அத்தனை தூரம் ஓடி வந்தவன்,  அதற்கு மேல் ஓடாமல் ஓய்ந்து போன கால்களால், மெது மெதுவாக அடி  எடுத்து வைத்தான். 

பவானியின் அருகே வந்தவன், அப்படியே சோர்ந்து போய் அமர்ந்தான். 

பவானி… நேற்றைய பொழுதின் மழையில் நனைந்த உடல்… உடைகள் ஆங்காங்கே உலர்ந்திருந்தன… உறக்கமில்லா விழிகள்… கலைந்த கேசம்… அதில் காய்ந்த இலைகள் ஒன்றிரண்டு… உணர்வில்லா பார்வையுடன் ஜீவனைப் பார்த்தாள்.

அவளில்லா நாளின் தான் அடைந்த ஒட்டுமொத்த பரிதவிப்பையும், அவள் கிடைத்த, இந்தத் தருணத்தில் தான் அடைந்த ஒரு கோடி மகிழ்ச்சியையும் ஒன்றாக இணைத்து நேசத்தின் வடிகலாய் கண்களில் ஆனந்தக் கண்ணீருடன் பவானியைப் பார்த்தான்.

ஆதவன் வந்திருந்தாலும், இன்னும் பனிப்புகை விலகாத காலைப் பொழுதில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பறவைகள் கீச்சிடும் சத்தம் மட்டுமே கேட்கும் தருணங்கள் – இவை.

“ஏன் பவானி இப்படிப் பண்ண?” என்று கேட்டு, ஜீவன் மௌன நொடிகளைக் கொன்றான். 

அத்தோடு மட்டும் நிற்காமல், பவானி முகத்தில் விழுந்திருந்த ஒன்றிரண்டு முடிகளை, ஜீவன் மென்மையாக ஒதுக்கி விட்டான். 

அவனின் செயலுக்கு, பவானி லேசாக தன் இமைகளை மூடித் திறந்து எதிர்வினை புரிந்தாள். 

கூந்தலில் ஒட்டிக்கொண்டு நின்ற சருகுகளைத் தட்டி விட்டான். அவன் கை சென்ற திசைகளில், அவள் கண் சென்று வந்தது.

மறுபடியும் ஜீவன் பவானியின் விழி நோக்கினான். இன்னும் உணர்ச்சி தொலைத்தப் பார்வையிலே ஜீவனைப் பார்த்திருந்தாள்.

சருகுகளைத் தட்டி விட்டவன் கரங்கள், இன்னும் அவள் முகத்திலிருந்து இறங்கவில்லை. நெற்றியில், சூடு தெரிகிறதா எனத் தொட்டுப் பார்த்தான். அவ்வளவு தெரியவில்லை என்றதும் நிம்மதி கொண்டான். 

இக்கணம் அவனது கரங்கள், அவளது தலையை வருடிக் கொண்டிருந்தன. 

இன்னும் பவானி அமைதியாகவே இருந்தாள். 

ஜீவன் நெஞ்சில் கரை புரண்டு வருகின்ற நேசத்திற்கு, அவளைக் கட்டியணைக்க வேண்டும் என்ற உணர்வுகள் மேலோங்கி இருந்தன. 

ஆனால், பவானி என்ன மனநிலையில் இருக்கிறாள் என்று தெரியாததால், தன் உணர்வுகளைக் கட்டிப் போட்டான். 

அக்கணம் ஒரு மெல்லிய காலை நேரத் தென்றல் காற்று வீசியது. 

பவானியின் தேகத்தில் ஒரு சிறு நடுக்கம் வந்தது.

அதனைக் கண்டவன் மனப்பிரதேசத்தில் நிலநடுக்கமே வந்தது. 

“குளிருதா பவானி” என்று கேள்வி எழுதி நீட்டினான்.

ஆனால் பவானி பதிலேதும் எழுதவில்லை. ஜீவனுக்கு, பவானி தான் பேசுவதைக் கவனிக்கிறாளா என்று சந்தேகம் வந்தது. 

இருந்தும், அவளது கரத்தினைப் பிடித்துக் கொண்டு, உள்ளங்கையில் அழுத்தித் தேய்த்துவிட ஆரம்பித்தான். 

மிக மெதுவாகத் தன் கரத்தை உருவிக் கொண்டாள். அத்தோடு நிற்காமல், “ஜீவன் சார்” என்று அழைத்து, ‘தேவையில்லை’ என்ற பொருள் கொண்ட பார்வை மற்றும் தலையசைப்புகள். 

பவானியின் அழைப்பைக் கேட்டவனுக்கு கூர்வாள் கொண்டு மனப்பிரதேசத்தைக் குடைவது போல் இருந்தது.

ஜீவன் எதிர்பார்த்ததுதான். ஆனாலும் ஏமாற்றம் உணர்ந்தான்.

“கோபமா பவானி?? சரி, கோபப்படு… ஆனா ஜீவன்னு சொல்லிக் கோபப் படு” என்று இறைஞ்சிக் கேட்டான். 

மௌனம் மட்டுமே! 

“ஜீவன்னு சொல்லு பவானி” என்று மன்றாடினான்.

பவானி, எவ்வித உணர்வுகளையும் ஜீவனிடம் வெளிப்படுத்தாமல் எழுந்துவிட்டாள். ஜீவனும் எழுந்தான். 

எழுந்தவள், மடியிலிருந்து கைக்குட்டையும், பன்னிரண்டு ரூபாய் சில்லறைகளும் விழுந்தன. 

இக்கணம் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். 

ஜீவன் கைக்குட்டையை எடுக்க முற்பட்டான். ஆனால், பவானி அதற்கு அனுமதிக்கவில்லை. 

அவள், கீழே விழுந்தவைகளை எடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள். ஜீவனும், அவளைப் பின் தொடர்ந்தான். 

