்தாள். ஐயரும் வந்திருக்க பூஜைக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

ஹோமம் வளர்த்து மணிவாசகத்தையும் லோகேஸ்வரியையும் ஜோடியாக அமர வைத்து அனைத்து சடங்குகளையும் செய்த பிராமணர் அர்ஜுன் சுபத்ராவையும் அமர வைத்து குறைவில்லாமல் அனைத்து பூஜைகளையும் செய்து முடித்தார்.

பிராமணருக்கு தானம் வழங்கி, வந்திருந்த அனைவருக்கும் உணவு வழங்கி, சிறப்பாக திதி கொடுக்கப்பட்டிருந்தது.

ஸ்ரீராம் இங்கு பூஜைகள் முடியவும் ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் ஒன்றிற்கு மதிய உணவுக்கான ஏற்பாடுகளை செய்து வைத்திருக்க,

அர்ஜுனும் சுபத்ராவும் அங்கு சென்று குழந்தைகளுக்கு உணவு பரிமாறி அந்த குழந்தைகளோடு சேர்ந்து உணவு உண்டு அந்த நாளை சிறப்பாக கொண்டாடியிருந்தனர்.

இந்த ஆதரவற்ற இல்லத்தைப் பற்றி சொல்லி இப்படி ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யச் சொன்ன ஜானவியும் அங்கு வந்திருந்தாள்.

ஸ்ரீராமுடன் தினமும் அலைபேசியில் பேசிக் கொள்பவள், அவளை அவன் சிறந்த தோழியாக கருதுவதாகக் கூறவும் தானும் அதே எல்லையில் இருந்து கொள்ள வேண்டும் என்று எண்ணி தன்மன எண்ணங்களை அடக்கி வைத்திருந்தாள்.

அவனுடனான இனிய நட்பை கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை அவள்.

ஜானவியை அர்ஜுனுக்கும் சுபத்ராவுக்கும் அறிமுகப்படுத்த,

“ஹேய் இந்தப் பொண்ணு, நம்ம காலேஜ் படிக்கும்போது நமக்கு ஜூனியர்டா. உன்கூட ஃபிரெஷ்ஷர்ஸ் பார்ட்டில பாட்டுப் பாடினாளே அவதான.”
என்று நொடியில் அர்ஜுன் கண்டுபிடித்துவிட, ஸ்ரீராமை நோக்கி எரிக்கும் பார்வையை சிதற விட்டவள், அர்ஜுனிடம் புன்னகையுடன்,

“ஆமாம்ண்ணா… உங்களுக்கு செம மெமரி பவர். உங்க ஃபிரெண்டுக்கு வல்லாரைக்கீரை தினமும் வாங்கித் தாங்க பச்சையாவே மேயட்டும்”

“பச்சையா மேயறதுக்கு நான் என்ன ஆடா. நீதான் மங்கிகே டஃப் குடுத்து எங்கயாவது தொங்கிட்டு இருப்ப”

“ஹலோ யாரைப் பார்த்து மங்கிங்கறீங்க…?” சண்டைக்கு ரெடியானவளைப் பார்த்து கைகளை உயர்த்தியவன், “நிச்சயமா உன்னைதான். சரி… சரி… நாம இன்னோரு நாள் சண்டை போடலாம். இப்ப இவங்களை கவனிப்போம்.”
அவனைப் பொய்யாக முறைத்தவள்,

சுபத்ராவுடன் பேச ஆரம்பித்தாள்.

மிகவும் அமைதியான சுபாவமுடைய சுபத்ராவை சற்று நேரத்திலேயே தன்னுடன் சகஜமாகப் பேசிச் சிரிக்க வைத்தவளை ஆச்சர்யமாகப் பார்த்த அர்ஜுன்,

“இந்தப் பொண்ணை எப்படி மீட் பண்ண? இவளைப் பத்தி எதுவுமே சொல்லலையே நீ.”

“ம்ம்… சொல்லனும்னுதான் நினைச்சிருந்தேன். சொல்றேன் கூடிய சீக்கிரம்.” முகமலர்ச்சியோடு பேசிய நண்பனைப் பார்க்கையில் ஏதோ புரிவது போல இருந்தது அர்ஜுனுக்கு. எதுவாக இருந்தாலும் அவன் வாயால் வரட்டும் என்று எண்ணியவன், சிறிது நேரத்தில் அவர்களிடம் விடைபெற்றுக் கிளம்பினான்.

