Jte-10

Jte-10

பவானி எழுந்தவுடன், நாதன் அவளை அழைத்துச் சென்றுவிட்டார்.

ஜீவனிடம் ‘பின்னர் வருகிறேன்’ என்ற வாக்குறுதிக் கொடுத்து விட்டுதான் சென்றாள்.

****

அன்றைய மலைப்பிரதேசத்தின் மழைப் பொழியலில், மரம் செடி கொடிகள் குளியலில் இருந்தன.

பவானியின் வீடு…

பாலா வேலைக்கும், பல்லவி பள்ளிக்கூடமும் சென்றுவிட்டனர்.

என்று போல் இன்றும், நாதன் வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்தார்.

“அப்பா” – பவானி கேள்வியாக அழைத்தாள்.

அவள் எதற்காக அழைத்தாள் என்று நாதனுக்குத் தெரியும். தன்னிடம், ஜீவனைப் பார்க்கப் போக அனுமதி கேட்பாள் என்று கணித்திருந்தார்.

“பவானி” என்று ஏதோ சொல்ல வந்தவர் ,” நீயே சொல்லும்மா” என்றார்.

“அப்பா, பெஞ்ச் வரைக்கும் போயிட்டு வரட்டும்மா?”

நாதன், பவானியின் அருகில் வந்து அமர்ந்தார்.

“என்னப்பா? ஒண்ணும் சொல்ல மாட்டிக்கீங்க. போட்டும்மா??”

“போ. ஆனா அப்பா, உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்”

“சொல்லுங்கப்பா”

“ஜீவன் சார், உன்கிட்ட ஏதாவது சொன்னா, கவனமா கேட்கணும்”

“கவனமாவா! என்னப்பா சொல்வாங்க?”

“அதெல்லாம் தெரியாது. அவர் சொல்றதைக் கவனமா கேட்டு, முடிவு எடு”

பவானி அமைதியாக இருந்தால். ஏற்கனவே நான்கு நாட்கள் ஜீவனைக் காணாததால், ஏதோ ஒரு ஏமாற்றம் பரவி மனம் அமைதியின்றி இருந்தது.

இன்று தந்தையின் இந்த அறிவுறை, காலையில் ஜீவன் சொல்லிய, ‘உன்கிட்ட பேசணும்’ என்ற வார்த்தை… அவளைக் குழப்பியது.

பவானி ஒரு முடிவு எடுத்திருக்கும் நிலையில், இவர்களின் பேச்சுக்கள் அவளின் மனநிலையை அசைத்தது.

“என்னம்மா யோசிக்கிற? முடிவு சரியா எடுத்திருவேல”

நாதனின் குரலில், மகளின் எதிர்காலம் பற்றிய பதற்றம் தெரிந்தது. – நாம்.

“ம்ம் சரிப்பா. ஆனா, நீங்க ஏன்பா ஒரு மாதிரி இருக்கீங்க?”

பவானி சொன்னது போல் நாதன் மிகவும் களைப்பாகத் தெரிந்தார். முகத்தில் வாட்டம் இருந்தது.

“ஏதாவது பிரச்சனையாப்பா?” – பவானி.

“இல்லை மா . நீ மட்டும் சரியான முடிவு எடு. அதுவே அப்பாவுக்கு சந்தோஷம்”

“ம்ம்ம்”

“சரி. சீக்கிரமா போ. பாலாவும் பல்லவியும் வரதுக்குள்ள வந்திரணும்”

“ஏன்ப்பா?”

“நீ வந்திரும்மா. அதான் நல்லது.”

“சரிப்பா” என்று சொல்லிக் கிளம்பினாள்.

பாலாவுக்குத் தெரிந்தால் என்னாகும் இவளின் நிலைமை என்ற பயத்துடன், பவானி என்ன முடிவெடுக்கப் போகிறாள் என்ற கவலையுடனும்… மற்ற வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

****

செழுமையான மலைப் பிரதேசத்தின், குளுமையான வானிலையின் , வழமையான நாள் என்று அன்றைய நாளைச் சொல்லிவிட முடியாது.

ஜீவனும் நாதனும் நிரம்ப பிரச்சனைகளைச் சந்திக்கப் போகும் நாள். கடந்து வருவார்கள் என்று நம்புவோமாக!! – நாம்.

தன் மெல் இதயத்தில் இருப்பதைச் சொல்ல, கல் இருக்கையை நோக்கி நடந்தாள், பவானி.