“பவானி கர்ச்சீப் கொடுத்திறேன்… இனிமே பத்திரமா வச்சுக்குவேன்” என்று கேட்டுக் கெஞ்சினான். 

ஒவ்வொரு மரங்களையும் பிடித்துப் பிடித்து மெதுவாக முன்னேறிச் சென்று கொண்டே இருந்தாள். 

“கர்ச்சீப் கொடு பவானி. இனிமே திருப்பிக் கொடுக்கவே மாட்டேன், பவானி” 

செம்மண் தரையின் மழைநீர் தேங்கிய பள்ளங்களைப் பார்த்துப் பார்த்து நடந்தாள். 

“டீ குடிக்க வந்து வெயிட் பண்ணியா?? சாரி பவானி” என்று பின்னையே கெஞ்சிக் கொண்டு போனான். 

பவானியிடம் எதற்கும் பதிலும் இல்லை, அந்தத் தருணத்திற்கான உணர்வுகளையும் அவள் வெளிப்படுத்த வில்லை. 

ஒன்று அவன் மீது கோபப்பட வேண்டும். இல்லையென்றால் தன்னைத் தேடி வந்திருக்கிறான் என்று சந்தோஷப் பட வேண்டும். அதுவுமில்லை என்றால் வருத்தம் கொண்டு அழ வேண்டும். 

ஆனால் எதுவுமே இல்லாமல், இப்படி பவானி இருப்பது, ஜீவனைப் பயம் கொள்ளச் செய்தது.

என்னாச்சு இவளுக்கு? என்று யோசித்தான். அவள் முகம் எந்த உணர்ச்சியையும் பிரதிபலிக்கவில்லை. ஏன்? என்று யோசித்தான். 

மன நிலையில் எதுவுமாற்றமோ?? நம்பிக்கை இல்லை எனச் சொன்னாளே?? அதனாலா? விடை தெரியாமல் குழம்பினான்.

நடந்து கொண்டே, நாதன் அன்று வீட்டில் சொன்னதையெல்லாம் நியாபகக் படுத்திப் பார்த்தான். ‘சிலநாள் எதுவும் பேசாம இருப்பா’ என்று கூறியது நியாபகம் வந்தது.

‘ப்ச்’ என்று சொல்லியபடி அவள் பின்னேயே நடந்தான். 

உளநோயின் மன அழுத்ததின் ஒரு பகுதி இது. அந்த சூழ்நிலைக்குத் தேவையான உணர்வுகளைப் பிரதிபலிக்காமல், மிகவும் மந்தமாக இருப்பது.

“பவானி ஏதாவது பேசேன்”

உணர்வுகளைச் சொல்ல மறுக்கும் மனம், செய்யும் செயல்களில் ஒருவித தயக்கம் மற்றும் சோர்வு – இதுதான் பவானியின் தற்போதைய நிலை. 

“பவானி டயர்டா இருக்கா??”  என்றவன் அவள் கையைப் பிடித்து நிறுத்தினான்.

‘என்ன?’ என்பது போல் திரும்பிப் பார்த்தவளிடம், ” ஏதாவது பேசிட்டு போ பவானி” என்றான்.

அதன் பின்னும் பவானியிடம் மாற்றம் வரவில்லை. காட்டுப் பாதை முடிந்து, படிகள் வழியே இறங்கி சாலையை அடைந்திருந்தனர். 

ஜீவன், தன் ஜீப்பை அங்குதான் நிறுத்தியிருந்தான்.

“பவானி… ஜீப்ல போகலாமா??” என்று கேட்டுப் பார்த்தான். 

பவானி பதில் சொல்லாமல் நடந்து கொண்டே இருந்தாள். 

‘ப்ச்’ என்றவனுக்கு, பவானி தன்னைப் பற்றி என்ன நினைக்கிறாள் என்றே புரியவில்லை. 

சாலையின் இருபுறமும் மரங்கள்… அதன் வழியே முடிந்த அளவு ஒளியைப் பாய்ச்சிடும் சூரியனின் ஒளிக்கற்றைகள்… பனிப்புகை மறைந்து, பசுமை பேசும் மலைகள்… பவானி முன்னே நடக்க… ஜீவன் பின்தொடர்ந்தான்.

*****

இருவரும் பவானி வீட்டின் அருகே வந்து சேர்ந்தனர். ஆனால் அவர்கள் வரும்போது வீட்டின் நிலைமை வேறு மாதிரி இருந்தது. 

மதனும் பாலாவும் வாய்த தகராறில் இருந்தனர். 

ஜீவனுக்கு என்ன பிரச்சனை? என்று தெரியவில்லை. எனவே பவானியிடம், “கொஞ்ச நேரம் நின்னுட்டு போலாம் பவானி” என்றான்.

ஆனால் பவானி அதற்கும் செவி சாய்க்கவில்லை. 

“பவானி சொல்றேன்ல, கேளு” என்று பவானியின் கைப்பிடித்து, அவளை நிறுத்தினான். 

மௌனங்கள் பேசினாள்! 

“ப்ளீஸ், கொஞ்ச நேரம் பேசிட்டாவது போ பவானி” 

மௌனங்களால் மட்டுமே பேசினாள்!! 

“பவானி, இப்படி விட்டுட்டுப் போகாத” என்று அவள் கைகள் பிடித்துக் கெஞ்சினான்.

ஜீவன் கைகளிலிருந்து, தன் கரத்தை உருவிக் கொண்டு வீடு நோக்கி குறைந்த வேகத்தில் நடக்க ஆரம்பித்தாள். 

வேறு வழியில்லாமல், ஜீவனும் பவானியுடன், அவள் வீட்டின் முன் வந்து நின்றான்.

