கண்ணாடி மாளிகை – அத்தியாயம் 1
பிப்ரவரி பதினான்கு – வேலடைன்ஸ் டே! சமீபகாலமாக நம் நாட்டிலும் நாகரிக போர்வையில் பரவி வரும் காதலர் தினம். அன்று ஓர் சனிக்கிழமையாகவும் அமைந்திருந்தது.
இடம் வாஷிங்டன்: காலை நேரம்.
வாஷிங்டன் விமானநிலையம் அமைத்திருக்கும் இடத்திலிருந்து, சற்று தொலைவில் அமைந்திருந்தது அந்த குடியிருப்பு. நாம் ஜெர்கின், ஷூ, சாக்ஸ் இல்லாமல் அந்த சாலையில் பயணிக்க முடியாத அளவிற்குக் குளிர் நடுங்கச் செய்தது.
அப்பொழுது ஒரு வெள்ளை நிற பி.எம்.டபில்யூ கார் நம்மைக் கடந்து சென்று ஒரு குடியிருப்பு முன் நிற்க, அதிலிருந்து ஒயிலாக இறங்கினாள் ஓர் பெண். இல்லை தேவதை என்றும் கூறலாம். அந்த பெண்ணின் சாயல் ஓர் இந்தியப் பெண்மணி என்று கூறினாலும் அவள் தலை முடியின் நிறமும் இந்தியப் பெண் என்று கூற முயன்றாலும், அவள் தேகத்தின் நிறம், அவள் அமெரிக்கப் பெண்ணாக இருக்க வேண்டும் என்று அடித்துக் கூறியது.
நம் ஊர் சாயலிலும், அவர்கள் நிறத்திலும் அப்சரஸாக ஜொலித்தாள். கையில் ரோஜா கொத்துகளுடன் அவள் வேகமாக நடக்க, அவள் உடை நவநாகரீகமாக இருந்தாலும், அவள் உடல் அழகை எடுத்துக் காட்டியபடி பாந்தமாகப் பொருந்தி இருந்தது.
அந்த குடியிருப்பில் ஓர் வீட்டிற்குள் நுழைய, அங்குப் படுத்திருந்த இளைஞர்கள் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தனர். வீடு இருக்கும் முறையைப் பார்த்தே, அது ஆண்கள் தங்கி இருக்கும் வீடு என்று நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது.
“ஹாப்பி வேலடைன்ஸ் டே…” என்று சத்தம் செய்து கொண்டே, அசைந்தாடியபடி உள்ளே நுழைந்தாள் அந்த பெண், அவள் ஜெர்க்கினை கழட்டிக் கொண்டே, “என்ன இது வேலடைன்ஸ் டே அதுவுமா இப்படி தூங்கறீங்க?” என்று கேட்டாள் யாரையோ தேடியபடி.
“அது சரி… உன்னை மாதிரி யாரவது வந்து எங்களுக்காக விஷ் பண்ணா காலையிலேயே எந்திருக்கலாம.” என்று முணுமுணுத்தபடி அந்த இளைஞன் சோர்வாக அமர, “விஜயை தானே தேடுற… அந்த ரூமில் இருக்கான்.” என்று கைகாட்டினான் மற்றொரு இளைஞன்.
ஆம், அம்மா, அப்பா, சகோதர, சகோதரிகளுக்கும், நண்பர்களுக்கும் ஆண், பெண் பேதமின்றி இவர்கள் அன்பை வெளிப்படுத்தும் நாளே வேலடைன்ஸ் டே. இதில் காதலர்களும் அடக்கம்!
“விஜெய்…” என்று அழைத்துக் கொண்டு, அவன் அறைக்குள் நுழைந்தாள் அந்த பெண்.
உள்ளே சென்றவுடன் அவனைக் கட்டி அணைத்து… இதழில் பழரசம் பருகி , “ஹாப்பி வேலடைன்ஸ் டே விஜய்…” என்று அவள் கூற, அவளின் செய்கை அவள் வளர்ப்புக்கு சாதாரணமாக இருந்தாலும், விஜய் எதிர்பாராத இந்த செயலில் சற்று தடுமாறிப் போனான்.
ஆம்… அது அவர்களின் நாகரிகம். தன்னவனுக்கு கொடுக்கும் அங்கீகாரம். அது இங்கும் பரவி வருவது தான் பலரை கேள்வி குறியில் ஆழ்த்துகிறது.
ஒரு நொடி தாமதிப்புக்குப் பின், தன்னை சுதாரித்துக் கொண்டு, “ஹாப்பி வேலடைன்ஸ் டே லீலா…” என்று ஆழமான குரலில் கூறினான் விஜய் என்றழைக்கப்பட்ட விஜயேந்திரன்.
அவன் குரலில் காதல் வழிந்தோட, அதை உள்வாங்கியபடி அவனிடம் சிவப்பு ரோஜா கொத்தை நீட்டினாள் லீலா.
