kiyaa – 13

coverpage-d695f876
Akila Kannan

கிய்யா – 13

“நான் விலகிடுறேன் அத்தான். நீங்க சரியானதும் நான் விலகி போய்டுவேன். இல்லை, நீங்க இப்பவே துர்காவை கல்யாணம் பண்ணிக்குறேன்னு…” அவள் கோரிக்கையை முடிக்குமுன் விஜயபூபதி இலக்கியாவின் கைகளை வேகமாக பற்றி இழுக்க, அவள் அவன் முன் அமர்ந்தாள்.

“என்ன அத்தான்? என்னை தொட்டு தொட்டு பேசறீங்க? நேத்து என் உதட்டை தொட்டு பேசுனீங்க? மஞ்சள் கயிறு மேஜிக்கா?” என்று அவள் கேட்க, அவன் ஒரு நொடி ஆடிவிட்டான்.

“இலக்கியா…” அவன் உதடுகள் பேசினாலும், சத்தம் வெளிவரவில்லை. ‘நான் இவளிடம் கணவனாக உரிமை எடுத்து கொள்ள ஆரம்பித்துவிட்டேனா?’ அவன் ஸ்தம்பித்து நிற்க, கலகலவென்று சிரித்தாள் இலக்கியா.

“மிஸ்டர் விஜயபூபதி ஜாக்கிரதை. மஞ்சள் கயிறு மேஜிக் வேலை செஞ்சிட கூடாது. அப்புறம் உங்க லவ்வர் நிலைமை என்ன ஆகுறது?” அவள் அவனை சீண்டினாள்.

“இலக்கியா….” ஸ்தம்பித்து நின்ற அவன் உரக்க கத்தினான்.

இலக்கியா அவனின் திடீர் கூப்பாட்டில் சற்று மிரண்டு போனாள்.

“துர்கா என் வாழ்வில் முடிந்து போன அத்தியாயம். அவளை பத்தி பேசாத.” அவன் குரலில் இருந்த கண்டிப்பில், உறுதியில் இலக்கியாவின் முகத்தில் சிந்தனை ரேகைகள்.

“எல்லார் காதலும், கல்யாணத்தில் முடிவதில்லை.” அவன் கூற, “எல்லார் காதலும், நிச்சியதார்தம் வரை வந்து நிற்பதில்லை” அவளும் அவனை போல பேசினாள்.

“அது விதி.” அவன் கூற, “தப்பை நீங்க செய்திட்டு பழியை விதி மேல போடுறீங்க” அவளும் அவனுக்கு நிகராக எகிறினாள்.

“துர்கா மேல யாருக்கு உரிமை அதிகம்? எனக்கா, அவங்க அப்பாவுக்கா?” அவன் தன் கண்களை சுருக்கி இலக்கியாவிடம் தீர்க்கமாக கேட்டான்.

“அவங்க அப்பாவுக்கு…” அவள் தட்டுத்தடுமாறி பதில் கூறினாள்.

“என்னால், அவங்க மக வாழ்க்கை பாழாகிரும்முன்னு அவங்க அப்பா கெஞ்சும் பொழுது, என்னை என்ன செய்ய சொல்ற இலக்கியா? நான் துர்காவுக்கு நியாயம் செய்திருக்கேன். அதை அவ புரிஞ்சிக்கலைனா, நான் என்ன செய்ய முடியும்?” அவன் கேள்வியாக நிறுத்தினான்.

அவன் குரல் இறுகி இருந்தது. கடினமாக மாறி இருந்த அவன் முகத்தை தன் பக்கம் திருப்பி தோழமையோடு, ‘அத்தான்…’ என்று அழைத்து ஆறுதல் கூற அவள் ஒவ்வொரு அணுவும் துடித்தது. ஆனால், அவள் புதிதாக ஏற்றுக்கொண்ட மனைவி என்ற பதவி, அவளை விலகி நிற்க செய்தது.

“நான் தப்பு பண்ணலை இலக்கியா. என் மனசாட்சிக்கு உட்பட்டு, அவளுக்கு நல்லது தான் பண்ணிருக்கேன்.”அவன் குரல் அவன் நெஞ்சை அழுத்தி பாரமாக வெளிவந்தது.

