Jeevan Neeyamma–EPI 21 (part 1)

171916099_840757923178210_3424615682123961255_n-ef28df78

அத்தியாயம் 21

 

உன்னை நினைத்து அழுவதென்றால் கண்ணீர் கூட சுகம்தான் என்பாள் அவள்! யாரவள்? என் ஜீவனவள்!

 

“ச்சேகு மான்! தாக் பாஹாம்லா சோஹாலான் இனி”(ஆசிரியர் மான்! இந்த கேள்வி எனக்குப் புரியவில்லை)

படித்துக் கொடுத்தவுடன், மாணவர்களுக்கு சில கணக்குகளை செய்யக் கொடுத்திருந்தான் ரஹ்மான். அவர்கள் செய்யட்டும் என தனது இருக்கையில் போய் அமராமல் நடந்தப்படியே ஒவ்வொருவரும் எப்படி செய்கிறார்கள் என பார்த்துக் கொண்டிருந்தவனைதான் அழைத்தாள் அந்த மாணவி.

அந்த பதினாறு வயது பெண்ணுக்கு அடிக்கடி இவன் பாடத்தில் சந்தேகம் வரும். அவள் மட்டுமல்லாது அவன் சொல்லிக் கொடுக்கும் மற்ற வகுப்பு மாணவிகளுக்கும் கணக்கில் மட்டும் எப்படிதான் அவ்வளவு டவுட் வருமோ தெரியாது.(எத்தனை பேருக்கு ஸ்கூல் டீச்சர் மேல க்ரஷ் இருந்தது? என்னோட மலாய் சார் மேல க்ரஷ்னா என்னன்னே தெரியாத வயசுல எனக்கு க்ரஷ் இருந்தது. அவர்தான் ரஹ்மான் கேரக்டருக்கு இன்ஸ்பிரேஷன். அவ்ளோ அழகா சொல்லிக் குடுப்பாரு. முகம் மட்டும் ஞாபகம் இருக்கு. பேர் மறந்துடுச்சு) அந்தப் பள்ளியிலேயே இளமையான, கண்ணுக்குக் குளிர்ச்சியான ‘ச்சேகு மான்’ பெண் மாணக்கர்களுக்கு மட்டுமல்ல பெண் ஆசிரியர்களுக்கும் மிகவும் பிடித்தமானவன். சலித்துக் கொள்ளாமல் சொல்லிக் கொடுப்பது, சிரித்த முகத்துடன் இருப்பது, உதவி என கேட்டால் முடிந்த அளவுக்கு உதவுவது, பாட விஷயத்தில் கண்டிப்பைக் காட்டினாலும் எதாவது பிரச்சனை என வரும் போது தோழனாய் மாறி வழிகாட்டுவது என எல்லோருக்கும் பிடித்த ஆசிரியராய் இருந்தான் ரஹ்மான்.

ஆரம்பத்தில் படித்து முடித்ததும், சபா மாநிலத்தில் தான் ஆசிரியர் பணியில் அமர்த்தினார்கள் இவனை. சபா மாநிலத்துக்கு தீபகற்ப மலேசியாவில்(இப்பொழுது ரஹ்மான் இருக்கும் இடம்) இருந்து கடல் கடந்துப் போக வேண்டும். புதிதாய் படித்து முடித்து வரும் ஆண் ஆசிரியர்களை இப்படித்தான் ஆளில்லாத காட்டுக்கு அனுப்புவார்கள். அதாவது வளர்ச்சியில் பின்தங்கி இருக்கும் ஊர்களுக்குப் பணிக்கு அனுப்புவார்கள். இடமாற்றல் வேண்டுமென்றால் அரசாங்கத்துக்கு எழுதி போட வேண்டும். ஒரு வருடம் சபாவில் வேலை செய்தவன் அம்மாவின் உடல் நிலைப் பற்றி எழுதிப் போட, அதிர்ஸ்டவசமாக பகாங் மாநிலத்துக்கு மாற்றல் கிடைத்தது. அவர்கள் ஊருக்கே கிடைக்காவிட்டாலும், ஆறு மணி நேரப் பயணம் செய்தால் வீட்டுக்கு வந்து விடலாம் என்பதால் அதை ஏற்றுக் கொண்டான். திங்கள் முதல் வெள்ளி வரை வேலைப் பார்ப்பவன், வெள்ளி மாலை கிளம்பி தங்களது வீட்டுக்கு வந்துவிடுவான். அதோடு ஞாயிறு மாலைதான் மீண்டும் கிளம்புவான். ஈபூவுடன் கழிக்கும் ஒவ்வொரு மணித்துளியையும் அனுபவித்து, ஆத்மார்த்தமாக வாழ்ந்தான் ரஹ்மான்.    

