Mayam 10

Mayam 10

அனுஸ்ரீ மற்றும் ரிஷி ஆகாஷின் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து ஒரு வாரம் கழிந்து இருந்தது.

தெய்வநாயகி திருமணத்திற்கான வேலைகளை எல்லாம் மும்முரமாக பார்த்து கொண்டிருக்க ரிஷியோ தன் கம்பெனி வேலைகளில் மூழ்கிப் போய் இருந்தான்.

திருமணம் நடந்து முடிந்த கையோடு வசந்தபுரத்திலேயே தங்கி கொள்வதாக அர்ச்சனா அன்று அனுஸ்ரீயின் வீட்டில் சொல்லி இருக்க அதை மறுத்து பேச அவனுக்கும் தோன்றவில்லை.

அதனால் வசந்தபுரம் கிராமத்திற்கு செல்லும் வழியிலேயே சற்று தள்ளி இருக்கும் பகுதியில் ஒரு புதிய கம்பெனி ஒன்றை வாங்கி இருந்தவன் அதை தன் பழைய கம்பெனிகளோடு சேர்க்கும் வேலையில் கடந்த ஒரு வாரமாக மும்முரமாக ஈடுபட்டு கொண்டிருந்தான்.

இடையில் அவ்வப்போது அனுஸ்ரீயோடு பேச வேண்டும் என்ற எண்ணம் அவன் மனதிற்குள் எழுந்தாலும் அவனை சுற்றி இருந்த வேலைகள் அவனை வேறு எங்கும் நகர விடாமல் இழுத்து பிடித்து வைத்திருந்தது.

வசந்தபுரத்தில் உள்ள இரு குடும்பத்தினரதும் குல தெய்வ கோவிலான பிள்ளையார் கோவிலில் திருமணமும், அடுத்த நாள் சென்னையில் ரிசப்சன் நடத்துவதற்கு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.

நாயகி இல்லத்தில் பல வருடங்கள் கழித்து நடக்கும் திருமணம் இது என்பதால் ஒவ்வொரு நாளும் அந்த சுற்று வட்டார மக்கள் எல்லோருமே திருமணத்திற்கான வேலைகளை வெகு ஆர்வத்துடன் செய்து கொண்டிருந்தனர்.

அனுஸ்ரீக்கு திருமணத்திற்கான சேலைகள் எடுப்பது முதல் மற்ற அனைவருக்கும் ஆடைகள் தேர்வு செய்யும் வேலை ராதாவின் பொறுப்பில் இருக்க திருமணத்திற்கான உணவுகள், அலங்காரங்களை கவனிக்கும் வேலை முத்துராமனின் பொறுப்பில் இருந்தது.

அன்று இறுதியாக ரிஷியோடு பேசியதன் பிறகு தன் தாயையும், தந்தையையும் நன்றாக கவனித்து வந்த அனுஸ்ரீ அவர்கள் இருவரையும் எப்படியாவது ஒரு சில நிமிடம் மனம் விட்டு பேச வைத்து விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.

அன்று திருமணத்திற்கான சேலைகள் எடுக்கப் போவதற்காக அனுஸ்ரீ, தாமரை, தெய்வநாயகி மற்றும் ராதா தயாராகி வந்து நின்றனர்.

ராதாவும் தெய்வநாயகியும் பணம் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து கொண்டு நிற்க சற்று தள்ளி வேறு வேலையாக நின்று கொண்டிருந்த முத்துராமனின் பார்வையோ அவர் மனைவி மீதே இருந்தது.

என்னதான் சண்டைகள் இருந்தாலும் அவர் மனம் காதல் வயப்பட்ட மனம் அல்லவா?

