Jeevan Neeyamma–EPI 14

171916099_840757923178210_3424615682123961255_n-91d21766

அத்தியாயம் 14

 

ஜில்லென ஐஸ்க்ரீம் வேண்டுமா என கேட்டால், சாயாங்(அன்பே) என கூப்பிடு அதிலேயே நான் குளிர்ந்துவிடுவேன் என்பாள்! யாரவள்? என் ஜீவனவள்!     

 

மாலை மணி ஆறுக்கு பஸ் அந்த வளர்ந்து வரும் டவுனில் நின்றது. மீனாட்சியை அழைத்துக் கொண்டு கீழே இறங்கினான் ரஹ்மான். சுற்றும் முற்றும் கண்களை சுழற்றியவள்,

“எவ்ளோ மாறிப் போச்சு இந்த டவுனு! எனக்கு அடையாளமே தெரியலடா ரஹ்மானு” என்றாள்.

அங்கொன்றும் இங்கொன்றும் கடைகள் இருந்த இடத்தில் இப்பொழுது நிறைய கடைகள் முளைத்திருந்தன. துணி கடைகள், நடுத்தரமாய் ஒரு பாஜார்(fajar—அப்பொழுது நிறைய இடங்களில் இருக்கும்) ஷாப்பிங் காம்ப்ளேக்ஸ், கெண்டக்கி ப்ரைட் சிக்கன் ரெஸ்டாரண்ட், இப்படி மார்டனாய் மாறி இருந்தது அந்த டவுன்.

அவன் இன்னும் அமைதியைக் கடைப் பிடிக்க,

“பேசனா பதில் பேசனும், அதுதான் மனுஷனுக்கு அழகு! இப்படி ஊமைக்கொட்டனாட்டம் இருந்த, நான் மறுபடி இந்த பஸ்லயே ஏறி கோலாலம்பூர் போயிடுவேன்!” என மிரட்டியவள், திரும்பி பஸ்சை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

“எங்க போற சீ கேச்சிக்?” என அப்துல்லாவின் குரல் கேட்க, பட்டென திரும்பினாள் மீனாட்சி.

இவர்களை வீட்டுக்கு ஏற்றிப் போக வந்திருந்தார் அவர்.

“அது பாக்ச்சிக்…” என இவள் இழுக்க,

“மேடம் திரும்பி ஹாஸ்டலுக்கே போறாங்களாம் ஆயா! நான் பேசலன்னு கோபம்” என்றான் ரஹ்மான்.

“என்னம்மா சின்னப்புள்ள மாதிரி பிடிவாதம் உனக்கு? ராத்திரி ஆகிடும் வந்து சேர, இன்னொரு நாளைக்குப் போகலாம்னு ரஹ்மான் சொன்னத நீ கேக்கவே இல்லையாம்! இப்படி கெளம்பி வந்தது அம்மாவுக்கு தெரிஞ்சா என்ன நெனைப்பாங்க? ஒரு காரியம் செய்யறப்போ நாலும் யோசிக்கனும்மா!” என மீனாட்சியை மென்மையாய் கடிந்துக் கொண்டார் அப்துல்லா.

“சாரி பாக்ச்சிக்! இனிமே இப்படி செய்யமாட்டேன்” என இவள் மன்னிப்பு கேட்க, இப்பொழுது ரஹ்மான் ‘எப்புடி’ என வாயசைத்தான்.

“போடா!” என இவள் வாயசைக்க, அவனுக்கு சிரிப்பு வந்து விட்டது.

“சரி வாங்க, வீட்டுக்குப் போகலாம்” என அப்துல்லா காரின் பக்கம் நடக்க,

“இருங்க, இருங்க! நான் வீட்டுக்கு கொஞ்சம் பழம் வாங்கிக்கறேன்” என இடைமறித்தான் இவள்.

“அதெல்லாம் ஒன்னும் வேணாம்மா!”

“இல்ல வாங்கனும். வெறும் கையோட வந்தேன்னு தெரிஞ்சா அப்பா கோச்சிப்பாரு”

“ஆயா! இந்தாங்க பேக்! நீங்க காருல வேய்ட் பண்ணுங்க! நாங்க வாங்கிட்டு வரோம்” என அவன் முன்னால் நடக்க, இவள் அவன் பின்னால் நடந்தாள்.

பழக்கடையை அடைந்ததும், ரஹ்மானுக்குப் பிடித்த மாம்பழம், ஆப்பிள், ஆரஞ்சு என நல்லதாய் தேர்ந்தெடுத்தவள்,

“ரஹ்மானு! வந்து காசு கட்டு” என கூப்பிட்டாள்.

அவன் முறைத்துப் பார்க்க,

“என்ன, என்ன முறைப்பு? வெறும் கையோட போகக் கூடாதுன்னு பெரியவங்க சொல்லிருக்காங்களே தவிர, நாமே காசு போட்டு வாங்கிட்டுப் போகனும்னு சொல்லல! முறைக்கறத பாரு மூஞ்சூரு மாதிரி” என சத்தமாக சொன்னவள், கடைசி வாக்கியத்தை வாய்க்குள்ளேயே முணுமுணுத்தாள்.

