Jte-13

Jte-13

மலைப்பிரதேசம், மத்தியான பகுதியில் இருந்து மாலைப் பகுதியை நோக்கி நடந்து கொண்டிருந்தது.

தன் அன்பை பகிர்ந்து கொண்டதால் அகமகிழ்ந்து போய், பவானி வீடு வந்து சேர்ந்தாள். 

வீட்டில் நுழைந்தவளுக்கு முதல் அதிர்ச்சியாய், தந்தையுடன்  மதன் வரவேற்பறையில் அமர்ந்திருந்தது. 

அதைக் கண்டவள், ‘ஓ! மதன் வந்திருப்பதாலே, அப்பா தன்னைத் தேடி வரவில்லை’ என்று எண்ணிக் கொண்டாள்.

“வா பவானி” என்றார், நாதன்.

அப்பாவுக்கு மட்டுமாக ஒரு சிறு புன்னைகையைத் தந்தாள். பல மாதங்கள் கழித்து, மகளின் புன்னகையைப் பார்த்த நாதனுக்கு வியப்பாக இருந்தாலும், சந்தோஷத்தில் அவரும் பதிலுக்குப் புன்னகை தந்தார்.

“என்னம்மா, மழை பெய்துன்னு தெரிஞ்சா உடனே வர வேண்டாமா? இப்படியா நனையிறது?? போ, உள்ளே போய் துடைச்சிக்கோ”  – நாதனின் குரலில் வழக்கம் போல் பவானிக்கான அக்கறை இருந்தது.

மதன் எப்பொழுதும்போல் பவானியைப் பற்றிய அக்கறை இல்லாமல் இருந்தான்.

“ம்ம்ம், சரிப்பா” என்று அறையை நோக்கி, ஒரு எட்டு எடுத்து வைக்கும் பொழுது…

“சீக்கிரம் வா, உன்கிட்ட பேசணும்” – இது மதனின் வசனம்.

பவானி, மதனின் குரல் கேட்டு, ஒரு நொடி நின்றாள். பின் திரும்பவும் அறை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

அறைக்குள், பவானி நுழையும் பொழுது, பாலாவும் பல்லவியும் அறையிலிருந்து வெளியே வந்தனர்.

இருவரின் முகத்திலும் அவளுக்கான கோபங்கள் கொட்டிக் கிடந்தன. 

‘இவர்கள், ஏன் இவ்வளவு சீக்கிரமாக வீடு திரும்பியிருக்கிறார்கள்? மதன் ஏன் வந்திருக்கான்??’ என்று எண்ணியபடியே, வேறு புடவை மாற்றிக் கொண்டு வெளியே வந்தாள்.

பவானி அறையை விட்டு வெளியே வந்த அடுத்த நொடியே, மதன் கீழே உள்ள வசனத்தைப் பேசினான்.

“பாலா, இதோ உன் தங்கச்சியே வந்துட்டா!! அவகிட்டக் கேளு நான் சொல்றது உண்மையா?? இல்லையான்னு??” – மதன்.

‘தன்னிடம் என்ன கேட்க வேண்டும்?’ என்று பவானி கேள்வியாகப் பார்த்தாள். 

“பவானி, இவர்கிட்ட டிவோர்ஸ் விஷயமா முடிவு எடுக்கிறேன்னு சொன்னியா??” – பாலா.

அன்று வீட்டில், தன்னருகில் ஜீவன் இருக்கும் பொழுது சொன்னது நியாபகம் வந்தது. இன்று ஜீவன் தனக்காக இருக்கின்றான் என்ற நம்பிக்கையில்,”ஆமா சொன்னேன்” என்று சற்றுத் துணிந்து பவானி சொன்னாள்.

“போதுமா பாலா?? என்னமோ நான் பொய் சொல்றேன்னு சொன்ன. இப்போ தெரியுதா?” – மதன்.

“மதன், அவளுக்கு முடிவெடுக்கத் தெரியலை. நீங்க இதெல்லாம் சீரியஸா எடுக்காதீங்க” – பாலா.

“அது, அவ எடுத்த முடிவில்லை பாலா. அவகூட அன்னைக்கு ஒருத்தன் இருந்தான். அவன் எடுத்த முடிவா இருக்கலாம்” 

“யாருப்பா?  அன்னைக்கு சொன்னீங்களே, அந்தப் பையனா??” என்று பாலா தந்தையிடம் கேட்டான்.

“ம்ம்ம், ஜீவன் சார்தான்” – நாதன்.

“அன்னைக்கு அவன்தான பவானி கூட ஹாஸ்பிட்டல்ல இருந்தது??” என்று மதன் நாதனிடம் கேட்டான்.

“ம்ம்ம், அவர்தான்” – நாதன்.

“போதுமா பாலா?? அவங்க ரெண்டு பெரும் தெளிவா இருக்காங்க. நீதான் இன்னும் குழம்பிற.”

பாலாவிற்கு, பவானி வாழ்க்கை பற்றிய தன் முடிவில் பெருத்த பின்னடைவு போன்ற உணர்வு வந்தது. 

மதன் “பவானி” என்று கூப்பிட்டுக் கொண்டே, அவள் அருகில் சென்றான்.

பவானி, மதனை நிமிர்ந்து பார்த்தாள். 

“சொல்லு. முடிவெடுக்க இன்னும் எத்தனை நாள் வேணும்” – மதன்.

‘என்ன பதில் சொல்ல??’ என்று தயங்கியவள்… ஜீவன் சொன்ன ‘ரெண்டு நாள் டைம் கொடு’ என்ற வாக்கியம் நியாபகம் வந்தது. எனவே கீழ்கண்ட பதிலைச் சொன்னாள்.

“ரெண்டு நாள்” – பவானி.

கேட்டுக் கொண்டிருந்த நாதனுக்கும், பாலாவுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. 

“சரி பவானி, நான் ரெண்டு நாள் கழிச்சிப் பேப்பர்ஸ் எடுத்துட்டு வரேன். சைன் போட்டுக் கொடுக்கணும். சரியா?”  – மதன்.

‘சரி’ என்பது போல தலையை ஆட்டினாள். 

“மதன், நீங்க நினைக்கிற மாதிரி இல்லை. அதோட, அந்தப் பையனும் நல்லவன் இல்லை.” – பாலா. 

“அது உன்னோட ப்ராப்ளம் பாலா.  எனக்கு வேண்டியது டிவோர்ஸ். அதைக் கொடுத்திட்டா, அவளைப் பத்தி எனக்கு எந்தக் கவலையும் இல்லை. உண்மையைச் சொன்னா, இப்பவும் அவளைப் பத்தி அக்கறையே கிடையாது . அதைப் புரிஞ்சிக்கோ” என்று சொல்லிவிட்டு, மதன் வெளியேறினான்.

இவள் எந்த தைரியத்தில் முடிவெடுக்கிறாள்?? என்று பாலா யோசிப்பதாலும்… யார் சொல்லி முடிவெடுத்திருக்கிறாள்? என்று நாதனுக்குத் தெரியும் என்பதாலும் கேள்விகள் இல்லாத தருணங்கள் – இவை. 

யாரும் எதுவும் கேட்காததால், மீண்டும் அறைக்குள் செல்ல முனைந்தவளை, “நில்லு பவானி” என்ற பாலாவின் குரல் தடுத்தது. 