தூரத்தில் நின்று அவர்கள் இருவரையும் கவனித்து கொண்டு இருந்த அனுஸ்ரீயோ தாமரையின் கையை இலேசாக சுரண்டி அவள் காதில் ஏதோ கூறவும் புன்னகையோடு அவளைப் பார்த்து தலை அசைத்தவள்
“நீங்க சொல்லிட்டீங்க இல்லக்கா ஜமாய்ச்சுடுறேன் பாருங்க” என்று விட்டு யாரும் கவனிக்கா வண்ணம் கார் ட்ரைவரின் அருகில் சென்று ஏதோ கூறி விட்டு மீண்டும் எதுவும் தெரியாதது போல அவளின் அருகில் வந்து நின்று கொண்டாள்.

“சரி ம்மா போகலாம்” பணம் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து விட்டு தெய்வநாயகியிடம் ராதா கூறவும்

அவரோ
“சரி வாங்க போகலாம் ஆமா அந்த ட்ரைவர் எங்கே? இவ்வளவு நேரமாக இங்க தானே நின்னுட்டு இருந்தான்?” என்று யோசனையோடு சுற்றிலும் தேடிப் பார்க்க அந்த இடத்தில் ட்ரைவர் இருக்கவில்லை.

“பாட்டி ட்ரைவர் அவங்க வீட்ல இருந்து போன் வந்ததுனு இப்போ தான் போனாங்க உங்க கிட்ட சொல்ல சொன்னாங்க நான் தான் மறந்துட்டேன்” தாமரை தலையில் தட்டி கொண்டே கூறவும்

அவளைத் திரும்பி பார்த்த ராதா
“நல்ல பொண்ணு போ இப்போ எப்படி கடைக்கு போறது?” என்று கேட்டார்.

“நான் ட்ரைவ் பண்ணட்டுமா?” அனுஸ்ரீ கேட்கவும்

அவசரமாக மறுப்பாக தலை அசைத்த தெய்வநாயகி
“கல்யாணம் நடக்க இருக்கும் நேரம் ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிடுச்சுனா அதெல்லாம் வேண்டாம் வேறு யாரையும் கூப்பிடலாம்” என்றவாறே சுற்றிலும் தன் பார்வையை சுழல விட

“அப்போ அப்பாவைக் கூப்பிடுங்க பாட்டி டைம் ஆகுது” என்றவாறு அனுஸ்ரீ தாமரையைப் பார்த்து சிரித்த வண்ணம் கூறினாள்.

அவள் கூறியது தெய்வநாயகிக்கும் சரியாக பட்டது.

“அதுவும் சரிதான் நீ போய் அப்பாவைக் கூட்டிட்டு வா நாங்க காரில் இருக்கோம்” என்றவாறு ராதாவின் கை பிடித்து அழைத்து கொண்டு அவர் காரினுள் ஏறி அமர்ந்து கொள்ள அனுஸ்ரீயோ புன்னகையோடு தன் தந்தையின் அருகில் ஓடிச்சென்று நின்றாள்.

“அப்பா ட்ரெஸ் பர்சேஸ் பண்ண கடைக்கு போகணும் ட்ரைவரைக் காணோம் நீங்க வாங்கப்பா போகலாம்”

“நானா?” ஆச்சரியமாக கேட்டவர் காரில் ஏறாமல் தெய்வநாயகியோடு கோபமாக ஏதோ பேசிக் கொண்டு நின்ற ராதாவை ஒரு தடவை பார்த்து விட்டு

“எனக்கு இங்கே கொஞ்சம் வேலை இருக்கு அனும்மா நீங்க வேணா தாமரையோட அப்பா சேகரை கூட்டிட்டு போங்களேன்” என்று கூறவும்

கோபமாக தன் இடுப்பில் கை வைத்து அவரை முறைத்து பார்த்தவள்
“என் கல்யாணத்துக்கு எல்லா வேலைகளையும் செய்து தர்றேன்னு சொல்லிட்டு இப்போ இப்படி மாற்றி பேசுறீங்களா? அதெல்லாம் சரி வராது நீங்க வரத்தான் வேணும்” என்றவாறே அவர் கை பிடித்து இழுத்துக் கொண்டு செல்ல அவரோ தர்ம சங்கடத்தோடு அவளை பின் தொடர்ந்து சென்றார்.

