LogicIllaaMagic14

மேஜிக் 14

 

இரவுப் படுக்கை அறையில் கணவனிடம் மைதிலி அன்று நந்தனாவும் காஞ்சனாவும் வந்து சென்றதை பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார்.

“அவங்க இரண்டு பேருமே நல்ல குணமுள்ள பெண்களா தெரியுறாங்க”

“அப்போ என்ன சொல்றே ? நிரஞ்சனுக்கு பேசி முடிச்சுடலாமா?” தீவிரமாகக் கேட்டார் ஜெகந்நாதன்.

“உங்க விருப்பம். எனக்கும், நிவிக்கும் நந்துவை ரொம்ப பிடிச்சிருக்கு.”

“சரி உனக்கு சம்மதம்னா அவங்க வீட்டுல பேசுவோம். அதுக்கு முன்னாடி ஸ்ரீதருக்கும், வைஷாலிக்கும் இதுல எந்த மணவருத்தமும் இல்லைன்னு எனக்கு ஊர்ஜிதமாகனும். அதுவரை நீ கொஞ்சம் பொறுமையா இருக்கணும் பரவாயில்லையா?”

“தாராளமா எனக்கும் அப்போ தான் நிம்மதி”

“சரி கூடிய சீக்கிரம் ஸ்ரீதர்கிட்டயும், வைஷுகிட்டயும் பேசுவோம்!”

“அப்புறம் ஒரு சின்ன அபிப்பிராயம்…”

“சொல்லுமா”

“நந்துவோட அத்தை அதான் அந்த காஞ்சனா. அவளுக்கு 29 வயசுதான் ஆகுதாம். இன்னும் கல்யாணம் செய்துக்கலையாம். நம்ம கிரிதருக்கு பேசினா என்ன ?”

“அவன் சம்மதிப்பானா?” சந்தேகமாய் மனைவியைப் பார்த்தார் ஜெகநாதன்.

“அவன் தான் நம்மளையே பெண்ணைத் தேடித் தரச் சொல்லிட்டானே, அப்புறமென்ன? அத்தை மாமாவா அவனுக்கு நல்லபடியா கல்யாணம் செஞ்சு வைக்கிறது நம்ம பொறுப்பு தானே?”

மனைவி சொல்வதிலிருந்த அக்கறையை உணர்ந்தவர், மறைந்த மைதிலியின் அண்ணன் மகன் கிரிதருக்காகக் காஞ்சனாவை கேட்க ஒப்புக்கொண்டார். கிரிதர் இவர்கள் மருத்துவமனையில் ஜெகந்நாதனைப் போன்றே இதய அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரிகிறான்.

***

மருத்துவ மனையில் ஜெகந்நாதன் தன் பால்ய நண்பனும், வைஷாலியின் தந்தையுமான ஸ்ரீதருடன் தன் அறையில் பேசிக்கொண்டிருந்தார்.

தன் மகன் எதிர்பாராமல் நந்தனா என்ற பெண்ணின் மேல் அபிப்பிராயம் கொண்டதையும் தான் அப்பெண்ணை வைஷாலியுடன் மருத்துவ மனையில் சந்தித்ததையும் அவருக்குத் தெரியப் படுத்தினார்.

“எனக்குத் தெரியும் ஜெகன், வைஷு அப்போவே சொல்லிட்டா, நீயா பேசும்வரை நான் உன்கிட்ட இதைப் பற்றிக் கேட்க வேண்டாம்னு இருந்தேன் டா”

நண்பனின் பெருந்தன்மையைக் கண்டு பூரித்தவர், தான் குற்றவுணர்வு காரணமாய் நண்பனிடம் இதுவரை பகிராமல் இருந்ததை தெரிவித்தார்.

