ஜீவன், தன்னிடம் உள்ள வெட்கம் மொத்தமும் அன்றே வெளிப்படுத்த முயற்சி செய்துகொண்டிருந்தான்.
பவானியின் அழைப்பினால், ஜீவனின் மனப்பிரதேசப் பகுதிகளில் மழைத் தூறல் ஆரம்பித்தது.
நிகழ்ந்த அழைப்பினை நினைத்துக் கொண்டிருக்கும் நிகழ் கணத்தில், மழைத் தூறலனாது சாரலாய் மாறியிருந்தது.
அவளின் அழைப்பு உணர்த்திடும் சேதி, மனப்பிரதேசத்தில் அடை மழையாக வலுப்பெற்று இருந்தது.
மனப்பிரதேச மழையினால், உள்ளம் நனைவது போல் உணர்ந்தான். அவ்வாறு உள்ளம் நனைந்ததால், அது உடலைக் குளிரச் செய்து, உயிரைச் சிலிர்க்கச் செய்தது.
ஜீவன் சார்! என்ன ஒரு உணர்வு!! – நாம்.
“ஜீவன்” – பவானி.
முந்தைய அழைப்பிலிருந்து மீண்டு வரவில்லை, ஜீவன். ஆதலால், இந்த அழைப்பு செவிகளுக்குச் செல்லவில்லை. இன்னும் சிலிர்த்துக் கொண்டே இருக்கின்றான்.
“ஜீவன்” என்று சொல்லி, பவானி ஜீவனது தோள் மீது தட்டினாள்.
இப்போது சிலிர்த்துக் கொண்டிருந்தவன் சிந்தனைக் கலைந்தது.
“சொல்லு பவானி”
“தூறல் விழுது, போலாமா??”
“தூறலா??” என்று ஆச்சர்யம் கொண்டு கேட்டான்.
“ம்ம்ம்”
ஜீவன், ஆகாயம் நோக்கிப் பார்த்தான். முகமெங்கும் மழைத் துளிகள் விழுந்தன. அக்கம்பக்கம் பார்த்தான், மலைப் பிரதேசத்திலும் லேசான மழைப் பொழிவு இருந்தது.
குனிந்து தன்னைப் பார்த்தான். தேகம் சற்று நனைந்திருந்தது.
“ப்ச்” என்றான்.
ஜீவன் சார்! நீங்கள் கொஞ்சம் அதிகமாகச் சிலிர்த்துக் கொண்டீர்கள். உண்மையில் மலைப்பிரதேச மழைதான் உங்களை நடுங்கச் செய்திருக்கிறது. மனப் பிரதேசமாம்! மழைப் பொழிவாம்! அதில் உள்ளம் நனைகிறதாம்!! உடல் குளிர்கிறதாம்!! பிதற்றல்!!! – நாம்.
“போலாமா ஜீவன்?” – பவானி.
“ஹே! இன்னும் பேசவே ஆரம்பிக்கல. கொஞ்ச நேரம் இருந்து, பேசிட்டுப் போ”
“என்ன பேசணும்?? இவ்வளவு நேரம் பேசியாச்சுல”
“நான் எவ்ளோ சொல்லியிருக்கேன்?. நீயும், ஏதாவது என்கிட்ட சொல்லணும்னா சொல்லு? இல்லை, கேட்கணும்னா கேளு?”
பவானி அமைதியாக இருந்தாள்.
“என்ன பவானி ஏதாவது சொல்லப் போறியா?? ”
மௌனமான சம்மதம் தெரிவித்தாள்.
“சரி சொல்லு” – ஜீவன்.
மழைச் சாரல் விழுகின்ற சத்தம் மட்டுமே கேட்கும், இருவரின் மௌனங்கள் நிரம்பிய நொடிகளில், மெதுவாக தன்னிடம் இருந்தக் கைக்குட்டையை எடுத்து, கொஞ்சம் கொஞ்சமாக ஜீவனின் சட்டைப் பைக்குள் இறக்கினாள்.
இது சட்டைப் பைக்குள் இறக்கும் முயற்சியாகத் தெரியவில்லை. இதயத்திற்குள் இறக்கும் முயற்சி!! – நாம்.
