UTN 14

UTN 14

உயிர் தேடல் நீயடி 14

அவனின் எதிர்பார்ப்பை வீணாக்காமல் ரவியிடமிருந்து அலைப்பேசி அழைப்பு வந்தது.

“சொல்லு ரவி, ஏதாவது தெரிஞ்சதா?”

“எஸ் சர்”

“யாரோட வேலை இது?” விபீஸ்வர் குரல் கோபமாக ஒலித்தது.

“ஒருத்தன் இல்ல சர், ரெண்டு பேர்”

“யார் அவனுங்க?”

“உங்களுக்கு நல்லா தெரிஞ்சவங்க தான்… மாணிக்கம், ரிக்கி”

“வாட்?” விபிஸ்வர் இதனை எதிர்பார்க்கவில்லை. தன் முன்னால் கைகட்டி பணிந்து நின்றவர்கள் இப்படியொரு காரியத்தை செய்திருப்பார்கள் என்று நம்புவது சற்று கடினமாக தான் இருந்தது.

“ஆர் யூ ஸுவர் ரவி?”

“எஸ் சர்… உங்க குடோன் பத்தி தெரியாத புது ஆளுங்க யாராலும் இத்தனை சுலபமா இவ்வளவு பெரிய வேலைய செய்திருக்க முடியாது… அதான், கடைசி மூணு மாசத்தில உங்க கம்பெனில நடந்த விசயங்களை அலசினோம்… ரெண்டு மாசம் முன்ன சூப்ரவைசர் மாணிக்கத்தை ஒழுங்கு நடவடிக்கை காரணமா வேலைய விட்டு தூக்கி இருக்கீங்க… ரெண்டு வாரத்துக்கு முன்ன அதே‌ காரணத்திற்காக ரிக்கியோட வேலையை பறிச்சது மட்டும் இல்லாம ஆஃபீஸ்ல இருந்து விரட்டி அடிச்சு இருக்கீங்க…” ரவி ஒவ்வொன்றாக விவரிக்க, விபீஸ்வர் பொறுமையோடு கேட்டிருந்தான்.

“அவங்க ரெண்டு பேர் மேலயும் சந்தேகப்பட்டு, அவங்க கால் ஹிஸ்டரிய பார்த்தோம்… உண்மை தெரிஞ்சு போச்சு, இந்த ஒருவாரத்துல அவனுங்க ஒருத்தருக்கு ஒருத்தர் ஃபோன்ல பேசினது மட்டும் திரீ சிக்ஸி ஃபோர் கால்ஸ்… லவ்வர்ஸ் கூட இவ்வளவு பேசி இருக்க மாட்டாங்க போல விபி சர்” என்று ரவி சொல்லி சிரிக்க, விபிஸ்வரின் முகத்தில் கோபத்தின் சிவப்பு கூடியது.

“என்னை சீண்டி பார்க்குற அளவுக்கு அவனுங்களுக்கு தைரியம் வந்துடுச்சில்ல… இப்ப எங்க அவங்க ரெண்டு பேரும்?”

“அவங்க ப்ளான்படி வேலை முடிஞ்ச அரைமணி நேரத்தில ரெண்டு பேரும் ரெண்டு திசையில பறந்துட்டாங்க… இப்ப ரிக்கி நியூடெல்லில இருக்கான், மாணிக்கம் ஐதராபாத்ல இருக்கான், எங்க ஆளுங்க அவங்கள வாச் பண்ணிட்டு தான் இருக்காங்க சர்”

“ரொம்ப புத்திசாலிங்கன்ற நினைப்புதான் போல, அந்த எலக்ரிஷியன் என்ன ஆனான்?”

“அவன் காசுக்கு ஆசைப்பட்டு ரிக்கி சொன்ன வேலைய முடிச்சிருக்கான்… அந்த காசுல ஃபுல்லா குடிச்சிட்டு மட்டையாகி இருக்கான்… ரெண்டு தட்டு தட்டினதும் எல்லாத்தையும் உளறிட்டான்”.

“உன்னால இவங்க மூணு பேரையும் நாளைக்குள்ள இங்க கொண்டு வர முடியுமா ரவி?”

