JTE-3

பவானியின் வீடு மலைச்சரிவில் கட்டப்பட்டுள்ள, ஒரு ஓட்டு வீடு. மிகச் சிறிய அளவிலான பரப்பளவைக் கொண்டிருக்கும். வீடு நடுத்தர வர்க்கத்திற்கும் கீழே வாழ்க்கை நடத்தும் மனிதர்களுக்கான அடையாளங்கள் கொண்டிருந்தது.

ஒற்றைப் படுக்கையறை, ஒரு சமையலறை மற்றும் சிறிய வரவேற்பறை.

தன் அப்பாவின் அரவணைப்பில், வீடு வந்து சேர்ந்தாள் பவானி. மழை சற்று அதிகமானதால் இருவரும் நனைந்திருந்தனர்.

“பவானி நனைஞ்சிருக்கம்மா. நல்லா துவட்டிக்கோ” என்று ஒரு துண்டை எடுத்துத் தந்தார், நாதன்.

பவானியும் நன்றாகத் துவட்டிக் கொண்டு, வேறு உடை மாற்றிவிட்டு வந்தாள். நாதன், அவளுக்குத் தேவையான ஆகாரம் கொடுத்து, மருந்துகள் எடுக்க வைத்தார்.

அதன் பின், அழுகையாலோ, அதீத மன அழுத்தத்தாலோ… இல்லை கொடுக்கப்பட்ட மருந்துகளின் பலனாலோ பவானி தூங்கி விட்டாள்.

பாலா, பல்லவி இருவரும் தத்தம் வேலைக்காக வெளியே சென்றிருந்தனர். ஆதலால் எந்தவிதப் பேச்சுக்கள் இல்லாமல், அந்த நாள் நிறைவடைந்தது.

*****

மலைப்பிரதேசத்தில் மற்றொரு நாள் ஆரம்பமானது… அதுவும் குளிர் காற்று மற்றும் மிதமான காலை வெயிலுடன்…

பவானி வீட்டில்…

உள நோயின் காரணமாக, இரவுப் பொழுது பவானி தூங்குவதற்கு மிகுந்த சிரமப்படுவாள். விழிப்புடனே விடியலைச் சந்தித்ததால், நன்கு விடிந்த பின்பே தூங்க ஆரம்பித்தாள்.

பவானியின் தங்கை, பல்லவி பள்ளிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள்.

ஆண்கள் இருவரும் சமையல் அறையில், அன்றைய வயிற்றுப் பசிக்கானத் தேவையைப் பூர்த்தி செய்யும் வேலையில் இருந்தனர்.

ஒரு எட்டு மணி அளவில்… பவானி எழுந்து அமர்ந்தாள்.

“நேத்து எங்க போன பவானி?” – இந்த வசனம் பல்லவிக்குச் சொந்தமானது.

எழுந்து அமர்ந்தவுடன் வந்த கேள்வி புரியாமல் விழித்தாள், பவானி.

“பேசமாட்டியே… சரி எங்ககிட்டத்தான் பேசமாட்ட. மாமா… மதன் மாமா வந்தாங்கள?? அவங்ககிட்ட பேச வேண்டியது தானே?? ”

பவானிக்கு, இப்பொழுது புரிந்தது. ஆனால் பதில் சொல்லத்தான் பிடிக்கவில்லை.

“மாமாவும், அவங்க அம்மாவும் பாலாண்ணாவ எப்படியெல்லாம் திட்டினாங்க தெரியுமா??” என்று தன் அண்ணன் மற்றவர் முன்னிலையில் பட்ட அவமானத்தைக் கொட்டித் தீர்த்தாள் பல்லவி.

பல்லவிக்கு தனது அண்ணன் மேல் இருக்கும் அளவிற்கு, அக்காவின் மீதும் பாசம் இருந்தது.

பவானி, உள நோயின் காரணமாக, புகுந்த வீட்டிலிருந்து பிறந்த வீட்டிற்கு வந்த முதல் இரண்டு மாதங்கள், நன்றாகக் கவனித்துக் கொண்ட பெண்தான். ஆனால் அந்தக் கவனிப்பைக் காலம் முழுவதும் தர வேண்டும் என்கின்ற பொழுது, அந்தப் பள்ளி செல்லும் பெண்ணால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஆம்! பல்லவி பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி. நாதனின் கடைசி மகள்.

எரிச்சலுடன், “பவானி, சும்மா போயி தனியா உங்கார்ந்துகிட்டா, எல்லா பிரச்சனையும் சரியாயிடுமா??” என்று கேட்டாள் பல்லவி.

பவானி எந்தப் பதிலும் சொல்லாமல், கண்கள் சொருகிப்போய் கட்டிலில் அமர்ந்திருந்தாள்.

