பாலா வீடு வந்து சேர்ந்திருந்தான்.
வந்ததும் பாலா செய்த வேலை, ஜீவன் பவானிக்காக வாங்கித் தந்திருந்த பொருட்களைத் தேடி எடுத்து, அதை பரண் மேல் விசிறி எறிந்ததுதான்.
சற்று நேரத்தில், ஜீவனுடன் பேசி முடித்து நாதனும் வீடு வந்திருந்தார்.
வந்தவர் பாலா, வரவேற்பறையில் அமர்ந்திருந்ததைப் பார்த்து, “என்னடா? இன்னும் கிளம்பலையா??” என்று கேட்டார்.
“இதோ கிளம்பனும்”
“சரி கிளம்பு”
“அப்பா, நீங்களும் வாங்களேன்”
“நான் எதுக்கு பாலா? அதோட பவானி தனியா இருப்பா… வேண்டாம்டா”
“அவதான் தூங்கிட்டு இருக்காளப்பா. அவ முழிக்கிறதுக்குள்ள நீங்க வந்திடலாம்”
“வேண்டாம் பாலா”
“நீங்களும் அங்க வந்து எத்தனை நாளாச்சு? இன்னைக்காவது வாங்கப்பா”
நாதன் யோசித்தார்.
“யோசிக்காதீங்கப்பா. வீடென்ன ரொம்ப தூரத்திலேயா இருக்கு. இங்கதான…”
“நானும் நினைச்சேன் பாலா. நாம போய் மருமகள கூப்பிடனும்ன்னு. ஆனா பவானி… “
“நீங்க, அங்கே வந்திட்டு உடனே திரும்பிடுங்க. நானும் பல்லவியும், அங்கேயே இருந்திட்டு நாளைக்கு காலையில வருவோம்”
“சொன்னேல, வெளியே போறோம்னு…”
“ஆமாப்பா…”
“…”
“நாளைக்கு காலையில பவானியை ரெடியா இருக்கச் சொல்லுங்க. நான் வந்தவுடனே, அவளைக் கூட்டிட்டு போய் மதன் வீட்ல விட்டுருவேன்.”
“அது நாளைக்குப் பார்க்கலாம் பாலா. இப்போ வா போகலாம்”
“இல்லைப்பா, நீங்க என்ன சொன்னாலும் இது நடக்கும்”
“சரி… சரி” – நாதனின் குரலில் அலட்சியம் இருந்ததே தவிர, ஆமோதிப்பு இல்லை.
“சரி. நீங்க ஏன் இவ்ளோ லேட்டா வந்தீங்க??”
“அது… “
“அவனோட பேசினீங்களா?”
“ஆமாடா”
“என்ன சொன்னான்?”
“நான் தெளிவா பேசிட்டேன் பாலா. அவர் பவானியை வேண்டாம்னு சொல்லிட்டாரு.”
“பார்த்தீங்களா?? போலீஸுன்னு சொன்னதும் பயந்துட்டான். இல்லைன்னா பவானியை ஏமாத்திருப்பான். ஆனா இதுவும் ஏமாத்திரதுதான்! “
“தேவையில்லாம பேசாதடா”
“சரிப்பா. நான் வெளியில இருக்கேன். நீங்க வாங்க”
“ம்ம்ம், சரி போய் உட்கார்ந்திரு… நான் வரேன்”
பாலா வெளியே சென்றுவிட்டான்.
கிளம்புவதற்கு முன்பு, நாதன் பவானி அருகில் சென்று பார்த்தார். அவள் அயர்ந்து உறங்குவது போல் இருந்தது. மாத்திரை போட்டுக் கொண்டாளா?? என சோதிக்கும் போது, அது அவர் வைத்த இடத்தில் அப்படியே இருந்தது.
சிரித்துக் கொண்டார்.
தான் எடுத்துக் கொடுக்கவில்லை என, தன் மீது பவானிக்குக் கோபம் என்று புரிந்தது. சீக்கிரம் வந்து, அவளுக்கு வேண்டியதைக் கவனிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.
பவானிக்குச் செய்வது போலே பாலாவுக்கு செய்ய வேண்டும் என நினைத்ததால், அவனுடன் கிளம்பிச் சென்றார் .
*****
தந்தையும் அண்ணனும் கிளம்பிச் சென்ற பின், பவானி எழுந்து அமர்ந்தாள். உண்மையில் அவள் உறங்கவில்லை. கண் மூடிப் படுத்தபடியே, அவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
கண்டிப்புடன்,
பாலா, பவானி மதன் வீட்டிற்குப் போக வேண்டும் என்று சொன்னது…
கலக்கத்துடன்,
அதற்கு நாதன் ‘சரி சரி’ என்று சொன்னது…
கடைசியில்,
ஜீவன், தன்னை வேண்டாம் என்று சொன்னது…
மேற்கூறியவை எல்லாம்..
பவானியின் மனதிற்குள் ஒலித்துக் கொண்டிருந்தது.