“அம்மா சீக்கிரம் ஏறுங்கமா டைம் ஆகுது அப்பா நீங்க போய் காரை ஸ்டார்ட் பண்ணுங்க கம் ஆன் பாஸ்ட் பாஸ்ட்” என்றவாறே காரின் முன்பக்கமாக அனுஸ்ரீ ஏறிக் கொள்ள ராதாவோ கோபமாக மற்றைய பக்கம் தன் முகத்தை திருப்பிக் கொண்டு நின்றார்.

“ராது…க்கும் ராதா நம்ம பிரச்சினை நம்மளோட போகட்டும் அனு கல்யாணம் முடியுற வரையாவது அவ மனசு கஷ்டப்படாமல் நடந்துக்கலாம் காரில் ஏறிக்கோ” மெல்லிய குரலில் ராதாவுக்கு மாத்திரம் கேட்கும் வகையில் முத்துராமன் கூற

“ட்ரைவரை ப்ளான் போட்டு அனுப்பிட்டு இப்போ ஒண்ணும் தெரியாத மாதிரி நடிக்குறீங்களா?” என்று சற்று கோபமாகவே கேட்டார் ராதா.

“நீ எப்போதும் நான் சொல்றதைக் கேட்கவும் மாட்ட நம்பவும் மாட்ட நீ வந்தா என்ன? வரலனா எனக்கு என்ன? அனுக்காக தான் இவ்வளவு நேரம் பொறுமையாக பேசுனேன் நீ இப்படியே இங்கேயே நில்லு” அவரது முகத்தை கூட பாராமல் முத்துராமன் சென்று காரில் ஏறி கொள்ள

கார் கண்ணாடி வழியே அவர்கள் இருவரையும் பார்த்து கொண்டு இருந்த அனுஸ்ரீ
“அம்மா ப்ளீஸ் வாங்க போகலாம் நான் உங்களை இதற்கு முதல் இப்படி எதையும் பண்ண சொல்லி கேட்டது கூட இல்லை பர்ஸ்ட் டைம் கேட்குறேன் ப்ளீஸ் வாங்கம்மா” என்று கெஞ்சலாக கேட்க அதற்கு மேலும் அவளது முகத்தை பார்த்து மறுத்து பேச முடியாமல் ராதா இறுகிய முகத்துடன் காரில் ஏறி அமர்ந்து கொண்டார்.

தான் நினைத்ததை நடத்தி விட்ட சந்தோஷத்தோடு அனுஸ்ரீ தாமரையை திரும்பி பார்க்க அவளும் புன்னகையோடு அவளைப் பார்த்து
“சக்ஸஸ் இனி மீதியை நான் பார்த்துக்குறேன்” என்று சைகையில் கூற தெய்வநாயகியோ அவர்கள் இருவரையும் பார்த்து புன்னகத்து கொண்டே தான் எதையும் பார்க்காதது போல அமர்ந்திருந்தார்.

கார் புறப்பட்டு சிறிது தூரம் சென்றதுமே தெய்வநாயகியை ஒட்டி அமர்ந்து கொண்ட தாமரை
“பாட்டி நான் ஒரு விஷயம் கேட்டா நீங்க கோவிச்சுக்க மாட்டிங்க தானே?” என்று கேட்க

“அப்படி என்ன விஷயம் கேட்கப் போற?” என்று அவர் கேட்டார்.

“நம்ம அனுக்காவோட கல்யாணமே இவ்வளவு பெரிசா பண்ணுறீங்களே! அப்போ ராதாம்மா கல்யாணமும் இப்படி தான் நடந்துச்சா?” தாமரையின் கேள்வியில் ராதா அதிர்ச்சியாக முன்னால் இருந்த முத்துராமனைப் பார்க்க அவரும் அதே நேரம் காரில் இருந்த முகப்பு கண்ணாடி வழியே ராதாவைத் தான் பார்த்து கொண்டு இருந்தார்.