கணக்கில் சந்தேகம் கேட்ட மாணவிக்கு விளக்கமாக சொல்லிக் கொடுத்து முடிக்கவும், பள்ளி முடிந்த பெல் சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது.

“தெரிமா காசே ச்சேகு மான்”(நன்றி ஆசிரியர் மான்) என கோரசாக சொன்ன மாணவர்கள், புத்தகப்பையை எடுத்துக் கொண்டு குடுகுடுவென ஓடினர்.

சின்ன வயதில் அவனும் ஆறுவும் இப்படித்தானே ஓடுவார்கள் என நினைத்துக் கொண்டே புன்னகையுடன் டீச்சர்ஸ் ரூமுக்குப் போனான் ரஹ்மான். திருத்துவதற்கு எடுத்து வந்த புத்தகக் கட்டுடன் இவன் அமர,

“லஞ்ச் சாப்பிடலையா மான்? காண்டின் போகலாமா?” என வந்து நின்றார் ஆசிரியை ஒருவர்.

சின்னப் புன்னகையுடன் மரியாதையாக மறுத்து விட்டு தனது வேலையைத் தொடர்ந்தான் இவன். பெருமூச்சுடன் அவர் நகர்ந்துப் போனார். நேரம் பகல் இரண்டைத் தொட்டிருக்க, மேசைக்கு அடியில் வைத்திருக்கும் தலைக்கவசத்தை எடுத்தவன், தனது பேக்கை தோளில் மாட்டிக் கொண்டு கிளம்பினான். ஆசிரியர்கள் பார்க்கிங் ஏரியாவுக்கு வந்து தனது ஹோண்டா ஈ.எக்ஸ் 5 பைக்கை கிளப்பினான்.

ரஹ்மான் இங்கே ஒரு வீட்டில் தனியறையை வாடகைக்கு எடுத்திருந்தான். அந்த வீட்டில் வயதான மலாய் கணவன் மனைவி இருவர் மட்டுமே இருந்தனர். இவனுக்கு உணவையும் அந்தப் பெண்மணியே சமைத்துக் கொடுத்து விடுவார். அதற்கு தனியாக பணம் செலுத்தி விடுவான் இவன். சலாம் சொல்லி விட்டு வீட்டின் உள்ளே போனான் ரஹ்மான். கணவன் மனைவி இருவரும் புன்னகை முகமாய் பதில் சலாம் சொன்னார்கள். சற்று நேரம் அவர்களுடன் அளவளாவி விட்டு, பூட்டி வைத்திருந்த அறையை சாவிக் கொண்டு திறந்து உள்ளேப் போனான் ரஹ்மான். அவன் உள்ளே வர காத்திருந்தது போல சுவற்றில் படமாய் இவன் மாட்டி வைத்திருந்த மீனாட்சி அழகாய் சிரித்தாள். எப்பொழுதும் செய்வது போல படமருகே போய் நின்றவன்,

“சைத்தான், நான் வந்துட்டேன்!” என மெல்லிய சிரிப்புடன் முணுமுணுத்து விட்டு, குளிக்கப் போனான்.

குளித்து விட்டு சமையலறைக்குப் போய் சாப்பிட்டவன், உடனே வெளியே கிளம்பி விட்டான். அவர்கள் ஏரியாவில் இருந்த சமூக மண்டபத்தில் மாலை நான்கில் இருந்து ஏழு வரை தினமும் டியூசன் சொல்லிக் கொடுப்பான் ரஹ்மான். அங்கிருந்த வசதிக் குறைந்த மாணவர்களுக்காக இவனும் இன்னும் சில ஆசிரியர்களும் சேர்ந்து அந்த டீயுசன் வகுப்புகளை சொற்ப கட்டணத்துக்கு நடத்தி வந்தார்கள். எதையுமே இலவசமாகத் தந்தால் அதற்கு மதிப்புக் கிடையாது என்பதால்தான் இந்த சொற்ப கட்டணம் வசூலிக்கப்பட்டது.

