IM 11

‘ஹாஸ்டல் போயாச்சா! ஏன் இத்தனை சீக்கிரம் போனே? மிஸ்ஸிங் யூ ஆல்ரெடி’

இவனுடன் எப்போதும் இப்படி இந்த ஒரு இன்பமான இம்சை! விவேக்கின் குறுந்தகவல் பார்க்க இப்படி தோன்றியது மயூரிக்கு!

செய்வதையெல்லாம் செய்துவிட்டு ஒன்றுமே நடக்காததை போல் பேச ஆண்களால் மட்டும் தான் முடியுமோ!

“மீ டூ!”

என்று மட்டும் பதில் அனுப்பினாள்.

இன்னொரு பக்கம் விஷ்ணு.

“போயிட்டியா?

இந்த பக்கம் வந்திராதே கொஞ்ச நாளைக்கு!

அந்த கேப்பில் அஞ்சுவை வீட்டுக்கு கூப்பிட்டுக்குறேன்!”

அடப்பாவி என்ற எண்ணத்தின் ஊடே,

“வில் டிரை” என பதிலளித்தாள்!

“ப்ளீஸ், என் வாழ்க்கையில் குத்துவிளக்கை ஏற்றி வை தாயே!  இந்த பக்கம் வந்திடாம ஹாஸ்டலில் இருந்தே ஏத்தி வை!”

‘கெக்கே பிக்கே’ என்று சிரித்ததில் அங்கு படிப்பில் மூழ்கிக் கொண்டிருந்த கூட்டமெல்லாம் இவளை பார்த்து முறைத்தது!

அநேகமாய் எல்லாருக்கும் அவர்கள் கல்லூரியில் படிக்கும் காலம் வசந்த காலமாய் இருந்திருக்கும்! அங்கு நேரமெல்லாம் எப்படி பறக்கும் என்பதை யாரும் அறிவதில்லை, பின்னாளில் அது அவரவர் நினைவில் நிற்பதுவுமில்லை!

மயூரவள்ளிக்கும் அப்போது தான் அந்த கல்லூரியில் சேர்ந்தது போலிருந்தது! அதற்குள்ளாகவே இறுதி வருடத்தில் அடியெடுத்து வைத்திருந்தாள்!

காலங்கள் பறந்து கொண்டிருந்தன, அதில் விவேக்கும் அவளுடன் சேர்ந்து கொள்ள புல்லட் டிரெயினை விட வேகமாய் போனது அவளது வாழ்க்கை!

எப்படி போனது என்று கேட்டால் நல்ல நாட்கள் பாதியும் சண்டை நாட்கள் மீதியுமாய் இருந்தது! அவனை புரிந்து கொண்டுவிட்டோம் இனி எந்த பிரச்சனையுமில்லை என்று அவள் சந்தோஷிக்கும் நாட்கள் அநேகமாய் சண்டையில் முடிந்திருக்கும்!

முக்கால்வாசி சண்டையில் விஷ்ணுவின் பேச்சிருக்கும். மயூரவள்ளியால் சில விஷயங்களை ஒன்றும் செய்ய இயலாமல் போனது!

சுமார் நான்கு வருடங்களுக்கும் கூடுதலாக அரும்பாடு பட்டு படித்த மருத்துவ படிப்புகளை 

உபயோகித்து பார்ப்பது போல் அமைந்திருந்தது அவளின் அந்த வருடத்தின் இண்டர்ன்ஷிப். அவள் தோழிகளில் சிலர் அதற்காக வேறு மருத்துவமனைகளுக்கு சென்றுவிட, இவளும் ராஜியும் அதே கல்லூரியை சேர்ந்த மருத்துவமனையில் தங்கள் பணியை தொடர்ந்தனர்! சிக்கலான காலகட்டம் அது மயூரவள்ளிக்கு, மருத்துவத்துறையில் இருப்பவர்கள் அந்த கஷ்டத்தை நன்கு அறிவர்!

“இந்த வருஷத்தோட உன்  படிப்பு தான் முடியுதே, கல்யாணத்தை சீக்கிரம் வச்சிக்கலாமா வள்ளி?”

அமுதாவுக்கு தன் கடமையை முடிக்கும் அவசரம்!

இந்த பிள்ளைகள் போகிற போக்கே சரியில்லை என்பதாக வேறு அடிக்கடி அவருக்கு தோன்றி கலவரப்படுத்தியது!

விவேக் அப்போது வீட்டில் இல்லை!

விஷ்ணுவோ அது ஞாயிறு என்பதால் டிவியில் மூழ்கியிருந்தான்.

