Jeevan Neeyamma–EPI 19

171916099_840757923178210_3424615682123961255_n-f2fc04ef

அத்தியாயம் 19

 

மலாய்காரர்களுக்குப் பூனை பிடிக்குமாமே!! உனக்கு பூனை வேண்டாம், உன்னை உரசிக் கொண்டே இருக்கும் நான் போதும் என்பாள்! யாரவள்? என் ஜீவனவள்!

 

கோலாலம்பூர் ரயில் நிலையத்தில் வந்து காத்திருந்த ரஹ்மான், கைக்கடிகாரத்தை நொடிக்கொரு முறை திருப்பித் திருப்பிப் பார்த்தான். மாலை ஐந்துக்கு ட்ரைன் வந்து சேரும் என ஆறு சொல்லியிருக்க, இவன் நான்கு மணிக்கே இங்கே வந்து காத்திருக்க ஆரம்பித்தான். காத்திருந்த நேரத்தில், ப்ளாட்பாரத்தில் அவன் குறுக்கும் நெடுக்கும் நடந்த நடைக்கு பல நூறு கலோரிகள் எரிந்து சாம்பலாகி இருக்கும்.

பினாங்கில் இருந்து வரும் ரயில் வண்டி நடைமேடை இரண்டில் வந்து நிற்கப் போகிறது எனும் அறிவிப்பில் முகத்தில் தானாகவே புன்னகை வந்து அமர்ந்துக் கொண்டது இவனுக்கு. பாண்ட் பாக்கேட்டில் இருந்த கைக்குட்டையை எடுத்து முகத்தை அழுந்தத் துடைத்தான். கலைந்துப் போயிருந்த தன் கருத்தடர்ந்த சிகையை கையாலேயே கோதி சரி செய்தான். லேசாய் கசங்கிக் கிடந்த சட்டையை நீவி சரி செய்தான். ஆனால் அந்தக் கண்கள் இரண்டு மட்டும் ரயில் வரப் போகும் திக்கையே ஆசையாய் பார்த்திருந்தது.

ஒரு மாதம், முப்பது நாட்கள், எழுநூற்று இருபது மணித்தியாலங்கள் கடந்திருந்தது ரஹ்மான் மீனாட்சியைப் பார்த்துப் பேசி! அன்று அவள் ஆறுவின் போனில் இருந்து அழைத்ததுதான் கடைசி அழைப்பு. அதற்குப் பிறகு அவளிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை. ஆரம்பத்தில் அழைத்தப் பொழுது இவன் அழைப்பை ஏற்காததால் வாய்ஸ் மேசேஜ் வைத்திருந்தாள் மீனாட்சி. அப்பொழுதெல்லாம் வாய்ஸ் மேசேஜ் கேட்க வேண்டுமென்றால் மொபைல் கம்பெனி கொடுத்திருக்கும் ஒரு நம்பருக்கு அழைக்க வேண்டும். அழைத்தவுடன் நமக்கு வந்திருக்கும் வாய்ஸ் மேசேஜை ஒலிபரப்புவார்கள். அந்த மேசேஜ் கூட சில நாட்கள் தான் சிஸ்டத்தில் இருக்கும். மீனாட்சி கொடுத்த,

“ரஹ்மானு! இனிமே லவ் யூ சொல்லமாட்டேன்! போனை மட்டும் அட்டெண்ட் பண்ணு ப்ளிஸ்! உன் கிட்ட பேசாம இருக்க முடியலடா! ப்ளீஸ்டா ரஹ்மானு!’ எனும் மேசேஜை, அது அழிந்துப் போகும் வரை நூறு தடவையாவது கேட்டிருப்பான் இவன்.