“என்னை மன்னிச்சுடுடா! நான் ரொம்ப குழப்பத்துல இருந்தேன் அதான். மொதல்ல எனக்கு இதெல்லாம் நிஜமாண்ணே சந்தேகமா இருந்தது” நண்பனைச் சில நொடி பார்த்தவர் தானாகத் தொடர்ந்தார்

“உனக்குத்தான் நிரஞ்சனை சின்ன வயசிலிருந்தே தெரியுமே, எப்போதும் விளையாட்டு படிப்புன்னே இருப்பான். இப்படி திடீர்ன்னு ஒரு பெண்ணை காதலிக்கிறேன்னு வந்து நிக்குற பையனா அவன்? நீயே சொல்லு”

ஸ்ரீதரோ “டேய் என்னடா இது அவன் என்ன குழந்தையா? 27 வயசாகுது இப்போ கூட காதல் வரக்கூடாதுன்னா என்ன நியாயம் டா!” என்றபடி சிரித்தார்.

ஜெகந்நாதனோ ஆதங்கம் தோய்ந்த குரலில் “அதுக்கில்லை நம்ம வைஷுவை நினைச்சாதான்…”

புன்னகைத்தபடி நண்பனின் கையை பற்றிக்கொண்ட ஸ்ரீதர் “இங்க பார், நாம நண்பர்களா மட்டுமில்லாம உறவினர்களாகவும் ஆக ஆசை பட்டோம்.அதுக்காக ஏற்பாடு பண்ணினதுதான் இந்த சம்பந்தம். பசங்களா எப்போதாவது வந்து அவங்களுக்கு ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சுருக்குனு சொன்னார்களா?

இல்லை இப்போ என் பொண்ணு வறுத்த படுறாளா? அப்படி அவ வருந்தினா, நானே உன்னைக் கேட்டிருக்க மாட்டேனா?”

நண்பன் கேட்ட கேள்வியில் ஜெகநாதன் மனம் சிந்தனையில் மூழிகியது.

“அதுமட்டுமில்லை இந்த விஷயத்தை வைஷு என்னிடம் சொல்லும்போது அவ முகத்தில் சிரிப்புதான் இருந்ததே தவிர கோவமோ வருத்தமோ இல்லை. ஒருவேளை நம்ம விருப்பப்படி இந்தக் கல்யாணம் நடந்து, அதுக்கு பிறகு அவர்களுக்குள்ள மனஸ்தாபம் வந்தா நம்மளால தாங்க முடியுமா? அதுவும் எனக்கு இருக்கறது ஒரே பொண்ணு.

என் விருப்பத்தைவிட அவ சந்தோஷம் எனக்கு முக்கியம் டா.

கண்டிப்பா எனக்கோ என் பெண்ணுக்கோ வருத்தமில்லை. வேணும்னா நீயே அவ கிட்ட ஒரு வார்த்தை கேளு.” சொன்னபடி தன் மகளை இன்டெர்காமில் அழைத்தார் ஸ்ரீதர்.

தன் நண்பனின் பெருந்தன்மை ஜெகந்நாதனை கண்கலங்கச் செய்தது. வைஷாலியின் பதிலும் நண்பன் சொன்னது போலவே இருக்கக் கொஞ்சம் மன நிம்மதி அடைந்தவர், மீண்டும் மீண்டும் தன் மகன் சார்பில் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

***

அன்று மாலை தன் குடும்பத்தாரிடம் வெளிப்படையாகப் பேச எண்ணி அனைவரையும் அமரவைத்துப் பேசத்துவங்கினார் ஜெகந்நாதன்

“நிரஞ்சன், நந்தனா விஷயம் பத்தி இன்னிக்கி ஒரு முடிவெடுத்திருக்கேன் !”

அவர் அறிவிக்கவும், தங்கையிடம் எதோ கிசுகிசுத்து கொண்டிருந்த நிரஞ்சன் சற்று நிமிர்ந்து அமர்ந்து மௌனமானான்.

