Kumizhi-14

Kumizhi-14

நேசம் – 14

உணவகத்தில் சற்று வேலை ஓய்ந்த நேரம், இரவு மணி ஒன்பதைக் காட்டிக் கொண்டிருக்க, பாண்டியன் தன் செல்போஃனை பார்ப்பதும், மீண்டும் கணக்கினை பார்ப்பதுமாய் தடுமாறிக் கொண்டிருந்தான்.

“என்னடா மாப்ளே? இன்னும் உன்னோட பள்ளியறை பூஜைக்கு மணியடிக்கலையா? அப்டி பார்த்து வைக்கிற அந்த போஃன?” ரவி அவனை சீண்டினான்.

“என்னோட நெலம அவ்ளோ கிண்டலா போச்சா? இதையும் அனுபவிச்சு பார்த்தா தான்டா தெரியும்” காதலில் கரை கண்டவனாய் பாண்டியன் பேசி வைக்க,

“எது? இப்டி வாட்ஸ்-அப்ல குடும்பம் நடத்துறதா? இந்த கருமம் பிடிச்ச போஃனே எனக்கு வேண்டாம்டா மாப்ளே!”

“எனக்கு மட்டும் ஆசையாடா மச்சி? பேசவே மாட்டேன்னு அடம் பிடிச்சவ கிட்ட, கெஞ்சி கூத்தாடி மூணு வேலை வாட்ஸ்-அப்ல மெசேஜ் தட்டி விட, நான் பட்ட பாடு அந்த ஆண்டவனுக்கு தான் தெரியும்”

“உனக்கு ஸ்மைல் எமோஜியும், குட்மார்னிங், குட்நைட் போஸ்டர் மட்டும் தான்டா வருது, இன்னும் டெக்ஸ்ட் பண்ணவே இல்ல என் தங்கச்சி” – ரவி

“எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா மாறும். ரெண்டு வருஷம் முடிய இன்னும் நாள் இருக்குடா! அதுல எவ்ளோவோ மாற்றம் வரலாம். அது ஒண்ணு தான் மாறாதது” – பாண்டியன்

“சம்சாரி ஆனாலும் சன்யாசத்தை விடாம பிடிச்சுக்கிட்டதும் இல்லாம, தத்துவத்தை வேற பேசி வைக்கிற! ரெண்டு பேரும் சேர்ந்து இமயமலைக்குப் போகாம இருந்தா சரி”- ரவி

“ஹனிமூன் அங்கே களைகட்டும் இல்லடா மச்சி!”

“தோ பார்ரா! அங்கே போனா குகையை விட்டு வெளியே வராம ஐக்கியமாகிடலாம். நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து வாழ்றத பாக்க இங்கே நிறைய பேர் வெயிட்டிங் மாப்ளே!”

“அதுக்குதானேடா எல்லாமே செஞ்சுட்டு இருக்கேன்”

“என்னமோடா! உன்னை பொறுமை இல்லாதவன்னு சொல்றத, இந்த விசயத்துல நான் வாபஸ் வாங்கிக்கிறேன்” – ரவி

“அவ்ளோ நல்லவனா மாறிட்டேனாடா நானு?”

“எல்லாம் சிவனி மந்திரம் தான். அவளுக்காக ஒவ்வொரு விசயத்துலயும் நீ மெனக்கெடும் போது, நெஜமாவே என் தங்கச்சி குடுதது வச்சவ தான்டா!”- ரவி

“அத என் மாமியார் வந்து சொல்லனும்டா! இவள படிக்க சொல்லி, ஹாஸ்டல்ல சேர்த்து விட்டு மூணு மாசம் ஆச்சு, அவ கோபம் குறையணும்னா பேச கூடாது, பாக்க கூடாதுன்னு தடா போட்டுட்டா… இன்னும் என்னென்ன ஆர்டர் போட போறாளோ தெரியல?” மனைவியின் நினைவில் சிலிர்த்த படியே சொல்லி வைக்க

“என்ன சொன்னாலும் மண்டைய ஆட்டி, இப்டி அநியாயத்துக்கு அவகிட்ட மாட்டிட்டு முழிப்பன்னு கனவுல கூட நினைக்கலாடா”– ரவி

“கொஞ்சமாவாடா அவ பேசினா? விளையாட்டு பொண்ணுன்னு நினைச்சா, என் பேச்ச கேக்குற மாதிரியே எனக்கே ஆப்பு வக்சுட்டா…” என சொன்னவன் அன்றைய நாளின் தர்க்கங்களை நினைத்தே தலையை உலுக்கிக் கொண்டு, அவளுக்கு வாட்ஸ்-அப்-ல் டெக்ஸ்ட் அனுப்பினான்.

“சாப்பிட்டியா? மெசேஜ் வரல?”– பாண்டியன் டெக்ஸ்ட்

“மறந்து போயிட்டேன்” என மறுபக்கத்தில் இருந்து ஸ்டிக்கர் வந்தது

“இனிமே லேட்டானா நான் கால்(call) பண்ணுவேன்” பாண்டியன்

“மறக்கல… குட் நைட்…” என அதற்கும் ஸ்டிக்கர் போட்டு விட்டு ஆஃப்லைன் சென்றதை காட்டியது சிவனியின் எண்.

“இந்த ஸ்டிக்கர் கண்டுபிடிச்சவன் கிடைச்சான், என் கையால தான்டா கருமாதி” கடுப்பில் ரவியிடம் பொரிய,

“சத்தமா சொல்லாதேடா! உன் வீட்டம்மாவுக்கு தெரிஞ்சா, அதுக்கும் ஒரு சட்டம் பேச போகுது”

“அட ஏண்டா நீ வேற கடுப்பை கிளப்பிட்டு” பாண்டியன் சலித்துக்கொண்ட நேரத்தில், சிவனியா தன் விடுதி அறையில், செல்போஃனில் பாண்டியன் அனுப்பிய செய்தியை படித்துக்கொண்ட மனதோடு பேச ஆரம்பித்தாள்.