“அப்பா பவானி வந்திட்டா” – இது பல்லவி.

மதன், பாலா, நாதன் மற்றும் அருகிலுள்ள வீட்டின் ஆட்கள் என எல்லாரும் திரும்பிப் பார்த்தனர். 

பவானி, நாதன் இருக்கும் இடம் நோக்கி மெதுவாக, தளர்ந்த நடையுடன் நடந்தாள்.

பவானியைக் கண்ட பாலா, “எங்க போயிட்டு வர??” என்று கோபத்துடன் கேட்டான்.

பாரபட்சம் இன்றி, அனைவரிடமும் மௌனம் கொண்டு சாதித்தாள்.

‘இவளுக்கு என்னாயிற்று??’ என்று ஜீவன் உள்ளம் உறுத்திக் கொண்டே இருந்தது. 

பவானி, நாதன் அருகில் சென்று நின்றாள்.

“பவானிம்மா” என்று சொல்லி, லேசாக புன்னகைத்துப் பார்த்தார். 

“அப்பா” என்றவள், அதற்குமேல் எந்த உணர்வையும் வெளிப்படுத்தவே இல்லை. 

“எங்கம்மா போன?? ஏன் இப்படிப் பண்ண??” என்று ஒரு நாள் முழுவதும் தன் மகளைப் பிரிந்திருந்த வேதனையைக் கேள்வியாகக் கேட்டார். 

“அப்பா” என்றதைத் தவிர பவானி எதுவும் பேசவில்லை. 

நாதன், ஜீவன் நிற்பதைக் கண்டார். 

“ஜீவன் சார், ரொம்ப நன்றி சார்” என்று சொல்லிவிட்டு, “சரி, வா பவானி உள்ளே போகலாம்” என்று அவளை அரவணைத்து வீட்டினுள் அழைத்துச் சென்றார்.

ஜீவன், பவானி செல்வதை ஒருவித ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

திரும்பவும் வாய்த் தகராறு ஆரம்பித்தது… 

“பாலா, அதான் பவானி வந்துட்டாளா! டிவோர்ஸ் பேப்பர்ல சைன் போடச் சொல்லு” – மதன். 

“கண்டிப்பா பவானி சைன் போடா மாட்டா. நீங்க போங்க மதன்” – பாலா. 

“அவளே சொல்லியிருக்கா பாலா, ரெண்டு நாள்ல முடிவு எடுக்கிறேன்னு” – மதன். 

“அவ முடிவு எடுக்க மாட்டா. அவளுக்கு முடிவெடுக்கவும் தெரியாது. நான் எடுத்துதான் முடிவு”

“அன்னைக்கு உன் முன்னாடிதான சொன்னா, ரெண்டு நாள்ல முடிவு எடுப்பேன்னு”

“அது பவானி சொல்லலை. இதோ நிக்கிறானே, இவன் சொல்ல வச்சது” என்று பாலா, ஜீவனைக் கை காட்டினான். 

இன்னும் ஜீவன் பவானி சென்ற திசையையே பார்த்திருந்தான். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை ஜீவன் கவனிக்கவில்லை. 

“சார், நீங்கதான அன்னைக்கு நான் வீட்ல இருக்கிறப்போ வந்தது… அப்புறம் பவானிகூட ஹாஸ்பிட்டல் வந்ததும் நீங்கதான??” – மதன்.

“ம்ம்ம்” – ஜீவன்.

“மதன், பவானியைக் கூட்டிட்டுப் போய் வாழற வழியைப் பாருங்க. தேவையில்லாம பேச வேண்டாம்” – பாலா. 

“பாலா, அது நடக்காது. பவானிய நான்தான் பார்த்துக்கப் போறேன்” – ஜீவன்.

“உன் மேல பயங்கிற கோபத்தில இருக்கேன். பேசாம போயிரு” – பாலா.

“ஏன் பாலா? என்னால பவானியைப் பார்த்துக்க முடியாதுன்னு சொல்றேன். அவர் பார்த்துகிறேன்னு சொல்றாரு. அப்புறம் நீ ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கிற??” – மதன்.

“மதன், நீங்க போங்க. கண்டிப்பா பவானி சைன் போடா மாட்டா. இதுக்கு மேல கேட்டீங்கனா, நான் போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணுவேன்” – பாலா.

“ச்சே, ஆனா இன்னைக்கு சைன் வாங்காமா, நான் போறதா இல்லை பாலா” என்று சொல்லி தன் பைக் அருகே சென்று, மதன் நின்று கொண்டான்.

வீட்டினுள் செல்ல நினைத்த பாலா, இன்னும் ஜீவன் நிற்பதைப் பார்த்தான். 

“ஏய்? அதான் கொண்டு வந்து விட்டாச்சுல, போக வேண்டியதுதானே??” – பாலா.

“நான் பவானியைப் பார்க்கணும்” – ஜீவன்.

“அதெல்லாம் முடியாது” – பாலா.

“பவானி… பவானி…” என்று  ஜீவன் கத்த ஆரம்பித்தான். 

அந்தச் சத்தம் கேட்டு, நாதன் வெளியே வந்தார். 

“பேசாம போயிடு. எல்லாரும் பார்க்கிறாங்க.” என்று பற்களைக் கடித்துக் கொண்டு, பாலா கூறினான்.

“பாலா நான் ஒரே ஒரு தடவ மட்டும் பவானியப் பார்த்துப் பேசிக்கிறேனே” என்று ஜீவன் கெஞ்சினான்.

“நேத்து அப்படிக் கத்தின, இன்னைக்கு இப்படிக் கெஞ்சிற” – பாலா குரலில் நக்கல் இருந்தது.