“இனி, நீ துர்காவை பத்தி பேசாத. காதலி காதலின்னு தொணதொணத்திட்டு இருக்காத. துர்கா என்றொரு காதலி இருந்தாள். இருந்தாள் மட்டும் தான். நான் என் வாழ்க்கையில், காதல், சந்தோசம், குடும்பம் எல்லாத்தையும் மறக்க நினைக்குறேன்.” அவன் பேச, “அதில்லை அத்தான்…” இலக்கியா குறுக்கே பேச எத்தனித்தாள்.

“முட்டாள்… எதுவும் பேசாதேன்னு சொல்றேனில்லை” அவன் கூச்சலிட, அவன் முகமெங்கும் வியர்த்து வழிந்தது.

“அத்தான், நான் பேசலை… நான் பேசலை… நான் பேசலை…” அவள் பதறினாள்.

அவன் முகமெங்கும் இருக்கும் வியர்வையை தன் முந்தானையில் அவள் துடைக்க, அவன் அவள் கைகளை ஒதுக்கிவிட்டான்.

“மஞ்சள் கயிறு மேஜிக்கா? இவ்வளவு உரிமையா நீ மட்டும் என் பக்கத்தில் வர?” அவன் தன் பதட்டத்தை குறைத்து கொண்டு, கண்சிமிட்டி அவளை சீண்டினான்.

“நான் தான் மதர்தெரசா, நைட்டிங்கேல் ஆச்சே? எனக்கு ஏது ஆசை?” அவள் அவன் கூற்றை ஒதுக்கிவிட்டு, அருகே இருக்கும் துண்டை வைத்து அவன் முகத்தை துடைத்துவிட்டாள்.

ஏ.சி இன் குளிரை அதிகப்படுத்தினாள். “நான் எதுவும் பேசலை அத்தான். நீங்க டென்ஷன் ஆகாதீங்க. உங்களுக்கு ஏதாவது ஆகிருமோன்னு நான் பயந்துட்டேன்” அவள் குரலில் அக்கறை மட்டுமே இருக்க, “இனி ஆக என்ன இருக்கு இலக்கியா?” அவன் குரலில் விரக்தி மட்டுமே இருந்தது.

“அத்தான்…” அவள் அவனை பட்டென்று அடித்தாள்.

“உடம்பு முடியாத புருஷனை, இப்படி அடித்து கொடுமை படுத்துற?” அவன் கேட்க, “புருஷனை எல்லாம் அடிக்கலை. மிஸ்டர் விஜயபூபதி. என் மாமா பையனை, என் அத்தானை அடித்தேன் அவ்வுளவு தான். “

“உரிமையா புருஷனை அடிக்கிறேன். மஞ்சள் கயிறு மேஜிக் வேலை செய்துன்னு நீங்க நினைச்சிறாதீங்க” அவள் கூற, அவன் கலகலவென்று சிரித்தான்.

“ஏன் சிரிக்குறீங்க?” அவள் கண்களை சுருக்க, “மஞ்சள் கயிறு மேஜிக் வேலை செய்தா அடிக்கவா செய்வாங்க?” அவன் அவளை வம்பிழுத்தான்.

“ம்… புருஷன்னா, நல்ல அடிஅடின்னு அடிக்கலாம். கும்முகும்முனு கும்மலாம்ன்னு நான் நினைச்சிட்டு இருந்தேன். அப்படி எல்லாம் இல்லையா?” இலக்கியா அப்பாவியாக கண்களை விரித்தாள்.

“ஹா… ஹா… நான் உன்னை கல்யாணம் செய்து யார் வாழ்க்கையையோ காப்பாத்திட்டேன். நான் உடம்பு சரி இல்லாமல் இருக்க போய் தப்பித்தேன்.” அவன் கூற, “இந்த கல்யாணம் நடக்கலைனா, நான் யாரையுமே கல்யாணம் செய்திருக்கவே மாட்டேன் அத்தான். எனக்கு இந்த காதல், கல்யாணம் அதில் எல்லாம் ஆசை இல்லை.” அவள் கூற, அவன் கண்கள் சுருங்கியது.