“எப்போதான் அடங்கப் போறீங்க மாமா? உடம்பெல்லாம் பிடிவாதம் அப்டியே ஊறிப் போய் இருக்கு. யார் என்ன சொன்னாலும் என் இஷ்டப்படியே இருப்பேன்னு இன்னுமும் சாதிச்சு வைக்கிறீங்க? எப்டி உங்கள சமாளிக்க போறேன்னு தெரியல” என சலித்துக் கொண்டவளுக்கு, தன்னை படிக்க சொல்லி வற்புறுத்திய நாளின் நினைவே மனதில் வந்து நின்றது.

தாயின் ஆதங்கங்களை கேட்ட நாளில் சிவனியாவிற்கு, இதனை எப்டி சரி செய்வது என்று மனதில் போட்டு உழன்று, அயர்ச்சி வந்திருந்தது.

முன்தின திருமண கொண்டாட்டங்களும், காலை நேர சந்தோசங்களும் தூரம் போய் விட, இதற்கான காரணம் பாண்டியனின் கோபங்களும், ஆத்திரங்களும் தான் என்ற எண்ணம் வெட்ட வெளிச்சமானாலும், அதற்கு விதையாய் இருந்தது தனது அசிரத்தையான செயல்களும், சொல்லாமல் மறைத்த பயமும் தான், அதற்கு உறுதுணையாக நின்றதோ என்றே நினைத்தாள்.

அன்றொரு நாள் தோழியின் வருகையை மறைக்கவென ஆரம்பித்து, அவளது துரோகமும், அதனால் விளைந்த வினைப்பயன்களும், தன் வாழ்க்கையை புரட்டி போடும் என்று சர்வ நிச்சயமாய் எதிர் பார்க்கவில்லை.

தன்னிலையை நினைத்து தெளிந்தவளுக்கு, தன்னை அடித்து துன்பப்படுத்தியதால் மட்டுமே திருமணம் என்ற பிரயாசித்தத்தை செய்து, தன் தவறுக்கு நேர் செய்து  கொண்டானோ கணவன் என்ற நினைவும் வராமல் இல்லை.

அவன் மனதில் எழுந்த குற்ற உணர்வினை இனம் கண்டறியாமல் தான், காதல் என்று தன்னிடம் பிதற்றிவிட்டு இப்பொழுது வரை உருகிக் கொண்டிருக்கிறானோ என்ற இல்லாத சந்தேகங்களும், மனதில் எழுந்திட, அவளால் தொடர்ந்து தன் தாய் வீட்டில் இருக்க முடியவில்லை.

பாண்டியனது “அழைத்து செல்ல வருகிறேன்” என்ற பேச்சையும் மறந்த வண்ணம் அவசர கதியில், ஏதோ ஒரு சாக்கினை சொல்லிவிட்டு வீம்பாய் பாண்டியன் வீட்டிற்க்கு வந்தடைந்தாள்.

தாயின் பேச்சால் அவன் மீது கோபங்களும், ஆத்திரங்களும் உண்டானாலும், பதிலுக்கு தானும் கோபமுகத்தை காட்டினால், மேலும் சிக்கல்களும், பிரச்சனைகளும் பெரிதாகும் என்பதை கண்கூடாக அறிந்தவள், முடிந்தவரை அமைதியான முறையிலேயே பேசிட நினைத்தாள்.

பாண்டியனிடம் வீட்டிற்கு வந்து சேர்ந்த விவரத்தை அலைபேசியில் சொல்லியிருக்க,

“நான் வர்றேன்னு சொன்னேனே பாப்பா! அதுக்குள்ள என்ன அவசரம்?” வீட்டில் நுழைந்தவாறே, ஏதோதோ கைவேலைகளை செய்துகொண்டு, அவள் முகம் பார்க்காமல் கேள்வி கேட்க

“கொஞ்சம் பேசணும்”

“பேசு”

“என்னை ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?”

“தெரியாதா உனக்கு? இன்னும் நாலு அடி கொடுத்து உன் கன்னத்தை பழுக்க வைக்க தான்!” இப்போழுதும் அவள் முகம் பார்க்காமலேயே கிண்டலுடன் பதில் அளிக்க

“இதுவே அந்த கவிதாராணியா இருந்தா, இப்டி பேசுவீங்களா?”

“ஹேய்… என்ன ஆச்சு? இப்போ எதுக்கு அதெல்லாம் பேசுற?” சொல்லியபடியே அவள் முகத்தை பார்க்க, அவளது இறுகிய முகபாவம் அவனை துணுக்குற செய்தது.

“வேற பொண்ணு கூட நிச்சயம் வரைக்கும் போயிட்டு எப்டி என்னை கல்யாணம் பண்ணிக்க முடிஞ்சது?”

“இப்போ எதுக்கு அதெல்லாம்?”

“எந்த பிரச்சனையும் நடக்கலைன்னா, இந்நேரம் அவங்க கூட தானே கல்யாணம் முடிச்சு, குடும்பம் நடத்தி இருப்பீங்க? அப்போ என் கிட்ட லவ் சொன்னது பொய் தானே? நீங்க செஞ்ச தப்புக்கு, என்னை கல்யாணம் பண்ணி நேர் பண்ணியாச்சு”

“அவகூட கல்யாணம் முடிஞ்சிருந்தாலும், சந்தோசமா வாழ்ந்திருக்க மாட்டேன் சிவு! ஒரு தடவை நாம பேசுறத பார்க்க பிடிக்காதவளுக்கு, தொடர்ந்து நாம பழகுறதும் பிடிக்காம தானே போயிருக்கும். எப்படியும் நான் உன்னை தேடி தான் வந்திருப்பேன், இதுக்கு மேல எந்த விளக்கமும் கேக்காதே”

“எல்லாத்துக்கும் பதில் ரெடியா வைச்சுருக்கீங்க அப்டித்தானே?”

