Kumizhi-15

நேசம்-15

நிதர்சனங்களை ஏற்று ‘இனி இது தான் என் பாதை’ என்பதை மனதில் பதிந்து கொண்டு பேசாமல் இருந்தாலும், தன் மனம் அதில் சமாதானம் அடைந்தாதா என்பதை சிவனியா அலசி பார்க்கவும் விரும்பவில்லை.

நினைக்க நினைக்க வேதனைகளை மட்டுமே தரும் நிகழ்வுகள், தன் கை மீறி, தன் வாழ்க்கை பயணம் வருணபாண்டியனின் கை சேர்ந்த நாள் முதற்கொண்டு, தன் மீதுள்ள அக்கறையில் அவன் செய்யும் அத்தனை காரியங்களும் அந்த நேரத்தில் மட்டுமே ஏற்றுக் கொண்டு சமாதானமடையும் மனம், மீண்டும் அவன் மீது கோபத்தையே பூசிக் கொண்டு பயணிக்க ஆரம்பித்தது.

இதன் காரணமாகவே தன்னை சுற்றி போட்டுக்கொண்ட விலங்கை உடைக்காமலேயே படிப்பினை தொடர்ந்து கொண்டிருந்தாள். எளிதாய் தன் போக்கில் படித்து வருபவளுக்கு, தற்போது எடுத்துள்ள பாடத்திட்டம் சற்றே கவனித்து படித்தால் மட்டுமே புரிய வைத்தது.

முக்கியமாய் அக்கௌண்ட்ஸ், டேலி(tally) மற்றும் நிர்வாக சம்மந்தமான பாடங்களையும் சேர்த்து படிக்கவென மாலை நேர சிறப்பு வகுப்புகளுக்கும் சென்று மனதில் நிறுத்திக் கொள்ள முயற்சிக்க, சிவனியாவின் நேரங்கள் தடையின்றி ஓட ஆரம்பித்தது.

வீம்புக்கென ‘படிக்காமல் விட்டால் என்ன? என சமயத்தில் தோன்றும் மனதையும், மொத்தமாய் பணத்தை கட்டி விட்ட ஒரே காரணத்தினாலேயே படித்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தை மனதிற்குள் நிலை நிறுத்தினாள்.

பணம் என்ற ஒன்றை எப்பொழுதும் சொற்ப இலக்கங்களிலேயே பார்த்து வந்தவளுக்கு, கணவன் கட்டிய இலகரங்கள் பெரிய தொகையாகவே கருத்தில் பட, எப்பொழுதும் அதிகப் படியான செலவுகளையும் தவிர்த்து விடுவாள்.

பாண்டியன் வற்புறுத்தி செலவுகளை செய்யச் சொன்னாலும் கேட்டுக் கொள்ளாமல், எளிய ஆடைகளையும், அதற்கேற்ப பொருட்களையும் மட்டுமே வாங்கிக் கொள்வாள்.

சிறு வயதில் இருந்தே சிவனியாவின் விருப்பங்களும், மனோபாவங்களும் அத்துப்படியாக தெரிந்து கொண்டு, அவளால் நிச்சயம் முடியும் என்ற நம்பிக்கையிலேயே தான் வலுக்கட்டாயமாய் படிக்க வைத்தான் பாண்டியன்.

வாரத்திற்க்கு ஒருமுறை கோதை இல்லத்தில் அனைவருடனும் பேசத் தவறுவதில்லை. ரவியின் மனைவி கனிமொழியும் தற்போது அங்கே வேலைக்கு வருவதால் அவர்களிடமும் சகஜமாக உரையாடல் நடக்கும்.

வேலை நிமித்தமாய் வெளிநாடு சென்ற செங்கமலத்திடம் இருந்து இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வரும் அழைப்பினை தவறாமல் ஏற்று பேசி விடுவாள் சிவனியா. அவர் கேட்பதெல்லாம் ஒரே ஒரு கேள்வியை மட்டுமே ‘தற்போது எங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என்பதே.