“சாரி பாலா. நேத்து இருந்த டென்ஷன்ல, அப்படிப் பேசிட்டேன்” 

“நீ பேச மட்டும் செய்யல… அடிச்ச… என்னைய அடிச்சிருக்க”

“சாரி பாலா. அது ஏதோ ஒரு வேகத்தில” – ஜீவன் குரலும் மன்னிப்பு கேட்டது.

“ஓ! நீ மன்னிப்பு கேட்டா எல்லாம் சரியாயிடுமா??”

“வேற என்ன செய்யணும்?? சொல்லு செய்றேன்” – பவானிக்காக எதையும் செய்ய நினைப்பவனின் குரல்.

“பவானியை விட்டுரு. அவளுக்கு எது நல்லது எது கெட்டதுன்னு பார்த்துச் செய்ய நாங்க இருக்கோம்”

“ஏற்கனவே அந்தத் தப்ப பண்ணிட்டுதான், இவ்வளவு கஷ்டப் படறேன். இனிமேலும் அந்தத் தப்ப பண்ண மாட்டேன் பாலா” – ஜீவனின் குரலில் உறுதி இருந்தது. 

“அப்ப இங்கே நில்லு” என்று சொல்லி, வீடு நோக்கிச் செல்ல ஆரம்பித்தான். 

“பாலா, ப்ளீஸ் பாலா… என்னை நம்பு. நான் பவானியை நல்லா பார்த்துப்பேன்”

“… “

“பாலா, அட்லீஸ்ட் ஒரு தடவை பவானி கூட பேசிட்டாவது போறேன்” என்று வீட்டுக்குள் செல்ல யத்தனித்தான் ஜீவன். 

சட்டென்று பாலா, ஜீவனைப் பிடித்துக் கீழே தள்ளி விட்டான். 

ஜீவனின் எண்ணம் முழுவதும் பவானி என்கின்ற ஒற்றைப் புள்ளியில் இருந்ததால், எதிலும் கவனமில்லாமல் இருந்தான். 

ஆதலால் பாலா தள்ளியதும், பிடிக்க பிடிமானம் ஏதுமின்றி தடுமாறிக் கீழே விழுந்தான். 

இதைக் கண்ட நாதனின் மனம் பதறியது. ஜீவன் அருகே சென்றார். 

பாலாவின் முகம் முழுதும் திருப்தியின் ரேகைகள்! 

“ஜீவன் சார், எந்திரிங்க” என்று நாதன், ஜீவனின் கைப்பிடித்து எழுப்பி விட்டார். 

ஜீவன் எழுந்தவுடன், கை மற்றும் சட்டையை லேசாக உதறிவிட்டான். நாதனும், அவன் சட்டையில் ஒட்டியிருந்த ஈரமண்ணைத் தட்டி விட்டார். 

“வேற அடிபடலைல சார்” – நாதன். 

“இல்லை” 

இன்றே இந்த விடயத்தில் ஒரு முடிவு வர வேண்டும் என ஜீவன் உறுதி கொண்டு இருந்ததால், கீழே உள்ள கேள்விளைக் கேட்க ஆரம்பித்தான். 

“நாதன் சார்” 

“சொல்லுங்க” 

“என்னைய நம்பி பவானியைக் கொடுங்க. நான் நல்லா பார்த்துப்பேன் சார்” என்று ஜீவன் யாசித்தான். 

“ம்ம்ம், சரி ஜீவன் சார்” என்றார் நாதன் சற்றும் யோசிக்காமல். 

“நாதன் சார்” – ஆச்சரியமும் ஆனந்தமும் கலந்த, ஜீவனின் குரல். 

“கூட்டிட்டுப் போங்க சார். நான் சொல்றேன், பவானியைக் கூட்டிட்டுப் போங்க. நீங்க யார்கிட்டயும் கெஞ்ச வேண்டாம்”

ஜீவனுக்கு உயிர்த்துணை தன்னுடன் வரப் போவதால், உடலில் உயிர் வந்தது.

நாதன், வீட்டுக்குள் இருந்த பவானியை வெளியே வருமாறு அழைத்தார். அதற்குள் வேறு புடவை மாற்றிக் கொண்டு, தலையை உலர்த்திய நிலையில் பவானி வாசலில் வந்து நின்றாள்.

“அப்பா”

“இங்க வாம்மா” என்று பவானியை அவர் அருகில் அழைத்தார்.

“அப்பா, பவானி விஷயத்தில நான் ஏற்கனவே முடிவு எடுத்திட்டேன். நீங்க யாரும் மாத்தக் கூடாது” – பாலாவின் குரலில் கடுப்பு இருந்தது. 

“நீ யாருடா அதை முடிவு பண்ண??”

அப்படிக் கேளுங்க நாதன் சார்! – நாம். 

“நான் பவானியோட அண்ணன்”

“ஓ! அப்படியா?? நான் அவளோட அப்பா. உன்னை விட உரிமை எனக்கு அதிகம்”

அப்படிச் சொல்லுங்க நாதன் சார்!! – நாம். 

“…”

“என் பொண்ணு எப்படி வாழணும்னு, நான் முடிவெடுக்கிறேன் பாலா. உனக்கு எதுக்கு அந்தக் கவலை”

“…”

“நான் சொல்றதுகூடத் தப்பு. என் பொண்ணு ஆசைப்படற வாழ்க்கையை நான் அமைச்சிக் கொடுக்கப் போறேன்”

“அப்பா, பவானி வாழ்க்கைல அக்கறைக் காட்டுறது, ஒரு அண்ணனா என்னோட கடமை”

“அப்படியாப்பா! இது கடமையைச் செய்யற மாதிரி தெரியலை. ஏதோ கடனேனு செய்ற மாதிரி இருக்கு”

நாதனின் பேச்சைக் கேட்ட பாலா, அந்தக் குளுமையான வானிலையிலும் கொதி உலை போல் முகம் கொண்டு, பேசாமல் நின்றான். 