கட்டிலில் இருந்து எழுந்தவள், அறைக்குள் அங்கும் இங்கும் நடந்தபடியே ‘என்ன செய்ய? என்று யோசித்தாள்.
மீண்டும் நம்பிக்கையின்மை வந்தது. அது ஜீவனைப் பார்த்துப் பேச வேண்டும் என்று தோன்றச் செய்தது.
ஆனால் இந்நேரத்தில் ‘எப்படிப் பார்க்க முடியும்? என்று மனம் தவித்தது.
அத்தோடு தந்தைக்குத் தெரியாமல் வீட்டை விட்டு போவதற்கு மனம் மறுத்தது. எனினும் ஜீவனின் முடிவு பற்றி தந்தை சொன்னது மனதைப் பிசைந்தது.
ஆகையால் மறுபடியும் தந்தை பேச்சை மீறினாள்.
இது வழக்கமாக அவர்கள் சந்திக்கும் நேரம் இல்லையென்பதால், ஜீவனை அந்நேரம் அந்த இடத்தில் எதிர்பார்ப்பது சரியா?? என்று தனக்குள் தத்தளித்தாள்.
இருந்தும் ஒரு நம்பிக்கையுடன்,
இருக்கையை நோக்கிச் விரைந்து சென்றாள்.
*****
மலைப்பிரதேசம் மாலை நேரத்தைத் தாண்டி விட்டிருந்தது. இருளுக்குள் மூழ்கி மறைந்து போக மரங்கள் செடி கொடிகள் தயாராகிக் கொண்டிருந்தன. சில இடங்களில் வீடுகளின் வாசல் விளக்கு ஒளிரச் செய்யப்பட்டு இருந்தது.
வேக வேகமாக, மலைச் சரிவில் ஏறி வந்தவள், மூச்சிரைக்க மஞ்சள் இருக்கைக்கு நடந்து வந்தாள்.
அங்கு ஜீவனைக் கண்ட பின்தான் நிம்மதியாக நம்பிக்கையுடன் மூச்சு விட்டாள்.
ஜீவன் சார்! எப்படி இங்கே? – நாம்.
தன்னை இவ்வளவு பேசியவர்கள், பவானியை ஓரளவிற்காவது பேசி இருப்பார்கள் என்று கணித்திருந்தான்.
அவளுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் மற்றும் நாதனிடம் கூறியது போல் பவானிக்கு நிரம்ப விடயங்களைப் புரிய வைக்க வேண்டும் என்று நினைத்தான்.
இதனால், இங்கே இருக்கையில் இப்படி இயற்கையுடன் இன்னல்களை இயம்பியபடி இருக்கின்றான்.
முன்பொருநாள் அமர்ந்தது போல், இருக்கையின் நடுவே அமர்ந்து கொண்டு, இரு கைகளையும் பக்கவாட்டில் நீட்டிக் கொண்டு, கண்களை மூடியபடி அமர்ந்திருந்தான்.
அவன் மூடிய விழிகளுக்குள், அவனை மூழ்கடிக்கும் நேசத்துடன், பவானி தெரிந்தாள்.
“ப்ச்” என்று சொல்லிக் கண் திறந்தான்.
அவன் விழிகளுக்குள் பவானியின் பிம்பம் விழுந்தது.
தலையை நேரே நிமிர்த்தி, திரும்பிப் பவானியைப் பார்த்தவன், “வா, நீ வருவேன்னு நினைச்சேன்??” என்றான்.
“எப்படி?” என்று சொல்லிக் கொண்டே வந்து அமர்ந்தாள்.
இக்கேள்விக்குப் பதில் சொல்வதை விட, ‘ஏன்?’ என்ற கேள்விக்குப் பதில் சொல்வதே நல்லது என நினைத்து ஜீவன் அமைதி காத்த தருணங்கள் – இவை.
மரங்கள் அடர்த்தியான பகுதி என்பதால், மாலை நேரத் தென்றல் காற்று இருவரையும் தொட்டுச் சென்று கொண்டிருந்தது.
“ஜீவன்” – மாறா நேசிப்பின் குரல்.
“சொல்லு”
“வீட்ல எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சி”
“ம்ம்ம்… ஆனா எப்படி??”
“நாம இங்கே பேசிக்கிட்டு நின்னதை, பல்லவி பார்த்திருக்கா. அவதான்…”
“அப்போ, நீயா யார்கிட்டயும் எதுவும் சொல்லலையா??
“நான்… நான் என்ன?… புரியலை” – பவானியின் சொற்கள் பிறழியது.
“என்னையப் பத்தி?”
“ம்ம், சொன்னேன். அப்பாகிட்ட மட்டும் சொன்னேன்”
“ஓ!” – ஓராயிரம் அர்த்தங்கள் கொண்ட ‘ஓ’ இது.
ஜீவனைப் பற்றி வீட்டில் சொல்லியதால்தான், தன் மீது கோபம் கொண்டு, அப்பாவிடம் தன்னை வேண்டாம் என்று சொல்லியிருப்பாங்களோ?? என பவானி நம்பிக் கொண்டிருந்ததால் நிசப்தம் நிரம்பிய தருணங்கள் – இவை.