இருக்கையை நோக்கி வரவர, ஜீவனின் சத்தம் கேட்டது. மேலும் சில சிறுவர்களின் சத்தமும் கேட்டது. கொஞ்சம் எட்டி நடைப் போட்டுக் கிட்ட வந்து பார்த்தாள்.

விளையாட்டு ….
ஒரு வாளி நிறைய தண்ணீர் நிரப்பப்பட்ட பலூன்கள். ஐந்து சிறுவர்களும் மற்றும் ஜீவனும் வட்ட வடிவில் நின்றிருந்தனர். அனைவரின் கைகளும் சோப்பு நுரைகளாய் இருந்தது.

ஒரு சிறுவன், தன் கையிலிருந்த நீர் நிரப்பிய பலூனை, அருகில் இருந்த சிறுவனை நோக்கி எறிந்தான்.

பலூனை, அச்சிறுவன் பிடிக்க வேண்டும். கைகளில் சோப்பு நுரையுடன் பிடிப்பது சிரமாக இருந்தது.

இப்படியே நீர் நிரப்பிய பலூன் சுற்றி வந்தது. யார் பிடிக்காமல் தவற விடுகின்றார்களோ, அவர்கள் மேல் வாளியில் இருந்து ஒரு நீர் நிரம்பிய பலூனை எடுத்து எறிந்தனர்.

இப்படியே விளையாட்டுத் தொடர்ந்தது…

நிரம்ப நேரம் விளையாடி இருப்பர் போல, அனைவரும் கொஞ்சம் நனைந்தருந்தனர்.

விளையாட்டின் ஊடே, பவானி வந்ததை ஜீவன் பார்த்தான்.

“பவானி, உட்காரு வாரேன்” என்றான்.

பவானியும் அமர்ந்தாள்.

சற்று நேரத்தில்… தன் விளையாட்டை முடித்துக் கொண்டு, ஜீவன் வந்து இருக்கையில் அமர்ந்தான்.

ஆங்காங்ககே நீரால் நனைந்து, அன்று வித்தியாசமாத் தோற்றமளித்தான் ஜீவன்.

சிறுவர்கள் விளையாடிக்கொண்டே இருந்தனர்.

“செம்ம கேம் தெரியுமா? எவ்வளவு நேரம்னே தெரியலை. சூப்பரா விளையாடினோம்” என்று சிரித்தான்.

“அப்போ கை வலிக்குன்னு சொன்னீங்க, இப்போ இப்படி விளையாடுறீங்க” என்று அவனது முந்தைய தருணத்தின் பொய்யை, இந்தத் தருணத்தில் நியாபகப் படுத்தினாள்.

“அது… அது…” என்றவன் அதற்குமேல், பதிலேதும் சொல்ல முடியாமல் தடுமாறினான்.

“விட்டுருங்க சார்?”

“பவானி, இதைவிட முக்கியமான விஷயம் பேசணும். அதனால இந்த மாதிரி கேள்வியெல்லாம் வேண்டாம்”

“புரியலை சார்”

“புரியும்”

“ம்ம்ம்”

தந்தையும் ஜீவன் சாரும் ஏன், இப்படி இருக்கிறார்கள்? தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது? என்று புரியாமல் பவானி குழம்பிக்கொண்டிருந்தத் தருணங்கள் – இவை.

இன்னும் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.

“பவானி”

“சொல்லுங்க, என்ன பேசணும்?”

“நிறைய பேசணும், ம்ம்ம்” என்று சுற்றும்முற்றும் பார்த்தான்.

“சரி பேசுங்க”

“ஆனா பவானி, இங்க வேண்டாம்” என்று எதிரில் இருந்த மரங்கள் நிறைந்த பகுதியைப் பார்த்தவன் “அங்கே வா, போலாம்” என்றான்.

“இல்லை சார். அப்பா இங்க வரைக்கும்தான் அலோவ் பண்ணுவாங்க”

“ப்ச், நான்தான கூப்பிடுறேன். வா பவானி”

“வேண்டாம் சார்”

“நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். ப்ளீஸ்.”

“இங்கேயே சொல்லலாமே… ஏன் அங்கெல்லாம்?”

“இங்க இந்தப் பசங்க விளையாடுறாங்க. டிஸ்டபன்ஸா இருக்கும். அதான் சொல்றேன்”

“ஆனா, அப்பாகிட்ட சொல்லாம எப்படி வர முடியும்? அதோட அப்பா என்னைய இங்கதான் தேடி வருவாங்க”

“அதான் சொல்றேன். எனக்கு நிறைய பேசணும் பவானி. இங்க இருந்தா யாராவது வருவாங்க. சரியா பேச முடியாது. நான் பேசினத்துக்கு அப்புறம் நீ முடிவு எடுக்கணும்” என்று கெஞ்சினான்.

