NN 24 final

உதயாவின் திருமணம் முடிந்து ஒவ்வொரு வார இறுதியிலும் ஸ்ரீவத்ஸன் உதயாவிற்கு கொடுத்த வாக்குப்படி அவள் வீட்டிற்கு அழைத்துச்செல்வதை வாடிக்கை ஆக்கிக்கொண்டான்.

இறுதி தேர்வுகள் துவங்குவதற்கு ஒரு மாதம் முன்னர் சிவா கௌதம் திருமணத்திற்கான தேதி குறிக்கப் பட்டது.

வார இறுதியில் ஒரு நாள்,

மதிய உணவின் பொழுது உதயா யோசனையாகவே இருக்க கௌதம் “ என்னடி சாப்பிடாமல் அந்தரத்தை வேடிக்கை பார்த்துகிட்டு ? அங்க என்ன இருக்கு? “ அவள் பார்க்கும் திசையில் திரும்பிப் பார்த்தவன் “ ஆஹா உன் கண்ணுக்கு மட்டும் ஏதாவது தெரியுதா என்ன? “ நக்கலடிக்க.

“டேய் நான் யோசிக்கிறேன்! “ உதயா தீவிரமாகச் சொல்ல

“அதுக்கு ஏண்டி மூலையைப் பார்த்து யோசிக்கணும் ? அப்போதான் சிந்தனை வருமோ ? “ அவன் விடாமல் நக்கலடிக்க

சிவாவோ உதயாவிற்காகப் பரிந்து “ சும்மா அவளை ஏண்டா சீண்டரே ? “

ஸ்ரீவத்ஸனோ “ அவராவது சீண்டட்டும் அண்ணா! இவ கல்யாணத்துக்கு முன்னாடி கெஞ்சி கேட்டா 2 வார்த்தை பேசினா பெரிசு இப்போ என்னடான்னா ஒரு வார்த்தை கேட்டா நூறு வார்த்தைகள்ல பதில் சொல்றா! “ பாவமாகப் புலம்ப

“இப்போ என்ன அப்படி பேசிட்டேன்? நீ தான் தைரியசாலியாச்சே சொல்லு! “ உதயா மிரட்ட

“ஆஹா இங்கேயே இந்த அதட்டு அதட்டுறே ! வீட்டுல நிலை எப்படியோ ! “ கௌதம் விடாமல் வம்பிழுக்க

“ரொம்ப பேசாதே! ஆச்சு இன்னும் ஒரே மாசம் உங்களுக்குக் கல்யாணம் அக போகுதுல்ல அப்போ பேசிக்குறேன்! நீயா சிவா அண்ணாவா யார் முதல்ல பொண்டாட்டிக்கு ஆமாம் சாமி போடப் போறீங்கன்னு! “ சிரித்தபடியே அவள் சொன்ன மறு நொடியே

காயத்ரியோ “ ஏண்டி! இப்போவே லட்சுமி போன் செஞ்சா அண்ணா சும்மா அப்படிப் பம்முவார் இதற்குக் கல்யாணம் வரை வெயிட் பண்ணனுமா என்ன? “ சிரிக்க

கௌதமோ “தாயே! பார்க்கத்தானே போறேன் சிவா என்ன செய்யப் போறான்னு! நீ எப்படி அவனை ஆட்டி வைக்கப் போறேன்னு! “

சிவாவோ “ டேய் என்னை ஏண்டா கோர்த்துவிடுறே? நான் பாட்டுக்கு இருக்குறது உனக்குப் பொறுக்கலையா ? இவ தனியா வேற ஆடணுமா? கணவுன்ற பேருல நம்மள ஆட்டி வைக்கிறதெல்லாம் போதாதா ? “ என்று சொல்லி டைனிங் டேபிளிற்கடியில் காயத்ரியின் காலில் மிதிபட

‘ஆஹா இப்போவே இந்த மிதி மிதிக்கிறாளே கல்யாணத்துக்கு அப்புறம் என்ன செய்யபோறாளோ ! ‘ என்றெண்ணிச் சிரித்துக்கொண்டான்.

அவன் எண்ணப்படி அதை அவன் தெரிந்து கொள்ளும் மணநாளும் வெகுவிரைவாகவே வந்தது

கல்லூரி இறுதி தேர்வுகள் துவங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் ஒரு சுபயோக சுபதினத்தில் சிவா காயத்ரி, கௌதம் லட்சுமி திருமண வைபவம் துவங்கியது.

முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பின் பொழுதுக் குதிரை வண்டியில் மாப்பிள்ளைகள் சிவாவும் கௌதமும் ஜம்மென்று கோட் சூட்டில் கம்பீரமாக இருந்தனர்.

சிவாவின் காதில் “ என்னடா இது ? கோட் போட்டுக்கிட்டு எவனாவது கையில் மருதாணி வைச்சுப்பாங்களா? பட்டுப் பேபியின் (பட்டுப் பாட்டி) ரவுசு தாங்கலை டா “

சிவாவோ சிரித்தபடி “ இன்னிக்கி இதற்கப்புறம் ரிசெப்ஷன் நாம தூங்கவே ரொம்ப நேரம் ஆகும் அப்புறம் எப்படி மருதாணி வச்சுக்க நேரம் இருக்கும் ? அதான் “

“மருதாணி வச்சே ஆகணுமா? “

சிவாவோ “ஆமாண்டா இது முறை! “ பெருமையாய் சொன்னவன் கௌதமின் முறைப்பைப் பெற்றுக்கொண்டான்.

ரிசேப்ஷனிலும் கௌதமின் அக்கப்போர் ஓய்ந்த பாடில்லை.

இரு மணமக்களும் ஒரே மேடையில் நிற்க விருந்தினர்கள் வந்தவண்ணம் இருந்தனர்.

“லச்சும்மா ! முதுகெல்லாம் வலிக்குத்துடி இன்னும் எவளோ நேரம் ? பசிக்குது. இவர்களையெல்லாம் பேசாம நாளைக்கு வரச் சொல்லுவோமா?” கௌதம் தீவிரமாய் கேட்க

உதயாவோ நக்கலாய் “ஆமா வரவங்ககிட்ட சொல்லிடு எனக்கு இனி எனர்ஜி இல்லை நாளாகி கன்டினியூ செய்வோம்னு! “ என்றபடி அவன் கையை மறைவாய் கிள்ள

“ஐயோ இப்போவே இப்படி கொடுமை படுத்துறாளே ! நாளை முதல் நீ தொலைஞ்சே கௌதம்! “ அவள் காது படக் கௌதம் புலம்ப

லக்ஷ்மியோ “ இப்போவும் ஒன்னும் இல்லை கெளம்பரதுன்னா கிளம்புங்க! கூட்டத்தில் அங்க அந்த வெள்ளை ஷர்வானில இருக்கான் பாருங்க அவன் அத்தை பையன் முறை தான். அவனையே வேணும்னா நாளைக்கு…” அவள் சொல்லி முடிக்கும் முன்பே

அரண்டவனோ “அப்படிலாம் சொல்லக் கூடாது செல்லம்! நான் வாயே தொரக்கல இன்னும் ஒரு மணிநேரம் என்ன இந்த ராத்திரி பூரா நிற்கத் தயாரா இருக்கேன். உனக்காக நிற்கமாட்டேனா ? “

அந்த வெள்ளை உடை பையனைக் கூட்டத்தில் கண்டவன்
‘ யார்டா நீ? எனக்குன்னு வருவியா டிசைன் டிசைனா? அய்யோ அங்கியே பாக்குறாளே! இப்போவே இப்படி பயம் காட்டி ஆட்டிவைக்கிறா நாளைலெந்து உன் சுதந்திரம் பறிபோச்சுடா கௌதம்! ‘ மனதில் புலம்பியவனோ அசட்டுப் புன்னகையை உதிர்த்தான்.

மறுநாள் விடிகாலை பஞ்சகச்சம் அணிந்து சிவாவும் கௌதமும் ஒன்று சேர காசி யாத்திரை கிளம்ப ஒரு குடை மட்டுமிருக்க சிவாவிற்குக் குடையை மறந்திருந்தார்கள்.