இரவு எட்டு மணி போல வீட்டுக்கு வருபவன், ஜாகிங் செய்யப் போய்விடுவான். அது முடிந்ததும் பெற்றோருடன் சற்று நேரம் போனில் பேசிவிட்டு, இரவுணவு முடித்துக் கொண்டு, மீதமிருக்கும் புத்தகங்களைத் திருத்தி முடித்து, நாளைக்கு என்ன படித்துக் கொடுக்கப் போகிறான் என ரெகார்ட் புக்(எல்லா ஆசிரியர்களும் எழுதி, தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும்) எழுதி விட்டு படுக்க நடு இரவாகிவிடும். அந்ததந்த நேரத்து தொழுகையும் மறவாமல் செய்து விடுவான். படுத்தவுடனே பார்வை மீனாட்சியின் படத்தில் படிந்துப் போகும். அவளைக் கண்ணிலும் கருத்திலும் நிறைத்தப்படியே, நாள் முழுதும் ஓயாமல் உழைத்தக் களைப்பில் உறங்கிப் போவான் ரஹ்மான்.

அன்று இரவு படுத்தவனுக்கு களைப்பையும் மீறி தூக்கம் அருகே நெருங்கவேயில்லை. அன்றோடு ‘உலு பெண்டுல்’ கேம்பில் இருவரும் பேசி முடித்து இரு வருடம் ஓடியிருந்தது. நினைவுகள் பின்னோக்கி செல்ல கண்களோ அவள் படத்தில் நிலைக்குத்தி நின்றன.

அசைந்து வரும் தேர் போல அழகாய் தன்னை நோக்கி நடந்து வந்த மீனாட்சியை வைத்தக் கண் வாங்காமல் பார்த்திருந்தான் கேம்ப்பயரின் முன்னே அமர்ந்திருந்த ரஹ்மான். சுள்ளிகள் படபடவென எரியும் சத்தமும், இலைகள் அசைந்தாடும் ஒலியும், தூரத்தில் நீர்வீழ்ச்சியில் நீர் விழும் ஓசையும், நடந்து வருபவளின் காலணி ஏற்படுத்திய சரசர ஒலியும், அமர்ந்திருந்த இசையின் காதை இனிமையாய் நிறைத்தது. கண்கள் ஒளிர, முகத்தில் இருந்த இறுக்கம் வடிய, மனம் சிறகாய் பறந்தது தன் தேவதையின் வரவினால். நெருங்கி வந்தவளை, தன் பக்கத்தில் போட்டு வைத்திருந்த சின்ன துண்டில் அமர சொல்லி சைகை செய்தான் ரஹ்மான். அமைதியாக அவன் அருகே அமர்ந்துக் கொண்டாள் அவள்.

பக்கத்தில் வைத்திருந்த ப்ளாஸ்கில் இருந்து தே ஓ(பால் இல்லாத தேநீர்)வை ஒரு ப்ளாஸ்டிக் கப்பில் ஊற்றி அவளிடம் நீட்டினான் இவன். அவள் வாங்கிக் கொண்டதும் இவனும் தனக்கு ஒரு கப்பில் ஊற்றிக் கொண்டான். தங்களுக்கு முன்னால் எரிந்துக் கொண்டிருக்கும் நெருப்பைப் பார்த்தப்படியே இருவரும் அமைதியாக பானத்தை அருந்தினார்கள். சில நேரங்களில் சில இடங்களில் மௌனம் கூட அழகுதான், ஆனந்தம்தான்!

நீண்டுக் கொண்டிருந்த மௌனத்தை கலைத்தாள் மீனாட்சி.

“என் கிட்ட என்ன பேசனும்?”

தன்னிடம் தனியாக பேசத்தான் அவனோடு சேர்த்து டூட்டி போட்டிருக்கிறான் என அவனது சின்ன வயது தோழிக்குப் புரிந்துதான் இருந்தது.

“உன் கிட்ட பேசாம, பழகாம என்னால இருக்க முடியல மீனாம்மா!”

“அதுக்கு?” என கொக்கிப் போட்டு நிறுத்தினாள் இவள்.

“இந்த காதல நீ வாபஸ் வாங்கிக்கோ! முன்ன மாதிரி நாம ப்ரேண்ட்ஸாவே இருக்கலாம்டா”

“முடியாது!”

“ப்ளிஸ்டி!”

“நோ!”

“மீனாம்மா!!!”