“பின்ன பெரிசா பண்ணாமல் இருப்பேன்னா? என் ஒரே பொண்ணு கல்யாணம் ஆச்சே! சும்மா விடுவேனா? அலங்காரம், சாப்பாடு என எல்லாத்தையுமே ஒரு கை பார்த்துட்டேன்லே”

“அப்படியா? சாப்பாடு என்ன ஸ்பெஷல்?”

“எப்படியாவது சுற்றி வளைத்து சாப்பாட்டுக்கு வந்துடு” அனுஸ்ரீ கேலியாக கூறவும்

வெட்கத்துடன் புன்னகத்து கொண்டவள்
“சும்மா போங்கக்கா” என அவளைப் பார்த்து கூறி விட்டு

“நீங்க சொல்லுங்க பாட்டி சாப்பாடு என்ன ஸ்பெஷல்?” என்று கேட்டாள்.

” இருபத்தைந்து வகையான சாப்பாடு செய்தோம் அதில் இனிப்புகள் மட்டுமே லட்டு, குலாப் ஜாமூன், அதிரசம், பால்கோவா, ஜாங்கிரி, பாயாசம், ரசகுல்லானு ஏழு வகை அது மட்டுமில்ல அசைவம், சைவம் என எல்லாமே பண்ணோம் வசந்தபுரம் மட்டும் இல்ல இந்த கிராமத்தை சுற்றி இருக்குற எல்லா ஊர்க்காரர்களும் ராதா கல்யாணத்துக்கு வந்தாங்க கிட்டத்தட்ட ஒரு திருவிழா மாதிரி தான் அந்த கல்யாணத்தை பண்ணேன்” பழைய நினைவுகளில் தெய்வநாயகி புன்னகத்து கொள்ள முத்துராமன், ராதாவும் கூட தங்கள் திருமண நிகழ்வை எண்ணி புன்னகத்து கொண்டனர்.

“அய்யோ பாட்டி! நீங்க சொல்லுறதை எல்லாம் கேட்கும் போது இப்போவே எனக்கு எச்சில் ஊறுது ராதாம்மா நீங்க சொல்லுங்க உங்க கல்யாணத்தன்னைக்கு நீங்க என்ன கலர் சேலை கட்டி இருந்தீங்க” தாமரையின் பேச்சில் சற்று மனம் இளகி இருந்த ராதா

புன்னகையோடு
“அது நடந்து இருபத்தைந்து வருடங்களுக்கு மேல ஆகுது இப்போ போய் சாரி கலரை கேட்குற எனக்கு நேற்று என்ன கலர் சாரி கட்டுனேன்னே ஞாபகம் இல்லை” என்று கூறவும்

“நீ கிளிப்பச்சை நிறத்தில் நல்ல சிவப்பு கலர் பாடர் பிடிச்ச சாரி கட்டி இருந்த அதே சிவப்பு கலர் பிளவுஸ் மறந்துட்டியா?” என இயல்பாக முத்துராமன் கேட்க காரில் இருந்த பெண்கள் அனைவருமே அவரை அதிர்ச்சியாக திரும்பிப் பார்த்தனர்.

எல்லோரும் தன்னை வித்தியாசமாக பார்ப்பதைப் பார்த்ததன் பின்பே தான் என்ன கூறினோம் என்பது அவருக்கு புரிந்தது.

அவர்களுக்கு என்ன பதில் சொல்லுவது என்று சங்கடத்தோடு அவர் யோசித்து கொண்டு இருக்கும் போதே அவர்கள் செல்ல வேண்டிய இடமும் வந்து சேர்ந்து விட காரை நிறுத்தி விட்டு அவர் இறங்கி சென்று விட அனுஸ்ரீயும், தாமரையும் அதிர்ச்சியாக அமர்ந்திருந்த ராதாவைப் பார்த்து புன்னகத்து கொண்டே காரில் இருந்து இறங்கி கொண்டனர்.

“ராதா கடை வந்துடுச்சு இறங்கு” அதிர்ச்சியாக அமர்ந்திருந்த தன் மகளின் தோளில் தட்டி கூறி விட்டு புன்னகையோடு அவர் இறங்கி கொள்ள அவரும் தன் முகத்தை சாதாரணமாக வைத்து கொண்டு காரில் இருந்து இறங்கி கொண்டார்.