“எனக்கு இருந்த பெரிய மனபாரம் இன்னிக்கி குறைஞ்சது. ஸ்ரீதர் வைஷு ரெண்டு பேரும் இன்னிக்கி இதுல அவங்களுக்கு எந்த வருத்தமும் இல்லைன்னு சொல்லிட்டாங்க

இன்னிக்கி உங்கம்மாவும் சாருலதாவும் (ஸ்ரீதரின் மனைவி, வைஷாலியின் தாய்) இதைப்பத்தி பேசினாங்க.” என்றவர் மேலும் ,

“இனி அடுத்து நடக்க வேண்டியதை பார்க்கலாம்னு நானும் உங்கம்மாவும் முடிவெடுத்து இருக்கோம். முதற்கட்டமா நாம கூடிய சீக்கிரம் நந்தனா வீட்டுக்குப் பெண்கேட்டு போகப் போறோம். என்னப்பா உனக்கு சந்தோசம் தானே பா ?” புன்னகையுடன் தங்கள் முடிவை தெரிவித்தார் புன்னகையுடன் மகனை கேட்டார்.

“ஹையா! சூப்பர்!” என்று நிவேதா குதித்து நடனமாட

“ஆமாம் உன் செயல் பெருமாளே! எல்லாம் உன் செயல்! இதாவது நல்ல படியா முடிஞ்சா நாங்க எல்லாரும் நடந்தே மலை ஏறிவந்து உன்னை தரிசிக்கிறோம்” சந்தோஷத்தையும் வேண்டுதலையும் ஒன்று சேரவைத்தார் மைதிலி.

“அம்மா நீ நடக்கறேனுக்கு சொல்லு ஓகே! எங்க மூன்றுபேரையும் எதுக்கு சேர்த்து விட்டே? ” நிவேதா கேட்க

“மூணு பேர் இல்லைடி நாலு பேருன்னு சொல்லு. நந்துவையும் சேர்த்திதான் நான் நாலுபேருன்னு சொன்னது. எல்லாருமா கல்யாணத்துக்கு அப்புறமா சேர்ந்து போயிட்டு வரலாம்” சொன்னவர் சந்தோஷமாய் கணவரைப் பார்த்து

“முதல் முதலா நம்ம பையனுக்குப் பார்த்த வரன் தட்டுத்தேன்னு நெனச்சு வருத்தப்பட்டேன். இந்த வரனாவது நல்லபடியா கைகூடி வரணும்” ஆதங்கமும் ஆசையும் சேர்ந்து கண்களில் நீராய் பெறுக சொன்னார்.

தான் கேட்ட கேள்விக்கு இதுவரை பதில் தராத நிரஞ்சனை ஆர்வமாய் பார்த்திருந்தார் ஜெகந்நாதன்.

அவனோ முகத்தில் எந்த உரசியுமின்றி பேயறைந்தார் போல் மௌனமாக அமர்ந்திருந்தான்.

நந்தனாவை காதலிப்பதாகச் சொன்னால் வைஷாலியுடனான திருமணம் நிற்குமென்று எண்ணினான், அது அப்படியே நடந்தது. ஆனால் நந்தனாவை தன் தந்தை ஏற்கமாட்டார் என்று அவன் போட்ட கணக்கு தவறாகிப் போனது.

‘சே அப்பா ஓகே சொல்லமாட்டார் கொஞ்சக் காலம் சம்மதிக்க வைக்கிறதுல தள்ளலாம் அப்புறம் அப்படியே கடைசியில் பிரிஞ்சுட்டோம்னு சொல்லி ஒரேயடியா தப்பிக்கலாம்னு பார்த்தா இப்படி எடுத்தவுடனே ஓகே சொல்லிட்டாரே!

இதுல அம்மாவேற அவளையும் கூட்டிகிட்டு கோவில் போகவே பிளான் போடுறாங்க. இந்த நிவிய இப்படி எதுக்கு குதிக்கணும்? சே எல்லாம் சப்புன்னு போச்சே!’

குழப்பமும்,அதிர்ச்சியுமாய் அமர்ந்திருந்தான் நிரஞ்சன்.

