sippayinmanaivi 10

sippayinmanaivi 10

கால தூண்கள்

நேற்று நடைபெற்ற கொண்டாட்டத்தின் ஏற்பாடுகளிலும், ஊர் தலைவர்கள் சந்திப்பிலும் நேரம் வெகுமாக கரைய மலையமான் கோட்டையை கதிரவனுக்கு காட்ட முடியாமல் போனது முகிலனுக்கு. இன்று எப்படியும் காட்டி விட வேண்டுமென்று காலை கோட்டை வாசலுக்கு அழைத்துச் சென்றான். கதிரவன் உதயமாகும் நேரம் கோட்டை வாசலில் சந்தைக்கடைகளில் உணவு பண்டங்கள் அனல் பறக்க தயார் நிலையில் இருந்தது. சந்தனம் பூசிய மேலுடல், பருத்தி கீழ் ஆடை என இருவரும்  அந்த ஐந்து ஆளுயர கோட்டை சுவர்களை தாங்கி நிற்கும் பத்து ஆள் உயர கோட்டை வாயில், கதிரவனின் ஒளியில் மின்னிக்கொண்டிருந்தது.

இரு பெரும் நிலை கற்கள் – கல்லூர் சிற்றரசுக்கு உட்பட்ட மலைகளில் இருந்து கொண்டுவரப்பட்ட பழுப்பு நிற கற்களால் ஆனது. பழுப்பு நிற கற்கள் கல்லூரில் மட்டுமே உண்டு அதன் வரவேற்பும் அதிகம், அதனாலேயே கல் செதுக்குபவர்கள் அதிக பேர் அங்கிருக்கிறார்கள், பல கோட்டை கட்டும் பணிகளுக்கு அங்கிருந்து தான் ஆட்கள் செல்கிறார்கள். அந்த நிலைக்கற்களில் அடிப்பகுதி முதல் மேல்பகுதி வரை ஒரே சீராக வளர்ந்திருந்தது, அதன் அகலம் மட்டும் ஐந்து ஆட்களை சங்கிலி போல் நிறுத்தினால் இருக்கும் அகலம். அந்த நிலை கற்களின் உச்சியில் சில காவலர்கள் நிற்கும் இட வசதியும் உண்டு. நிலைக்கற்கள் உள் பக்கமாக நீண்டு சிறு சிறு அறைகளாக பிரித்து திண்ணைகள் அமைக்கப்பட்டிருந்தது, இரு பக்கமும் மூன்று மூன்று திண்ணைகள் ஒரு திண்ணையில் ஆறு பேர் உட்காரலாம், கடைசி திண்ணையின் உள்ளே மேலே செல்வதற்கான படிகள் இருந்தது. அதுவே நிலைக்கற்களின் உச்சிக்கு செல்லும். பழுப்பு நிற நிலைக்கற்கள் கதிரவன் ஒளியில் மின்னும் அந்த காட்சியை காணத்தான் முகிலன் கதிரவனை அழைத்துவந்தான், முதல் முறை மலையமான் முகிலனை அங்கு அழைத்துவந்த போது முகிலன் தன்னை மறந்து அந்த கோட்டை வாயிலை பார்த்துக் கொண்டிருந்தான். அந்த நினைவு இன்னும் அவன் மனதில் மாறாமல் இருக்கிறது. இன்று புதுப்பித்து கொண்டது. தான் கண்டு வியந்ததை தன் மக்களுக்கும் காட்டும் ஆர்வம் எந்த தந்தைக்கும் இருக்கும் அல்லவா?

உள்ளே வாயிலை கடந்தால் சிறிது தூரத்திற்கு எதுவும் இல்லை, அதன் பிறகு உள் கோட்டை நடைபாதை , கோட்டையை சுற்றி வரும் அந்த பாதை பல தூண்கள் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. இந்த உள் நடைபாதை மூலம் கோட்டையின் எல்லா உள் வாசலையும் அடைய முடியும். கோட்டை நான்காக பிரிக்க பட்டிருந்தது, ஒரு பக்கத்திலிருந்து மறுப்பக்கம் வர உள் நடைபாதையை அடைந்தால் தான் முடியும் ஆனால் அரச குடும்பத்திற்கு வேறு பாதை உள்ளது, அது கோட்டையின் நான்கு பகுதிகளையும் இணைக்கும் உட்பாதை, அதன் பெயர் அரச வீதி. அதில் அரச குடும்பம் மட்டும் தான் செல்ல வேண்டும் இன்று வரை அதை முகிலனும் கண்டதில்லை. கோட்டையின் உள் நடைபாதையை காட்டியவாறு கதிரவனை கிழக்கு பகுதிக்கு அழைத்துச் சென்றான். அங்குதான் கோட்டைக்கு சிறிது தூரத்தில் திறந்த அரங்கிருந்தது. கிழக்கு பகுதி முழுவதும் விருந்தினர்களுக்கான வசதிகள் இருந்தது, கூத்து மேடை, விருந்து சத்திரம், சமையல் அறை மற்றும் விருந்தினர் கோட்டம். அங்குதான் முகிலனும் மற்றும் சில நெருக்கமான தலைவர்கள் தங்கியிருக்கின்றனர்.
மீண்டும் உள் நடைபாதையில் நடந்து வடக்கு பகுதிக்கு சென்றனர், பெரிய திறந்த வெளி அங்கு மாடுகளும், ஆடுகளும் கட்டப்பட்டிருந்தன மற்றும் பல சிட்டு வகை கோழியும், சேவலும் சுற்றித் திரிந்தன. அந்த மந்தையின் ஒரு பக்கம் கோட்டை மற்றோரு பக்கம் மிகச் சிறிய கோட்டை ஒன்று இருந்தது ஆனால் அதன் முன் சில காவலர்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தனர். மலையமான் ஒரு முறை சொன்னது நினைவுக்கு வந்தது  ‘தோழா இந்தக் கோட்டையில் எங்கெல்லாம் காவலர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் நாம் செல்லக்கூடாது, அப்படி சென்றாலும் நமக்கு வரவேற்பு இருக்காது.’

