Jeevan 19

Jeevan 19

உன்னோடு தான் … என் ஜீவன்…

பகுதி 19

வண்ண மலர்கள் பூத்து குலுங்கும் சோலைக்கு நிகராய், அழகிய இளம் உவதிகளும், இளைஞர்களும் நிறைந்திருந்த அந்த கல்லூரியில் நுழையும் போதே ஒருவித புத்துணர்வு எழ, தனது டுக்காட்டியை அதனிடத்தில் நிறுத்திய ஆரன், அவர்களுக்கான பகுதிக்கு செல்லாமல், மனதில் தோன்றிய உல்லாசத்தோடு அங்கிருந்த கல்மேடையில் அமர்ந்திருந்தான்.

மனதின் உல்லாசத்திற்கான காரணத்தை நினைத்தவனின் இதழ்களோ, இப்போதும் அழகாய், கவர்ச்சியாய் புன்னகையை உதிர்க்க, அவ்வழி சென்ற பல கன்னியர்களின் பார்வையும் அவனை கவர்ந்தே சென்றது. அவர்கள் பார்வை புரிந்தாலும், எதிர்வினை காட்டாது, அமர்ந்திருந்தவன் நினைவு முழுதும் காலையில் வீட்டில் நடந்த கூத்தே.!

கௌதமால் நேரமே கண்விழித்த ஆரன், அவனின் மன்னிப்பு கேட்கும் படலத்தில், தன்னால் இயன்ற வரை, அவனை கதற வைத்து இறுதியாய், “ஏதோ இவ்வளவு தூரம் கெஞ்சறதால விடுறேன்!” என சமாதானத்திற்கு வந்தவனுக்கு, அதற்கு மேலும் தூக்கம் வராது போக, ‘ஆரா! எழுந்தது எழுந்த இன்னைக்காச்சும் நேரமே காலேஜ் போலாம். முதல் நாள் வேற!’ என சிந்தித்தவன், மடமடவென குளித்து, தனது கலரிங் முடிக்கு ஜெல் வைத்து, அதை ஸ்பெக் போல செய்தவன், காதில் சிலுவை போன்ற ஒற்றை தோடு, கையில் மணிகள் கோர்க்கப்பட்ட, பல வர்ணங்களால் ஆன கயிறு, கழுத்தில் பெரிதாய் ஒரு சங்கிலி என ரெடியாகி வெளியே வந்தவன்,

தனது அலுவலுக்காக ரெடியாகி சாப்பிட காத்திருந்த சாமுவேலை நெருங்கி, “டாட் குட் மார்னிங்!” என்றதும், அதிசயமாய் அவனையும், தனது கையில் இருக்கும் வாட்சையும் பார்த்தவர், அடுத்து தனது போன், வீட்டு ஹால் என அடுத்து அடுத்து பார்க்க, பொறுமையிழந்த ஆரன்,

“டாட்! என்னாச்சு?! ஒரு குட்மார்னிங் சொன்னா திரும்ப சொல்லாம என்னத்த பார்க்கறீங்க?!” என்றவனை, “டைம் சரியா தான் காட்டுதான்னு ஒரு டவுட் செல்லம்! அதான்…!” என கிண்டலாய் அவனிடம் சொல்லி சிரிக்க, அவரின் கிண்டலுக்கு, ‘தான் இன்று நேரமே எழுந்தது, தயாராகி வந்திருப்பது தான் காரணம்!’ என்று தெரியாதா அவனுக்கு…

அவரை பார்த்து தனது முறைப்பை செலுத்தியவன், “என்ன நக்கலா? பையன் நேரமே எழுந்தா பாராட்டனும் அதவிட்டு நக்கலடிக்கறது சரியில்ல சாமூ. அப்புறம் பின்விளைவு நல்லா இருக்காது!” என எச்சரிக்கை போல சொல்ல, அவனை பார்த்தவர், மேலும் பொங்கி வந்த சிரிப்பை அடக்குவது போல வாயை தன் கரத்தால் பொத்திக்கொண்டு சிரிக்க, கடுப்பின் உச்சிக்கே சென்ற ஆரன், “என்ன சிரிப்பு? அதுவும் இவ்வளவு நக்கலா?!” என கேட்டதற்கு, அவன் தந்தை சொன்ன பதிலில் ..

“ஜெனி….!” என கத்த, சமையல் அறையில் அன்றைய டிபன் வேலையில் மும்முரமாக இருந்த ஜெனிபர், என்னவோ ஏதோ என பதறி ஓடி வர, சாமுவேலோ, ‘போச்சு! வாய வச்சிட்டு சும்மா இல்லாம சீண்டி விட்டோமே! இப்ப எப்படி சமாளிக்க!’ என்பது போல திரு திருவென விழித்துக் கொண்டிருந்தார்.