பூஜை முடிந்ததும் தேவகி, அவரது மருமகள், அவர்களது பேரப்பிள்ளைகள் தவிர்த்து மற்ற அனைவரும் ஊருக்கு கிளம்பிவிட,

வீட்டை ஒதுங்க வைக்கவும், சிறு பிள்ளைகளுக்கு உணவு கொடுக்கவுமாக பொழுது சரியாய் போனது சுபத்ராவுக்கு.

அனைவருக்கும் இரவு உணவை பரிமாறிவிட்டு அனைத்தையும் சரிசெய்துவிட்டு, ஊரிலிருந்து வந்தவர்கள் அனைவருக்கும் உறங்க அறைகளை ஒதுக்கிக் கொடுத்துவிட்டு அவளது அறைக்குள் நுழைந்தாள் சுபத்ரா.

அர்ஜுன் மாடிக்கு சென்றிருக்க சுபத்ரா கீழே உள்ள அறையில் தூங்கச் செல்வதைப் பார்த்த தேவகிக்கு கடும் கோபம் வந்தது.

என்ன நடக்கிறது இந்த வீட்டில். புதிதாய் திருமணம் ஆனவர்களை ஏன் பிரித்து வைக்க வேண்டும்? இரண்டில் ஒரு முடிவு தெரியாமல் ஊருக்குச் செல்வதில்லை என்று முடிவு செய்தவர் நேராக சரஸ்வதியைப் பார்க்கச் சென்றார்.

“என்ன நடக்குது சரஸ்வதி இங்க? எங்க அக்காதான அர்ஜுனுக்கு கல்யாணம் பண்ணி வச்சா. ஏன் இரண்டு பேரையும் பிரிச்சு வச்சிருக்கீங்க?”
என்ன பதில் கூறுவது என்று புரியாமல் திகைத்த சரஸ்வதி, சட்டென்று வாயில் வந்ததை உளறினார்.

“அது வந்து சித்தி… அம்மா இறந்து முப்பது நாளைக்கு விசேஷம் வைக்க முடியல அதான்.”

“என்ன சொல்ற நீ. பதினாறாம் நாள் முடியவும் வச்சிருக்கலாமே. இவ்வளவு நாளா விசேஷத்தை தள்ளி போடுவாங்க. சரி…

இன்னைக்காவது ஏற்பாடு பண்ணியிருக்கலாமே. என்கிட்ட சொல்லியிருந்தா நான் செய்திருப்பேனே.”

‘ஐயய்யோ… இவங்ககிட்ட என்ன சொல்றதுன்னு தெரியலையே. இங்க வீட்ல நடக்கற கூத்தெல்லாம் தெரிஞ்சா அவ்வளவுதான் உலுக்கி எடுத்துடுவாங்க.’ பயத்துடன் எண்ணிக் கொண்டவர்,

“இல்ல சித்தி நல்ல நாள் பார்க்கனுமேன்னுதான்…”

“நல்ல மனசு இருந்தா எல்லா நாளும் நல்ல நாள்தான்” சரஸ்வதிதான் தேவையில்லாமல் அவர்களை பிரித்து வைத்திருப்பதாக எண்ணி நொடித்துக் கொண்டவர், லோகேஸ்வரியைப் பார்க்கச் சென்றார்.

முனுக்கென கண்ணில் நீர் கோர்த்துக் கொண்டது சரஸ்வதிக்கு. அவருக்கு மட்டும் ஆசையில்லையா என்ன? இருவரும் சேர்ந்து நல்லபடியாக வாழ வேண்டும் என்றுதானே தினமும் பிரார்த்திப்பதே. சட்டென்று ஒரு சொல் சொல்லிவிட்டாரே என்று வருந்தியவர், எழுந்து அவர் பின்னே சென்றார்.

ஸ்வேதா உறங்கியிருக்க, அப்பொழுதுதான் உறங்கத் தயாரான மணிவாசகத்தையும் லோகேஸ்வரியையும் வெளியே அழைத்தார்.

