Rainbow kanavugal-3

Rainbow kanavugal-3

3

மழை மீண்டும் வலுக்க தொடங்கியது. தடதடவென மழையடிக்கும் ஓசையோடு அந்த காவல் நிலையத்தில் ஒலிக்கும் சலசலப்புகளும் ஒன்றென கலந்துவிட்டிருந்தன.

அந்த சமயம் பார்த்து உள்ளே நுழைந்த ஒரு பெண் அங்கே இருந்த காவலர்களையெல்லாம் உலுக்கி எடுத்து கொண்டிருந்தாள்.

ஆறடிக்கும் குறையாத அவளின் உயரத்தில் பிரமிப்பாக தெரிந்தாள் அவள்! பெரும்பாலான தமிழ் பெண்களின் உயரம் ஐந்தரை அடிதான் என்பதால் மற்ற பெண்களிலிருந்து அவளின் உயரம் தனித்து அவளை அடையாளம் காட்டியது.

‘இந்த பொண்ணு என்ன உயரம் பாரேன்?’ இரண்டு பெண் கான்ஸ்டபிள்கள் அவளை பார்த்து ஆச்சரயபட்டு கொண்டிருந்தனர்.

ஆனால் அவற்றையெல்லாம் விட அவளிடமிருக்கும் வேறொரு விஷயம் எல்லோர் பார்வையையும் ஈர்த்தது. அதுதான் அவளின் தாய்மை நிலை. அவள் வயிற்றின் அளவை பார்த்தால் நிச்சயம் அவள் நிறை மாத கர்ப்பிணி என்று தோன்றியது.

“என்ன இந்த பொண்ணு… நிறை மாசமா இருந்துக்கிட்டு இந்த மழையில இங்க வந்து இப்படி கத்திகிட்டு இருக்கு… இவ குதிக்கிற குதியை பார்த்தா இங்கேயே பிரசவம் ஆகிடும் போலவே” தன் கோழியை களவு கொடுத்த கவலையை மறந்து அந்த வயதான பெண்மணி பக்கத்தில் நின்ற பெண் கான்ஸ்டபிளிடம் சொல்ல,

“நானும் அதேதான் யோசிக்கிறேன்” என்றாள் அவளும் பதிலுக்கு!

ஆனால் அது பற்றியெல்லாம் அந்த பெண் கடுகளவும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. அவள் இயல்பாகவே அநியாயங்களை பார்த்து பொங்கும் ரகம் போல.

‘வழக்கறிஞர் மதுபாலா’ என்று தன்னை அவர்களிடம் அறிமுகம் செய்து கொண்டாள். அந்த பெயரும் அவளும் சென்னை வாசிகள் எல்லோருக்கும் நன்கு பரிட்சயம்.

ஒரு வருடத்திற்கு முன்பு சமூகவலைதளங்களில் அவள் மிக பிரசித்தமாக பேசப்பட்டாள். பிரச்சனைகளை பார்த்து ஒதுங்கி போகும் இந்த காலகட்டத்தில் தைரியமாக களத்திலிறங்கி அதனை தட்டி கேட்கும் இளம் பெண் போராளி!

மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட ஆசிரியரை அந்த பள்ளி வளாகத்திற்குள்ளேயே வைத்து பளாரென்று அவள் அறைந்த வீடியோதான் முதலில் பிரபலமானது.

அதற்கு பிறகு மக்களுக்கு இடையூறாக இருந்த முப்பது டாஸ்மாக் கடைகளை குறித்த காணொளியாக பதிவிட்டு அவள் தொடுத்த பொதுநல வழக்கில் அரசாங்கத்திற்கு கண்டனம் தெரிவித்த நீதிமன்றம் அவற்றையெல்லாம் அதிரடியாக மூட உத்தரவிட்டதில் அவள் இன்னும் மக்களிடத்தில் பிரபலமானாள்.