“பத்திரமா வச்சிக்கோங்க” – பவானி.
ஜீவன் ரசித்துச் சிரித்தான். பின் சட்டைப் பையை தட்டிக் கொடுத்துக் கொண்டே, “சரி பவானி” என்றான்.
என்றோ உருவான நேசத்தை, இன்று உணர்ந்து கொண்ட இருவரும் உதட்டின் புன்சிரிப்பை உதிர்த்தனர்.
“வேற ஏதாவது??” – ஜீவன்.
“ஒண்ணு கேட்கணும்”
“கேளு பவானி”
“நீங்க, இந்த ஊரை விட்டுப் போக மாட்டிங்கள?” – தான் வெளிப்படுத்திய நேசத்திற்கு, அவனின் வெளிப்பாடு என்ன என்று கேள்வி கேட்கிறாள்!!
“கண்டிப்பா போக மாட்டேன்” – அன்பை வெளிப்படுத்தும் ஆழமான அர்த்தங்கள் கொண்ட பதில் இது.
இருவரும், தங்கள் தூய பெருந்துணையாக ஒருவரை ஒருவர் நினைத்துக் கொண்டிருக்கும் தருணங்கள் – இவை.
மலைப் பிரதேசத்தில் மழைப் பொழிவு நின்றுவிட்டிருந்தது. வல்லின மழைக் காற்று போய்விட்டு, மெல்லினக் குளிர் காற்று வீசியது. மூலிகை மரங்களைப் தழுவி வந்துக் காற்றின் வாசம் நாசியைத் துளைத்தது.
“பவானி” என்று அழைத்தவன், தன் கால்களை மடித்து, இரு கரங்களையும் கால்களுக்குக் குறுக்கே கட்டிக்கொண்டு அமர்ந்தான்.
“சொல்லுங்க”
“ப்ச்”
இப்போது எதற்கு இந்த ‘ப்ச்’? புரியவில்லையே!! – நாம்.
“சரி சொல்லுங்க ஜீவன்”
ஓ! ஜீவன் என்கின்ற அழைப்பிற்காக! ஜீவன் சார், ‘வெயிட் என் பேரு ஜீவன். ஆனா…’ என்று ஆரம்பிக்கும் உங்கள் முத்திரை வசனத்தை மறந்துவிட்டீர்களா?? – நாம்.
“உனக்கு என்கிட்ட என்னென்ன பிடிக்கும்னு சொல்லேன் பவானி?”
“பிடிக்கும்ன்னு பர்டிக்குலரா எதுவும் இல்லையே” என்று இழுத்துச் சொன்னாள்.
“இல்லையா?? சரி விடு” என்று விட்டேற்றியாக விழிப் பார்வையைச் சுழல விட்டான்.
“ஆனா பிடிக்காதது இருக்கு”
“பிடிக்காததா?? சரி சொல்லு”
“பர்ஸ்ட்” என்று சுண்டு விரலில் ஒன்று என்ற எண்ணிக்கையைக் கொண்டு வந்தாள்.
“பர்ஸ்ட்டா?? அப்போ லிஸ்ட்டே வச்சிருக்கியா??”
“ப்ளீஸ் கேளுங்களேன்”
“சரி சொல்லு”
“பர்ஸ்ட், என்னைய வெயிட் பண்ண வைக்கிறது பிடிக்காது”
“நான் உன்னை வெயிட் பண்ணச் சொல்லியிருக்கேனா??”
“வாக்கிங் வர்றதா சொல்லி…” என்று நியாபகப் படுத்தினாள்.
“ஓ! ஓகே அடுத்து…”
“அடுத்து… எங்க அப்பாவ, நாதன் சாருன்னு சொல்றது பிடிக்காது”
“ஆமா! ஏற்கனவே சொல்லியிருக்கேல.. ஓகே இனிமே அப்படிக் கூப்பிடமாட்டேன்”
“ம்ம்”
“ஓகே, அடுத்து”
“அது… அது”
“ப்ச், சும்மா சொல்லு”
“இனிமே.. என்கிட்ட.. மதன்.. பத்திப் பேசக்கூடாது” என்று தயங்கியபடி சொன்னாள்.