“ஒரே நிமிஷம் சிவா குடையை மறந்துட்டோம்! “ லக்ஷ்மியின் தகப்பனார் பதற

சிவாவோ பெருந்தன்மையாய் “ பரவால்ல மாமா இரண்டு பெரும் ஒரே குடை பிடிச்சுக்குறோம் ! “ என்று புன்னகைத்த படி சொல்ல

ஸ்ரீவத்ஸனின் தந்தையோ “இல்லை சிவா! அப்படிச் செய்யக் கூடாது. இதோ ஒரே நிமிஷம்! ஸ்ரீவத்ஸா! குடை மாப்பிள்ளை அறையில் இருக்கு ஓடு சீக்கிரம் ! “

உதயாவின் காதில் ஸ்ரீவட்ஸனோ “ஆஹா உங்க வீட்ல எல்லாரும் எவ்ளோ அறிவு ஜீவிகள் ! “ என்று சொல்ல

“போங்க சாரே குடையைக் கொண்டு வர வழியைப் பாருங்க. ஒரு வேலை உருப்படியா செய்யறதில்லை சும்மா அண்ணன்களைக் குறை சொல்லவேண்டியது ! “ அவள் முறைக்க ஓடியே விட்டான்

“இந்தப் பொம்பளைங்களுக்கு விளையாட்டாய் பொறந்த வீட்டை குறை சொன்னாக் கூட எங்கிருந்துதான் கோவம் வருமோ! “ சிரித்தபடி ஓடிச்சென்று குடையைக் கொண்டுவந்தான்.

அங்கு ஆரம்பித்த கல்யாண கலாட்டா.

மாலை மாற்றல் நிகழ்ச்சியில் காயத்ரியையும் லக்ஷ்மியையும் அழைத்து வந்தபொழுது லக்ஷ்மியை லாவகமாக அவள் தாய் மாமன் தூக்க அவள் எம்பி எம்பி கௌதமின் கழுத்தில் மாலை அணிவிக்க. கௌதம் மாலை அணிவிக்க வரும்பொழுது லக்ஷ்மியை இன்னும் இன்னும் உயரத் தூக்கி விளையாட்டு காட்ட அனைவரும் “ம்ம் மாப்பிள்ளை இன்னும் எம்பி எம்பி “ என்று அனைவரும் கௌதமை ஊக்குவிக்க விளையாட்டாய் அவர்கள் மாலை மாற்றல் நடைபெற்றது.

இப்பொழுது சிவா காயத்ரியின் முறை வந்தது. தாய் மாமன் இல்லாத காரணத்தால் காயத்ரியைத் தூக்குவதற்கு ஸ்ரீவத்ஸன் தயாரானான் உதயாவிடம் முஷ்டியை மடக்கி வீரம் காட்டியவன் திணறி விட்டான்.

காயத்ரியின் காதில் ” தீனி பண்டாரம் ! கொஞ்சமான டயட் இருந்து இருக்கலாம் ! தூக்கவே முடியாலடி ! ஐயோ இப்போ தூக்காட்டி மானம் போகுமே ” என்று ஸ்ரீவத்ஸன் புலம்ப

காயத்ரியோ அலட்டிக்கொள்ளாமல் ” டயட் இருக்க நான் என்ன லூசா? தினமும் கல்யாணம் வருதுன்னு மேகிமா சூப்பர் சூப்பரா சமைச்சு போட்டாங்க நானும் அசையா சாப்பிட்டேன். நான் ஒன்னும் அவ்ளோ வெயிட் போடலையே ! கொஞ்சமா ஒரு 5 கிலோ தான் போட்டேன் ! ” என்று தோளைக் குலுக்க.

” மொத்தம் எதனைக் கிலோ அத சொல்லுடி ! ” என்று அவனும் விடாமல் கேட்க.

“ என்னடா மசமசன்னு நிக்குறே? வாடா! “ என்றபடி சட்டையின் பகுதியை மடித்துவிட்ட படி வந்த சுப்பு “ சேர்ந்தே தூக்குவோம் ! “

இருவரும் ஒருவழியாய் திக்கித் திணறிக் காயத்ரியைத் தூக்கி மாலை மாற்றும் நிகழ்வு நிறைவுபெறுவதற்குள் கண்விழி பிதுங்கி விட்டனர்.

ஊஞ்சல் நிகழ்ச்சியிலோ இன்னும் ரகளைத்தான்.

கௌதமும் லக்ஷ்மியும் அமைதியாய் மெல்ல அசைந்த ஊஞ்சலில் அமர்திருக்க, ஊஞ்சலைச் சுற்றி பாட்டுப் பாடியவண்ணம் குடும்பத்துப் பெண்கள் பிடி சுற்றி மணமக்களுக்குப் பால் பழம் கொடுக்க அவர்கள் முறை முடிந்து அவர்கள் பக்கமாய் நிற்க.