தைரிய நாயகி, வீர தமிழச்சி என்று பலப்பல பட்ட பெயர்கள் அவளுக்கு வலம் வந்தன. திரை மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கு நிகராக அவளுக்கென்று ட்விட்டர் பேஸ்புக்கில் ஃபாலோயார்ஸ் குவிந்தனர்.

அந்த குறுகிய காலத்தில் அவள் மக்கள் மனதில் இடம் பிடித்தாள். அதனை குறி வைத்து அவளிடம் பல டிவி சேனல்கள் படையெடுக்க, அவர்களின் டிஆர்பி பசிக்கு தான் விருந்தாக முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டாள். தனக்கு சரியென்று தோன்றுவதை தடாலடியாக செய்யும் ரகம் அவள்!

ஆனால் கடந்த ஒரு வருடமாக அவள் பெயர் எங்கும் ஒலிக்கப்படவில்லை. திடீரென்று பிரபலமாகி காணாமல் போனவர்கள் பட்டியலில் அவள் பெயரும் சேர்ந்து கொண்டது.

அவளை பற்றி விவாதித்து கொண்டிருந்த காவலாளிகள் அப்போது, “குடும்ப இஸ்திரி ஆகிட்டா சமூக அக்கறையாவது சக்கரையாவது” என்று அவளை பற்றி கேலியாக பேசி கொள்ள, அந்த வார்த்தை மிகவும் தெளிவாக அவள் செவிகளில் விழுந்து அவள் மனதை துளைத்தது.

ஆனால் அவள் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தான் வந்த வேலைகளில் கவனமாக இருந்தாள்.

“கொஞ்ச நேரம் இருங்க மேடம்… எஸ்ஐ மேடமே கூப்பிடுவாங்க” என்று ரொம்பவும் பவ்யமாக அங்கிருந்த காவலாளிகள் அவளுக்கு பதிலளித்தனர்.

வேறு யாராவதாக இருந்தால் அவர்கள் பேசும் தொனியே வேறு விதமாக இருந்திருக்கும். ஆனால் எதிரே நின்றிருப்பது மதுபாலாவாயிற்றே! அவளை பற்றிதான் அந்த ஊருக்கே தெரியுமே. அவள் பாட்டுக்கு முகநூலில் காவலர்களின் அலட்சியம் அவமதிப்பு என்று எதாவது காணொளி எடுத்து போட்டுவிட்டால், அவர்கள் நிலைமை அதோ கெதிதான். அந்த பயமிருந்தது அவர்களுக்கு!

“விசாரிக்கிறேன்னு கூட்டிட்டு வந்து அஞ்சு மணி நேரம் மேலாகாது… அதுவும் அவங்க வீட்டில யாரும் இல்லாத சமயத்தில அழைச்சிட்டு வந்திருக்கீங்க… என்ன விசாரணை? எதுக்கு கூட்டிட்டு வந்தீங்க?” அவள் நிறுத்தாமல் கேள்வி கேட்க,

“இல்ல மேடம்… எல்லாம் எஸ்ஐ மேடமுக்குதான் தெரியும்” என்றனர்.

“அப்புறம் நீங்கெல்லாம் எதுக்கு இருக்கீங்க?”

“உஹும் இதெல்லாம் சரி வராது… நான் உடனே இந்துவை பார்க்கணும்… இல்ல நான் கமிஷனர் அபீஸ் போவேன்” என்றவள் பிடிவாதமாக சொல்ல,

“நீங்க முதல உட்காருங்க மேடம்… டென்ஷனாகாதீங்க” என்றனர்.

அப்போது அவள் உடன் வந்திருந்த இளைஞன் அவளிடம் கொஞ்சம் பொறுமையாக பேச சொல்லி சைகை செய்தான். உண்மையில் அவளை விடவும் அதிகமாக  அவன் முகத்தில்தான் தவிப்பும் கவலையும் இருந்தது.

