vav-20

வா… அருகே வா! –  20

                    அங்கு நடப்பவற்றை யாராலும் நம்ப முடியவில்லை. பூங்கோதை அறைக்குள் இருந்தாள்.

                                         பூங்கோதை திலக்கின் ஊரில் மழை நின்றிருந்தது. தொலைக்காட்சி அதன் பணியை செவ்வனே செய்ய ஆரம்பித்தது.

இரண்டு நாட்களுக்கு முன் ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த சோகமான நிகழ்வு செய்தியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

           “ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில்  ராணுவ வீரர்களின் வாகனங்கள் அணிவகுத்துச் சென்று கொண்டிருந்தன.

அப்போது யாரும் எதிர்பாராதவிதமாகத் தீவிரவாதி ஒருவன் சுமார் 350 கிலோ எடை கொண்ட வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட கார் ஒன்றை, ஓட்டி வந்து அதனை ராணுவ  வீரர்கள் சென்ற வாகனம் ஒன்றின் மீது மோதி தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினான். இந்த பயங்கர தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.” 

 இந்த செய்தியைக் கேட்ட பொழுது, பூங்கோதையின் வயிற்றில் ஓர் பயப்பந்து உருண்டது. அத்தோடு வாசலில் கேட்ட அழுகை சத்தமும் பூங்கோதைக்கு விஷயத்தை தெளிவு படுத்திவிட்டது.

   பூங்கோதையின் வயிற்றில் ஓடிய பயப்பந்து, பதட்டம், வேதனை என அனைத்தும் கலந்த கலவையாக உருண்டது.

       பூங்கோதையின்  குழந்தை கால்களால் எட்டி உதைக்க, அந்த பயப்பந்து பூங்கோதையிடமிருந்து எங்கோ வெளியே பறந்து சென்றது போன்ற உணர்வைக் கொடுத்தது.

    பூங்கோதை தன்னை தானே நிதானித்துக் கொள்ள, அவள் செவிகளில் ஓர் குரல், ‘பியூட்டி… என்னை நம்பு… என்னை நம்பு…’ என்று கெஞ்சியது.

               பூங்கோதையின் உடல் சோர்வில் ஆட்கொள்ள, அவள் கால்கள் மேலே நடக்க முடியாமல் நடுங்கியது.

                         சடலம் என்ற பெயரில், தேசியக் கொடியால் மூடப் பட்டிருந்ததே தவிர, வேறு எந்த அடையாளமும் இல்லை. அன்று திலக் அதில் பயணம் செய்தான் என்பது மட்டுமே அவர்களின் சாட்சியாக.

                       ‘அவுக இல்லாமல் நானா? இந்த சமுதாயம் என்னை என்ன சொல்லும்? ராசி இல்லாதவள் என்றா? என் குழந்தைக்கும் இந்த அவல நிலையா?’ போன்ற கேள்விகள் பூங்கோதையை துயரத்தில் ஆழ்த்தியது.

 ‘நான் ஏன் வாழ வேண்டும்?’ என்ற கேள்விக அவள் மனதில் எழ திக்பிரமை பிடித்தது போல் அமர்ந்தாள் பூங்கோதை.

        ‘எனக்கு என்னவானாலும், நீ வாழனும். என் குழந்தையை என்னை மாதிரி வளர்க்கணும்.’ என்று என்றோ திலக் கூறியது, இன்று பூங்கோதையின் காதில் ஒலிக்க, “நான் வாழனும், என் குழந்தைக்காக நான் வாழனும்.” என்று அங்கு இருந்த திலக்கின் பொருட்களைப் பார்த்தபடி முணுமுணுத்துக் கொண்டாள் பூங்கோதை.

     “இவ ராசி தான் நமக்கு தெரியுமே?” என்ற மனசாட்சி அற்ற ஊர் மக்கள் பேச்சு பூங்கோதையின் காதில் விழ, திலக்கின் பேச்சு அவள் செவிகளில் ஒலித்தது.

      ‘பியூட்டி… ராசி எல்லாம் உண்மை இல்லை பியூட்டி. உன் முகத்தைப் பார்க்கும் பொழுது தான் எனக்குச் சந்தோசம். உன் நினைப்பு தான் எனக்கு நிம்மதி. உன்னை யாரவது ராசி இல்லாதவன்னு சொன்னால், அவங்க கன்னத்தில் பளார்ன்னு ஒன்னு கொடுத்திரு.’ என்று திலக் கூறியது பூங்கோதைக்கு நினைவு வந்தது.