ரயில் வந்து நடைமேடையில் நிற்க, இவன் பரபரப்பாக கண்களை சுழற்றினான். ஒவ்வொரு பெட்டியில் இருந்தும் மக்கள் வரிசையாக இறங்கிக் கொண்டிருந்தனர். இதயம் படபடவென துடிக்க, கண்கள் அலை பாய்ந்தது இவனுக்கு. கடைசியில் ஓரிடத்தில் பார்வை நிலைக்குத்தி நிற்க, கலங்கிய கண்களை கஸ்டப்பட்டுக் கட்டுப் படுத்திக் கொண்டான். கையில் இருந்த கட்டு நீக்கப்பட்டிருந்தது மீனாட்சிக்கு. ஆனாலும் வலது கையை இடது கையால் பிடித்தப்படி நின்றிருந்தாள். எப்பொழுதும் போல சுடிதார் அணிந்திருந்தாள். அந்த தொள தொள சுடிதாரில் கூட அவளது உடல் மெலிந்திருந்ததை கண்டுக் கொண்டான் இவன்.  

சிரித்த முகமாக மீனாட்சியை நெருங்கியவன், அவள் பக்கத்தில் நின்றிருந்த ஆறுவை அன்பாய் அணைத்துக் கொண்டான்.

“வாடா மச்சான்! ஜெர்னிலாம் ஓகேவா இருந்துச்சா?” என புன்னகையுடன் கேட்டான் ரஹ்மான்.

“எல்லாம் ஓகேடா ரஹ்மானு!” என நண்பனைப் பார்த்து சிரித்தான் அவன்.

மீனாட்சியின் புறம் திரும்பிய இவன் சம்பிரதாயமாக,

“எப்படி இருக்க?” என கேட்டான்.

அவனை நிமிர்ந்து நேராய் பார்த்தவள் புன்னகையுடன்,

“ரொம்ப நல்லாருக்கேன்!” என பதிலளித்தாள்.

இவனும் அவள் பெயரை உச்சரிக்கவில்லை, அவளும் இவன் பெயரை உச்சரிக்கவில்லை.

ஆறு கையில் வைத்திருந்த பேக்கில் ஒன்றை இவன் எடுத்துக் கொண்டு,

“கிளம்பலாமா?” என கேட்டான்.

நண்பர்கள் இருவரும் பேசிக் கொண்டு நடக்க, மீனாட்சியும் அவர்களைத் பின் தொடர்ந்தாள்.

“பசிக்குதுடா ரஹ்மானு! ட்ரேன்ல வயித்த கியித்தக் கலக்கிட்டா எப்படின்னு லைட்டாத்தான் சாப்பிட்டேன்! யூனிசிட்டிக்குப் போகற முன்ன சாப்பிட போகலாமா?” என கேட்டான் ஆறு.

“சரிடா, போலாம்” என்றவன் அண்ணன் தங்கை இருவரையும் ஒரு ரெஸ்டாரண்டுக்கு அழைத்துப் போனான்.

இடம் தேடி அமர்ந்தார்கள் மூவரும். ஆறுவின் அருகே அமர்ந்திருந்த மீனாட்சியைப் பார்த்து,

“சாப்பிட என்ன வேணும்?” என கேட்டான் ரஹ்மான்.

படக்கென எழுந்துக் கொண்ட மீனாட்சி, அண்ணனின் சட்டைப் பாக்கேட்டில் கைவிட்டு பணத்தை எடுத்துக் கொண்டாள்.

“ண்ணா! எனக்கு என்ன வேணும்னு நானே போய் பார்த்து வாங்கிக்கறேன்!” என உணவு அடுக்கி இருக்கும் இடத்திற்குப் போனாள்.

“என்னடா பிரச்சனை? எதுக்கு உன் கிட்ட மூஞ்சத் திருப்பறா மீனாட்சி?” என கேட்டான் ஆறு.

“அது ஒன்னும் இல்லடா ஆறு! என் கிட்ட காஸ்ட்லியா ஒன்னு கேட்டா! நான் தர முடியாதுன்னு சொல்லிட்டேன்! அதான் கோபம். போக போக சரியாகிடுவா”

“நான் தான் பாராசிட்னு பார்த்தா, இவ என்னை விட பெரிய பாராசிட்டா இருப்பா போல” என்ற நண்பனை முறைத்தான் ரஹ்மான்.