‘இத்தனை வருஷம் கழிச்சும் எல்லாம் சரியாக ஞாபகம் வைத்து இருக்காரே!’ கார் நிறுத்தத்தில் இருந்து சற்று தள்ளி தன் தலையை கோதிக் கொண்டு நின்ற தன் கணவரையே சிறிது நேரம் பார்த்து கொண்டு நின்றவர் அந்த சிந்தனையோடே கடைக்குள் நுழைந்து கொண்டார்.

பெண்கள் அனைவரும் சேலை எடுக்கும் வேலைகளில் மும்முரமாகி விட முத்துராமன் கடைக்குள் ஆண்கள் அமர்ந்து கொள்வதற்கென அமைக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து கொண்டு அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.

“என்ன பாட்டி எல்லா சாரியையும் பார்க்க சொன்னீங்க ஆனா எதையும் இப்போ எடுக்க வேணாம்னு சொல்லுறீங்க?” அனுஸ்ரீ சற்று சலிப்போடு கேட்க

“இப்போ முஹூர்த்தத்திற்கு புடவை எடுக்க வந்து இருக்கோம் மாப்பிள்ளை வீட்டு ஆட்களும் வந்து அவங்களும் கூட சேர்ந்து தான் எடுக்கணும் அது தான் சம்பிரதாயம் நான் மூணு நாள் முன்னாடியே பத்மினி கிட்ட சொன்னேன் அவங்க தான் இன்னைக்கு இங்க வரச் சொன்னாங்க இன்னும் அவங்களை காணோம் அது தான் அவங்க வர்ற வரைக்கும் காத்துட்டு இருக்கேன்” என்று கூறவும்

அவளோ வெளியில்
“ஓஹ்!” என்று கேட்டுக் கொண்டு

மனதிற்குள்
‘அப்போ ரிஷியும் வருவாரோ!’ என்று ஆவலுடன் கடை வாயிலை பார்த்து கொண்டு நின்றாள்.

அவர்களது நேரத்தை வீணடிக்காமல் சிறிது நேரத்திலேயே பத்மினி, அர்ச்சனா, அம்ருதா, சுவாமிநாதன் மற்றும் மணிமாறன் தங்கள் காரில் வந்து இறங்கி கொண்டனர்.

அவர்கள் அனைவரையும் பார்த்ததும் அனுஸ்ரீ உற்சாகத்துடன் ரிஷி வருகின்றானா என்று தேடிப் பார்க்க அவனோ அங்கே வந்திருக்கவில்லை.

“அனு நல்லா இருக்கியாம்மா?” பத்மினியின் கேள்வியில் தன் ஏமாற்றத்தை மறைத்து கொண்டு புன்னகத்தவள்

“நான் நல்லா இருக்கேன் அத்தை நீங்க எப்படி இருக்கீங்க?” என்று கேட்டாள்.

“எனக்கு என்னடாம்மா ரொம்ப நல்லா இருக்கேன் கல்யாண வேலை எல்லாம் நல்லா போகுதாம்மா?”

“ஹான் போகுது அத்தை அப்புறம் அது அவங்க வரலயா?” சற்று தயக்கத்துடன் அனுஸ்ரீ கேட்கவும்

அவளை பார்த்து புன்னகத்து கொண்டவர்
” இன்னைக்கு முஹூர்த்தப் புடவை எடுக்க போகணும் வந்துருடானு இரண்டு நாளாக சொல்லிட்டு தான்மா இருந்தேன் அவனுக்கு புதுக் கம்பெனி வேலை ஏதோ இருக்காம் நேரம் கிடைச்சா வரேன்னு சொன்னான் சரி ம்மா அனு நான் பாட்டியோட பேசிட்டு வர்றேன்” என்று கூறி விட்டு தெய்வநாயகியைப் பார்க்க சென்று விட

அவளோ
“கல்யாணத்து அன்னைக்கு கூட வேலைனு தான் போவார் போல” என்று முணுமுணுத்துக் கொண்டே தன் முன்னால் பரவிக் கிடந்த சேலைகளை பார்த்து கொண்டு நின்றாள்.