சிவா காயத்ரியின் முறையின்பொழுது
“அய்ய பால்லா ! ” என்று சிவா முழிக்க ” ஆமா பால் அதுல பழம் வேற உவ்வே ” என்று காயத்ரி முணுமுணுக்க

“மரியாதையா சாப்பிடுங்க ! அப்புறம் வேணும்னா பிடித்ததை சாப்பிட்டுக்கோங்க இப்படியே போனா முஹுர்த்தத்துக்கு நேரம் ஆகிடும்டா ” என்று கௌதம் முறைக்க, கஷ்டப்பட்டு பல் பழம் சாப்பிட்டனர் இருவரும்.

“இந்த ஊஞ்சலை இன்னும் கொஞ்சம் ஸ்பீடா ஆட்டினா நல்ல இருக்கும் ! “ என்று காயத்ரி சொல்ல. அவளை மகிழ்விக்க நினைத்த சிவாவோ ஆர்வ கோளாறில் ஊஞ்சலை வேகமாய் ஆட்ட ஊஞ்சலுக்குப் பின்னல் நின்றிருந்த லக்ஷ்மியின் தாத்தாவின் முட்டியில் ஊஞ்சல் இடிக்க ” ஆண்டவா! என்று அவர் கீழே விழ.

“தாத்தா ! “ என்று அவரை தாங்கிப் பிடித்து கௌதம் எழுப்ப.

சிவாவோ பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு ” சாரி தாத்தா அடி ஏதும் பாடலையே ? மன்னிச்சுடுங்கோ! ” என்று மன்னிப்பு கேட்கக் கடுப்பான கௌதமோ ” டேய் என்னடா வீசி வீசி ஆட இது என்ன பிளே கிரௌண்டா ! குழந்தையாடா நீ ? “ என்று முறைக்க.

பாவம் அந்தத் தாத்தாவோ “ இல்லடா கண்ணா பரவால்ல நீ எழுந்துக்க கூடாது உட்காரு உட்காரு “ என்று அவனைச் சமாதானம் செய்ய. அதன்பின் ஒருவழியாய் மண்டபம் சென்றனர் இரு மணமக்களும்.

ஹோம குண்டத்தின் முன்பு சிவா பொறுமையாகச் சாஸ்திரிகள் சொல்லும் மந்திரங்களைச் சொல்லிக் கொண்டு இருக்க கௌதமோ மந்திரம் சொல்கிறேன் என்ற பேரில் முணுமுணுத்துக்கொண்டிருந்தான்.

“நல்லா உரக்க சொல்லணும் மந்திரம் என் காதிலேயே விழலியே! ‘ என்று சாஸ்திரிகள் சொல்ல

அதன் பிறகு அருகில் இருப்பவர்கள் அதிரும் வண்ணம் மிக உரக்கக் கத்தி கத்தி மந்திரங்களைக் கௌதம் சொல்லச் சாஸ்திரிகளோ பயந்தே விட்டார்.

சிவாவோ கௌதமின் குரலைக் கேட்டுச் சிரிப்பை அடக்க முடியாமல் திணறிக் கொண்டு இருந்தான்.

மணப்பெண்கள் மண்டபத்திற்கு வர மடிசாரில் லட்சுமியைப் பார்த்த கௌதமோ மந்திரம் சொல்ல மறந்து அவளையே ‘ப்பே’ என்று பார்க்க வெட்கப் பட்டுக்கொண்டே லட்சுமி அவன் அருகில் அமர்ந்தாள்

சிவாவோ காயத்ரியைப் பார்த்ததும் உரக்கச் சிரிக்கத் துவங்கி விட்டான் அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டே அவன் அருகில் சென்று அமர்ந்த காயத்ரியோ அவன் தொடையில் நறுக்கென்று கிள்ளி விட்டாள்

” ஏன்டா சிரிக்கிறே என்னைப் பார்த்த அவ்ளோ கேவலமாவா இருக்கு ? ” என்று அவன் அழுவது போல் கேட்க

” சாரி சாரி ! நீ அழகாகத்தான் இருக்கேடி செல்லம். என்ன குட்டி பொண்ணுக்கு மடிசார் கட்டிவிட்ட மாதிரி இருக்கு, பொம்மை மாதிரி இருக்கே அதான் ! உன்னைப்போய் அழகா இல்லனு சொல்வேனா ? “ என்று மயக்கும் புன்னகையை உதிர்த்து காயத்ரியின் மனதைக் குளிரவைத்தவன்.