“என்னடா ஆச்சு! எதுக்கு இப்ப உயிர் போற மாதிரி கத்தின?!” என கேட்டவாரே வந்த ஜெனியை நெருங்கி அனைத்தவன், தனது முகத்தில் சோகத்தை வரவழைத்து கொண்டு, “மீ, பாரூ சாமூவ, என்னைய எப்படி கிண்டல் செய்றாரூன்னு! இவரே இப்படி செஞ்சா?!” என வராத கண்ணிரை துடைப்பது போல, தன் தாயின் தோளில் கண்ணை துடைக்க, பதறி போன ஜெனியோ, “குழந்த அழுகற மாதிரி என்னத்த சொல்லி தொலஞ்சிங்க இப்ப?” என காளி போல நின்று கேட்டவரை கண்ட சாமுவேலுக்கு நன்கு தெரிந்து போனது இன்று மூன்று வேளையும் வீட்டு சாப்பாடு ‘கட் ..’ என்பது…

பரிதாபமாக முழித்த படி, “ஜெனிம்மா! நா ஒண்ணுமே சொல்லலடா…..!” என துவங்கும் போதே இடையிட்ட ஆரன், “மாம் பாருங்க! சொல்றத சொல்லிட்டு இப்ப எதுவுமே சொல்லல சொல்றாரூ. அப்ப என்ன பொய் சொல்றவன்னு சொல்லாம சொல்லிட்டாரு!” என மீண்டும் தூபம் போட, “அதானே அவன நீங்க எதுவுமே சொல்லாம தான் இப்படி புள்ள முகம் வாடி போச்சா?!” என கேட்டவருக்கு, பின் பக்கமாய் நின்று ஆரன் காட்டும் கோணாங்கி தனத்தை பார்த்து, ‘தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே!’ என்ற ஆதங்கத்துடன், அவனை பார்த்து முறைக்க.. அதுவும் ஜெனியின் கண்ணில் விழ, மீண்டும் தனது பாராட்டு மழையில் நன்கு நனையவைக்க துவங்கினார்.

ஆரனோ அவரின் பேச்சிற்கு தகுந்தாற்போல செய்யும் செய்கை, ஒரு பக்கம் சிரிப்பை தந்தாலும் சிரித்து வைத்தால் மேலும் ஜெனியிடம் வாங்கி கட்டுவது யார்? என்ற எண்ணத்தோடு அமைதியாய் தன்னை கட்டுப்படுத்தி அமர்ந்திருந்தவரை போதுமான அளவு வருத்தெடுத்தவர், “இனிமே எதாவது அவன் முகம் வாடி போற மாதிரி நடந்துச்சு…..!” என்றவர்,

மெதுவாக ஆரன் பக்கம் திரும்பி , “இப்ப சொல்லு செல்லம், என்னடா உன்னோட டாட் சொன்னாங்க?” என கேட்டதை பார்த்த, சாமுவேலின் மனம், ‘க்கும்! இவ்வளவு நேரம் என்னன்னு தெரியாமையே பூஜை நடந்துச்சு. அடுத்து தெரிஞ்சிட்டா?! இன்னமும் எவ்வளவு நேரம் அர்ச்சனை வாங்க வேணுமோ?!

யார் மூஞ்சில முழிச்சேன். வேற யாரு! எல்லாம் என் பொண்டாட்டி மூஞ்சியா தான் இருக்கும்! காலைல ஜாக்கிங் போகும் போது வச்ச பஞ்ச எடுக்காம இருந்திருந்தா நல்லா இருந்திருக்குமே?!’ என எண்ணிக்கொண்டவர், அடுத்த கட்ட அர்ச்சனைக்கு தயாரானார்.

ஆரன், ஜெனி கேட்ட கேள்விக்கு ‘பதிலை சொல்லிடவா?!’ என்பது போல சாமுவேலை பார்க்க, அவரோ, ‘நீ சொன்னாலும், சொல்லாட்டியும், நீ கொடுத்த ஏக்ட்டுக்கு எப்படியும் கண்டிப்பா சோறு கிடைக்க போறது இல்ல!’ எனும் பார்வை பார்க்க, கெத்தாய் அவரை பார்த்து கண் சிமிட்டி, ‘இனி என்ன பத்தி பேசுவீங்க?!’ என கண்ணாலேயே கேட்க, ‘மகனே! உன் ரூட்டுக்கே வரமாட்டேன்!’ என்பது போல பரிதாப பார்வை பாத்தவரை, ‘அது…!’ என்பதாய் ஒரு லுக் விட்டுவிட்டு,

ஜெனியின் கேள்விக்கு பதில் சொல்லாமல், “மாம், செம பசி, சாப்பிட கொண்டு வராம, இதென்ன வெட்டி பஞ்சாயத்து!” என தனது வயிற்றில் கையை வைத்து சோகமாய் கேட்க, அதற்கு முன்பு நடந்தது எல்லாம் கனவோ எனும் விதமாக ஆரனிடம் தான் கேட்ட கேள்வியையும் மறந்து சமையறையை நோக்கி சென்றார் மகனின் பசியை மட்டுமே மனதில் கொண்டு….