“எல்லாம் என் நேரம்! இப்படி ஒரு கேடிக்கிட்ட மாட்டிட்டு முழிக்கறேன்! சைத்தான்!” என முணுமுணுத்தவன் பணத்தைக் கட்டி பழங்களை கையில் தூக்கிக் கொண்டான்.

“குடு, குடு! நான் தூக்கிக்கிறேன்”

“பரவால்ல! பாரமா இருக்கு, நானே தூக்கிக்கிறேன்” என நடந்தான் ரஹ்மான்.

அவன் அருகே நடந்தப்படியே,

“இன்னும் எவ்ளோ நேரம் என் பேரு சொல்லாமலே பேசுவ? இப்போ நீ மீனாம்மான்னு கூப்பிடலன்னா நான் கையில கிள்ளி வச்சிருவேன் பார்த்துக்கோ” என மிரட்டினாள்.

அவன் அமைதியாக நடக்க, அவன் புறங்கையில் வலிக்கக் கிள்ளினாள் மீனாட்சி.

“வலிக்குதுடி ராட்சசி!”

“மீனாம்மா சொல்லு” என்றவள் மறுபடி கிள்ள வந்தாள்.

“மீனாம்மா, மீனாம்மா, மீனாம்மா! போதுமா?”

“போதும், போதும்!” என மகிழ்ச்சியாக சொன்னவள். குடுகுடுவென ஓடி முன் சீட்டில் அப்துல்லாவின் பக்கத்தில் அமர்ந்துக் கொண்டாள்.

சின்ன வயதில் இப்படி முன் சீட்டுக்கு பல சமயம் அவளுடன் போட்டி போட்டதை நினைத்தப்படியே பின்னிருக்கையில் அமர்ந்துக் கொண்டான் ரஹ்மான்.

மூவரும் பேசியபடியே வீட்டையடைந்தனர். அவள் ஓடிப் பிடித்து, பட்டாசு வெடித்து விளையாடி மகிழ்ந்த வீடு, அப்படியே அன்று பார்த்தது போல அழகாய் நின்றிருந்தது. படி ஏறி உள்ளே போக, அவர்களுக்காக புன்னகையுடன் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு காத்திருந்தார் அமீனா. ரஹ்மான் புன்னகையுடன் தன் தாயின் கரம் பற்றி முத்தமிட்டு சலாம் செய்ய, இவளும் அதையே செய்தாள். பின் குனிந்து அவரைக் கட்டிக் கொண்டாள் மீனாட்சி. அவரும் அவளை இறுக்கமாகக் கட்டிக் கொண்டார்.

“நல்லா இருக்கியாம்மா? வீட்டுல எல்லாம் எப்படி இருக்காங்க?” என மெல்லிய குரலில் அவர் கேட்க, இவளுக்குத்தான் பதில் சொல்ல வாய் வரவில்லை.

மிக ஒல்லியாய், கன்னம் ஒட்டிப்போய், முகம் பொலிவிழந்து பார்க்கவே பாவமாய் இருந்தார் அவர். ஆனால் அவரின் கண்கள் மட்டும் பாசத்தில் ஒளிர்ந்தது. இவளுக்கு கண்கள் கலங்கப் பார்க்க, தாயின் பின்னால் இருந்து இறுக்கமான முகத்துடன் அழாதே என சைகை காட்டினான் ரஹ்மான். தன்னை எதிர் கொள்ள, வலிகளைத் தள்ளி வைத்து சிரித்த முகத்துடன் அமர்ந்திருக்கும் அவருக்கு தான் செய்யும் மரியாதை கண் கலங்காமல் இருப்பதுதான் என உணர்ந்துக் கொண்டவள், முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

“வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்க மாக்ச்சிக்! எனக்கு ஒரு குட்டி மருமகன் இருக்கான். முருகண்ணா மகன். அவனுக்கு நான்தான் பேரு வச்சேன்! என்ன பேரு சொல்லுங்கப் பார்ப்போம்?”  

“நீயே சொல்லேன்மா” என புன் சிரிப்புடன் கேட்டார் அவர்.

“ரகுமான் ராஜ்”

“என் மகன் பேரு!”

“ஹ்க்கும்! உங்க மகன் பெரிய துங்கு அப்துல் ரஹ்மான்(மலேசியாவின் முதல் பிரதமர்). அவன் பேர வைக்கறாங்க!” என இவள் நொடித்துக் கொள்ள, அமீனாவுக்கு அப்படி ஒரு சிரிப்பு.

“என் மகனுக்கு என்ன குறைச்சல்! இந்த நாட்டுக்குப் பிரதமரா வரதுக்கு பத்து பொருத்தமும் பொருந்தி இருக்கு அவனுக்கு” என சொன்னவர் மகனைக் குனிய சொல்லி அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டார்.