பவானி நின்று திரும்பினாள்.

“எங்க போயிட்டு வர?” என்று கேட்டு, பாலா, பவானி முன்பு வந்து நின்றான்.

‘ஏன், இந்தக் கேள்வி ?? என்று  பவானிக்குப் புரியவில்லை. அதை விட, பாலாவின் முகத்தில் தெரிந்தக்  கோபம் அவளை அச்சம் கொள்ளச் செய்தது.

“பவானி, உன்னையத்தான் கேட்கிறேன் சொல்லு??” – பாலா. 

திரும்பவும் பவானி அமைதியாக நின்றாள்.

“ஏய்! இப்போ பதில் சொல்றியா? இல்லையா??” என்று பாலா கத்தினான். 

அவன் கத்தியதைக் கேட்ட பவானி, “அப்பா” என்று அழைத்த,  நாதன் நிற்கும் பக்கம் செல்ல முனைந்தாள். 

ஆனால் பாலா, அவளைக் கைப் பிடித்து நிறுத்தினான்.

“உங்க அப்பாலெல்லாம் வர மாட்டாங்க. என்கிட்ட சொல்லு” என்று மீண்டும் கத்தினான்.

பவானி அமைதியாக நின்றாள்.

“பவானி, இப்ப சொல்லப் போறியா?? இல்லை, அடி வாங்கப் போறியா??”

“பாலா, என்ன பேச்சு இது?? ஒழுங்கா பேசு” – நாதன். 

“ஆங்! நீங்க என்னயவே சொல்லுங்க. ஒழுங்கா கேட்டா சொல்றாளாப்பா?? அதான்…”

“பாலா நான் சொல்றேன்டா..” என்று பதில் சொல்ல வந்த நாதனை… 

“வேண்டாம்ப்பா. அவ சொல்லட்டும்” என்றான் பாலா.

இன்னும் வாய் திறக்காமல், பவானி தன் தந்தையைப் பார்த்துக் கொண்டே நின்றாள். அவரும் ‘சொல்லிரும்மா’ என்கின்ற அர்த்தங்கள் கொண்ட பார்வையால் மகளைப் பார்த்தார்.

“எங்க போயிட்டு வர?? சொல்லப் போறியா??இல்லையா?? ” – பாலா.

ஜீவன் சொன்ன ‘உங்க வீட்ல தெரிஞ்சா.. பிரச்சனை’ வார்த்தை நியாபகத்தில் இருந்ததால், பவானி சொல்ல மறுத்து நின்றாள்.

“பல்லவி இங்க வா” – பாலா.

“என்ன பாலாண்ணா??” – பல்லவி.

“உள்ளே வச்சி என்கிட்டே ஒண்ணு சொன்னேல. அதை இப்போ சொல்லு”

“என்ன பாலா? அவ எதுக்குச் சொல்லணும்?” – நாதன்.

“இருகங்கப்பா… நீ பார்த்ததை சொல்லு பல்லவி” என்று பல்லவியைப் பேசச் சொன்னான்.

“என்ன பல்லவி பார்த்த??” – நாதனின் குரலில் பதற்றம் இருந்தது.

“அப்பா பவானி… அங்கே … மரத்துப் பக்கத்துல… அந்த.. ஒருத்தங்க தோள்ல…” என்று பல்லவி தடுமாறி நிறுத்திவிட்டாள்.

பல்லவிக்கு வீட்டில் என்ன நடக்கிறது என்று புரிந்தும் புரியாமலும், கலக்கத்தில் இருந்தாள். 

பல்லவியை பார்த்த பாலா, அவளை ஆறுதல் படுத்த கீழுள்ள வாக்கியம் பேசினான்.

“போதும் பல்லவி. நீ போய் அண்ணி வீட்ல இரு. கொஞ்ச நேரத்தில வரேன்.  நம்ம எங்கயாவது குட்டிப்பையனோடு வெளில போலாம். சரியா??” 

“சரி பாலாண்ணா” என்று கொஞ்சம் கலக்கம் நீங்கி, வெளியே சென்றாள்.

பல்லவி சென்றவுடன்…

“புரியுதா உங்களுக்கு?? அவன் தோள்ல சாஞ்சிக்கிட்டு நிக்கிற அளவுக்குப் போயாச்சி” என்று நாதனைப் பார்த்துக் கேள்வியாய், இளக்காரமாய் கேட்டான்.

தன்னால் தந்தை தலைகுனிந்து நிற்கிறார் என்று பவானி மனம் வருந்தி நின்றாள். 

“பல்லவி சொல்லத் தயங்கிய விஷயத்தை, நீ செஞ்சிட்டு வந்து நிக்கிற!! அசிங்கமா இல்லையா?” – பாலா. 

நாதன், “ஏன் பவானிம்மா?” என்று ஆரம்பிக்கப் போனவரை…

“ஆங்!! நீங்க இப்படியே கேளுங்க… சொல்லிடுவா” – பாலா. 

நாதனின் முகம் இருண்டு போனது. 

“மதன் வந்ததினால, உங்களை வீட்ல இருக்கச் சொல்லிட்டு, பல்லவியைக் கூப்பிடப் போகச் சொன்னதால… எனக்கு விஷயம் தெரிஞ்சது. இல்லைன்னா, சொல்லியிருக்க மாட்டீங்கள?? ” என்று கேள்வியாக நிறுத்தினான்.

நடந்தது என்னவென்றால்… மதன், பாலாவைச் சந்தித்து விவகாரத்துப் பற்றிப் பேசியிருக்கின்றான். அப்படி பேசுகையில், பவானி அன்று சொன்ன, ‘கொஞ்ச நாள்ல முடிவு எடுக்கிறேன்’ என்று சொன்னதையும் சொல்லியிருக்கிறான். 

பவானி அப்படிச் சொல்லியிருக்க மாட்டாள் என்று பாலா நினைத்தான். அப்படியே சொல்லியிருந்தாலும் தந்தை தன்னிடம் சொல்லியிருப்பார் என்று நம்பினான்.  ஆதலால், வீட்டில் வைத்து பவானி முன்னிலையில் கேட்டால், உண்மை தெரியும் என்று பாலா நினைத்தான். எனவே மதனை வற்புறுத்தி வீட்டிற்கு அழைத்தும் வந்தான்.

பவானி வீட்டில் இல்லை என்று தெரிந்தது. மதன் வந்திருப்பதால், தன் தந்தை வீட்டில் இருக்க வேண்டும் என்று நினைத்தான். ஆதலால் பவானியை அழைத்து வர, அன்று பல்லவியை அனுப்பினான். அன்று பல்லவிக்குப் பள்ளி அரை நாள் மட்டுமே!! 

பல்லவி, பவானி வழக்கமாக அமரும் இடமான இருக்கைக்கு வந்தாள். ஆனால் அங்கு இல்லாததால், அருகில் விளையாடிக் கொண்டிருந்தச் சிறுவர்களிடம் கேட்டாள். 

அவர்கள், ஜீவனும் பவானியும் மேட்டின் மேலே ஏறிச் சென்றார்கள் என்று ஒரு திசையைக் காட்டினார்கள். பல்லவி, அந்தச் சிறுவர்கள் சொன்ன வழியே சென்றதால், ஜீவனையும் பாவனியையும் காண நேர்ந்தது. 

