Jeevan 21(2)

Jeevan 21(2)

போனில் வந்த செய்தியின் விளைவால்,

தன்னால் எவ்வளவு விரைவாக சென்றிட முடியுமோ, அவ்வளவு தூரம் வேகமாக, ஆரன் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையை அடைந்த கௌதம், ஆரன் நிலையறிந்து செய்வதறியாமல் தவித்து தான் போனான்.

ஐ சீ யூ வாயிலில், தனக்கு அழைத்த நபரை கண்டறிந்து அவரை அணுகியவனை, “சார்! அவருக்கு ஆக்சிடெண்ட் ஆகி கொஞ்ச நேரம் ஆகியிருக்கும் போல. நாங்க அந்த ரூட்ல வந்ததால தெருஞ்சு இங்க கொண்டு வந்தோம். ஐ சீ யூ கொண்டு போனாங்க.

இதுவரை டாக்டர் வெளிய வரல. நர்ஸ் யாரும் நம்பிக்கையா எதுவும் சொல்ல மாட்டிங்கறாங்க” என சொன்னதும், தனது பலமெல்லாம் தேய்ந்து, இருக்குமிடம், தனது உயரம் அனைத்தும் மறந்து தனது நண்பனை பிரிந்திடுவோமோ?! என்ற அந்த 5 வயது கௌதமாய் மாறி தவித்தவனை தேற்றத்தான் அங்கே ஆள் இல்லை.

எவ்வளவு நேரம் அப்படியே இருந்தானோ, ஐ சீ யூ வை விட்டு டாக்டர் வெளியே வர, பாய்ந்து அவரிடம் சென்றவன், “டாக்டர் ஆரனுக்கு?!” என கண்ணில் வேதனையை சுமந்து, பரிதவிப்போடு கேட்டவனின் மனதை குளிர்விப்பது போல,

“அவருக்கு பெருசா எதுவும் இல்ல. பைக்ல ஸ்கிட் ஆனதுல வலது கால்ல கொஞ்சம் அடிபலமா விழுந்திருக்கு. கையில லைட்டான அடி. நல்ல வேளை ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டியிருக்காறூ. அதனால, தலைல சின்ன அடி கூட இல்ல. நாங்க செய்ய வேண்டியத செஞ்சிட்டோம். டோண்ட் வொரி, வித் இன் ஒன் வீக், ஹீ வில் பீ பர்பெக்ட்லி ஆல் ரைட். டேக் கேர்” என சொல்லிய பிறகே மனதின் அழுத்தம் குறைந்து மீண்டும் தனது நிலைக்கு திரும்பினான்.

செல்ல இருந்த மருத்துவரை நிறுத்தியவன், அந்த சிறு மருத்துவமனையில் வைத்து பார்ப்பதை விட எல்லா வசதியும் நிறைந்த பெரிய மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் இன்னும் சீக்கிரம் சரி செய்ய வாய்ப்பு உள்ளதா?! என கேட்க, அவனின் உடையின் பகட்டு அவனின் செல்வநிலையை உணர்த்த,  
“தாராளமா ஷிப்ட் பண்ணலாம். பட் ஒரு டூ ஹவர் கழிச்சு செய்ங்க. அதுக்குள்ள இங்க இருக்கற பார்மாலிட்டீஸ் முடிச்சிட்டு டிஸ்சார்ஜ் பண்ணிக்கோங்க!” என சொல்லிட,

துரிதமாய் செயல்பட்டு, அடுத்த இரண்டு மணி நேரத்தில், சென்னையின் மிகவும் பெரிய, முக்கியமான ஹாஸ்பிடலில் சேர்த்தவன், அங்கிருந்த ஷீப் டாக்டரின் வாயிலிருந்து வந்த, “ஹீ ஈஸ் பைன். டோண்ட் வொரி!” என்ற வார்த்தைக்கு பிறகே ஓய்ந்து அமர்ந்தான்.