‘சென்னையில் இருக்கிறேன்’ என்று சொல்பவள், தான் படித்துக் கொண்டிருக்கும் விடயத்தை சொல்லவில்லை. பாண்டியன் படிக்க வைப்பது தெரிந்தால் மீண்டும் சஞ்சலங்கள் உருவாகி, மனஉளைச்சலில் புலம்ப ஆரம்பித்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை என நினைத்தவள், இங்கு வரும் போது தானாய் தெரிந்து கொள்ளட்டும் என்று விட்டு விட்டாள்.

ஆறு மாதங்கள் கடந்த நிலையில் செங்கமலம் தன் வேலை ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டே திரும்பி இருந்தார். மகளை பார்க்காமல், அவள் குடும்பம் நடத்தும் அழகை காணாமல் இருக்க அவர் மனம் ஒப்பவில்லை.

செல்போஃனில் பேசும் பொழுதுகளில் எல்லாம் பட்டும் படாமல் பேசும் மகளின் பேச்சும், அவர் மனதை சற்றே நெருடச் செய்ய, தனிமையில் இருக்கும் பொழுதுகளில், மகளிடம் பேசிய விதம் அலசி, ஆராய வைத்து, தன் மீதான தவறை எடுத்துக் காட்டியது.

ஊருக்குச் செல்லாமல் எந்நேரமும் சென்னையே கதியாய் இருக்கும் பெண்ணையும் அதட்டி, ஒழுங்காய் குடும்பம் நடத்தச் சொல்ல வேண்டும் என்ற வேகமும் வந்திட, ஊருக்கு வந்து சேர்ந்தவர், கோதை இல்லத்தில் தன் மகளை பற்றி விசாரிக்கவென வந்து விட்டார்.

“வாங்க சம்மந்தியம்மா” என பெண் கொடுத்தவரை மரியாதையாக கோதையம்மாள் வரவேற்க, பெரும் சங்கடத்திற்கு ஆளானார். பதில் பேசாமல் அவர் முகம் பார்த்திருக்க

“பொண்ணுக்கு கல்யாணம் முடிஞ்ச பிறகு தான் சம்பாதிக்க தோணியிருக்கு போல…”

“அப்படியெல்லாம் இல்லண்ணி!”

“நீ நினைச்சதும் நல்ல விசயம் தானே! அதுக்கு என் பையன கைகாட்டி விட்டு போனது தான் எனக்கு பிடிக்கல… அம்மாவா? புருசனா?ன்னு உன் பொண்ண தடுமாற வைச்சு, அவ நிம்மதிய கெடுத்து வச்சுட்டியே?”

“அது… அந்த சூழ்நிலையில யோசிக்காம அப்படி…”

“எந்த சூழ்நிலையிலேயும் வாழ்க்கை ஆரம்பிக்கபோற பொண்ணு கிட்ட அப்படி பேசலாமா? அவ புருஷன் கூட சந்தோஷமா இருக்க வேணாமா? உன் பொண்ணுக்கு நீ செய்யாம யார் செய்யப்போறா? இத்தனை நாள் இங்கே இருந்ததுக்கு அர்த்தம் இல்லாம போய்டுச்சே? வார்த்தைக்கு வார்த்தை எப்படி நன்றி சொல்லப் போறேன்னு சொல்லிகிட்டே இருந்து, நிமிசத்துல இப்டி மாத்தி பேசி எல்லோர் மனசயும் கஷ்டப்படுத்திட்ட…” – கோதை

“நாங்க பேசினது பிடிக்கலன்னா நேராவே சொல்லி இருக்கலாம். என் பேத்தி மனச கஷ்டப்படுத்தினது எனக்கு கொஞ்சமும் பிடிக்கல, இப்போ அவங்க ரெண்டு பேரும் இருக்குற நெலமய பார்த்து, எனக்கே மனசு விட்டு போச்சு” தன் பங்காய் பெரியவரும் சொல்லி முடிக்க