நாதன் பைக்கின் அருகே நின்று கொண்டிருந்த மதனைப் பார்த்து, “மதன், இங்க வாங்க” என்றார்.

மதனும் வந்தான்.

“டிவோர்ஸ் பேப்பர் வச்சிருக்கீங்களா??”

“ம்ம், எப்பவும் உங்க வீட்டுக்கு வர்றப்ப கையோட எடுத்திக்கிட்டுதான் வருவேன்” என்றான். 

“அதை எடுத்திட்டு வாங்க” 

ஓடிச்சென்று பைக்கில் தொங்கிய பையிலிருந்து விவாகரத்துப் பத்திரங்களை, மதன் எடுத்து வந்தான்.

“பவானி”

“அப்பா”

“அவருக்கு டிவோர்ஸ் பேப்பர்ல கையெழுத்துப் போட்டுக் கொடும்மா”

பவானி மீண்டும் “அப்பா” என்றாள். 

“அப்பா சொல்றேன் கையெழுத்துப் போடும்மா”

“ம்ம்ம், சரிப்பா” – பவானி. 

“ஜீவன் சார், அதைக் கொஞ்சம் பார்த்துக்கோங்க” 

“ம்ம்ம் சரி” – ஜீவன். 

மதனும், பவானியும் அருகில் இருந்த வாசற்படிக்குச் சென்றனர். கூடவே ஜீவனும் சென்றான். 

தேவையான இடங்களில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தாள். 

“அப்புறம், பவானி நோட்டீஸ் வரும்..” என்று ஆரம்பித்த மனதிடம்…

“இனிமே எதுனாலும் என்கிட்ட பேசுங்க” என்றான் ஜீவன்.

“ஓ! சரி சார். இது என்னோட செல் நம்பர். எடுத்துக்கோங்க” என்று தன் அலைபேசி இலக்கங்களை கொடுத்துவிட்டு, சில தகவல்களைச் சொல்லிவிட்டு, மதன் மன நிம்மதியுடன் சென்றான். 

மதன் அவ்வளவுதான்!!

ஜீவனும் பவானியும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

“என்னாச்சு உனக்கு? கஷ்டமாயிருக்கா? என் மேல கோபமா??” என்று கேட்டுப் பார்த்தான். 

கிடைக்கும் இடைவெளியில் எல்லாம், அவள் இதயத்திடம் கேள்வி கேட்டுப் பார்த்தான். 

அப்பொழுதும் பவானி பதில் சொல்லவில்லை. அவள் இதயம், அவன் இதயத்தை இஷ்டத்திற்கு பந்தாடிக் கொண்டிருந்தது. 

“சரி வா” என்று ஜீவன் கூற, இருவரும் சேர்ந்து நாதன் அருகே வந்து நின்றனர்.

“கையெழுத்துப் போட்டியா பவானி?” – நாதன். 

“ம்ம்ம்”

“ஜீவன் சார், நீங்க கூட்டிட்டுப் போங்க”

“அப்பா, நீங்க பெரிய தப்பு பண்றீங்க” என்று பாலா ஆங்காரம் கொண்டு கத்தினான். 

“என்னப்பா தப்பு??” – நாதன் குரலில் அமைதி குடிகொண்டிருந்தது. 

“கல்யாணமான பொண்ண, இப்படி அனுப்புறது நல்லா இல்லைப்பா. ரொம்பத் தப்பு” 

பாலா! உங்கள் கவனத்திற்கு!! அந்தப் பெண் விவகாரத்துப் பத்திரத்தில் கையொப்பம் இட்டு விட்டாள்!!! – நாம். 

“பாலா, எதுக்கு கல்யாணம் முடிச்சு வைக்கிறாங்க? கடைசி வரை வச்சிக் காப்பாத்துவாங்கனுதான?? ஒரு மாசத்தில என் பொண்ணு உயிருக்குப் போராடற நிலைமைல, ஹாஸ்ப்பிட்டல்ல பார்த்தப்போ…  ஒரு அப்பாவ, எனக்கு எப்படி இருக்கும்?? வலிச்சது பாலா” – நாதன். 

“அதுக்காக… ” என்றவன் குரல் கோபத்தில், மழைக் கொட்டித் தீர்த்த வானத்தைத் தொட்டுவிட்டு வந்தது. 

“இன்னைக்கு இவ்வளவு பிரச்சனை நடக்குது… ஆனாலும் பவானி எந்த தப்பான முடிவும் எடுக்கல. யார் குடுத்தது அந்த மன தைரியத்தை?? அவர்தான்.”

“ச்சே.. நீங்க பண்றது கொஞ்சம் கூட நல்லா இல்லை”

“அப்படியா!! இதோ, கையெழுத்து வாங்கிட்டு சந்தோஷமா போறாரே மதன்… நேரப் போய், அவங்க அம்மா பார்த்து வச்சிருக்கிற பொண்ணுகிட்ட தான் சொல்வாரு”

“அதுக்கென்னப்பா??”

“அப்படி ஒருத்தன் கூட வாழச் சொல்றது மட்டும் நல்லா இருக்கா?? உனக்கே தெரியும் பாலா, அவங்க வீட்ல வேற பொண்ணு பார்த்திட்டாங்கன்னு. அப்புறமும் எப்படிடா இப்படிச் சொல்ல முடியுது??”

“சுத்தி இருக்கிற எல்லாரும் பார்க்கிறாங்கப்பா. நீங்க பண்றது உங்களுக்கு அசிங்கமா இல்லையா?? ஆனா எனக்கு இருக்கு” என்று பாலா தன் உடல் மொழியால் அருவருப்பைக் காட்டினான். 