ஆரனுக்கு மட்டும் உணவு கொண்டு வந்தவரை, சமாதான படுத்தி சாமுவேலுக்கு உணவை கொடுக்க வைக்க, மீண்டும் இல்லாத சேட்டையொல்லாம் செய்து, ஒருவழியாய் கிளம்பி வந்ததை நினைத்தவனுக்கு, தனது தந்தையின் அப்பாவி முகபாவனை மனதில் வந்துபோக அவனின் புன்னகையும் வாடாமல் இருந்தது இப்போதும்…

அதே புன்னகையோட தனது விழியை சுழற்றியவன், அவனை கடந்து சென்ற பல நாகரீக பெண்களுக்கு இடையே, குனிந்த தலை நிமிராமல், வாயில் எதையோ முனுமுனுத்தபடி சென்ற பெண்ணை பார்த்தவனை, ஏதோ ஒன்று, தொடர்ந்து கவனிக்க தூண்ட, அவள் செல்வதை மட்டுமே பார்த்தவரே அமர்ந்திருந்தான் ஆரன் சாமுவேல்.

********

கௌதம், இன்று தனது செல்லம்மாவை காணும் உற்சாகத்தோடு கல்லூரிக்கு கிளம்பியவன், அவளை பார்க்கும் ஆவலில், உடை மாற்ற செய்த அலப்பரையை நினைத்தவன், “நீ என்னைய பைத்தியமா மாத்தாம விடமாட்ட போலவே….! நா செஞ்சது மட்டும் ஆரனுக்கு தெரிஞ்சா! ஓட்டியே ஒரு வழியாக்கிடுவான்!” என தனக்கு தானே , சிரித்தபடி மாடியிலிருந்து இறங்கியவன், தன்னை பார்த்த வேலைக்காரர்களின் காலை வணக்கத்தை ஏற்றுக் கொண்டவன், தனது காலை உணவை விரைவாக முடித்து, அவசரமாக தனது வாகனத்தை எடுக்க வர, அவனின் தொலைபேசி, தொல்லையாய் ஒலித்து, அவனின் வேகத்திற்கு தடை போட, கடுப்போடு அதை எடுத்தவன், அதில் தனது கம்பெனியின் முக்கிய பொறுப்பில் இருப்பவரின் அழைப்பு என்பதை பார்த்தவன், மற்றதை மறந்து அவரின் கேள்விக்கு பதிலளிக்க துவங்கினான்.

ஒருவழியாக அவரின் அனைத்து சந்தேகத்திற்கும் விடையளித்தவன், “நா, ஈவினிங் அங்க வரும் போது மீதி எதுக்கெல்லாம் க்ளாரிபிகேஷன் வேணுமோ, அதையெல்லாம் ரெடி பண்ணி வைங்க!” என சொல்லி, மேலும் வந்த ஒரிரு அழைப்புகளையும், பார்த்து விட்டு அங்கிருந்து கிளம்பியவன், ஏற்கனவே காயத்ரியிடம், அவளின் பிரிவு குறித்து தெரிந்து வைத்திருந்ததால், நேராக அங்கே சென்றான்.

******

தான் பார்த்துக்கொண்டிருக்கும் பெண்ணின் செய்கையில் இருந்த தடுமாற்றமே, அவளை மேலும் ஊன்றி கவனிக்க வைக்க, அவளின் பாதையில் வழி மறித்த சிலரின் பேச்சு, கேட்கும் தூரமில்லாது இருந்த போதும், அவர்களின் பேச்சிற்கு அந்த பெண்ணின் முகம் காட்டிய வேதனை நன்கு உணர முடிந்தது ஆரனால்..

அவர்கள் பேச்சிற்கு, முதலில் பதில் சொல்லாமல் இருந்தவள் இறுதியில் ஏதோ சொல்ல, அவளை ஆங்காரமாய் பார்த்த படி நெருங்கிய பெண்ணின் நோக்கம் நொடியில் விளங்க, அவர்களை நோக்கி வேகமாய் விரைந்தான் ஆரன் சாமுவேல்.

அவன் அவர்களை நெருங்கும் நேரம், அந்த பெண்ணின் கூந்தலை பற்றிய படி, அடிக்க ஓங்கிய பெண்ணை தடுக்க கையை நீட்டியவனுக்கு முன்பு, அவள் கன்னத்தை பதம் பார்த்திருந்தது மற்றொரு கரம். “அம்மா…!!!” என கத்தியபடி கீழே விழுந்த பெண்னை விட்டு விலகி நின்றவன், ‘யார்ரா அது?!’ என்று திரும்பி பார்க்க, ருத்ர மூர்த்தியாய் நின்றிருந்தான் கௌதம் சக்கரவர்த்தி.

தன் டுக்காட்டியை அவளின் ப்ளாக்கிற்கு செலுத்திய கௌதம் கண்டது, அவனின் செல்லம்மாவை அன்று மாலில் வைத்து டீஸ் செய்த கும்பல், இன்றும் வழி மறைத்து நிற்பதை தான்….

விரைவாக அவ்விடம் செல்லவும், அந்த பெண்ணின் வார்த்தையை கேட்டவன் ஆத்திரத்தோட அவளை நெருங்க, அதே நேரம் அவளும் காயத்ரியை அடிக்க செல்லவும், ஆத்திரத்தில் இதுவரை எந்த பெண்ணையும் கை நீட்டி அடித்திராத கௌதம் முதல் முறையாக ஸ்வேதாவை அடித்திருந்தான்.