“வேற…”
“இல்லை ஜீவன்” என்று அவனுக்கு விளக்க முற்பட்டவளை…
“புரியுது. அடுத்து சொல்லு” என்று சொல்லி, அந்தப் பேச்சை விலக்கி விட்டான்.
ஜீவனின் கைக் கடிகாரத்தின் நொடி முட்களும் வினாடி முட்களும் பேசிக் கொள்ளும் சத்தம் மட்டுமே கேட்கின்ற தருணங்கள் – இவை.
“அடுத்து சொல்லவா?” – பவானி.
“சொல்லு”
“ஆனா, எப்படிச் சொல்றதுன்னு தெரியலை??”
“இதே மாதிரி பட்டுன்னு சொல்லு…”
பட்டென்று சொல்லச் சொல்லியும், பவானியின் மொத்தப் பார்வையும், ஜீவன் சட்டையின் மேலிரிண்டு பொத்தான் பரப்புகளிலே பதிந்து இருந்தது.
ஜீவன், பவானியின் பார்வை சென்ற இடத்தைப் பார்த்தான். ஒற்றை விறல் கொண்டு, தன் சட்டையில் போடப்படாத மேலிரண்டு பொத்தான்களை ‘இதுவா பிடிக்காது’ என்பது போல் சுட்டிக் காட்டினான்.
பவானியிடத்து , ‘அதேதான்’ என்பது போன்ற தலை அசைப்புகள்.
“ஏன் பவானி?”
‘பிடிக்கலை. அவ்வளவுதான்!’ என்பது போன்ற முகச்சுளிப்புகள், கண் அசைவுகள், பவானியிடத்து!!
“சரி, இனிமே கரெக்டா பட்டன் போடுறேன். ஓகே” என்று சத்தியம் செய்யாதக் குறையாகக் கூறினான்.
ஆனாலும் பவானியின் முகத்தில் சமாதானம் அடைய மறுக்கும் தோற்றம் தெரிந்தது.
சட்டென்று “சரிம்மா, இப்பவே போடறேன்” என்று சட்டைப் பொத்தானைப் போட்டுக் கொண்டான்.
ஜீவன் சார்! நீங்கள் சட்டைப் பொத்தான்கள் போடாமல், கண் மூடி இயற்கையை ரசிப்பதைத் பார்த்து, நாங்கள் ‘மேன்லி’ என்றெல்லாம் சொல்லி, சிலாகித்திருக்கிறோமே! இப்படிச் செய்துவிட்டீர்களே!! நியாயமா?? – நாம்.
“போதுமா பவானி??” – ஜீவன்.
திருப்த்தியான புன்னகை பவானியின் முகத்தில். அந்த திருப்த்தியே, தன்னின் தித்திப்பு என்று ஜீவன் உணர்ந்தான்.
“ம்ம்ம், அடுத்து ..” என்று ஆரம்பிக்கப் போனவளை….
“போதும்”
“ஏன்?”
“ஒண்ணு ரெண்டுன்னா பரவால்ல. சொல்லிக்கிட்டே போற!!”
“நீங்கதான சொல்லச் சொன்னீங்க”
“ஆமா, அதுக்காக இப்படியா??” என்றான்.
இருவரும் சிரித்து விட்டனர்!
புதிதாய் பகிர்ந்து கொண்ட நேசத்தினால், அடிக்கொருமுறை இப்படிப் புன்னகை புரிகின்றனர்.
“நான் கிளம்பவா??” – பவானி.
“பவானி, இப்போதான் பேசவே ஆரம்பிச்சிருக்கு. கொஞ்ச நேர கழிச்சிப் போயேன்” என்று கெஞ்சினான்.
“அப்பா தேடுவாங்க”
“ப்ச், அதெல்லாம் தேட மாட்டாங்க”
எனினும் பவானி எழுந்து விட்டாள்.