“கண்டிப்பா விபி சர்” ரவியின் பதில் உற்சாகமாய் வந்தது.

விபீஸ்வர் சற்று யோசித்து, “கருணாகிட்ட அவங்கள ஒப்படைச்சிடு ரவி… மீதி வேலைய அவன் பார்த்துக்குவான்” உத்தரவிட, ரவி மறுக்காமல் ஆமோதித்திருந்தான்.
.
.
.

“விபி… விபீ… ஆர் யூ ஓகே?” விபீஸ்வரின் தோளைப் பிடித்து உலுக்கி கொண்டிருந்தாள் ஜனனி.

அவன் விருப்பமே இல்லாது கடந்து கால நினைவுகளிலிருந்து மீண்டு நிகழ்காலம் வந்து, “ஐ’ம் ஓகே ஜெனி” என்றான்.

“என்னாச்சு விபி உனக்கு? நீ ரொம்ப அப்நார்மலா தெரியுற! ஒழுங்கா ரெஸ்ட் எடுக்காம ஏன் ஆஃபிஸ் டென்ஷன் எல்லாம் மண்டையில ஏத்திக்கிற?” ஜனனியின் ஆதங்கமான கேள்விக்கு சிறுநகை புரிந்தவன், “இங்க ஒவ்வொரு இடமும் எனக்கு கவிய தான் நினைவுபடுத்துது ஜெனி… அதான் கொஞ்சம் டிஸ்டர்ப் ஆகிட்டேன்…” மெல்லிய குரலில் சொன்னான்.

“நினைச்சேன், சும்மா ஏன் முடிஞ்சு போனதெல்லாம் நினைச்சு மனச குழப்பிக்கற விபி?”

“கவியோட இருந்த ஒவ்வொரு நிமிஷமும் நான் என்னை நானா உணர்ந்த நிமிஷங்கள் ஜெனி! அவ மட்டும் தான் என் முழு வாழ்க்கைக்கான உயிரோட்டம்… இப்பவும் அவளோட நினைவுகளை மட்டும் தான் உயிர் மூச்சா சுவாசிட்டு இருக்கேன்” விபீஸ்வர் சற்று அதிகமான உணர்ச்சி பிடியில் பேச,

“நீ இவ்வளோ எமோஷனல் ஆக கூடாது… அது உன் ஹெல்த்க்கு நல்லதில்ல, நேரமாச்சு வா நாம கிளம்பலாம்” என்று அவனுக்கு கை கொடுத்து எழுப்பி, சக்கர நாற்காலியில் அமர உதவி புரிந்தாள்.

விபீஸ்வர் வீட்டிற்குள் நுழையும் போது, அவன் வரவுக்காக கூடத்து சோஃபாவில் இறுக்கமாக காத்திருந்தவளை பார்த்ததும் இவன் முகம் மென்மையாய் மலர்ந்தது.

“ஹேய் வர்ஷினி… வாட் எ சர்ப்ரைஸ்!” விபீஸ்வர் உற்சாகமாய் பேச, இப்போதுதான் ஜனனி அந்த புதியவளை கவனித்தாள்.

நேர்த்தியான சுடிதாரில், அமைதியான பேரழகோடு இருந்தாள் வர்ஷினி.

“சாரி… இன்னைக்கு தான் உங்களுக்கு நடந்த விபத்து பத்தி தெரிய வந்தது! காவ்யா பத்தி கேள்விபட்டு மனசுக்கு ரொம்ப கஷ்டமா போச்சு!” அவள் வருத்தம் தெரிவிக்க, இவன் முகத்திலும் வாட்டம் கூடியது.

“ஜெனி, இவங்க வர்ஷினி என் பெஸ்ட் ஃபிரண்ட்” அவன் அறிமுகப்படுத்த,
விபீஸ்வரின் தோழி என்பதற்கான அர்த்தம் ஜனனிக்கு நன்றாகவே தெரியுமாதலால், இவளிடம் அசட்டையான பார்வையை வீசினாள்.

வர்ஷினியின் கவனம் மொத்தமும் விபீஸ்வரிடம் தான் இருந்தது. “காவ்யாவோட இந்த நிலைமைக்கு நீ மட்டும் தான் காரணம் விபி!” அவள் கண்கள் கலங்க ஆத்திரமாக அவனை குற்றம் சாட்ட, அவனிடம் பதில் இல்லை.