“மனசு ஏகத்துக்கும் குழம்பி, பேசி வைச்சிட்டேன்!” கமலம்

“அவனும் வீம்புக்குன்னு அவளை படிக்க வைக்க அனுப்பிட்டான். ரெண்டு பக்கமும் மாட்டி தவிச்சுப் போயிட்டா என் மருமக! இனிமேலாவது அவ மனச சங்கடப்படுத்தாதே!” – கோதை

“இப்போ எங்கே இருக்கா?” என கேட்கும் போதே செங்கமலம் அழுது விட, தன் குற்றச்சாட்டை நிறுத்திவிட்டு, சமாதானப் படுத்தினார்.

“ரொம்ப நல்லா, பத்திரமா ஹாஸ்டல்ல இருக்கா! ரெண்டு வருஷம் படிக்க அனுப்பிட்டான்” என நடந்த விவரங்களையும், தற்பொழுதுள்ள நிலவரங்களையும் சொல்லி முடித்து,

“படிப்பு முடிச்சுட்டு தான் வருவேன்னு அவளும் வீம்பா அங்கேயே உக்காந்திருக்கா… படிக்க அனுப்ப எனக்கு கொஞ்சங்கூட இஷ்டம் இல்ல… நான் வளத்த பொண்ணு மனசு கலங்கி நிக்கறப்போ, என்னால தட்ட முடியல! வேற வழி இல்லாம தான் ரெண்டு பேருக்கும் தலையாட்டி வச்சு, அவளை அனுப்பி வச்சுட்டேன். அன்னைக்கு இங்கே யார் கூடவும் இருக்க மாட்டேன்னு அவ சொல்றப்ப வேற என்ன செய்ய? படிக்காம வேலைக்கு போயிருந்தாலும், இவங்க தனியா இருக்குறது மாறி இருக்காது. நடந்தத பத்தி இனிமே பேசாம இருக்கிறது தான் நல்லது”

கோதையம்மாள் ஒவ்வொன்றாய் சொல்ல தன் குழப்பமான, தவறான பேச்சில் பெண்ணை எப்பேர்பட்ட இக்கட்டில் சிக்க வைத்து விட்டோம் என்ற எண்ணமே மனதை குத்திக் கிழிக்க, கமலத்திற்கு யாரையும் ஏறெடுத்தும் பார்க்கப் தைரியமில்லை. மனமெங்கும் மகளைப் பார்த்து விட வேண்டுமென்ற பரிதவிப்பு தோன்ற முகவரியை வாங்கிக்கொண்டு சென்னைக்கு கிளம்பி விட்டார்.

பாண்டியனிடமும் பேசியதை மனதில் வைத்துக் கொள்ளாமல் இருக்கவும், தன் தவறை மறந்து விடவும் வேண்டி நிற்க, அவனுக்குமே சங்கடமாகிப் போனது.

“என்னை எப்போவும் உங்க அண்ணன் பையனா பாருங்க! அந்த உரிமையோட நீங்க என்ன சொன்னாலும் நான் தப்பா எடுத்துக்க மாட்டேன். நான் செஞ்சதெல்லாம் வீம்புக்காக இருந்தாலும், சிவு மேல நான் வச்ச பாசம் பொய் இல்ல… என்மேல நம்பிக்கை வச்சா அதுவே போதும்” என சொல்லி விலகிக் கொண்டான்.

சென்னைக்கு செல்ல அவனை உடன் அழைக்க, மனைவியின் செல்ல உத்தரவுகளை சுட்டிக் காட்டியே வர மறுத்து விட்டான்.

செங்கமலத்தை எதிர்பாராமல் பார்த்த சந்தோஷ அதிர்ச்சியில் சிவனியாவும் ஓடி வந்து அணைத்து, அவளின் முதுகு குலுங்கும் போது தான், மகள் தன்னை எந்த அளவிற்கு தேடி இருக்கிறாள் என்பதை கண்கூடாக கண்டவருக்கு, அந்த சமயத்தில் தன் மீதே வெறுப்பு வந்து தொலைத்தது.