“என்னப்பா? அப்பா கேட்குறார் நீ ஒண்ணுமே சொலாம இருக்கே?” மைதிலி ஆதங்கமாய் கேட்க

‘என்னத்த சொல்ல?’  “சந்தோஷம் தான் ஆனா…”

“ஆனா என்னடா ஆனா?” கோவமாக நாற்காலியிலிருந்து எழுந்த ஜெகநாதன் மனகனை முறைக்க,

“இல்லை அவ சின்னப் பொண்ணு…” அவசர அவசரமாகத் தந்தைத்து சமாதானம் சொல்ல வாயெடுத்தான்.

“காதலிக்கும்பொழுது அவ வயசு தெரியலையா?” அவர் முறைக்க

“அதில்லைப்பா. கல்யாணம் இப்போ வேண்டாமே! அவ படிச்சு முடிக்கட்டும். மேல எதோ படிக்க நினைக்கிறா. என்னை கல்யாணம் பண்ணிகிட்டதால அவ கனவை அடையமுடியாமல் போனதா அவ வறுத்த படக்கூடாது. அதனால கொஞ்ச வருஷம் அப்புறமா கல்யாணம் பண்ணிக்கலாம்னு நெனச்சேன்” ஒரு வழியாகத் தட்டுத் தடுமாறிச் சொல்லி முடித்தான்

“இவ்வளவுதானா?” என்று புன்னகைத்த ஜெகநாதனோ “அதுக்கென்ன கல்யாணத்துக்கு அப்புறம் தாராளமா எவ்வளவு வேணுமோ படிக்கட்டும். நானே படிக்க வைக்கிறேன். ஏன் அவ படிச்சா நீ ஏதான சொல்லபோறியா? இல்ல நாங்க ஏதான மறுப்பு சொல்லப் போறோமா?”

கணவருக்குத் துணையாய் வந்த மைதிலி “அதானே இதெல்லாம் ஒரு காரணமா? அவளும் இனி எனக்கு நிவி மாதிரி தானே? தாராளமா என்னவேணுமோ படிக்கட்டும்.” புன்னகையுடன் மகனின் தலையை வருட

நிவியும் அவள் பங்கிற்கு “ஆமாம் டா! அவ எனக்கு இனி நல்ல பிரென்ட். நான் அவளுக்கு நாத்தனாரா இல்லாம அவளுக்கு ஒரு நல்ல தோழியா இருப்பேன். நாங்க ஷாப்பிங் போவோம், சினிமா போவோம், அவ விஷுவல் கம்யூனிகேஷன் படிக்கிறாளாமே என்னை வித விதமா இனி போட்டோ எடுக்கச் சொல்லுவேன்! ஜாலி!” பேசியபடி தந்தையின் தோளைப் பிடித்துக்கொண்டு ஆட

‘அட போங்கடா! உங்களை நம்பி ஒரு விஷயம் பண்ண முடியாது. அநியாயத்துக்கு நல்லவர்களா இருக்கீங்களே!’ மனதிற்குள் புலம்பிக் கொண்டவன்

நிரஞ்சன் மீண்டும் முயற்சிக்க “நான் அவ கிட்ட காத்திருப்பேன் சொல்லிருக்கேன். இப்போவே கல்யாணம்னு சொன்னா அவ என்னைப்பத்தி என்ன நினைப்பா சொல்லுப்பா”

மைதிலி சட்டென “அதுனால என்னடா? நாங்க பேசுறோம் நீ அதைப் பத்தி கவலைப் படாதே!” என்று சொல்ல,

‘நான் படாம?’ நிறைஞ்சுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை “அதுக்கில்லபா…”

ஜெகந்நாதன் பொறுமை இழந்தார் “போதும்டா, அந்த பொண்ணு வீட்டு நம்பர் தா, நான் அவ வீட்டில் பேசுறேன்”

நிரஞ்சனோ “அய்யயோ” என வாய்விட்டு அலறிவிட்டான்

“டேய் என்னடா?” நிவி பதற

‘என்னத்த சொல்ல’ “அதில்லை அவ வீட்டு நம்பர் என்கிட்டே இல்லை.”