“ஏன் மணி? கல்யாணம் முடிஞ்சும் வாழ வேண்டிய பிள்ளைங்களை எதுக்கு பிரிச்சு வச்சிருக்கீங்க? நீ இதெல்லாம் பார்த்து என்னன்னு கேட்க மாட்டியா? எங்க அக்கா போனதும் ஆளாளுக்கு நாட்டாமை நடக்குதா வீட்ல.”

“…”

“அர்ஜுன் நம்ம பையன். நீதான முன்ன நின்னு ஒழுங்கா இதெல்லாம் நடக்குதான்னு பார்த்திருக்கனும். அவனேவா வாயைத் திறந்து கேட்பான். நாம பெரியவங்கதான் ஏற்பாடு பண்ணனும்.”

‘இந்த சித்தி எந்த தேரை இழுத்து தெருவுல விடப் பாக்குதுன்னு புரியலையே. எதைப் பத்தின்னே புரியாம பக்கம்பக்கமா பேசுதே’ மனதுக்குள் நொந்து கொண்டவர்.

“என்ன சித்தி பிரச்சனை? எதுவும் புரியலையே”

“அட… யார்டா இவன். ஏம்மா லோகேஸ்வரி இவனை வச்சு எப்படி குடும்பம் பண்ற நீ? அர்ஜுனுக்கு கல்யாணம் ஆகி ஒரு மாசம் ஆச்சு இன்னும் விசேஷம் வைக்கல நீங்க. எதுக்கு தள்ளிப் போட்டீங்க?”

“…”

“என்ன விசேஷம்னு கேட்டீன்னா உதை வாங்குவ பார்த்துக்கோ.” அவர் முழித்த முழியைப் பார்த்து அரட்டியவர்,

“லோகேஸ்வரி நீயும் என் மருமகளும் போய் அந்த பொண்ணை எழுப்பி ரெடி பண்ணுங்க. நான் போய் அர்ஜுன்கிட்ட பேசிட்டு வர்றேன்.” நிற்காமல் ஆர்டர் போட்டவரை பார்த்து நொந்து போன மணிவாசகம், ‘இது என்ன புதுத் தலைவலி. இப்ப இந்த சித்தியை எப்படி சமாளிக்க?’ என்று எண்ணியபடி,

“சித்தி… நாளைக்கு ஏற்பாடு பண்ணலாமே.”

“எதுவும் பேசாத. இதுவே லேட்டுதான். எங்கக்கா ஆசீர்வாதம் அந்தப் பிள்ளைங்களுக்கு என்னைக்கும் இருக்கும். இன்னைக்கே நல்ல நாள்தான்.”

“…”

“சரஸ்வதி நீ போய் பாலைக் காய்ச்சி எடுத்துட்டு வா.”
ஒவ்வெருவருக்கும் ஒவ்வொரு கட்டளையிட்டவர் அர்ஜுனைப் பார்க்கக் கிளம்பிவிட்டார்.

திடும்மென்று வந்து நின்று இன்று உனக்கு முதலிரவு என்று சொன்ன பாட்டியின் வார்த்தைகளில் அதிர்ந்து போனான் அர்ஜுன்.

“என்ன பாட்டி திடீர்னு?”

“திடீர்னா… உனக்குக் கல்யாணம் ஆகி ஒரு மாசம் ஆகுது நினைவிருக்கா? நீ இன்னும் சின்ன பையன் இல்லை புரிஞ்சி நடந்துக்கோ. இன்னும் கொஞ்ச நேரத்துல உன் பொண்டாட்டியை அனுப்பி வைக்கிறேன். சீக்கிரம் கொள்ளுப் பேரனோ பேத்தியோ பெத்துக் குடுங்க. அதைப் பார்த்துட்டுதான் நான் கண்ணை மூடுவேன்.”

படபடவென்று பேசிய பாட்டி கீழே இறங்கிப் போனதும், இது என்ன புதுப் பிரச்சனை என்று யோசித்தபடி அமர்ந்திருந்தான். சுபத்ராவின் நிலையை யோசிக்கும் போது இன்னும் வருத்தமாக இருந்தது.

அவளது மனம் என்னை ஏற்றுக் கொள்ளும்வரை அவளுக்கு எந்த சங்கடமும் தரக்கூடாது என்று எண்ணியிருக்க, பாட்டி இப்படி ஏற்பாடு செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை. எது எப்படி இருந்தாலும் சமாளித்துதானே ஆகவேண்டும் என்று எண்ணிக் கொண்டவன் சுபத்ராவுக்காக காத்திருந்தான்.