உடற்பயிற்சியால் முறுக்கேறிய கௌதமின் கைகள் அவளின் கன்னத்தில் விழுந்த நொடி அவளின் இதழில் இருந்து சிறிது ரத்தம் கசிய, அவனின் ஐந்து விரல்களும் அவள் கன்னத்தில் பதிந்திருந்தது .

ஆரன், கௌதம் இருவரின் கவனமும் காயத்ரியின் மீதே இருந்ததால், இருவரும் ஒருவரை ஒருவர் இந்த நிகழ்வு நடக்கும் வரை பார்க்கவில்லை. இப்போதும் ஆரன் கௌதமை பார்த்த அளவு கூட, கௌதம் ஆரனை கவனித்ததாய் தெரியவில்லை. அவனின் முழு கவனமும் அந்த பெண்ணின் மீதே இருந்ததை ஆரன் வியப்பாக பார்த்திருந்தான்.

இதுவரையிலும் யாரும் திட்டி கூட கேட்காத ஸ்வேதாவை பொருத்த வரையில் இது மா பெரும் தன்மானப்பிரச்சனை. அதுவும் தன்னை அடித்தது தான் மணக்க நினைத்தவன் என்பதும், இந்த காயத்ரிக்காக தன்னை அடித்தது என மேலும் அவளுக்குள் ஆங்காரத்தையே கொடுத்தது. அவளின் ஆணவம், ஆங்காரம் இரண்டும் மேலும் அவள் மீது வன்மத்தை விதைத்தது.

ஸ்வேதாவின் கண்களில் தெரிந்த வன்மத்தை உணர்ந்த கௌதமிற்கு, ‘அவளால் தன்னவளை தன்னை மீறி என்ன செய்ய முடியும்?!’ என்று தான் தோன்றியது.

இதுவரை அவன் யாரையும் எதிரியாய் பார்த்ததும் இல்லை. தனக்கு எதிராய் யாரும் வர விட்டதும் இல்லை. அப்படி பட்டவனுக்கு, ‘தன்னை மீறி, தன்னை சார்ந்தவரை, அதும் ஒரு பெண்ணின் வஞ்சம் என்ன செய்யும்?!’ என்றே தோன்றியது.

கௌதமிற்கு, “பல புகழ் பெற்ற சாம்ராஜ்யங்கள், இருக்குமிடம் தெரியாமல், அழிய காரணமே பெண்ணின் வன்மம் தான்!” என புரியாது போனது அவனின் விதி.

“ஏய்! எவ்வளவு தைரியமிருந்தா என் மேல கை வைப்ப? அதும் இந்த தயிர்சாதத்துக்காக, என் மேல கை வச்சதுக்கு ஒவ்வொரு நாளும் நீ வேதன படற மாதிரி செய்யல, நா ஸ்வேதா கிடையாதுடா!”

“அப்ப காட்டேரின்னு பேர் வச்சுக்க ரொம்ப பொருத்தமா இருக்கும்!” என்ற கௌதமின் நக்கலான பதிலில்,

அருகே இருந்த ஆரன், வாயில் விரல் வைத்து, அதிசயமாய் கௌதமை பார்த்திருந்தான், ‘இப்படியெல்லாம் கூட பேசுவீயா நீ!’ என்ற சிந்தனையோடு!

ஏற்கனவே கொதிப்பில் இருந்தவள், “யூ ப்ளடி…..
நீ தானேடீ, இது அத்தனைக்கும் காரணம். உன்ன நிம்மதியா வாழ விடமாட்டேன்டீ.!” என ஆங்காரமாய் முழங்கியவள், அடுத்த நிமிடம் தன் காரை எடுத்துக்கொண்டு கல்லூரியிலிருந்து வெளியேறியிருந்தாள்.

*******

ஸ்வேதா அவ்விடம் விட்டு நகர்ந்த பிறகும் காயத்ரிக்கு அதிர்ச்சி விலக வில்லை. அவளின் முடியை பிடித்த ஸ்வேதாவின் மற்றொரு கரம், தன்னை பதம்பார்க்கும் என்ற அச்சத்தில் விழி முடியவள், ஸ்வேதாவின், “அம்மா…!” என்ற அலரல் சத்தத்தில் தான் கண் திறந்தாள்.

அங்கு ருத்ர அவதாரமாய் தன்னை ஒரு கையால் அணைத்து, கண்களில் அனல் தெரிக்க ஸ்வேதாவை முறைத்து நின்ற கௌதமை பார்த்தும், அவனின் அந்த கோபமான முகம் அவளின் பயத்தை கொடுத்தாலும், ஸ்வேதாவின் சவால் வேறு கூடுதல் பதட்டத்தை தர, கௌதமிடமிருந்து விலகி நிற்க வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லாமல் மேலும் அவனுடன் ஒட்டி கொண்டாள் அவனின் செல்லம்மா!