தாயின் சிரிப்பையும், அவர் முகத்தில் தெரிந்த தெளிவையும் பார்த்த ரஹ்மானுக்கு மனம் நிறைந்துப் போனது. நன்றியுடன் மீனாட்சியைப் பார்க்க, அவளோ இவனைக் கண்டுக் கொள்ளாமல் இன்னும் என்னென்னவோ வளவளத்தப்படி இருந்தாள்.

“வாங்க, டீ குடிக்கலாம்” என அப்துல்லா அழைக்க, இவள் வீல்சேரைத் தள்ளியபடி சாப்பாட்டு மேசைக்குக் போக, ரஹ்மான் அவள் பின்னால் வந்தான்.

நால்வரும் பேசி சிரித்தப்படி தேநீர் அருந்தினார்கள்.

“சரி நீங்க பேசிட்டு இருங்க! நான் ஈபூ குளிக்க உதவி பண்ணிட்டு வரேன்” என அப்துல்லா எழ, ரஹ்மானும் எழுந்து தாயை அலேக்காக கைகளில் ஏந்திக் கொண்டான்.

அமீனாவின் வசதிக்காக அவரின் அறைக்குள்ளாகவே பாத்ரூம் அமைத்திருந்தார்கள். அவரை தூக்கிப் போய் பாத்ரூமில் உள்ள நாற்காலியில் அமர்த்தி வைத்து விட்டு இவன் வெளியே வர, அப்துல்லா மனைவிக்கு உதவ ஆரம்பித்தார்.

“நான் ஹெல்ப் பண்ணாவா ரஹ்மானு?” என மீனாட்சி கேட்க,

“இல்ல மீனாம்மா! ஈபூ கம்பர்டபளா ஃபீல் பண்ண மாட்டாங்க” என மறுத்து விட்டான் இவன்.

வேலை நாட்களில் காபி கம்பேனிக்கு அப்துல்லா போகும் நேரத்தில் அமீனாவுக்கு உதவியாக ஒரு பெண்மணி வருவார். இரவிலும், சனி ஞாயிறுகளிலும் அப்துல்லாதான் மனைவியைப் பார்த்துக் கொள்வார். வீட்டிற்கு வரும் நாட்களில் முகம் சுழிக்காமல் தன் ஈபூவுக்குத் தேவையான பணிவிடைகளை ரஹ்மானே செய்வான்.(இங்க ஒன்னு நான் ஷேர் பண்ணிக்கறேன்! எங்க மதர் இன் லா ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகி இருந்தப்போ நான் தான் பார்த்துக்கிட்டேன். அப்போ பக்கத்து பெட்ல ஒரு மலாய் ஆண்ட்டி. வயசானவங்க! ரொம்ப குட்டியா இருப்பாங்க. கணவன் இல்ல போல. கம்பத்துக்காரங்க. அவ்ளவா பேச மாட்டாங்க. அவங்கள பார்த்துக்க மகனுங்க தான் வருவாங்க. எல்லாரும் நல்லா பெருசா ஆஜானுபாகுவா இருப்பானுங்க! மாத்தி மாத்தி வந்துப் பார்த்துப்பானுங்க அவங்க அம்மாவ! அவங்களுக்கு பேம்பர்ஸ் மாத்தறது, குளிக்கக் கூட்டிட்டுப் போறது, சாப்பாடு குடுக்கறதுன்னு தயங்காம செய்வானுங்க! எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கும். எப்படி கூச்சப்படாம செய்யறானுங்கன்னு! நம்ம ஆளுங்க இப்படி செய்வாங்களான்னு யோசிப்பேன்! அந்தப் பையனுங்கள பெத்து வளத்த அவங்க அம்மா ரொம்ப குடுத்து வச்சவங்கன்னு தோணுச்சு)

“அரை மணி நேரம் இருக்கு தொழுகைக்கு! வரியா உங்க எஸ்டேட்ட சுத்திப் பார்த்துட்டு வரலாம்?” என அழைத்தான் ரஹ்மான்.

“ஓ போலாமே! நானே உன் கிட்ட கூட்டிப் போக சொல்லி கேக்கலாம்னு நெனைச்சேன்” என குதூகலித்தாள் மீனாட்சி.

அவன் காரின் பக்கம் போக, இவள் அப்துல்லாவின் பழைய பைக்கின் பக்கம் போனாள்.

“கார்ல போலாம் மீனாம்மா!”