அவன் ட்ரேட்மார்க் ஹஸ்கி குரலில் கிசுகிசுப்பாய் “ இப்போ மட்டும் ம்ம்ன்னு சொல்லு ராத்திரி ப்ரோக்ராமை கலைக்கு ஷிபிட் பண்ணிடுறேன் ! என்ன சொல்றே ? “என்று அவளைப் பார்த்துக் கண்ணடிக்க

காயத்ரி “ என்ன ப்ரோக்ராம் சிவா? ரெசெப்ஷன் நேத்தே முடிஞ்சு போச்சே “ என்று பாவமாய் கேட்க

” சின்னப் பொண்ணுன்னு சொன்னா கோவம் வருமாம் ஆனா அறிவு வளரலன்னு ஒப்புக்கொள்ளமாட்டாளாம் !” என்று அவன் வம்பிழுக்க

“ என்ன முட்டாளுன்னு சொல்றீங்களா? “ என்று அவள் முறைக்க. அவள் காதில் அவன் விளக்கம் சொல்ல ” “மவனே அடி பிச்சுடுவேன்!.”என்று அவளும் கிசுகிசுத்தவாறே வெட்கத்துடன் மிரட்ட.

“அப்புறமா ரெண்டு பெரும் பேசிண்டே இருங்கோ இப்போ மந்திரத்தைச் சொல்லுங்கோ” என்று சாஸ்திரிகள் மிரட்டும் வரை இவர்கள் கிசு கிசு ஓயவில்லை

ஸ்ரீவத்ஸனின் அப்பா அம்மா காயத்ரியை கன்னிகாதானம் செய்து கொடுக்க, சிவா காயத்ரியின் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவிக்க நெருங்கியபொழுது இருவர் கண்களும் ஒரு நொடி நேருக்கு நேர் சந்தித்தது

‘ உனக்குக் கொடுத்த வாக்குப்படி இதோ அக்கினி சாட்சியாய் உன்னை மணக்கிறேன் ! ‘ கண்களால் உரைத்தவன்.

சாஸ்திரிகள்

மாங்கல்யம் தந்துனானே

மமஜீவன ஹேதுநா

கண்டே பத்நாமி ஸுபகே

த்வம ஜீவ சரதஸ்சதம்

‘மங்கலமான பெண்ணே! உன்னோடு இன்று நான் ஆரம்பிக்கும் இல்லற வாழ்வு நல்லமுறையில் இருக்க வேண்டும் என்று உறுதியளித்து, இந்தத் திருமாங்கல்யத்தை உன் கழுத்தில் அணிவிக்கிறேன். என் இல்லத் துணைவியாக என் சுகதுக்கங்களில் பங்கேற்று நிறைந்த யோகத்துடன் நீ நூறாண்டுக் காலம் வாழ்வாயாக’

என்று ’மந்திரம் ஓத, காயத்ரியின் கழுத்தில் சிவா திருமாங்கல்யத்தை அணிவித்தான். அதே நொடி கௌதமும் லக்ஷ்மியின் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவித்தான்.

காயத்ரிக்கும் லட்சுமிக்கும் நாத்தனார் முறைகளை உதயா செய்தாள்.

அனைத்தையும் பூரிப்புடன் கண்டிருந்த பட்டுப் பாட்டியும் தன் குடும்பத்தினர் சார்பாக மணமக்களை மனதார ஆசீர்வதித்தார்.

ஒரு வழியாகத் திருமண கூத்து முடிந்து அவரும் பெருமூச்சு விட அவர்கள் வீட்டில் முதல் இரவு சடங்கோ இன்னும் ரகளை ஆகியது

இரவு லக்ஷ்மியோ கௌதம் அறைக்குச் சென்று விட காயத்ரி சிவா அறைக்குச் செல்ல சற்று தாமதமானது.