“ஜீவன்”
“சொல்லு”
“என்ன ஒண்ணும் பேச மாட்டிக்கிறீங்க??”
எந்தன் மனநிலையை, எந்த விதத்தில் உன்னிடம் புரிய வைப்பேன் என்று ஜீவன் குழம்புவதால் குரல்கள் இல்லாத தருணங்கள் – இவை.
“ரெண்டு நாள் டைம் கேட்டிருந்தீங்கள, அதுல என்ன பண்ணப் போறீங்க?” – பவானி.
“நான் அன்னைக்கே சொன்னேன்ல பவானி, உனக்காக நீதான் முடிவு எடுக்கணும்னு. ஸோ நீயே முடிவெடு”
ஜீவன், பவானியை முடிவெடுக்கச் சொல்லி தன் முடிவைத் தெரிவித்தான்.
“என்ன?? காலையில ஒரு மாதிரி பேசுனீங்க. இப்போ வேற மாதிரி பேசுறீங்க” – பவானி குரலில் நம்பிக்கை குறைய ஆரம்பித்தது.
“இல்லை பவானி, நம்ம ரெண்டு பேருக்குமே பிரச்னை இருக்கா? அதான் இதெல்லாம் சரியாய் வருமான்னு யோசிக்கிறேன்”
இதைச் சொல்லி முடிக்கும் நொடியில் ஜீவன் மனம் நொடிந்து போயிருந்தது.
“அது உங்களுக்கு இப்போதான் தெரியுமா?”
பவானியின் கேள்வி, ஜீவனின் மனதை மேலும் வருத்தம் கொள்ளச் செய்தது.
ஜீவன் எடுத்த முடிவு என்னவென்று தெரியும் என்பதால் பவானி கோபத்திலும், எடுத்த முடிவை, எப்படிப் பவானியிடம் சொல்ல என ஜீவன் கவலையிலும் இருப்பதால், வார்த்தைகள் இல்லாத தருணங்கள் – இவை.
“பவானி, நான் சொல்றதைக் கொஞ்சம் புரிஞ்சிக்க ட்ரை பண்ணு”
“சொல்லுங்க”
“இங்க பாரு, உன்னைய பார்த்துக்கிறதுக்கு ஒரு பேமிலி இருக்கு. நீ நல்லா இருக்கணும்னு, அவுங்க யோசிக்கிறாங்க. அதை நீ புரிஞ்சிக்கணும்”
“நீங்க ‘நான் பார்த்துகிறேன்னு’ என்கிட்ட சொன்னப்பவும் இதே பேமிலி எனக்காக இருந்தாங்க”
“ப்ச் என்னாச்சு பவானி? அப்பவே ஒரு மாதிரி நம்பிக்கை இல்லைன்னு சொன்னேல. டேப்லெட் போட்டியா??”
“அப்பா எடுத்துக் கொடுத்தாங்க. “
“ம்ம்ம், நாதன் சார், அதெல்லாம் கரெக்டா பண்ணிடுவாரு.”
விரக்தியில் சிரித்தாள்.
“ஏன் சிரிக்கிற?” – ஜீவன்.
“நாதன் சார் எல்லாம் கரெக்டா பண்ணுவாங்க. அதனால நீங்க எதையும் கத்துக்க வேண்டாம்.”
அவன் பேசிய வசனம் கொண்டே, அவனை வாட்டம் கொள்ளச் செய்தாள்.
ஜீவனிடம் பேசினால் நம்பிக்கை வரும் என்று எதிர்பார்த்தவளுக்கு, இது பலத்த ஏமாற்றமே!!
சற்று முன்பு நடந்த நிகழ்வுகளால், ஏற்கனவே நம்பிக்கை இழந்திருந்தான், ஜீவன்.
“பவானி, இன்னைக்கு உங்க அப்பா சில விஷயம் பேசினாரு.” – ஜீவன்.
“…. “
“அதான், நான் இப்படி… “
“ஓ!” – பவானியின் இந்த ஓகாரத்தில் ஓசையில்லா ஓடியம்(பரிகாசம்) இருந்தது.
“நீயும் கொஞ்சம் யோசிச்சு முடிவு எடு…” – முடிந்த அளவு தன் குரலைச் சாதரணமாகக் காட்டினான்.
“யோசிக்காமதான் முடிவு எடுத்திருப்பேன்னு நினைக்கிறீங்களா??” – ஜீவன் முகத்திற்கு நேரே சட்டென்று பதில் தந்தாள்.
“நீ ஏன் இப்படி பேசிக்கிட்டு இருக்க?”
“இதையே கேள்வியை, நான் கேட்டா உங்ககிட்ட பதில் இருக்கா??”
“சத்தியமா இல்லை”
“அப்போ என்கிட்டயும் கேட்காதீங்க”
“நான்… பவானி நான் எப்படின்னா??”
“இதான் நீங்க…” என்று கண்களில் கஷ்டப்பட்டுப் பிடித்து வைத்திருக்கும் கண்ணீரோடு, அழுத்திச் சொன்னாள்.