அவளின் பயம், பதட்டம் இரண்டும் உணர்ந்தவன் அவ்விடத்தில் மேலும் நிற்க விரும்பாமல், அவளின் கரத்தை பிடித்து நடந்தவன், சிறிது தூரத்தில் இருந்த கல்மேடையில் அவளை அமர வைத்து, அங்கிருந்த ஒருவரிடம் தண்ணிர் பாட்டிலை வாங்கி கொடுக்க, அவளுக்கோ பதட்டத்தில் மூடியை கூட திறக்க இயலாமல் கைகள் நடுங்க ஆரம்பித்தது.

அதை பார்த்தவனுக்கு, அவளின் நடுக்கம் எதனால் என்பது தெளிவாக புரிய நேற்று போலவே இன்றும் அவளை திசை திருப்ப நினைத்தவன், அங்கிருந்த யாரின் காதிலும் விழாதவாறு மெல்லிய குரலில் அவளிடம், “செல்லம்மா! ஏன் கை இப்படி நடுங்குது?! கூல் டா” என்றவன், கொஞ்ச நேரம் பேசாமல், தீவிரமாக யோசிப்பதாய் பாவனை செய்ய,

அவனின் பேச்சு சத்தம் இல்லாததால், அதுவரை பாட்டிலை பார்த்தவாரே தலைகவிழ்ந்து இருந்தவள், மெல்ல நிமிர்ந்து கௌதமின் முகம் பார்க்க, ‘அவனின் தீவிர யோசனை எதற்காக இருக்கும்?’ என நினைத்தவளை பார்த்தவன்,

“செல்லம்மா! பஸ்ட் நைட்டுக்கு பால் கொண்டு வருவாங்களே, அது மாதிரி நம்மளோடதுக்கு நீ கொண்டு வராத, அத நானே கொண்டு வர்றேன்” என சீரியஸ் டோனில் சொல்ல,

‘என்னடா இது ! இப்ப எதுக்கு இத பேசறாரூ?!’ என அதிர்ச்சியும், ஆராய்ச்சியுமாய் பார்த்தவளுக்கு, அவனின் செல்லம்மா என்ற அழைப்பு வித்தியாசம் கூட உணரமுடியவில்லை.

“ஏன் நா அப்படி சொல்றேன்னா, இப்ப நடந்ததுக்கே இப்படி நடுங்குனா, நம்ம கல்யாணம் முடிஞ்சு, முதல் தடவை வரும் போது இத விட பலமடங்கு டென்ஷன்ல நீ இருப்ப. அப்போ உன் கை இப்படியே டேன்ஸ் ஆடினா பால் முழுசா வருமா?! வராதில்ல!” என கண்ணடித்து, சொன்னவனின் செய்கையில்,

அவன் எதிர்பார்ப்பை வீணாக்காமல், முதலில் புரியாது “ஙே.!!. ” என்ற பார்வையை காட்டியவள், புரிந்த நொடியில் முகம் சிவக்க, “ஏன்னா இப்படி?! இத தவிர வேற பேச மாட்டேளா?! அதும் காலேஜ்ல வச்சு?! மானம் போறது!” என சிணுங்கலாய் கூற…

விளையாட்டாய் அவளிடம் கூறியவன் இப்போது அவளின் சிணுங்களில், “உண்மையாய் அப்படி நடக்கும் போது…..!” என கற்பனையாய் நினைக்க ஆரம்பித்தவன் மூளையோ…

“டேய் கௌதம், நைட் நீ எடுத்த முடிவு என்ன.? பாத்த பத்து நிமிஷத்துல, அந்த புள்ள கிட்ட பேசற பேச்சு என்ன.? நல்லா…. முடிவு எடுத்து மெயின்ட்டெயின் பண்ற! உன்னை வேற நல்லவன்னு அந்த புள்ள நம்புது. வெளங்கினாப்புல தான்..!” என காறி துப்பாத குறையாய் திட்ட….

மனசாட்சியோ, “கௌதம், அது கிடக்குது, நீ அவகிட்ட மட்டும் தான் இப்படி பேச முடியும், எல்லோரோடவா பேசற… விடு பாத்துக்கலாம் ” என சமாதானபடுத்த…

மனது சொன்னதை ஏற்றவன், “ஏன் செல்லம்மா, அப்ப காலேஜ்ல வச்சு பேசாம, வேற எங்க வச்சு பேசலாம் சொல்லு, பேசலாம்!” என தன் ஒற்றை கண் சிமிட்டி அவளை கேட்க….

காயத்ரியோ தன் இரு காதையும் கரங்களால் மூடிய படி, “பெருமாளே! ஏன் இப்படி மானத்த வாங்கறேள்?! இந்த பேச்ச விடுங்கோன்னா…” என கெஞ்சலாக கூற..