“அன்னைக்கு வள்ளிம்மா வீட்டுக்கு முன்னாடி நின்னு கத்திறப்போ?? இல்லை, நேத்து இவர்கூட நம்ம வீட்டுக்கு முன்னாடி நின்னு மல்லுக்கட்டினப்போ??.. அசிங்கமா இல்லையா பாலா??”

“அது, அவனை திட்றதுக்.. ” என்று பாலா தடுமாறினான். 

“அப்படிச் சொல்லி நம்ம வீட்டுப் பொண்ணையும் சேர்த்து அசிங்கப் படுத்தின பாலா”

“… “

“பார்க்கிறவங்க பார்த்திக்கிட்டேதான் இருப்பாங்க. என் பொண்ண கல்யாணம் பண்ணிக் கொடுத்து ஒரு மாசத்துல இப்படி ஒரு பிரச்சனைன்னு தெரிஞ்சி வீட்டுக்கு வந்தப்பவும் பார்த்தாங்க.”

“…”

“அப்பப்போ, மதனும் அவங்க அம்மாவும் வந்து பவானியைத் திட்டறப்பவும் பார்த்தாங்க”

” …”

“உன் மாமியார் வீட்லருந்து வந்து சத்தம் போடறைதையும் பார்த்தாங்க”

“… “

“அதையெல்லாம் பார்த்தவங்க… இப்போ அவ சந்தோஷமா வாழறதையும் பார்க்கட்டுமே??”

“அதுக்காக இவனா? இவனை மாதிரி ஒருத்தனா?? வேற ஆளே இல்லையா?”

“ஏன் அவருக்கென்ன??”

“அவன் எப்படிப்பட்டவன்? அதை மறந்தாச்சா?? அவன் ஜெயிலுக்குப் போயி..”

“நிறுத்து பாலா!! தப்பு செஞ்சிருக்காரு. அதை அவர் மறைக்கல. ஆனா திருந்திட்டேனு சொல்றாருல?? “

“நான் அதை நம்பலை”

“அவர் தப்பு செஞ்சது எந்த அளவுக்கு உண்மையோ! அதே அளவுக்கு அவர் திருந்திட்டேன்னு சொல்றதும் உண்மை. நான் நம்பறேன்”

“முதல்ல நீங்கதான வேண்டாம்னு சொன்னேங்க”

“ஆமா, நான்தான் சொன்னேன்”

“அப்புறம் இப்போ ஏன் இப்படி மாறிட்டீங்க??”

“இப்போ அவரைப் பிடிச்சிருக்கு”

“பிடிக்குதா??. ” என்று இளக்காரங்கள் நிறைந்த சிரிப்பினைச் சிரித்தான். 

“ஒண்ணு சொல்லவா பாலா?? எனக்கு உன்னையப் பிடிக்கிறதுக்கு ஒரே ஒரு காரணம், நீ என் புள்ளைங்கிறது மட்டும்தான். ஆனா அவரைப் பிடிக்க ஆயிரம் காரணம் இருக்கு”

பாலாவின் மனதில் கோபங்களும், நாதனின் மனதில் ஆதங்கங்களும் நிரம்பி வழிந்த தருணங்கள் – இவை. 

“முதல வேண்டாம்னு சொன்னீங்க… இப்போ வேணும்னு சொல்றீங்க” – பாலா. 

“அவர் மேல் அன்பு, அக்கறை இருந்ததாலதான் வேண்டாம்னு சொன்னேன்”

“புரியலை”

“ஏற்கனவே நிறையக் கஷ்ட்டப்பட்டுட்டாரு… நானும் என்னோட சுமையை அவர் மேல இறக்கி வைக்க வேண்டாம்னு நினைச்சேன்”

“அப்புறம் இப்போ என்னாச்சு??”

“ஆனா, பவானி இல்லைன்னா எவ்வளவு கஷ்டப் படுவாருன்னு, நேத்து எனக்குத் தெரிஞ்சிடுச்சி. அதுக்கப்புறம் எப்படி விட முடியும்??”

“நாளைக்கு இந்த சமுதாயம் என்ன சொல்லும்??”

எப்பொழுது ஒருவனுக்கு, ஒரு மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லையோ… அப்பொழுதெல்லாம் சமுதாயம் என்ற ஆயுதத்தை எடுத்துக் கொள்வான். – நாம். 

“சமுதாயம்னா யாருடா? நீயும்… நானும்… நீ ஒத்துக்கல… நான் ஒத்துக்கிட்டேன். அவ்வளவுதான்”

நாதன் சார்! தெளிவான பார்வை!! – நாம். 

“… “

“டேய் பாலா!! அவர் சின்ன வயசுல பசியில இருக்கிறப்போ யாராவது வேலையோ, சாப்பாடோ நீ சொல்ற சமுதாயத்தில இருந்து கொடுத்திருந்தா, அவருக்கு இந்த நிலைமை வந்திருக்காது.” – நாதனின் குரலில் வேதனை இருந்தது. 

“… “

“நானும் அந்த சமுதாயத்தில நின்னு, அதேமாதிரி உதவி செய்யாம இருந்திருக்கலாம். எனக்குத் தெரியலை” – நாதனின் குரலில் ஆற்றாமை இருந்தது. 

“… “

“ஆனா, இன்னும் அதே கூட்டத்தில நிக்காம, கொஞ்சம் தள்ளி வந்து… அவர்கூட நின்னுதான் பார்க்கிறேனே?? என்னதான் நடக்குன்னு பார்த்திடலாம்” – நாதனின் குரலில் பெருமை இருந்தது. 