அமுதா அத்தை தன்னிடம் கேட்ட கேள்விக்கு சற்று நேரம் என்ன சொல்லவென்று தெரியாமல் இருந்தாள் மயூரி!

“என்னமா யோசனை?”

“இந்த வருஷம் ரொம்ப கஷ்டம் அத்தை. இன்னும் ஒரு வருஷம் போகட்டுமே. விவேக் கிட்ட ஏற்கனவே இதை பத்தி பேசிட்டேன்…ஆ”

வலித்த உச்சந்தலையை தடவி விட்டு கொண்டிருந்தாள்!

எப்போது இவளருகில் விஷ்ணு வந்தானென்றே தெரியவில்லை! கொட்டிவிட்டிருக்கிறான் அவள் தலையில்.

பதிலடியாய் அவனை இரண்டு அடி வைக்க மறுபடியும் இருவருக்கும் சண்டை ஆரம்பமானது!

நடுவில் வந்து அவர்களை பிரித்து விட்டார், அமுதா!

“அடடா உங்க இரண்டு பேர் சண்டையை விலக்கவே எனக்கு நேரம் சரியா போகுது!

விஷ்ணு என்ன டா இது சின்னபுள்ளத்தனம்!

அவ ஒரு டாக்டர், உனக்கு அண்ணியா வரப் போறா. இப்படியா செய்றது!

விவேக் இருந்திருக்கணும் இப்ப!”

அவன் வாங்கிய திட்டுக்களை நகைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள் மயூரி!

“என்ன மம்மி, விவேக்குன்ன பயந்திருவோமா? அவ்ளோ எல்லாம் அவன் வர்த் இல்லை. நானும் ரெளடி தான் தெரிஞ்சிக்கோ!”

அவன் தோளில் பலமாய் தட்டி அவனை தன்னை பார்க்கும்படி செய்தவள்,

“இப்ப எதுக்கு என் தலையில் கொட்டின தடியா! உனக்கு அறிவில்லாம போன மாதிரி எனக்கும் மூளை மழுங்கி போகணுமா?”

“ஆமா இப்ப ஏதோ நல்லா இருக்கிற மாதிரியே பேசுறே! யாரை கேட்டு நீ கல்யாணத்தை தள்ளி வைக்கலாம்னு முடிவு செஞ்சே! இதில் எத்தனை சிக்கல் இருக்க தெரியுமா”

“என்ன டா சிக்கல்?”

“அத்தை கொஞ்சம் இருங்க.. யாருக்கு ராசா சிக்கல்? உனக்கு தானே! எசகுபிசகா எங்கையும் மாட்டிகிட்டையா?”

அமுதாவும் மயூரியும் ஒரு சேர விஷ்ணுவை சந்தேகமாய் பார்த்தனர்!

“என்ன விஷயம்னு மறைக்காம சொல்லு டா!”-மயூரி!

“அந்த அஞ்சனாவுக்கும் தான் கல்யாணம் ஆகிடிச்சுன்னு சொன்னியே தம்பி! இப்ப என்ன டா”-அமுதா

“மா இந்த உலகத்தில் அஞ்சுவை விட்டா வேற பொண்ணே இல்லையா! நீ வேற பழைய கதையே பேசி என்னை கடுப்படிக்காதே மா!”

“முதலில் மோனி, அப்புறம் அஞ்சனா. அதுக்கும் பிறகு ஹேமா, கீர்த்தனா, கவிதா, ரம்யான்னு கைவிட்டு போனப்ப எல்லாம் இதையே தான் சொன்னான், இல்ல அத்தை!”

இரு பெண்களும் நகைக்க ஆரம்பித்தனர்!

“சிரிக்கிறியா வள்ளி! நல்லா சிரி. இந்த நாள் உன் டைரியில் குறிச்சு வச்சிக்கோ. நீ கல்யாணம் பன்றதுக்கு முன்னாடி நான் ஒரு பொண்ணை கல்யாணம் செஞ்சு இந்த வீட்டுக்கு கூப்பிட்டு வந்து அவ கையால் எங்க வீட்டு குத்துவிளக்கை ஏத்த வைக்கலை என் பெயர் அண்ணாமல… சே விஷ்ணு இல்லை”

அவன் சொன்னதை அந்த இரு பெண்களும் வழக்கம் போல் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை! ஆனால் அந்த வீட்டின் தேவதை ‘ததாஸ்து’ என்றது அங்கு எவர் காதிலும் விழவில்லை!