“லவ் யு டார்லிங்…” என்று கூறியபடி அவளிடம் ரோஜாக்களைப் பெற்றுக் கொண்டு, “இட்’ஸ் யுவர் டே… இன்னைக்கி முழுசா வெளிய சுத்துறோம்.” என்று கூறி, தன் கையிலிருந்த சாவியை கழட்டியபடி, விஜய் கிளம்ப , அவன் கைகளைப் பற்றியபடி விஜயோடு வெளிய கிளம்பினாள் லீலா.
அவர்கள் வாஷிங்டனில் இருக்கும் கலெரியா மால் செல்ல, லீலா, விஜய் இருவரும் காதல் மொழி பேசிக்கொண்டே, சுற்ற… திடீரென்று லீலாவின் கைகளைப் பற்றி, “வாட் ஐஸ் ஈட்டிங் யூ மை பேபி.” என்று புருவம் உயர்த்தி கேட்டான் விஜயேந்திரன்.
“நத்திங்… நான் எதுவமே சொல்லலியே.” என்று கூறி லீலா தலை அசைக்க, குட்டையாக வெட்டப்பட்டிருந்த அவள் கூந்தல், லீலா கூறுவது பொய் என்பது போல் அங்குமிங்கும் சிலும்பிக் கொண்டு நின்றது.
“ஆஹான்… நீ சொல்லலைனாலும் உன் கண்கள் சொல்லும். நீ சொல்லலைனாலும் என் அருகாமையில் உன் இதய துடிப்பு சொல்லும்.” என்று கண்சிமிட்ட, லீலா கண்கலங்கினாள்.
“ஏய்… பேபி… வாட் ஐஸ் திஸ்?” என்று உருக்கமான குரலில் கூறி, அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டான் விஜயேந்திரன்.
“லீலா… காம் டவுன்… நான் எதுமே கேட்கலை… நீ சிரிச்சிகிட்டே இரு. ஒகே?” என்று விஜய் கூற, “நீ கேளு… என்கிட்டே எதாவது கேட்க, உன்னைத் தவிர யார் இருக்கா?” என்று தலை சிலுப்பிக் கூறினாள் லீலா.
லீலாவின் தலை கோதி, “சரி சொல்லு…” என்று பொறுமையாகக் கேட்டான் விஜேந்திரன்.
அதே நாள், சென்னையில்…
மாலை மெரினா கடற்கரை.
காதலர்கள் கூட்டம் அலைமோதியது.
மிளகாய் பஜ்ஜி, ஐஸ் கிரீம், சுண்டல் என அனைத்துமே அமோகமாக வியாபாரமாகியது. அந்த இளவட்டங்களைப் பார்த்துப் பொறாமை கொண்ட இள வியாபாரிகளும் உண்டு. அவர்களின் நடத்தையைப் பார்த்து, வருத்தப்பட்ட வயது முதிர்ந்த வியாபாரிகளும் உண்டு.
“ஜோசியம்… ஜோசியம்….” என்று சத்தம் செய்ய வாய்ப்பில்லாமல், அவர்களுக்கு இன்று வேலை அதிகமாக இருந்தது. கிளி ஜோசியம், கை ரேகை என அனைத்துமே விறுவிறுப்பாகச் செயல் பட்டுக் கொண்டிருந்தது.
வேற என்ன? அனைவருக்கும் தங்கள் காதல் கை கூடுமா? என்ற ஆவல் தான்!
அப்பொழுது கடற்கரையில் அமர்ந்திருந்தாள் சுடிதார் அணிந்த ஓர் இளம் கல்லூரி பெண். அவள் அருகே இருந்த கல்லூரி பையும், புத்தகங்களும் அதைத் தெளிவாகப் பறைசாற்றியது. கோதுமை நிறத்தை விடச் சற்று கூடிய நிறம். பேசும் விழிகள். வரைந்தது போல் அழகிய முக வடிவும். அந்த முகத்தில் கடுங்கோபம்.
நிரஞ்சனாவின் எண்ணங்கள் பின்னோக்கி சென்றது.
சென்ற வருடம், இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் பொழுது இந்திரன் குரூப் ஆப் கம்பனிஸ்க்கு பயிற்சிக்காகச் சென்ற பொழுது, நிரஞ்சனா முகுந்தனைச் சந்தித்தது நினைவு வர, அவள் முகத்தில் ஒரு அழகிய புன்னகை பூத்தது.
அவள் தோழிகள் அனைவரும் முன்னே சென்றுவிட, வழி தெரியாமல் தவறி, அவசரப்பட்டு நிரஞ்சனா ஓர் அறைக்குள் நுழைந்துவிட்டாள்.
உள்ளே அமர்ந்திருந்தவனைக் கண்டதும், “சா.. சா…. சாரி… சா… சா… சார்…” என்று நிரஞ்சனா தடுமாற, “தட்’ஸ் ஓகே. நீங்க இவ்வுளவு டென்ஷன் ஆகுற அளவுக்கு ஒண்ணுமில்லை. டிரைனிங் நெக்ஸ்ட் ரூம்.” என்று அவள் கல்லூரி பெண் என்று யூகித்துவிட்டு சிரித்துக் கொண்டே கூறினான் முகுந்தன்.