என்ன செய்யவென்று தெரியாமல், வீட்டிற்கு ஓடி வந்தவள், தன் அண்ணனைத் தனியே அழைத்து, அனைத்தையும் சொல்லியிருந்தாள்.

இனி நிகழ் கணம்…

பவானிக்கு, பாலா கேட்டதோ.. பல்லவி சொன்னதோ… பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது போல் தெரியவில்லை. 

அவளின் மனதிற்குள் ஓடியது ‘என்ன பிரச்சனை என்றாலும் ஜீவன் இருக்காங்க!!’ என்பது மட்டும்தான்.

“பவானி” – நாதன்.

“அப்பா, உங்களுக்குத் தெரியுமல்ல… நான் எங்க போனேன்னு?? ” – பவானி. 

“தெரியும் பவானி”

“தெரியுமா? உங்ககிட்ட சொல்லிட்டுதான் போனாளா?” – பாலா.

“கத்தாத பாலா. மெதுவா பேசு”

“உங்களுக்குத் தெரியுமா? தெரியாதா?” என்று, பாலா வார்த்தைகளை அழுத்தி உச்சரித்தான்.

“தெரியும். ஜீவன் சார் பத்தி ஒரு முடிவு எடுக்கட்டும்னு நான்தான் அனுப்பினேன்” – நாதன்.

“அவனைப் பத்தி, இவ ஏன்ப்பா முடிவு எடுக்கணும்” என்று திரும்பவும் பாலா கத்த ஆரம்பித்தான்.

“அவரைப் பத்தித் தெரிஞ்சா, பவானியே விலகிருவான்னு நினைச்சேன்.”

நாதனின் பதிலைக் கேட்ட பவானிக்கு, தன் தந்தை ‘ஜீவன் வேண்டாம்’ என்று  இவ்வளவு உறுதியாக இருக்கிறாரா? என்ற எண்ணம் வந்து, மனதை உலுக்கியது. அப்படியே தரையில் உட்கார்ந்து விட்டாள். 

“அப்போ, அன்னைக்கு நான் கேட்டது கரெக்ட்தான். உங்களுக்கு எல்லாம் தெரிஞ்சும், கண்டுக்காம இருக்கீங்க.” – பாலா. 

“அப்படி இல்லடா!! நாம பவானிய கட்டாயப் படுத்த வேண்டாம்ன்னு நினைச்சேன்” – நாதன். 

“உங்ககிட்ட பேசிப் பிரயோஜனம் இல்லைப்பா” என்று பாலா சொல்லிக் கொண்டே, பவானியின் முன்னே அமர்ந்தான்.

“சொல்லு… அவனைப் பத்தி உனக்குத் தெரியுமா? 

“…” 

“அவன் ஜெயிலுக்கு போயிட்டு வந்திருக்கான். புரிஞ்சிக்க பவானி” என்று மெதுவாகக் கோபப்பட்டான். 

“இல்லை பாலாண்ணா, அது சிறுவர் சீர்திருத்தப் பள்ளி” என்று பவானி, ஜீவனுக்குச் சாதகமாகப் பேசினாள்.

பவானியின் இந்தப் பதில் நாதனை சுருக்கென்று தைத்தது.

“ஓ! அப்போ தெரியும்” – பாலா. 

“ம்ம்ம்” 

“உன் மனசுல என்ன நினைச்சுகிட்டு இருக்கன்னு எனக்குத் தெரியாது. தெரியவும் வேண்டாம்.”

பவானி, பாலாவைப் பார்த்தப் பார்வையை எங்கும் மாற்றாமல், அவனையே பார்த்திருந்தாள். 

“ஆனா, மதன் கூடத்தான் வாழணும். டிவோர்ஸ் பேப்பர்ல மட்டும் சைன் போட்ட, இந்த வீட்ல இருக்க முடியாது” என்று பாலா எச்சரித்துக் கொண்டே எழுந்தான்.

“எனக்கு மதன் பிடிக்கலை. நான் மதன்கூட வாழ  மாட்டேன்” என்று பவானி அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள். 

வந்த கோபத்தில், அருகிலிருந்த மருத்துவக் கோப்புகளை எடுத்து, பவானியை  அடிக்கப் போனவனை… 

“டேய் பாலா” என்று ஒற்றை விரல் நீட்டி பாலாவை எச்சரித்த வண்ணம், நாதன் குறுக்கே வந்து நின்றார். 

“விடுங்கப்பா. எப்படிப் பேசிறா பாருங்க??” என்று மீண்டும் அடிக்கப் போனவனை…

“போதும் பாலா… நிறுத்துடா” என்று பிடித்துத் தள்ளி விட்டார். 

முதலில் தடுமாறிய பாலா, பின் சுதாரித்து நின்றான்.

நாதன், பவானி அருகே அமர்ந்தார். 

“ஏன்டா பாலா இப்படிப் பண்ற??” – நாதன் குரலில் ஆதங்கம் இருந்தது. 

“வேற என்னைய என்ன செய்யச் சொல்றீங்க?? கோபம் வருத்துப்பா?” – பாலாவின் குரல் உச்சத்தைத் தொட்டிருந்தது. 

“அதுக்காக…” என்று நாதனும் குரல் உயர்த்தினார்.

“நீங்க என்னையவே சொல்லுங்க. அவளை எதுவும் சொல்லிறாதீங்க” என்றவன் குரல் இறங்கி இருந்தது. 

“அப்படியெல்லாம் இல்லை பாலா” 

“உங்களுக்கு நானும் பல்லவியும் முக்கியமே இல்லைப்பா”

“என்ன பேசறப்ப, என்ன பேசிக்கிட்டு இருக்க பாலா?? “

“இவளுக்காக, நான் என் பொண்டாட்டி பிள்ளையை விட்டுட்டு இருந்தா… இவ.. எவ்வளவு தைரியம் இருந்தா, இந்த மாதிரி காரியம் பண்ணுவா??”

“அதுக்கு.. அடிப்பியா பாலா??” – நாதனின் குரலில் வருத்தம் இருந்தது.

“அவ பேசியது சரியா?? அதான் அடிக்க வந்தேன்” என்று பாலா தன் செயலுக்கு நியாயம் கற்பிக்க முயன்றான். 

“மதன் அடிக்கிறாருன்னுதான, அவர் வீட்டுக்கே நான் விட மாட்டிக்கிறேன். நீயும் இப்படி பண்ணா??” – நாதன் குரல் முழுவதும் சங்கடம் மட்டுமே!. 

“போங்கப்பா. இவளை என்ன செய்யனே தெரியலை!!” என்று பாலா சலிப்புடன் சொன்னான்.

இப்படி பேசினால், அந்தப் பெண்ணிற்கு எப்படி வலிக்கும் என்று தெரியுமா பாலா?? – நாம்.

“போ, போய் வெளியே நில்லு. நான் வரேன்” – நாதன்.

பாலா வெளியே சென்று, வாசற்படியில் அமர்ந்து தந்தையும் மகளும் பேசுவதைக் கேட்க ஆரம்பித்தான். 