முகிலன் கோட்டையின் வடபகுதியின் உள்ளே சென்றான், உயர்ந்த நடுவரை கூம்பு வடிவில் இருந்தது, கூம்பின் ஓரத்தில் படிகள் தெரிந்தது, அங்கு முகிலன் கதிரவனை அழைத்துச் சென்றான். ‘இந்தப் படிகள் கோட்டையின் மாடி அறைகளுக்கு கூட்டிச் செல்லும், நானும் மலையமானும் இளம்பருவத்தில் இங்குதான்  உல்லாசமாக இருப்போம். படிகள் மற்றும் மாடி அறைகள் நிறைய பெண்களும் எங்கள் நண்பர்கள் கூட்டமும் தான்! தேறல் பீப்பாய் பீப்பாயாக தீரும், இறைச்சி கிழக்கிலிருந்து வடக்கிற்கு வந்து கொண்டே இருக்கும், போர் கொண்டாட்டம் என்றால் இந்த கோட்டைப் பகுதியில் பெண்கள் நிரப்பப்படுவார்கள். நேற்றும் நடந்திருக்கும், மாடிக்கு சென்றால் அப்பாவோடு பார்க்ககூடாததை பார்க்க நேரிடும், அதனால் நீ மட்டும் செல்’ என்று சொல்லி இளமையை நினைத்துச் சிரித்தான்.

கதிரவன் அங்கு சென்றான், தேறல் போதையில் ஆண் பெண் பேதமின்றி உடைகளற்ற உடல்களாய் கிடந்தனர். இப்படி ஒரு நிகழ்வை மலையமான் மகன்கள் குன்றரசனும் நீலிமானும் கூறவில்லையே என்று வருத்தப்பட்டான். ஒரு கணம் மலைநாட்டில் இருக்கும் காதலி காயா நினைவுக்கு வந்தாள் மற்றும் அவளுடன் இருந்த இரவு நினைவுக்கு வந்தது. தனிமையில் வழிபடும் போது வரும் அமைதி கூட்டு வழிபாட்டில் கிடைக்குமா என்று எண்ணிச் சிரித்தான். சௌவலய பெண்கள் மற்றும் தரும பெண்கள், எப்பொழுதும் போல விலைமகளுக்கான வழக்கமான முக அலங்காரம், கல் அணிகள், பெருத்த முலைகள், தடித்த கணுக்கால்கள் மற்றும் லேசாக கொழுத்த உடல் வாகு. இந்த வகைப் பெண்கள் ரோம நாடுவரை சிறப்பு மிகுந்தவர்கள், இவர்களுக்கான வரவேற்பும் அதிகம் ஆனால் இவர்கள் மேல் தட்டு மக்கள் புணரும் பெண்கள் இல்லை வேளிரும், வீரர்களும், குறு வணிகர்களும் புணரும் பெண்கள். இதை அறியும் வயதும் அனுபவமும் இல்லாத கதிரவன் இவர்களை கண்டு வியந்தவாறு மாடியின் முன்பகுதியில் நின்று பார்த்தான், நாட்டு மக்கள் வீடுகள் தெரிந்தது.  