சிவோ பொறுமை இழந்து கடுப்பாகி ” என்னதான் செய்றா இவ? தூக்கம் வேற கண் எரியுது லூசு வந்து தொலைக்க வேண்டியதுதானே ! ” என்று புலம்பிக் கொண்டு இருக்க கதவைத் திறந்து கொண்டு மெதுவாய் அறைக்குள் நுழைந்த காயத்ரியோ மணப்பெண்ணிற்குரிய வெட்கம் எதுவும் இல்லாமல் தொப்பெனக் கட்டிலில் உட்கார்ந்து அவனையே முறைக்க

அவளை நெருங்கிய சிவாவோ “நான் முறைக்கனும் நியாயமா… இவ்வளவு தாமதமா வந்துட்டு நீ முறைக்கிறே? என்னதான் செஞ்சிட்டு இருந்தே ? “ என்று அவன் சீற

அவளோ கோவமும் புலம்பலுமாய் “ பால் தான் கொண்டு வரணுமாம் ! சொன்னேன் உனக்குப் பால் பிடிக்காது சாக்லேட் மில்க் வேணும்னு! பாட்டி திட்டிட்டாங்க ! “ மூக்கை உறிஞ்சியபடி தொடர்ந்தவள்

“சரின்னு பொறுத்துக்கிட்டேன் ! அடுத்து என்னடான்னா புடவைதான் கட்டணுமாம் ! பைஜாமா போடக் கூடாதாம் ! என்ன இது லூசுத்தனமா ! “ என்று அவள் புலம்ப

சிவாவோ சிரித்துவிட்டான்

“ அடியே யாராவது முதல் இரவுக்குச் சாக்லெட் மில்க் கொண்டு போவாளா? என்கிட்டே கேட்டு இருக்கலாம் கையில் போன் இல்லையா என்ன ?” புன்னகைத்தபடியே

“நான் சாயந்தரம் சாக்லேட் பொடியை ரூமிற்கு கொண்டு வந்துட்டேன் ! “ பட்டுச்சட்டையின் காலரைத் தூக்கிவிட்டவன்

“அதை விடு பரவால்ல… யாரவது முதலிரவுக்கு பைஜாமா சட்டை போட்டுண்டு வருவாளா ? இங்க வந்து மாத்திகிட்டா போச்சு.

அதைவிட்டு பாட்டிகிட்ட தர்க்கம் பண்ணி இப்படி லேட் பண்ணுவியா அசடு ! எனக்கு எவ்ளோ தூக்கம் வருது தெரியுமா ? நேத்துகூட தூக்கமே இல்லை ! பார் கண்ணு எப்படிச் சிவந்து இருக்கு “ என்று பாவமாய் கண்களைக் காட்ட

“உங்களுக்கு மட்டும்தான் தூக்கம் வருதா எனக்கும்தான் வருது ? இன்னிக்கே இதெல்லாம் செய்யணுமா தூக்கம் வருது சோர்வா இருக்கு நாளகி வச்சுக்கலாம்னு சொன்னேன் ஆனா பாட்டி அதுக்கும் திட்டி விட்டாங்க ! ஒரே திட்டு மழை ! “ என்று அவள் புலம்ப.

‘என்னது நாளைக்கா ?’ உள்ளுக்குள் அதிர்ந்தவன் அவளை முதலில் சமாதானம் செய்ய எண்ணி

“ காயு நீ போய் டிரஸ் மாத்திக்கோ நானும் சேஞ் பண்ணிக்கிறேன் ! பாலும் கலக்கி வைக்கிறேன் குடிச்சுட்டு பேசிப்போம் ! ஓடு…” என்று அவளைப் பலகணி வழியே அவள் அறைக்கு அனுப்பி வைத்தான்.

“அம்மா…” என்ற அலறல் கேட்டு சிவா பதறி அறையை விட்டு வெளியே ஓட அங்கு கௌதமோ காபி மேஜையைச் சுற்றி ஓடிக் கொண்டு இருந்தான்.

லக்ஷ்மியோ கையில் விசிறிக் காம்புடன் அவனைத் துரத்திக் கொண்டு இருந்தாள்!

“என்னடா ? என்னடா பண்றே இங்க ?” என்று சிவா கேட்க

“டேய் என்னைக் காப்பாத்துடா ! “ என்று அவன் பின்னல் ஒளிந்து கொண்டான் கௌதம்.