“ப்ளீஸ் பவானி!! இன்னும் கொஞ்ச நேரம் இரு. வீட்டுக்குப் போன, நான் தனியாதான் இருக்கணும். அதான் கேட்கிறேன்” என்று எழும்பியவளின் கைப் பிடித்து, ஜீவனின் மனப் பிரதேசம் மண்டியிட்டு மன்றாடியது.
“நாளைக்குப் பேசலாம்”
சட்டென, பவானி கையை உதறியவன், கோபம் கொண்டு எழுந்து, நடக்க ஆரம்பித்தான்.
“ஜீவன்” – பவானி.
அந்த அழைப்பைக் கேட்டவன், முன்னேறி நடக்காமல், நின்றான்.
“திரும்பிப் பாருங்க” – பவானி.
திரும்பியவன் கண்கள் கலங்கி இருந்தன. பவானி, ஜீவன் அருகில் சென்றாள்.
“அதெப்படி ஜீவன், வீட்லருந்து வரும்போதே இவளைப் பார்த்தா அழணும்னு நினைச்சுக்கிட்டு வருவீங்களோ?” – பவானி.
இது சற்று நேரத்திற்கு முன்னே ஜீவன் சார் பேசிய வசனமாயிற்றே?? – நாம்.
“நிஜமா சொல்றேன், இப்பவே உன்ன என்கூட கூட்டிட்டுப் போகணும்னு தோணுது. ப்ச், முடியாது” என்று ஏகத்துக்கு ஏக்கம் கொண்டான்.
இந்த ஜீவிதத்தில், தனக்கென ஒரு உயிர் என்று பவானியை ஜீவனும், தனக்காகவே ஒரு உயிர் என்று ஜீவனை பவானியும் நினைப்பதால் உயிர் துடிக்கும் ஓசை கேட்கும் தருணங்கள் – இவை.
“உன்னைய பார்த்துகிட்டே, உன்கூட பேசிக்கிட்டே …” என்றவன், அதற்கு மேல் முடியாமல், அலை அடித்துக் கொண்டிருந்த தன் மனதிற்கு, அடைக்கலம் வேண்டி பவானியை அரவணைக்க வந்தான்.
“ஜீவன் ரிலாக்ஸ்” – பவானி.
சற்று நேரத்திற்கு முன்பு, அவளின் ஏக்கத்திற்கு தானும் இப்படித்தானே எதிர்வினை புரிந்தோம் என்று ஜீவனுக்குத் தோன்றியது. பவானியைப் பார்த்தான். அலட்டிக் கொள்ளாமல் நின்றாள்.
“பழி வாங்கிறியா பவானிம்மா?”
“அப்படின்னா என்ன ஜீவன்?”
“ம்ம்ம், டிட் பாஃர் டேட்..”
“மே பி”
“ஓ! பி.ஏ இங்கிலிஷ்”
“யெஸ்”
இருவரும் சிரித்துக் கொண்டனர்.
புது நேசம் தந்த புத்துணர்ச்சி, இருவரின் புன்னகையில் தெரிந்தது.
“இதுக்கு முன்னாடி, இந்த மாதிரி நீ பேசினதே இல்லைல பவானி”
மெல்ல மெல்லக் குறைந்து கொண்டே வந்த பவானியின் புன்னகை, ஒரு கட்டத்தில் மறைந்து விட்டது.
அதைக் கண்டவன், “ஓ! சொல்லியிருக்கக் கூடாதோ?” என்று கேட்டான்.
“அப்படியில்லை. கொஞ்சம்… என்னமோ ஒருமாதிரி இருக்கு”
“திடீர்னு என்ன ஒருமாதிரி?”
“திடீர்னு இல்லை. ரொம்ப நேரமா மனசு… நம்பிக்கையே இல்லாத மாதிரி… ” என்று திக்கினாள்.
“எதுக்கு பவானி??”
“அப்பாவ நினைச்சா. அவருக்கு என்ன பதில் சொல்ல?”
“எடுத்த முடிவை சொல்லு”
“அதான் எப்படின்னு தெரியல்ல”
புருவங்கள் சுருக்கி, கண்கள் மிரண்டு போய் தன் குழப்ப உடல் தோற்றத்தை வெளிப் படுத்தினாள்.