“பைக்குல போலாம் ரஹ்மானு! காத்தோட்டமா இருக்கும். நல்லா சுத்திப் பார்த்த மாதிரியும் இருக்கும்”

“வேணா”

“ப்ளீஸ் ரஹ்மானு! எனக்கு பைக்ல போக புடிக்கும். ஆனா எங்கூட்டு கிழவி ஆறுண்ணா பைக்ல என்னை ஏறவே விடாது! கீழ விழுந்து கைகால் அடிப்பட்டா எவன் கட்டிக்குவான்னு வியாக்கியானம் பேசும்! ப்ளிஸ் ரஹ்மானு, ப்ளிஸ், ப்ளிஸ்” என கெஞ்சவே ஆரம்பித்து விட்டாள் மீனாட்சி.

“உனக்கு மீனாட்சி அம்மன்னு பேரு வச்சதுக்கு இம்சைப் புடிச்ச அம்மன்னு வச்சிருக்கலாம்! ப்ளிஸ், ப்ளிஸ்னு சொல்லியே காரியத்த சாதிச்சிடு” என திட்டிக் கொண்டே பைக் சாவியை எடுத்து வந்தான்.

அவன் பைக்கை ஸ்டார்ட் செய்ய, இரு பக்கமும் கால் போட்டு அவன் பின்னால் அமர்ந்துக் கொண்டாள் அவள்.

“தள்ளி உக்காரு சைத்தான்” என அவன் கடிய,

“இவரு ஆணழகன் பிரசாந்து(இந்தக் காலகட்டத்தில் நடிகர் பிரசாந்த் மிக பிரபலமாக இருந்தார்)! நாங்க ஒட்டி ஒக்காந்து இவர மயக்கிடப் போறோம்! போவியா!” என திருப்பிக் கொடுத்தாலும் தள்ளித்தான் அமர்ந்தாள் மீனாட்சி.

அவன் எஸ்டேட் உள்ளே பைக்கை விட, இவள் மாறிப் போயிருந்த அவ்விடத்தை ஆவெனப் பார்த்தப்படி வந்தாள். முன்பு இவர்கள் வீடிருந்த இடத்தில் அவன் பைக்கை நிறுத்த, கண்கள் கலங்கியது மீனாட்சிக்கு.

“எங்கடா ரஹ்மானு, எங்க வீட்ட காணோம்?” என குரலடைக்கக் கேட்டாள் இவள்.

“எஸ்டேட்ட வித்துட்டாங்க மீனாம்மா! பழைய வீடுங்கள எல்லாம் அழிச்சிட்டு புதுசா டேரேஸ்(ஒட்டி அமைக்கப்பட்ட சிங்கிஸ் ஸ்டோரி வீடுகள்) வீடுங்க கட்டிட்டு இருக்காங்க! எல்லாமே வித்துத் தீர்ந்துடுச்சாம். அடுத்த வருஷம் கண்ஸ்ட்ராக்‌ஷன் முடிஞ்சு ஆளுங்க குடி வந்துடுவாங்க” என எழும்பிக் கொண்டிருந்த கட்டிடங்களைக் காட்டினான் ரஹ்மான்.(நாங்க இருந்த எஸ்டேட்லாம் இப்போ பெரிய வீடமைப்பு ஏரியாவா மாறிடுச்சு)

“அந்த டைம்ல நாங்க வெளியாகி இருக்கலைனாலும்,அதுக்குப் பிறகு கண்டிப்பா வெளியேற்றப்பட்டிருப்போம்ல”

ஆமென தலையை ஆட்டியவன்,

“நாடு வளந்துட்டு வருது! நிறைய மாற்றங்கள் வருது மீனாம்மா! செம்பனைக் காட்டை எல்லாம் அழிச்சிட்டு புதுசா கையுறை(டாக்டர்கள் அணியும் கையுறை) கம்பெனி கட்டிட்டு இருக்காங்க! இன்னும் கொஞ்ச நாளுல இந்த ஏரியாவே மாறிடும். நம்ம வீடு இருக்கற ஏரியாவக் கூட வாங்கிக்க கேட்டுருக்காங்க! ஆயா முடியாதுன்னு சொல்லிட்டாரு. ஆனா ஒரு கட்டத்துல வளர்ச்சிக்கு வழி விட்டுத்தான் ஆகனும். வளர்ச்சியில்லாம ஒரு இடத்துல தேங்கிட்டா வாழ்க்கை சுவாரசியமா இல்லாம போயிடும்” என்றவனை முறைத்தாள் இவள்.

“நானே என் வீட்டக் காணோம்னு இருக்கேன்! நீ பிலோசப்பி பேசறியா?”

“அது உன் வீடு இல்ல! எதுவுமே உன் வீடு இல்ல! நேத்து இது உன் வீடு, இன்னிக்கு பினாங்ல(அவள் வீடிருக்கும் மாநிலம்) உன் வீடு,  நாளைக்கு எது உன் வீடோ! ‘தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு, இந்த ஊரென்ன, சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே!’” என பாடலில் அவன் முடிக்க,

“ஒங்கொப்பன் மவனே! என் சோகம் ஒனக்கு சொகமா இருக்கா! பாட்டெல்லாம் பாடற!” என பைக்கை ஸ்டான்ட் போட்டு தள்ளி நின்றிருந்தவன் மேல் கற்களைப் பொருக்கி இவள் வீச,

“ஏய் பிசாசு! உங்க ஊருக்கு வந்ததும் பழைய ரௌடித்தனமெல்லாம் வெளிய வருதா! கல்லே விட்டு அடிக்கறத நிறுத்து” என அவன் ஓட இவளும் துரத்தியபடியே போனாள்.