பவானியும் நாதனும்… 

நாதன் பவானியைப் பார்த்தார். பாலாவின் பேச்சுகளும் செய்கைகளும், பவானியைப் பாதிக்குமோ என்று ஆறுதல் பேச்சை ஆரம்பித்தார்.

“பவானி”

எந்த ஒரு உணர்விலும் இல்லாமல், அமைதியாக இருந்தாள்.

“பவானி”

“அப்பா… அப்பா… எனக்கு ஜீவனைப் பார்க்கணும் போல இருக்கு. போய் பார்த்திட்டு வரட்டுமா??” என்றாள்.

பவானியின் அந்தக் குரலில், ஜீவனுக்கான 

ஏக்கம் இருந்ததா? 

ஆசை இருந்ததா??

நம்பிக்கை இருந்ததா??? 

பிரித்தறிய முடியவில்லை. 

பவானியின் ஜீவன் என்ற அழைப்பே, நாதனுக்கு நிறைய விடயங்களைச் சொல்லிவிட்டது. மகளின் முடிவு, அவரது மனதை வாட்ட ஆரம்பித்தது. 

“அப்பா… சொல்லுங்கப்பா??… நான் போட்டுமாப்பா??” 

எப்படி என் பெண்ணின் மனதிற்குள் நுழைந்தான்?? இவன் மட்டும் ஒரு சரியான மனிதனாக இருந்தால், தனக்குப் பின் பவானி வாழ்க்கை பற்றிய கவலைகள் இன்றி இருக்கலாமே என்ற எண்ணம் நாதனுக்கு வந்தது. 

“அப்பா… நம்பிக்கையே இல்லாத மாதிரி இருக்குப்பா. அதான் கேட்கிறேன். போட்டுமாப்பா” என்று மீண்டும் கெஞ்ச ஆரம்பித்தாள். 

“என்ன பேசிற பவானி?”

“ஜீவன்… ஜீவனுக்குத் தெரிஞ்சதுனா, அவங்க எல்லாத்தையும் பார்த்துக்குவாங்க. ப்ளீஸ்ப்பா நான் போயிட்டு வரேன்” என்று எழப் போனவளை, நாதன் பிடித்து உட்கார வைத்தார்.

“என்னப்பா??”

“பவானி, நீ எங்கயும் போக வேண்டாம்.”

“ஏன்ப்பா??” என்று கண்களில் ஏக்கம் கொண்டு கேட்டாள். 

“பவானி, முதல நான் கேட்கிறதுக்கு பதில் சொல்லு”

“இப்பவா??” – பவானி குரல் முழுவதும் நிராசை நிரம்பி இருந்தது. 

“ஆமா! எப்பவும் உன்னை எதுவரைக்கும் போறதுக்கு அனுமதிருச்சுக்கேன்??”

“பெஞ்ச் வரைக்கும்”

“அப்புறம் ஏன் வேற இடத்துக்குப் போன??”

பவானி ஒரு கணம் யோசித்தாள்.

“ஜீவன் சொன்னாங்கப்பா… அவங்களைப் பத்திச் சொல்லணும். அதான் கொஞ்சம் தள்ளிப் பொய் பேசலாம்னு”

“நீ முடியாதுன்னு, சொல்லியிருக்க வேண்டியதுதானே??”

“சொன்னேப்பா, ஆனா அவங்க கேட்கல”

“அப்போ நீ திரும்பி வீட்டுக்கு வந்திருக்க வேண்டியதுதான??”

“….”

“தப்புமா… நீ போனது தப்பு. நீ பண்ணது தப்பு”

“இல்லைப்பா. அவங்களைப் பத்திச் சொல்றதுக்காக..”

“என்ன?? ஜெயிலுக்குப்  போயிட்டு வந்தேன்னு சொன்னாரா??”

“இனிமே அப்படிச் சொல்லாதீங்கப்பா… ” என்று கெஞ்சினாள். 

“சரி சொல்லலை. வேற என்ன சொன்னாரு? “

“காரணம் சொன்னாங்கப்பா…”

“எதுக்கு போனாராம்?” என்று நாதன் கேட்டவுடன்…

பவானி சற்று முன்பு ஜீவன், அவனைப் பற்றிச் சொன்ன விடயங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லிவிட்டாள்.

“அப்பா, அவங்க மேல தப்பில்லைல… அவங்க  நல்லவங்க… நம்ம புரிஞ்சிப்போம்ப்பா”

அதற்குள் வெளியிலிருந்து பாலா, “அப்பா” என்று அழைத்தான்.

“இருடா வரேன்” என்று பாலாவுக்கு, நாதன் பதில் சொன்னார். 

“என்னப்பா? எதுவும் சொல்ல மாட்டிக்கிறீங்க??” – பவானி. 

நாதன் எழுந்து விட்டார்.

“அப்பா” என்று அன்னாந்து பார்த்து அழைத்தாள். 

நாதன் அமைதியாக இருந்தார். 

“அப்பாவுக்கு நீ பண்றது எதுவும் பிடிக்கலைம்மா”

அப்பாவுக்குப் பிடிக்காத ஒரு வாழ்க்கையா வாழப் போகிறோம் என்று பவானியும், பவானியின் வாழ்க்கை கேள்விக்குறியாக நிற்பதை நினைத்து நாதனும், மனம் குமுறிக் கொண்டிருக்கும் தருணங்கள் – இவை.

வெளியே செல்லப் போனவரை… 

“அப்பா, எனக்கு தலை வலிக்கு… ஒரு மாதிரி வேற இருக்கு. டேப்லெட் தர்றீங்களா??”

பவானியின் மருந்துகள் அடங்கிய பெட்டியை எடுத்தவர், அதிலிருந்து ஒரு மாத்திரை அட்டையை எடுத்து பவானி அருகில் வைத்து விட்டு, வெளியே சென்றார்.

என்றும் மாத்திரையைக் கையில் எடுத்து தந்து, தண்ணீர் கொடுத்து, மாத்திரையை விழுங்கும் வரை அருகில் இருப்பவர், இன்று இப்படிச் செய்வது பவானியை பரிதவிக்கச் செய்தது. 

மதன் வந்தது..

பல்லவியின் பார்வை..

பாலாவின் கோபம்..

தந்தையின் மாற்றம் … 

ஜீவனைக் காண ஏக்கம்…

என அனைத்தும் சேர்ந்து பவானியின் மனநிலையைப் பாதித்தது. 

அவள், ஜீவனிடம் சொன்னது போல் வாழ்க்கையின் மீதான நம்பிக்கைப் போய்க் கொண்டிருந்தது. 

உள நோயின் மனஅழுத்தப் பகுதியின் ஒரு விளைவான நம்பிக்கையின்மையைப் பவானி சந்திக்க ஆரம்பிக்கிறாள்!!

****

வீட்டின் வெளியே… 

பாலா, அத்தனை கோபத்துடன் நின்று கொண்டிருந்தான்.

“பாலா”

“எவ்வளவு நேரம் ப்பா??” 

“அவளுக்கு மாத்திரைக் கொடுத்திட்டு வரேன் பாலா.” 

“என்னாச்சு?.” 

“ஒண்ணுமில்லை. நீ சொல்லு எதுக்குக் கூப்பிட்ட??”

“கேட்டேன், பவானி சொன்னது எல்லாத்தையும் கேட்டேன்” என்று நக்கலாகச் சொன்னான்.