“ரொம்ப யோசிக்காதீங்க. எனக்கு உங்களை பிடிக்காது. மாமா சொன்னாங்கனு தான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்.” அவள் கூற, “எனக்கும் உன்னை பிடிக்காது. உனக்கும் என்னை பிடிக்காது. அதனால், மஞ்சள் கயிறு மேஜிக்கிற்கு வேலையே இல்லை.” அவன் சிரித்தான்.

“இப்படியே சிரிச்சிட்டு இருங்க அத்தான். எல்லாம் சரியாகிரும்.” அவள் கூற, “என்ன ஒரு நல்ல எண்ணம் உனக்கு? நான் இப்படியே சிரிச்சிகிட்டு இருந்தா, இவனுக்கு கீழ விழுந்ததில் மண்டையில் அடிபட்டு பைத்தியம் பிடிச்சிருச்சின்னு எல்லாரும் சொல்லவா?” அவன் கேள்வியாக நிறுத்தினான்.

“ச்..ச்ச… அப்படி எல்லாம் இல்லை. முன்னமே அப்படிதான்னு நான் சொல்லிடுறேன்.” அவள் கூற, அவன் தன் அருகே இருந்த தலையணையை எறிந்தான்.

“மீ எஸ்கேப்…” அவள் விஜயபூபதியின் அறையை விட்டு வெளியே ஓட எத்தனிக்க, அவர்கள் அறைக்குள் வந்து கொண்டிருந்த நிர்மலாதேவியின் மீது இலக்கியா வேகமாக மோதினாள்.

சற்று பூசினார் போல் இருந்த அவர் சரீரம், அவள் வேகத்தை தாங்க முடியாமல் தடுமாறியது. இலக்கியாவின் நெற்றி, அவர் நெற்றியில் மோத, அவர் தலை கிரென்று சுத்தியது.

‘நானே பிபி, சுகர்ன்னு மாத்திரை சாப்பிடுறேன். நான் நேரா நின்னாலே என் தலை சுத்தும். இவ வேற இப்படி வந்து மோதுறாளே?’ அவர் பிடிமானமின்றி, தடுமாறி விஜயபூபதி அறையில் அவர் அருகே இருந்த சோபாவில் விழ, பிடிமானம் இழந்த அவர் இலக்கியாவின் கைகளை பிடிக்க, அவளும் அவர் மடியில் சரிந்து விழுந்தாள்.

“நீ ஏன் என் மேல இப்படி விழுற?” அவர் சிடுசிடுக்க, “நான் என்ன ரொமான்ஸ் பண்ணவா உங்க மேல விழுந்தேன்?” கைகளை உதறிக்கொண்டு எழுந்தாள் இலக்கியா.

“எதிர்ல அத்தான் வந்திருந்தாவது, நான் மோதி அத்தான் மடியில் விழுந்திருப்பேன். அத்தானும் என்னை தாங்கி பிடிச்சி, ஒரு நல்ல ஸீன் நடந்திருக்கும். உங்க மடியில் விழுந்து என்ன ஆக போகுது?” என்று நீட்டி முழக்கினாள் இலக்கியா.

‘கிராதகி… என்னவெல்லாம் பேசுறா?’ விஜயபூபதி அவர்களை பார்த்து கொண்டிருந்தான்.

“நீங்க நான் போற வழியில் குறுக்க வந்து என்னை உங்க மடியில் படுக்க வைத்து சீராட்டுறீங்க? ஓ! இது தான் உங்க திட்டமா?” இலக்கியா தன் மாமியாரை சந்தேகமாக பார்த்தாள்.

‘என்ன திட்டம்?’ நிர்மலா தேவி புரியாமல் பார்க்க, “உங்க மருமகளை மடியில் படுக்க வைத்து சீராட்டணும்னு ஆசை இருந்தா சொல்ல வேண்டியது தானே? அதை ஏன் இப்படி மறைமுகமா செய்யறீங்க?” இலக்கியா அடுத்த கேள்வியை கேட்க, நிர்மலாதேவி தன் மருமகளை முறைத்து பார்த்தார்.

விஜயபூபதிக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. ‘விஜய், சிரிச்சி தொலைச்சிறாத. அவ்வுளவு தான் நீ அம்மா கிட்ட செத்த…’ வந்த சிரிப்பை அரும்பாடு பட்டு அடக்கி கொண்டான்.