பவானி, ஜீவனையே கூர்ந்து பார்த்தாள்.

“என்ன அப்படிப் பார்க்கிற?” – ஜீவன்.

“அப்பாவும் இதே சொன்னாங்க. நீங்களும் சொல்றீங்க” – பவானியின் குரலில் சந்தேகம் இருந்தது.

“நாதன் சார் என்ன சொன்னாங்க?”

“நாதன் சாரா??” – இவர்கள் இருவருக்கும் என்ன பிரச்சனை என்று குழம்பினாள் பவானி.

“ஆமா அப்படித்தான். என்ன சொன்னாங்கன்னு சொல்லு?”

“சரியான முடிவா எடுன்னு?”

“ஓ, அட்வைஸ்! உங்க அப்பா சொல்ற மாதிரி முடிவு எடுத்திடலாம். வா” என்று நடக்கத் தொடங்கினான்.

முழுதாய் ஒரு இரண்டு மூன்று வினாடிகள் யோசித்துவிட்டு, அவனைப் பின் தொடர்ந்தாள்.

ஜீவன் திரும்பிப் பார்த்தான். பவானி பின் தொடர்வதைக் கண்டதும் நின்றான்.

“இதுக்கு என் கூடவே வந்திருக்கலாம்ல??” என்று சிரித்தான்.

“என்ன பேசணும்? குழப்பமா இருக்கு சார்”

“குழம்பாம வா, தெளிவா ஒரு முடிவு எடுக்க வேண்டிய நேரம்”

இருவரும் சேர்ந்து, அந்த மரங்கள் நிரம்பிய பகுதிக்கு வந்தனர்.

சாலையிருந்து சற்று மேடான பரப்பில் இருந்தது. நெடு நெடுவென வளர்ந்த மரங்கள். அத்தகைய மரங்களின் கிளைகளைத் தாண்டி மெல்லியதாய் வந்த சூரிய ஒளிக் கற்றைகள். மணல் பரப்பில் ஆங்காங்கே காய்ந்த இலைகள் மற்றும் ஈரமான தரைப் பரப்பு.

பவானிக்கு புதிய அனுபவம்.
எட்டு மாதங்களாய் ஒரே சூழலைப் பார்த்துப் பழகியவளுக்கு, இது பெரிய மாற்றம்.
மாற்றத்தை மனம் ரசித்தபடியே நடந்தாள்.
ஜீவனின் அருகில் நடந்தாள்.

லேசாகச் சூரியக்கதிர் பட்டதும், ஜீவன் விளையாட்டின் காரணமாக, ஈரமான தன் கேசத்தைச் சிலுப்பினான். அந்தச் செயலால், அருகிலிருந்த பவானியின் மேல் சில பல துளிகள் தெறித்தன.

பவானி கண் சுருக்கி, “ஜீவன் சார்” என்று ஜீவனின் செயலுக்கான எதிர்வினையைக் காட்டினாள்.

இருவரும் நின்று விட்டார்கள்.

அந்த அழைப்புக் கேட்டுத் திரும்பியவன், “ஓ! சாரி பவானி.. சாரி. நான் கவனிக்கல” என்றான்.

“பரவால்ல” என்று சொல்லிக் கொண்டே, தன் புடவை முந்தானையால் கைகளைத் துடைக்க ஆரம்பித்தாள்.

ஜீவன், பவானியைப் பார்த்திருந்தான்.

“பவானி” என்று சொல்லி அவளது முகத்தின் அருகே கைகளைக் கொண்டு சென்றான்.

சட்டென்ற ஜீவனின் அச்செயலால், பவானி சற்று பின்னோக்கிச் சாய்ந்தாள்.

“அகைன் சாரி பவானி” என்று சொல்லியவன், பவானியின் முகத்தில் இருந்த துளிகளைச் சுட்டி காட்டி, “அதையும் துடைச்சிக்கோ. அதுக்காகத்தான் அப்படி” என்றான்.

அதையும் துடைத்துவிட்டு, பவானி ஜீவனையே பார்த்தபடி நடந்தாள்.

“ஜீவன் சார்”

“சொல்லு” என்று சொல்லி, நின்றான்.

“நான் உங்களுக்கு ஒண்ணு செஞ்சி கொண்டு வந்திருக்கேன். கொடுக்கணும். ”

“ஓ! காலையில சொன்னேல. மறந்திருச்சு. கொடு ” என்று கை நீட்டினான்.