சட்டென எழுந்துக் கொண்டவளை, மீண்டும் கைப்பிடித்து அமர்த்தினான் ரஹ்மான். பெருமூச்சொன்றை இழுத்து விட்டவன்,

“என்னை ஏன் மீனாம்மா புரிஞ்சுக்க மாட்டற?” என கேட்டான்.

“உன்னைப் புரிஞ்சிக்கிட்டதனாலத்தான் நோ சொல்றேன்”

“ம்ப்ச்! என்ன கேட்டாலும் மொட்டை மொட்டையா பதில் சொல்லற! ரஹ்மானுன்னு கூப்பிட மாட்டியா?”

“ஏன்? ஏன் கூப்பிடனும்? நீ போடின்னு போனா, நான் போகனும்! வாடின்னு வந்தா நான் வரனுமா? கூப்பிட மாட்டேன்! பேர் சொல்லி கூப்பிட மாட்டேன்”

“எல்லாத்துலயும் பிடிவாதம்டி உனக்கு”

“இருந்துட்டுப் போகுது”

“மீனாம்மா!” என இவன் எதையோ சொல்ல ஆரம்பிக்க, கை நீட்டி பேசாதே என சைகை செய்தாள் இவள்.

“நான் பேசிடறேன்! அன்னைக்கு என் வாய அடைச்ச மாதிரி இன்னிக்கும் செஞ்சிடாதே! முழுசா பேசிடறேன்” என்றவள் ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டாள்.

நெருப்பை நோக்கி அமர்ந்திருந்தவள், மெல்லத் திரும்பி ரஹ்மானை பார்க்கும்படி அமர்ந்துக் கொண்டாள். அவன் கண்களை நேருக்கு நேர் பார்த்தவள்,

“ஐ லவ் யூ!” என்றாள்.

என்னவோ சொல்ல வந்தவனை மீண்டும் பேசாதே என சைகை செய்தாள். இயலாமையுடன் வாயை இறுக மூடிக் கொண்டான் இவன்.

“பினாங்குக்கு வந்ததுல இருந்து நாம மீண்டும் சந்திக்கற வரை உன்னை நான் நெனைக்காம இருந்ததே இல்ல! கணக்குப் போடத் தெரியாம தவிச்சப்போ, நீ இருந்திருந்தா சொல்லிக் குடுத்திருப்பியேன்னு நெனைச்சிப்பேன். அம்மா கோழி பொரிச்சு தரப்போ, எனக்கு டப்பால போட்டு எடுத்து வந்து தர நீ ஞாபகத்துக்கு வந்திடுவ! மலாய்க்காரங்க மாதிரியே நான் மலாய் சரளமா பேசறேன்னு யாராச்சும் சொன்னா, எனக்கு மலாய் சொல்லி தந்த நீதான் என் கண் முன்னுக்கு வந்து நிப்ப! இப்படி என் வாழ்க்கையில நான் கடந்து வந்த ஒவ்வொரு விஷயமும் உன்னை ஞாபகபடுத்திட்டே இருந்தது!” என சொல்லியவளுக்கு மெலிதாய் கண்கள் கலங்கியது.

“அழாதே மீனாம்மா”

“பேசாதேன்னு சொல்றேன்ல! இப்போ என் டைம், நான் மட்டும்தான் பேசுவேன்” என இவள் மிரட்ட, சரியென தலையசைத்தான் அவன்.

“இங்க வந்து உன்னை நேருக்கு நேரா சந்திக்கறதுக்கு முன்ன, முகமறியா சீனியரா எனக்கு அறிமுகமானே நீ! அந்த கெட் டுகேதர்ல என்னை விழாம தாங்கிப் புடிச்சியே, அப்போ உன் மேல வந்த வாசம் எனக்கு ரொம்ப பழக்கமான வாசனைன்னு தோணுச்சு. ராத்திரில தூங்கறப்போ அந்த வாசனை என்னை சுத்தியே இருக்கற மாதிரி ஃபீல் ஆச்சு. அப்புறம் அந்த பார்சல், அதுல எனக்குப் புடிச்ச சாப்பாட்டு ஐட்டம்ஸ், அதோட சேர்த்து கவிதை! அந்த கவிதைல இருந்த கையெழுத்தப் பார்த்ததும் எனக்கு ரொம்ப குழப்பமா ஆகிடுச்சு! உன் எழுத்தப் பார்த்து ரொம்ப வருஷம் ஆகியிருந்தாலும், என்னாலே அது உன் கையெழுத்துதான்னு குழப்பத்தையும் மீறி கண்டுக்க முடிஞ்சது. ஆனா எதுக்கு இந்த மாதிரி கண்ணாமூச்சி ஆட்டம்னு மனசு மூலைல முனுக்குனு உன் மேல ஒரு கோபம்.”