“…”
“இவ்ளோதான் நீங்க…” என்று ஜீவன் கஷ்டப்பட்டு, அவளிடம் வரவைத்த புன்னகைத் தந்து, அசட்டையாகச் சொன்னாள்.
ஜீவன், பவானியின் அழுத்தத்தையும் அலட்சியத்தையும் அர்த்தம் கொள்ள இயலாமல் அவதிப்பட்டான்.
“கடைசில இது பரிதாபம்தான்… கரெக்டா??” – பவானி.
“நான் அப்படிச் சொன்னேனா??”
“அப்போ நீங்க சொல்றதுக்கு என்ன அர்த்தம்?”
“பவானி … ப்ளீஸ் புரிஞ்சிக்கோ!” என்று பொறுக்க முடியாமல் எழுந்துவிட்டான்.
“என்ன புரியணும்??”
“எனக்கு இந்த மாதிரி அன்பு புதுசா இருக்கு”
“…”
“உங்க அப்பா வந்து என்கிட்ட கெஞ்சிறப்போ, அவரைப் பார்த்துப் பாவப்படறேன்”
“…. “
“நீ வந்து பேசிறப்போ… ” என்று பாதியில் நிறுத்தினான்…
“…”
“உனக்கே தெரியும்”
“ம்ம்ம் தெரியும். பரிதாபப் படுறீங்க”
“நீ வீட்டுக்குப் போ பவானி. இப்படிப் பேசுறதா இருந்தா பேசவே வேண்டாம்.” என்று கோபம் கொண்டான்.
“சரி சொல்லுங்க” என்று அவன் கோபம் தணிக்கும் குரலில் கூறினாள்.
“உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல மாட்டிகிட்டு, முடிவெடுக்க முடியாம முழிக்கிறேன் பவானி” – தணியாத கோபம் கொண்ட குரல்.
“….”
“எனக்காக நீங்க ரெண்டு பேரும், கொஞ்சம் யோசிங்களேன். ப்ளீஸ்”
பவானி சிரித்தாள்.
“ஏன் சிரிக்கிற??”
“நீங்க ஏற்கனவே முடிவு எடுத்திட்டிங்க” – பவானியின் குரலில் ஏமாற்றம் தெரிந்தது.
“என்ன முடிவு??.”
“‘நான் வேண்டாம்னு’ எங்க அப்பாகிட்ட சொன்னீங்களா??”
ஜீவனைக் குறை சொல்லும்
பார்வையுடன், பவானி பார்த்தாள்.
“பர்ஸ்டே சொல்லியிருக்கலாமே… இது என்னோட பிரச்சனை என்னோடயே போகட்டும்னு சொன்னேன்ல.” – பவானி.
“….”
“நீங்கதான் கேட்காம…. “
“…. “
“சும்மா பேசிக்கிட்டு மட்டும் இருந்திருக்கலாம்”
“பவானி, நான் என்ன பேசுறேன்? நீ என்ன பேசுற??”
“எல்லாம் ஒண்ணுதான்”
“நான் கேட்கிறது ஒண்ணே ஒண்ணுதான். அப்பாவும் பொண்ணும் கொஞ்சம் எனக்காக யோசிங்களேன்”
“….”
“நான் ரெண்டு பேரையுமே நல்லா பார்த்திக்கிறேன்னு சொல்றேன்”
“அப்போ அப்பாகிட்ட சொன்ன முடிவு”
“நான் சொல்றேன்ல பவானி. எனக்கு அன்பே புதுசு. அதையே ஒழுங்கா ஹேண்டில் பண்ண முடியல. இதுல ஆயிரத்தெட்டு பிரச்சனை வேற!!”
“ஏன் எனக்குப் பிரச்சனை இருக்குன்னு…” என்று பவானி ஆரம்பிக்கும் போதே…
“இங்க பாரு பவானி, நான் பிரச்சனைன்னு சொன்னது… உன்னோட முடிவு… உங்க அப்பா முடிவு. நான் எடுத்த முடிவு.. புரிஞ்சிக்கோ” என்று தெளிவு படுத்தினான்.
“… “
“நீ யோசி பவானி..”
நிசப்தம் மட்டுமே!!
“என்ன யோசிக்க? இதுல இன்னும் என்ன இருக்கு யோசிக்க??” என்று அதுவரைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தக் கண்ணீரை கட்டவிழ்த்து விட்டாள்.
“உடனே அழு ஆரம்பிச்சிரு” என்று தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டான்.
“நாலு வார்த்தைப் பேசுறதுக்குள்ள, இப்படி அழுதா நான் என்ன செய்ய??”
“…”
“ஏன்டா இந்த ஊருக்கு வந்தோம்னு தோணுது??”
“…”
“இருந்த கொஞ்ச நிம்மதியும் போன மாதிரி இருக்கு”
“…”
“நாளைக்கே வேற ஊருக்குப் போகலாம்னு நினைக்கிறேன்”
நிசப்தம் மட்டுமே!!