“போட்டுருக்கற செருப்பு தேய தேய அடிப்பேன் பார்த்துக்கோ! பெரிய பருப்பு மாதிரி பேசறான்” என திட்டியவன் எழுந்துக் கொண்டான்.

“இரு நானும் போய் சாப்பிட என்ன இருக்குன்னு பார்த்துட்டு, உனக்கும் வாங்கிட்டு வரேன்”

ரஹ்மான் போய் மீனாட்சியின் அருகே நிற்க, அவள் இவனைக் கண்டுக் கொள்ளாமல் உணவை எடுத்துக் கொண்டு வந்து அமர்ந்துவிட்டாள். மெல்லிய பெருமூச்சுடன் தன்னைக் கடந்துப் போகும் மீனாட்சியையேப் பார்த்திருந்தான் ரஹ்மான்.

மூவரும் சாப்பிட ஆரம்பிக்க, என்ன பானம் வேண்டும் என மாமாக்(கடை நடத்துபவர்) வந்து ஆர்டர் எடுத்தார். மீனாட்சி ஸ்கை ஜூஸ்(பச்சைத்தண்ணீர்) சொல்ல, ரஹ்மான் ஆப்பிள் ஜூஸ் இரண்டு ஆர்டர் செய்தான். பானம் வந்ததும், அவளது நீரை இவன் எடுத்துக் கொண்டு அவளுக்குப் பிடித்த ஆப்பிள் ஜூசை அவளருகே நகர்த்தி வைத்தான். இன்னொரு ஜூசை நண்பனிடம் கொடுத்தான். அவனை நிமிர்ந்துப் பார்த்தவள், ஒன்றும் சொல்லாமல் சாப்பிடும் வேலையைப் பார்த்தாள். பாதி உணவில் கார நெடி ஏறி இருமல் வர, கண்ணில் இருந்து நீர் வர இரும்பினாளே தவிர ரஹ்மான் வைத்த ஜூசை தொட்டுக் கூட பார்க்கவில்லை.

அவள் தலையில் தட்டிய ஆறு,

“ஜூசைக் குடி பாப்பா!” என கடிய வேண்டாமென தலையை ஆட்டினாள்.

அவளையும் அவள் பிடிவாதத்தையும் பார்த்த ரஹ்மானுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. தான் குடிக்காமல் வைத்திருந்த அவள் ஆர்டர் செய்த நீரை அவள் புறம் ஆத்திரத்துடன் நகர்த்தி வைக்க, மடமடவென எடுத்துக் குடித்தாள் மீனாட்சி.

“சைத்தான்!” என கோபமாக முனகினான் ரஹ்மான்.

உணவை முடித்துக் கொண்டு, ஒரு டாக்சியில் பல்கலைகழகத்தை நோக்கிப் பயணப்பட்டனர் மூவரும். மீனாட்சிக்காக ஹாஸ்டல் நுழைவாயில் காத்திருந்தாள் ஹேமா. தோழியைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிக் கொண்டாள் அவள்.

“மெதுவாடி ஜண்டா! கைல இன்னும் வலி இருக்கு” என புன்னகையுடன் சொன்னாள் மீனாட்சி.

தோழியின் காதில்,

“அம்மன், உங்க அண்ணாகிட்ட ஒரு இண்ட்ரோ குடுடி ப்ளிஸ்!” என மெல்லிய குரலில் கெஞ்சினாள் ஹேமா.

“வேணாம், சொன்னா கேளு”

“ப்ளீஸ்டி! நான் மட்டும் உனக்கு அண்ணியா வந்தேன் கடலை கடஞ்சி கருவாடு எடுத்துத் தருவேன். வானவில்லை வளைச்சு வடை சுட்டுக் குடுப்பேன். சூரியனைப் புடிச்சு சூப்பு செஞ்சுத் தருவேன்! மேகத்தைப் புழிஞ்சு மேகி போட்டுக் குடுப்பேன்…” என சொல்லிக் கொண்டேப் போனவளின் வாயைப் பொத்தினாள் மீனாட்சி.