“என்னடா பண்ண??”

“திருட்டிட்டு ஜெயிலுக்குப் போனவன் கூட என் தங்கச்சிக்குப் பழக்கம்… நல்லா இருக்குல்ல?? “

“அப்படிச் சொல்லாதடா”

“வேற எப்படிச் சொல்ல? இதுக்குத்தான் நான் அன்னைக்கே சொன்னேன்”

“என்ன சொன்ன??”

“இவனால மதனுக்கு ஏதாவது ஆதாயம் கிடைக்கும்னா, நானே அவனை அடிச்சி ஊரை விட்டு விரட்டுவேன்னு “

“….”

“உங்க பொண்ணு என்ன சொல்றான்னு பார்த்தீங்கள?? எல்லாம் அவன் கொடுக்கிற தைரியம்”

“இப்ப என்ன செய்ய பாலா?? அதைச் சொல்லு”

“என்கூட வாங்கப்பா. அவனைப் போய் நாலு கேள்வி கேட்டுட்டு வரலாம்”

“ச்சே, அதெல்லாம் வேண்டாம்டா…”

“வேண்டாம்ன்னா என்ன அர்த்தம்? உங்களுக்கும் இதுல விருப்பம் இருக்கா?”

“இல்லை பாலா. துளிகூட கிடையாது.”

“அப்புறம் என்ன?”

“இல்லடா, அவரைப் பார்த்தா அப்படித் தெரியலை”

“திருடன் ப்பா. இப்போ இப்படி இருந்திட்டு, அவளைக் கூட்டிட்டுப் போய், ஏமாத்திட்டானா?? என்ன பண்ணுவீங்க?”

பாலா! ஜீவன் சார் அப்படிப்பட்டவர் அல்ல!! – நாம். 

“அதை விடுங்க… ஏற்கனவே ஒரு பொறுப்பில்லாதவன் கையில பொண்ணைக் கொடுத்திட்டுக் கஷ்டப் போடுறோம். இதுல இவனை மாதிரி ஒருத்தன்கிட்ட பவானியை வாழ்க்கையைக் கொடுத்தா?? என்ன ஆகுமோ??” – பாலா. 

தங்கை மேல்  இவ்வளவு பாசமா?? – இது நாமும் நாதனும். 

“அப்புறம் அவனுக்கு ஏதாவது பிரச்சனைனாலும், அவனால பவானிக்கு ஏதாவது பிரச்சனை வந்தாலும் நான் தான் பார்க்கணும். என்னால் அது முடியாது. கட்டிக் கொடுத்தா, திரும்பி வரக் கூடாது”

இது பாசம் இல்லை, அவன் பிரச்சனை! – இது நாமும் நாதனும்.

“அப்படியே பவானி நினைக்கிறபடி நடந்தாலும்… பல்லவியோட வாழ்க்கை. அதையும் நம்ம யோசிக்கணும்ல” – பாலா. 

‘தான் இதை யோசிக்கவில்லையே!’ என்று நாதன் நினைத்தார். 

“அப்பா, நீங்க  என்கூட வாங்க. போய் என்னன்னு கேட்டுட்டு வரலாம்”

“பாலா, நான் ஒண்ணு  சொல்லவா?”

“என்னப்பா??”

“நீ போய், மருமகளையும், பேரனையும் கூட்டிட்டு வாடா. உனக்கு அதுவே பாதி நிம்மதியைக் கொடுக்கும்”

“அதைத்தான் செய்யப் போறேன். இவனைப் போய் பார்த்திட்டு, என் பொண்டாட்டியைக் கூட்டிட்டு வருவேன். அதுக்கப்புறம் நாளைக்கு காலையில, பவானியை மதன் வீட்லக் கொண்டு போய் விட்டுடுவேன்” என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு, வள்ளிம்மா வீடு நோக்கி நடந்தான்.

நாதனும் பின்தொடர்ந்தார்.

வள்ளிம்மா வீடு…

இன்னும் ஜீவன் பவானியின் நேச வார்த்தைகளின்  பிடியிலிருந்து மீளாமல் இருந்தான்.

“ஜீவன் சார், ஜீவன் சார்” என்ற வள்ளிம்மாவின் அழைப்புக் கேட்டு எழுந்தான்.

பால்கனி வழியே கீழே பார்த்தான். நாதனும் பாலாவும் நின்றிருந்தனர். ‘என்னாச்சு??’ என்று தனக்குள் கேள்வி கேட்டுக் கொண்டே கீழிறங்கி வந்தான்.

“இவங்க உங்களைப் பார்க்கணும்னு சொன்னாங்க” – என்று வள்ளிம்மா, மாடிப் படிகளில் இறங்கி வந்தவனிடம் சொன்னார்.

“ம்ம் சரி” என்று ஜீவன் அவரிடம் சொல்லிவிட்டு… “வாங்க நாதன் சார்?” என்று அமைதியாகவே ஆரம்பித்தான்.

“ஜீவன் சார்…” என்று பதில் பேச ஆரம்பித்த நாதனை… 

“இவனுக்கு எதுக்குப்பா மரியாதை??” என்று கண்களில் ஆங்காரம் கொண்டு, பாலா ஜீவனைப் பார்த்தான்.

“சார், மரியாதையா பேசச் சொல்லுங்க” என்று நாதனிடம், ஜீவன் வேண்டுகோள் வைத்தான்.

“ஏய்!” என்று ஜீவனை நோக்கி முன்னேறி வந்த பாலாவை, “பொறுமையா இரு பாலா” என்று நாதன் பிடித்து நிறுத்தினார். 

ஜீவனுக்கு ஏதோ பிரச்சனை என்று தெரிந்து போயிற்று. முடிந்த அளவு பேசிச் சமாளிக்க வேண்டும் என்று நினைத்தான்.

“நாதன் சார், சொல்லுங்க என்ன விஷயம்??” – ஜீவன்.

“ஏன்? உனக்குத் தெரியாதா??” என்று கத்திக் கொண்டு, பாலா மீண்டும் இடையில் வந்தான். 

அவன் கத்தல் காதில் விழுந்ததால், அவ்வழியே சென்று கொண்டிருந்தவர்களில் ஒருசிலர் நின்றனர். 

ஜீவனின் பார்வை அவர்கள் மேல் விழுந்ததால், கீழுள்ள விண்ணப்பம் கேட்டான். 

“மரியாதையா பேசு பாலா. எல்லாரும் பார்க்கிறாங்க” என்று ஒரு அடி முன்னே வந்து, ஜீவன் எச்சரித்தான்.

ஜீவன் நின்ற தோரணை, பாலாவுக்கு மேலும் ஆத்திரம் மூட்டியது. தப்பு செஞ்சவன் இப்படி நெஞ்சை நிமிர்த்தி நிற்பதா?? என்று கோபம் வந்தது. ஆதலால் கீழுள்ள எள்ளல் வசனத்தைக் கூறினான்.

“ஜெயிலுக்குப் போயிட்டு வந்தவனுக்கு எதுக்கு மரியாதை??”

‘ஓ! பையன்கிட்ட சொல்லிக் கூட்டிட்டு வந்திருக்கீங்களா?’ என்பது போல், ஜீவன் நாதனைப் பார்த்தான்.