“காலையில என்னோட பிரச்சனையைச் சொல்றப்போ, எப்படிப் பேசினீங்க? இப்போ என்னாச்சு??” – பவானி.
“இப்போ பிரச்சனை அது இல்லை… உங்க அப்பா”
“ஓ!” – இதழில் இகழ்ச்சிப் புன்னகையும், இரு விழிகளில் இருத்தி வைக்கப்பட்டக் கண்ணீரும் தெரிந்தன.
ஜீவன் பார்த்தான்.
“ப்ச். உன்கிட்ட கெஞ்சிக் கேட்கிறான், உங்க அப்பாகிட்ட கொஞ்சம் பேசிப்பாரு” – ஜீவன்.
“அப்பாவுக்கு நான் பண்றது எதுவுமே பிடிக்கலைன்னு சொல்லறாரு. அவர்கிட்ட போய் நான் என்ன பேச முடியும்?” – பவானியின் குரலில் இயலாமை தெரிந்தது.
“அவருக்கு நான் பண்றதும் சுத்தமா பிடிக்கலை. நானும், என்ன பேச முடியும் சொல்லு?” – ஜீவனே இயலாமையுடன் தெரிந்தான்!
“…”
“இங்க பாரு, எனக்கு மதனோ, பாலாவோ ஒரு பொருட்டே இல்லை. ஆனா நாதன் சார அப்படி விட முடியலை”
“ஏன்??”
“காரணம் இருக்கு பவானி. உனக்கு முன்னாடியே, அவருக்கு என்னையப் பத்தித் தெரியும். இருந்தும் இன்னும் மரியாதையைத்தான் பேசிறாரு. அதான்… அது எனக்குப் பிடிச்சிருக்கு.”
“..”
“ப்ச், அவரை எனக்குப் பிடிக்கும் பவானி. அதான் அவர் வந்து பேசிறப்போ மனசு மாறிடுது”
“…”
“ஏற்கனவே ஒரு தடவ முடிவு எடுத்து வச்சிருந்தேன். அப்போ வந்து பேசினார். மாறிட்டேன்.”
“…”
“இதோ, இன்னைக்கு காலையில உன்கிட்ட பேசினத்துக்கு அப்புறம் அவ்வளவு தெளிவா இருந்த மாதிரி இருந்தது.”
“…”
“பாலா பேசினப்போ திருப்பிப் பேசத் தெரிஞ்ச எனக்கு… உங்க அப்பாகிட்ட பேச முடியலை”
“… “
“ஆமா பவானி. உங்கப்பா பேசினதும் மனசு மாறிடுச்சு. இல்லைன்னு பொய் சொல்லமாட்டேன். ‘நீ வேண்டாம்னு’ சொன்னேன் உண்மைதான்.”
“…. “
“அவர் என் மேல அக்கறையே இல்லாம ‘நீ என் பொண்ணுக்கு வேண்டாம்னு’ சொன்னா, அவரை எதிர்த்து என்ன வேணாலும் பண்ணலாம்”
“… “
“ஆனா, என்மேல அன்பு அக்கறை வச்சி சொல்றப்போ… என்னால ஒண்ணும் பண்ணமுடியலை”
நிசப்தம் மட்டுமே!!
பவானியின் மனது சமநிலையை இழக்கத் தொடங்கியது.
“நான் தப்பு பண்ணிட்டேன். நான் எங்க அப்பா சொல்றதைக் கேட்டிருக்கணும்.” – பவானி.
“நீ கேட்கணும்னு சொல்ற… நான் கேட்டுக்கிட்டு இருக்கேன்”
மறுபடியும், “எங்க அப்பா சொல்றதைக் கேட்டிருக்கணும்” என்றாள்.
“நீ எதைச் சொல்ற பவானி?”
“எப்பவும் இந்த பெஞ்ச் வரைக்கும்தான் அலோவ் பண்ணுவாங்க. அப்பாகிட்ட கேட்காம, நான் உங்ககூட வந்தது தப்பு.”
“….”
“அதான் அப்பா என் மேல ரொம்பக் கோபமா இருக்காங்க”
“ப்ச்.. இங்க இருந்து பேசினா என்ன? அங்கே போய் பேசினா என்ன??”
“அங்கே போனதினாலதான, எல்லாருக்கும் விஷயம் தெரிஞ்சது”
“யாரோட டிஸ்டபன்ஸூம் இல்லாம, தெளிவா முடிவெடுக்கலாம்னு நினைச்சேன். அது தப்பா??”
“முடிவு எடுக்கிறீங்க… எடுத்த முடிவை மாத்தறீங்க… அப்புறம் முடிவே எடுக்க முடியலைன்னு சொல்றீங்க. உங்களைப் புரிஞ்சுக்கவே முடியலை ஜீவன்”
“நான்தான் சொல்றேன்ல, உங்க அப்பாவை மீறி எதுவும் பண்ண முடியலைன்னு”
“அது இன்னைக்குத்தான் தெரியுமா?? என்னைக்கோ நீங்களும் அப்பாவும் பேசிட்டீங்கள!! அன்னைக்கே உங்களுக்குத் தெரியும்ல… அப்போ அப்படியே என்னைய விட்ருக்கலாமே?? எதுக்குத் தேவையே இல்லாம இவ்ளோ தூரம் வந்து…”
மறுபடியும் ஜீவன் எழுந்துவிட்டான்.