“அண்ணா அவனை இங்க விடுங்க. என்ன திமிரு உனக்கு ! மவனே கையிலே மாட்டினே!” என்று கோவமாய் லட்சுமி விடாமல் அவனைப் பிடிக்க முயல

நண்பனைக் கைநீட்டிக் காத்தபடியே “என்னமா ஆச்சு பேசிக்கலாம் விசிறியைக் கிழ போடு ப்ளீஸ்…” என்று சிவா சமாதானம் செய்து கொண்டே இருக்கும்பொழுது

காயத்ரியும் உடைமாற்றி வெளியே வந்து விட ” லட்சுமி என்னடி இது அண்ணாவை ஏண்டி அடிக்கப் பாக்றே ! ” என்று அவளும் அவளைத் தடுக்க

” விடு காயு இன்னிக்கி இவனை அடிச்சு கால உடைக்கல ! ” என்று அவள் விடாமல் சீற

” அப்படி என்னடா பண்ணி தொலைச்ச ? ” என்று சிவா கௌதமிடம் கடுகடுக்க

” ஒன்னும் பன்னலடா, சும்மா பேசிட்டுதான் இருந்தேன் ஆனா அவ தான் திடீர்னு அடிக்கிறா” என்று சொல்ல

” பொய் பொய் வாய திறந்தாலே பொய் ” என்று லட்சுமி கத்த

” இல்லடா நான் தப்பா ஒன்னும் சொல்லல, நான் என்ன செஞ்சேன்னா… அவன் இழுக்க “

அங்குக் கௌதமின் அறையில் நடந்தது இதான்

ஆசையாய் கௌதமின் அறையில் புது பெண்ணிற்குறிய வெட்கத்துடன் லட்சுமி நுழைத்தாள் அவனோ ஆர்வமாய் லேப்டாப்பில் எதோ செய்து கொண்டு இருந்தான் .

” என்ன பண்றீங்க ? ” என்று அவள் வெட்கத்துடன் கேட்க

அவள் வந்தது கூட உணராமல் அவன் இருக்க ” ஹே இங்க என்ன பண்றே? ” என்று கேட்டுவைத்தான் அதிலேயே அவள் கொஞ்சம் கடுப்பானாள்

” ஹ்ம்ம் சாப்பிட வந்தேன் ! எதாவது சொல்லிட போறேன் ! இன்னிக்கி நமக்கு முதல் இரவு! ” என்றவள்.

“அப்படி என்னதான் செய்றீங்க ? இப்போ போய் ஆபிஸ் வேலையா ? “ என்று எட்டிப் பார்க்க

“டேய் என்னடா இது ? ” என்று சிலிர்த்து எழுந்தவள் அவனை மொத்தி எடுக்க

“ லட்சுமி ! வலிக்குது டி ! ப்ளீஸ் ! “ என்று கெஞ்சியும் விடாமல் அடித்தவள் மேலும் அங்கு இருந்த விசிறியை எடுத்து அடிக்கத் துரத்த கௌதமோ தப்பிக்க ரூமை விட்டு வெளியேறி அலற…

இப்பொழுது…

“அப்படி என்னடா பண்ணே அந்த லேப்டாப்பில? ” என்று சிவா கேட்க

அவன் காதில் எதோ கௌதம் விளக்க ” அட பாவி உன்னை அவள் கொல்லாம விட்டாளே ” என்று சொல்லி

“அம்மா லட்சுமி அவன் இனிமே அப்படிச் செய்யமாட்டான் ப்ளீஸ் ரூமிற்க்கு கூட்டிண்டு போ! பாவம் மன்னிச்சு விடு” என்று விடாமல் சமாதானம் செய்ய

காயத்ரியோ “என்ன” என்று அவனைக் கேட்க ‘அப்புறம் சொல்றேன்’ சென்று ஜாடை செய்தான்.

சிவாவும் விடாமல் சமாதானம் செய்யப் பின்னர் அவர்கள் இருவரும் கௌதமின் அறைக்குப் புன்முறுவலுடன் சென்றனர்

சிவாவின் அறையில் இவர்கள் நுழைந்தவுடன்

” என்ன சிவா ஆச்சு ? ” என்று காயத்ரி கேட்க.