ஒரு வழியாக சமாதானமாகி வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள் இருவரும். இவன் அவசர அவசரமாகப் போய் குளித்து தொழுகைக்கு ரெடியாகினான். வீல் சேரிலே அமர்ந்து அமீனா தொழுகை செய்ய, குடும்பமாக அவர்கள் தொழுகை செய்வதைப் பார்த்தப்படி அமர்ந்திருந்தாள் இவள்.

அதன் பிறகு இரவு உணவு ஏற்பாட்டை பார்க்க அப்துல்லா போக, அவரை நிறுத்திவிட்டு ரஹ்மான் சமயலறைக்குப் போனான்.

“நான் வரேன் ரஹ்மானு உதவிக்கு!” என இவளும் இணைந்துக் கொண்டாள்.

“குளிக்கலையா நீ?”

“இன்னும் கொஞ்ச நேரமாகட்டும்! இப்பவே குளிச்சா தூங்கறப்போ கசகசன்னு இருக்கும். நீ சொல்லு என்ன சமைக்கப் போற?”

“உனக்கு என்ன வேணும்?”

“உங்க ஈபூ செய்வாங்களே முன்னலாம், அந்த மாதிரி ருசியா சிக்கன் ப்ரை செய்வியா நீ?”

“செய்வேன்! ஆனா ருசியா இருக்கா இல்லையான்னு நீதான் சொல்லனும்!” என சொல்லி புன்னகைத்தான் அவன்.

“சரி ரஹ்மானு! ஈசியான வேலையான குழம்பு வைக்கறது, கடிச்சிக்கா(சைட் டிஷ்—இப்படித்தான் நாங்கள் சொல்வோம்) செய்யறதுலாம் நீ பண்ணிடு! கஸ்டமான வேலையான ரைஸ் குக்கர்ல சோறு ஆக்கறத நான் செஞ்சிடறேன்” என வேலையைப் பிரித்துக் கொடுத்தாள் இவள்.

“ஆமா சோறு ஆக்கறது ரொம்ப கஸ்டம்தான்! அத மட்டும் நீ செஞ்சிக்கோ!” என சிரித்தவன் மடமடவென சமையலைப் பார்க்க ஆரம்பித்தான்.

காய்கறி சூப், சிக்கன் ப்ரை, சம்பல் தும்போக்(இடிப்பது) என அவன் சமைப்பதை, இவள் வேலையை முடித்து விட்டு அருகிலேயே இருந்துப் பார்த்தாள் மீனாட்சி.

“ரஹ்மானு எனக்கும் சொல்லிக் குடு இந்த சம்பல் தும்போக்! ஆறுண்ணாவுக்கு ரொம்பப் புடிக்கும். மாக்ச்சிக் கையால சாப்பிட்டுட்டு வேற எந்த மலாய் கடைல சாப்பிட்டாலும் அந்த ருசி வரலன்னு பொலம்புவாங்க!”

“அவனுக்குன்னா நான் சொல்லிக் குடுக்க மாட்டேன்”

“சரி அவனுக்கு இல்ல! எனக்குத்தான், சொல்லிக் குடு”

“முடியாது!”

“பாக்ச்சிக்!!!” என இவள் கத்த ஆரம்பிக்க,

“சொல்லித் தரேன் சைத்தான்! ஆயாவ கூப்பிட்டு எனக்குப் பாட்டு வாங்கிக் குடுக்காதே!” என அவசரமாக சொன்னான் இவன்.

“என்ன வேணும் சீ கெச்சிக்?”

“மணி எத்தனை பாக்ச்சிக்?”

“எட்டு ஆகப் போகுதும்மா”

“ஓ சரி! அதுக்குத்தான் கூப்பிட்டேன்” என சொன்னவள்,

“அந்த பயம் இருக்கட்டும் மிஸ்டர் இசை! இப்போ ரெசிபி ப்ளீஸ்?” என மிதப்பாக கேட்டாள்.

“நெத்திலி, சின்ன வெங்காயம், பூண்டு, மிளகாய், உப்பு இதெல்லாம் தேவையான அளவுக்கு எடுத்து, இடிக்கல்லுல வச்சி இடிச்சிக்கனும். அப்புறம் கடாய்ல தேவையான அளவுக்கு எண்ணெய் விட்டு இதை எல்லாம் போட்டு நல்லா வதக்கனும். அவ்ளோதான் சம்பல் தும்போக் ரெடி! சுட சுட சோத்துல அப்படியே போட்டு சாப்பிடலாம்.”