அங்கிருந்து கீழே இறங்கிவந்தான், முகிலன் லேசாக சிரித்தான் அதன் உள்ளுணர்வு கதிரவனுக்கு புரிந்தது, வெட்கப்பட்டு அப்பாவின் முகத்தை காணமுடியாமல் சிறு புன்னகையுடன் கடந்தான். கோட்டையின் மேற்கு பகுதிக்கு சென்றான், அங்குதான் அரசவை இருக்கிறது, நடுவில் ஒரு வழி நேராக ஒரு இருக்கைக்கு சென்றது அதன் இரு பக்கங்களிலும் திண்ணைகளின் கூட்டு வடிவமாக தரையிலிருந்து ஒரு தளம் மேல்  இருந்தது. பல சிறு தூண்களால் தாங்கப்பட்டிருந்தது கோட்டையின் மாடி. இந்தப் பகுதியில் மாடி அறைகள் இல்லை என்று அனைவருக்கும் சொல்லப்பட்டிருக்கிறது ஆனால் அரச குடும்பத்திற்கு மட்டுமான அரசவீதியில் இதற்கான படிகள் இருக்கின்றன. அரசரும், அவர் குடும்பமும் தெற்கு வாசல் அதாவது முன் வாசல் வழியாகத்  தான் மேற்கிலிருக்கும் அவைக்கு வருவார்கள்.

முகிலனும் கதிரவனும் தெற்கு வாசல் வந்தடைந்தனர் இங்கு தான் நேற்று அனைவரையும் வரவேற்றான் மலையமான். தெற்கு வாசல் உள் சென்றால் பின் பகுதியில் இருப்பது போல் ஒரு கூம்பு ஆனால் இது உயரம் குறைவு, படிகளுமில்லை. நடுவரையிலிருந்து ஒரு சிறு வழி சென்றது அதன் நிலையில் இரு காவலர்கள் இருந்தனர். மலையமான் சொன்னதை கதிரவனுக்கு சொன்னான் முகிலன், ‘காவலர்களிருக்கும் இடம் செல்ல கூடாது.’ இதற்கு முன் பல முறை முகிலன் இந்த கோட்டைக்கு வந்திருந்தாலும் , தெற்கு பகுதிக்கு இதற்கு மேல் செல்லவிட்டதில்லை, பெரும்பாலும் கிழக்கு பகுதியில் தான் இருப்பார்கள்.

கோட்டையை பார்த்து முடித்து கிழக்கு பகுதிக்கு முகிலனும், கதிரவனும் சென்று கொண்டிருந்தனர்  எதிரே மலையமான் வந்தான் ‘தோழா உன்னைக் காணத்தான் வந்தேன்’ என்று சொல்லி இறுக்கி அணைத்தான். மலையமானின் தங்க அணிகலன்கள் முகிலனின் சந்தனம் பூசிய உடலில் குத்தியது. ‘என்ன தோழா என்ன அவசரம்?’ முகிலன் கேட்டான். கதிரவன் தான் அறைக்கு செல்வதாக செல்லி சென்றுவிட்டான்.

‘தோழா இதுவரை யாருக்கும் காண்பிக்காத ஒரு இடத்திற்கு அழைத்து செல்கிறேன் வா’ என்று வேகமாக வடக்கு பகுதிக்கு அழைத்து சென்றான். அங்கிருக்கும் சிறு கோட்டைக்கு இழுத்துச் சென்றான். காவலர்கள் வழிவிட கதவுகளை அடைத்தவாறு இருந்த தட்டிகளை நீக்கி உள்ளே தீ பந்தங்களுடன் சென்றான். உள்ளே சென்றதும் கதவை அடைத்தான். சுவர்களில் சித்திரங்கள் வரையப்பட்டிருந்தது. அந்த சின்ன கோட்டை பெரிய ஒற்றை அறையாக இருந்தது ஆனால் பல தூண்கள் இருந்தது. சிலவற்றில் ஏதோ செதுக்கப்பட்டிருந்தது  பல தூண்கள் எதுவும் செதுக்காமல் இருந்தது.

‘தோழா இது என்ன சித்திரங்களும் சிலைகளும்? கலைக்கூடமா ?’ முகிலன் கேட்டான்.

‘இல்லை தோழா, சில நூற்றாண்டுகளாக நம் தென்புலத்தார் பதிவுசெய்த வரலாறு’ மலையமான் தொடர்ந்தான். ‘பெருங்கலூர்க்கு ஏற்பட்ட எல்லா நிகழ்வுகளும் இங்கு வரைப்பட்டிருக்கிறது ஒரு காலத்திற்கு மேல் சுவர்களில் இடமில்லாமல் தூண்கள் அமைத்து செதுக்க ஆரம்பித்தனர். இந்த வரைதலும் செதுக்குதலும் இருவர் மட்டுமே செய்ய முடியும் ஒன்று அரசன் மற்றோன்று தளபதி.’ என்று சொல்லி முகிலனை புன்னகைத்தவாறு பார்த்தான் மலையமான். பார்வையின் அர்த்தம் புரியாமல் முகிலன் விழித்து கொண்டிருந்தான்.

‘இனி நீ என் தோழன் மட்டுமில்லை என் தளபதி’ என்றான் மலையமான். பெருமையாக இருந்தாலும் இதில் நிறைய தடங்கல்கள் இருப்பதை உணர்ந்து முழுதாய் மகிழ்ச்சியடையாமல் நின்றான் முகிலன்.

 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!