“என்ன ஆச்சு சிவும்மா? யார் என்ன சொன்னாங்க? உங்கம்மா ஏதும் திட்டினாங்களா?” ஆதூரமாய் அவள் அருகே அமர்ந்து பாண்டியன் கேட்க

“அத்தைன்னு கூட சொல்ல முடியல… நான் மாமான்னு கூப்பிடலன்னு சண்டைக்கு வரத் தெரியுது, அப்டிதானே?”

“இப்போ அது தான் பிரச்சனையா? இனிமே கூப்பிடுறேன்”

“உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல என்ன சண்டை மாமா?”

“சண்டையா? யார் சொன்னா? பெரியவங்க கூட சண்டை போட்ற அளவுக்கு மோசக்காரன் இல்ல நானு”

“அப்போ அன்னைக்கு பேசினது அப்டித்தானே”

“அது…. கோபத்துல பேசிட்டேன்னு ஏற்கனவே சொல்லிட்டேன் சிவு…”

“என்னை பார்த்து பேசுறதுக்கு முன்னாடியே அம்மாகிட்ட பேசி இருக்கலாமே மாமா?”

“சிவு… இவ்ளோ பேச்சு கேக்க எனக்கு பொறுமையில்ல… என்ன தான் சொன்னாங்க உங்க அம்மா? இப்டி புலம்பிட்டு இருக்க?”

“நிறைய சொன்னாங்க அதெல்லாம் சொன்னா உங்களுக்கு கோபம் தான் வரும்… திரும்பவும் பெரிய பிரச்சனை ஆகும்”

“ம்ப்ச்…. அப்படியெல்லாம் வராது சொல்லு”

“நிறைய சொன்னாங்க… நான் என்னென்னே தப்பு செஞ்சேன்னு, அதோட அவங்களுக்கு உங்க மேல நம்பிக்கை போயிருச்சு… எந்த நேரமும் நீங்க என்னை வெளியே அனுப்பிடுவீங்கன்னு பயப்படுறாங்க… அதுக்கு தான் இப்போ வேலைக்கு போய் சம்பாதிச்சு, சீர் செய்றேன்னு என்னை விட்டு போகப் பாக்குறாங்க” என்றவள், அவன் தோள்களில் சாய்ந்து கொண்டே, அவர்களுக்குள் நடந்த பேச்சுக்கள் அத்தனையும் கூறி முடித்தாள்.

“பைத்தியம் பிடிச்சிருக்காடி அவங்களுக்கு?” கோபமாய் கூற

“இப்போ எதுக்கு கோபம்? அமைதியா பேசுங்க! நியாயமா நாந்தான் உங்க மேல கோபப்படணும்… அதெல்லாம் வேண்டாம்னு தான் என் பொறுமைய இழுத்து வைச்சு பேசிட்டு இருக்கேன்” சற்றே விலகி அமர்ந்தாள்.

“உங்கம்மா அவங்க இஷ்டத்துக்கு பேசி, செய்ற வேலைக்கெல்லாம் என்னை கை காட்டுவாங்க… நான் அமைதியா கேட்டுட்டு இருக்கணுமா?” பாண்டியனின் பேச்சில் கோபம் எட்டி பார்க்க ஆரம்பிக்க,

“இதெல்லாம் எதனாலன்னு கொஞ்சம் யோசிச்சு பார்த்தா, உங்க மேல இருக்கிற தப்பு என்னான்னு புரியும்”

“அப்டி என்னடி தப்பு பண்ணிட்டேன், உன்மேல கோபப்பட்டேன், அதுக்கு இப்ப வரைக்கும் வருத்தபட்டுட்டு இருக்கேன். இதுக்கும் மேல என்னால என்ன செய்ய முடியும்?”

“இது எல்லாத்துக்கும் காரணம், உங்க அலட்சியத் தனமும் மத்தவங்க மனச மதிக்காம, உங்களுக்கு சரின்னு பட்டத மட்டுமே செய்ற தான்தோன்றித் தனமும்னு தெரியலையா மாமா?”

“வாய்க்கு வந்தத பேசி வைக்காதே சிவு?”

“உங்க ஆணவத்தை எல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டு, கொஞ்சம் உங்க மனசோட பேசி பாருங்க, அப்போ தான் மத்தவங்களோட மனவலி என்னான்னு தெரியும்.”

“இதென்ன புதுசா உளறிட்டு இருக்கே?”

“உளறல் கிடையாது, உங்களுக்கு வலிச்சதும் உடனே என்னை வந்து பார்த்து, வீம்பா பேசி கல்யாணமும் பண்ணியாச்சு… அதே மாதிரி தானே மத்தவங்களுக்கும், உங்க பேச்சு வலிக்க செய்யும். அதுக்கு சமாதனம் பேச வேணாம், மேற்கொண்டு அவங்கள மதிச்சு நடந்திருக்கலாம்…”

தலையில் தன் கையை வைத்து உச்சுக் கொட்டியவன்

“இதெல்லாம் எனக்கு சுட்டு போட்டாலும் வராது… வா… உங்கம்மாவ பாக்க போவோம்… அவங்கள தடுக்க வேண்டியது என் பொறுப்பு, எந்திரி சிவனி”

“வேண்டாம்… உங்கள மாதிரியே தான் அவங்களும், உங்க மேல உள்ள அவங்க கோபத்தை என் மேல இறக்கிட்டாங்க… நான் அவ்ளோ சொல்லியும் அவங்களுக்கு அவங்க வீம்பு பெருசா போயிடுச்சு… இனிமே நான் யாருக்காகவும் என்னை விட்டுக் கொடுக்க போறதில்ல… யாரையும் போய் பார்க்கப் போறதும் இல்ல”

“வேற என்னதான்டி செய்ய சொல்ற? வாய தொறந்தா அம்மா அம்மான்னு பைத்தியமாட்டம் புலம்பி தள்றே! என்னை போட்டு காய்ச்சு எடுக்குற… அப்படி என்னடி தப்பு செஞ்சேன்?”