இன்னும் அந்தக் கோபம் இருப்பதைப் போல ரஹ்மானை முறைத்தாள் மீனாட்சி.

“கடைசியா அந்த டிஷூ பேப்பரும் பாடல் வரியும்! அது நீதான்னு கன்பர்மா தெரிஞ்சது! உன்னையும் அப்பாவையும் தவிர என் கண்ணீர கண்டு தவிச்சுப் போறவங்க வேற யார் இருக்கா! ஆறுண்ணா கூட சில சமயம் நான் அழுதா சலிச்சுக்குவான்! வேகமா எழுந்து, கண்ண மறைச்ச கண்ணீர துடைச்சிட்டுப் பார்த்தேன்! ஆனா உன் முதுகு மட்டும்தான் தெரிஞ்சது! அப்போ நீ எழுதிக் கொடுத்த பாட்டு வரில என் கண்ணீர் நின்னுப் போச்சு! எனக்கு கஸ்டம் வந்தா கண்ணீரைத் துடைக்க நீ இருக்கன்னு மனசுக்குள்ள ஒரு தைரியம் வந்துச்சு. கொஞ்சமா கோபத்த விட்டு நீ குடுத்த சாக்லேட்ட அன்னைக்கு சாப்பிட்டேன்! அப்போ ஹேமா என்னைக் கிண்டல் அடிக்கவும், என் மனசு போகும் பாதை லேசா புரிபடற மாதிரி இருந்துச்சு! உன் மேல நான் அட்ராக்ட் ஆகியிருக்கேன்னு உணர்ந்துக்கிட்டேன்! அந்த விஷயம் என்னைப் புரட்டிப் போட்டுச்சு! என் நண்பனாச்சே ரஹ்மான், அவன் மேல எனக்கு எப்படி சலனம் வரலாம்னு என்னையே நான் திட்டிக்கிட்டேன்!”

அப்போதிலிருந்தே இவள் தன் மேல் சலனப்பட்டிருக்கிறாள் எனும் விஷயம் ரஹ்மானுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“க்ளீன் போர்டா இருந்த என் மனசுல யாரோ கிறுக்கி வச்ச மாதிரி மனசு ரொம்பவே சலனப்பட்டுப்போச்சு! நீ நேரடியா வந்து அறிமுகமாகி இருந்திருந்தா, இதெல்லாம் நடந்தே இருக்காது! ரஹ்மான் இப்போ எப்படி இருப்பான், ஹேமா ஹேண்ட்சம்னு சொன்னாளே அப்போ கண்ணு இப்படி இருக்குமா, மூக்கு இப்படி இருக்குமான்னு சதா உன் நினைப்புத்தான். சின்ன வயசுல நீ என்னை நல்லா பார்த்துக்கிட்டாலும் அதை உணர்ந்துக்கற பக்குவம் அப்போ இல்ல! ஆனா இந்த வயசுல நீ அனுப்பி வச்ச எனக்குப் புடிச்ச சாப்பாட்டு பொருளுங்க, மறந்துட்டியான்னு கேட்ட கவிதை, அழாதேன்னு அக்கறையா எழுதிக் கொடுத்த பாட்டுன்னு என் மனசுல ஒரு மாற்றத்தக் கொண்டு வந்த! எனக்கு இந்த மாதிரி உணர்வெல்லாம் ரொம்ப புதுசு! ரொம்பவே தடுமாறிப் போனேன்! ஆனா அதுக்குப் பிறகு ஐயோ இவன் என் நண்பன்னு நெனப்பு வந்து மனச பிசையும் போதெல்லாம் என் மேல எனக்கே வெறுப்பாகிடுச்சு. நம்ம நட்ப நான் கொச்சைப்படுத்திட்ட உணர்வு! உன் மேலயும் செம்ம கோபம். நேரா வந்துப் பேசாம, என் உணர்வுகளோட விளையாடற நீன்னு ஆத்திரமா வந்தது. அந்த டைம்ல மீண்டும் உன் கிட்ட இருந்து லெட்டர். முதல்ல கிழிச்சுப் போட்டுட்டேன்! அப்புறம் எடுத்து வச்சுப் படிச்சுப் பார்த்தேன்! நண்பன்னு எழுதி இருக்கவும் எனக்குள்ளே அப்படி ஒரு ஆசுவாசம். ஏற்கனவே மூட்டைக் கட்டி வச்ச என் சலனத்துக்கு நீ நட்புக்கரம் நீட்டி சமாதி கட்டிட்டேன்னு நெனைச்சேன்.”