“கைய நல்லா துடைச்சிக்கோங்க. அது நனையக் கூடாது.”

“சரி” என்று சொல்லி, தன் ஆடையில் துடைத்துக் கொண்டான்.

அடுத்த நொடியே, தன் கைகளில் இருந்த ஒரு செய்தித்தாள் சுற்றியப் பொருளை எடுத்து நீட்டினாள்.

“என்னது?” என்றான் மீண்டும் முன்னோக்கி நடந்தவாறே!!

“ஓபன் பண்ணி பாருங்க” என்றாள் அவனுடன் நடந்துகொண்டே!!

பிரித்துப் பார்த்தான். ஒரு வெள்ளைக் கைக்குட்டை. ஒவ்வொரு மடிப்பாகப் பிரித்துப் பார்த்தான். முழுதும் மடிப்புகள் பிரித்தப் பின், பவானியின் மனம் தெரிந்தது.

மஞ்சள் வர்ண நூலால், கைக்குட்டையில் உள் ஓரத்தில் ஜீவன் என்று எழுதியிருந்தது.

அது, அவளின் உள்ளம் பற்றிச் சொன்னது. அன்று அவளிடம் ‘உனக்குப் பிடிச்சதைப் போடு’ என்று தான் சொன்னது நியாபகம் வந்தது, ஜீவனுக்கு.

அவனுக்கான, அவளின் முயற்சி அல்ல அது. அவனுக்கான, அவளின் முடிவு அது!!

நேர்த்தியில்லா அந்த நூல் வேலைப்பாடுகளின் ஊடே இருந்த, பவானியின் நேர்த்தியான நேசம் புரிந்தது, ஜீவனுக்கு!!

தனது வருங்கால வாழ்க்கை வட்டம் என்பது ஜீவனைச் சுற்றியே வரையப்பட வேண்டும் என்று தெரியப் படுத்தியிருந்தாள்!

ஜீவன் சார், அதைப் பார்த்துக் கொண்டே வாழ்ந்து விட முடியாது! கொஞ்சம் பேசுங்கள். – நாம்.

அன்பைக் காட்டுவதிலும் சரி! நேசத்தை தெரிவிப்பதிலும் சரி!! பவானி தெளிந்த நீரோடை. – இதுவும் நாம்.

“ஜீவன் சார்” – புத்தம் புதிய ராகமாய் பவானியின் குரல் ஒலித்தது.

“சொல்லு”

“உங்களுக்குப் புரியுதா?” – பவானியின் குரலில் அத்தனை ஆசை இருந்தது.

“ம்ம்ம், புரியுது”

“அப்புறம் என்ன யோசிக்கிறீங்க?”

“….”

“புடிக்கலையா? ஒண்ணுமே சொல்ல மாட்டிக்கீங்க” – இப்பொழுது, பவானி குரல் முழுவதும் நிராசை மட்டுமே!

“…”

“என்னாச்சு சார்?”

“…” – ஜீவன் ஒரு மரத்தில் சாய்ந்து நின்று கொண்டான்.

“பிடிக்கலைன்னா கொடுத்திடுங்க, நான் ஒண்ணும் நினைக்க மாட்டேன்”

அடுத்த நொடியே, ஜீவன் அதைத் திருப்பிக் கொடுத்து விட்டு, பவானியைப் பார்த்தான்.

எதுவும் சொல்லாமல், ‘ஏன்?’ என்று ஒரு வார்த்தைக் கூட கேட்காமல் ஒரு புன்னகை மட்டும் தந்து, வாங்கிக் கொண்டாள்.

பவானி முகத்தின் பிரதிபலிப்பே சொன்னது, அவள் உள்ளத்தின் பரிதவிப்பை.

“சரி சார், நான் வீட்டுக்குக் போட்டும்மா??” – பவானியின் குரலில் ஏமாற்றம் இருந்தது.

“ஏன்? என்ன அவசரம்??”

“அப்பா தேடுவாங்க. அதான்”

“அதில்லை காரணம். நான் கர்ச்சீப் திருப்பிக் கொடுத்ததால, உனக்குக் கோபம்”

“அப்படியெல்லாம் இல்லை”

“நான் உன்கிட்டயிருந்து இதை எதிர்பார்க்கல பவானி”

‘எதை எதிர்பார்க்கலை?’ என்றபடி பவானி ஜீவனைப் பார்த்தாள்.