“அதுக்கென்ன நந்துகிட்ட கேட்டா கொடுக்கப் போறா?” நிவேதா தோளை குலுக்க,

‘வெஷம் வெஷம்’     “இப்போ எப்படி அவளைக் கூப்பிட முடியும்? பார் மணி 9 ஆச்சு.  ராத்திரி கால் பண்ணா என்ன நினைப்பா?”

சந்தேகமாய் அண்ணனை பார்த்தாள் நிவேதா “அவளோ நல்லவனாடா நீ? ராத்திரி அவளுக்கு நீ போன் செஞ்சதே இல்லையா?”

தங்கையிடம் கொஞ்சலாக “நல்லா இருக்காது நிவிமா”

நிவேதா தன் இடுப்பில் கைவைத்துக்கொண்டு “அதை நாங்க பாத்துக்குறோம், நீ நம்பரை கொடு தம்பி!”

நிவி விஷமமாய் புன்னகைக்க, பிள்ளைகள் வாக்குவாதத்தைத் தடுத்த பெற்றோர்கள், பிறகு பேசிக் கொள்ளலாம் என்று அப்போதைக்கு அந்த பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

தன் அறையினுள் நுழைந்த நிரஞ்சன் அரக்க பறக்க நந்தனாவிற்கு போன் செய்தான். பலமுறை ரிங் அடித்தும் அவள் அழைப்பை ஏற்க வில்லை

‘ச்சே இவ வேற எனக்குன்னு. ஃபோனை எடுக்காமல் எங்க போய்த் தொலைஞ்சாளோ!’

பலமுறை முயற்சித்து ஏமாந்தவன் கடுப்புடன் அரும்பாடு பட்டு உறங்கினான்.

***

மருத்துவமனையில் நிரஞ்சனின் முன் சற்று வயது முதிர்ந்த கணவன் மனைவி அமர்ந்திருந்தனர்.

அதில் அப்பெண்மணி “டாக்டர்! என் பொண்ணுக்கு நிஜமா உங்களால உதவ முடியுமா?” ஆதங்கம் தோய்ந்த குரலில் கேட்க

“கண்டிப்பா முடியும்மா. முகத்தில் காயங்கள் நல்லா ஆறி இருக்கு. அவங்களுக்கு பயமும் கொறஞ்சிருக்கு. ஸ்கின் க்ராப்ட்டிங் பண்ணிக் கண்டிப்பா முடிஞ்ச வரை சரி செய்ய முடியும்! பழைய படி இல்லைனாலும் எவளோ முடியுமோ அவ்ளோதூரம் சரி பண்ணிடலாம்”

“எங்க கிட்ட ரொம்ப பண வசதி இல்லை…” பெண்ணின் தந்தை கண்ணீருடன் துவங்க

“அதெல்லாம் நாங்க பார்த்துக்குறோம் சார்.” என்றவன் ஆறுதலாய்,

“இப்படி ஆசிட் அட்டாக்கால பாதிக்கப் பட்ட பெண்களுக்கு இலவசமா சிகிச்சை தர்றதுதான் எங்க எண்ணமே. உங்களுக்குப் பின்னால மருத்துவச் செலவு எது வந்தாலும் உதவ எங்க தன்னார்வலர் அமைப்பு இருக்கு.

நீங்க செலவைப் பத்தி இனி யோசிக்காதீங்க. நீங்க உங்க பொண்ணுக்கு தைரியம் சொல்லக் கூடவே இருங்க. அவங்களுக்கு நம்பிக்கை கொடுக்கிற மாதிரி பேசுங்க. அதுதான் அவங்களுக்கு மன வலிமையை தரும், அவங்க சீக்கிரமா சகஜமாக உதவும்.”என்றவன் மேலும் சிகிச்சையை பற்றியும் அவர்கள் செய்யவேண்டியதை பற்றியும் அவர்களுக்கு தெரியப்படுத்தி, நம்பிக்கையும் கொடுத்தான்.