“ஐயோ அத்தான். மேஜிக்… மாமியாருக்கும் மருமகளுக்கும் வேலை செய்திருமோ?” சற்று முன் அவர்களுக்கு இடையில் நடந்த உரையாடலை கோடிட்டுக்காட்டி  இலக்கியா தன் கண்களை அப்பாவி போல் சிமிட்டினாள்.

அப்பொழுது, குருவி ஜன்னல் ஓரம் எட்டி பார்த்து, “கிய்யா… கிய்யா…” என்று கத்தியது.

“என்ன மேஜிக்?” என்று நிர்மலாதேவி கேட்க, மஞ்சள் கயிறு மேஜிக் என்று சொல்ல விரும்பாமல், இலக்கியா நொடிக்கும் குறைவான பொழுது திணறினாள்.

குருவியின், “கிய்யா… கிய்யா…” சத்தம் அவள் காதில் ஒலிக்க, சட்டென்று “அது கிய்யா… கிய்யா மேஜிக்” என்று இலக்கியா குலுங்கி சிரித்தாள்.

“அது என்ன கிய்யா… கிய்யா… மேஜிக்?” நிர்மலாதேவி கேட்க, “அது வயசானவங்களுக்கு எல்லாம் புரியாது. எங்களை மாதிரி யூத்துக்கு… அதாவது எங்களை மாதிரி இளைஞர்களுக்கு மட்டும் தான் புரியும்.” என்று நாக்கை துருத்தினாள் இலக்கியா.

“அப்படி எனக்கு ஒன்னும் வயசாகிடலை” நிர்மலாதேவியும் பிடிவாதமாக நின்றார்.

“ல்தகா சைஆ அப்படினா என்னனு தெரியுமா?” என்று இலக்கியா தன் கழுத்தை சரித்து கேட்க, “நான் பார்க்காத விஜய் படமா? அதெல்லாம் எனக்கு தெரியும். நேத்து கூட டீவியில் ஃபிரெண்ட்ஸ் படம் பார்த்தேனே” என்று கெத்தாக கூறினார் நிர்மலாதேவி.

“ஸோ இன்னும் நீங்க விஜய் ஃபிரெண்ட்ஸ் காலத்துலயே இருக்கீங்க. மாஸ்டர் லெவெலுக்கு நீங்க வளரனும் அத்தை. அப்ப தெரியும் இந்த கிய்யா… கிய்யா… மேஜிக்” கூறிவிட்டு சிட்டாக பறந்தாள் இலக்கியா.

“டேய், என்னடா சொல்லிட்டு போறா?” நிர்மலாதேவி தன் மகனிடம் கேட்க, “அம்மா, அவ சும்மா ஏதோ பேசிட்டு போறா அம்மா.” அவன் தன் தாயை சமாதானம் செய்தான்.

“விஜய், இலக்கியா என் மேல மொந்துன்னு விழுந்துட்டா டா. வேணுமினே உடனே எழும்பாம, என்னை நல்லா சமட்டி எடுத்துட்டா” அவர் முகத்தை சுருக்கினார்.

விஜயபூபதி பதில் எதுவும் பேசவில்லை. ‘செஞ்சாலும் செஞ்சிருப்பா…’ அவன் எண்ணமும் அவன் தாய் போலவே சிந்தித்து கொண்டது. அதன் பின் தாயும் மகனும் வேறு சில விஷயங்களை பேசி கொண்டிருந்தனர்.

அதே நேரம், துர்கா அவள் வீட்டில் மௌனமாக சாய்ந்து கொண்டிருந்தாள்.

“உனக்கு மாப்பிள்ளை பார்க்கலாமுன்னு இருக்கோம்” என்றார் குமரன், “ஒருவேளை, என் கல்யாணம் தோல்வியில் முடிச்சிருந்தா, எனக்கு இன்னொரு கல்யாணம் செய்ய இப்படி உடனே மாப்பிள்ளை பார்க்க கிளம்பிருப்பீங்களா?” குதர்க்கமாக கேட்டாள் துர்கா.

“உளறாத துர்கா” அவள் தாய் கலைச்செல்வி கண்டிப்போடு கூற, “இல்லை அம்மா, எல்லாம் ஒன்னு தான். என் மனசு சம்பத்தப்பட்ட விஷயம்.” அவள் உறுதியாக நிறுத்தினாள்.