அப்பாவுக்கு ஜீவனைப் பிடிக்கவில்லை என்று தெரிந்தும், எப்படித் தன் விருப்பைச் சொல்ல என்று மனதுக்குள் தேம்பிக் கொண்டிருந்தாள்.
ஜீவன், ” ரிலாக்ஸ் ” என்று சொல்லி தன் உள்ளங்கையால், அவள் உச்சந்தலையை அழுத்தி ஆட்டினான்.
ஜீவனின் அச்செயல் புருவங்களை நீவி விட்டது போன்ற உணர்வு தந்ததால், பவானி முகத்தில் லேசான மலர்ச்சி தெரிந்தது.
“பவானி”
“ம்ம்ம்”
“உங்க அப்பாகிட்ட, ஜீவன் சார் இனிமே ஜீவன் சாரில்ல, ஜீவன்னு சொல்லு. புரிஞ்சிப்பாரு” என்று சொல்லி சிரித்து வைத்தான்.
தன் சிரிப்பு, பவானியின் மலர்ச்சியை மகிழ்ச்சியாக மாற்றும் என நினைத்தான். ஆனால் அவள் மனநிலை, பிரச்சனைகளை நினைத்து மனஅழுத்தம் கொள்கிறதோ என்று குழப்பம்தான் ஜீவனுக்கு வந்தது.
“பவானி டிப்ரெஸ்ஸனா பீல் பண்றியா?” – ஜீவன்.
“ச்சே, ச்சே. அப்படியெல்லாம் இல்லை.”
பவானியின் மனஅழுத்தப் பிரச்சனை ஞாபகம் வந்ததால், ஜீவனின் மனம் அலைப்புற்றது.
அவனின் அகம் புரிந்தவள், “அப்படியே இருந்தாலும், அப்பா ஏதாவது டேப்லெட் தருவாரு. சரியாயிடும். நீங்க இப்படி இருக்காதீங்க” என்றாள்.
“ம்ம்ம், பட் இந்த டேப்லெட் பத்தியெல்லாம் நானும் கத்துக்கணும்!! சீக்கிரமாவே கத்துக்கிறேன். சரியா பவானி??”
நீ, என் வாழ்வின் இன்றியமையாத ஒன்றல்ல! என் வாழ்வு நீ இன்றி அமையாது என்று சொல்லாமல் சொன்னான்.
புதிதாய் வந்த நேயத்திற்கு, ஜீவன் தருகின்ற முக்கியத்துவம், பவானியின் கண்களில் நீர் முத்துக்கள் கோர்க்கச் செய்தது.
“ஹே! என்னாச்சு?” – ஜீவன்.
“ரெண்டு பேருக்குப் பிடிச்சிருந்தா சேர்ந்து சந்தோசமா வாழணும்னு நினைப்பாங்க. ஆனா நாம… இல்லை… நான் உங்களைக் கஷ்டப்படுத்தப் போறேன்னு தெரிஞ்சே…” என்று தன் அவஸ்த்தையைச் சொன்னவள்… “உங்க கூட சந்தோசமா வாழணும்னு ஆசையா இருக்கு ஜீவன்” என்று தன் ஆசையைச் சொல்லி முடித்தாள்.
“கண்டிப்பா நடக்கும்”
“இல்லை ஜீவன், என்னோட ப்ராப்ளம்ம நினைச்சா… ” என்றவள், அவன் புஜத்தில், தன் நெற்றியை உரசிக் கொண்டவாறு விசனப்பட ஆரம்பித்தாள்.
ஜீவன் தடுக்கவில்லை.
ஒரு சிறு குறுக்கீடு…
இன்று பவானியை அழைத்துப் போவதற்காக வந்த பல்லவியின் கண்களில், இந்தக் காட்சி பதிந்தது.
உடனே தன் வீட்டில் சொல்ல வேண்டும் என்று நினைத்து, வீடு நோக்கி ஓடினாள். இதனை மனதின் ஒரு ஓரத்தில் நியாபகம் வைத்துக் கொள்வோமாக!!