நிரஞ்சனா அறையை விட்டு வெளியே செல்ல சட்டென்று திரும்ப, “யுவர் குட் நேம் ப்ளீஸ்….” என்று முகுந்தன் கேட்க, நிரஞ்சனா அவனை விழி உயர்த்தி பார்த்தாள்.
‘முதல் முறை சந்தித்த பெண்ணிடம் இந்த கேள்வி தேவையா?’ என்ற எண்ணத்தோடு நிரஞ்சனா அவனை விழி உயர்த்தி பார்க்க, ‘ஏன் கேட்டோம்?’ என்றறியமால் தன் கண்களைத் தாழ்த்தி சிந்தித்தான் முகுந்தன்.
தடுமாற்றத்தோடு ஆரம்பித்த இவர்கள் சந்திப்பு, இன்று காதலாக வேர் விட்டு வளர்ந்து மரமாக நிற்க, “அக்கா… சுண்டல்…” என்ற அழைப்பில் நிகழ் காலத்திற்கு திரும்பினாள் நிரஞ்சனா.
மறுப்பாக தலை அசைத்தாள் நிரஞ்சனா. அவள் கடலுக்கு மிக அருகே தனியாக அமர்ந்திருக்க, அந்த கடற்கரை நீர், அவள் பாதத்தைத் தொட்டுச் சென்றது.
‘அதுக்கு அப்புறம் எத்தனை முறை காலேஜ் வந்திருக்காங்க. லவ் பண்ண ஆரம்பிக்கும் பொது மட்டும்… சுத்தி சுத்தி வர வேண்டியது. அப்புறம் நாம இவங்களுக்காக காத்திருக்கணும்.’ என்று கோபத்தோடு சிந்தித்தாள் அவள்.
‘ஒருவேளை வேற எதாவது பிரச்சனையாக இருக்குமோ?’ என்று அவள் காதலனுக்காக, காதல் கொண்ட மனது அவளிடமே மன்றாடியது.
அவள் முகுந்தன் என்ற பெயருக்கு அலைப்பேசியில் அழைக்க, பதிலில்லை. மீண்டும், மீண்டும் அழைக்க, “ம்..ச்…” என்ற சத்தத்தோடு மொபைலை எடுத்தான் முகுந்தன்.
“எவ்வுளவு நேரம்… நான் உங்களுக்கு காத்திட்டு இருக்கேன்?” என்று கோபமாக வெளிவந்தது அவள் குரல். முகுந்தன் ஏதோ பேச ஆரம்பிக்க, “மொபைல் கூட எடுத்து பேச முடியாதா?” என்று நிரஞ்சனா மீண்டும் கோபமாக கேட்க,அங்கு மௌனமே நிலவியது.
“உனக்கு இதுவே வழக்கமா போச்சு… இன்னைக்கி கூட சீக்கிரம் வர கூடாதா? நான் மட்டும் உனக்காக வீட்ல, பொய் சொல்லி காலேஜ் கட் அடிச்சிட்டு இங்க வந்து காத்திருக்கணுமா?” என்று நிரஞ்சனா பரிதாபமாக கேட்க, “நிரஞ்சனா…” என்று முகுந்தன் எதோ கூற ஆரம்பிக்க, “உனக்கு என் மேல் கொஞ்சம் கூட லவ் இல்லை… இல்லைனா வேலடைன்ஸ் டே அன்னைக்கி என்னை இப்படி வெயிட் பண்ண வைப்பியா?” என்று நிரஞ்சனா கண்களில் கண்ணீர் மல்கக் கேட்டாள்.
“ஆமா டீ… நான் உன்னை லவ் பண்ணலை… என்னை மாதிரி பணக்கார பையன் உன்னை மாதிரி ஒரு மிடில் கிளாஸ் பொண்ணை ஏன் லவ் பண்ணனும்? ஜஸ்ட் டைம் பாஸ்… போதுமா… போ… உனக்கும் எனக்கும் ஒரு மண்ணுமில்லை.” என்று கூறி தன் அலைப்பேசி பேச்சைத் துண்டித்தான் முகுந்தன்.
தன் அலைப்பேசியைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் நிரஞ்சனா. நிரஞ்சனாவால் தான் கேட்டதை நம்பவும் முடியவில்லை.. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
‘முகுந்தன் எப்படி அப்படி சொல்லலாம்? நான் அப்படி என்ன பேசிட்டேன். அவன் சொல்வது தான் நிஜமோ?’ என்று நிரஞ்சனாவின் மனம் அவள் அறிவை விட வேகமாக வேலை செய்ய, கண்களில் கண்ணீரோடு கடலை நோக்கி நடக்க ஆராம்பித்தாள் நிரஞ்சனா.
கண்ணாடி மாளிகையில் நம் பயணம் தொடரும்…