“வாழ்க்கையில் காதல், கல்யாணம் தாண்டி ஆயிரம் விஷயம் இருக்கு. எனக்கு கொஞ்சம் தனிமை வேணும்.” அவள் கூற, “காதல் எல்லாருக்கும் கல்யாணத்தில் முடியறதில்லை” அவள் தந்தை அழுத்தமாக கூறினார்.

“உண்மை தான் அப்பா. காதல் எல்லோரையும் காதலிப்பதில்லை.” அவள் விரக்தியாக கூறினாள்.

“காதல் சிலர்க்கு பூ. காதல் சிலருக்கு வேர். எனக்கு காதல் வேர். காதல் என்னை காதலிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், நான் காதலை இன்னும் காதலிக்குறேன்” அவள் கண்ணீரை உள்ளிழுத்து கூறினாள்.

“உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?” அவர் தன் மகளை அறைய முற்பட, அவர் முன் நெஞ்சை நிமிர்த்தி கொண்டு நின்றாள் துர்கா.

“பைத்தியம் இல்லை அப்பா. நான் இப்ப தான் தெளிவா பேசுறேன். உங்க பேச்சை கேட்டு, உடம்பு சரி இல்லாதவனை பார்க்க போகாமல் இருந்தது நான். என் தப்பு முழுசா எல்லாம் என் தப்பு” ஆழ மூச்சு எடுத்து கொண்டாள் துர்கா.

“கொஞ்சம் கூட யோசிக்காமல், அவங்க மாமா சொன்ன ஒரே வார்த்தைக்காக பூபதியை கல்யாணம் செய்துகிட்டா இலக்கியா. பூபதிக்கு அவள் மேல் எண்ணம் கிடையாது. அவங்க அம்மாவுக்கு அவளை பிடிக்காது. பூபதி, அவளையும் விரட்ட தான் செய்தான். அந்த வீடு இலக்கியாவுக்கு சந்தோஷத்தை கொடுக்காது. இருந்தாலும், அவ விலகி போகலையே?” துர்கா பேசுவது புரியாமல், அவள் பெற்றோர் அவளை யோசனையாக பார்த்தனர்.

“அவ பேச்சு நமக்கு எதுக்கு? நான் தான் உங்க பேச்சை கேட்டு கடமை தவறிட்டேன். நான் பூபதியை பார்க்க போகாமல் இருந்திருக்க கூடாது. என் வாழ்க்கை இப்படி திசை மாறி இருக்காது. பூபதிக்கு உடல் வலியோடு, நான்… நான் இல்லை, நீங்க மன வலியையும் கொடுத்திட்டீங்க.” அவள் தன் தந்தையை குற்றம் சாட்டி கொண்டிருந்தாள்.

அதே நேரம் இலக்கியா சமையலறையில் தன் வேலையை முடித்து கொண்டு விஜயபூபதியை பற்றி சிந்தித்தபடி அவன் அறைக்கு சென்றாள்.

‘நான் இப்ப என்ன செய்யறது? துர்கா பத்தி பேசினாலே அத்தான் டென்ஷன் ஆகுறாங்க. துர்கா விஷயத்தை ஆறப்போடுவோம். துர்கா விஷயத்தை எப்படி சரி செய்யணும்னு எனக்கு தெரியும். முதலில் அத்தானுக்கு சரியாகணும்.’ எண்ணியபடி அவர்கள் அறைக்குள் நுழைந்தாள்.

அவள் அறைக்குள் நுழைய, அவன் தன் மடிக்கணினியில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தான்.

இலக்கியா, அவன் முன் அவள் கைகளை நீட்ட, “நீ என்ன எப்பப்பாரு, எனக்கு ஏதாவது செஞ்சி கொடுத்திட்டு இருக்க? உன் கேக் பிசினெஸ் என்ன ஆச்சு?” அவன் கேள்வியாக நிறுத்தினான்.