“நான் கூட உன்ன என்னமோ நினச்சிருந்தேன்… ஆனா அறியாத அந்த சின்ன பொண்ணை வற்புறுத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டு, எண்ணி நாலே மாசத்தில அவளை பலிகொடுத்துட்டு இப்படி நிப்பன்னு நான் எதிர்பார்க்கல… உன்னால வாழ முடியாத இந்த வாழ்க்கைகாகவா, அத்தனை பிடிவாதம்! அத்தனை ஆர்பாட்டம்! இப்ப எங்க போச்சு உன் திமிரெல்லாம்! மொத்தமா வாரி கொடுத்திட்ட இல்ல அவளை…” காவ்யதர்ஷினியின் குழந்தை முகம் வர்ஷினி நினைவினில் வந்து போக, ஏனோ ஆத்திரத்தை அடக்கமுடியாமல் போனது.

விபீஸ்வர் இப்போதும் பதிலின்றி அவளை வெறுமையாக பார்த்திருந்தான்.

‘அவருக்கு என்மேல காதலெல்லாம் எதுவும் இல்ல மேடம்… என்னை அடையணும்கிற பிடிவாதம் மட்டும் தான்… அதனால தான் இப்படி எல்லாம் செஞ்சிருக்காரு… எங்க கல்யாண வாழ்க்கை நாள் கணக்கா? மாச கணக்கா?ன்னு தெரியல! ஆனா கூடிய சீக்கிரமே நான் அவருக்கு சலிச்சு போயிடுவேன்… அதுக்கப்புறம் நான் அவருக்கு தேவைபடமாட்டேன்…!’ கலக்கமான விழிகளோடு காவ்யதர்ஷினி முன்பு தன்னிடம் சொன்னது வர்ஷினி நினைவில் மோதியது.

“கடைசியில காவ்யா பயந்தமாதிரியே எல்லாம் நடந்து போச்சில்ல! அவளை உன் தேவைக்கு யூஸ் பண்ணிட்டு, இப்ப குப்பை மாதிரி தூக்கி எரிஞ்சிட்ட இல்ல”

வர்ஷினி மேலும் அவனை பழிக்க, இல்லையென்று தலையசைத்தவன், “நான் அவளை விட்டு போயிடுவேன்னு சொல்லி சொல்லியே என்னை ஒண்ணும் இல்லாம ஆக்கிட்டு போயிட்டா! அவ கடைசிவரைக்கும் என்னை… என் காதலை முழுசா நம்பவே இல்ல! வர்ஷினி” என்றவன் கண்களில் கண்ணீர் கோடுகள் வழிந்தன.

பெண்கள் இருவரும் அவனை அதிசயமாக பார்த்து மிரண்டு நின்றனர். எதற்கும் அலட்டிக் கொள்ளாதவனாய், தன் விருப்பத்திற்கு மற்றவர்களை ஆட்டி வைப்பவனாய் மட்டுமே இருந்தவன்… இப்போது இப்படி உடைந்து கலங்குவதைப் பார்த்து பேச்சற்று நின்றனர்.

லலிதாம்பிகை தன் மகனின் கண்ணீரை காண பொறுக்காமல் பதறி, அவன் கண்ணீரை துடைத்து விட்டார். “வேணா விபி கண்ணா, நீ அழாத டா… என்னால தாங்க முடியல டா…” என்றவரின் கண்களும் கலங்கதான் செய்தது. தன் மகனுக்காக.

தன்னை சமாளித்து கொண்டவன், முகத்தை கைகளால் அழுத்தி துடைத்து கொண்டு, “சாரி கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன்” என்றான்.

ஆனால் வர்ஷினியின் மனம் ஆறவில்லை. “என்ன இருந்தாலும் நீ உன் கவிய இப்படி தொலைச்சு இருக்க கூடாது விபி!” என்று ஆதங்கமாக சொல்லி விட்டு நிற்காமல் சென்று விட்டாள். காவ்யா உயிரோடு இல்லை என்பதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனது. அந்த பேதை பெண்ணிற்காக இவள் மனம் கிடந்து தவித்தது.