பல்லவியின் சத்தம் கேட்டதால், சமையலறையிலிருந்து வெளியே வந்த நாதன், “பல்லவி, நீ ஸ்கூலுக்கு கிளம்பு. லேட்டாகுது பாரும்மா” என்று சொல்லிகொண்டே, பவானி அருகில் சென்று அமர்ந்தார்.

பல்லவியோ, “ம்ம்ம், உங்களுக்கு அவ மேலதான் பாசம். என் மேல கிடையாதுல?” என்று கேட்டவாரே வந்து, நாதன் அருகில் அமர்ந்தாள்.

“அப்படியில்லடா” – நாதன்.

“ப்பா குட்டிப்பையனும், அண்ணியும் வீட்டுக்கு வரணும்ப்பா” – பல்லவி.

“அதுக்கு உங்க அக்கா இங்கிருந்து போகணும்” என்று ஒரு சம்படத்தைக் கையில் எடுத்துக்கொண்டு சமையல் அறையிலிருந்து வந்தான் பாலா.

பாலா, பவானியின் அண்ணன். திருமணம் ஆனவன். அவனும் அவன் மனைவியும், வீட்டை நன்றாகவே கவனித்துக் கொண்டவர்கள்தான். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல், அவர்களால் முடியவில்லை. காரணம் பாவனியின் திருமணத்திற்கு மற்றும் மருத்துவ காரணங்களுக்காக வாங்கிய கடன். அது, அவர்களது பொருளாதாரத்தை மிகவும் பாதித்தது.

எனவே பவானியை, திரும்பவும் அவளது கணவனிடமே சேர்த்து வைத்துவிட்டால், தங்களது கடமை முடிந்துவிடுமென்று, கடன் தீருமென்றும் பாலாவும், அவன் மனைவியும் நினைக்கின்றனர்.

ஆறு மாதத்திற்கு முன், பாலாவின் மனைவி பிரசவத்திற்காகத் தாய் வீடு சென்றாள். குழந்தை பேரு நடந்த பிறகும், ‘வர மாட்டேன்’ என்று அடம் பிடிக்கிறாள். பவானி வீட்டை விட்டுச் சென்றால்தான், இங்கே வர முடியும் என்று கணவனுக்குக் கட்டளை இட்டிருக்கிறாள்.

பெற்ற பிள்ளையையும், கட்டிய மனைவியையும் பிரிந்து இருப்பது, பாலாவிற்கு மிகப் பெரிய வருத்தம்.

ஆதலாலே, அவனிடமிருந்து அப்படி ஒரு வார்த்தைப் பிரயோகம்.

“பல்லவி கூட்டு எதுவும் வைக்கல. அட்ஜஸ்ட் பண்ணிக்கோ” என்று சம்படத்தைப் பல்லவியிடம் கொடுத்தான்.

“ம்ம்ம், சரி அண்ணா. அண்ணி இருந்தா, ஏதாவது நல்லதா செஞ்சித் தருவாங்க.” என்று முணுமுணுத்துக் கொண்டே, “அப்பா வரேன் ” என்று சொல்லிப் பள்ளிக்குக் கிளம்பினாள்.

பல்லவியை வழியனுப்பி விட்டு உள்ளே வந்த பாலாவைப் பார்த்தும், “பாலா” என்றார் நாதன்.

“என்னப்பா?” என்று கேட்டவாரே, படுக்கையறைக்குள் நுழைந்தான்.

அவன் பின்னேயே சென்றவர், “நீ போய், குட்டிப் பையனையும் மருமகளையும் கூட்டிட்டு வாடா” என்றார்.

“எத்தனை தடவைக் கூப்பிட்டுப் பார்த்திட்டேன். அவங்க வீட்ல தெளிவா இருக்காங்கப்பா. பவானி இங்கிருந்து போனாதான், அவங்க பொண்ண அனுப்புவாங்க” என்று சலிப்புடன் பாலா சொன்னான்.

“பாலா”

“ப்பா, அவளைக் கொஞ்ச நாளாவது மதன் வீட்டுல போயி இருக்கச் சொல்லுங்க” என்று வெளியே இருந்தவளுக்குக் கேட்கும்படிக் கத்திச் சொன்னான்.

கட்டிலில் அமர்ந்து கேட்ட பவானிக்கு மனம் கனக்க ஆரம்பித்தது.

“இல்லை பாலா, அவ எத்தனை தடவ சொல்லிட்டா?? அவளுக்கு அங்க போகவே பிடிக்கல. நீ புரிஞ்சிக்கோ!”

“நான் புரிஞ்சுதான் பேசுறேன்.” என சொல்லிவிட்டு, தன் கூடையை எடுத்துக் கொண்டு, வெளியே வந்தான்.

“பாலா டாக்டர் என்ன சொன்னாங்க?”

“அப்பா, அவ இங்க வந்து எட்டு மாசமாகுது. முதல் ரெண்டு மாசம் நல்லாதானே பார்த்தேன். இன்னும் பாருன்னா? என்னால முடியலைப்பா” என்று எரிச்சலுடன் கூறினான்.