இப்போது அவள் தன் இறுதி வருட படிப்பில் இந்த ‘இண்டர்ன்ஷிப்பும்’ சேர்ந்துக் கொண்டதில் அத்தை அமுதா வீட்டுக்கு கூட முன்பு மாதிரி போக முடிவதில்லை.

மருத்துவ படிப்பை முடிக்கும் தருவாயில் இருந்தபடியால் இது முக்கிய காரியமாய் போனது, மருத்துவமனை பணிகளும் அவளுக்கு அதிகமாய் இருந்தன! 

‘மயூரி இன்னிக்கு வெளியே போலாமா?’

விடிகாலையில் அவளுக்கு ஒரு குறுந்தகவலை அனுப்பிவிட்ட பிறகே படுக்கையை விட்டு அன்று எழுந்தான் விவேக். அதை அவள் இறுதி வரை பார்க்க போவதே இல்லை என்பதை அவன் அறிந்திருக்கவில்லை.

அன்று விதி தன் சதி வேலையை செய்ய காத்திருக்க, வசமாய் அதில் சென்று வலிய மாட்டிக் கொண்டாள் மயூரவள்ளி!

சென்னை அருகே அன்று ஒரு பயங்கர விபத்து. பயணிகள் அடங்கிய பேருந்துடன் எதிரே வந்த லாரி மோதியதில் பலரும் காயங்களுடனும் உயிருக்கு உத்திரவாதம் இல்லாமலும் இவர்களின் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்தனர்.

முந்தின நாள் நைட் ஷிப்ட் முடிந்து விடிகாலையில் தான் ஹாஸ்டல் அறைக்கு போயிருந்தாள். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளை அதற்குள்ளாகவே ராஜி எழுப்பிவிட்டாள்.

“மயூரி ஒரு எமெர்ஜென்சி. ஸ்டாஃப் கம்மியா இருக்காங்களாம். நம்ம எல்லாரையும் உடனே வர சொல்லி டீன் உத்திரவு. சீக்கிரம் கிளம்பு”

எங்கிருந்து வந்ததோ அந்த பதற்றம் அங்கிருந்த இளம் மருத்துவர்கள் எல்லாருக்கும்! அவசர அவசரமாய் கிளம்பி மருத்துவமனைக்கு ஓடி வந்தனர். ஓரிடத்தில் நிற்க கூட நேரமில்லாமல் ஒவ்வொரு ‘கேஸ்’ பார்த்து அதற்கு தேவையானவற்றை கவனிக்க அலைந்து கொண்டிருந்தனர்.

மயூரவள்ளிக்கு காலையில் சாப்பிட கூட நேரம் இருக்கவில்லை! இரண்டு பேஷண்டை பார்த்து முடிக்கும் முன்பே அவளுக்கு தள்ளாடியது.

மருத்துவர்களின் உடல் நிலைமை, மன நிலைமை புரிந்துக் கொள்ளும் மக்கள் நம் நாட்டில் இருப்பார்களா? தேடித் தான் பார்க்க வேண்டும்!

“இந்தாம்மா கொஞ்சம் இந்த பேஷண்டையும் பாரு!”

அவளை ஒரு வேலை செய்ய விடாமல் விடாது துரத்திக் கொண்டிருந்தாள் ஒரு நடுத்தர வயது பெண்மணி. எங்கையோ உள்ள ஏரிச்சல் மொத்தத்தையும் மயூரியிடம் இறக்கிக் கொண்டிருந்தாள்.

“கொஞ்சம் இருங்க மா ஒவ்வொருத்தரையா தானே பார்க்க முடியும்!” என்ற மயூரியை அவள் மதிக்கவே இல்லை.

சத்தமாக தன்னுடன் இருந்தவரிடம் முணுமுணுத்தது அங்கிருந்த அனைவருக்கும் கேட்டது!

“இதுக்கு தான் நான் சொன்னேன் இந்த ஹாஸ்பிட்டல் வேணாமுன்னு, கேட்டீங்களா?”

அன்று ஏக கூட்ட நெரிசல் என்பதால் அறை வசதியெல்லாம் எல்லாருக்கும் அமையவில்லை அந்த மருத்துவமனையில்! அதனால் நோயாளிக்கு தேவையான அடிப்படை சிகிச்சை எல்லாம் அந்த பெண் கண்படவே தான் நடந்தது!

எல்லாவற்றுக்கும் ஒப்பாரி வைத்தாள் அந்த பெண்மணி!