அவளது பேச்சைக் கேட்டு ரஹ்மானுக்கு ஐயோவென இருந்தது.

“காபி கலக்கறப்போ கொஞ்சமா தூள் போட்டா கலர் வராது. அதே அள்ளிப் போட்டா டார்க்கா ஆகிடும். அதே மாதிரிதான் சலனமும். சின்னதா ஆரம்பிக்கறப்போவே முடக்கி வச்சிட்டா கலர் அதாவது காதல் வராம போய்டும். அதேயே வளர விட்டா ஸ்ட்ராங்கான காபி மாதிரி ஸ்ட்ராங்கான காதலாகிடும். சின்னதா இருந்த என் சலனத்த நட்புக்கு மரியாதை செஞ்சு குழி தோண்டி புதைச்சிட்டதா நான் நெனைச்சேன். ஆனா உன்னை நேருல பார்த்ததும், உன் கூட பழகனதும், உன் அக்கறையில நனைஞ்சதும், உன்னோட அன்ப அனுபவிச்சதும் அந்த சலனம் மெல்ல மெல்ல வேர் விட்டு வளர்ந்து காதலா முளைச்சி நின்னிருச்சு! சுராயாவ பார்த்தாலே எனக்குப் புடிக்கல, வேற எந்தப் பொண்ணுங்க உன் மேல விழுந்துப் பழகனாலும் எரிச்சலா இருந்தது. உன் கூட தைரியமா ஊர் சுத்த வந்தேன், பிடிவாதம் பிடிச்சு உன் வீட்டுக்கு வந்தேன்! இதுக்கெல்லாம் நட்புன்னு நான் பேர் வச்சாலும் உள்ளுக்குள்ள என்னமோ குடைஞ்சிட்டே இருந்தது. மாக்ச்சியும் பாக்ச்சியும் என்னை அவங்க மக மாதிரி பார்த்தப்போ, இந்த மாதிரி குடைச்சல்லாம் ஏன் வருது? நீ ஒரு கேவலமான பிறவிடினு தோணும். என்னோட குற்ற உணர்ச்சிய மறைக்கத்தான் நட்பு கவிதை வாசிச்சேன்.”

நெருப்பின் அருகே அமர்ந்திருந்தாலும் அவள் உடல் குளிருக்கு நடுங்குவதை கண்டுக் கொண்ட ரஹ்மான், தனது ஸ்போர்ட் ஜாக்கேட்டைக் கழட்டி அவள் மேல் சுற்றிப் போட்டு விட்டான். மெல்லிய புன்னகை உதட்டை எட்ட, ஜாக்கேட்டை இன்னும் தன்னோடு இறுக்கிக் கொண்டவள் மீண்டும் பேச ஆரம்பித்தாள்.

“வாயளவுல நட்புன்னு நான் சொல்லிக்கிட்டாலும் உள்ளுக்குள்ள காதலாத்தான் அது இருந்துருக்குன்னு நான் புரிஞ்சுக்கிட்டது என் கை அடிப்பட்டப்போதுதான். எனக்காக நீ துடிச்சது, என்னைக் கட்டிக்கிட்டது, என் கண்ணீர துடைச்சது எல்லாம் என் மனச எனக்கே நல்லா புரிய வச்சது! அடுத்த நாள் முழுக்க ஒரே சுய அலசல்! இது சலனம் இல்ல, அட்ராக்ஷன் இல்ல, நீ இல்லாம இனி நான் இல்லன்னு நல்லா நான் புரிஞ்சுக்கிட்ட நாள் அது. காதல் வந்ததும் சொல்லிடுவேன்னு சொன்ன நான், அதை மனசுக்குள்ள பொத்தி வச்சு சுகமான உணர்வுல சஞ்சரிச்சேன். நீ கிளம்பறப்போ அவ்ளோ ஆசையா என் மனச உனக்கு திறந்து காமிச்சேன்! ஆனா நீ… என் ரஹ்மானு நான் கேட்டா எல்லாத்தையும் தருவான்னு இறுமாப்புல மிதந்துட்டு இருந்த என்னை நெஞ்சுல படார்னு அடிச்சு தரைக்குத் தள்ளி விட்டுட்ட!” என்றவளுக்கு அன்றைய நினைவில் கண் கலங்கியது.  