“அதுவும் பேசின கொஞ்ச நாள்ளயே இப்படின்னா?? ப்ச், நல்லாவே இல்லை”

திருப்பிக் கொடுத்ததும் இல்லாமல், எதற்கிந்த தேவையில்லா பேச்சு ஜீவன் சார்? – நாம்.

“நீ என்கிட்டே பர்ஸ்டே பெர்மிஸன் கேட்டுட்டு, ஸ்ட்ரீட்ச் பண்ண ஸ்டார்ட் பண்ணியிருக்கணும்”

ஆங்! இதுக்கெல்லாம் அனுமதி கேட்க வேண்டுமா?? – நாம்.

“பாரு டைம் வேஸ்ட். மணி வேஸ்ட்… உன்னோட ….” – ஜீவன்.

“போதும்.”

“என்ன போதும்??”

“நான் வீட்டுக்குப் போகணும்” என்று திரும்பி நடக்கத் தொடங்கியவளை…

“பவானிம்மா” என்று சொல்லி நிறுத்தினான்.

“ச்சே” என்று சொல்லி, பவானி நின்றாள். ஆனால் திரும்பவில்லை.

“திரும்பிப் பாரு பவானி”

பவானி திரும்பினாள்.
கண்களில் வழக்கம் போல் கண்ணீர்.
ஜீவன் சிரித்தான்.

“அதெப்படி பவானி… வீட்லயிருந்து வரப்போவே, இவனைப் பார்த்தா அழணும்னு நினைச்சிக்கிட்டயே வருவியா??” – நய்யாண்டியில் நனைத்து எடுத்தது போல் ஜீவன் குரல்.

‘என்ன விளையாட்டு?’ என்பது போல் பவானியின் பார்வை இருந்தது.

“சொல்லு பவானி?”

“நான் ஒண்ணும் அப்படி நினைக்கல. நீங்கதான் என்னைய அழ வச்சது” என்று மேலும் கண்ணீர் கோடுகள் வரைந்தாள்.

“ஐயோ சாரி… சாரி” என்று அவள் கண்களின் அருகே கை கொண்டு சென்றான், ஜீவன்.

“என்ன??” என்று சொல்லி, பவானி பின்னோக்கி தலை சாய்த்தாள்.

“அழ வச்சேன்ல… ஸோ துடைச்சு விடறேன்”

பவானி நிமிர்ந்து நின்று, நேராக ஜீவனைப் பார்த்தாள்.

“சொல்லு பவானி”

“ம்ம்ம்” என்றாள் புன்னகையுடன்.

சிரித்துக் கொண்டே, ஜீவன் தன் கரங்களால் அழுந்த பவானி கன்னங்களில் வழிந்தோடிய கண்ணீர் கோடுகளைத் துடைக்க ஆரம்பித்தான்.

“பவானி ரிலாக்ஸாக… ”

“ப்ளீஸ், நான் ஜோக் கேட்கிற, கேம் விளையாடுற மனநிலைல இல்லை. ”

“சரி, பவானி கவனமா கேளு. நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும். அதுக்கப்பறமும் உனக்கு, இந்தக் கர்சீஃப்பக் கொடுக்கணும்னு தோணிச்சுன்னா கொடு. அப்போ கண்டிப்பா வாங்கிக்கிறேன். சரியா??”

“நிஜமா வாங்குவீங்களா??”

“நீ, கொடுக்கணும்னு நினைச்சா?”

“அதெல்லாம் கொடுப்பேன்” – பவானி குரலில் நம்பிக்கை இருந்தது.

“ஓகே பார்க்கலாம். சரி, வா இன்னும் கொஞ்ச தூரம் போகலாம்” என்று, ஜீவன் இன்னும் முன்னோக்கி நடந்தான்.

மலைப்பிரதேசத்தின் பனிக்காற்றால், எந்த அளவிற்கு நகர முடியுமோ, அந்த அளவிற்கு நகரும் சருகுகளின் ஓசை மட்டும் கேட்கும் தருணங்கள் – இவை.

“பவானிகிட்ட ஒண்ணு கேட்கணும்” – ஜீவன்.

“ம்ம்ம் கேளுங்க”

“நாதன் சார உனக்கு ஏன் பிடிக்கும்? அதாவது உங்க அப்பாவ”

பவானி கண் சுருக்கிக் கோபம் கொண்டு பார்த்தாள்.

“அதான் உங்க அப்பான்னு சொல்லியாச்சுல… பதில் சொல்லு”

“அப்பாவ ஏன் பிடிக்கும்னா? … ஏன் பிடிக்கும்?”