“புண்ணு மேலேயே இரக்கமில்லாம வச்சி அழுத்திறியே மா…”

“ஐயோ தையலா போடணும், அவ்ளோ பெரிய காயமா அது!”

மயூரிக்கு தலை விண்விண்ணென தெறிக்க ஆரம்பித்தது! கண்ணாடித்துகள் ஒன்று தோலுக்கு அடியில் இருக்க அப்படியே வைத்து தைக்கவா அவள் மருத்துவம் படித்தாள்? நோயாளிக்கு அருகில் சொந்தங்களை அண்ட விடாமல் இருப்பது சாலச் சிறந்தது என்பது தாமதமாக புரிந்தது மயூரிக்கு.

இவள் தோழி ராஜி அவள் வேலையை முடித்து விட்டு வந்த அந்த பெண்மணியை சத்தம் போட்டு வெளியே தள்ளி நிறுத்தும் வரை மயூரியின் இந்த போராட்டம்

தொடர்ந்தது!

அதை முடித்து அடுத்த நோயாளியின் நாடி துடிப்பை பார்க்க போனவளின் கண் இருட்டிப் போனது மட்டும் தான் அவளறிவாள்.

எழுந்து பார்க்க அவள் நாடியை ராஜி பிடித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்ன மயூரி, உடம்பு முடியலைன்ன சொல்ல வேண்டியது தானே!

இப்படியா மயக்கம் போட்டு விழுவே!”

திறுதிறு முழி மயூரியிடம்!

“என் கிட்ட விஷ்ணு நம்பர் தான் இருந்தது, அவர்ட்ட சொல்லிட்டேன். இப்ப வரேன்னு சொல்லியிருக்கார். எனக்கு ஹாஸ்பிட்டல் வேலையிருக்கு சோ உன் கூட இருக்க முடியாது டி, சாரி ஆண்ட் பை”

அவள் போய்விட்டாள். இவள் சுற்றிலும் தன் போனை தேட அதை தன் அறையிலிருந்தே எடுத்து வரவில்லை என்பது அப்போது தான் உரைத்தது!

வழக்கம் போல் விஷ்ணு அங்கு வந்ததும் இவளை சத்தம் போட ஆரம்பித்திருந்தான்.

“ஏன் இப்படி இருக்கே? நீயெல்லாம் ஒரு டாக்டரா!”

“ஏய் இது ஸ்டாஃப் ரூம். கொஞ்சம் மெதுவா பேசு டா”

“உன் உடம்பை ஒழுங்கா பார்த்துக்க தெரியலை, உன்னை நம்பி எவன் டி வைத்தியம் பார்க்க வருவான்! ஒழுங்கா நேரத்துக்கு எதையும் செய்ய மாட்டியா?”

திட்டின் ஊடே அவளை அவள் கல்லூரி மருத்துவமனை அருகிலுள்ள உணவகத்துக்கு அழைத்து வந்திருந்தான் விஷ்ணு!

அந்த கடையில் எல்லாமே செல்ப் செர்விஸ் தான். இவளை மானாவாரியாக திட்டிவிட்டு அவன் உணவை வாங்கி வரப் போக அதே கடையில் உள்ளே நுழைந்த விவேக்கை யாரும் கவனிக்கவில்லை!

அத்தனை முறை அவளுக்கு போன் செய்து அவள் எடுக்கவில்லை என்றதும் அவளை நேரில் பார்த்து செல்ல மருத்துவமனைக்கும் வந்துவிட்டான்! அவளை எங்கே என்று கேட்க, எவருக்கும் அவள் இருப்பிடம் தெரியவில்லை! ராஜியை அவன் பார்க்கவுமில்லை!

தன் விதியை நொந்தபடி வயிற்றை கவனிக்கலாம் என்று அதே உணவகத்துக்கு வந்தவன் அவள் அங்கே காட்சியளித்தாள்!

ஆர்வமாய் அவளருகில் போக எத்தனித்தவனை நிறுத்தி வைத்தது அவன் உடன் பிறந்தவனின் செயல்!

“இந்தா வள்ளி சாப்பிடு! வேற எதுவும் வேணுமா!”

“இல்ல இதுவே போதும்! நீயும் வாங்கிட்டு வா!”

“நீ சாப்பிட ஆரம்பி இதோ வரேன்!”

என்றவன் அவளுக்கு பிடிக்கும் என சாத்துகுடி பழரசத்தை வாங்க போனான்!

இருவரையும் அதே இடத்தில் எரித்து விடுபவன் போல் பார்த்துக் கொண்டு நின்றான் விவேக்.