          பாவம், பூங்கோதைக்கு அன்று மறுப்பு தெரிவித்தது நினைவில் வரவில்லை. அவள் எண்ண ஓட்டம் ராசிக்கும், ஊர் பேச்சுக்கும் இடையே நின்று விட்டது.

    வேகமாக எழுந்து, இவள் ராசியைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த நடுத்தர வயது பெண்மணியின் கன்னத்தில், “பளார்…” என்று அறைந்தாள் பூங்கோதை.

             அந்த நொடி, திலக் அவளைத் தோளோடு அணைப்பது போன்ற நிம்மதியைக் கொடுக்க, அவன் எப்பொழுதும் கூறும் வார்த்தைகள் அவள் நெஞ்சோடு நின்றது.

          ‘எனக்கு ஒருநாளும்  எதுவும் ஆகாது. நான் சொல்றதை நீ நம்ப மாட்ட… இன்னைக்கி இல்லை ஒரு நாளும் நம்ப மாட்ட…’ என்று திலக் கோபமாகக் கூறியது நினைவு வர, தரையோடு அமர்ந்து, “மிலிட்டரி… நான் நம்புதேன் மிலிட்டரி… உன் வார்த்தையை நான் நம்புதேன். உனக்கு எதுவும் ஆகாது மிலிட்டரி. நீ என்னை ஒரு நாளும் கஷ்டப்படுத்த மாட்ட மிலிட்டரி. நீ வந்திருவ மிலிட்டரி.” என்று கதறினாள் பியூட்டி.

           “இது அவுக இல்லை… கட்டி கொடுத்துட்டா நான் நம்பிருவேனா?” என்று பூங்கோதை ஓலமிட, “ராசி மட்டும்தென் கட்டைன்னு நினைச்சோம்… இப்ப சித்தம் வேற கலங்கிருச்சா?” என்று அறை வாங்கிய பெண்மணி அறை வாங்கிய கோபத்தில், பூங்கோதையை பைத்தியம் என்று பட்டம் கட்ட முயற்சித்தார்.

         மேடிட்ட வயிற்றோடு, பூங்கோதை கதறிக்கொண்டு இருக்க, தன் கணவன் கதிரேசனின் கண்ணசைவில் வள்ளி அவள் அருகே செல்ல முயற்சித்தாள்.

வள்ளியின் கைகளைப் பிடித்த அவள் தாயார், “எங்க போற? உனக்கும் ஆறு மாசம். வளைக்காப்புக்கு வர கூடாதுன்னு நான் சொன்னேன். அதையும் கேட்கலை. இப்ப இப்படி வேற.” என்று அவர் தன் மகளைத் தடுக்க, “அம்மா… பூங்கோதை பாவம் அம்மா.” என்று கூறிக்கொண்டு பூங்கோதை அருகே சென்றாள் வள்ளி.

         பூங்கோதை உள்ளே செல்ல, அனைத்தும் அதன் போக்கில் நடந்து முடிந்தன.

திலக்கின் குரல் மட்டும் பூங்கோதை செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்க, “அது அவுக இல்லை. அவுக இல்லை. என் உள் மனசு சொல்லுது.” என்று

பூங்கோதை புலம்பிக்கொண்டே இருந்தாள்.

வள்ளி பூங்கோதையை சமாதானம் செய்ய முயன்று தோற்றுப் போனாள்.

   நேரம் அதன் போக்கில் நகன்றது.

                                   பூங்கோதையின் நடத்தை சற்று வித்தியாசமாக இருந்தது. அவள் அழுதாள் என்றும் சொல்ல முடியாது. ஆனால், பதட்டமாகக் காணப்பட்டாள். ‘மிலிட்டரி இருக்காக. ஆனால், என்னைத் தேடி ஏன் வரலை?’ என்ற கேள்வியை அவள் மனம் சுற்றிக் கொண்டு இருந்தது.

     அடுத்த சடங்குகள் என்று பூங்கோதையை பெண்கள் நெருங்க, அவர்களை சடாரென்று தட்டிவிட்டாள்.

    “என்ன பண்ணுதீக? உங்களுக்கு என்ன ஆச்சு?” என்று  தன் மேடிட்ட  வயிற்றைப் பிடித்தபடி அவர்களைப் பார்த்து அருவருப்பாகக் கேட்டாள் பூங்கோதை.