பவானியை அழைத்துச் செல்ல நாதன் தானே வருவார்! பல்லவி ஏன் வந்தாள்? – நாம்.
குறுக்கீடு முடிந்தது.
மலைப்பிரதேசத்தில், திரும்பவும் மழைச்சாரல் ஆரம்பித்தது.
இன்னும் ஜீவனின் புஜங்களில், தன் நிஜங்களை நினைத்து உழன்று கொண்டிருந்தாள் பவானி!!
“என்ன ப்ராப்ளம்??” – ஜீவன்.
“சில நேரம் எனக்குத் தனியா இருக்கணும்னு தோணும்”
“வாழ்க்கை முழுசும் தனியா இருக்கணும்னு நினைச்சவனையே மாத்திட்ட. இதெல்லாம் சாதாரணம்”
“கோபமா, எரிச்சலா இருந்தா, ரொம்ப கத்திப் பேசுவேன்னு பல்லவி சொல்லுவா”
“பேச்சுச் சத்தமே கேட்காம இருந்திருக்கோம்… நானும், என் வீடும்… கேட்டுட்டுப் போறோமே!!”
“நான் உங்களை ரொம்பக் கஷ்டப் படுத்தப் போறேன்னு உங்களுக்குத் தெரியுதா??”
“அது எனக்கு இஷ்டம்தான்னு உனக்குப் புரியுதா??”
“நான் எப்போ என்ன செய்வேன்னு, எனக்கே தெரியாது ஜீவன் ”
“ஆனா, நான் என்ன செய்யணும்னு எனக்குத் தெரியும் பவானி”
“மருந்து, ட்ரீட்மென்ட்டுக்குன்னு நிறையே பணம் செலவாகும்”
“பணத்தைச் சேர்த்து வச்சி என்ன பண்ணப் போறேன்??”
சற்றே அவன் புஜத்திலிருந்து விலகி, தலை உயர்த்தி, பவானி ஜீவனைப் பார்த்தாள். அவனும், அவளைப் பார்த்தான். மெல்லிய நேசப் புன்னகை ஒன்றை பரிமாறிக் கொண்டனர்.
ஜீவனுக்கு, பவானி இன்னும் சரியில்லை என்றே தோன்றியது. தன் சகலமும் இவளே என்று ஆகிப்போன பின், அவள் சங்கடத்தை சரிசெய்ய ஏதேனும் சகாயம் புரிய வேண்டும் என்று எண்ணினான். எனவே ஜீவன் கீழுள்ள கேள்வி கேட்டான்.
“பவானி, இப்பக் கேட்ட கொஸ்டீன இன்னொரு தடவை கேளேன்.”
“ஏன்?”
“ப்ளீஸ் கேளேன். நீ ரிலாக்ஸ் ஆகுற மாதிரி ஒண்ணு பண்றேன்”
“ஏதும் கேம் இல்லைன்னா ஜோக்கா??” என்று ஒரு அவஸ்தையானக் குரலில் கேட்டாள்.
“ப்ச், இன்னொரு தடவை பதில் சொல்லப் போறேன்?”
இது புதிதாய் இருக்கிறதே!! – நாம்.
“அதான் பதில் சொல்லிட்டீங்களே” – பவானி.
“ப்ளீஸ் கேளு பவானி”
“மருந்து, ட்ரீட்மென்ட்டுக்குனு நிறையே பணம் செலவாகுமே?”
“இது வரைக்கும் என் தேவைக்காகச் சம்பாதிச்சேன். இனி என் தேவதைக்காகச் சம்பாதிப்பேன்” என்று நாணிக் கோணி நெளிந்து வளைந்து சொன்னான்.
என்ன சொல்ல ஜீவன் சார்? ஏதோ வயப்பட்டவன் போல பிதற்றுகிறீர்கள்!! – நாம்.
முற்றிலும் அவனிடமிருந்து விலகி நின்று கொண்டவள், ‘ஏன்? ஏன் இப்படி??’ என்பது போன்ற முகத் தோற்றம் தந்தாள்.
“எப்படி இருக்கு??” – ஜீவன்.
பவானிக்கு ‘ஐயோ’ என்றிருந்தது. எனவே திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.