அப்பொழுதெல்லாம் எந்தப் போன் இருந்தது, எந்த யூடியூப் இருந்தது! சமைப்பதெல்லாம் பெற்றவர்களிடமும் மற்றவர்களிடமும் கற்றுக் கொண்டு, முட்டி மோதி பழகுவதுதான். இவளும் ஓடிப் போய், பேனா பேப்பர் எடுத்து வந்து எழுதிக் கொண்டாள்.  

சமையல் முடித்து நால்வரும் சாப்பிட அமர்ந்தார்கள். முன்பெல்லாம் தரையில்தான் அமர்ந்து சாப்பிடுவார்கள். அமீனாவுக்கு உடம்பு சரியில்லாமல் போனதில் இருந்து டைனிங் டேபிள்தான்.

ரஹ்மானின் சமையலை ரசித்து, ருசித்து, பாராட்டியபடியே சாப்பிட்டாள் மீனாட்சி. வாய் ஓயாமல் அப்துல்லாவிடமும், அமீனாவிடமும் பேசியபடி இருந்தாள். அவளது ஓயாத அலட்டலில் வீடே கலகலவென இருந்தது. அடிக்கடி வாய் விட்டு சிரிக்கும் அமீனாவை அப்துல்லாவும் ரஹ்மானும் மன நிறைவுடன் பார்த்திருந்தனர். அவரை சிரிக்க வைத்த மீனாட்சியை அப்துல்லா அன்புடன் பார்த்திருக்க, ரஹ்மானோ ஆசையுடன் பார்த்திருந்தான்.

சாப்பிட்டு முடித்ததும், ரஹ்மான் தன் ஈபூவுக்கு மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொடுத்தான். அதை சாப்பிட்ட பத்து நிமிடங்களில் கண் சொருக ஆரம்பித்தது அவருக்கு.

“மாக்ச்சிக் தூங்கனதும், நாம உட்கார்ந்து பேசலாம் சீ கெச்சிக்” என சொன்னவர் மனைவியின் வீல் சேரை ரூமுக்கு நகர்த்திக் போனார்.

மீனாட்சியிடமும் ரஹ்மானிடமும் இரவு வணக்கம் சொல்லி விட்டு புன்னகை முகத்துடன் தூங்கப் போனார் அமீனா.

கிச்சனுக்கு பாத்திரம் தேய்க்க போன ரஹ்மானை நாற்காலியில் அமர்த்திய மீனாட்சி,

“நான் செய்யறேன் ரஹ்மானு! நீயே எவ்வளவு வேலைதான் செய்வ! எங்க வீட்டுல அப்பாவாச்சும் கொஞ்சம் கொஞ்சம் வீட்டு வேலைல அம்மாக்கு ஹெல்ப் பண்ணுவாரு. அண்ணங்க ரெண்டு பேரையும் அப்பத்தா ஒன்னுமே செய்ய விடாது! ஆம்பளைங்க ஆளப் பொறந்தவங்களாம். அப்போ பொம்பளைங்க நாங்க என்ன அடுப்படியில சாகப் பொறந்தவங்களா? ஒரு பொம்பளைய அடுப்படில பூட்டி வைக்கறது இன்னொரு பொம்பளைத்தான்” என தன் ஆதங்கத்தைக் கொட்டியபடியே பாத்திரங்களைத் தேய்த்தாள்.

“என்ன மாதிரி எல்லா வேலையும் பார்க்கத் தெரிஞ்ச ஒருத்தன் உனக்கு ஹஸ்பெண்டா வரனும்னு நான் வேண்டிக்கறேன் மீனாம்மா” என்றவனின் குரல் பிசிர் தட்டியது.

“நல்லா வேண்டிக்கோ ரஹ்மானு! அப்படி வேலைப் பார்க்கலைனாலும், பார்க்க வைப்பா இந்த மீனாட்சி! யார் கிட்ட!” என பொங்கியவளைப் பார்த்து புன்னகை வந்தது இவனுக்கு.

“ஏன் ரஹ்மானு! இன்னிக்கு நான் ஆக்கன சோறு நல்லா இருந்ததா?”

“சூப்பரா இருந்தது மீனாம்மா! சோறாக்கன கைக்கு சொக்கத் தங்கத்துல காப்பு செஞ்சிப் போடலாம்”

பட்டென திரும்பியவள்,

“இந்த நேரத்துக்கு சொக்கத் தங்கத்துக்கு நீ எங்க போவ! பேசாம உன் கையில கட்டி இருக்ற வாட்ச்ச எனக்குக் கலட்டிக் குடுத்துடு” என அசால்ட்டாக கேட்டாள்.

‘அடிப்பாவி! இதையும் ஆட்டையப் போட பார்க்கறாளே’ என பரிதாபமாக முழித்தான் ரஹ்மான்.