கண்ணீர் நிரம்பிய அவன் விழிகளை பார்த்த மதுபாலா,

“கவலை படாதே சரோ! நான் பார்த்துக்கிறேன்… இவங்க கிட்ட எல்லாம் இப்படிதான் பேசணும்… இல்லாட்டி நம்மல ஏறி மேய்ச்சிடுவாங்க” என்று கூற, அவன் மனமோ அமைதியடையவில்லை. அவன் சிந்தனை முழுக்க அவள்தான். வந்த நொடியிலிருந்து அவன் பார்வை உள்ளேயே எட்டி பார்த்து கொண்டிருந்தது.

எங்கேயாவது தன் ஆருயிர் மனைவி தெரிகிறாளா என்று! ஆனால் ஒன்றும் பயனில்லை. அவனால் அவள் எங்கே இருக்கிறாள் என்று கூட தெரிந்து கொள்ள முடியவில்லை. ஏமாற்றமாக இருந்தது.

இருப்பினும் அவன் மதுபாலாவிடம் பொறுமையாகவே பேச சொன்னான்.

அதுதான் அவனுடைய குணமே. எந்த மாதிரி சூழ்நிலையிலும் யாரிடமும் அவன் கோபப்பட மாட்டேன். அப்படி கோபப்பட்டு அவனுக்கு பழக்கமுமில்லை. தவறு அவர்கள் மீதே இருந்தாலும் அவன் அமைதியாக போய் விடுவான். இயல்பில் அவன் ரொம்பவும் மென்மையானவன். ஈ, எறும்பிற்கு கூட தீங்கு நினைக்காதவன்.

ஆனால் வேலையென்று வந்துவிட்டால் கடுமையான உழைப்பாளி! உடல் உழைப்பினால் உண்டான திடகாத்திரமான புஜங்களும் உடற்கட்டுக்களும் அவனை ஆண்மையாக காட்டிய அதேநேரம் அவன் அணிந்திருந்த வேட்டியும் சட்டையும்  அவன் கம்பீரத்தை தூக்கி காட்டியது.

ஆனால் அவனிடம் பார்வைகள் அறியாத ஒரே ஒரு குறையிருந்ததது. வார்த்தைகளால் பேச முடியாதவன்.

சிறு வயதில் ஒரு விபத்தினால் உண்டான அதிர்ச்சியில் அவனுக்கு ஏற்பட்ட குறைப்பாடு அது. அவன் வாய் பேச முடியாமல் போனாலும் அவன் விழிகள் வார்த்தைகளை விடவும் மிக கூர்மையாகவும் தெளிவாகவும் பேச கூடியன. அன்பிற்கு வார்த்தைகளும் மொழிகளும் தேவையில்லை என்பதற்கான ஆணித்தரமான எடுத்துக்காட்டு அவன்.

ஆனால் இன்று வரை ஒரு ஜோடி விழிகளை மட்டும் நேர்கொண்டு பார்க்க முடியவில்லை அவனால். அந்த விழிகள் காட்டும் நிராகரிப்பா அல்லது அந்த விழிகளின் மீது தான் கொண்டிருக்கும் அதீதமான காதலா? என்று அவனுக்கே தெரியவில்லை.

தன் மனதின் உணர்வுகளை அவளிடம் மட்டும் சொல்ல முடியாமல் இன்றுவரை மருகி கொண்டிருக்கிறான். தன்னால் ஏன் பேச முடியாமல் போனது என்று அந்த ஒரு காரணத்திற்காக மட்டும் நித்தம் நித்தம் வருந்தி கொண்டிருக்கிறான். அவன்தான் சரவணகுமார்.

உழைத்த களைப்போடு மனைவியை பற்றிய கவலையையும் சேர்ந்ததில் அவன் முகம் மிகவும் சோர்வாகவும் களையிழந்தும் காணப்பட்டது.