இதற்கிடையே, ஆரனை அழைத்து வந்தவர்களுக்கு, கிடைத்த சிறு இடைவெளியிலும், பல நூறு நன்றிகளை கூறியவன், எந்த உதவியானாலும் தன்னை அணுகும் படி தனது அட்டையை கொடுக்க, அதை பார்த்த பின்னே அவனின் உயரம் புரிந்த அவர்களுக்க ஆச்சர்யமும், அவனின் பழகும் எளிமையால் அதிசயத்து தான் போயினர்.

அதன்பிறகு அவர்கள் விடை பெற்று செல்ல, யாரென்று அறியாமலே இவ்வளவு தூரம் உதவிய அவர்களின் நல்ல மனதிற்காக மேலும் பல நன்றிகளை கூறி, அவர்களை அனுப்பி வைத்தவனுக்கு, அப்போது தான் தோன்றியது தான் இன்னும் ஆரன் வீட்டிற்கு சொல்லாததே…

இந்த நிலை தனக்கு எவ்வளவு வேதனை கொடுத்ததோ, அதைவிட அதிகமாய் ஜெனிபர் தவித்து போவார் என நினைத்தவன், மனதில் தைரியத்தை வரவழைத்து கொண்டு சாமுவேலுக்கு அழைத்து ஆரனுக்கு அடிபட்டதை சொல்லிட, சாமுவேலின் பதறிய குரலே அவரின் நிலையை கூறிட, “அங்கிள்! நீங்க நினைக்கற அளவுக்கு இல்ல. சின்ன அடி தான்!” என கூறி அவரை சமாளிக்கவே கௌதமிற்கு மூச்சு திணறி போனது.

இனி ஜெனிபர் வந்தால் என நினைத்தவனுக்கு, அவரின் ஆரன் மேலான பாசம் நன்கு தெரியுமாதலால்,  தனது நண்பனின் அடிபடா இடதுபக்கத்தில் அமர்ந்து, அவன் தான் தனக்கு எல்லாவற்றையும் சமாளிக்க கூடிய தைரியத்தை தருவது போல, கைகளை இறுக பற்றி ஆரன் பெற்றோர் வரவிற்கு காத்திருந்தான்.

அவன் எதிர்பார்ப்பை வீணாக்காமல் ஜெனிபர் வந்ததும், தன் மகன் படுத்திருப்பதை பார்த்து, அவர் துடித்ததை பார்க்க பார்க்க கௌதமின் கண்களும் கலங்கி தான் போனது.

ஜெனிபரை ஒருவாறு சமாளித்து, மருத்துவமனையில் இவ்வாறு நடந்தால் வீட்டிற்கு அவரை அனுப்பிவிடுவார்கள் என மிரட்டி ஒருவழியாய் அமைதியாய் அமர வைக்கவே சாமுவேலுக்கு போதும் போதுமென்றாகிட, மகனின் இந்த சூழலுக்கு வருந்த கூட அவருக்கு இடைவெளி கிடைக்கவில்லை.

எல்லாம் சரியாகிய நேரம், மெல்ல தனது மயக்கத்திலிருந்து விழித்தான் ஆரன் தனது உடலில் வலி முகத்தில் தெரிய…  அவனை பார்த்திருந்தவர்கள், அவனை விட கூடுதலான வலியை உணர்ந்தனர் அவனின் முகம் சுருங்கியானதை கண்டு…

ஆரன் கண்விழிக்க காத்திருந்தது போல அங்க வந்த காவலர்கள், அங்கே நடந்தது குறித்த விவரங்களை தனியே ஆரனிடம் சேகரிக்க முற்பட, கௌதம் சாமுவேலையும், ஜெனிபரையும் வெளியே அனுப்பினாலும், தான் அங்கேயே இருப்பேன் என சாதித்து, அதற்கு மறுக்க நினைத்தவரின் எண்ணத்தை ஒரே போன் காலில் முறியடித்துவிட்டு,

“இப்ப ஆரன் இருக்கற கண்டிஷனுக்கு, உங்க என்கொயரிய அப்புறம் வச்சுக்க கூடாதா?!” என கராராய் கேட்க,