அப்பொழுது இருந்த இளசுகளின் கனவு கடிகாரமான ஜீ ஷாக் வாட்ச்சை கஸ்டப்பட்டு பணம் சேர்த்து, இவன் வாங்கி இப்பொழுதுதான் மூன்று மாதம் ஆகியிருந்தது. கருப்பு வர்ணத்தில் அழகாய் இருந்த அந்த கடிகாரத்தை அடிக்கடி நோட்டமிடுவாள் மீனாட்சி. அந்த நோட்டமிடுதலுக்குப் பின்னால் இப்படி ஒரு திட்டம் இருக்கும் என அறிந்திருக்கவில்லை அப்பாவி ரஹ்மான்.

பாத்திரம் கழுவி விட்டு வந்து அவன் முன் நின்றவள், கையை நீட்டியபடி நின்றாள். டேபிளில் இருந்த துணி எடுத்து ஈரம் போக அவள் கையைத் துடைத்தவன், கைக் கடிகாரத்தைக் கலட்டி இவனே அவள் கையில் கட்டி விட்டான். அவள் சந்தோசத்தில் கையைத் திருப்பித் திருப்பிப் பார்க்க,

“என் கைய விட, இந்த வாட்ச் உன் கைக்குத்தான் அழகா இருக்கு மீனாம்மா” என்றவனின் கரம் அவள் கையில் இருந்த கடிகாரத்தை வருடிக் கொடுத்தது.

சட்டென கையை உருவிக் கொண்டவன்,

“ஹாலுக்குப் போகலாம் வா” என எழுந்து நடந்தான்.

அவளது பேக்கில் இருந்து ஐந்து வெள்ளியை எடுத்து வந்து ரஹ்மானின் கையில் திணித்தவள்,

“யார் கிட்ட இருந்தும் பரிசா கடிகாரம் வாங்கக் கூடாதாம். உறவு விட்டுப் போயிடுமாம் ரஹ்மானு! கடிகரத்துக்கு விலையா இந்தக் காச வாங்கிக்கோ! நம்ம உறவு என்னைக்கும் இப்படியே நிலைச்சிருக்கும்” என்றாள்.

மறுக்காமல் வாங்கிக் கொண்டான் அவன்.

“சரி நான் போய் குளிச்சிட்டு வரேன்” என உடைகளையும் துண்டையும் எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வெளியே இருக்கும் பாத்ரூமுக்குப் போனாள் மீனாட்சி.

அவள் பின்னாலேயே போனான் இவனும். திரும்பி நின்று அவனை முறைத்தவள்,

“எங்க வாலப் புடிச்சுட்டே வர நீ?” என கேட்டாள்.

“முன்னல்லாம் வீட்ட விட்டுத் தள்ளி இருக்கற இந்த பாத்ரூமுக்கு வரதுன்னா அப்படி பயந்து சாகுவ! உங்கம்மா வந்து வெளியவே நின்னுட்டு இருப்பாங்க! இப்போ பயம் இல்லையா? சரி நான் உள்ளப் போறேன்”

“ஹே, நில்லு நில்லு! பயம் இல்லைன்னு யாரு சொன்னா! லேசா பயமாத்தான் இருக்கு. ஆனா வெளிய சொன்னா நீ கலாய்ப்பியே! அதான் வேக வேகமா குளிச்சிட்டு வரலாம்னு நெனைச்சேன்”

“மெதுவாவே குளி! நான் பின் வாசல் படில உட்கார்ந்திருக்கேன்”

சரியென தலையாட்டிவள், பாத்ரூமுக்குள் நுழைந்து கதவடைத்தாள்.

“ரஹ்மானு இருக்கியா?”

“இருக்கேன்! பயப்படாம குளி! ஓராங் மின்யாக்லாம்(உடம்பில் எண்ணேய் தடவி இருக்கும் ஆள்/பேய்) இப்போ எண்ணேய் விலை ஏறிப்போச்சுன்னு வெளிய சுத்தறது இல்லையாம்.”

“பாபீ பெத்துல்(சரியான பன்னி)! வெளிய வந்தேன் கொன்னுடுவேன் ராஸ்கல்! பீதிய கெளப்பாம எதாச்சும் பாட்டுப் பாடுடா ரஹ்மானு”

“சதி மல்லிப் பூச்சரமே!” என இவன் ஆரம்பிக்க,

“அந்தப் பாட்டு வேணா! பாத்ரூம்ல என்னால பரதம் ஆட முடியாது. வேற பாட்டுப் படி” என ஆணையிட்டாள்.

“உன் இஸ்டத்துகெல்லாம் என்னால பாட்டுப் பாட முடியாது! நான் உள்ளப் போறேன்! தோயோல் (மலாய்காரர்களின் பேய்) வந்து புடிச்சிக்கட்டும் உன்னை”

“ரஹ்மானு, ரஹ்மானு! என்னா பாட்டு வேணும்னாலும் படி! நான் வாய மூடிக்கறேன்”

“அப்படி வா வழிக்கு!” என்றவன் தன் காந்தக் குரலில் அழகாய் பாட ஆரம்பித்தான்.