மதுபாலாவின் படபடப்பான பேச்சிற்கு நேர்மாறாக அவன் மிகவும் அமைதியாக நின்றிருப்பது போல் தெரிந்தாலும் அவன் உள்ளுர தன் மனைவியின் நிலைமையை எண்ணி நிலைகொள்ளாமல் அல்லாடி கொண்டிருந்தான்.

“எஸ்ஐ மேடம் உங்களை கூப்பிடுறாங்க” என்ற அழைப்பு வரவும், அந்த ஒரு வாரத்தைக்காக காத்திருந்த சரவணனும் மதுவும் விரைந்து உள்ளே சென்றனர்.

அதேநேரம் சாரங்கபாணி தன் அறையை விட்டு வெளியேறி வாகனத்தில் புறப்பட்டுவிட்டார்.

ஜெயா அவர்களை அமர சொல்லிவிட்டு, “என்ன விஷயமா வந்திருக்கீங்க?” என்று கேட்க, சரவணனோ அவள் சொன்னதை காதில் வாங்காமல் சுற்றும் முற்றும் பார்த்து  கொண்டிருந்தான். உள்ளே தன்னவள் இருப்பாள் என்ற அவனின் எதிர்ப்பார்ப்பும் நம்பிக்கையும் அந்த நொடி தகர்ந்து போனது. அவன் ஏமாற்றமாக மதுவை பார்த்தான்.

அவன் மனவேதனை அவளுக்கு புரிந்தது. உடனடியாக அவள் ஜெயாவை பார்த்து, “இந்துமதி எங்க?” என்று வினவ,

“உட்காருங்க பேசுவோம்” என்றாள்.

மது சரவணனை பார்த்து அமர சொல்லிவிட்டு தானும் அமர்ந்தாள். அவனோ மனைவியை காண முடியாமல் தத்தளித்து கொண்டிருந்தான்.

மது சொன்ன வார்த்தைக்காக அவன் அமர்ந்தாலும் அவன் பார்வை அந்த காவல் நிலையத்தின் இண்டு இடுக்குகளையும் விடாமல் ஆராய்ந்தது. எங்காவது அவள் தன் பார்வைக்கு புலப்பட்டு விடமாட்டளா என்று?

மது அப்போது ஜெயாவிடம், “நீங்க இந்துவை விசாரிக்கிறேன் கூட்டிட்டு வந்து அஞ்சு மணி நேரத்துக்கு மேல ஆச்சு… அதுவும் அவங்க வீட்டில யாரும் இல்லாத சமயமா பார்த்து அழைச்சிட்டு வந்திருக்கீங்க” என்று கேட்க,

“யார் இருக்காங்க இல்லன்னு எல்லாம் நாங்க பார்க்கல… அவங்களை விசாரிக்கணும்… அதான் கூட்டிட்டு வந்தோம்” என்று தீர்க்கமாக பதிலளித்தாள்.

“இன்னுமா உங்க விசாரணை முடியல”

“முடிஞ்சிருச்சு”

“அப்போ இந்துமதி எங்க?” மது ஆவலோடு கேட்க,

“அவங்க சுரேஷ்ங்கிறவரை கொலை பண்ண குற்றத்துக்காக கேஸ் பைல் பண்ணியிருக்கோம்… நாளைக்கு கோர்ட்ல ஆஜர் படுத்த போறோம்… நீங்க அங்க வந்து பேசிக்கோங்க” என்றாள்.

இதை கேட்ட சரவணன் தலையிலிடியிறங்கிய உணர்வு. இத்தனை நேரம் சரவெடியாக வெடித்து கொண்டிருந்த மதுவோ அதிர்ச்சியில் பேச்சற்று போனாள்.

அவளால் நம்பவே முடியவில்லை. சுரேஷை கொலை செய்தது இந்துமதியா? அவள் அந்தளவுக்கு செய்ய கூடியவளா? ஆனால் ஏன்? என்று கேள்விகள் வரிசை கட்ட, சரவணனால் தன் மனைவியை அப்படி யோசித்து கூட பார்க்க முடியல்லை.