முன்பே வந்த மேலிடத்து உத்திரவினால் தன்மையாகவே, “சார், நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியுது. இது சாதாரண விபத்தா இருந்தா ஓகே. ஆனா ஒரு வேளை இது திட்டமிட்ட கொலை முயற்சியா இருந்தா! அந்த கொலைகாரன் தப்பிக்க போதுமான அவகாசம் கொடுக்க கூடாதே” என விளக்க,

இதுவரை விபத்து என்ற பார்வையில் மட்டுமே அமைதியாய் இருந்தவன், இது கொலை முயற்சியாக இருக்கலாம் என்றதும், ‘அப்படி மட்டும் இருந்தா, என்னோட ஆரனுக்கு நடந்ததுக்கு உண்டான பதிலடி கொடுக்காம ஓயமாட்டேன்!’ என மனதில் முடிவு செய்தவன், ‘எனக்காவது பிசினஸ் வகையில் எதிரிகள் அதிகம், தெரிந்தும் தெரியாமலும்… ஆனால் ஆரன் எந்த பிரச்சனைக்கும் போகாதவன், அவனின் குறும்பு, விளையாட்டுதனத்தை ரசிப்பவர்கள் தான் அதிகம். இன்ஸ்பெக்டர் நினைப்பது போல இது கொலை முயற்சியாக இருக்க வாய்ப்பில்லை!’ என்ற நம்பிக்கையோடு,
ஆரனிடம் அவர்கள் விசாரிக்க அனுமதித்து, விலகி நின்றாலும், அவன் சொல்வதை உன்னிப்பாக கவனிக்க துவங்கினான்.


“சார், காலேஜ் முடிஞ்ச உடனே நீங்க வீட்டுக்கு போயிருந்தா, அந்த டைம்ல விபத்து நடக்க ச்சான்ஸ் இல்லையே?! பர்ஷனல் வொர்க் எதாவது…!” என கேட்ட இன்பெக்டரின் வார்த்தையின் உள்குத்து கௌதமிற்கு விளங்கினாலும், ‘விசாரணை முடியட்டும் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்!’ என்ற எண்ணத்தோடு நிற்க…

மேலும் அவரே தொடர்ந்து, “என்ன நடந்ததுன்னு சொல்ல முடியுமா?!”  என கேட்டதும், ஆரன் தனது வரண்டு போன தொண்டையை சரி செய்து, முயற்சி செய்து மெல்ல அன்று மாலையிலிருந்து நடந்ததை சொல்ல, ‘தான் மட்டும் அவனை நோட்ஸ் எடுக்க வற்புறுத்தாமல் இருந்திருந்தால் இப்படி ஆகியிருக்காதோ?!’ என்ற எண்ணத்தால், குற்றஉணர்வோடு கேட்க துவங்கியவன், லாரி வந்ததை பற்றி சொல்லிக்கொண்டே தன்னை தேடும் ஆரனின் பார்வை உணர்ந்து, அவனின் இடதுகரத்தை பற்ற, இப்போது தான் நேரில் லாரி வருவது போன்று தோன்றியதோ என்னவோ ஆரனின் கரத்தில் கண்ட நடுக்கம், அந்த ஓட்டுநர் மட்டும் கௌதம் கையில் கிடைத்தால் அவனை அங்கேயே கொன்று புதைத்திருப்பான்.

இன்ஸ்பெக்டர் கேட்கும் முன், “ஆரா நல்லா யோசிச்சு சொல்லு, அந்த லாரி உன்ன எய்ம் பண்ணி தான் வந்துச்சா. இல்ல..?!” என அழுத்தமாக கேட்க, “கௌதம் நிச்சயமா என்னை எய்ம் பண்ணி தான் வந்திச்சு. அதுல நோ டவுட். பட், அவங்க என்ன காயபட்டுத்த மட்டும் தான் நினச்சிருக்காங்க. அந்த லாரி வந்த ஸ்பீடுக்கு அப்படியே அடிச்சிருந்தா இந்த நேரம்….” என சொல்லி நிறுத்தியவன் கூற்று விளங்க, தவித்து தான் போனான் கௌதம்.