ஆண்கள் எல்லோரும் ஒரு புறம் அமர்ந்து பேசிக் கொண்டு இருக்க பெண்கள் எல்லோரும் சேலைகளை தெரிவு செய்வதில் மூழ்கிப் போய் இருந்தனர்.

குங்குமம் மற்றும் பச்சை நிறத்தில் சிறிய பாடர்கள் அடியில் இருக்க அதன் மேல் தங்கம், குங்குமம் மற்றும் மஞ்சள் நிற அகலமான பட்டி அமைப்பில் நெய்யப்பட்டிருந்த சேலையை முஹூர்த்தத்திற்கு என்று பெரியவர்கள் அனுஸ்ரீக்கு தெரிவு செய்து இருந்தனர்.

ரிஷி வராமலேயே முஹூர்த்தத்திற்கு ஆடைகளை எல்லாம் தெரிவு செய்து விட அனுஸ்ரீ மாத்திரம் எல்லோரும் கடையில் இருந்து வெளியேறி சென்றதும் தான் ஏற்கனவே ரிஷிக்கு பரிசாக கொடுப்பதற்கென வாங்கி வைத்திருந்த ஒரு ஷர்டை பில் போட்டு எடுத்து கொண்டு கடைக்குள் இருந்து வெளியேறி சென்றாள்.

திருமணத்திற்கான ஆடைகள், நகைகள், மற்ற பொருட்கள் என எல்லாவற்றையும் வாங்கி முடித்து விட்டு அங்கேயே ஒரு ஹோட்டலில் பகலுணவையும் முடித்து விட்டு எல்லோரும் மன நிறைவோடு தங்கள் வீட்டை நோக்கி புறப்பட்டுச் செல்ல அனுஸ்ரீ மாத்திரம் சிறிது மனக் கவலையுடன் தங்கள் காரின் மேல் சாய்ந்து நின்று கொண்டிருந்தாள்.

“என்னக்கா மாமா வரலேன்னு சோகமா?” தாமரையின் கேள்விக்கு மறுப்பாக தலை அசைத்தவள்

“அவர் பற்றி எனக்கு ஒரு கவலையும் இல்லை அம்மா, அப்பா பற்றி தான் யோசனையாக இருக்கு தாமரை இரண்டு பேருக்கும் மனதில் காதல் இருக்கு ஆனா வெளிப்படையாக ஏற்றுக் கொள்ள தயக்கம் இன்னைக்கு பார்த்த தானே அம்மா கல்யாண சாரி கலர் அவங்களுக்கே ஞாபகம் இல்லை ஆனா அப்பா சரியா சொல்லிட்டாங்க” என்று கூறவும்

“அக்கா இதுவே பெரிய மாற்றம் தானே அம்மா மறந்த விஷயத்தை அப்பா இன்னும் ஞாபகம் வைத்து இருக்காங்க நீங்க வேணா பாருங்க கூடிய சீக்கிரம் அவங்க மனசு மாறிடுவாங்க” என தாமரை உறுதியாக கூறினாள்.

“உன் நாக்கு கரு நாக்கோ தெரியல நீ சொல்றது எல்லாம் அப்படியே நடக்குது கல்யாணமே வேணாம்னு சொன்ன எனக்கு கல்யாணம் நடக்கும்னு சொன்ன அப்படியே நடக்குது இப்போ இப்படி சொல்ற இதுவும் நடந்தா சந்தோஷம் தான்”

“கண்டிப்பாக நடக்கும்க்கா நீங்க வாங்க” என்றவாறே தாமரை அனுஸ்ரீயின் கை பற்றி கூறி விட்டு காரில் ஏறி அமர்ந்து கொள்ள சிறிது நேரத்தில் அவர்களது கார் வசந்தபுரம் வந்து சேர்ந்தது.