மனம் ஆறவில்லை பாண்டியனுக்கு. தன் மனதில் வைத்த பாசமும், நேசமும் துளியளவு கூட இந்த பெண் வைக்கவில்லையே என்ற ஆற்றாமையில் அவளிடம் கத்தி விட்டான்.

இன்னும் சற்று நேரம் இவள் பேச்சை கேட்டால், தன் கோபத்தில் அசம்பாவிதம் ஏதும் நடந்து விடுமோ என அஞ்சியே வீட்டை விட்டு வெளியேறியவன், தன் ஒரே போக்கிடமான ஹோட்டலில் அன்றைய பொழுதைக் கழித்தான்.

இழுத்துப் பிடித்து வைத்த பொறுமைகள் கரை கடக்க, பொங்கி எழுந்த கோபத்தை எல்லாம் ஹோட்டலில் வேலை பார்ப்பவர்களிடம் முறைத்து வைத்தே தணித்துக் கொண்டான்.

இரவில் ரவியின் முறைக்கும் பார்வையில் எதேச்சையாய் நேரத்தை பார்க்க, அது நடுநிசியைத் தொட்டுக் கொண்டிருப்பதைக் காட்டியது. அந்த நேரம் மனைவியின் கோபமுகம் மறந்து போய், அவளது பசி மட்டுமே கருத்தில் நிற்க, உணவினை வாங்கிக் கொண்டு வீட்டை அடைந்தான்.

அங்கே அவனுக்கு முன்னாள் கோதை இல்லத்தில் இருந்து உணவுகள் வந்திருக்க அதை சீண்டவும் செய்யாமல், உணர்ச்சி துடைத்த முகத்துடன் உறங்கி போயிருந்தாள்.

‘இவளோட முடியல! சாப்பாடு தான் வந்திருக்கே… சாப்பிட்டு தூங்கமா இப்படி படுத்தி வைக்குறா?’ மனதோடு புலம்பியவன்

“சிவு! சாப்பிட்டு தூங்கலாம் எந்திரி” இவன் தொடுகையில், ஒரு முறை அழைப்பிலேயே விழித்தவள் ஏகத்துக்கும் முறைத்து வைத்தாள்.

“இப்படி தனியா விட்டுட்டு போறதுக்கு தான் கல்யாணம் பண்ணினீங்களா?”- சிவனியா

‘ஆரம்பிச்சுட்டா… இவ விட மாட்டா போல இந்த பேச்ச’ மனதிற்குள் நினைப்பதை வெளியே சொல்ல முடியவில்லை பாண்டியனால்.

“எதுவா இருந்தாலும் சாப்பிட்டு பேசு, வயித்தை காய போடாதே”

“அதென்ன பழக்கம் பேசிட்டு இருக்கும் போது வெளியே போறது? இந்த அக்கறை தனியா விட்டுட்டு போகும் போது எங்கே போச்சு?”

“சத்தியமா முடியலடி… ஒரு நாள்ல இவ்ளோ கேள்வி கேட்டு என்னை டார்ச்சர் பண்ற, எதுவும் மனசுல வச்சுக்காம கொஞ்சம் சகஜமா இருக்க பாரு சிவும்மா”

“அப்போ நான் கேள்வியே கேக்க கூடாதா?”

அவளது பேச்சில் தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான். இந்த ஒரு நாள் திருமண வாழ்க்கை அவனுக்கு தேற்ற முடியாத ஆயாசத்தை தந்து விட்டது. ‘இத்தனை கஷ்டங்கள் நிறைந்ததா மணவாழ்க்கை?’ என்ற நினைப்பும் அவன் மனதில் வராமல் இல்லை.

யாருக்கும் தலைவணங்காமல், தன் மனதிற்கு சரி என்று பட்டதை மட்டுமே செய்து வந்தவனுக்கு, தன் மனைவியான முதல் நாளிலேயே அவள் தொடுத்த கேள்விகளும், தன்னை பற்றி அலசி ஆராய்ந்து, தன் மீதான தவறுகளை சற்றும் தயங்காமல் சுட்டி காட்டியவளை பார்க்க ஒரு புறம் பெருமை ஏற்பட்டாலும், இவளை எப்படி சமாதானம் செய்வது என்ற மிகப் பெரிய கேள்வி வந்து, பதில் தெரியாமல் நின்றான்.

கோபத்தோடு பேசினால் கோபத்தை காட்டி விடலாம். ஆர்பாட்டம் செய்யாமல், அமைதியாய் வலிக்க வைத்து பேசுபவளிடம், என்னவென்று சொல்லி சமாதனப் படுத்துவது என்றே தெரியவில்லை அவனுக்கு.

அழுத்தத்துடன் பேசும் மனைவியிடம் மல்லுகட்ட அவனுக்கு சற்றும் விருப்பம் இல்லை.

அவள் சொல்வதைப்போல் தன் கோபத்தின் விளைவுகளை மறைக்கவும், தன் பெருமையை பறைசாற்றவும் மட்டுமே இந்த கல்யாணம் நடைபெற்றதா என்று ஒரு நொடி சிந்திக்க, பாண்டியனுக்கு மூச்சு முட்டி விட்டது.

அப்படியென்றால் தினமும் அவளை நினைத்து தன் மனம் ஏங்கியதெல்லாம் காதலால் வந்த மாற்றங்கள் இல்லையா? அவளை பார்த்தாலே வரும் பரவசமும், மன அமைதியும் வெறும் பிரமை தானோ? என்று ஏடாகூடமாக சிந்தனை தறி கேட்டு ஓட. அதை தடை செய்து மீண்டும் தன் வாதத்தை கொட்ட ஆரம்பித்தாள் சிவனியா.