“அம்மா ரொம்ப கஷ்டபடுத்திடேனா சிவா?” உச்சி முகர்ந்தே ஆறுதல் படுத்திட

“இல்லம்மா, உன்னை பார்த்த சந்தோஷம் அவ்ளோ தான்”

“இப்படி எல்லாம் அழுது சங்கடப்பட மாட்டியே தங்கம்? ரொம்ப தவிச்சுப் போயிட்டியா? நல்லா இருக்கே தானே?” மனம் பதைபதைப்போடு கேட்டு விட

“கொஞ்சம் மூச்சு விடும்மா… என்னை விட நீதான் இப்போ உணர்ச்சிவசப்பட்ற! நான் ரொம்பவே நல்லா இருக்கேன், எதுவும் கஷ்டம் இல்ல” என்றவளின் முகத்தை பார்த்த கமலத்திற்கு பெண்ணின் சற்றே மெலிந்த உடல் கண்ணில் பட்டாலும், அவளது திருமதி அடையாளங்களில் தெரிந்த திருத்தமான முகத்தைப் பார்த்து, பூரிப்பில் நெகிழ்ந்து விட்டார்.

“அம்மா தெரியாம ஏதோதோ பேசிட்டேன் சிவா, எதையும் மனசுல வச்சுக்காதேடி, ஏதோ ஒரு குழப்பம் வந்து என்னனென்னமோ பேச வச்சுருச்சு”

“எனக்கு நீ சொல்லாம யாரும்மா சொல்லுவாங்க? என்னோட வருத்தம் எல்லாம் உன்னைப் பார்த்ததும் போயிடுச்சு! மாமா தான் ரொம்ப சங்கடப்பட்டாங்க…” வருத்தம் தொனிக்கும் குரலில் சொல்ல

“தம்பிகிட்ட சொல்லிட்டேன் சிவா! உன்ன மாதிரியே அவரும் பெரிசுபடுத்தல! எல்லோரும் இப்படி ஒண்ணா சேர்ந்து என்னை அரவணைக்கும் போது தான், செஞ்ச தப்ப நினைச்சு மனசு குறுகுறுக்குது”

“அதெல்லாம் மறந்துடும்மா, இனிமே என்னை விட்டு போகாதே!” சின்னப் பெண்ணாய் செல்லம் கொஞ்சி வைக்க

“போகமாட்டேன் சிவா! நீயும் லீவ் கிடைக்கிறப்போ ஊருக்கு வா சிவா! அப்படி என்ன வீம்பு உனக்கு?”

“படிக்க நிறைய இருக்கு, அது போக எக்ஸ்ட்ரா கிளாஸஸ் வேற போறேன், லீவ் நாள்ல அத கவனிச்சு படிக்கவே டைம் போய்டும், அதான் வரலம்மா”

“தம்பி கூட பேசவும் செய்றதில்லையாம் நீ! ஏன்?”

“அதுக்குள்ள உன்கிட்ட பெட்டிசன் போட்டு முடிச்சாச்சா?” கோபமுகம் காட்ட

“என்கூட வரச்சொல்லி கூப்பிட்டப்போ சொன்னார் சிவா, அடம் பிடிக்காதேடி”

“இது எனக்கும் அவருக்கும் உள்ள டீல், இதுல நீ தலையிடாதே!” சட்டமாய் பேசி அந்த விஷயத்தை கத்தரித்து விட,

“அங்கே எல்லோரும் கவலபட்றாங்க! சேர்ந்து இருக்கத்தான் முடியலன்னா, இப்படி பேசாம கூட இருப்பாங்களான்னு என்னை கேட்டு வைக்குறாங்க சிவா”

“எந்த வண்டியில வந்தம்மா? என்ன சாப்பிட்ட?” என பேச்சை மாற்றி அவருக்கு பதில் சொல்வதை தவிர்த்து விட்டாள்.