இதற்கும் மேலும் அவளை சீண்டுவது தவறு என்பதால், அமைதியாய் அவளின் கையிலிருந்த பாட்டிலை திறந்து கொடுக்க, அதை குடித்தவள்,
“ஏன்னா! எப்படி கரெக்ட்டா அவா என்ன அடிக்கறச்ச வந்தேள்?! நா பயந்துட்டே வந்தேன் தெரியுமோ.. ?! ” என ஆர்வத்தோடு கேட்க,

தான் அங்கு வந்த உண்மை காரணத்தை கூறாமல், தன் சிரிப்பை அடக்கியபடி அவளிடம், “நீ என்ன அந்த நேரத்தில நினச்ச தானே?!” என கேட்க… அவள் “ஆம் ” என்று தலையசைத்ததும்… “நா தான் அப்பவே சொன்னேனே! நீ நினச்சா வருவேன்னு” என்று கூற.. “நிஜமாவா…! ” என வியப்பில் விழி விரித்தவள்..

திடீரென தனக்கு பின் பார்த்த படி பயந்து எழுவதை பார்த்தவன், “எதுக்கு இப்ப மறுபடியும் பயந்து போய் பாக்கறா! யாருடா மறுபடியும்?!” என திரும்ப..

இருவரையும் முறைத்த படி நின்றிருந்தான் ஆரன். கௌதம் பேசியது புரியாது போனாலும், அதற்கு அந்த பெண்ணிம் முகம் காட்டிய பாவனையையும், முகச்சிவப்பும் அவர்களின் நெருக்கத்தை காட்ட, தனக்கே தெரியாது எப்படி இது சாத்தியம் என்ற எண்ணத்தோடு முறைத்து பார்த்திருந்தவனை பார்த்த, கௌதம், ‘போச்சுடா! காலைல தான் மலையிறக்கினேன். மறுபடியுமா?!’ என நொந்து போய், ‘இப்போது எப்படி சமாளிக்க?!’ என தடுமாறியவனிடம்,

“டேய் யார்ரா இது.?!” என அதிகாரமாய் கேட்ட ஆரனின் கேள்விக்கு.. “ஆரா…. அது நானே… உனக்கு….” என தடுமாற்றமாய் கௌதமின் வார்த்தையில், காயத்ரியின் அச்சம் தான் அதிகரித்தது.

கௌதம் அவனிடம் காட்டும் தடுமாற்றத்தாலும், ஆரனின் கோபம், அவனின் நவநாகரீக தோற்றம் இரண்டும் பார்த்தவள் அவனை நேர் கொண்டு காண பயந்து கௌதம் பின் மறைய, காயத்ரியின் செயலில், ஆரனின் விளையாட்டு குணம் தலைதூக்க,

“யாருடா இந்த பச்சி?! புதுசா?!” என கேட்டு கௌதமை பார்த்து கண்சிமிட்ட, கௌதம் காயத்ரி இருவரில் யார் அதிகமாய் அதிர்ந்தார்கள் என சொல்லமுடியாத படி நிற்க,

‘நல்லா வேணும்டா, எனக்கே தெரியாம கரெக்ட் பண்ண தெரியுது? அப்ப இத சமாளி!’ என கெத்தாய், ஆரன் கௌதமை பார்க்க, அதுவரை கௌதமை பின் பக்கமாய் ஒன்றி இருந்தவள், மெல்ல அவனை விட்டு விலகினாள்.

இன்று விளையாட்டாய் இருவருக்குள்ளும் பிரிவை உண்டாக்கியவன், பின் நாளில் அதே போன்ற பிரிவை உண்டாக்க போகிறான் என அறியவில்லையே அவர்களில் யாரும்…

********

தனது இயலாமையையும், கோபத்தையும், தன் காரின் மீது காட்டிய ஸ்வேதா, தன் வீட்டிற்குள் நுழைந்த நொடி… “டாடீ….. ” என ஆங்காரமாய் கத்த..

அவள் வந்து நிறுத்திய காரின் சத்தத்திலேயே பதறிய அவளின் தாய் வசந்தி, இப்போது அவள் வந்து போட்ட சத்தத்தில் அவசரமாக வெளிவந்து பார்க்க தன் மகளின் கோலம் கண்டு அதிர்ந்து போனார்….

“அம்மாடி! என்னடா கோலம் இது?! யார்டா, இப்படி உன்ன அடுச்சா?!” என கேட்ட தாயின் பரிவு அவளின் மூளைக்கு செல்லவே இல்லை. அவளின் முழு கவனமும், தன் தந்தை வரவையே எதிர்நோக்கி இருந்தது.

அவளின் கூச்சலில், அவளின் தந்தை கிரிதரன், தனது அலுவலக அறையில் வைத்து ஒருவனின் சொத்தை அடித்து பறிக்கும் உன்னத வேலையை பார்த்துக்கொண்டிருந்தவர், வெளியே வர, அவளின் இந்த நிலையை பார்த்ததும் ரத்தம் கொதித்து தான் போனது.

தவறு தன் மகளே செய்தாலும், இதுவரை கண்டிப்பை காட்டாது, பாசத்தை மட்டுமே காட்டி வளர்த்தவர் முன், இவ்வாறு வந்து நின்ற மகள் நிலை அவரின் மனதை வேதனைபடுத்தியது.