“என்னை மன்னிச்சிடு மீனாம்மா! என்னை அறியாம உன் மனசுல காதல் வர நானே காரணமாயிட்டேன்! என்னை மன்னிச்சிடு. ஒரு பக்கம் தட்டுனா ஓசை வராதும்மா! அதனால இந்தக் காதல் உனக்கு வேணா!”

“பொய் சொல்லாதடா! பொய் சொல்லாத! என்னை நீயும் காதலிக்கறேன்னு எனக்குத் தெரியும்! ஆரம்பத்துல என் உணர்வுகளோட போராடிட்டு இருந்த எனக்கு உன்னோட காதலைக் கண்டுக்கத் தெரியல, கண்டுக்க முடியல! ஆனா நீ என் காதல ரிஜேக்ட் செஞ்சப் பிறகு தினமும், ஏன் உனக்கு என் மேல காதல் வரலன்னு யோசிச்சிட்டே இருந்தேன்! உன் கூட பழகன இந்த ஆறு மாசத்தையும் அசைப் போட்டுட்டே இருந்தேன்! அப்போ புரிஞ்சது உன்னோட அக்கறை, அன்பு, பாசம், எல்லாம் வெறும் நட்புக்காக மட்டும் இல்லைன்னு. அடிப்பட்டப்போ உன்னோட நன்னெறிகள தூக்கிப் போட்டுட்டு என்னைக் கட்டிக்கிட்டது, எனக்காக அந்த பரதேசி பார்த்திபன் கைய உடைச்சது, உன்னோட தரையில் துடிக்கும் மீன், தண்ணியில் தவிக்கும் மான் எல்லாமே புரிஞ்சுக்கிட்டேன்! என் ரஹ்மான் இவ்ளோ காதல வச்சிக்கிட்டு என்னை தள்ளி வைக்கறான்னா எதாவது காரணம் இருக்கும்னு என் மனசு அடிச்சு சொல்லுச்சு! ஏற்கனவே மனசளவுள துடிச்சிட்டு இருக்கற உன்னை காதல் டார்ச்சர் பண்ணி இன்னும் துடிக்க வைக்க வேணாம்னுதான் தள்ளி இருந்தேன் இத்தனை நாளா! ஆனா நீ மறுபடி மறுபடி காதல் இல்லைன்னு பொய் சொல்லறத என்னால தாங்கிக்கவே முடியல!” என்றவள் ஆவேசமாக அவன் கையைப் பற்றி தன் கையில் வைத்து,

“சொல்லு ரஹ்மானு! என் மேல காதல் இல்ல? என் மேல சத்தியம் பண்ணி சொல்லு! சொல்லு! சொல்லு!” என கண்ணீரோடு கதறினாள்.

அவளது கையில் இருந்து தன் கையை அவன் உருவ முயல, அவள் பிடியோ உடும்புப்பிடியாக இருந்தது.

“சொல்லு!”

“ஆமா, நான் உன்னை உயிராய் காதலிக்கறேன் மீனாம்மா!” என கோபமாய் சொன்னவன் கையை வெடுக்கென இழுத்துக் கொண்டான்.

அப்படியே எழுந்துக் கொண்டவன், தலையை அழுந்தக் கோதினான். அவள் மேல் சத்தியம் செய்ய சொன்ன மீனாட்சியின் மேல் கோபம் கோபமாய் வந்தது. அவளுக்கு ஒன்று என்றால் இவனால் தாங்க முடியுமா! அத்தனை நாட்களாய் மனதில் அடைத்து வைத்திருந்த அனைத்தையும் ஆத்திரத்தில் வெளியே கொட்டினான் ரஹ்மான்.

“உன்னை கெட் டுகெதர்ல பார்த்த தினத்துல இருந்து நீ இங்க இருக்க!” என தன் நெஞ்சைத் தொட்டுக் காட்டினான் ரஹ்மான்.