“… “

“அப்புறம்.. இந்த முடிவை நான் எடுத்ததால, ஏதோ நான் பெரிய மனுஷன்னு நினைக்க வேண்டாம். ஏற்கனவே என் பொண்ணு முடிவு எடுத்திட்டா!! அவளுக்குப் பக்கபலமா நான் நிக்கப்போறேன்”

“இப்படிப்பட்ட ஒருத்தனை நம்பி பொண்ண கொடுக்கறீங்க. கஷ்டப்படப் போறீங்க”

“எட்டு மாசம் கழிச்சு என் பொண்ணு சிரிச்சா… அப்பா உங்களுக்கு ஏதும் உதவி செய்யட்டுமான்னு கேட்டா… அவளுக்குப் பிடிச்ச வேலையத் திரும்பச் செய்யறா… என் பொண்ண எனக்கு என் பொண்ணா திருப்பிக் கொடுத்திருக்காரு… அதுக்காக அவருக்கு செய்ற மரியாதைன்னு கூட சொல்ல முடியாது.. ஏன்னா?? அவரை அவ்ளோ அவமானப் படுத்தியாச்சு. மனசு இருக்கிறவன் பண்ற ஒரு விஷயம். அவ்ளோதான்”

“இதான் உங்க முடிவா?? அப்போ என் முடிவையும் கேட்டுக்கோங்க… இவ இனிமே இந்த வீட்டுக்குள்ள வர முடியாது. ” என்று சொன்னவன், தன் மனைவியிடம் சொல்லி பவானியின் உடமைகளை எடுத்து வரச் சொன்னான்.

“இதைச் சொல்ல உனக்கு உரிமையே கிடையாது பாலா. ஏன்னா?? இது என் வீடு. இருந்தாலும் சொல்றேன், இனிமே என் பொண்ணு இங்க வரமாட்டா. அவர் அவளை இனிமே இந்த வீட்ல இருக்கக்கூட விடமாட்டாரு.”

“பார்க்கலாம்…பார்க்கலாம்… “

“பவானியை எங்கயாவது கூட்டிட்டுப் போயிடுங்க சார். இங்க இருந்தா… இவன் பேசறதிலயே என் பொண்ணுக்கு ஏதாவது ஆயிடுமோன்னு பயமா இருக்கு” என்று ஜீவன் நிற்கும் இடம் நோக்கித் திரும்பிச் சத்தமாகச் சொன்னார். 

ஜீவன், அவர்களுக்கு இடையே வர விரும்பவில்லை. அதனால் மௌனமாக நின்றான். நாதனும் சற்று நேரம் உணர்ச்சிவசப்பட்டார். 

“இப்படி ஒருத்தன் பவானிக்கு… ம்ம்ஹூம்.. அப்போ பல்லவிக்கு யாரு மாப்பிள்ளை தருவாங்க? அதை யோசிச்சீங்களா? ” – பாலா. 

“உன்னையும் மதனையும் மாதிரி எல்லாரையும் நினைக்காதடா. இவரை மாதிரி ஒரு நல்லவர் பல்லவிக்கும் கிடைப்பார்”

“நல்லவரா?? அப்புறம் ஏன் விட்டுட்டு போறேன்னு சொன்னான்??”

“அது நான் கேட்டதாலா?? அது அவரோட முடிவு கிடையாது”

தான் செய்த தவற்றை எண்ணி நாதனும், தன் அப்பா பெரிய தவறு செய்கிறார் என எண்ணிக் கொண்டு பாலாவும் எண்ணங்களில் பேசுவதால் எழுத்துகள் இல்லா தருணங்கள் – இவை. 

“அவளுக்கே மனசு சரியில்லை. அவ ஒரு முடிவு எடுத்தாளாம். அதுக்கு இவரு சப்போர்ட்டாம்” என்று நக்கலாகச் சொல்லி, பாலா நகரப் பார்த்தான். 

“போதும் பாலா. என் பொண்ணுக்கு மனசுதான் சரியில்லை. ஆனா இங்கப் பல பேருக்கு மனசே இல்லை. அதுல நீயும் ஒருத்தன்”

“ப்பா.. ” என்று பாலா கோபப்பட்டான். 

“இதுக்கு மேல பேசாத பாலா. நானும் அடிச்சிருவேன்” என்றவர் மருமகளைப் பார்த்து, ” கூட்டிட்டு போமா” என்று அவனை விடக் கோபமாகக் கூறினார்.

நாதனின் மருமகள் வந்து, பவானியின் உடைமைகள் அடங்கிய பெட்டியையும் மருத்துவக் கோப்புகளையும், அவர் அருகில் வைத்து விட்டுத் தன் கணவனை அழைத்துச் சென்றாள். 

நாதன் முகத்தில், மருமகளின் கடமை உணர்வை எண்ணி ஒரு புன்னகை வந்தது. 

*****

நாதன் பவானியின் உடமைகளை எடுத்துக் கொண்டு, ஜீவன் நிற்கும் இடத்திற்கு வந்தார். 

பவானி, ஜீவன் அருகில்தான் நின்றாள்.

“ஜீவன் சார்”

“சார், இவ ஏன் இப்படி இருக்கா? என்கிட்ட எதுவுமே பேசல??” – ஜீவனின் குரலில் பதற்றம் இருந்தது. 

“ஒண்ணுமில்ல… பதறாதீங்க. ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போங்க. சரியாயிடுவா”

“ம்ம்ம்” என்று சொன்னாலும், ஜீவன் பவானியையே பார்த்திருந்தான். 

ஜீவன் முகத்தில், பவானிக்கான கவலைகள் தென்பட்டன. அதை நாதன் கவனித்தார். ஆதலால் கீழே உள்ள ஆறுதல் வசனம் பேசினார். 

“ஜீவன் சார், நான் சொல்றேன் கவலைப்படாதீங்க. கண்டிப்பா பவானி உங்ககிட்ட பேசுவா” 

“ம்ம்ம்” என்று ஜீவன் சொன்னாலும், மனதிற்குள் ‘தன்னை ஜீவன் என அழைப்பாளா?? கைக்குட்டைத் தருவாளா??’ என்று கேள்விகள் ஓடிக் கொண்டிருந்தன. 