போனில் கௌதமின் பேஸ்புக் பக்கத்தைத் திறந்து காட்டினான் அதில் அவன் திருமண செல்ஃபீக்களை போட்டு இருந்தான் கீழே பலரும் கமெண்ட் செய்திருக்க

அதன் மேல் வீடியோ பதிவாய் ” அப்பாடா நான் இனி முரட்டு சிங்கள் இல்ல, முதல் இரவுக்காக ஆர்வமாய் கத்துக்கிட்டு இருக்கிறேன் ! .இன்னும் என் மனைவி வரலே.வந்ததும் அப்டேட் செய்றேன்! “ என்று சொன்னது மட்டுமில்லாமல், அவன் அறையைச் சுற்றிச் சுற்றி காட்டிக் கொண்டு இருந்தான் ! “இன்னும் கொஞ்ச நேரம் தான் கவுண்ட டவுன் ஸ்டார்ட்ஸ் ! ” என்று போட்டு இருந்தான்

“என்ன இது கூத்து ? “என்று காயத்ரி சிரித்தபடி “ இப்படி எல்லாம் செஞ்சா அவ உதைக்காம கொஞ்சுவாளா என்ன ? “ என்று கேட்க

“என்ன செய்ய எல்லாம் ஆர்வ கோளாறுதான்! ஆனா பாவம் பாரு இந்தப் பதிவு நம்ம ரெண்டு பேர், கௌதம்,லட்சுமி, உதயா ஸ்ரீவட்சன் மொத்தம் நாம ஆறு பேர் மட்டும் பாக்கும் படி தான் செட்டிங் வச்சு இருக்கானாம். ஆனாலும் கொஞ்சம் ஓவர்தான்!

எதுக்குடான்னு கேட்டேன் ! இதை ஒரு நினைவா பதிவு செய்தானாம் ! சிங்கள் டு மிங்கிள் ன்னு தலைப்பு வேற போட்டு வச்சிருக்கான் லூசு அதான் அடி பின்னி இருக்கா. இதெல்லாம் கூடவா பேஸ்புக்ல போடணும் என்னை மாதிரி வாட்சப்பில் போட்ட போறதா ? “ என்று சிவா கூலாய் சொல்ல

“என்ன வாட்சப்பில போட்டியா என்னதாடா போட்ட ? “என்று காயத்ரி பதரிய படி அவள் போனை எடுத்துப் பார்த்தவள்

“அடப்பாவி என்னடா இது நம்ம குரூப்ல இப்படிப் போட்டு வச்சுருக்கே ? “

அவனோ அவர்கள் கும்ப குரூப்பில் (அதே ஆறுபேர் கொண்ட குரூப் ! ).

” காயத்ரி எங்கடி போனே எவ்ளோ நேரமா வெயிட் பண்றேன் ! “

“இப்போ வந்தா நமக்கு முதல் இரவு இல்ல நான் ரூமை லாக் பன்னிட்டு தூங்கிருவேன்”

“கண்ணெல்லாம் எரியுதுடி தூக்கமா வருதுடி கிராதகி ! குட்டி பிசாசு ! மரியாதையா வாடி “

“ஹே உதயா அவளுக்குப் போன் பண்ணி வரச்சொல்லு ! ‘

“லட்சுமி கௌதம் ரூமிற்கு போயிட்டா போல இருக்கு இவ மட்டும் என்ன பண்ணுறா பாட்டி கூட “

“ஐயோ கீழயே தூங்கிட்டியா ? “

” முதலிரவு அதுவுமா கனவு எதாவது வந்துடுச்சா ?? “

“காயத்ரி இப்போ அஞ்சு வரை எண்ணுவேன் வந்துரு “

“ஒன்னு “ “இரண்டு “ “மூணு”

“ஹை காயத்ரி வந்துட்டா…நீங்க வேலையைப் பாருங்க நான் என் வேலையைப் பாக்குறேன்”

என்று போட்டு இருந்தான்.கீழே கண்ணடிப்பது போல் ஒரு ஸ்மைலி வேறு.

“அட லூசே என்னடா இது அண்ணா தான் லூசுன்னா நீ ரொம்ப அறிவாளியா இதெல்லாம் கூடவா குரூப்ல போடுவே “ என்று அவள் தலையணயுடன் அவன்மேல் பாய இப்பொழுது வாங்கிக் கொள்வது சிவாவின் முறை ஆனது.

வெகுநேரம் போராடி காயத்ரியைச் சமாதானம் செய்து சிவா இல்லற வாழக்கையை துவக்கும் முன் விடிந்தே விட்டது ! .

ஊடலும் கூடலும் என ஆகமொத்தம் குதூகலமாய் நண்பர்கள் இருவரும் தங்கள் வாழ்க்கையின் இரண்டாவது அத்தியாயத்தைத் துவங்கினர்.

error: Content is protected !!