             அவர்கள் பூங்கோதையை குழப்பமாகப் பார்க்க, “அவுகளுக்கு ஒன்னும் ஆகலைன்னு நான் சொல்லுதேன். நீங்க என்னை என்ன செய்ய சொல்லுதீக?” என்று ஆக்ரோஷமாகக் கத்திக் கொண்டே  அவர்கள் கொண்டு வந்த வெள்ளை சேலையை விட்டெறிந்தாள் பூங்கோதை.

    பூங்கோதையின் கைகள் நடுங்க ஆரம்பித்தது.

         சில நொடிகள் நடுக்கத்திற்குப் பின் மயங்கிச் சரிந்தாள் பூங்கோதை.

                   “இது என்ன இந்த பொண்ணு இப்படி பண்ணுது? ஊரு உலகத்தில் நடக்காததையா நாங்க பண்ணுதோம்?” என்று அவர்கள் கேட்க, கதிரேசன் கலங்கிய கண்களோடு பூங்கோதை அருகே பதட்டமாகச் சென்றான்.

     வள்ளி அவள் மீது தண்ணீர் தெளிக்க, பூங்கோதை தன் கண்களைத் திறந்தாள்.

                        “எது நடக்க கூடாதுன்னு நினைச்சோமோ? அது நடந்திருச்சே…” என்று புலம்பியபடி பூங்கோதையை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார்  முத்தம்மா ஆச்சி.

பூங்கோதையின் எதிர்ப்பை எதிர்பார்க்காத அவர்கள், அவள் அழுத்தத்தில் யோசனையாக நிற்க, “எதுவும் வேணாம். பூங்கோதை இப்படியே இருக்கட்டும்.” என்று வள்ளி நிதானமாகக் கூறினாள்.

     “ஏம்மா… அவளுக்கு தான் நடந்ததில் புத்தி பேதலிச்சி போச்சு. கையை நீட்டுதா… உளருதா. உனக்கு என்னம்மா ஆச்சு?” என்று வள்ளியை பார்த்துக் கேட்டனர் சுற்றத்தார்.

      வள்ளி அவர்கள் கேள்விக்குப் பதில் கூற விரும்பாமல், மௌனம் காக்க, அவர்கள் தங்கள் கேள்வியை கதிரேசனின் தாயிடம் திருப்பினார்.

    “என்ன செல்லம்மா? நீயும் இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?” என்று அவளிடம் கேட்க, கதிரேசனின் உள்ளம் பதறியது.

கைலாசம் தன் மனைவியை  அமைதியாகப் பார்த்தார்.

     செல்லமா குற்ற உணர்ச்சியில் தவித்துக் கொண்டிருந்தார்.

      ‘ஒருவேளை கதிரேசனை திருமணம் செய்திருந்தால், பூங்கோதைக்கு இந்த நிலை வந்திருக்காதோ?’ என்ற கேள்வி அவர் மனதில் எழ, ‘இப்பொழுதேனும் பூங்கோதைக்கு நியாயம் செய்ய வேண்டும்.’ என்று அவருக்குத் தோன்றியது.

     “வள்ளி சொல்வதில் என்ன தப்பு இருக்கு?” என்று செல்லம்மா கலங்கிய கண்களோடு கேட்டார்.

                          “வள்ளி… உனக்கு தான் புத்தி கெட்டு போச்சுன்னு நினச்சேன். உங்க மாமியாருக்குமா?” என்று வள்ளியின் தாய் அலமேலு கேட்டார்.

      “அம்மா… சும்மா இரு.” என்று பற்களை நறநறத்தாள் வள்ளி.

       அங்கு பலரும் வழக்கம், சம்பிரதாயம் என்று இழுக்க, பெரியவர்கள் எதுவும் பேச முடியாமல் அறைக்குள் இருக்கும் பூங்கோதையை பார்த்தனர்.

      பூங்கோதை எதோ யோசனையில் ஆழ்ந்தவளாக அமர்ந்திருந்தாள்.

                    “சம்பிரதாயமுன்னு ஒன்னு இருக்கில்ல? பூங்கோதை இப்படியே இருந்துட்டா எல்லாம் சரி ஆகிரும்மா?” என்று ஓர் பெண்மணி மீண்டும் தொடங்க, “என்ன சம்பிரதாயம்?” என்று வள்ளி காட்டமாக கேட்டாள்.