உறங்கச் செல்வதற்கு ஆயத்தமாகிப் படுத்திருந்தவள் கதவு தட்டப்படவும் திறந்து வெளியே வந்தாள். தேவகியின் கட்டளையை மீற முடியாமல் வந்திருந்த லோகேஸ்வரி சுபத்ராவிடம் விஷயத்தைக்கூறி அவளைத் தயார் படுத்த, வெகுவாக அதிர்ந்து போனவள் சரஸ்வதியைதான் தேடினாள்.

அர்ஜுனிடம் பேசிவிட்டு பாட்டியும் அறைக்கு வந்துவிட, யாரிடமும் மறுத்து எதையும் கூறமுடியாமல் தயாராகி வந்தவளிடம் பால் சொம்பைக் கொடுத்த சரஸ்வதி, மிரண்ட பார்வையோடு நின்றிருந்தவளிடம்,

“எல்லாமே நல்லதுக்குதான். உன் வாழ்க்கை நல்லாயிருக்கும் போ” என்க, அனைவரிடமும் ஆசி பெற்றுக் கொண்டு அர்ஜுனின் அறைக்குள் நுழைந்தாள்.

என்ன செய்வது என்று புரியாமல் சங்கடத்தோடு நின்றிருந்தவளைப் பார்த்தவன் இயல்பாக, “வா சுபா” என்றழைத்து அவளது கையில் இருந்த பால் சொம்பை வாங்கி மேஜையின்மீது வைத்தான்.

“அ…அது வந்து… அது… பாட்டிதான்… அனுப்பி விட்டாங்க….” கோர்வையாக பேச முடியாமல் திக்கித் திணறியவள், பயத்தில் வேர்த்து வழிந்து நிற்க,

“”எதுக்கு இவ்வளவு பயப்படற சுபா? ஃபிரியா இரும்மா. என்னைப் பார்த்தா பயப்படற?”
இல்லையென்று தலையசைத்தவள்,

“ஸ்வேதா பாவம்தானே. அவங்க உங்களை தப்பா நினைக்கப் போறாங்க. என்னால மறுபடி மறுபடி உங்களுக்கு பிரச்சனை ஆகுது.”
உண்மையில் அர்ஜுனுடன் அறையில் தங்குவதற்குகூட பயமில்லை. அவளுக்கு ஸ்வேதாவை நினைத்துதான் பயமே.

சாதாரணமாக வெளியே கடைக்குச் சென்றதற்கே கேவலமாகப் பேசியவள் இதற்கு என்ன சொல்ல போகிறாளோ என்று நினைக்கும்போதே உள்ளுக்குள் நடுங்கியது. தன்னால் தேவையில்லாமல் அவர்களுக்குள் பிரச்சனை வருமோ என்று யோசித்தாள்.

“ஸ்வேதா பத்திலாம் நீ எதுவும் யோசிக்காத. அதையெல்லாம் நான் பார்த்துக்கறேன். நீ கட்டில்ல படுத்துக்கோ. நான் அந்த சோபால படுத்துக்கறேன். ஃபிரியா இரு. எல்லாம் சரியா போகும்.”
என்றவன் பாலை ஆற்றி அவளிடம் ஒரு டம்ளரில் ஊற்றிக் கொடுத்துவிட்டு தானும் குடித்தான்.

அவளுக்கு படுக்க வசதிகள் செய்து கொடுத்துவிட்டு சோபாவில் படுத்து கண்மூடியவனின் மனம் நிறைந்திருந்தது. மதியம்தான் என் அறைக்கு வரும் உரிமை இருந்தும் சூழல் சரியில்லையே என்று நினைத்தேன். இப்பொழுது என் அறைக்குள் வந்தவள் விரைவில் என் வாழ்க்கைக்குள்ளும் வந்துவிடுவாள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

Hiவிடிவிளக்கின் ஒளியில் படுத்ததும் நிச்சலனமாக உறங்கும் சுபத்ராவைப் பார்த்தவன், தானும் உறங்கிப் போனான்.

தொடரும்…