“சொன்னா கேக்க மாட்டற! எல்லாம் உன் தலை எழுத்து” என்றவள், ரஹ்மானோடு சிரித்துப் பேசிக் கொண்டிருந்த ஆறுவைப் பார்த்து,

“ண்ணா! இங்க வா” என அழைத்தாள்.

“என்ன பாப்பா?”

“இவ என் பிரெண்டு! பேரு ஹேமா”

“ஹேமா பாப்பா, நல்லாருக்கியாமா?” என பாசத்தோடு கேட்டான் ஆறு.

“பாப்பாவா!!!!!!” என வாயைப் பிளந்தவள்,

“அப்படிலாம் கூப்புடாதீங்க சிக்ஸ்ஃபேஸ்(ஆறுமுகம்)!” என பதறினாள்.

அவள் என்னவோ உலகமகா ஜோக் சொல்லிவிட்டதைப் போல சிரித்தவன் அவளது தலையைத் தடவி,

“தங்கச்சிக்கு குசும்பப் பாரேன்” என்றான்.

“இன்னாது!!!!! தங்காச்சியா?” என மெலிதாக அலறியவள், மீனாட்சியைப் பார்க்க அவளோ சிரிப்பை அடக்கப் போராடிக் கொண்டிருந்தாள்.

ஹேமாவின் அதிர்ச்சியைப் பார்த்து ரஹ்மானுக்கும் கூட சிரிப்பு வந்தது. மீனாட்சிதான் ஹேமாவின் அண்ணி அலப்பறைகளை இவனிடம் சொல்லி வைத்திருந்தாளே!

‘பொன்னான மனசே பூவான மனசே

வைக்காதே ஆணு மேல ஆசை’ என மனம் ஊமையாக மாற்றிப் பாட, மையமாக சிரித்து வைத்தாள் ஹேமா.

தங்கையிடம் சற்று நேரம் பேசி இருந்து விட்டு ஆறு விடைப் பெற, ரஹ்மானும் மீனாட்சியைப் பார்த்து சென்று வருவதாக தலையசைத்தான். அதைப் பார்த்தும் பார்க்காதது போல திரும்பி நடந்து விட்டாள் மீனாட்சி. மனம் வலிக்க அவள் நடந்துப் போவதையேப் பார்த்திருந்தான் ரஹ்மான்.

‘நட்பு கூட வேணாம்னு நீ தானே சொன்ன! அதை அப்படியே அச்சுப் பிசகாம அவ ஃபோலோ பண்ணறா! இப்போ வந்து ஐயோ வலிக்குது, அம்மா வலிக்குதுன்னா ஆச்சா!’ என அவன் மனமே அவனைக் கேள்விக் கேட்டது.

“ஏன்டா அந்தப் பொண்ணு ஆசையா பேச வந்தா, படக்குன்னு தங்கச்சின்னு சொல்லி கழட்டி விட்டுட்ட!”

“தங்கச்சி ப்ரெண்டு நமக்கும் தங்கச்சிடா!”

“ஏன்டா அவ்ளோ நல்லவானாடா நீ?”

“அப்படிலாம் இல்லடா! தங்கச்சி ப்ரெண்ட லவ் பண்ணா, பிரச்சனை வந்தா தங்கச்சிய தூது அனுப்பி டார்ச்சர் பண்ணுவாளுங்க! நாம மெல்லவும் முடியாம முழுங்கவும் முடியாம அவஸ்த்தைப் படனும். அதோட ஒத்து வரலைனா கூட சட்டுன்னு அத்து விட முடியாதுடா! டார்ச்சராகிடும்”

“வெவரம்டா நீ!” என நண்பனை முதுகிலேயே மொத்தினான் ரஹ்மான்.