“வர்ஷினி நில்லு மா…” லலிதாவின் அழைப்பையும் மதியாது தனது காரில் ஏறி வேகமெடுத்து பறந்தாள்.

விபீஸ்வர் வேதனையோடு தன் அறைக்குள் சென்று விட, “இந்த வர்ஷினி யார் ஆன்ட்டி?” இவ்வளவு நேரம் மனதில் உழன்ற கேள்வியை ஜனனி கேட்க,

“அது… நம்ம விபிக்காக நான் பார்த்த பொண்ணு இவதான்… நல்ல பொண்ணு, பெரிய குடும்பம், இவனும் முதல்ல பிடிச்சிருக்குனு தான் சொன்னான்… அப்புறம் தான் கட்டினா அந்த காவ்யா பொண்ண தான் கட்டுவேன்னு கட்டிகிட்டான்” லலிதாம்பிகை கவலையோடு பதில் சொன்னார்.

“நான் இருக்கும் போது எப்படி நீங்க என் விபிக்கு வேற பொண்ணு பார்த்திருக்கலாம் ம்ம்?” என்று ஜனனி அவரை பார்த்து காரமாய் முறைக்க, திருதிருவென விழித்த லலிதாம்பிகை அங்கே நிற்காமல் நழுவிச் சென்றார்.

ஆதங்கமாக தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் வந்த ஜனனியின் மனதிற்குள் ஏதோ நெருடியது. நடப்பது எதுவும் சாதமாக தோன்றவில்லை அவளுக்கு.

விபி எப்போதும் அந்த காவ்யாவை பற்றியே நினைத்துக் கொண்டிருப்பது, தன் அருகாமையை சற்றும் உணராமல் தவிர்ப்பது, இப்போது திடீரென ஒருத்தி வந்து விபியை ஏகத்துக்கும் திட்டிவிட்டு போவது… என அனைத்தையும் யோசித்து பார்த்தவளுக்கு எதுவுமே சரியானதாக படவில்லை.

இனியும் பொறுமையாக காத்திருந்து பயனில்லை என்று எண்ணிக் கொண்டவள், விபியிடம் நேரடியாக பேசிவிடுவது என்ற முடிவிற்கு வந்திருந்தாள்.

இரவு உணவை முடித்து விட்டு, கலில் கொடுத்த மாத்திரைகளையும் சாப்பிட்டு தன் மடிக்கணினியை அப்போதுதான் உயிர்ப்பித்திருந்தான் விபீஸ்வர்.

அறைக்குள் வந்த ஜனனியின் அதிகார பார்வையில் கலில் அமைதியாக வெளியேற, “விபி…” சற்று குழைவாக ஒலித்த அவளின் அழைப்பில் நிமிர்ந்தவனின் நெற்றி சுருங்கியது.

மெல்லிய இரவு உடையில் தன் வனப்பை காட்டி, விழிகளில் போதையை தேக்கி அவன் எதிரே நின்றிருந்தாள் ஜனனி.

அவள் மேலிருந்து தன் பார்வையை விலக்கிக் கொண்டவன், “டோன்’ட் டிஸ்டர்ப் ஜெனி, எனக்கு வேலை இருக்கு” என்று கணினி திரையில் பார்வையை ஓட்டலானான்.

அவன் மடியிலிருந்த கணினியை பறித்து தூர வைத்தவள், அவன் கழுத்தை வாகாய் கட்டிக் கொண்டாள்.

“ஜெனி நான் ஏகப்பட்ட டென்ஷன்ல இருக்கேன்… முதல்ல இங்கிருந்து போ” என்று தன் கழுத்திலிருந்து அவள் கைகளை விலக்கி விட, மேலும் அவனிடம் ஒன்றியவள், “உன்ன பத்தி உன்னைவிட எனக்கு நல்லாவே தெரியும், உன் டென்ஷன் பஸ்டர் நான் தான் விபி…” அவள் மோகன புன்னகையோடு அவன் முகம் நோக்கி நெருங்கினாள்.

இத்தனை நெருக்கத்தில் தன்னவளின் மிரண்ட விழிகள் விபீஸ்வர் நினைவில் எழ, ஜனனியை தன்னிடமிருந்து விலக்கி தள்ளினான்.