இதில் மிகவும் நெகிழ்ந்த அப்பெண்ணின் பெற்றோர்கள் அவனைக் கையெடுத்து வணங்கி மிகவும் உணர்ச்சிவசப் பட, அரும்பாடுபட்டு நிரஞ்சனும் செவிலியரும் அவர்களைச் சமாதான படுத்தி அனுப்பி வைத்தனர்.

தொலைப்பேசியில் வைஷாலியை தொடர்புகொண்டான் நிரஞ்சன், “வைஷு அந்த பொண்ணு கிட்ட பேசினியா? எத்தனை இம்ப்ரொவ்மென்ட்தெரியுதா?”

“பேசினேன் முன்னைவிட இப்போ நல்ல முன்னேற்றம் இருக்கு. இன்னும் தாழ்வு மனப்பான்மை கொஞ்சம் இருக்கு, பயமிருக்கு, அது தெளிய இன்னும் சில செஷன்ஸ் வேணும்னு வீணா (மனோதத்துவ டாக்டர்) சொன்னா. நானும் பேசறேன்.”

“வெரி குட்! முடிஞ்சா நம்ம குரூப்லிருந்து சில பேரை அனுப்பி அப்போ அப்போ பேசச் சொல்லு, கூடிய சீக்கிரம் சர்ஜரி டேட் பிக்ஸ் செய்யலாம்.”

“ம்ம் சரி சொல்றேன். தேங்க்ஸ்டா!”

“எனக்கெதுக்கு தேங்க்ஸ் சொல்றே?”

“தெரியலை தோணிச்சு சொன்னேன். சரி என்ன சொல்றா உன் நந்தனா?” புன்னகையுடன் வைஷாலி கேட்க,

அதுவரை பணியில் முழுமனதுடன் இருந்தவன் நந்தனாவை மறந்தே போயிருந்தான். வைஷாலி நினைவூட்டவே, முன் தினம் வீட்டில் பேசியது நினைவிற்கு வர

“வைஷு…நான் அப்புறம் கால் பண்றேன்டா. டோன்ட் மிஸ்டேக் மீ!” அழைப்பை அவசரமாய் துண்டித்தவன். தன் கைப்பேசியை டேபிள் இழுப்பறையிலிருந்து எடுத்தான்

‘என்ன இதனை மிஸ்டு கால்?’ தன் குடும்பத்தினர், நந்தனா என இருபதுக்கும் மேற்பட்ட தவறவிட்ட அழைப்புகள் இருக்க, யாரை முதலில் அழைப்பதென யோசித்திருக்கும் சமயம், தங்கை நிவேதாவின் அழைப்பு வந்தது.

பதட்டமாக நிவேதா “டேய் எத்தனை தரம் கால் பண்றேன்?” என்று கேட்க,

“ஹேய் பேஷண்ட் இருக்கும்போது ஃபோன் எடுக்கமாட்டேன்னு தெரியாதா? புதுசா கேக்கறே?” கடிந்து கொண்டவன் “அப்படி என்ன விஷயம் எல்லாரும் ரவுண்டு கட்டி கால் பண்ணிருக்கீங்க?”

“அது..” நிவி துவங்கும் பொழுதே அவன் தாயிடமிருந்து அழைப்பு வந்தது.

“இரு அம்மா கால்…” தங்கையின் அழைப்பைத் துண்டித்துத் தாயின் அழைப்பை ஏற்றான்.

“சொல்லுமா”

“சாரி கண்ணா! ஃப்ரியா? பேசலாமா?”

“எஸ் சொல்லுமா”

“கண்ணா எத்தனை மணிக்கு இன்னிக்கு கிளம்ப முடியும்?”

“இப்போ தான் லாஸ்ட் ஓபி முடிச்சேன். ரவுண்ட்ஸ் முடிச்சா கிளம்பிடுவேன்மா. என்ன விஷயம்?”