“குட்டிம்மா!செல்லம்! என்னடாம்மா?! யாருடா அது?! என் பொண்ணு மேல கை வச்சது?! அவனோட கைய எடுக்காம விடமாட்டேன்… சொல்லுடா.. ?!” என தன் கோபத்தில் பொரிய…

அதே நேரம் அங்கு வந்த ஸ்வேதாவின் அண்ணன் துஷ்யந்த்தும், அவளின் நிலை பார்த்து கோபத்துடன் அவளை நெருங்க….

“டாடீ! எங்க காலேஜ்ல ஒருத்தன் தான் இப்படி பண்ணிட்டான் டாடீ.!” என தேம்பலாய் அங்கு நடந்த அனைத்து விசயத்தையும் கூற….

துஷ்யந்த், “குட்டிம்மா!யாரு அவன்? நீ என் தங்கச்சின்னு அவனுக்கு தெரியுமா, தெரியாதா?! எவ்வளவு தைரியமிருந்தா உன் மேல கை வைப்பான்! எந்த டிபார்ட்மெண்ட்?! என்ன இயர்?! அவன அப்பா சொல்ற மாதிரி கைய எடுத்துட்டு வந்து பேசறேன்!” என ஆவேசமாய் பொங்கிட,

“நோ! அவனோட கைய எடுக்க கூடாது! அவன் எனக்கு வேணும். இந்த ஸ்வேதாக்கு அடிமையா! ஆனா அங்க மீச்சமிருந்த ரெண்டு பேருக்கும் சரியான பாடம் கத்துகொடுக்கணும்” என்றவளை கேள்வியாய் நோக்கிய தந்தையையும், அதிர்ந்து பார்த்த தாயையும் கணக்கில் கொள்ளாமல்,

தன் தமையனை நோக்கியவள், “அவன இதுக்கு முன்னாடி பப்ல பார்த்தேன்!” என்றவள் அவனை பார்த்த அன்று நடந்தது முதல் இன்று காலை வரை சொல்லி முடிக்க, பப்பில் என்று ஆரம்பித்தும், வசந்தி, ‘இதுக்கு வேற எங்க இருந்து கிடைக்கும், பிடிச்சதும் பிடாரி தான் போல! வந்து வாய்க்குது பாரு!’ என தன் மகளின் குணம் அறிந்து மனதில் வருந்த, அடுத்ததாக மகள் சென்னதை கேட்டு, ‘அவன் வந்தால் தான் இவளுக்கு சரியோ?!’ என சிந்திக்கலானார்.

“அம்மாடி ஸ்வேதா! நீ அந்த பொண்ண வம்பிழுக்க போய் தானே, இத்தன பிரச்சனையும், இதுல நீ சொல்றபடி பார்த்தா அந்த பையனுக்கும், பொண்ணுக்கும் முன்னமே பழக்கம் இருந்திருக்கலாம். அவளுக்கு தேவையான நேரத்துல சரியா வந்திருக்கான்னா, நீ விலகி இருக்கற தானேடா நல்லது” என தாயாய் நல்போதனையை வசந்தி சொல்ல,

விழியில் அனல் பறக்க, “நோ அவன் அவள தொட்டதையே என்னால பார்க்க முடியல. இதுல அவங்கள சேர்த்து வச்சு பேசறத கேட்டா ஆத்திரமா வருது. தயவு செஞ்சு இன்னொரு முறை அவங்கள சேர்த்து வச்சு என் முன்னாடி பேசாத. மீறி பேசினா அம்மான்னு கூட பார்க்காம கொன்னுடுவேன்!” என கத்தியதில் சர்வமும் ஒடுங்க நின்றார் வசந்தி.

மகளின் ஆவேசத்திலேயே, அவள் அவனின் மீது கொண்ட ஆசை(?!) புரிய, வசந்தியை பார்த்து முறைத்தவர், “இங்க பாரு, என் பொண்ணு ஆசபட்டவன் ஜில்லா கலெக்டரா இருந்தாலும் சரி, பிச்சகாரனா இருந்தாலும் சரி, அவன தூக்கிட்டு வந்து கட்டி வைப்பேன். அதோட காலமுழுக்க அவளுக்கு சேவகமும் செய்ய வைக்கற திறமை என்கிட்ட இருக்கு. அதனால வாய மூடிட்டு போய் வேலைய பாரு!” என்றவர் மகனிடம் ஜாடை காட்ட,

“குட்டிம்மா! ஒரு நிமிஷம் நீ வா என் கூட ” என அவளின் அறைக்கு அழைத்து வந்த துஷ்யந்த்… “யாருடா அவன், பப்ல, மால்ல, இப்ப காலேஜ்ல பார்த்திருக்க. உன் கூட சுத்தற பொண்ணு சொல்லி பேரும், காலேஜ் படிக்கறான்னு சொல்ற. அவன பத்தி தெரிஞ்சிட்டு உன் வாழ்க்கைய முடிவு பண்ணலாம்டா. அவன் வேணுமின்னே உன்ன இம்ப்ரஸ் பண்ணி நம்ம சொத்துக்கு ஆசை பட்டு நடந்து இருந்தா?!” என சொல்லி முடிக்கும் முன்,