“பாலா நான் பேசுறேன், நீ அமைதியா இருடா” – நாதன்.

“நான் சொன்னது உண்மைதான!! அப்புறம் நான் ஏன் அமைதியா இருக்கணும்?? ” – பாலா.

“என்னாச்சு பாலா?” – ஒரு சிலரில் ஒருவர்.

“இவன் ஜெயிலுக்குப் போயிட்டு வந்தவன். இப்போ என் தங்கச்சி பின்னாடி சுத்திகிட்டு இருக்கான். அதான் நல்லா நாலு வார்த்தைக் கேட்டுட்டு போகலாம்னு வந்தேன்” என்று பிரச்சனைப் பற்றி பாலா, ஒரு சிறு விளக்கம் கொடுத்தான்.

“ஜெயில்ல இருந்தவனா??” –  ஒரு சிலரின் பார்வைகள், இப்படிப் பேசின.

“பாலா, இதை ஏன்டா எல்லார் முன்னாடியும் சொல்ற?” – நாதன். 

“உண்மையைதான சொன்னேன். பொய் சொல்லலயே!!” என்று தந்தை மீதும் தன் எரிச்சலைக் இறக்கினான்.

ஜீவன் சுற்றி நிற்கும் ஒரு சிலரைப் பார்த்தான். அத்தனைக் கண்களும், தன்னை ஒரு குற்றம் செய்தவனைப் போல் பார்த்தன.

“பாலா, கொஞ்சம் மரியாதையா பேசு” – ஜீவன்.

“உனக்கென்ன மரியாதை?? தெருவுல சாப்பாட்டுக்கு அலைஞ்சவன்… திருடிட்டு ஜெயிலுக்குப் போனவன்… இவ்வளவு மரியாதைக்கு கொடுக்கிறதே அதிகம்தான்.” என்று ஜீவனை மட்டம்தட்டி பேசினான். 

ஜீவன் தன்னைத் தானே தாழ்வாக எண்ணினான். 

‘இதெல்லாம் எப்படித் தெரியும், பவானியிடம் சொல்ல வேண்டாம். என்று சொல்லியிருந்தோமே??’ என்று ஜீவன் யோசிக்க தொடங்கினான். அதுவரை சாதாரணமாக இருந்தவன், பாலாவின் அந்தப் பேச்சுக்குப் பின் அப்படி இருக்க முடியவில்லை.

“உன்னை மாதிரி ஒரு திருடனுக்கு என் வீட்டுப் பொண்ணு கேட்குதா??” – பாலாவின் குரலில் இளக்காரம் தெரிந்தது.

“பாலா போதும். வாடா போலாம். நீ பேசிறது கொஞ்சம் கூட சரியில்லை” – நாதனின் குரலில் எச்சரிக்கை இருந்தது.

“நாதன் சார், உங்கப் பையனைக் கூட்டிட்டுப் போங்க, உங்களுக்காகத்தான் பார்க்கிறேன்” – இது ஜீவனின் எச்சரிக்கை. 

“ஏன்? ஏன் நான் போகணும்? தப்பு பண்ணவன் நீ. போகணும்னா நீ போ”  – பாலா.

“வள்ளிம்மா, இந்த மாதிரி ஆள ஏன் வாடகைக்கு வைக்கிறீங்க??” – கூட்டத்தில் ஒருவர்.

ஆம்!! இப்பொழுது ஒரு சிலர், ஒரு கூட்டம் ஆகியிருந்தது.

“நல்லா கேளுங்க. வள்ளிம்மா, அவர் கேட்டக் கேள்விக்குப் பதில் சொல்லுங்க” – பாலா. 

‘தன்னால், இவருக்கு பிரச்சனையா? ‘ என்ற பார்வைகளுடன் ஜீவன், வள்ளிம்மாவைப் பார்த்தான். 

“என் வீட்ல யாரைக் குடி வைக்கணும்??… யாரை வைக்கக் கூடாதுன்னு??…  யாரும் சொல்ல வேண்டாம். அது எனக்கே தெரியும். பாலா, நீ உன் பிரச்சனையை மட்டும் பேசு” – வள்ளிம்மா.

“அந்தப் பையன் திருடிட்டு ஜெயிலுக்கு போயிருக்கான்னு சொல்றாங்கள… அப்புறம் நீங்க  இப்படி சொல்லலாம்??” – கூட்டத்தில் ஒருவர்.

“அது என்னைக்கோ நடந்திருக்கு. நேத்து நடந்த மாதிரி பேசாதீங்க” – வள்ளிம்மா.

“அதெப்படி திரும்பவும் திருடுனானா?? என்ன பண்ண?” – அதே கூட்டத்தில் ஒருவர்.

“அது நடந்தா பார்த்துக்கலாம். இப்போ பேச வேண்டாம்” –  வள்ளிம்மா.

மலைப்பிரதேசம் உட்பட, எல்லாரும் அமைதியாக இருந்த தருணங்கள் – இவை. 

“இது அவங்க பிரச்சனை. அவங்க பேசிப்பாங்க. நீங்க உங்க வேலையைப் பார்க்கப் போங்க” என்று கூடி இருந்தக் கூட்டத்தைப் பார்த்து வள்ளிம்மா கூறினார். 

வள்ளிம்மா, இப்படிப் பேசியதும் கூட்டத்தில் இருந்தோர் கலைந்து சென்றனர். அதையும் தாண்டி ஒரு சிலர் நின்றனர்.

“பாலா நீ வாடா, வீட்டுக்குப் போகலாம்” – நாதன்.

“இருங்கப்பா” என்று நாதனிடம் சொன்னவன்,  “இங்க பாரு, என் தங்கச்சிக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சி. அதனாலதான் சொல்றேன் விலகிரு” என்று பாலா ஜீவனை எச்சரித்தான்.

“அவனைத்தான் பவானி பிடிக்கலைன்னு சொல்றாள??” – ஜீவன். 

“ஓ! இவ்வளவு பேசியிருக்களா?? ரொம்பத் தைரியம்”

“போதும் பாலா… நீ வீட்டுக்குப் போ” – நாதன். 

“இங்க பாரு ஜீவன், மதன் கைல கால்ல விழுந்தாவது அவன் கூட பவானியை வாழ வைக்க வேண்டியது என்னோட கடமை. அதான், சொல்றேன் நீ ஒதுங்கிரு”

“நான் ஏன் ஒதுங்கணும்??”

“பவானி, மதனோடதான் வாழணும். அதுக்காக!!”

“அதை நீ சொல்லாத! உன் தங்கச்சி சொல்லணும். அவளுக்கு அதுல இஷ்டம் இல்லையில??”

“ஆனா பவானி விஷயத்தில நான் என்ன முடிவு எடுக்கிறேனோ, அதான் நடக்கும்”

“பவானி விஷயத்தில நீ ஏன் முடிவு எடுக்கணும்?? அவர் வேணா முடிவு எடுக்கட்டும்”  என்று ஜீவன் நாதனைக் கை காட்டினான்.

பாலா, ஜீவன் இருவரும் நாதனைப் பார்த்துக் கொண்டிருப்பதலாலும், நாதன், பவானியின் விருப்பம் தெரிந்தும் என்ன முடிவு சொல்ல என்ற குழப்பத்தில் இருப்பதாலும் பதில்கள் இல்லாத தருணங்கள் – இவை.