இன்ஸ்பெக்டர், தொடர்ந்து சில கேள்விகளை கேட்டு, அவனிடம் தெளிவு படுத்தி வெளியேற, அவர்களை பின்தொடர்ந்த கௌதம், “இன்ஸ்பெக்டர், நீங்க இந்த கேஸ் சம்மந்தமா எந்த தகவல் கிடச்சாலும், எனக்கு தெரியபடுத்துங்க. அவனுங்கள நா பார்த்துக்கறேன்” என சொல்ல,

“சார் இது இல்லீகல். அத நா செய்ய கூடாது” என்றதும், “ஓ! அப்படியா?! நாளைக்கே இந்த கேஸ் வேற ஆள் கைக்கு போக வைத்து, டீடெய்ல்ஸ் வாங்க என்னால முடியும். நீங்களா கொடுத்தா இதே ஊருல இருக்கலாம்!” என மிரட்டலாக சொல்ல, அவன் சொன்ன தோனியே நிச்சயம் செய்வேன் என காட்டிட… “கண்டிப்பா சொல்றேன், சார். மேலிடத்துல… !” என இழுக்க,

“அத நா பார்த்துக்கறேன். நா சொன்னத மட்டும் நீங்க செஞ்சா போதும்.. !” என்றவன், வேட்டைக்கு தயாராகும் வேடுவனாய் காத்திருந்தான் தனது இலக்கை நோக்கி….  

******

மருந்தின் வீரியத்தால் ஆரன் மீண்டும் தூக்கத்தில் ஆழ்ந்து போக, கௌதம், தான்..  இங்கே பார்த்துக்கொள்வதாய் சொல்லிய போது ஜெனிபரின் பேச்சில் வெளியே வந்தவன் காத்திருப்போர் அறையில் தஞ்சமடைந்தான்.

ஜெனிபர் பேச்சு சாமுவேலுக்கு பிடிக்காவிட்டாலும், ஏற்கனவே மகன் விசயத்தில் நொந்து போய் இருப்பவளிடம், மேலும் பேச விரும்பாமல், கௌதமை தேடி வர, தனிமையில் அமர்ந்திருந்தவனை பார்க்க மனதின் பாரம் அதிகமாகி போனது.

அவன் கௌரவத்திற்கும், அவனிடம் இருக்கும் செல்வாக்கிற்கும் அவன் இப்படி இங்கே இருக்க வேண்டியதே இல்லை எனும் போது.. தன் மகன் மீதான அவன் பாசத்திற்கு என்றாவது ஒருநாள் தங்களால் உண்டான கைமாறு செய்திட வேண்டும் என நினைத்தவர், அவனை நெருங்கி, “கௌதம்! ஏன்ப்பா இங்க தனியா உக்காந்திருக்க? ஆரன் மறுபடியும் எழுந்திருக்க காலை ஆகிடும்ன்னு சொல்லிட்டாங்க. நீ வேணுமின்னா வீட்டுக்கு… “என்றவரை தொடர்ந்து பேசவிடாமல்,

“அங்கிள்! அங்க போனாலும் இப்படி தான் இருக்கணும்” என தனது தனிமையை அர்த்தப்படுத்தி சொன்னவன், “அதோட ஆரன் விசயமா சில விசயத்த க்ளாரிஃபை  பண்ணனும்!” என்றதும்,

தனது புருவம் சுருங்க யோசித்த சாமுவேல், “ஏன் கௌதம்! எதாவது பிரச்சனையா?! அப்ப இது தானா நடந்த விபத்து இல்ல?!” என கேட்க, அவரிடம் மறைக்காமல் சொல்வதால், ‘ஆரனின் நிலைக்கு காரணமானவன் அவரின் எதிரியாக இருக்கலாம். இல்லை யென்றாலும், தான் இல்லாத நேரத்தில் இனி அவர் துணை தேவைபடலாம்’ என்பதால் எல்லாவற்றையும் சொன்னவன், “ஆரன பத்தி நல்லாவே தெரியுமே அங்கிள். அவன் குழந்த மாதிரி. அவனுக்கு எதிரி யாருன்னு.. உங்களுக்கு யார் மேலையாவது.. ?” என கேட்க,