“உங்கள பாக்கும் போதெல்லாம் எங்கம்மா என்னை விட்டு போனது தான் மனசுல வந்து நிக்க போகுது. இந்த லட்சணத்துல உங்க கூட தொடர்ந்து வாழ முடியுங்கிற நம்பிக்கை எனக்கு சுத்தமா போயிருச்சு.”

“அதுக்கு என்ன செய்ய போற? விவாகரத்து கேட்டு தனியா கூத்து காட்டப் போறியா?”

“அந்த பைத்தியக்காரத் தனம் நான் பண்ண மாட்டேன், கல்யாணம் எனக்கு எப்போவும் ஒரு வழிப் பாதை தான். தெரியாத்தனமா உள்ளே கால் எடுத்து வச்சுட்டேன், அதுல அடுத்த அடி எடுத்து வைக்க, நான் நிறையவே யோசிக்கணும், அது இப்போதைக்கு நடக்காது, ஒரே இடத்துல நின்னு வேடிக்கை மட்டுமே பாக்க போறேன், உங்களோட கோபத்துக்கும், அவசரத்துக்கும் இனிமே நான் வடிகாலா இருக்க விரும்பல”

“அதுக்கு என்னத்த தான் செஞ்சு தொலைக்க போறே” கோபங்கள் மட்டுமே பாண்டியனின் பேச்சில் தாண்டவமாடியது.

“தெரியல எனக்கே… ஆனா உங்க மூஞ்சிய பாக்க கூட பிடிக்கல எனக்கு, அவ்ளோ தான். நாளைக்கே நான் சென்னைக்கு கிளம்புறேன், அங்கேயாவது என்னை நிம்மதியா இருக்க விடுங்க”

“எத்தனை மணிக்கு போகணும்? சொல்லு கொண்டு போய் விடறேன்”

தான் போவதற்கு தடை போடுவான் என்று எதிர் பார்த்தவளுக்கு அவனது பதில் ஆச்சரியத்தை அளித்தாலும், அவன் பேச்சில் நம்பிக்கை வரவில்லை.

“நம்பலாமா உங்கள? இவ்ளோ சீக்கிரத்துல பெர்மிஷன் குடுத்திட்டீங்க”

“எப்படியும் நீ கொஞ்ச நாள் வேலை பாக்க போறேன்னு சொல்லிருக்க தானே? ஒரு வாரம் கழிச்சு போறத நாளைக்கே போகப் போற… அவ்ளோ தான் வித்தியாசம். காலையில வைகைக்கு(train) தானே போவ? நானும் கூட வர்றேன்,”

விழி விரித்து, விளங்காத பார்வை பார்த்து வைத்தாள் சிவனி. ‘இப்போ எலி எதுக்கு இவ்ளோ பம்மிகிட்டு பேசுது தெரியலயே? உன்னை நம்ப முடியாது மாமா! சென்னைக்கு போய் சேர்ற வரைக்கும் எனக்கு சந்தேகம் தீராது. நாளைக்கு என்ன மாதிரி ஏழரைய இழுத்து வைப்பியோன்னு பயம் தான் வந்து தொலையுது. புருஷன் கூட வர்றான்னு சந்தோஷப் பட முடியுதா? என்ன வாழ்க்கைடா சாமி?’ என்ற மனப்புலம்பலில் தான் அன்றைய இரவைக் கடத்தினாள்.

மறுநாள் அதிகாலை ஐந்து மணிக்கே கோதைநாயகி அங்கே வரவும், சிவனியாவிற்கு தன் பயணத்தின் மீதான சந்தேகம் வலுவடைந்து விட்டது. வந்தவர் முதலில் அவளை ஆதியோடு அந்தமாய் ஒரு பார்வை அலசிவிட்டு, நிம்மதி பெருமூச்சு விட்டவாறே தான் பேச ஆரம்பித்தார்.

“இவ்ளோ காலையிலேயே வர சொல்லி எதுக்கு போஃன் போட்ட வருணா? இந்த சின்ன பொண்ணுகிட்ட உன்னோட முரட்டு தனத்த காமிச்சு, அவளுக்கு முடியாமா போச்சோன்னு நானும் அவதி அவதியா வந்தேன். நல்லவேளை அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல, என் மருமக நல்லா இருக்கா… என்ன விசயமாடா கூப்பிட்ட?” மூச்சுவிடாமல் கேட்டு வைக்க

“ரொம்ப சந்தோசம்மா! என்னை பத்தி ரொம்ப நல்லாவே கணிச்சு வச்சுருக்கே! நான் உன் புள்ள! அத கொஞ்சம் மனசுல வச்சுக்கோ! அவ சென்னைக்கு போக போறாளாம், அத சொல்லத்தான் கூப்பிட்டேன். அங்கே வேலைக்கு ஆள் வந்திருப்பாங்க, எல்லாத்தையும் விளக்க முடியாது, அவகிட்ட விவரத்தை கேட்டுக்கோ” என தன் கடமையாய் முன்தினம் நடந்தவைகளை சொல்லி முடிக்க, அதுவரை அமைதியாய் இருந்தவளும், அதற்கு இடையிடையே அவனோடு பதில் பேசியபடியே ஒருவாறு தன் முடிவினை கோதையம்மாளிடம் ஒப்புவித்தாள்.