அடித்துப் பிடித்துக் கொண்டு போனவர்களை, திரும்பிப் பார்த்தப்படி நின்றாள் மீனாட்சி. ஹேமா அவளது தோள் தொட,

“அண்ணா உனக்கு செட் ஆகமாட்டான்டி ஜண்டா! அதனாலத்தான் உன்னை நான் என்காரேஜ் பண்ணது இல்ல. சோகமா இருக்கியா?” என தோழியைக் கேட்டாள் மீனாட்சி.

“அடி போடி அம்மன்! இந்த சோகம்லாம் எனக்கு சரிவராது. ஆறுமுகம் போனா, நெக்ஸ்ட் ஏழுமுகம்னு போய்ட்டே இருப்பேன். ஆறு போனா என்ன, நமக்கு சோறுதான் முக்கியம்” என்ற தோழியைக் கட்டிக் கொண்டாள் மீனாட்சி.

அன்றிரவு தூங்கிக் கொண்டிருந்த ஹேமாவுக்கு, ஏதோ சத்தம் கேட்க மெல்ல விழிகளைத் திறந்தாள். சுற்றும் முற்றும் பார்க்க, மீனாட்சி கட்டிலில் அமர்ந்து இரு கால்களையும் நெஞ்சோடு அணைத்தப்படி அமர்ந்திருந்தாள். சத்தம் செய்யாமல் ரூமின் வெளியே தெரிந்த விளக்கு வெளிச்சத்தில் தன் தோழியையேப் பார்த்திருந்தாள் ஹேமா. கண்களில் கண்ணீர் வழிய சோகப் பதுமையாக அமர்ந்திருந்தாள் அவள்.

“ஏன் இந்த அழுகை?” என திடிரென கேட்டக் குரலில் அதிர்ந்துப் போனாள் மீனாட்சி.

சட்டென முகத்தைத் துடைத்துக் கொண்டாள் அவள்.

“முழுக்க நனைஞ்சிட்டு முக்காடு எதுக்கு அம்மன்? அழறத நான் பார்த்துட்டேன்! சொல்லு, என்ன விஷயம்?” என்றவள் எழுந்து வந்து தோழியின் அருகே அமர்ந்துக் கொண்டாள்.

அவள் தோளில் சாய்ந்துக் கொண்ட மீனாட்சி, மெல்ல விசும்பினாள்.

“என் நெஞ்சு அப்படியே வெடிச்சிடும் போல இருக்குடி ஜண்டா!”

“நெஞ்சுல குண்டு வச்சது யாரு? அந்த முக்காலாவா?” என கரெக்டாகக் கேட்டாள் ஹேமா.

தலையை ஆமாமென ஆட்டினாள் மீனாட்சி.

“ரஹ்மான நான் லவ் பண்ணறேன்டி!”

“ஹ்ம்ம்ம்..பூனைக்குட்டி வெளிய வந்துடுச்சு! நீ லவ் பண்ணற சரி, அந்த இசையும் லவ் பண்ணுதா உன்னை?”

இல்லையென தலையாட்டினாள் இவள். கண்களில் கங்கை பொங்கி வழிந்து ஹேமாவின் தோளை நனைத்தது. மெல்லிய பெருமூச்சு வந்தது ஹேமாவிடம் இருந்து.

அன்று ரயில் நிலையத்தில் ரஹ்மான் பேசிய பேச்சை தோழியிடம் பகிர்ந்துக் கொண்டாள் மீனாட்சி.

