Jeevan Neeyamma–EPI 21 (part 2)

171916099_840757923178210_3424615682123961255_n-e20f4fdc

அவன் பேச பேச மீனாட்சிக்கு சொர்க்கமே தன் கையில் சேர்ந்த உணர்வு.

“அப்புறம்?” என ஆசையாய் மீதியை சொல்ல சொல்லி ஊக்கினாள்.

“உன்னை மனசுல வச்சிருக்கற என் கிட்டயே வந்து அந்த சுராயாவ கட்டிக்க! எனக்கு ஒன்னும் அப்ஜெக்‌ஷன் இல்லன்னு நீ சொன்னப்போ, என்னால தாங்கிக்க முடியல! காதலியே, இன்னொரு காதலி பார்த்துக் குடுக்கற கொடுமைலாம் எனக்கு மட்டும்தான் நடக்கனும்னு அந்தக் கடவுள் எழுதி வச்சிருக்கான் போல” என விரக்தியாய் சொன்னான் ரஹ்மான்.

இவளுக்கோ புன்னகை வரப் பார்த்தது. அவனது முகத்தில் தெரிந்த இறுக்கத்தில் வாயை இறுக மூடிக் கொண்டாள்.

“என் வீட்டுல என் கூட நீ இருந்த நொடிகள பொக்கிஷமா உணர்ந்தேன் நான். இது மட்டும்தான் என் வாழ்க்கைக்கு மிச்சம்னு மனசு முழுக்க வலி இருந்தாலும், சிரிச்சுட்டே இருந்தேன் உன் முன்னே! கவிதை போட்டி அப்போ கவிதை சொல்லுன்னு எல்லாரும் கத்துனப்போ, ஒன்னுமே எழுதி வச்சிக்காத நான் சடனா சொன்ன கவிதைதான் அது. என்னை அறியாமலே என் காதல் அதுல வெளி வந்துருச்சு. எங்க அதை நீ கண்டுப்புடுச்சுருவியோன்னு பயந்து கிடந்தேன். ஏற்கனவே குழம்பிக் கிடந்த நீ அதை கண்டுப்பிடிக்கல! உனக்கு கை உடஞ்சப்போ, நான் பட்டப்பாடு எனக்குத்தான் தெரியும் மீனாம்மா! மென்மையான என்னையையே அந்த பார்த்திபனோட ரத்தம் பார்க்க வச்சிருச்சு. காதல் மொத்ததுல என்னைப் புரட்டிப் போட்டு புழுங்க வச்சிடுச்சு.”

“இவ்ளோ காதல வச்சிக்கிட்டு, ஏன் ரஹ்மானு என்னை வேணான்னு சொன்ன?”

“உனக்காகத்தான்டி!”

“புரியல எனக்கு? என்னை மறுக்க நானே எப்படி காரணமாவேன்?”

“இந்த நாட்டுல மலாய்க்காரங்கள கல்யாணம் செய்யனும்னா என்ன கண்டிஷன் இருக்குன்னு உனக்குத் தெரியுமா?”

“ஏன் தெரியாது? நான் மதம் மாறி உன் மதத்துக்கு வரனும்! அவ்ளோதானே?”

“என்ன அவ்ளோதானே!!!!” என கேட்டவனுக்கு புரியாமல் பேசுகிறாளே இவள் என ஆதங்கமாய் இருந்தது.

“அந்த மூனு நாளுல திருநீரு வைக்காம இருப்பியா நீ?”

அவனை நிமிர்ந்துப் பார்த்தவள் மெல்லிய குரலில்,

“நெத்தி கோசமா(வெறுமையாக) இருக்குமேன்னு பவுடர திருநீரு மாதிரி பூசிக்குவேன்” என்றாள்.

“அந்த நாட்கள்ள கூட உன்னால நெத்தில திருநீரு இல்லாம இருக்க முடியாது! என்னை நிக்காஹ் செஞ்சா வாழ்நாள் முழுக்க நெத்தில ஒன்னும் இல்லாம இருக்கனும் மீனாம்மா”

வாயடைத்துப் போய் நின்றவளை,

“வாரத்துல எத்தனை தடவை சீன சாப்பாடு சாப்பிடற நீ?” என கேட்டான்.

நான்கு என கை விரலைக் காட்டியவள்,

“ஹொக்கியேன் மீ(ஒரு வகையான சீன நூடுல்ஸ்) இல்லாம என்னால இருக்க முடியாது” என குரல் கம்ம சொன்னாள்.

“என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா அதெல்லாம் நீ தொட்டேப் பாக்க முடியாது”

சீன உணவில் பன்றி எண்ணெய் சேர்ப்பதால் அந்த உணவை எடுத்துக் கொள்ளமாட்டார்கள் மலாய்க்காரர்கள்.