தன் மகனிற்கு நடந்தது கொலை முயற்சி என்பதிலேயே ஆடி போனவருக்கு, அடுத்து யோசிக்கும் திறனே செயல்படாது விழிக்க, “விடுங்க நானே பார்த்துக்கறேன். இனி இதுமாதிரி எப்பவும் ஆகாது. என்ன நம்புங்க. போய் ரெஸ்ட் எடுங்க. நாளைக்கு கண்விழிச்சா அவனோட ஃபுல் என்டர்டெயின்மெண்ட் நீங்களா தான் இருக்கும்.. ” என அவரின் மனதை திசை திருப்பி நிலைமையை எளிதாக்கியவன் மீதான நம்பிக்கையில், அவனின் கையை ஒரு முறை அழுத்தி விடுவித்தவர் தனது மகனிடம் விரைந்தார்.

நேரம் நடுஜாமம் ஆகினும், உறக்கத்திற்கான சிறு அறிகுறியும் இல்லாது, நடைபயின்று கொண்டே ‘ஆரனின் நிலைக்கு யார் காரணமாய் இருப்பார்கள்?!’ என எண்ணியிருந்தவன், விசாரணைக்கு வந்த காவலரை அழைக்க, அதை எடுத்த அவரே, “சார் நானே இப்ப கூப்பிட நினச்சேன். நீங்க….” என பேச… “எதாவது தகவல் கிடச்சுதா?! அதமட்டும் சொல்லுங்க..?” என கண்டிப்போடு கேட்க,

“அந்த ஏரியா புல்லா அலசி பார்த்ததுல, அது ஒரு சந்து ரோடுங்கறதால சிசிடிவி எதுவும் அங்க இல்ல. ஆனா அங்க இருந்த ஒருத்தர் ரொம்ப நேரமா ஒரு லாரி அங்க இருந்தத பார்த்திருக்காரூ. நெம்பர் அவர் சொல்றத வச்சு விசாரிக்க போயிட்டு இருக்கோம்” என, தான் இதுவரை செய்தவற்றை சொல்ல,

“அந்த நெம்பர மட்டும் எனக்கு இப்ப அனுப்பி விடுங்க” என அதை பெற்றவன்,  அதை அனுப்ப வேண்டியவருக்கு அனுப்ப அடுத்த சில நிமிடத்தில் அந்த லாரியின் மொத்த ஜாதகமும் கௌதம் கையில்…

ஆனால் அதிலிருந்த ஓனர் பெயர் இதுவரையிலும் தங்கள் எங்குமே சம்மந்தப்படாத துஷ்யந்த் பேரில் பதிந்திருந்தால், உடனே அவனால் அதை அறிந்திட முடியாமல், அவர்கள் புகைபடத்தோடு மொத்த குடும்ப ஜாதகத்தையும் எடுக்க, கிடைத்த தகவலில் ஸ்வேதாவின் படம் அனைத்தையும் தெளிவாக்க, அவனை ஆத்திரத்தின் உச்சியில் நிறுத்தியது.


ஆனால் கூடவே இன்றொரு தகவலாய் அந்த வாகனம் திருடப்பட்டதாய் இரு நாட்களுக்கு முன்பே அளிக்கப்பட்ட புகார் இருப்பது தெரிய, ‘ஸ்வேதாவை பார்த்தது இன்று தானே, அப்புறம் எப்படி?!’ என யோசித்தவன்,

‘சந்தேகமின்னு வந்தாச்சு, இனி அவங்க ஆட்டத்த அடக்கி, என்னோட ஆட்டத்த காட்டல, நா கௌதம் சக்கரவர்த்தி இல்லடா…. !’ என்றவன் அடுத்தடுத்து செய்த வேலை, ஒரே வாரத்தில் ஸ்வேதா குடும்பத்தில் பேரிடியாய், பூகம்பத்தை கிளப்பி ஆட்டம் காண வைத்தது.

error: Content is protected !!