“சரி கண்ணா. வா பேசிக்கலாம்” அழைப்பைத் துண்டித்தார்.

ஹாஸ்பிடலில் அனுமதிக்கப் பட்டிருந்த நோயாளிகளைப் பார்வையிட்டவன் காரில் வீடு திரும்பும் நேரம் மறுபடி நந்தனாவின் கைப்பேசிக்குத் தொடர்பு கொள்ள முயற்சிதான்.

இப்பொழுது பிஸி என்று வர ‘நான் பண்ணும்போது மட்டும் எடுக்காதே இல்ல பிசியா இரு!’ அலுத்துக்கொண்டவன் தன் வீட்டினை அடைந்தான்.

அவன் உள்ளே நுழையும் நேரம் குடும்பத்தினர் தயாராய் ஹாலில் அமர்ந்திருக்க “என்ன விஷயம் எங்கயான போறோமா என்ன?” தன் ஷூவை கழற்றியபடி கேட்க

“நீ போய் குளிச்சுட்டு சீக்கிரமா வா! நந்தனா வீட்ல எல்லாரும் கத்துக்கிட்டு இருப்பாங்க” மைதிலி சொல்ல வாயிலில் ஷாக் அடித்தது போல நின்றுவிட்டான் நிரஞ்சன்.

“என்ன? என்ன சொல்ரீங்க?” பதட்டமாகக் கேட்டான்

“நந்தனா வீட்டுக்குக் கிளம்பறோம். சீக்கிரம் தயாராகி வா பா” ஜெகந்நாதன் சொல்ல,

இனி பேசி எதுவும் நடக்காதெனத் தந்தையின் பார்வையிலிருந்த கண்டிப்பு காட்டிக்கொடுக்க, குழப்பமும் பதட்டமுமாய் குளிக்கச் சென்றான்.

காரில்

“நான் தான் நேத்து அவளோ சொன்னேனே. ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கிறீங்க?” எதற்கும் முயற்சிக்க எண்ணிச் சொல்ல

“நாங்க அவங்க வீட்டில் பேசிட்டோம்பா, நீ எதற்கும் கவலைப் படாதே” ஜெகந்நாதன் சொல்ல, மறுப்பு சொல்லமுடியாமல் மௌனமாகி விட்டான்.

***

நந்தனாவின் வீட்டில்,

நந்தனா சரஸ்வதியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள், “அம்மா நீயாவது அப்பாகிட்ட சொல்லேன். இப்போ கல்யாணம் வேண்டாம் மா”

“அதான் ஏன்னு கேட்குறார்ல? நீ விருப்பப்பட்ட படி நிரஞ்சனைதானே நிச்சயம் பண்ண போறோம்? வேற என்னாதாண்டி உனக்கு வேணும்?”

சரஸ்வதி கோவமாகக் கேட்க

“அம்மா புரிஞ்சுக்கோ. நான் இன்னும் படிச்சே முடிக்கலை. இதுக்கு அப்புறம் நான் என்னென்னமோ ஆசை வச்சுருக்கேன் அதெல்லாம் என்ன ஆகும்?”

பின்னாலே வந்து அவளின் தலையைப் பிடித்து ஆட்டிய ஸ்ரீராம் “அதானே? நீ அவனை காதலிக்கிறயா இல்லையா? ஊரில் இருக்க ஜோடியெல்லாம் காதலிச்சவங்களையே கல்யாணம் செய்யத்தானே விருப்ப படுறாங்க. உனக்கு பிடிச்ச பையனையே பேசி முடிக்க போறோம் அப்புறம் எதுக்கு இந்த முனகல்?” சந்தேகமாகக் கேட்டான்

“அதுக்கில்ல டா”

“அப்புறம்?”