“உன்னைய நல்லா பார்த்துப்பாருன்னா??”

“அப்பா, பாலாண்ணா பல்லவியைக் கூட நல்லா பார்த்துப்பாங்க”

“அப்புறம் ஏன்?”

“ஏன்னா? ஏன்னா?? எனக்கு இப்படி இருக்கிறதால, அப்பா நிறைய பேர்கிட்ட பேச்சு வாங்கிறாங்க. பாலாண்ணாவோட அத்தை மாமாகிட்ட, மதன்கிட்ட, மதனோட அம்மாகிட்ட… இப்படி நிறைய… ஆனாலும் எதுவும் சொல்லாம சிரிச்சிக்கிட்டே சமாளிப்பாங்க. அது எனக்காக மட்டுமே அப்பா செய்ற விஷயம்.”

“ஓ!”

“அது எவ்வளவு கஷ்டம்?”

“ம்ம்ம், சரிதான்”

“சில நேரம் தோணும் ஜீவன் சார். மதன் மட்டும் அன்னைக்கு காப்பாத்தலேன்னா? என் அப்பாவுக்கு இவ்வளவு கஷ்டம் இருக்காதுல” என்று விழிநீர் சிந்தினாள்.

“என்ன கேட்டா? என்ன பேசிற??” என்று அவளது கண்ணீர் துடைத்தான்.

அப்பொழுது, அனுமதி கேட்டுக் கண்ணீர் துடைத்த ஜீவன் சார்! இப்பொழுது அணிச்சை செயலாய் அதைச் செய்தார்!! – நாம்.

“ஜீவன் சார்”

“சொல்லு”

“ஒண்ணு கேட்கலாமா?”

“கேளு பவானி”

“என்னையும் எங்கப்பாவையும் எங்கயாவது கூட்டிட்டுப் போயிருங்களேன். இந்த மாதிரி பேசுறவங்கிட்ட அப்பா இருந்தா, அவருக்கு எதுவும் ஆயிடுமோனு பயமா இருக்கு” – வாழ்வின் மீதான நம்பிக்கையில்லா, பவானியின் குரல்.

“ஹே!! அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. பயப்பிடாத!! நான் இருக்கேன்ல”

ஆதரவற்ற காற்றாடி போல பறந்த மனதை, ஆசுவாசப்படுத்த வேண்டி… சட்டென்று, பவானி ஜீவனிடம் சரணடைய வந்தாள்.

“பவானி ரிலாக்ஸ்” என்ற அவனது வாக்கியம், வந்தவளை மேலும் முன்னேறி வரவிடாமல் தடுத்தது.

சூழல் உணர்ந்தாள்.

“ஓ! சாரி. நான் ஏதோ ஒரு … சாரி, திடிர்னு தோணிருச்சி… சாரி” – ‘ஏன் நான் இப்படிச் செய்தேன்?’ என்று நினைத்தது பவானியின் குரல்.

“பரவால்ல. வா. நடக்கலாம்”

‘அவளை அரவணைத்து, ஆதரவு தந்திருக்கனுமோ? ப்ச், நான் ஏன் இப்படிச் செய்தேன்?’ என்று ஜீவனின் மனப்பிரதேசம் மறைமுகமாய் கலங்கியது.

“அப்பாவ பத்தி இன்னும் சொல்லவா?” – பவானி.

“ஏன்?? இன்னும் அழனுமா?”

“நான் சொல்லுவேன்.”

“சரி சொல்லு”

“என் அப்பாவுக்கு கோபப்படவே தெரியாது. கோபப்படவும் மாட்டாங்க”

“ஓ! ”

“யாரையும் கஷ்டப்படுத்தவே மாட்டாங்க”

“அப்புறம்”

“யாரையும் என் அப்பா அழ வைக்க மாட்டாங்க.”

“பாருடா”

“கிண்டல் பண்றீங்களா?”

“இல்லை”

“அப்புறம்?”

“ம்ம்ம், அப்போ நாதன் சார், இதெல்லாம் எனக்கு மட்டும் ஸ்பெஷலா பண்ணறாரோ?”

“என்ன சொல்றீங்க?”