“நீ சரியில்லடா வருணா… உன்னோட அவசர புத்திக்கு இன்னும் யாரோட நிம்மதி எல்லாம் பலியாகப் போகுதோ தெரியல? உன்னோட அன்பு அவளை அடிமைபடுத்தக் கூடாது, அரவணைக்கணும்டா, அராஜகம் செஞ்சு தான் உன் பிரியத்தை காமிக்கணும்ன்னு இல்ல, அமைதியா காமிச்சாலும் அன்பு அன்பு தாண்டா! பிரியம் வைக்க தெரிஞ்ச உனக்கு, அத திருப்பி வாங்கி அனுபவிக்க தெரியல! இனிமே தான் வாழ ஆரம்பிக்க போற பொண்ணுகிட்ட எத, எப்படி பேசணும்னு கமலத்துக்கும் தெரியாம போயிடுச்சு… உங்க ரெண்டு பேருக்கும் நேந்து விட்ட பலியாடு கணக்கா என் மருமக தெரியுறாளா?”

“நான் ஆசைப்பட்டு இவள கட்டிகிட்டது தப்புன்னு சொல்றியா?”

“நடந்து முடிஞ்சத பத்தி பேசாதே… அவளே அத ஏத்துக்கிட்டு வாழ்றதுக்கு தயாரா தானே இருக்கா! கொஞ்சநாள் அவ போக்குல விடு… வண்டிக்கு ஏத்தி விட்டுட்டு வா! இதுக்கு மேல சொல்ல ஒண்ணும் இல்ல”

“நான் அவளை படிக்க வைக்க நினைக்கிறேன், இப்போ வேலைக்கு போகட்டும், நான் எல்லாத்தையும் ரெடி பண்ணி கூப்பிடறப்போ வர சொல்லுங்க”

‘இதோ ஆரம்பிச்சுட்டான்… உன்னை எதுல சேர்க்கிறதுனு தெரியலேயே’ மனதோடு சிவனி சலித்துக் கொண்டாள்.

“எதுக்கு இந்த திடீர் முடிவு வருணா?”

“இவள வேலைக்கு போக வச்சு, நாங்க வேடிக்கை பார்த்தோம்னு இவங்கம்மா திரும்பவும் வந்து குத்தம் சொல்லகூடாது, என்மேல நம்பிக்கை இல்லாம பேசியிருக்காங்க… அத நான் இல்லாம ஆக்கனும்னா இவ வேலைக்கு போக கூடாது”

“ரெண்டு பேர் வீம்புக்கும் நான்தான் கிடைச்சேனா? வீட்டோட இருக்க சொல்றீங்களா? என்னால முடியாது. அதுவும் உங்ககூட இப்போதைக்கு மாட்டேன்” அவசர அலறலில் சிவனியா கூற

“அதுக்கு தான் படிக்க போக சொல்றேன். ரெண்டு வருஷம் ஹாஸ்டல் போய் படி… அதுக்குள்ள எல்லாம் சரியாகிடும் ஓரளவுக்கு, என்ன சொல்ற சிவனி?”

“இப்போவும் என்னோட விருப்பத்தை கேக்க மாட்டீங்களா? உங்க இஷ்டத்துக்கு தான் செய்வீங்களா? அத்தம்மா! இவங்கள நாலு அடி அடிச்சு சாத்துங்க… அடங்கவே மாட்டேன்றாங்க”

“அதுக்கு தான் உன் கையில பிடிச்சு குடுத்திருக்கு ராசாத்தி! என்னை எதுக்கு கூட்டு சேக்குற! அவனாச்சு… நீயாச்சு… இதுல நான் இடையில வர மாட்டேன்”- கோதை

“இவர் சொல்றத கேக்க சொல்றீங்களா? அப்படி என்ன வீராப்பு எங்கம்மா கிட்ட இவருக்கு? பெரியவங்கன்னு சொல்ல தெரியுது, ஆனா மனச விட்டு பேச தெரியல” – சிவனி

“அதெல்லாம் அப்டிதான் சிவாமா! கொஞ்ச நாள் போனா சரியாகிடும்”- கோதை

“எப்படியும் அந்த ரெண்டு வருச படிப்ப முடிச்சாலும் வேலைக்கு தானே போகப்போறேன், இப்போ வேலைய விட்டா பணம் கட்டனும், அன்னைக்கே சொன்னேனே!”

“கம்ப்யூட்டர் தட்டி வெளிநாட்டுக் காரனுக்கு சம்பாதிச்சு குடுக்குறத, உள்ளூர்காரனுக்கு குடுக்க மாட்டியா? அதுக்கு தான் படிக்க சொல்றேன். உன் வேலைக்கு நான் பொறுப்பு, அந்த வேலைய விட பணம் கட்ட வேண்டியதும் என்னோட பொறுப்பு நான் சொல்றத செய், அது போதும்.”

அவனை அடித்து துவைத்து விடும் ஆவேசம் நிஜமாகவே வந்து விட, அங்கிருந்த சோபாவின் திண்டினை எடுத்து அவன் மீது எறிந்தாள்.

“பார்த்தியாம்மா! கொஞ்சமும் மாமியார் இருக்காங்கன்னு மாரியாதை குடுக்காம, உன் முன்னாடியே என்னை போட்டு அடிக்க வர்றா!”

“உங்க சண்டையில என்னை இழுக்கத் தான் கூப்பிடியடா?” – கோதை

“நீ சொன்னா கொஞ்சம் கேட்டுப்பா! நான் சொன்ன ஒத்த காதுல கூட வாங்காம என்னை முறைச்சிட்டு நிப்பா!”

கோதைநாயகிக்கும், சிவனியாவிற்க்கும் என தனிப்பட்ட பிடித்தங்கள் உண்டு. தாயும், மகளும் தங்கள் வீட்டிறக்கு வந்த பிறகு தான், மகன் பொறுப்பானவனாய் மாறி, தொழிலில் ஈடுபட்டான் எனவும், இருவரும் வந்து சேர்ந்த ராசி தான் இன்று வரை அவன் தொழிலில் சோடை போகாமல் வெற்றியடைகிறான் என்ற தளராத நம்பிக்கையும் அவர்களிடத்தில் நிரம்ப உண்டு.