“நான் சாப்பிடாம இருந்துப்பேன் ரஹ்மானு!” என்றவளைப் பார்த்து,

“உன்னோட பேரு என்ன?” என கேட்டான்.

“மீனாட்சி அம்மன்”

“அழகான கடவுள் பேரு! என்னோட மனைவியானா அந்தப் பெயரையே எடுத்துடனும்! வேற மலாய் பேரு வச்சு உங்கப்பா பெயர அப்துல்லான்னு மாத்திடுவாங்க!”

இந்த நாட்டில் மற்ற இனத்தவர்கள் இஸ்லாத்துக்கு மாறும் பொழுது பெயரும் மாற்றம் செய்யப்படும். அப்பாவின் பெயராக அப்துல்லா எனும் நபிகள் நாயகத்தின் தகப்பனாரின் பெயர் மாற்றி வைக்கப்படும். இந்தக் காலகட்டத்தில் சர்வ சாதாரணமாக மத மாற்றம் நிகழ்ந்தாலும், கதை நடந்த சமயத்தில் மத மாற்றம் பெரிய விஷயமாகவே கருதப்பட்டது.(இந்தக் கதையில் எந்த இடத்திலும் நான் எந்த மதத்தைப் பற்றியும் தப்பாக பேசவில்லை. மலாய் சமூகத்தினர் எப்படி தங்கள் மதத்தை கட்டுக்கோப்பாக கடைப்பிடிக்கிறார்கள் எனும் உண்மை நிலவரத்தை அப்படியே பகிர்ந்துக் கொண்டுள்ளேன். அவ்வளவுதான்! உஸ்தாஷா என அழைக்கப்படும் இஸ்லாத்தைப் போதிக்கும் திருமதி வான்(மலாய்க்காரர்) என்பவரை அணுகி அவரிடம் எல்லாம் கேட்டுத் தெளிவுப்படுத்திக் கொண்டே எழுதி இருக்கிறேன். நானும் பள்ளி ஹாஸ்டலில் மலாய்காரர்களோடு ஒன்றொடு ஒன்றாய் பழகி இருப்பதால், அவர்களின் வாழ்க்கை முறையை ஓரளவு நேரில் பார்த்ததை வைத்தும் எழுதி இருக்கிறேன். கதையை உள்ளார்ந்துப் படித்து வரும் உங்களுக்கு இந்தக் கதைக்கு நான் போட்ட உழைப்பு புரியும் எனும் நம்பிக்கையோடு கதையை நகர்த்துகிறேன் தோழமைகளே! ரஹ்மானைப் பற்றி பேசுங்கள், மீனாட்சியைப் பற்றிப் பேசுங்கள்! தயவு செய்து மதத்தைப் பற்றி விமர்ச்சிக்காதீர்கள்! இது என்னுடைய அன்பான வேண்டுகோள்)

கண்ணில் நீர் வழிய அவன் பேசுவதையேப் பார்த்திருந்தாள் மீனாட்சி.

“ஆரம்பத்துல காதல் ஜோருல எல்லாமே இனிமையா இருக்கும் மீனாம்மா! போக போக உன்னோட சுயத்த இழந்து, கூண்டுக்குள்ள மாட்டிக்கிட்ட மாதிரி மூச்சடைச்சுப் போயிடும்! காதல் காணாமல் போய் அங்க ஒரு வித சலிப்பு வந்து அமர்ந்துக்கும். இவனாலத்தான் இதெல்லாம்னு என் மேல வெறுப்பு வரும்! அதக் கூட நான் தாங்கிப்பேன்! ஆனா நீ கண்ணீர் விட்டா என் மனசு சுக்கு நூறா ஒடஞ்சிப் போயிடும்! வேணா மீனாம்மா! அந்த நிமைலைல உன்னை நிறுத்திப் பார்க்கற சக்தி எனக்கு இல்ல! நம்ம காதல் ஆரம்பிக்கும் முன்னே கருகி போக வரம் வாங்கிட்டு வந்த காதல்! இது வேணாம் நமக்கு!”

“எனக்கு நீ வேணும் ரஹ்மானு!” என தேம்பினாள் இவள்.