“டேரைக்டா சொல்றேன். உங்க அப்பாவுக்கு என்னையப் பிடிக்கல. பிடிக்கவும் செய்யாது. ஏன்னா? நான் அவர்கிட்ட பேசிப் பார்த்துட்டேன்”

எதிர்ப்பு வரும் என்று தெரியும்!! ஆனால் அது அப்பாவிடமிருந்தா?? என்று பவானி நினைப்பதாலும், நீ என்ன முடிவு எடுத்தாலும் உன் அப்பாவை மீறி எடுக்கும் முடிவாகத்தான் இருக்கும் என்று ஜீவன் சொல்லியதாலும் குழப்பங்கள் பேசிய தருணங்கள். – இவை.

ஜீவன் முன்னே நடந்து சென்றான்.

“ஜீவன் சார்”

பவானி அவனைத் தொடர்ந்து வரவில்லை. அழைப்பைக் கேட்டு பின்னே வந்தவன், “என்ன” என்றான்.

“இதுக்கு மேல வேண்டாம். இங்கே நின்னு பேசலாம்” என்று தன் மறுப்பைத் தெரிவித்தாள்.

பவானியைப் புரிந்து கொண்டு, “ஓகே, உன் இஷ்டம்” என்றான்.

“என் அப்பாவைப் பத்திச் சொல்லத்தான், இங்கே கூட்டிட்டு வந்தீங்களா?”

“ப்ச், இல்லை பவானி.”

“இன்னைக்கு ஏன் எல்லாரும் ரொம்ப வித்தியாசமா நடந்துக்கிறீங்க?”

“இங்க பாரு பவானி, நாதன் சார் பார்வையில, நான் நல்லவன் கிடையாது.”

“ஏன்?”

“அதைப்பத்தி பேசலாம். இங்க உட்காரலாமா?” என்று ஒரு மரத்தடியைக் காட்டினான்.

“ம்ம்ம்”

இருவரும் அமர்ந்தார்கள்.
ஒரு பெருமூச்சு விட்டு, அருகில் இருந்த மரத்தின் மேல் சாய்ந்து அமர்ந்துகொண்டான்.

சூரியனின் ஒளிக்கற்றை ஓசையில்லா வேகத்துடன் வந்து, ஓய்ந்து போயிருந்த ஜீவனின் முகத்தில் விழுந்தது.

“ஜீவன் சார்”

“….”

“பேசணும்னு சொன்னீங்க”

“ம்ம்ம்”

“ஆனா, பேசவே மாட்டிக்கிறீங்க”

“எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியல. பயமா இருக்கு பவானி. லைஃப நினைச்சா…” என்று நிறுத்தினான்.

ஏன் நிறுத்தி விட்டார், ஜீவன் சார்.? – நாம்.

ஏனெனில் பவானி, ஜீவனின் கரம் பிடித்திருந்தாள்.
எதிர்பாராத, பவானியின் இந்தச் செயலால், இன்னும் இன்னும் ஜீவனுக்குள் அவளுக்கான ஏக்கங்கள் கூடியது.

“பயப்பிடாம சொல்லுங்க” என்று வார்த்தையிலும், பற்றிய கரத்திலும் அழுத்தம் கொடுத்தாள்.

“பவானி எங்கிட்ட ஏதாவது பிரச்சனை இருந்த என்ன பண்ணுவ?”

“பிரச்சனையா?? கைல அடிபட்டது வலிக்கா ஜீவன் சார்?” – பவானியின் குரலில், ஜீவனின் வலிக்கான வருத்தம் இருந்தது.

“ப்ச்… பவானி. உனக்கு எப்படிச் சொல்றது?”

“கொஞ்சம் எனக்குப் புரியிற மாதிரி சொல்லுங்க. போதும்”

“சரி, எங்கிட்ட ஏதாவது குறை இருந்தா?”

“குறையா??” என்று யோசித்தவள், “எனக்கு ஒருத்தர் பண்ண தப்ப, நான் எப்படி இன்னோர்த்தருக்குப் பண்ணுவேன்” – பவானியின் குரல் நியாயம் பேசியது.

“ப்ச், பவானிம்மா, அது இல்லை. ம்ம்ம்… எப்படிச் சொல்ல… நான் ஏதாவது தப்பு பண்ணியிருந்தா?”

இப்போது பவானி சிரித்தாள்.

“எதுக்கு சிரிக்கிற??

மேலும் சிரித்தாள்.

“சொல்லு பவானி” – ஜீவனின் குரல் மிகுந்த தொய்வடைந்திருந்தது.

பவானி, அத்தனை இலகுவாகச் சிரிக்கிறாள். ஆனால் அது ஜீவனின் இதயத்தை எட்டவேயில்லை.

“நீங்க எப்படித் தப்பு பண்ணுவீங்க? கண்டிப்பா பண்ணியிருக்க மாட்டீங்க” – பவானி.