“அவருக்குன்னு சில லட்சியம் இருக்கு. அதெல்லாம் அவர் சாதிக்க அவகாசம் வேணும். நானும் படிச்சு முடிக்கணும்”

“காதலிக்கும்போது இதெல்லாம் தெரியலையா?” குற்றம்சாட்டும் குரலில் ஸ்ரீராம் கேட்க,

‘அடப்பாவி காதலிச்சாதானே தெரியும்?’

“இல்லைடா அவருக்கு செட்டில் ஆக டைம் வேணும். நானும் படிச்சு முடிக்கணும் . கொஞ்ச வருஷம் ஆகட்டுமே”

“எவளோ வருஷம் ஒரு அஞ்சு பத்து வருஷம் போதுமா ?”

“ம்ம் எஸ் எஸ்” ஆர்வமாகப் பதில் தந்தாள்.

“என்ன விளையாட்டா? அவர்கள் வந்துகிட்டு இருக்காங்க இப்போ எதுக்கு தேவை இல்லாத பேச்சு?”

“அவர் செட்டில் ஆகணும். நிறைய சாதிக்கனும்”

“ஏண்டி அவன் ஆல்ரெடி டாக்டர் ஆகிட்டானே. அவன் சொந்த ஹாஸ்பிடல்ல வேற வேலைபாக்குறான். இன்னும் என்ன செட்டில் ஆகணுமாம்?”

“அவருக்கு அதெப்படி பெருமையாகும்? அவர் சொந்த கால்ல நிற்க ஆசை படுறார்”

“ஹாஹா! இப்போ என்ன இரவல் காலிலா நிக்குறான்?”

“டேய் ஏன்டா இம்சிக்கிற?”

கைப்பேசியில் காஞ்சனாவுடன் பேசியபடி வந்த கண்ணன் “சரி மா” அழைப்பைத் துண்டித்து பிள்ளைகளைப் பார்த்து,

“ஸ்ரீராம்! காஞ்சனா வண்டி சர்வீஸுக்கு போயிருக்காம். நீ போய் கூட்டிண்டு வா.” என்றவர்

இன்னும் பைஜாமா ட்ஷர்ட்டில் மனைவியுடன் எதோ வாதம் செய்துகொண்டிருக்கும் மகளைப் பார்த்து, “இன்னுமா ரெடி ஆகலை நீ?” கடிந்துகொண்டார்.

கெஞ்சும் குரலில் “அப்பா! ப்ளீஸ்பா! இப்போ கல்யாணம் வேண்டாமே”

“என்ன விளையாடுறியா ? உனக்கு பிடிச்ச பையன் தானே? அப்புறமென்ன? போ சீக்கிரம் தயாராகு”

குறுக்கிட்ட ஸ்ரீராம் அவள் சொன்ன காரணங்களைத் தந்தையிடம் சொல்ல, கண்ணனுக்கு கோவம்தான் அதிகமாகியது.

“என்ன நந்து இது? நல்ல உத்யோகத்துல இருக்கான். நீயும் பைனல் இயர்ல(கல்லூரி இறுதியாண்டு) தான் இருக்கே. இன்னுமென்ன?”

“அப்பா! அவர் அப்பா ஹாஸ்பிடல் அது. அவருக்கு ஒரு அடையாளம் வேண்டாமா? அவருடைய தனித் திறமையை அவர் நிரூபிக்க ஆசை படுறார். நிறைய லட்சியம் வச்சிருக்கார், கொஞ்சம் அவகாசம் கேளுங்களேன்”

“என்னமா இது குழந்தை மாதிரி? கல்யாணம் பண்ணிக்கிட்டா அவன் கனவுகளுக்கு நீ உறுதுணையா இருக்க மாட்டியா? இல்லை உன் ஆசைகளை அவன் நிறைவேத்த மாட்டானா? அதுதானே அன்பு? உங்க பாஷையில் காதல்!”

தந்தையின் இந்த கேள்விக்கு என்ன விடை கொடுக்க முடியும்? எதுவும் பேசாது தயாராகி மெளனமாக அமர்ந்திருந்தாள்.