“அப்பா உங்க முடிவை சொல்லுங்கப்பா. அப்பவாது இவனுக்குப் புரியுதான்னு பார்ப்போம்” – பாலா. 

நாதன் கைகளைப் பிசைந்து கொண்டு இருந்தார். 

“அப்பா… சொல்லுங்கப்பா” – பாலா. 

“ஜீவன் சார், அன்னைக்குச் சொன்னதுதான், இன்னைக்கும் சொல்றேன். பவானிக்கு நீங்க வேண்டாம்” – நாதன். 

“போதுமா உனக்கு??” – பாலா. 

“தாராளமா!! ஆனா, இதை நான் பவானியைப் பார்க்க வீட்டுக்கு வந்தேன் பார்த்தீங்களா?? அன்னைக்கே சொல்லியிருக்கணும்.” – ஜீவன். 

“வீட்டுக்கு வந்தியா?? இது எப்போ?? என்னப்பா இது?” – பாலா. 

“இன்னும் இருக்கு… கேளு பாலா.” – ஜீவன். 

“எதுக்கு ஜீவன் சார், இதெல்லாம் பேசிக்கிட்டு??” – நாதன். 

“ஏன்? உங்க பையன் என்னைப் பத்திச் சொல்றப்போ கேட்டுக்கிட்டு நின்னீங்கள, இப்பவும் அப்படியே நில்லுங்க” – ஜீவன். 

“என்னன்னு சொல்லு?” – பாலா. 

“தைக்கிறதுதான் பவானிக்குப் பிடிச்சிருக்குன்னு தெரிஞ்சி, அதுக்கு வேண்டிய திங்க்ஸ் வாங்கிக் கொடுத்தேன். அப்பவே அதைத் தூக்கி எறிஞ்சி, வெளியில போன்னு சொல்லியிருக்கணும். சொன்னீங்களா நீங்க??” என்று ஜீவன் நாதனைப் பார்த்துக் கேட்டான். 

நாதன் என்ன பதில் சொல்லவதென்று தெரியாமல் நின்றார். 

“அப்பெல்லாம் ஒண்ணும் சொல்லாம, இவ்வளவு தூரம் வந்ததுக்கப்புறம் வேண்டாம்னு சொன்னா என்ன அர்த்தம்??” – ஜீவன். 

“இதெல்லாம் ஏன்ப்பா என்கிட்ட சொல்லலை??”  – பாலா. 

இப்போதும் நாதனால் பதில் சொல்ல முடியவில்லை. 

“ஆனாலும் சொல்றேன்… கேளு.. பவானி பத்தி நினைக்கிறதை விட்டுரு. அதான் உனக்கு நல்லது.” – பாலா. 

“எனக்கு நடந்த ஒரே நல்ல விஷயம் அதுதான். அதனால நினைக்கிறதெல்லாம்  நிறுத்த முடியாது. நீ என்னவேனாலும் பண்ணிக்கோ” – ஜீவன். 

மதன், பவானி எடுத்த முடிவுகள், நாதன் மறைத்த விடயங்கள்,  ஜீவன் பேசிய பேச்சுக்கள்… இவை அனைத்தும் சேர்ந்து, பாலா ஜீவனின் சட்டையைப் பிடிக்க வைத்திருந்தது. 

பதிலுக்கு ஜீவனும் பாலாவின் சட்டையைப் பிடித்தான். 

இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலை, இது. இன்னும் பேசினார்கள்… 

கடைசியில்… 

“அப்புறம் போலீஸ் ஸ்டேஷன்ல உன்னைப் பத்திக் கம்ப்ளைன்ட் கொடுத்து, திரும்பியும் உள்ளே இருக்க வேண்டிய நிலைக்கு கொண்டு வந்திடுவேன்” என்று பாலா எச்சரித்தான். 

பாலாவின், அந்தப் பேச்சிற்கு ஜீவனிடம் பதில் இல்லாமல் போனது. 

நாதனும், அங்கே பார்த்துக் கொண்டிருந்தவர்களில் சிலரும் பாலாவைப் பிடித்து இழுத்தனர்.

வள்ளிம்மா ஜீவனை பிடித்து இழுத்து வந்தார்.

“போலீஸுன்னு சொன்னதும் அமைதியாயிட்ட பார்த்தியா?? அந்தப் பயத்தோட, நீ இன்னும் எவ்ளோ நாள் இந்த ஊர்ல இருக்க முடியும்னு பார்க்கிறேன்” – பாலா. 

இப்படிச் சொல்லிவிட்டு பாலா போய்விட்டான்.

வள்ளிம்மா, “அவன் கிடக்கிறான். நீங்க வாங்க” என்று ஜீவனை உள்ளே அழைத்துச் சென்றார். 

ஜீவன் உள்ளே வந்தான்.

பின்னாலே நாதனும் வந்தார்.

“வள்ளிம்மா நான் அவர்கூட கொஞ்சம் பேசணும்” – நாதன்.

“நாதன், இப்பவே பேசணுமா??” – வள்ளிம்மா.

“ஆமா வள்ளிம்மா” 

அதற்குமேல் ஏதும் சொல்லாமல், வள்ளிம்மா வீட்டிற்குள் சென்றார்.

ஜீவனும் நாதனும்…

“ஜீவன் சார், மாடியில போய் பேசலாமா??”

“பரவால்ல, எதுனாலும் இங்கயே சொல்லுங்க”

“சரி சார். முதல பாலா பேசினத்துக்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேன்”

பத்து பேர் சுற்றி நிற்கும் பொழுது, தன்னைப் பற்றிய உண்மைகளைப்  பாலா சொன்னது, ஜீவனுக்கு அவன் மீது மன்னிக்கவே முடியாத அளவிற்கு கோபம் வரச் செய்தது.  

ஆனால், பாலாவிற்கு எப்படித் தெரிந்தது என்ற கேள்வி வந்தது. பவானி சொல்லியிருப்பாளோ?? என்ற சந்தேகத்தினால் கீழே உள்ள கேள்வி கேட்டான்.

“நாதன் சார், என்னைப் பத்தின விஷயம் எல்லாத்தையும் பவானி சொன்னாளா??”

“ஆமா ஜீவன் சார்”

இப்போது ஜீவனின் கோபம் முழுவதும் பவானி மேல் திரும்பியது.

ஜீவன் சார்! அவர் பதில் சரியானது. ஆனால் உங்கள் கேள்வி தவறானது. ஆகவே உங்கள் கோபம் நியாமற்றது. – நாம்.

“நான் ஏன் வேண்டாம்னு சொல்றேன் புரிஞ்சிக்கோங்க” – நாதன்.

“ப்ச், அதான் ஏற்கனவே சொல்லிட்டீங்களே “

“ஜீவன் சார், அதில்லை. நான் அன்னைக்கே இன்னொரு காரணம் சொன்னா புரிஞ்சிப்பீங்கன்னு சொன்னேன். நியாபகமிருக்கா??”

“இருக்கு”

“அது என்னன்னு தெரியுமா?”

“என்ன?”