ஒரு வழியாக தாயும் மகளும் சமாதானமாகிட, படிப்பை முடித்து விட்டே வருகிறேன் என சிவனியும் தன் முடிவில் நிலையாய் நின்று தாயை திருப்பி அனுப்பி வைத்தாள்.

கமலமும் தன் வேலைகளை மீண்டும் கோதை இல்லத்தில் ஆரம்பித்தாலும், தனி ஜாகையை மாற்றிக் கொள்ளவில்லை. ஏதோ ஒரு சங்கோஜம் எப்பொழுதும் மனதில் தேங்கிக் கொண்டே இருக்க, யார் என்ன சொல்லியும் அங்கே தங்க மறுத்து விட்டார். மீறி அழுத்தம் கொடுத்தால் மகளின் வருகைக்கு பிறகு மாற்றிக் கொள்வதாய் சொல்லி தப்பித்தார்.

வருடம் ஒன்று கடந்த நிலையில், சிவனியாவின் நடவடிக்கையில் சிறு முன்னேற்றமாய், ஸ்டிக்கர் குறைந்து டெக்ஸ்ட் மெசேஜும், தேவைப்பட்ட நேரங்களில் பேச்சும் சகஜமாய் நடைபெற ஆரம்பித்திருந்தது.

முதல் வருட படிப்பின் முடிவில் மூன்று மாத இண்டர்ஷிப்பும், இரண்டாம் வருட முடிவில் ஆறு மாதம் இண்டர்ஷிப்பும் வெவ்வேறு ஊர்களில் கிடைக்க, அதனை சொல்ல முன்னிட்டே ஆரம்பித்த பேச்சுக்கள் தொடர்ந்த கொண்டே இருந்தன. கோபங்களையும், வீம்புகளையும் ஒதுக்கி வைத்து இருவரும் சகஜமாய் பேசிட, தேவைக்கு மட்டுமே பேசியும், அதே சமயத்தில் பேசுவதை தவிர்க்கவும் செய்யாமல் நாட்களை ஒட்டிக் கொண்டிருந்தனர். 

பாண்டியனும் இரண்டு வருட இடைவெளியில் தன் தொழிலை மேலும் விரிவுபடுத்தத் தொடங்கி இருந்தான். நகரின் முக்கிய பேருந்து நிலையங்களில் சிறிய அளவிலான டீ மற்றும் வடை கடைகளை வாடகைக்கு எடுத்தவன், அதை நண்பர்களிடம் ஆறுமாத குத்தகை (லீசில்) விட்டு, அதன் வியாபார பெருக்கத்தை கொண்டு, குத்தகை தொகையை ஏற்றியும் இறக்கியும், பலருக்கு வேலை வாய்ப்பினை அளித்தும், தானும் அதில் வருமானத்தை பெருக்கவும் ஆரம்பித்திருந்தான்.

நண்பர்கள் கூட்டாக செய்து வந்த இந்த முறை பல இளைஞர்களுக்கு சுய தொழில் தொடங்க உந்துதலாய் இருந்து, அவனோடு சேர்ந்து வேலை செய்ய இன்னும் பலர் வரத் தொடங்கினார்.

தொகுப்பு(package) முறையில் சுற்றுலாத் தளங்களுக்கு அழைத்துச் செல்லும் டிராவல்ஸ் ஒன்றில் ஐந்து வருட ஒப்பந்தத்தில், கேட்டரிங்(சமையல்) கான்ட்ராக்டை பெற்று, அதற்கும் ஊர் ஊராக ஆட்களை அனுப்பியும். சமயத்தில் தானும் உடன் சென்று கவனித்துக் கொண்டான்.

தனது ஹோட்டலுக்கு அருகில் உள்ள சிறிய இடமும் வாடகைக்கு கிடைக்க அங்கே “சினி சில்&கூல்” என்ற பெயரில் பழங்களும், ஜூஸ்&ஐஸ்கிரீம்ஸ் வியாபாரத்தை தொடங்கி இருந்தான்.