மீனாட்சியின் முகம் பூவாய் மலர்ந்தது.

“எப்படி சொல்லன்னு தெரியல மீனாம்மா! தண்ணியில மூழ்கன இன்சிடெண்ட் நடந்ததுல இருந்து அடிக்கடி என் கனவுல கண்ணீர் முகத்தோட நீ வந்துட்டே இருந்தே! ஆழ் மனசுல பதிஞ்சுப் போன ஒரு விஷயம் இப்படி கனவா தன்னை வெளிப்படுத்திக்கும்னு விவரம் தெரிஞ்சதும் படிச்சு தெரிஞ்சுக்கிட்டேன். ஆனா அந்த பதினஞ்சு வயசுல, நீ அழறது தான் எனக்கு பெரிய விசயமா இருந்தது. கனவுல அழற உன்னை நெஜத்துலயாச்சும் சிரிக்க வச்சுப் பார்க்கனும்னுதான் உன் மேல பாசமா இருந்தேன், நீ எது கேட்டாலும் செஞ்சேன்! அதன் பிறகு நீ என்னை விட்டுப் போனாலும் அந்தக் கனவு என்னை விட்டுப் போகல மீனாம்மா! ஆறுவ நெனைச்சேனோ இல்லையோ உன்னை நினைச்சிட்டே இருந்தேன். அப்பா மேனேஜ்மேண்ட் படிச்சிட்டு காபி கம்பேனிய நடத்தறியான்னு கேட்டதுக்கு, இல்ல டீச்சிங்தான் எடுக்கப் போறேன்னு யோசிக்காம பதில் சொன்னேன். உள்ள இருந்து என்னை செலுத்திட்டு இருந்தது நீதான் மீனாம்மா. அந்த வயசுல எனக்கு வந்தது காதல்னு சொன்னா, அது ரொம்பவே அபத்தம். ஆனா போக போக சுகமான இம்சையா என்னை நீ உள்ளுக்குள்ள ஆக்ரமிச்சிக்கிட்டது உண்மை. ஆனா இது சரியில்லன்னு எனக்கு புரிஞ்சது! அதான் உன்னைத் தேடி நான் வரல!” என்றான் ரஹ்மான்.

“ஆனா விதி, என்னையும் உன்னையும் மறுபடியும் சந்திக்க வச்சிடுச்சு. என் மீனாம்மாவ வளர்ந்த அழகான ஒரு பொண்ணா சந்திச்சதுல என் மனசு ரோலோர் கோஸ்டர்ல போகிற மாதிரி படபடன்னு அடிச்சிக்கிச்சு. அப்படியே கடந்துப் போயிடனும், நான் யாருன்னு காட்டிக்காம இருந்துடனும்னு எவ்வளவோ மனச சமாதானப்படுத்தினேன். உன்னை மாதிரியே அதுவும் என் சொல் பேச்சு கேட்கல. அந்த லெக்‌ஷர் ஹாலுல உன்னை விடாம பார்த்துட்டே இருந்தேன். உன்னோட ஒவ்வொரு அசைவையும் பொக்கிஷமா மனசுல சேமிச்சிக்கிட்டே இருந்தேன்! நீ கீழ விழ இருந்தப்போ, பட்டுன்னு புடிச்சு நிறுத்துனேன். அந்த நிமிஷம் என் மனசு அப்படியே உன் காலடியில விழுந்துடுச்சு மீனாம்மா. இது சரி இல்லைன்னு அவசரமா விலகிப் போனேன். ஆனா முடியலடி! இத்தனை வருஷத்து ஏக்கத்தையும் லெட்டருல எழுதி உனக்குப் புடிச்ச பொருளா பார்த்து, பார்த்து வாங்கி அனுப்பி வச்சேன். ஆனா அதுல என் காதல் வெளிப்பட்டிற கூடாதுன்னு கவனமா வார்த்தைய தேர்ந்தெடுத்து அனுப்பனேன். தூரமா இருந்து ஒரு முகமறியா நட்பா உன்னை வழி நடத்திட்டு விலகிக்கனும்னு நெனைச்சேன். ஆனா அந்த பைக் உன்னை இடிக்க வந்த நொடி என் தீர்மானம் எல்லாம் காத்தோட காத்தா பறந்துப் போச்சு!” என பெருமூச்சுடன் சொன்னான் ரஹ்மான்.