“ஹே! பி. ஏ. இங்கிலிஷ்!! எப்படி இருக்குன்னு சொல்லிட்டுப் போங்க” என்றான்.
திருப்பி நின்றவள், “என்ன சொல்ல?” என்று கேட்டாள்.
“எப்படி இருக்குன்னு சொல்லு?” என்று கேட்டவாறே ஜீவன், பவானி அருகில் வந்து நின்றான்.
“நீங்க சொன்னது நல்லாவே இல்லை. இப்படிக் கேக்கறது, அதை விட நல்லாயில்லை. மொத்தத்தில எனக்குப் பிடிக்கலை”
‘எத்தனை பிடிக்கலைதான்’ என்று ஜீவனுக்கு எரிச்சல் வந்ததால், மழைச்சாரலைக் தன் கைகளில் வாங்கி, பவானி மீது தெளித்தான்.
“இதுவும் எனக்குப் பிடிக்காது” என்று சொல்லிவிட்டு, கடகடவென நடக்க ஆரம்பித்தாள்.
வேகமாகப் பவானியைப் பின்தொடர்ந்து வந்தவன், அவள் கரம் பிடித்து நிறுத்தி , “உனக்கு என்கிட்ட எதுவுமே பிடிக்காதா பவானி??” என்று வினா எழுப்பினான்.
“இல்லையே!! உங்களைப் பிடிக்கும்” என்று விடை எழுதினாள்.
உன்னில் இருக்கும் உனதில் ஒன்றிரண்டைப் பிடிக்காது, ஆனால் ஒட்டுமொத்தமாக உன்னைப் பிடிக்கும் என்று சொல்லாமல் சொன்னாள்.
ஜீவன் முறுவலித்துக் கொண்டே, பிடித்தக் கரத்தை விடாமல், “சரி வா” என்று பவானியை நடக்கச் சொன்னான்.
மிதமான மழைச்சாரல், மங்கிய வெளிச்சம், உரிய இடைவெளியில் வளர்ந்த உயரமான மரங்களின் வழியே, இதயங்கள் இணைந்த இருவர் கைகோர்த்து நடந்தனர்.
மழைச்சாரலில் நனைந்ததால், காய்ந்த இலைகளிலிருந்தும் சத்தம் வராத அசத்தங்கள் நிரம்பிய தருணங்கள் – இவை.
“ஜீவன்”
“சொல்லு”
“நாம ரெண்டு பேரும் சேர்ந்து டீ குடிச்சி ரொம்ப நாளாச்சு”
“ஆமால… ம்ம்ம், நாளைக்கு காலைல வந்திரு. வாக்கிங் போயிட்டு வந்து டீ குடிக்கலாம்”
“ம்ம்ம் சரி”
ஜீவனின் கைக்கடிகாரத்தின் முட்கள் சற்று நேரம் சரியாக வேலை பார்த்தப் பின், இருவரும் விடைபெறும் தருணம் வந்தது. அது விரும்புவோர்க்கு வருத்தத்தைத் தந்தது.
விழியின் பார்வைகள் கொண்டே விடைப்பெறுவதை வரைந்து காட்டினாள், பவானி.
“ஓகே, பை பவானி”
திரும்பி நடக்கப் போனவளை, தடுக்கும் எண்ணத்தில், ஜீவன் கீழ் கண்ட வசனம் பேசினான்.
“பவானி, ஒரு நிமிஷம்”
“என்ன ஜீவன்?” என்று திரும்பினாள்.
“ஏற்கனவே சொன்னதுதான். என்னைப் பத்தின விஷயம், யாருக்கும் தெரியக் கூடாது. உனக்காகதான் சொன்னேன். உங்க அப்பாகிட்ட வேணா சொல்லிக்கோ”
“ம்ம்ம்”
“அப்புறம், நம்ம எடுத்திருக்க முடிவக்கூட, இப்போ உங்க வீட்டுல
யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்”
“ஏன்?”
“எனக்கு ஒரு ரெண்டு நாள் டைம் கொடு பவானி”
“ஏன்? எதுக்காக?? என்ன செய்யபோறீங்க?” – பவானியின் குரலில் நம்பிக்கையின்மை இருந்தது.