“என்னோட வேல ரொம்ப சிம்பிள். சீக்கிரமா கல்யாணத்த முடிங்க. சொத்துக்காக கட்டினாலும், எனக்காக கட்டினாலும் இங்க தானே இருப்பான். அப்ப அவன பார்த்துக்கறேன். இந்த ஸ்வேதா மேல கை வச்சவன், அவளுக்கு கூஜா தூக்கிட்டு, அதே காலேஜ்ல வர்றத எல்லாரும் பார்க்கணும்!” என அதே ஆவேசத்தோடு கூற…

“குட்டிம்மா, நா சொன்னது ஒரு வியூ தான். அவன் அப்படி இல்லாம நிஜமாவே அந்த பொண்ண விரும்பி, அதுக்காகவே உன்கிட்ட சண்டை போட்டிருந்தா, அடுத்தவள நினச்சவன கட்டிக்க போறையா?!” என கேட்டு முடிக்கும் முன்பு, தன் அருகே இருந்த பூஜாடியை தூக்கி போட்டு உடைத்தவள், “அவன் லவ்வென்ன கல்யாணமே பண்ணி, புள்ள குட்டியோட இருக்கும் போதும், எனக்கு தேவைன்னா அவன், அவங்கள தூக்கி போட்டுட்டு வரனும். அவள அடிக்க கை ஓங்கும் போது இன்னொருத்தனும் அதே மாதிரி அடிக்க வந்தான்! அப்ப அவனும் அவளோட லவ்வர் சொல்லுவியா?!” என சொன்னவள்,

“டேய் அண்ணா! உனக்கு ஒரு விசயம் தெரியுமா? அந்த லூசு மாமிக்கு லவ்வெல்லாம் செட்டாகாதுடா. அது சரியான அம்மாஞ்சி. அவனுங்கள பார்த்தா நிச்சயம் பணம் இருக்கற ஆள் மாதிரி தான் தெரியுது. சோ, அவள கரெக்ட் பண்ணி மேட்டர முடிக்க வேணுமின்னா ட்ரை பண்ணுவானுங்கலே ஒழிய லவ்வெல்லாம் கிடையாது.

லவ்வுன்னு சொன்னாலே, இது குளிர்காய்ச்சல்ல தான் விழுகுமே தவிர திருப்பி லவ் சொல்லாது. இங்க இருந்து வெட்டி அரட்ட அடிக்காம போய் உன் வருங்கால மாப்பிள்ளைய இந்த வீட்டுக்கு எப்படி பேக் பண்ணலாமின்னு பாரு. அதோட என்ன பார்த்து கை ஓங்க நினச்ச இன்னொருத்தன விடாத. அந்த அம்மாஞ்சிய நானே டீல் பண்ணிக்கறேன் புரியுதா?!” என கேட்டவளிடம்,

“ஓகேடா! குட்டிம்மா நைட்டுக்குள்ள அவனுங்க யாரு என்னன்னு பார்த்துட்டு, அவனுங்களுக்கான தண்டனைய பிக்ஸ் பண்ணிடலாம். நீ ஒரி பண்ணாம ரெஸ்ட் எடு. டாக்டர வர சொல்றேன். டேக் கேர்” என சொல்ல, ‘சரி!’ என தலையசைத்தவள், அங்கிருந்த பாத்ரூமில் நுழைய, சில முடிவுகளை செய்ய துஷ்யந்த் தன் தந்தையை நாடி சென்றான்.

கீழே வந்ததும் முதல் வேலையாக மருத்துவருக்கு அழைத்து, வீட்டிற்கு வர செய்தவன், மருத்துவர் செல்லும் வரை பொறுமையாய் இருக்க, அவனை நெருங்கிய கிரிதரன், “துஷ், குட்டிம்மா என்ன சொல்றா?!” என கேட்க, அவளின் முடிவை சொன்னவன், அங்கிருந்தே அவளின் கூட்டாளிகளுக்கு, போன் செய்தவன், அந்த மூவரையும் புகைபடம் எடுத்து அனுப்ப சொன்னான்.

அவர்கள் அனுப்பிய புகைபடத்தை தனக்கு தெரிந்த டிட்க்டீவிடம் அளிக்க, அன்று மாலைக்குள் அனைத்து தகவலும் தருவாக சொல்லிவிட, அதுவரை காத்திருக்க முடிவு செய்தனர் தந்தையும், மகனும்..

தாங்கள் எதிர்கொள்ள போகிறவன் தங்களை காட்டிலும் எ…ல்…லா விதத்திலும் உயர்ந்தவன் என்பதை அறியாமல், அவன் தங்கையின் எண்ணத்தை முழுதாய் நிறைவேற்றுவானா?!

இவர்கள் அவனை நெருங்குவதற்கு முன்பே, தன்னையும், தன்னவளையும் சுற்றி அழகாய் ஒரு சக்கரவீயுகம் அமைத்துவிட்டிப்பான், அந்த கெட்டிகாரன் என இவர்கள் அறியும் போது!!!

error: Content is protected !!