“நீங்க சமுதாயத்திலே இருந்து ஒதுங்கி வாழறீங்க. பவானியோட நிலைமையைப் பார்த்து, ஒதுக்கி வச்சிருக்காங்க. நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து, எப்படி ஒரு நல்ல வாழ்க்கை அமைக்க முடியும்??”

“ப்ச் திரும்பத் திரும்ப அதையேதான் சொல்றீங்க”

“சரி, அதை விடுங்க. இது உங்களுக்கு நாலாவது ஊராமே?? இப்படி உங்களைப் பத்தி உண்மை தெரிஞ்சா, ஊரை விட்டு ஓடிப் போறீங்க. உங்களை நம்பி எப்படி என் பொண்ண கொடுப்பேன்?? அவளுக்கு ஒரு இடத்தில இருந்து வைத்தியம் பார்க்க வேண்டாமா?”

“….”

“நாளைக்கு உங்களுக்கு, உங்க சின்ன வயசு வாழ்க்கையினால ஏதாவது பிரச்சனை வந்தா… உங்களுக்கு பக்கபலமா நிக்கிற மாதிரி ஒருத்தர் வேணும். பவானி அந்த மாதிரி பொண்ணு இல்லை சார். அவளை பார்த்துக்கிடவே ஒரு ஆள் வேணும்.”

“….”

“உங்க ரெண்டு பேருக்குமே, ஒரு நல்ல வாழ்க்கை அமையணும். அது என்னோட விருப்பம். ஆனா அந்த வாழ்க்கையை, நீங்க ஒருத்தருக்கு ஒருத்தர் கொடுக்க முடியாது. “

“…. “

“நான் உங்க ரெண்டு பேருக்காவும்தான் யோசிக்கிறேன். புரிஞ்சிக்கோங்க” 

“கடைசில என்ன சொல்றீங்க??”

“பவானியை விட்ருங்க. அவளே உங்களைத் தேடி வந்தாலும்”

“….”

“அப்புறமா… ” என்று ஆரம்பித்தவர், பேச்சை பாதியிலே நிறுத்தி விட்டார். 

காரணம், ஜீவன் கை எடுத்துக் கும்பிட்டு இருந்தான்.

“ஜீவன் சார், ஏன் இப்படி?”

“போதும் நாதன் சார்.”

“இல்லை, நான் என்ன சொல்ல வரேன்னா??”

“போதும்ன்னு சொன்னேன், நாதன் சார்” என்று கத்தினான். 

“…. “

“உங்க பையன் பேசுறதை விட நீங்க பேசுறதுதான் கஷ்டமா இருக்கு.”

“….”

“எனக்காக, உங்க பொண்ணு பார்த்துப் பார்த்துக் கொடுக்கிற பாசத்தை,  நீங்க பேசிப் பேசியே ஒண்ணுமில்லாம ஆக்கிடுறீங்க”

“….”

“நான் நானாவே இருந்திருக்கணும். மாறினது தப்புதான். நானா மாறலை சார், பவானி என்னைய மாத்தினா!!” என்று ஆசையாகச் சொன்னான். 

“….”

“இப்போ நீங்க வந்து இப்படிப் பேசி…” என்றவன் குரல் தழுதழுக்க ஆரம்பித்தது. 

“….”

“அப்பாவும் பொண்ணும் சேர்ந்து உயிரைப் பிச்சிப் பிச்சி எடுக்கறீங்க. முடியலை சார்” என்று கழுத்து நரம்புகள் புடைக்க, கண் கலங்கிச் சொன்னான். 

“….”

“உங்க பொண்ண நீங்களே வச்சிக்கோங்க. சத்தியமா எனக்கு வேண்டாம்” என்றவன் கண்கள் ஓரத்தில் இருந்து ஒரு துளி விழிநீர் சொட்டியது. 

“ஜீவன் சார்… “

“பவானி வந்தாலும் நான் பேசிப் புரிய வைக்கிறேன். நீங்க போங்க” என்று மாடிப் படியேறினான்.

நாதன் அவன் போவதையே பார்த்திருந்தார்.

ஏறிக்கொண்டிருந்தவன் திடீரெனத் திரும்பி, “ஆனா, இந்த முடிவு உங்களுக்காகவும், அவளுக்காவும்தான் எடுக்கிறேன். அவளைப் பத்திரமா பார்த்துக்கோங்க” என்று சொல்லிவிட்டு கடகடவென சென்று விட்டான். 

ஏனென்றே தெரியாமல் அவன் சொன்ன வார்த்தை நாதனைக் காயப் படுத்தியது.

****

மாடியேறி வந்தவனின் மனப் பிரதேசம் மூச்சு வாங்கியது. 

காலையிலிருந்து நடந்த நிகழ்வுகளையெல்லாம் அசைபோட்டான். நேசம் பகிர்ந்து கொண்டு, சில மணித்துளிகளே ஆகியிருந்தது. அதற்குள் இப்படி?? 

வீட்டில் யாரிடமும் தன்னைப் பற்றிய விவரங்களைச் சொல்லக்கூடாது என்று சொல்லியும்… பவானி  சொல்லியது நினைத்து, அவள் மீது கோபம் வந்தது. ஆனால் பவானி மீது இருந்த அதீத நேசம், அந்தக் கோபத்தை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது. 

பாலாவின் எல்லை மீறிய பேச்சுக்கள் எதிர்பார்த்ததுதான் என்றாலும், எண்ணத்தில் வந்த போது, மனம் ரணமானது.

சுற்றி நின்றவர்கள்!! அவர்களால் தன்னைப் பற்றிய உண்மை, இங்குள்ள பலருக்குத் தெரிய வரும் என்று நினைத்து மனம் மருங்கினான்.

இவை எல்ல்லாவற்றையும் விட நாதன் பேசிய  நடைமுறை வாழ்க்கை பற்றிய பேச்சுக்கள். அவர் பேசியது சரியே என்று தோன்றியது.

ஜீவன் சார்!! நடைமுறையை, நம்பிக்கை கொண்டு மாற்ற முடியும்! – நாம். 

தன்னைப் போல ஒருவனுக்கு, இது மாதிரி வாழ்க்கை வேண்டாம் என முடிவெடுத்தான். 

ஆனால் பவானி? 

அவளுக்குக் கொடுத்த நம்பிக்கை? அவளுடன் பகிர்ந்த நேசம்?? 

அதை எப்படி விட்டுச் செல்ல முடியும்?

வேண்டாம்! பவானியைப் பார்த்துக் கொள்ள, அவள் தந்தை இருக்கிறார். தான் விலகுவதே சரி என்று நினைத்தான்!

இன்னும் யோசித்தால் முடிவு மாறிவிடும் என்று நினைத்து, நாளையே இங்கிருந்து கிளம்பி விட வேண்டும் என்று உறுதி கொண்டான். 

பவானிக்கு எந்தப் பிரச்சனை வந்தாலும் ஜீவன் சார் துணை நிற்பார் என்று நம்பினோமே! அந்த நம்பிக்கையைக் காப்பதிலிருந்து ஜீவன் சார் தவறிக் கொண்டிருக்கிறார் என்று எண்ணிக் கொள்வோமாக!!

ஜீவன் சார்! நீங்கள் எடுத்த முடிவு மிகவும் தவறானது!! பவானியின் நிலைமை என்னவாகும்?? – நாம்.

error: Content is protected !!