   “என்ன வள்ளி… நீயும் வயத்தில் புள்ளையை வச்சிருக்க… பார்த்து பேசு. ஊரு வழக்கம்… ” என்று அவர் மேலும் பேச, “தாலியை கட்டிட்டா, ஒரு பொண்ணு மனைவி ஆகுறா? ஆனால், கணவன் இறந்தாலும் அவ மனைவி தானே? ஏன் தாலியை கழட்ட சொல்லி அவளை கட்டாய படுத்தறீங்க? அது அவ இஷ்டம். பொட்டு, பூ எல்லாம் அவ பெண்ணாய் உணர்ந்த தருணம்? அதை ஏன் அவ விட்டுக்கொடுக்கணும்?” என்று வள்ளி அழுத்தமாகக் கேட்க, அந்த கிராமத்து மக்கள் அவளை மேலும் கீழும் பார்த்தனர்.

        அங்கு சலசலப்பு அதிகமாகிக் கொண்டிருந்தது. ‘துக்க வீட்டில் வியாக்கியானம் தேவையா?’  என்ற கேள்வி எழுந்தாலும், இந்த பிரச்சினைக்குத் தீர்வை எப்பொழுது தேடுவது, என்று எண்ணிய சிலர் அங்கு நடப்பதை மௌனமாகப் பார்த்தனர்.

           “என்ன வள்ளி … படிச்சிருக்கோம்… என்ன வேணாலும் பேசலாமுன்னு நினைப்பா? நம்ம…” என்று நடுத்தர வயது பெண்மணி பேச ஆரம்பிக்க அவளை இடை மறித்தாள் வள்ளி.

   “என்ன சம்பிரதாயமுன்னு சொல்ல போறீக அது தானே? யார் வைத்த சட்டம்? யார் வகுத்த சம்பிரதாயம். உங்களுக்கு தெரியுமா?” என்று ஆணித்தரமாகக் கேட்டாள் வள்ளி.

    “சொல்லுங்க… ஒருத்தர் சொல்லுங்க… இவங்க தான் சொன்னாக. இதுக்கு தான் சொன்னாகன்னு… ஏத்துக்குற மாதிரி இருந்தா ஏத்துக்குறோம்.” என்று கூறிவிட்டு, “ராஜா ராம் மோகன் ராய் சதியை ஒழிக்கலைனா, உடன்கட்டை ஏறுறது கூட சரின்னு சொல்றது தான் உங்க வழக்கமா இருந்திருக்கும். உங்க சம்பிரதாயமா இருந்திருக்கும்.” என்று வெறுப்பாகக் கூறினாள் வள்ளி.

                 “வள்ளி… நீ பேசுறது சரி இல்லை.” என்று அவள் தாய் அலமேலு எச்சரிக்க, “அம்மா… இது தான். பூங்கோதை இப்படி தான் இருப்பா. எங்க வீட்டு விஷேஷங்கள் அவளை முன்ன நிறுத்தி தான் நடக்கும். திலக் அண்ணா, செய்த தியாகத்துக்கு நாங்க குடுக்குற மரியாதை இது தான். இஷ்டம் இருந்தா, எங்க வீடு விஷேஷத்துல கலந்துக்கோங்க. இல்லையா, யாரும் எங்க வீட்டுக்கு வர வேண்டாம்.” என்று தன் தாயை எதிர்ப்பது போல் மொத்த ஊரையும் எதிர்த்தாள் வள்ளி.

    பலரும் பல கோணத்தில் பேசிக்கொண்டு அவர்கள் வீட்டுக்குச் சென்றனர்.

               அன்றிரவு, அனைவரும் பூங்கோதையோடு தங்கி இருக்க,  பூங்கோதை விட்டத்தைப் பார்த்தபடி படுத்திருந்தாள்.

                      ‘பியூட்டி…’ அந்த அழைப்பு அவளை மென்மையாகத் தீண்டியது.

 ‘என்ன வேணும் பியூட்டி?’ அவன் கேட்டுக்கொண்டே இருந்தது பூங்கோதையின் காதில் சன்னமாக ஒலித்தது.

      ‘உங்கள் அருகாமை… என்று சொல்லி இருக்க வேண்டுமோ?’ என்று பூங்கோதை மனம் தவித்தது.

   ‘சொல்லிருந்தா வந்திருப்பாகளோ?’ என்ற கேள்வியைத் தொடர்ந்து,  “மணி கேட்டேனே?” என்று பதட்டமாக முணுமுணுத்தாள் பூங்கோதை.