அவனால் பேச முடியாவிட்டாலும் ஜெயாவிடம் தன் சைகைகளால் திட்டவட்டமாக அப்படி இருக்கவே இருக்காது என்று மறுத்தான்.

ஜெயா அப்போது, “ஆமா நீங்க யாரு?” என்று அவனை பார்த்து வினவ,

“அவர் இந்துவோட ஹஸ்பெண்ட்” என்றாள் மது.

“அவரால பேச முடியாதோ?” ஜெயா கேட்க,

“உஹும்” என்றாள். ஜெயாவிற்கு அவன் மீது பரிதாப உணர்வு தோன்றியது. ஆனால் வெளிப்படையாக காட்டி கொள்ளவில்லை.

மதுவின் மூளை தீவிரமாக சுரேஷின் கொலை பற்றி யோசிக்க தொடங்கியது.

இந்துமதிதான் குற்றவாளி என்பது எந்தளவுக்கு உண்மை. ஒருவேளை இவர்கள் அப்படி ஜோடிக்கிறார்களோ? என்ற எண்ணம் தோன்ற,

“எந்த அடிப்படையில நீங்க இந்தவை குற்றவாளின்னு சந்தேகப்படுறீங்க?” என்று கேட்டாள் மது.

“சந்தேக எல்லாம் படல… உறுதியாவே சொல்றோம்… இந்துமதிதான் இந்த கொலையை பண்ணி இருக்காங்க”

“இருக்கவே இருக்காது… இந்துமதி அப்படியெல்லாம் பண்ண வாய்ப்பில்லை” மது மறுக்க,

“எங்ககிட்ட ஆதாரம் இருக்கு” என்று ஜெயா அழுத்தமாக சொன்னாள்.

“என்ன ஆதாரம் இருக்கு உங்ககிட்ட?”

“அதெல்லாம் உங்ககிட்ட இப்போ சொல்ல முடியாது”

“என்ன விளையாடுறீங்களா? நீங்க பாட்டுக்கு ஒரு பொண்ணை விசாரிக்கிறேன்னு கூட்டிட்டு வந்துட்டு இப்போ குற்றவாளின்னு சொல்றீங்க… திஸ் இஸ் அட்ராஸியஸ்… இதுல ஏதோ சூழ்ச்சி இருக்கு” என்று மது உணர்ச்சிவசப்பட,

“வக்கீல் மேடம்… நீங்க வாதம் செய்ய இது ஒன்னும் கோர்ட் இல்ல… போலிஸ் ஸ்டேஷன்… கொலை குற்றவாளின்னு தெரிஞ்ச பிறகு நாங்க அவங்களை கைது பண்றதுதான் ரூல்ஸ்… அவங்க பொண்ணா பையனா அப்படியெல்லாம் எங்களால பிரிச்சு பார்க்க முடியாது… அதுவுமில்லாம இன்னைக்கு பொம்பளைங்க கொலை பண்றதுதான் பேஷன் ஆகிடுச்சு

கேரளால பார்த்தீங்களா… ஒரு பொண்ணு அசால்ட்டா எத்தனை கொலை பண்ணியிருக்கான்னு” என்று ஜெயா பேசி கொண்டே போக, மதுவிற்கு தலை சுற்றியது.

அந்த டென்ஷனில் மயக்கம் வருவது போல் தோன்றவும் அவள் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு,

“சரி… இந்துவை பார்க்கவாச்சும் அலோ பண்ணுங்க” என்று பொறுமையாக கேட்டாள்.

“சாரி முடியாது” என்று ஜெயா பட்டென்று மறுக்க, மது சீற்றமாக எழுந்து நின்றாள்.

“பார்க்க கூட அலோ பண்ண முடியாதுன்னு சொல்றதெல்லாம் டூ மச்” என்று கத்தியவள் நிற்க முடியாமல் தடுமாற செய்யவும் சரவணன் அவள் கரத்தை பற்றி நிலைநிறுத்தினான்.