“உங்கம்மா அன்னைக்கு பலகாரம் கொடுக்க உள்ள கூப்பிட்டு என்ன சொன்னாங்க தெரியுமா? ‘அய்யா ரஹ்மானு, மீனாட்சியைப் பத்திரமா பார்த்துக்கய்யா! நீ ஒருத்தன் அங்க அவ பாதுகாப்புக்கு இருக்கன்னு தெரியவும்தான் என் மனசு நிம்மதியா இருக்கு! மனசு அலைப்பாயற வயசு அவளுக்கு. வேத்து ஜாதி பையனோட காதல் கீதல்னு வந்து நின்னா, இவங்கப்பா உசுர விட்டுருவாரு. புள்ள நல்லா படிச்சு டீச்சரனாதும் நம்ம சாதி சனத்துலயே டீச்சர் பையனாப் பார்த்து கட்டிக் கொடுக்கனும்னு அடிக்கடி சொல்லிட்டே இருப்பாருப்பா! ஒரு கண்ண வச்சுக்க சாமி உன் தோழி மேல’ன்னு சொன்னாங்க! வேத்து ஜாதிக்காரன் உனக்கு புருஷனா வரதையே நெனைச்சிப் பார்க்க முடியாதவங்க, வேத்து மதத்துக்காரன எப்படிடி ஏத்துக்குவாங்க? அவங்க மனச ஒடச்சி நம்மலாள நிம்மதியா வாழ்ந்துட முடியுமா சொல்லு? சொல்லு மீனாம்மா?”

அழுகை மட்டுமே அவனுக்கு பதிலாய் கிடைத்தது.

“பெத்தவங்க கட்டன ஆகாச கோட்டையை தகர்த்து அது மேல நாம காதல் கோட்டை கட்ட வேணா மீனாம்மா! ஆரம்பத்துல இருந்தே இந்த பிரச்சனையெல்லாம் நமக்கு இடையில வரும்னு தான் உன்னை நட்பு எனும் வேலி போட்டு தள்ளி நிறுத்துனேன்! ஆனா இப்போ நீயும் இப்படி துடிக்கறதப் பார்த்து என் நெஞ்சே வெடிச்சிடும் போல இருக்குடி” என கண் கலங்க, குரல் கமற பேசியவனைப் பாய்ந்துக் கட்டிக் கொண்டாள் மீனாட்சி.

“நாம ஒன்னு சேர வழியே இல்லையா ரஹ்மானு?” என கதறியவளின் முதுகை பூவிதழை வருடுவது போல மெல்ல வருடிக் கொடுத்தான் ரஹ்மான்.

அவளது அழுகை எப்பொழுதும் போல அவனைப் புரட்டிப் போட்டது. அவன் தேவதையின் கண்ணீர் நெஞ்சை நனைக்க, தேகம் குளிராமல் தீப்பற்றி எரிந்தது. சேர முடியாத இரு இதயங்களுக்கு காதலை வர வைத்த விதியின் மேல் கோபம் வந்தது. எவ்வளவு சாமாதானப்படுத்தியும் அவள் கண்ணீர் நிற்காமல் வழிய,

“நாம ரெண்டு பேரும் நாட்டை விட்டு ஓடிப் போயிடலாமா மீனாம்மா? நீ நீயா இரு, நான் நானா இருக்கேன்! என்னை முர்தாட்னு(மதக் கட்டுப்பாடுகளை மீறுபவன்) சொன்னாலும் பரவாயில்ல!” என மெல்லிய குரலில் சொன்னான் ரஹ்மான்.

படக்கென அவனை விட்டு விலகினாள் மீனாட்சி. நோயின் பிடியில் போராடும் அவனது அம்மா, அவன் மேல் உயிரையே வைத்திருக்கும் அப்பா, தினம் கடமை தவறாது தொழுகைக்கு செல்லும் அவனது பழக்கம் என எல்லாம் அவள் கண் முன்னே வந்துப் போனது.

‘எனக்காக மதத்துக்குப் புறம்பான காரியம் செய்வியா ரஹ்மானு? எனக்காக பெத்தவங்கள விட்டுட்டு வருவியா நீ? அப்படி என்னடா இந்த மீனாம்மா உனக்கு செஞ்சிட்டேன்? உன்னை சாகடிக்கப் பார்த்தேன், ஓயாது தொல்லைக் குடுத்தேன், செலவு இழுத்து வச்சேன், ஆட்டிப் படைச்சேன்! இதத் தவிர உனக்கு என்னத்தடா நான் செஞ்சிட்டேன்? ஏன் என் மேல இவ்ளோ காதல்?’ என மனதில் மாய்ந்துப் போனவள், மெல்ல வேண்டாமென தலையை ஆட்டினாள்.

தனது அழுகை அவனைப் பாதிக்கிறது என உணர்ந்தவள், கண்களை அழுந்தத் துடைத்துக் கொண்டாள்.