“பூவே உன்னை நேசித்தேன்

பூக்கள் கொண்டு பூசித்தேன்

கண்ணில் பாடம் வாசித்தேன்

காதல் வேண்டும் யாசித்தேன்

சொல்லத்தான் வார்த்தை இல்லை கண்ணே

உள்ளத்தில் ஓசை இல்லை

ஊமைக்கு பாஷை இல்லை

கண்மணியே மௌனம்தானே தொல்லை” என பாடியவனின் குரலில் ஏக்கம் அப்படியே கொப்பளித்தது. (இந்தப் பாட்ட பாலா அப்படித்தான் உருகி உருகி பாடிருப்பாரு. அவர் இடையே சொல்ற ஹா, ஹோலாம் அவ்ளோ அழகா இருக்கும். கண்டிப்பா கேட்டுப் பாருங்க.)

அவசர அவசரமாகக் குளித்து விட்டு வந்தவள், படியில் அமர்ந்திருந்தவனை மொத்த ஆரம்பித்தாள்.

“இனிமே பயம் காட்டுவ இப்படி! காட்டுவ, காட்டுவ!” என முதுகிலேயே சாத்தினாள்.

அவள் முடியில் இருந்து சொட்டிய தண்ணீர் இவன் நெற்றியை நனைக்க, அவள் மேல் இருந்து வந்த சோப் கலந்த மேனி வாசம் மூக்கை நிரட, அவள் கொடுத்த மொத்துக்கள் ஒவ்வொன்றும் முதுகை ஆசையாய் தடவிக் கொடுத்தது போல சுகமாய் இருக்க, தன்னை மறந்து கண் மூடி அதையெல்லாம் ரசித்திருந்தான் ரஹ்மான்.

“இவ்ளோ அடிக்கறேன்! எருமை மாட்டுல மழை பேஞ்ச மாதிரி ஒக்காந்துருக்கான் பாரேன்! டேய் ரஹ்மானு” என அவள் காது அருகே கத்த சட்டென தன்னிலை அடைந்தான் ரஹ்மான்.

அவசரமாய் எழுந்து தள்ளி நின்றுக் கொண்டவனின் முகமே கசங்கிப் போயிருந்தது.

“ரஹ்மான்” என அப்துல்லாவின் குரலில் உள்ளே போனார்கள் இருவரும்.

அதன் பிறகு மூவரும் வீசீடி ப்ளேயரில், ஜீன்ஸ் படம் போட்டு சிரித்துப் பேசியபடி பார்த்தனர். பாதி படத்தில்,

“சீ கெச்சிக்! ரஹ்மான் ரூம்ல நீ படுத்துக்கம்மா! ரஹ்மான் வெளிய படுத்துப்பான்” என சொல்லி விட்டுப் படுக்கப் போனார் அப்துல்லா.

படத்தில் இவள் ஆழ்ந்துப் போக, அவளை வைத்தக் கண் வாங்காமல் பார்த்தப்படியே அமர்ந்திருந்தான் ரஹ்மான்.

அன்றிரவு ரஹ்மானின் கட்டிலில் அவன் வாசம் சூழ ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள் மீனாட்சி அம்மன். ஹாலில் மெத்தை விரித்துப் படுத்திருந்த ரஹ்மானோ, தூக்கம் வராமல் புரண்டுக் கொண்டே இருந்தான்.

“இந்த ஒரு நாள் என் வாழ்க்கை முழுமைக்கும் போதும்! வாழ்ந்துட்டேன்! என் மீனாம்மாவின் அருகாமைய அனுபவிச்சு வாழ்ந்துட்டேன் இன்னைக்கு! போதும், இது போதும்!” என முணுமுணுத்தவனுக்கு கண்கள் கலங்கிப் போனது.

அவளுக்கும் காதல் வரும் போது, இது போதுமென விடுவாளா அந்தப் பிடிவாதக்காரி????

(ஜீவன் துடிக்கும்….)

 

(போன எபிக்கு லைக், கமேன்ட் போட்ட அனைவருக்கும் நன்றி. என்னால முடிஞ்ச வரைக்கும் ரிப்ளை செய்ய ட்ரை செய்யறேன். போன தடவை சைட்ல எல்லோருக்கும் ரிப்ளை போட்டேன்.  அடுத்த தடவை பேஸ்புக்ல ரிப்ளை போட ட்ரை செய்யறேன் டியர்ஸ்.. இன்னிக்கு இரண்டாயிரத்துக்கும் மேல வொர்ட்ஸ் மாங்கு மாங்குன்னு எழுதிருக்கேன். அவ்வ்வ்வ்! மறக்காம கருத்த கருத்தா சொல்லிட்டுப் போங்க டியர்ஸ்..லவ் யூ ஆல்)