நடைமுறைகளை மாற்றி வைத்தும், புதிய முறைகளை அறிமுகபடுத்தியும், நிற்கவும் நேரம் இல்லாமல் தொழிலை நன்றாய் விரிவுபடுத்த, அதுவும் அவனை ஏமாற்றாமல் கை கொடுத்தது. தடைகள் அற்ற பாதை பாண்டியனுக்கு பரிவாரமாய் மாற, வியாபாரம் நன்றாய் முன்னேற்றம் கண்டது.

இரண்டு வருடங்கள் இருவரையும் உள்வாங்கிட, படிப்பையும், விடுதி வாசத்தையும் முடித்து, யாருக்கும் சிரமம் வைக்காமல் தானாய் கோதை இல்லத்தை வந்தடைந்தாள் சிவனியா.

எப்பொழுதும் போல் பாண்டியன் காலை பத்து மணிக்கு அங்கே வர, மனைவியின் தெரிவிக்கப்படாத வருகை கணவனுக்கு ஏமாற்றத்தை அளித்தது. தன்னை எதிர்பார்க்காமல் அவளாய் வந்து சேர்ந்தது அவனுக்கு சற்றும் பிடிக்கவில்லை. அதை அவன் பேச்சிலேயே காட்டி விட்டான்.

“ரெண்டு நாள் ஆகும்னு சொல்லிட்டு இப்போ வந்திருக்க?” எந்த வித விளிப்பும் இல்லாமல் பாண்டியன் கேட்டு வைக்க, இவள் தான் தடுமாறிப் போனாள்.

“ஃப்ரண்ட்ஸ் கூட அவுட்டிங் பிளான் கான்சல் ஆயிடுச்சு, உடனே வந்துட்டேன்” – சிவனி

“நம்ம வீட்டுக்கு வரமா இங்கே வந்திருக்கே?” மீண்டும் அவன் குற்றம் சாட்டி பேச

“அப்போ இது யாரு வீடுடா வருணா? உன் தூக்கம் கெடக்கூடாதுன்னு இங்கே வந்து இறங்கிட்டா.. வந்தவள “வா”ன்னு சொல்லாம, நிக்க வச்சு கேள்வி கேக்குற?, எதுவா இருந்தாலும் அங்கே போய் பேசிக்கோ” என இருவரையும் கிளப்பிவிட, இரண்டு ட்ராலிகளை அவன் முன்பு கொண்டு வந்து வைத்தவள், அவளால் தூக்க முடிந்த சிறிய பேக்கினை மட்டும் எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.

‘என்னை போர்ட்டர் வேலைக்கு மட்டுமே இவ தேடற’ என மனதிற்குள் முணுமுணுத்தபடியே வீட்டிற்க்கு வந்து, கதவைத் திறந்தவனின் வேகத்திலேயே அவன் கோபம் துல்லியமாய் தெரிந்தது.

அதே அளவில் கோபம் சிவனிக்கும் வந்து நிற்க, ‘ஸ்டார்ட் ஆயிடுச்சு, இப்போ எல்லாத்துக்கும் இவர் கோபத்தை பார்த்தே நாளை கடத்தணும்’ அவளும் மனதிற்குள் புலம்ப,

“வர்ற விஷயத்த, பஸ்ல ஏறிட்டும் சொல்ல முடியல, அவ்ளோக்கு மறதியா?” – பாண்டியன்

“தட்கல் டிக்கெட் எடுத்து ட்ரெயின்ல வந்தேன், சொல்ல நினைக்கும்போது டவர் கிடைக்கல, வந்து இறங்கினதும் போஃன் அடிச்சா உங்க மொபைல் சுவிட்ச் ஆஃப், நீங்க மொபைல் ஆன் பண்ணற வரைக்கும் அங்கேயே உக்கார முடியுமா?” சிவனி

“டிக்கெட் எடுத்த உடனே சொல்லி இருக்கலாம். ரெண்டு கழிச்சு இங்கே என்னை டிக்கெட் போட வச்சுட்டு, சொல்லாம வந்து நிக்கிற” – பாண்டியன்

“அவசரமா பேக்கிங் செஞ்சதுல மறந்திட்டேன் மாமா!” இவள் இறங்கி வந்து சமாதானமாய் பேச வேண்டி இருந்தது.