“இப்போ சொன்ன பார்த்தியா?? இதான் கரெக்ட்!!”
ஜீவன் பேசியது விளங்காமல், பவானியின் வழிகள் இரண்டும் விளக்கம் கேட்டு விழித்தன!
“நாதன் சாருக்குப் பிடிக்கலைன்னு தெரிஞ்சவுடனே, விட்ருக்கணும்… அது என் தப்புதான். பெரிய தப்பு”
ஜீவன் விருப்பம் பற்றி விளக்கம் தந்ததால், பவானியின் விழிகள் வலிகள் கொண்டன!!
நிசப்தம் மட்டுமே!! பவானியின் மனது சமநிலையில் இல்லை. முற்றிலும் நம்பிக்கை இழந்திருந்தாள். எதன் மீதும்! யார் மீதும்!!
“பாலாண்ணா சொன்னது கரெக்ட்தான்” என்று தனக்குள் முணுமுணுத்தாள்.
ஜீவனின் கோப விருட்சத்தின் விதைதான், பவானி மேலே கூறியது!
“என்ன?? பாலா என்ன சொன்னான்??” – ஜீவன்.
“உங்களை விடப் பெரியவங்க… மரியாதைக் கொடுத்துப் பேசுங்க”
“நீ மரியாதையை எனக்குக் கத்துக் கொடுக்க வேண்டாம். உன் அண்ணனுக்குப் போய் கத்துக் கொடு”
“….”
“முதல பாலா என்ன சொன்னான்னு சொல்லு?”
“அது எதுக்கு?? விடுங்க”
“எப்படியும் பாலா என்னைய பத்தி நல்லதா சொல்லியிருக்க மாட்டான். அதான் கேட்கிறேன் சொல்லு”
“வேண்டாம் விடுங்கன்னு சொல்றேன்ல”
“பரவால்ல சொல்லு… கேட்கிறேன்”
“நீங்க… நீங்க ஏமாத்திருவீங்கன்னு சொன்னாங்க.”
“ஓ! அத நீ கரெக்ட்டுன்னு சொல்ற. ரொம்ப சந்தோசமா இருக்கு பவானி”
“ச்சே இல்லை. நான் ஏதோ மைன்ட்ல… சாரி”
“என்ன ஏதோ?? தப்பு என் மேலதான். பாலா பேசினப் பேச்சுக்கு, அப்படியே போயிருக்கணும். இவ என்ன செய்வாளோன்னு நினைச்சி வந்தேன் பாரு… எனக்கு இதுவும் வேணும்… இன்னமும் வேணும்”
“இப்படிப் பேசாதீங்க. அது பாலாண்ணா சொன்னது..”
“நீ கரெக்ட்ன்னு சொன்னேல. அப்போ நீயும் அதை நம்புறேன்னு அர்த்தம்”
“ஏன் இப்படி? நான் ஸாரி சொன்னேன்ல” என்று பவானியும் எழுந்து கொண்டாள்.
ஜீவனுக்கு, தன்னை இவள் வீட்டில் இப்படியெல்லாம் பேசுகிறார்களா?? என்று நினைத்து கோபம் வந்தது. எனவே தன் சட்டைப் பையிலிருந்தக் கைக்குட்டையை எடுத்து “பிடி” என்றான்.
“நான் வாங்க மாட்டேன்” என்று அவன் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.
“போதும் பவானி. வாங்கிக்கோ”
பவானி, மறுப்பாய் தலை அசைத்து, தன் மனதைச் சொன்னாள்.
அவளை விலக்கி விட்டு, இருக்கை அருகில் சென்று கைக்குட்டையை வைத்துவிட்டுக் கிளம்ப யத்தனித்தான்.
“போகாதீங்க ஜீவன். ஏற்கனவே நம்பிக்கை இல்லை. நீங்களும் இப்படி பண்ணா?…ப்ளீஸ் திரும்பவும் பேசலாம்”
“இதுவரைக்கும் உன்கிட்ட சொன்னதில்லை. இப்ப சொல்றேன் ஜீவன் சாருன்னு கூப்பிடு”
“மாட்டேன். முடியாது”
“நான் ஏமாத்திருவேன்னு நினைக்கிறவ, என்னோட பேரைச் சொல்லிக் கூப்பிட வேண்டாம்” – ஜீவன் குரல் பிசிறடித்து.
பவானியின் மனநிலையில் பிரளயம் வந்தது.
“பேசாம கர்ச்சீப் எடுத்திட்டு போ பவானி”
“…. “
“சேர்ந்து வாழணும்னு நினைச்சு, ஒரு நாள்கூட ஆகலை. அதுக்குள்ள இவ்வளவு பிரச்சனை. வாழ்க்கை முழுசும்னா?? நினைக்கவே பயமாக இருக்கு”
“… “
“நாதன் சார் சொல்றது சரிதான். அவர் சொல்றதைக் கேக்கிறதான் நம்ம ரெண்டு பேருக்குமே நல்லது”
ஜீவன் நிறுத்திக் கொண்டான்!