“இந்த ஒரு வாரம் எந்த ஆர்டரும் எடுக்கலை. கொரோனா லாஃடவுனில் பெரிய பெரிய பேக்கரி எல்லாம் மூடிட்டாங்க. ஆனால், நாம வீடுங்கறதெல்லா ஆர்டர் வந்துட்டு தான் இருக்கு. நெக்ஸ்ட் வீக்ல இருந்து என் வேலை ஆரம்பித்திரும்.” அவள் கூற, அவன் தலை அசைத்து கேட்டுக்கொண்டான்.

“உனக்கு ஏதாவது உதவி வேணுமின்னா சொல்லு செய்யலாம்” அவன் பரிவோடு கூறினான்.

“கேக், கிரீம் எல்லாம் செய்து முடித்ததும் நிறைய பாத்திரம் கழுவ வேண்டியதிருக்கும். கழுவி கொடுப்பீங்களா?” தீவிரமாக கேட்டாள் இலக்கியா.

“நீ தான் என்னை கல்யாணம் செய்துகிட்ட. நான் உன்னை கல்யாணம் செய்யலை. அதனால, அதெல்லாம் என்னால் செய்ய முடியாது.” அவன் குறுஞ்சிரிப்போடு கூறினான். இல்லை வலிகளை மறந்து சிரிக்க முயன்றான். அவளும் அவன் வலிகளை மறக்கடிக்க முயற்சித்தாள்.

“எனக்கு வேற எந்த உதவியும் வேண்டாம்.” அவள் கூற, “நீ எந்த கேள்விக்கும் ஒழுங்கா பதில் சொல்ல மாட்டியா?” அவன் கேட்க, “நீங்க உருப்படியா எந்த கேள்வியும் கேட்க மாட்டீங்களா?” அவள் அவன் அருகே அமர்ந்து கொண்டு கேட்டாள்.

“கேட்கட்டுமா?” அவன் கேட்க, அவள் தலை அசைத்தாள்.

“எப்படி இலக்கியா, எவ்வளவு கஷ்டம் வந்தாலும் சிரிச்சிகிட்டே இருக்க?” அவன் கேட்க, “சொல்லட்டுமா?” அவள் தலை அசைத்து கேட்டாள்.

‘சொல்லு…’ என்பது போல் அவள் கண்சிமிட்டினான்.

“சொல்லட்டுமா அத்தான்?” அவள் தன் கண்களை விரித்து, மிக அருகாமையில் வந்து கேட்டாள்.

அவன் முறைக்க, “சொல்லிடுறேன்… சொல்லிடுறேன்…” அவள் தன் கைகளை கீழே இறக்கி செய்கை காட்டி, அவன் செவிகளில், “அது தான் கிய்யா… கிய்யா… மேஜிக். யார் கிட்டையும் சொல்லிடாதீங்க” கூறிவிட்டு விலக எத்தனித்தவளின் கைகளை அவன் பற்றி இழுத்து அவள் காதை திருகினேன்.

“அத்தான் விடுங்க” அவள் செல்லமாக சிணுங்கி, அவனிடமிருந்து விலகி நிற்க, அவன் அவளை முறைத்து பார்த்தான்.

“உங்களுக்கு கிய்யா… கிய்யா… மேஜிக் தெரியாதா?” என்று ஏதோ மகா குற்றம் போல் அவள் கேட்க, அவன் அவளை கடுப்பாக பார்த்தான்.

“உங்களுக்கும் உங்க அம்மா மாதிரி தெரியாது போல. அதனால, நீங்களும் யூத் இல்லை. உங்களுக்கும் உங்க அம்மா மாதிரி வயாசகிருச்சு. வயசானவங்களுக்கு எல்லாம் இந்த கிய்யா… கிய்யா… மேஜிக் தெரியாது” கூறிவிட்டு தோள்களை குலுக்கி அவனை பார்த்து கேலி செய்து, “கிய்யா… கிய்யா…” என்று சத்தம் எழுப்பிக்கொண்டே சென்றாள் இலக்கியா.

‘உண்மையிலே இந்த கிய்யா… கிய்யா… மேஜிக்கிற்கு பின்னாடி ஏதாவது வில்லங்கமான அர்த்தம் இருக்குமோ?’ அவன் அவளை சந்தேகமாக பார்த்தான்.

கிய்யா… கிய்யா… இனிய கானமாய் ஒலிக்கும்.

சிறகுகள் விரியும்…