‘மதனைச் சந்தித்துப் பேசினால் சரியாக இருக்கும்’ என்று ஜீவன் சிந்தித்துக் கொண்டிருப்பதாலும், பவானியின் விழிகள் சிந்திப்பவனைச் சந்தித்துக் கொண்டிருப்பதாலும் சத்தங்கள் இல்லா தருணங்கள் – இவை.
சட்டென சிந்திப்பை மறந்து, ஜீவன் பார்வைப் பவானியைச் சந்தித்தன. அவள் பார்வையில் சங்கடங்கள் தெரிந்தன.
“பவானிம்மா, உனக்கு இந்தக் கவலையெல்லாம் வேண்டாம். ரிலாக்ஸா இரு. நான் பார்த்துக்கிறேன். இப்போ கிளம்பு..”
ஜீவனைப் பிரிய மறுக்கும் பார்வைகளுடன், பவானி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் தோள் பிடித்து திருப்பி, “கிளம்பு பவானி… நாளைக்குப் பார்க்கலாம்” என்று சொன்னான்.
ஜீவனைத் திரும்பித் திரும்பிப் பார்த்தவாறே நடக்க ஆரம்பித்தாள்.
பவானி வீட்டை நோக்கி நடக்கின்றாள்…
நம் மனதின் ஒரு ஓரத்தில், பல்லவி பற்றிய ஒரு விடயம் நியாபகம் வைத்திருந்தோமே, அதை மனது முழுதும் நிரப்பிக் கொள்வோமாக!!
****
ஜீவனின் அறை…
பவானியின் நேசத்தால், இதுவரை கட்டி அடைத்து வைத்த மனது, இன்று கொட்டம் அடித்துக் கொண்டிருப்பதை ரசித்தான்.
எகிறிக் குதிக்கும் மனதை ரசிப்பதைத் தவிர வேறு எதைச் செய்யவதென்று தெரியாமல், அமர்ந்துவிட்டான்.
தன் சட்டையின் பொத்தான்களைத் தொட்டுப் பார்த்தான்… பின் புன்னகைப் புரிந்தான்!
சட்டைப் பையிலிருந்தக் கைக்குட்டையை எடுத்தான். அதில் இருந்த ‘ஜீவன்’ என்ற வார்த்தை மற்றும் பவானியின் ‘ஜீவன்’ என்ற வார்த்தைப் பிரயோகம், இரண்டையும் நினைத்து மகிழ்ந்து, அந்தக் கைக்குட்டையில் தன் இதழ் பதித்தான்!
அறையின் நான்கு சுவர்களும் தன் உள்ளத்தின் உரு மாற்றத்தை, உற்று நோக்குவது போல் உணர்ந்தான்.
அனர்த்தங்கள் நிரம்பிய தன் வாழ்வை, ஒரே நாளில் பவானி அர்த்தமாக்கிவிட்டாள் என்று அரற்றிக் கொண்டிருந்தான்.
ஆம்! அது சரியே.. பவானி, ஜீவனின் வாழ்வை அர்த்தமாக்க வந்தவள்.
அப்படிப் பார்க்கையில் பவானி துணை எழுத்து போன்றவள்.
தனியாக நிற்கும் பொழுது, துணை எழுத்து அர்த்தம் இல்லாமல் தெரியும். எந்த வார்த்தையுடன் சேர்கின்றதோ, அந்த வார்த்தையை அர்த்தமாக்கி, தானும் அர்த்தமாகும்.
அதுவே துணை எழுத்தின் சிறப்பு!!
ஆதுபோல், ஜீவனின் வாழ்க்கையில் வந்த துணை எழுத்து பவானி. ஜீவனின் வாழ்வை அர்த்தங்கள் நிறைந்ததாய் மாற்றுவதோடு மட்டுமல்லாமல், தன் வாழ்வையும் அர்த்தமாக்கிக் கொள்ளப் போகிறாள்.
ஆகவே! பவானி, ஜீவனின் துணை எழுத்து!!