“இல்லை பண்ணியிருந்தா??”

“நிச்சயமா இருக்காது சார்”

“நான் தப்பு பண்ணியிருக்கேன் பவானி.” – சொல்லியேவிட்டான் ஜீவன்.

‘என் முந்தைய காலத் தவறுகள், உன் இன்றைய முடிவுகளை மாற்றுமோ?’ என்று ஏக்கமாய் பார்த்தான்.

பட்டென்று பவானி சிரிப்பதை நிறுத்தியிருந்தாள்.

“பவானி, நான் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில இருந்திருக்கேன்”

பவானியின் முகம் மாறியது. ஆனால் அது என்ன மாற்றம் என்று ஜீவனால் உணர முடியவில்லை.

“தப்பு செஞ்சி, போலீஸ்ல மாட்டிக்கிட்டு.. கோர்ட் போய்… சின்ன வயசுங்கிறதால… சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிட்டாங்க… இது… ” என்று நிறுத்தினான்.

எதிர்கால என் வாழ்க்கையில் இப்படி ஒரு பெண் வருவாள் என்று தெரிந்திருந்தால், என் சிறுவயது வாழ்க்கையைச் சற்றுக் கௌரவமாக வாழ்ந்திருப்பேன் என்று ஜீவனின் மனப்பிரதேசம் மருவிக் கொண்டது.

“நாதன் சாருக்கு இது தெரியும்” – ஜீவன்.

“அப்பாவுக்குத் தெரியுமா?”

“ம்ம்ம்”

“அதான் அப்பாவுக்கு உங்களைப் பிடிக்கலையா?” என்று தயங்கிக் கேட்டாள்.

“இருக்கலாம். அவரைப் பொறுத்த வரைக்கும் நான் ஜெயிலுக்குப் போனவன்”

ஓ! அதான் அப்பா ‘சரியான முடிவை எடு’ என்று சொன்னாரோ என்று நினைத்தாள். நிமிர்ந்து பார்த்தாள். ஜீவன் அவளையே பார்த்திருந்தான். முழுவதும் ஒரு நிமிடம் கடந்த பின், மெல்லிய கீற்றாய் முறுவலித்தனர்.

அந்த முறுவலின் அர்த்தம் என்ன?- நாம்.

“இதுக்கப்புறமும் உனக்கு என்னையப் பத்திக் கேட்கணும்னு தோணிச்சுன்னா?? சொல்லு. கண்டிப்பா சொல்றேன்.”

பவானி முறுவலை விடுத்து, மௌனத்தை ஏற்றுக்கொண்டாள்.

“இல்லை… இதெல்லாம் சகிச்சிக்க முடியாதுன்னா, அப்படியே போயிரு. எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை”

“உங்களுக்குக் கஷ்டம் இல்லையா?”

“உன்னால இதெல்லாம் ஈஸியா எடுக்க முடியலைன்னா? நான் என்ன பண்ண முடியும்? சொல்லு” – ஜீவனின் குரலில் விரக்தி இருந்தது.

பவானியின் கரு விழிகள் இங்கும் அங்கும் ஓடி, ஜீவனின் மனப்பிரதேசத்தை கலங்கடித்தன.

“நீ சொல்லச் சொன்னா சொல்றேன். நான் சொன்னதுக்கு அப்புறமும் நீ கர்சீஃப் கொடுக்கணும்னு நினைச்சா? கொடு. சந்தோசமா வாங்கிக்கிறேன்”

ஜீவன் தன் மனதைச் சொல்லாமல் சொல்லிய வசனம்தான் மேலே உள்ளது.

பவானி அமைதியாக இருந்தாள்.

‘எதுவும் சொல்ல வேண்டாம்! இப்பவே கர்ச்சீஃப் கொடுக்கிறேன்னு’ சொல்லிடேன் பவானி – என்று ஜீவன் மனப்பிரதேசம் மன்றாடியது.

இன்னும் பவானி மௌனமாக இருந்தாள்.

“இப்போ நீ தான் சொல்லணும். சொல்லு, நான் என்ன செய்ய?” – ஜீவன்.

என்ன பதில் சொல்ல?? என்ற யோசனையில் பவானியும், என்ன பதில் சொல்லுவாள்? என்ற எதிர்பார்ப்பில் ஜீவனும் இருந்ததால் கேள்விகள் மறைந்த தருணங்கள் – இவை.

பவானியின் பதிலுக்காகக் காத்திருப்போம். – நாம்.

error: Content is protected !!