அது போல தாயின் கண்டிப்புகளை மட்டுமே கண்டு கொண்டிருந்த கால கட்டத்தில், தன்னை அன்பினால் அரவணைத்த ஜீவனுக்கு, பதிலாய் தன் அன்பையே திருப்பி அளித்து, கோதையை மீண்டும் நடமாட வைத்ததில் சிவனியின் பங்கு நிரம்பவே உண்டு.

கமலத்தின் அதட்டல் பேச்சுக்களை விட, கோதையின் அன்பான பேச்சுக்களுக்கு பெரும் மதிப்பு கொடுத்து யோசிக்காமல் தலையாட்டி வைப்பாள் சிவனியா. இந்த ஒரு காரணத்திற்காகவே பாண்டியன் தன் முடிவினை தாயை முன்னிறுத்தி அவளிடம் வற்புறுத்திக் கொண்டிருந்தான்.

“பணம் கொடுத்து வெளியே வந்து படிக்கிற அளவுக்கு எந்த அவசியமும் இல்ல? நான் சம்பாதிக்கிறதை எல்லாம் அம்மாக்கு தான் குடுக்க போறேன். அதுக்காகவே நான் இப்போ வேலைக்கு போகணும் என்னை தடுக்காதீங்க!” – சிவனி

“அதெல்லாம் நான் பார்த்துக்குறேன்… நீ படிக்க போ சிவு!”

“இந்த ரெண்டு வருஷம் முடியட்டும் படிக்கிறேன் அத்தம்மா! சொல்லுங்க அவர்கிட்ட”

“வேலை பாக்க ரெண்டு வருஷம், படிக்க ரெண்டு வருஷம் அப்புறம் எப்போ தான் நம்ம லைஃப் ஸ்டார்ட் பண்றது? இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்” இப்போது அலறுவது இவனது முறையானது.

“அப்போ என்னை படிக்க சொல்லாதீங்க மாமா!”

“அதிகமா சம்பாதிக்க தான் உனக்கு படிக்க சொல்றது…  உன்னோட சம்பாத்தியத்தை எல்லாம் உன் அம்மாவுக்கே குடுக்கலாம். நீயாவது என்னை நம்பு சிவனி. நீ படிக்க போ! வீம்புக்கு சொல்லல… உன் மேல இருக்குற அக்கறையில சொல்றேன், இந்த ஒரு பேச்சை நீ கேட்டா, உன்னோட எல்லா பேச்சையும் நான் கேக்குறேன் போதுமா?”– தானாய் வாக்குறுதிகளை அள்ளி வீசினான் பாண்டியன்

“இந்த முரட்டு பய இனி விட மாட்டான்மா! உனக்கு நல்லது தானே சொல்றான். ரெண்டு வருஷம் சீக்கிரமாவே ஓடி போய்ரும். அவனையும் நம்பும்மா!” கோதையும் கூற

“அத்தம்மா! அவர் மேல நம்பிக்கை இல்லன்னு நான் எப்பவும் சொல்ல மாட்டேன். இவரோட வீம்புக்கு மட்டுமே, எல்லா காரியத்தையும் நடத்திகிட்டு, மத்தவங்க மனச இவர் புரிஞ்சுக்க முயற்சி செய்றதே இல்ல! அது தான் இங்கே பிரச்சனையே! வேற என்ன சொல்ல?”

“இவ சொல்றதும் சரி தானே வருணா? உன்னோட முடிவ இவகிட்ட திணிக்கிறதுல இதுவே கடைசியா இருக்கட்டும். கொஞ்சம் பொண்டாட்டிய மதிக்க கத்துக்கோ! நான் கிளம்புறேன்” என அவர் போய்விட

“அவ்ளோ கஷ்டமா இருக்கா பாப்பா? நான் உனக்கு நல்லது செய்யவே மாட்டேன்னு நினைச்சுட்டியா?” ஆயாசத்துடன் பேசிட

“அப்டியெல்லாம் இல்ல மாமா… உங்கள நம்பாம நான் வேற யாரை நம்புறது? ஆனா எதுவுமே எனக்கு பிடிக்கல”

“சந்தோஷம்டா! எனக்கு இந்த வார்த்தையே போதும். போக போக என்னை பிடிக்க வைக்க முயற்சி பண்றேன், நீயும் என்னை உன் மனசுல ஓட்ட வைச்சுக்க முயற்சி பண்ணுடா!” என பாவமாய் கேட்ட

“அது தான் மாமா பிரச்சனையே! எனக்கு பிடிச்சத செஞ்சாதானே உங்கள எனக்கு பிடிக்கிறதுக்கு. அதுக்கு தான் வழியே இல்லையே? நோ சான்ஸ்! சாரி மாமா!”

“நடந்து முடிந்த எதையும் மாத்த முடியாது சிவு! நாம வாழப்போற இந்த வாழ்க்கை நிஜம், அதை அர்த்தமுள்ளதா மாத்த என்னால முடியும். நமக்குள்ள நடந்த பிரச்சனைகள நாம மறந்து சந்தோசமா வாழப்போறோம் அது நிச்சயமா நடக்கும்” என சொன்னவனை இன்னதென்று பிரித்தறியா ஓரு உணர்வில் பார்த்து வைத்தாள்.

“உனக்கு என் மேல பிடித்தம் இல்லங்கிறத மறந்திரு, நானும் உன்மேல லவ் இருக்குங்கிறத வெளியே காமிக்கல…  நாம ரெண்டு பேரும் புருஷன் – பொண்டாட்டி அத மட்டுமே ஞாபகத்துல வச்சுப்போம் சரியா?” என சொல்லும் போதே அவளை நெருங்கி இருந்தவன், உச்சியில் முத்தம் பதித்து அணைத்துக் கொள்ள, அவளுமே ஒட்டிக் கொண்டாள்.