“என்னோடது காதல் இல்லையாம், பொசெசிவ்நெஸ்சாம்! இந்த மாதிரிலாம் உளறுனா நட்பு கூட வேணாம்னு தூக்கிப் போட்டுடுவானாம்! நான் அத்தனை தடவை போன் செஞ்சும் எடுக்கவேயில்லைடி! ஆறு போன்ல இருந்து அடிச்சதும் மட்டும் எடுக்கறான். நான் வேணா, ஆறுண்ணா மட்டும் வேணும். என்னால தாங்கவே முடியல ஜண்டா. அதுக்குப் பிறகு மனச கல்லாக்கிட்டு நான் போன் செய்யவேயில்ல. அவனுக்கு நான் வேணான்னா, எனக்கும் அவன் வேணான்னு பிடிவாதமா இருந்தேன். ஆனா இன்னிக்கு..இன்னிக்கு”

திரும்பி அமர்ந்து தோழியை மடி சாய்த்துக் கொண்டாள் ஹேமா. அழுதுக் கொண்டிருந்தவளின் தலையை மெல்ல வருடிக் கொடுத்தாள் இவள்.

“இன்னிக்கு ரஹ்மான நேராப் பார்த்ததும் என்னால என் நேசத்த அடக்கிக்க முடியலடி! ஓடிப் போய் அப்படியே கட்டிப் புடிச்சுக்கனும் போல இருந்தது. ஆனா..ஆனா அவனுக்கு என்னைப் பார்க்காதது, பேசாதது எல்லாம் ஒன்னுமே இல்லடி! சிரிச்சிட்டே வந்து ஆறுவ கட்டிப் புடிச்சுக்கிட்டான்! வேண்டா வெறுப்பா என்னைப் பார்த்து எப்படி இருக்கன்னு கடமைக்கு கேக்கறான்! எவ்ளோ ஆத்திரம் வந்துச்சு தெரியுமா எனக்கு? ரஹ்மானு, ரஹ்மானுன்னு அவன் பின்னால போகவும்தானே நான் ச்சீப்பா போய்ட்டேன்! இனிமே போக மாட்டேன்டி! நான் மீனாட்சி அம்மன்! அம்மன தேடி மத்தவங்கத்தான் வரம் கேட்டு வரனுமே தவிர, அம்மனே இறங்கிப் போய் யார்கிட்டயும் கையேந்தக் கூடாது! ஏந்த மாட்டேன்” என சொன்னவளை இரக்கத்துடன் பார்த்திருந்தாள் ஹேமா.

ரஹ்மானின் நிலையும் புரிந்தது, மீனாட்சியும் நிலையும் தெரிந்தது இவளுக்கு. மீனாட்சியின் நேசமும் தப்பில்லை, அவள் நேசத்தை நிராகரித்த ரஹ்மானின் மீதும் தப்பில்லை. இவை எல்லாமே சேர முடியாத இரு ஜீவன்களுக்கு முடிச்சைப் போட்டு விளையாடும் அந்த ஆண்டவனின் தப்பு என நினைத்த ஹேமாவுக்கும் மனது பாரமாய் இருந்தது.

ரஹ்மானின் பாசத்தையும், அவன் கண்கள் காட்டும் நேசத்தையும். உடல் மொழி காட்டும் காதலையும் மீனாட்சி புரிந்திருந்தாளோ என்னவோ, ஹேமா நன்றாகவே புரிந்து வைத்திருந்தாள். அதனால்தான் அவனை மிரட்டி உருட்டிக் கொண்டே இருப்பாள் இவள். கடலளவு அன்பு வைத்திருந்தும் மீனாட்சியை வேண்டாமென சொல்லி இருக்கிறான் ரஹ்மான் என அறிந்துக் கொண்டவளுக்கு அந்த இசையின் மேல் ஒரு மதிப்பு வந்தது.