“ஷிட்… நீ இவ்வளவு சீப்பா பிஹேவ் பண்ணுவேன்னு நான் எதிர்பார்க்கல ஜெனி” என்றான்.

விபி தன்னை தள்ளிவிட்ட கோபத்தில் நிமிர்ந்தவளின் விழிகள், கண்மணிகள் பிதுங்கி வெளியே வந்துவிடும் அளவுக்கு அதிர்ச்சியில் பெரிதாக விரிந்தன.

விபீஸ்வரின் அருகில் வெண்புகை போன்று காவ்யதர்ஷினியின் நிழலுருவம் ஜனனி பார்வைக்கு காட்சியாக, அந்த நொடியில் அவளின் உடல் முழுவதும் வியர்த்து விறுவிறுத்து நடுங்கியது.

தன் கண்ணால் காணும் காட்சியை நம்பவும் முடியாமல், பொய்யென்று விலக்கவும் முடியாமல் அவளுக்குள் பயவுணர்வு பரவியது.

“விவிவி… விபி… பெபெபெ… பேய்… உன் பக்கத்துல பேய் இருக்கு விபீ…” ஜனனி குரல் நடுங்கி கத்த, அவளின் பார்வை நிலைகுத்தி இருக்கும் இடத்தை பார்த்தவன் அசட்டையாக தோளைத் குலுக்கிக் கொண்டான்.

“ப்ச் நீயும் மாம் மாதிரி உளர ஆரம்பிச்சிட்டியா ஜெனி” என்றான் சலிப்பாக.

“அய்யோ இல்ல… நிஜமா உன் பக்கத்துல… உன் பக்கத்துல தான் காவ்யா பேய் நிக்குது…” ஜனனி மிரண்டு மொழிய, இவனுக்கு சிரிப்பு தான் வந்தது.

“ஆஹான் நீ சொல்றதை நம்பித்தான் ஆகணும் போல பேப்… கவிக்கு மட்டுமே சொந்தமான என்னை நெருங்க ட்ரை பண்ண இல்ல… அதான் அவ உன்ன பணிஷ் பண்ண வந்திருக்கா போல” என்று சொல்லிவிட்டு இவன் கேலியாய் சிரித்து வைத்தான்.

அவன் கேலி, கிண்டலை கவனிக்கும் நிலையில் ஜனனி இல்லை. அவளின் பயந்த பார்வை அந்த உருவத்திடமே பதிந்திருந்தது.

விபீஸ்வர் அமர்ந்திருந்த சோஃபாவின் அருகே வெண்புகை போல காட்சி தந்த அந்த நிழலுருவம் விபீஸ்வரனை பார்த்தபடியே இருக்க, “விபீ சீக்கிரம் அங்கிருந்து நகர்ந்து வா…” என்று ஜனனி கத்தினாள்.

அந்த கத்தலில் அந்த உருவத்தின் முகம் இவளை நோக்கி திரும்ப, அரண்டு போனவள் வீரிட்டு கத்தியபடி அங்கிருந்து ஓட்டம் பிடித்து இருந்தாள்.

‘இவ நிஜமாவே பயந்து தான் ஓடுறா போல இருக்கே!’ என்று யோசித்தவன், ஜனனியின் பார்வை பதிந்திருந்த இடத்தை சற்று உற்று நோக்கினான். அவனுக்கு எந்த மாற்றமும் தெரியாமல் போகவே, தன் வலக்கையால் அந்த இடத்தில் தொட்டு பார்க்க, அவன்
நுனிவிரல் பட்டதில் அந்த நிழல் உருவம் பலநூறு வெளிச்சப்புள்ளிகளாய் சிதறி மறைந்தது. இவன் தன் கையை சட்டென இழுத்து கொண்டான்.


‘ச்சே மாம், ஜெனி பயப்படுறதைப் பார்த்து நானும் பைத்தியகாரதனமா யோசிக்க‌
ஆரம்பிச்சுட்டேன் போல’ என்று தலையை குலுக்கி கொண்டு தன் வேலையில் கவனம் செலுத்த
முயன்றான்.

#

உயிர் தேடல் நீளும்…

error: Content is protected !!