ஜெயாவோ அலட்டி கொள்ளாமல், “இந்த மாதிரி நேரத்தில் இப்படியெல்லாம் டென்ஷன் ஆக கூடாது வக்கீல் மேடம்… பொறுமையா பேசுங்க” என்று அறிவுரை வழங்க,

“எனக்கு ஒன்னும் உங்க அட்வைஸ் தேவையில்லை… இப்போ இந்துவை பார்க்க அலோ பண்ணுவீங்களா மாட்டீங்களா? அட்லீஸ்ட் சரவணனை மட்டுமாச்சும் பார்க்க அலோ பண்ணுங்க” என்று கோபமாக ஆரம்பித்தவள் இறுதியாக மிகவும் தாழ்ந்த குரலில் கிட்டத்தட்ட கெஞ்சினாள்.

சில நொடிகள் மௌனமாக யோசித்த ஜெயா, “என்னால இதுல ஒன்னும் பண்ண முடியாது… வேணா இன்ஸ்பெக்டர்கிட்ட கேட்டு பாருங்க” என்றாள்.

“எப்ப வருவாரு உங்க இன்ஸ்பெக்டர்?”

“ரௌன்ட்ஸ் போயிருக்காரு… வந்த பிறகு பார்த்துட்டு போங்க” என்றாள். அதற்கு மேல் மதுவால் ஒன்றுமே பேச முடியவில்லை.

சரவணனை இயலாமையோடு பார்க்க அவன் ஏமாற்றத்தோடு அமர்ந்திருந்தான். அவன் விழிகளில் நீர் கோர்த்திருந்தது.

ஜெயா அவர்கள் இருவரையும் கவனிக்காமல் மும்முரமாக ஏதோ கோப்பினை எடுத்து ஆராய தொடங்கினாள். இனிமேல் என்னிடம் பேசி ஒன்றும் பயனில்லை என்று சொல்லாமல் சொன்னது அவள் செயல்!

மது என்ன செய்வதென்று புரியாமல், “நைட் பூரா இந்துவை ஸ்டேஷன்லதான் வைச்சிருக்க போறீங்களா?” என்று கேட்க,

“கூட ரெண்டு லேடி கான்ஸ்டபிள் ஸ்டேஷன்ல இருப்பாங்க?” என்றவள் சொன்ன போது அவள் தன் மனசாட்சியை கொன்றுவிட்டுதான் அப்படி சொன்னாள்.

“இருப்பாங்க… ஆனா பாதுகாப்பா இருப்பாங்களா?” என்று மதுபாலா எள்ளலாக கேட்க, ஜெயாவின் பார்வையில் கோபம் தெறித்தது.

“முறைக்காதீங்க எஸ் ஐ மேடம்… நடக்காததை எதுவும் நான் சொல்லலையே… உங்க போலிஸ் ஸ்டேஷன் எல்லாம் எந்தளவு பாதுகாப்பானதுன்னு எங்களுக்கு தெரியாதா என்ன?”

“உங்களோட கற்பனைக்கு எல்லாம் என்னால பதில் சொல்லிட்டு இருக்க முடியாது… ப்ளீஸ் கிளம்புறீங்களா” என்று ஜெயா எரிச்சலாக சொன்னாள் .

“கிளம்புறோம்… ஆனா இந்துவுக்கு எதாச்சும் பிரச்சனை வந்துச்சு இந்த ஸ்டேஷன்ல இருக்க ஒருத்தரையும் நான் சும்மா விடமாட்டேன்” என்று அழுத்தமாக எச்சரித்தவள், “வா சரோ போலாம்” என்றாள்.

இந்துவை பார்க்க முடியாதா என்றவன் ஏக்கத்தோடு பார்க்க,

“எனக்கு உன் நிலைமை புரியுது… ஆனா இவங்க கிட்ட நமக்கு நியாயம் கிடைக்காது” என்று ஜெயா முன்னிலையிலேயே குத்தலாக சொல்லிவிட்டு அவனை அழைத்து கொண்டு வெளியே வந்தாள். அவனோ மனமே இல்லாமல் அவளுடன் நடந்தான்.