‘எல்லாரும் ஒரு வாரம் கழிச்சு பாக்குற பொண்டாட்டிய பார்த்தே கட்டிபிடிச்சு டூயட் பாடுவாங்க, இங்கே ரெண்டு வருஷம் கழிச்சு பாத்தாலும் கரிச்சுக் கொட்டிகிட்டே இருக்காரு, சிரிச்சு பேசுறதெல்லாம் போஃன்ல மட்டும் தான் போல… பேசமா அதுலயே குடும்பம் நடத்தி இருக்கலாம்’ என தன் போக்கில் முணுமுணுத்தவாறே வேலைகளை பார்க்கப் போக

“இதுக்கு முன்னாடி நீ மட்டும் தனியா வந்திருந்தா இவ்ளோ கேள்வி கேக்க மாட்டேன், வந்து கதவ தட்டுனா தொறக்க மாட்டேனா? அவ்ளோ கும்பகர்ணனா நானு” அசராமல் கேள்வி கேட்க

“திரும்பவும் நான் போயிட்டு, உங்ககிட்ட சொல்லிட்டே வர்றேன்! வந்து பஸ் ஏத்தி விடுங்க” என அதட்டலில் சொல்லவும் தான் அமைதியாகிப் போனான்.

“எல்லாத்தையும் பழக்கப்படுத்திக்கோன்னு சொல்றது, சரின்னு செஞ்சா, இப்படி குத்திக் கிழிக்கிறது, வந்த அரைநாள்லயே மூச்சு முட்டுது. எப்படி தான் இவர் கூட குப்பை கொட்றதோ தெரியல?” சலித்தபடியே சத்தமாய் பேசி வைக்க

“இனிமே எதுவா இருந்தாலும் சொல்லிட்டு செய்” பெரிய மனதாய் சொல்லிவிட்டு சென்று விட்டான்.

அடுத்து வந்த மூன்றாம் நாளில், டிராவல்ஸில் ஒரு வாரம் ஆந்திரா பேக்கேஜ்க்கு சமையல் வேலைக்கு என ஒரு ஆள் குறைய, அதற்கு பதிலாய் இவன் கிளம்பி நின்றான். விடாமல் வருவேன் என சிவனியா அடம் பிடிக்க

“நான் ஊர் சுத்தி பாக்கப் போகல! அடுப்படியில நிக்க போறேன். என்னால எங்கேயும் அசைய முடியாது சிவும்மா!”

“ஷப்பா! இப்படி கூப்பிட இவ்ளோ நாளா மாமா?” அவன் பேர் சொல்லி அழைக்காததை சுட்டிக்காட்ட,

“சாரிடா! நிறைய வொர்க் டென்சன், அதான் அன்னைக்கு அப்படி பேசிட்டேன். உன்னை நான் மறப்பேனா?”

“இங்கே ரொம்ப போர் அடிக்குது, அங்கே வந்து நீங்க செய்றத பார்த்துகிட்டு இருக்கேன்”

“ரோட்ல நின்னு டீ போட்டு குடுப்பேன் அங்கேயெல்லாம் நீ நிக்க வேணாம் பாப்பா”

“நான் பஸ்ல உக்காந்திருக்கேன் மாமா!, இத பத்தி தான் படிச்சுட்டு வந்திருக்கேன், கத்துகிட்ட மாதிரி இருக்கும் என்னையும் கூட்டிட்டு போங்க”

என்ன சொன்னாலும் கேட்காமல் அடம் பிடித்து வைக்க, இருவரும் சேர்ந்தே பயணப்பட்டனர்.