அந்த நேரத்தில் தன்னை சார்ந்தவர்களின் அன்பான அரவணைப்பு அவளுக்கு வேண்டி இருந்ததோ இல்லை அவன் மீதான பிடித்தம் அவளை ஒட்டிக் கொள்ளச் சொன்னதோ அதையெல்லாம் யோசிக்கும் மனநிலையில் இல்லை. அணைப்பின் நொடிகள் நிமிடங்களாய் மாற, அணைப்பின் வேகமும் தடம் மாறி, அவளது எலும்பினை நொறுக்கும் அளவுக்கு பாண்டியன் இறுக்கிக் கொள்ள, தனக்கு ஏற்படும் வலியையும் மறந்து, இவளும் அவனோடு ஒன்றிக் கொள்ள, தாபத்தோடு தனது தேவைகளை பெற விரும்பியே அவன் முன்னேறப் போகும் சமயத்தில் சரியாய் அலைபேசி அழைத்து, அவர்களை நடப்பினை உணர வைத்தது.

பாண்டியன் தடுமாறியே விலகிச்செல்ல, சிவனிக்கும் அவனை ஏறெடுத்து பார்க்க முடியா வண்ணம் கூச்சம் வந்து தடை போட, அதனை மறைத்த வண்ணமே உள்ளறைக்கு சென்றவளை பார்த்து, மனதிற்குள் சந்தோசக் கூக்குரலிட்டவன், தங்களின் மௌனமான நேசங்கள் புரிபடும் நாள் தூரத்தில் இல்லை என்ற நம்பிக்கையில் அடுத்த கட்ட வேலைகளை ஆரம்பித்தான்.

அடுத்து வந்த ஒரு வாரத்தில் எல்லாவற்றையும் சரி செய்து அவளைக் கல்லூரியிலும், விடுதியிலும் பொறுப்பாய் சேர்க்கும் பொழுது தான், சற்றே அடங்கி இருந்த சிவனியின் கோபம் கரை காணாமல் கொந்தளித்துக் கொண்டிருந்தது. அதற்கு காரணம் அவன் அவளுக்காகவென தேர்ந்தெடுத்த படிப்பு தான்.

“உங்கமேல நம்பிக்கை வைக்க கூடாதுன்னு திரும்பவும் ஒரு தடவை நிரூபிக்கிறீங்க! கம்ப்யூட்டர் எடுத்து படிச்சவளுக்கு இப்போ சமையல பத்தி படிக்க சொன்னா எப்டி மாமா?”

“எல்லாம் முடியும்… ஒண்ணும் கௌரவ குறைச்சல் இல்லை இந்த படிப்பு”

“குறைவுன்னு யார் சொன்னா? எனக்கு இண்ட்ரெஸ்ட் இல்லன்னு சொல்றேன்”

“படிக்கிற பிள்ளைக்கு புக்க பார்த்தாலே படிப்பு தானா வரும். உனக்கு வராதா என்ன? புக்க கரைச்சு காபிக்கு பதிலா குடிக்கிறவ தானே நீ?”

“இப்போ இருக்குற நிலைமையில அவ்ளோ கான்சென்ட்ரேசன் பண்ணுவேனான்னு எனக்கே டவுட்டா இருக்கு… எப்போ தான் என் மனச புரிஞ்சுப்பீங்களோ தெரியல” என விரக்தியாய் பேசிட,

“நீ ஒண்ணும் அவ்ளோ மோசமான ஸ்டூடண்ட் கிடையாது எனக்கு நம்பிக்கை இருக்கு. நீ படிச்சிருவே பாப்பா…”

“வெளியே வந்து இப்டி கூப்பிட்டு வைக்காதீங்க மாமா! எத்தன தடவ தான் சொல்றதோ தெரியல? சரியான மக்கு மாமா!”

“அததான் நானும் சொல்றேன்! நான் மக்கு தான், நீயாவது தெளிவா இருக்க படிக்க சொல்றேன். நாளைக்கு நம்ம பிள்ளைகளுக்கு கொஞ்சமாவது அறிவு வர வேணாமா? அது உன் மூலமா நடக்கட்டுமே!”

“உங்க மண்டை உடையரதுக்குள்ள இங்கே இருந்து ஓடிருங்க… என்கிட்ட பேசாதீங்க! பாக்கவும் வராதீங்க! படிப்பு முடியுற வரை என் பேச்சு கேப்பேன்னும் சொல்லியிருக்கீங்க! இப்போ இருந்தே ஸ்டார்ட் பண்றேன், நான் சொன்னத மீறி செஞ்சா பொட்டிய கட்டிட்டு கண்காணாத இடத்துக்கு போய்ருவேன்.” அவனை முடிந்த வரை கரித்துக் கொட்டி விட்டு, தன் படிப்பை கண்ணும் கருத்துமாய் படிக்க முயன்றாள்.

இதை அத்தனையும் நினைத்துப் பார்த்த சிவனியாவிற்க்கு, தன் பாடபுத்தகத்தை எடுத்து பார்க்க, தானாய் சிரிப்பு மலர்ந்து, MBA- ஹோட்டல் மானேஜ்மென்ட், பைனான்சிங் & கேட்டரிங் சர்வீஸ் என முதுநிலை பட்டய படிப்பும் அவளை பார்த்து புன்னகைப்பதாய் நினைத்தவள்

“இப்படி அதட்டி மிரட்டி படிக்க வைக்க உங்களால மட்டுமே தான் முடியும் மாமா! இன்னும் என்னென்ன ஆப்பு எனக்கு வச்சுருக்கீங்களோ தெரியல” சந்தோஷச் சலிப்புகள் மனமெங்கும் கூத்தாட, தன் வேலையினை தொடர்ந்தாள்.

மௌனக் குமிழிகளாய் இருக்கும் ஆழ் மனதின் நேசங்கள், இனி தடையில்லாமல் ஆர்ப்பரிக்க காலம் கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருவரின் மனமும் ஒரே பாதையில் பயணிக்குமா?

————————–

error: Content is protected !!