இருப்பினும் அவன் விழிகள் அவளை தேடி கொண்டே வந்தது.

வெளியே வந்த மதுவின் மனதில் ஆயிரமாயிரம் கேள்விகள். உண்மையிலேயே இந்துமதி சுரேஷின் கொலையில் சம்பந்தப்பட்டு இருக்கிறாளா?

சுரேஷ் இந்துமதிக்கு இடையிலான உறவை பற்றிய நினைவு வந்தது. ஒருமுறை அவர்கள் இருவரையும் சேர்த்து பார்த்த அந்த காட்சி வேறு மனதிற்குள் உறுத்த, அது உண்மைதானா என்று ஊர்ஜிதமாக தெரியாமல் அவளால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.

ஆனால் அது மட்டும் உண்மையென்றால் அதனால் ஏற்பட போகும் விளைவுகளை அவளால் யோசித்து கூட பார்க்க முடியவில்லை.

‘சரோதான் பாவம்!’ எந்த தவறும் செய்யாமல் இந்த பிரச்சனையில் சிக்கி கொண்டு அவதியுற போகிறான்.

இருப்பினும் இந்துமதிதான் கொலையாளி என்று அவளால் உறுதியாக நம்ப முடியவில்லை. இதில் ஏதோ குழப்பம் நடந்திருக்கிறது.

இந்த யோசனையில் அவள் இருக்க, சரவணன் கையசைத்து அவளை புறப்பட சொல்லி சொன்னான்.

“சாரி சரோ… எனக்கு என்ன பண்றதுன்னே புரியல… ரொம்ப குழப்பமா இருக்கு… கேஸ் ஃபைல் பண்ணிட்டாங்கன்னா இப்போ நாம ஒன்னும் பண்ண முடியாது… அதுவும் இந்த மாதிரி நேரத்தில யாரையும் ஹெல்புக்கு கூட கூப்பிட முடியாது” என்றவள் ஆதங்கத்தோடு சொல்ல,

அவன் புரிதலாக தலையசைத்துவிட்டு மீண்டும் அவளை செல்ல சொல்லி சொன்னான். அதுவும் மழை அதிகமாவதை அவளிடம் காண்பித்து உடனே புறப்பட சொன்னான்.

“இல்ல சரோ… இன்ஸ்பெக்டர் வரட்டும்… பார்த்துட்டு கிளம்புறேன்” என்றவள் சொல்ல, அவன் வேண்டாவே வேண்டாம். நீ கிளம்பு என்று அவளை வலுக்கட்டாயமாக போக சொன்னான்.

“சரி சரோ… நான் காலையில வரேன்” என்று அவனை தயக்கமாக பார்த்து கொண்டே அவள் தன் காரில் ஏறி புறப்பட, அவளை அனுப்பிவிட்டு அவன் காவல் நிலைய வாசலில் தேங்கி நின்றான். அவன் மனமெல்லாம் உள்ளேயே இருந்தது.

அந்த புயலும், மழை காற்றும் அவன் காதலை இம்மியளவு கூட அசைத்து பார்க்க முடியவில்லை. ஆனால் தனியாக வேதனையில் அமர்ந்திருந்த இந்துமதிக்கு அவன் வரவில்லை என்பது மிகுந்த வேதனையை அளித்தது. மனதளவில் ரொம்பவும் உடைந்து போயிருந்தாள்.

‘உஹும்… மாமா எனக்காக வரமாட்டாரு… அவ்வளவுதான் இத்தோடு என் வாழ்க்கையே முடிஞ்சு போச்சு’ என்ற அவநம்பிக்கையில் அவள் மூழ்கி கொண்டிருந்தாள்.

error: Content is protected !!