“வேணா ரஹ்மானு! உன்னையும் உன் மதத்தையும் பிரிக்கற இந்தக் காதல் வேணா ரஹ்மானு! நம்ம பெத்தவங்கள விட்டுட்டு ஓடிப் போக சொல்லற இந்தக் காதல் வேணா ரஹ்மானு! எல்லோரும் வானம் சாட்சியா, பூமி சாட்சியா காதல சொல்லிக்குவாங்க! நாம கொஞ்ச வித்தியாசமா இந்த வானம் சாட்சியா இந்த பூமி சாட்சியா நம்மளோட காதல் பிரிவை சொல்லிக்குவோம்! இனி நீ உன் வழியப் பார்த்துக்கோ, நான் என் வழிய பார்த்துக்கறேன்” என இவள் சொல்ல அவனது கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தது.

முட்டிப் போட்டு நின்றவள், அவனது முகத்தை இரு கரங்களாலும் தாங்கி அவன் கண்ணீரை தன் உதட்டால் ஒற்றி எடுத்தாள்.

“என்னை ஒரே ஒரு தடவை அபாங்னு(மலாய் பெண்கள் கணவனை அழைக்கும் விதம்) கூப்படறியா மீனாம்மா?”

தன் நினைவுப் பெட்டகத்தில் சேர்த்து வைப்பதற்காக யாசகமாக கேட்டான் அவன்.

அவன் கண்களைப் பார்த்தவேறே,

“அபாங்” என கிசுகிசுப்பான குரலில் கூப்பிட்டாள் அவள்.

கண்களை மூடி அந்த அழைப்பின் ஓசையை ஆழ்ந்து அனுபவித்தான் ரஹ்மான்.

நொடிக்கொரு அபாங் சொன்னவள் ஒவ்வொரு அபாங்கிற்கும் அவன் கன்னம், காது, மூக்கு, கண்கள், நெற்றி என மெல்லிய முத்தமிட்டாள்.

“வேணா மீனாம்மா!” என பரிதவிப்பான குரலில் முனகினான் அவன்.

மதம் வந்துப் பிரித்தாலும் காதல் எனும் அரக்கன் மதம் கொண்டு இருவரையும் புரட்டிப் போட்ட நிமிடங்கள் அவை.

“ஒன்னே ஒன்னு குடுத்துக்கவா ராங்கிப் புடிச்ச ரஹ்மானு?” என கமறலான குரலில் கேட்டாள் மீனாட்சி.

அவள் என்ன கேட்கிறாள் என புரிந்துக் கொண்ட ரஹ்மான், முடியாது என தலையை மெல்ல ஆட்டினான்.

‘என் வாழ்நாள் முழுக்க நான் நெனைச்சுப் பார்த்துட்டே வாழ்ந்து முடிக்க எனக்கே எனக்குன்னு ஒன்னு வேணும்! உன்னை என் பிடியில இருந்து விட்டுடறேன்! பறந்துப் போ! யார வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்க, சந்தோஷமா இரு! ஆனா உன்னோட முதல் முத்தம் இந்த மீனாம்மா குடுத்ததாத்தான் இருக்கனும்’  

அவன் இரு கன்னங்களை இறுகப் பற்றிக் கொண்டவள், அவனது உதட்டில் அழுந்த முத்தமிட்டாள். இருவரின் கண்ணீரும் முத்தத்தின் வழி வாயில் நுழைந்து, இனிப்பு திகட்டி விடுமே என கொஞ்சம் உப்பையும் சேர்த்துக் கலந்தது.

சட்டென விலகிக் கொண்டவள்,

“இனி நீ யாரோ, நான் யாரோ! குட் பாய் ரஹ்மானு” என மடமடவென தனது டெண்டுக்கு நடந்துவிட்டாள்.

கண்ணீர் கண்களுடன்,

“என் செல்ல சைத்தான்!” என அன்று முணுமுணுத்தது போலவே இன்றும் முணுமுணுத்தான் ரஹ்மான்.

 

(ஜீவன் துடிக்கும்…)  

(இந்த எபி ரொம்ப இமோஷனல் எபி! மூவாயிரம் வார்த்தை வரைக்கும் இழுத்துடுச்சு. ரெண்டு எபியா வேற வேற நாள் குடுக்கலாம்னா அந்த ஃபீல் வராது! அதான் ரெண்டு பாகமா பிரிச்சுப் போட்டேன். நான் லேட்டா வந்தாலும் எனக்கு வெயிட் பண்ணதுக்கு நன்றி. எவ்ளோ ப்ரூப் பார்த்தாலும் சில இடங்கள்ல எழுத்துப் பிழை வந்துடுது. சாரி டியர்ஸ். லவ் யூ ஆல்)