“அம்மன் நீ எடுத்த முடிவு சரியான முடிவுடி! காதல் கடவுள் மாதிரின்னு சொல்லறதுலாம் சுத்தப் பொய்! காதல் ஒரு ச்சுவீங் கம் மாதிரி. ஆரம்பத்துல இனிப்பா இருக்கும், போக போக ஒரு டேஸ்டும் இருக்காது. ரொம்ப நேரம் மென்னுட்டே இருந்தாலும் வாய் வலிக்கும். வாய்ல இருந்து துப்பிட்டாலும் சப்பாத்துல ஒட்டிக்கிட்டு உசுர எடுக்கும். சோ நமக்கு ச்சுவிங் கம்மே வேணா! சிங்கிளாவே இருந்து படிச்சு முடிப்போம்”

தோழியின் வார்த்தைகளில் புன்னகை வந்தது மீனாட்சிக்கு. அவளின் சுகமான வருடலில் அப்படியே தூங்கிப் போனாள் அம்மன்.  

நண்பனை இரவு ரயிலில் ஏற்றி அனுப்பி விட்டு வந்த ரஹ்மானுக்கும் தூக்கம் வரவில்லை. மீனாட்சியின் பாராமுகம் ரொம்பவே பாதித்திருந்தது அவனை. ஹாஸ்டல் ரூம் கட்டிலில் அமர்ந்தவன், அவர்கள் மூவரும் இருக்கும் சின்ன வயது போட்டோவைக் கையில் வைத்துப் பார்த்துக் கொண்டே இருந்தான். பின் மேசை இழுப்பறையில் பொக்கிஷமாய் அவன் வைத்திருக்கும் மீனாட்சி கொடுத்த பால் குண்டுகளை எடுத்து இரு கைகளிலும் வைத்து உருட்டினான். அவை ஒன்றோடு ஒன்று உரசும் சத்தத்தை கண் மூடி ரசித்தான். மனம் என்னவோ சமன்பட்டது போல இருந்தது. அதை மீண்டும் பத்திரமாய் வைத்து விட்டு, போட்டோவை நெஞ்சில் வைத்துக் கொண்டே உறங்க முயன்றான்.

‘என்னை நீ அவாய்ட் பண்ணறது ரொம்பவே கஸ்டமா இருக்குடி! ஆனா அதுத்தான் உனக்கு நல்லது மீனாம்மா! நாம ஒன்னு சேர்ந்தா உன் நிம்மதி போய்டும், அதோட சேர்ந்து உன் சிரிப்பும் போய்டும்! என்னால அத தாங்கிக்கவே முடியாது! என் கூட இருந்து நீ வாழ்நாள் முழுக்க அழறதுக்கு, இப்போ கொஞ்ச நாள் அழுது முடிச்சுடு கண்ணம்மா!’   

அன்றிலிருந்து இருவரும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டாலும் தெரியாததைப் போல கடந்துப் போக பழகிக் கொண்டார்கள். தமிழ் கழக மீட்டிங்களில் சாதாரணமாகப் பேசிக் கொண்டார்கள். நாட்கள் அருகி மாதங்களாகிப் போனது. அவன் அறியாமல் அவனைப் பார்த்து இவள் கண்ணீர் விடும் போது ஆறுதலாய் தோழியைத் தோள் தாங்குவாள் ஹேமா. மீனாட்சியை மறைந்து நின்று பார்த்து பெருமூச்சு விடும் நண்பனை அமைதியாய் பார்த்திருப்பான் லோகா.  

இப்படியே போய் கொண்டிருந்தவர்களின் வாழ்க்கையில் ரஹ்மானின் கடைசி செமஸ்டரும் வந்தது. தமிழ் கழகத்தின் நிகழ்ச்சியாக ‘உலு பெண்டுல்’ எனும் இடத்தில் கேம்ப்பிங் ஒன்று ஏற்பாடாகியிருந்தது. அங்கே நடுக்காட்டில் நட்சத்திரம் மின்னும் இரவில்,

“நான் உன்னை உயிராய் காதலிக்கறேன் மீனாம்மா!” என கசிந்துருகினான் ரஹ்மான்.

 

(ஜீவன் துடிக்கும்….)

(அடுத்த எபில கேம்ப்பிங் போகலாமா டியர்ஸ்? போன எபிக்கு லைக் கமேண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி. லவ் யூ ஆல். இன்னிக்கு அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி…)