“நீங்க ஒரு தடவை டாக்டரை பாருங்க. அப்பதான் உங்களுக்கும் நிறைய விஷயம் புரியும்.” என்று மருத்துவக் கோப்புகளை, ஒருவித நிம்மதியுடன் அவனிடம் தந்தார். 

“ம்ம்ம், சரி சார்” என்று வாங்கிக் கொண்டான். 

“பவானி” 

“அப்பா” 

“பவானிம்மா, இனிமே ஜீவன் சார் உன்னைய பார்த்துப்பாங்க. சரியா” என்று சொல்லிப் பார்த்தார். 

“அப்பா நீங்க…” – பவானியின் குரல் தளர்ந்து போய் இருந்தது. 

“அப்பா… கொஞ்ச நேரம் கழிச்சி ஹாஸ்பிட்டல் வருவேன். சரியா??”

வெகு நேரம் யோசித்தாள். 

“அப்பா கண்டிப்பா உன்னைப் பார்க்க வருவேன். சரியா பவானி” 

‘ம்ம்ம், சரிப்பா’ என்றவாறு மிகுந்த யோசனைகளுடன் தலை அசைத்தாள். 

“ஜீவன் சார், நான் போலீஸ் ஸ்டேஷன் போய் கேஸ வாபஸ் வாங்கிட்டு, அப்புறமா ஹாஸ்பிட்டல் வரேன்.”

“இப்பவே போணுமா??”

“ஆமா சார். இல்லைன்னா, பாலா உங்க மேல இருக்கிற கோபத்தில ஏதாவது செஞ்சிருவான். “

“ம்ம்ம் சரி சார்” 

“மத்த விஷயம் எல்லாம்… ” என்றவர், “சரி, அதை அப்புறமா பார்க்கலாம்” என்று தயக்கத்துடன் சொன்னார். 

“ம்ம்ம்”

“தைரியமா இருங்க. ரெண்டு நாள் நடந்ததை மறந்திடுங்க. சரியா? “

“சரி சார்”

“பவானியைச் சந்தோஷமா கூட்டிட்டுப் போங்க” என்று ஜீவனிடம் சொல்லிவிட்டு, பவானியைப் பார்த்தார். 

பவானியின் தலையை வருடிக் கொடுத்தார். 

“அப்பா” என்று அவர் கைகளைப் பிடித்துக் கொண்டாள். 

“சந்தோஷமா இரு பவானி” என்று கூறினார். 

சட்டென்று தந்தையின் தோள்களில் சாய்ந்து கொண்டாள். நாதன் கண் கலங்கினார். 

“நான் பவானிய நல்லா பார்த்துக்குவேன் நாதன் சார்” – ஜீவன். 

“சரி ஜீவன் சார்” என்று சொல்லி, பவானியை விலக்கி நிறுத்தினார். 

“ரொம்ப தேங்க்ஸ் சார்” – ஜீவன். 

“அய்யோ! நீங்க வேற. நான் எப்பவோ இந்த முடிவை எடுத்திருந்தா, நீங்க ரெண்டு பேரும் இவ்வளவு கஷ்டப்பட்டிருக்க மாட்டீங்க”

“இதுவே எனக்கு… “என்று ஜீவனும் வார்த்தை இன்றி, உணர்ச்சி வசப்பட்டான். 

“போதும் சார். இனிமே ரெண்டு பேரும் சந்தோஷமா இருங்க” என்று ஜீவன் தோள்களில் தட்டிக்கொடுத்தார். 

இனம் புரியா நிசப்தம் நிலவியது! 

“சரி சார். நான் கிளம்புறேன். கொஞ்ச நேரம் கழிச்சு ஹாஸ்பிட்டல் வரேன்” என்று நாதன் விடைபெற்றுக் கொண்டார். 

நிராகரிக்கப்பட்ட இரு நெஞ்சங்களில் நிம்மதிக்காக, தான் எடுத்த இந்த முடிவை எண்ணியபடி வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தார். 

இருவரும் சற்று நேரம், நாதன் செல்வதையே பார்த்துக் கொண்டு இருந்தனர். 

ஜீவன், பவானியின் கைப் பிடித்தான். 

பவானி நிமிர்ந்து, அவன் முகத்தைப் பார்த்தாள். 

“வா போகலாம்” என்று ஆழ்ந்த குரலில் அழைத்தான்.

பவானியின் விழிகள் யோசித்தன.

“பவானி, வா போகலாம்” என்று மறுமுறையும் கூறினான். 

வாழ்வின் எல்லை வரை நீளப் போகும் பயணத்திற்கான, முதல் அடியை இருவரும் கைகோர்த்து ஆரம்பித்தனர். 

ஒரு கையில் தன் உயிரிலானவள், மற்றொரு கையில் அவள் உடமைகள் என ஜீவன் மனப்பிரதேசம் உவகை கொண்டது. 

ஒரு விடயம்! 

ஜீவன் சார், பவானிக்கு ஒரு வாக்கு கொடுத்திருந்தாரே! அதான், ‘எந்தப் பிரச்சனை வந்தாலும், கூட நிற்பேன்’ என்று! அதில் அவர் சில பல தடுமாற்றம் அடைந்தாலும், நம் நம்பிக்கையை காப்பாற்றிவிட்டார்! எனவே சந்தோஷம் கொள்வோமாக!! 

நேயங்கள் கொண்ட மனதில் காயங்கள் இருக்கின்றன. அதை ஜாலங்கள் செய்து காலங்கள் மாற்றி விடும் என நம்புவோம்!! 

error: Content is protected !!