      பூங்கோதை எழுந்து அமர்ந்தாள். தன் மேடிட்ட வயிற்றின் கீழ் இடுப்பைத் தடவினாள்.

            முதல் முறையாக, கண்களால் திலக் அவள் இடையைத் தீண்டியது நினைவு வந்தது. அதைத் தொடர்ந்து, அவள் வெற்றிடையில் ஒவ்வொரு மணியாக அவன் தன் உரிமையை நிலைநாட்டுவது நினைவு வர அவள் கால்கள் அவள் போக்கில் திலக்கின் பொருட்கள் இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றது.

     திலக்கின் பொருட்களைத் திறந்து பார்த்தாள் பூங்கோதை.

  திலக்கின்  பைக்குள்  மணி கோர்க்கப்பட்ட கண்ணாடி வளையல்கள்.  அவன் பர்ஸ்க்குள்  பூங்கோதை கேட்ட அழகான மணிகள்.

    “அத்தான்….” என்று அலறினாள் பூங்கோதை.

     கதிரேசன் பூங்கோதை அருகே ஓடி வர, “அத்தான்… அவுக உயிரோடத்தான் இருக்காக… அத்தான்… அவுக உயிரோடத்தான் இருக்காக…” என்று அந்த மணியை தன்னோடு இறுக்கி கொண்டு கதறினாள் பூங்கோதை.

           “நான் தான் சொல்லுதேன்ல… என் உள் மனசு சொல்லுதுன்னு. நீங்க தான் நம்பவே மாட்டேங்கிறீக…” என்று பூங்கோதை கதிரேசனிடம் அழுது கொண்டே  சண்டையிட, “சரி… திலக் இருக்கான்… திலக் இருக்கான்…” என்று கதிரேசன் அவளை உடைந்த குரலில் சமாதானம் செய்தான் கதிரேசன்.

   “அத்தான்… என்னை சமாதானம் செய்யாதீக. நான் உண்மையை சொல்லுதேன். இந்த மணியை பாருங்க. இது அவுக கிட்ட.. அவுக கிட்ட… அவுக சட்டை பையில்தென் இருக்கும். எந்த சோலிக்குப் போனாலும், இதை விட மாட்டாக. அவுகளுக்கு குண்டடி பட்டிருந்தா, இந்த மணி என்கிட்டே வந்திருக்காது.” என்று பூங்கோதை, தன் உள்ளுணர்வு, நிகழ்வு என அனைத்தையும் கூறி கதிரேசனை நம்ப வைக்க முயற்சித்தாள் பூங்கோதை.

             ‘நான் கேட்ட மணியைக் கொடுத்த அவுக, கண்டிப்பா எனக்காக வரமாட்டாகளா?’ என்று கேள்வியோடு எதிர்பார்ப்போடு, அவள் அமர்ந்திருக்க, ‘பூங்கோதை சொல்வது போல் இருந்துவிடாதா?’ என்ற ஏக்கம் அனைவரின் கண்களிலும் தெரிந்தது.

              “திலக் இருந்திருந்தா உன்னைப் பார்க்க வரமால் இருப்பானா பூங்கோதை?” என்று கதிரேசன் பூங்கோதையின் தலை கோதி கேட்டு, குலுங்கி அழுதான்.

         அனைவரின் கண்களும் கலங்க, பூங்கோதையின் கண்களோ அந்த மணியை அளவிட்டுக் கொண்டிருந்தது.

    “அவுக இருக்காக. ஆனால், ஏன் என்னை பார்க்க வரலை?” என்று சந்தேகம் மனதில் பிறக்க, அவள் பதட்டம் அதிகரிக்க ஆரம்பித்தது.

      ‘பியூட்டி… எனக்கு ஒன்னும் ஆகாது. நான் உன்னை விட்டுட்டு எங்கயும் போக மாட்டேன்.’ என்று திலக் கூறுவது பூங்கோதையின் காதில் மீண்டும் மீண்டும் ஒலிக்க, “நான் நம்புதேன். என் மிலிட்டரிக்கு ஒன்னும் ஆகலை.” என்று உருபோட்டுக் கொண்டே இருந்தாள் பூங்கோதை.

                     அவள் உதடுகள் உருப்போட்டாலும், “ஏன் வரவவில்லை? ஏன்? ஏன்? ஏன்?” என்று கேள்வி பூங்கோதையின் மூளையை வண்டாக குடைந்தது.

வா அருகே வா வரும்…