இதுவரை தன்னிடம் இறைஞ்சிக் கொண்டிருந்தக் குரல், இப்போது தன்னருகில் இல்லை என்ற உணர்வு ஜீவனுக்கு வந்த தருணங்கள் – இவை.
ஜீவன் திரும்பிப் பார்த்தான்.
பவானி, இருக்கையில் இருந்த கைக்குட்டையை எடுத்துக் கொண்டு, நடக்க ஆரம்பித்திருந்தாள்.
என்ன நினைத்தானோ, “பவானி… பவானி நில்லு…” என்று பின்னேயே நடக்க ஆரம்பித்தான்.
அவள் நிற்காமல் நடந்தாள். ஓடி வந்து, அவள் முன்னே நின்றான்.
பவானியின் இமைகள் படபடத்தன. அத்தனைக் குளிரிலும் வியர்வை அரும்பின.
“என்னாச்சு பவானி??”
பவானி ஜீவனை விட்டு வெகு தூரம் சென்று விட்டிருந்தாள்! மனதளவில்!!
“தனியா உட்கார்ந்து யோசிச்சு பாரு பவானி. உனக்குப் புரியும்” என்றான், அவள் கூடவே நடந்தபடி!
எதையும் கேட்கும் மனநிலையில் பவானி இல்லை.
“எனக்கு நல்லா புரிஞ்சிடுச்சு. இது என்னோட பிரச்சனை. நான் பார்த்துக்கிறேன். ப்ளீஸ் பின்னாடியே வராதீங்க” என்று சொல்லி, விட்டுப் பவானி சென்று விட்டாள்.
அதற்கு மேல் ஜீவனும் முயற்சி செய்யவில்லை!
****
பவானி வீடு…
அல் பொழுதில் அஞ்சனம் பூசிய அழகான மலைப்பிரதேசத்தில், அசைவுகள் ஏதுமில்லா மரம் செடி கொடிகள்…
உடலை ஊசிபோல் குத்திக் கொண்டிருந்தக் குளிர்.
தன் மேனி எங்கும் அந்தக் குளிரை வாங்கிக் கொண்டு, உள்ளத்தை ஊசி போல் குத்திய நினைவுகளுடன், மௌன நிலையில் இருந்தாள்.
நாதன் வந்தார்.
“என்னம்மா?? பனி விழுது. நீ ஏன் இப்படி வாசல்ல உட்கார்ந்துகிட்டு இருக்க?? வா உள்ளே” என்று சொல்லியவாறு, பவானியை அழைத்துச் சென்றார்.
இருவரும் கட்டிலில் அமர்ந்தார்கள்.
“நீ தூங்கிக்கிட்டு இருந்த, அதான் அப்பா அண்ணி வீட்டுக்குப் போயிருந்தேன் பவானி”
“ம்ம்ம்”
“சாப்பிடுறியா??”
“வேண்டாம்ப்பா…”
“ஏன் பவானி? மாத்திரை போடணும்ல. இரு அப்பா எடுத்திட்டு வரேன்” என்று சமையலறைக்குச் சென்று தட்டில் சாப்பாட்டு போட்டு எடுத்து வந்தார்.
பவானியிடம் கொடுத்தார்.
“நீங்க சாப்பிடலைய்யா??” – பவானி.
“குட்டிப் பையனைப் பார்த்த சந்தோசத்தில், அங்கே கொஞ்சம் சாப்பிட்டேன். அதுவே போதும்” என்று சிரித்தார்.
பவானி சிரிக்கவில்லை.
சற்று நேரத்தில், பவானி சாப்பிட்டு முடிந்ததும் மாத்திரை எடுத்துத் தந்தார். விழுங்கினாள்.
“தூக்கம் வருதுப்பா…” என்று சொல்லிக் கட்டிலில் சாய்ந்தாள்.
“ம்ம்ம் சரிம்மா தூங்கு”
நாதன் கீழே விரிக்க ஆரம்பித்தார்.
“அப்பா”
“சொல்லும்மா”
“நீங்க இல்லாதப்போ… நான் ஜீவன் சாரைப் பார்க்கப் போனேன்” என்றாள் சுவற்றிற்கு முகம் காட்டிப் படுத்துக் கொண்டு…
ஜீவன் சார் என்ற பவானியின் வார்த்தை பிரயோகமே, நாதனுக்கு பல விடயங்களைப் புரிய வைத்தது.
ஒன்று ஜீவனின் வாக்கு!
மற்றொன்று பவானியின் வாழ்க்கை!
“சரி, அதை மறந்திடு. அண்ணி நாளைக்கு காலையில வரேன்னு சொல்லியிருக்காங்க பவானி”
“ம்ம்ம் சரிப்பா” என்றாள்.