காலையில் இருந்து ஒவ்வொரு கடைகளாக சென்று வந்த அலுப்பு தீர ஒரு குளியல் போட்ட அனுஸ்ரீ தலையை துவட்டிக் கொண்டே தெய்வநாயகி கொடுத்த காஃபியை எடுத்துக் கொண்டு தோட்டத்தில் வந்து அமர்ந்து கொண்டாள்.

அப்போது தான் வானம் மாலை நேரத்திற்கு மெல்ல மெல்ல மாறிக் கொண்டு இருந்தது.

இத்தனை நாட்களாக திருமணம் வேண்டாம் என்று கூறிக்கொண்டு இருந்தவள் ரிஷியைப் பார்த்ததாலோ அல்லது தெய்வநாயகியின் பேச்சினாலோ தன் மனதை சற்று மாற்றி இருந்தாள்.

இந்த திருமணத்தில் தான் பல நல்ல விடயங்கள் நடக்கப் போகிறது என்ற எண்ணத்தோடு அவள் அங்கே அமர்ந்திருக்க அவள் இருந்த இடத்தில் இருந்து சற்று தள்ளி இருந்த அரச மரத்தின் அடியில் முத்துராமன் சிந்தனை வயப்பட்டவராக அமர்ந்திருந்தார்.

ராதாவிற்கும், அவருக்கும் விவாகரத்து நடக்க முன்னர் இருந்ததைக் காட்டிலும் அவர் தற்போது சற்று இளைத்துப் போய் தான் இருந்தார்.

முத்துராமன் யோசனையோடு அமர்ந்திருந்த நேரம் அவர் முன்னால் ஏதோ நிழலாட தன் தலை நிமிர்ந்து பார்த்தவர் அங்கு நின்று கொண்டிருந்த ராதாவைப் பார்த்ததும் அதிர்ச்சியாக எழுந்து நின்றார்.

“ராதா!”

“ஐ யம் ஸாரி காலையில் கடைக்கு போக நீங்க வர சொல்லவும் நான் கொஞ்சம் கோபமாக பேசிட்டேன் ஐ யம் ஸாரி உங்க முகம் காலையில் இருந்து டல்லா இருந்தது அது தான் நான் அப்படி சொன்னது தான் காரணமோ தெரியலனு மன்னிப்பு கேட்க வந்தேன்”

“உன் லைஃப்ல பர்ஸ்ட் டைம் ஸாரிங்குற வார்த்தையை நீ யூஸ் பண்ணி இருக்க பட் அதற்கு அவசியம் இல்லை நான் உன்னை தப்பாக நினைக்கல அதேநேரம் இந்த ஸாரியை நீ பல வருஷத்திற்கு முன்னாலேயே யூஸ் பண்ணி இருந்தா இன்னும் நல்லா இருந்துருக்கும்” புன்னகையோடு ஒவ்வொரு வார்த்தையையும் நிறுத்தி நிதானமாக கூறி விட்டு முத்துராமன் அங்கிருந்து சென்று விட ராதாவோ அவர் சொன்ன வார்த்தைகளை கேட்டு அந்த இடத்திலேயே சிலை போல நின்று கொண்டிருந்தார்.

தன் தாயும், தந்தையும் பேசியது அனுஸ்ரீக்கு கேட்காவிட்டாலும் தன் தந்தையின் புன்னகை முகமும், தாயின் அதிர்ந்த தோற்றமும் ஏதோ ஒன்றை அவளுக்கு உணர்த்த எட்டி நடை போட்டு தன் தாயின் அருகில் வந்து அவர் தோளில் தன் கையை வைத்தாள்.

தன் தோளில் பட்ட கையின் ஸ்பரிசத்தில் தன் சுய நினைவுக்கு வந்தவர் அவளை பார்த்து புன்னகத்து விட்டு சட்டென்று தன் கலங்கிய கண்களை மறைத்து கொண்டு அங்கிருந்து சென்று விட அவளோ கவலையுடன் நடந்து செல்லும் தன் அன்னையையே பார்த்து கொண்டு நின்றாள்…..

error: Content is protected !!