ஆனால் உள்ளுக்குள் கலக்கம் கொண்டாள். அண்ணி வருவது உறுதி என்றால், தான் மதன் வீட்டிற்குச் செல்ல வேண்டுமே என்ற கவலை வந்தது.
நாதனின் இருதயம் பவானியின் வாழ்க்கையை நினைத்தும், பவானி இதயம் ஜீவனின் வார்த்தையை நினைத்தும் துடித்துக் கொண்டிருந்த தருணங்கள் – இவை.
“அப்பா”
“சொல்லும்மா”
“உங்களுக்கும் என்னைய பிடிக்கலையா??”
சரேலென எழுந்தவர், கட்டில் மேல் அமர்ந்தார்
“பவானிம்மா, யாருக்கு உன்னைய பிடிச்சாலும் பிடிக்கலைனாலும்… அப்பாவுக்கு பிடிக்கும்… சரியா… தூங்கு” என்று பவானியின் தலையை வருடிக் கொடுத்தார்.
அன்றைய இரவில்…
காலையில் புத்துணர்ச்சி தந்த நேசம், தற்போது பொய்யாய் போன உணர்வுடன் – பவானி!
நாளைய நாளை எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்ற சஞ்சல உணர்வுடன் – நாதன்!
அன்றைய தினம் வரை அவளுக்காக அள்ளி அள்ளித் தந்த அரவணைப்பை, அந்தி மாலை பேச்சில் அழித்து விட்ட உணர்வுடன் – ஜீவன்!
மலைப்பிரதேசத்தில் இன்றைய நாள்..
மலைப்பிரதேசம் காலைப் பொழுதைத் தாண்டி இருந்தது. நன்பகல் என்ற பொழுதும், வெயிலின் சாயல் கொஞ்சமும் இல்லாமல், கன மழைக் கொட்டிக்கொண்டிருந்தது.
இரவு முழுதும் இமை மூட முடியாமல் தவித்திருந்ததால், அப்பொழுதுதான் ஜீவன் விழித்திருந்தான்..
எழுந்தவுடனும் எழுவதற்கு முன்னும் நினைவில் நின்ற நியாபகம் பவானி மட்டுமே!!
இதுவரை எத்தனையோ கோபம், சண்டை, ஆத்திரங்கள் பார்த்தவனுக்கு பவானியின் கோபம் வித்தியாசமாக இருந்தது.
உடனே சென்று அவளைக் கண்டு சமாதானம் செய்ய வேண்டும் என்ற ஆசை வந்தது.
ஆசை வந்ததால் ஆர்வத்துடன் கிளம்ப ஆரம்பித்தான்.
தான் பேசிய வார்த்தைகளைக் கொண்டே, அவள் வாதாடிய விதம் அவனுக்குள் அவளுக்கான வாஞ்சையை வளர்த்தது!!
பிரயத்தனம் செய்து ஆடையைத் தேர்ந்தெடுத்தான்! அதில் பிரியப்பட்டு சட்டைப் பொத்தான்கள் போட்டுக் கொண்டான்!!!
சட்டைப்பை இருக்கும் இடத்தில் லேசாக தட்டியவாரு ‘கர்ச்சீப் மட்டும் மிஸ்ஸிங்’ என்று எண்ணினான்.
பட்டென்று கதவை அடைத்து விட்டு, தடதடவென படியிறங்கி வந்தான்.
மாடிப்படியின் முடிவில் நாதன் நின்று கொண்டிருந்தார்.
இவர் ஏன் இங்கே? – இது வெகு நேரத்திற்கு பின், நாமும், ஜீவன் சாரும்!!
மெது மெதுவாக வேகத்தைக் குறைத்தவன், நாதன் அருகில் வந்து நின்று, கீழே உள்ள கேள்வியைக் கேட்டான்.
“நாதன் சார், பவானி எப்படி இருக்கா??”
“???” – இது நாம், நாதன் மற்றும் வள்ளிம்மா.
“வீட்ல இருக்காளா?? அவளைப் பார்க்கணும்”
“???” – இது நாம், நாதன் மற்றும் வள்ளிம்மா.
“நேத்து கொஞ்சம்… ப்ச், அது எதுக்கு?”
“???” – இது நாம், நாதன் மற்றும் வள்ளிம்மா.
“அவர் உங்ககிட்ட ஏதோ சொல்லணும்னு சொன்ன்னாரு?” – வள்ளிம்மா.
“ம்ம்ம், சொல்லுங்க” – ஜீவன்.
நாதன் அமைதியாக இருந்தார்.
“சொல்லுங்க நாதன்” – வள்ளிம்மா.
நாதன் சொன்னார்.
ஜீவனின் மனப்பிரதேசம் பூகம்பம் கண்டது!
‘கிடைச்ச அன்பையும்… தொலைச்சிட்டு நிக்கிறேன்னா??’ என்று உடல் மொழிகளில் சொல்லி, இரு விழிகள் நீர் கோர்க்கப் படிகளில் அமர்ந்துவிட்டேன்.
ஜீவனின் இதயம் தான் நேசிக்கும் இருதயத்தை எண்ணி இயங்க மறுத்தன!!