இப்படிச் சொல்லிவிட்டு வெளியே கிளம்பத் தயாரானான்.

வெளியே செல்லுமுன், பவானியின் அருகில் வந்து, “நான் இல்லாதப்ப, மதன் வந்து பேசினா பேசு” என்று சொன்னான்.

பவானி தலை குனிந்து கொண்டாள்.

“பவானி, தயவுசெஞ்சு என்னையப் புரிஞ்சிக்கோ.”

பவானி, பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

“வேற எந்த முடிவு எடுக்காத. ஏன்னா? உனக்கு முடிவு எடுக்கத் தெரியாது”

ஒரு சின்ன ஏக்கப் பெரு மூச்சு வந்து சென்றது, பவானிக்கு.

“மதன் கேட்டாருன்னு சொல்லி, எதுலயாவது சைன் போட்டனா, இந்த வீட்ல இருக்க முடியாது. புரியுதா??”

“அதெல்லாம், அவளுக்குத் தெரியும் பாலா. நீ கிளம்பு” – நாதன்.

“ப்பா, மதன் பேசினா இவளைப் பேசச் சொல்லுங்க”

“சரி பாலா”

“நான் வரேன் ப்பா ” என்று பாலாவும் கிளம்பி விட்டான்.

இரு பிள்ளைகளும் சென்ற பின், பவானி யிடம் பேச ஆரம்பித்தார்.

“சாப்பிடலாமா??”

பவானியின் கருவிழிகள் இரண்டும் கண்ணீரில் நீந்திக் கொண்டிருந்தன.

“பவானிம்மா சாப்பிடலாமா??”

“ம்ம்ம்”

இருவரும் காலை உணவை முடித்துவிட்டு, மருந்து மாத்திரைகள் கொடுத்தப் பின்னர், பவானியை ஓய்வெடுக்கச் சொன்னார்.

அவள் கண் அயர்ந்ததும், வீட்டு வேலைகள் செய்ய ஆரம்பித்தார்.

திடீரென்று பவானி, “அப்பா, மதன் வீட்டுக்குப் போக மாட்டேன்” என்றாள் அமைதியாக.

அப்படியே வேலையைப் போட்டுவிட்டு வந்து, பவானி அருகே அமர்ந்தார்.

“பவானி, நீ ரெஸ்ட் எடும்மா. அப்பா எல்லாம் பார்த்துப்பேன்” என்று ஆறுதலாகப் பேசினார்.

“ம்ம்ம்” என்று சொன்னாலும், பவானி முகத்தில் பயம் தெரிந்தது.

“பவானிம்மா, அப்பா இருக்கிற வரைக்கும்… நீ எங்கையும் போக வேண்டாம். அப்பா உன்னையப் பார்த்துப்பேன்”

“நான் உங்க கூடதான் இருப்பேன்”

“சரிம்மா” என்று அவள் தலையை வருடிக் கொடுத்தார்.

அச்சமயம் அலைபேசி அழைத்தது. நாதன் எழுந்து சென்று, எடுத்துப் பார்த்தார். திரையில் மதனின் பெயர் தெரிந்தது.

அழைப்பை ஏற்றவர், “ஹலோ மாப்பிள்ளை” என்று மிகுந்த தடுமாற்றத்துடன் ஆரம்பித்தார்.

தன் தந்தையின் அழைப்பின் அடையாளத்தைக் கேட்ட பவானியின் முகத்தில் பதற்றம் வந்தது.

“தயவுசெய்து அப்படி கூப்பிடாதீங்க” – எதிர்முனையில் மதன்.

“இல்லை மாப்பிள்ளை”

“ஐயோ போதும். ஏதாவது தப்பா பேசிடப் போறேன். அந்த மேடம் இருந்தா போஃனக் கொடுங்க” – எதிர் முனையிலிருந்து குரல் வெறுப்புடன் வந்தது.

நாதன், “மாப்பிளை, உங்கிட்ட பேசணுமா.” என்று அலைபேசியை பவானியிடம் நீட்டினார்.

பவானி, ‘வேண்டாம்’ என்பது போல் மறுப்பாகத் தலை அசைத்தாள்.

‘பேசிரும்மா’ என்று கண்களால் கெஞ்சி, அலைபேசியை அவள் கைகளில் திணித்தார்.

“பேசு, இல்லைன்னா பாலா கோபப் படுவான்” என்று சொல்லிவிட்டு வெளியே சென்று விட்டார்.

பவானி, அலைபேசியைக் காதிற்குக் கொடுத்தாள்.

“ஹலோ” – எதிர்முனை.

பவானி பேச மாட்டாள். இன்றுதான் என்றல்ல, மதனுடன் பேச்சை நிறுத்தி எட்டு மாதமாகிறது.

“நீ பேச மாட்டேன்னு தெரியும். பேசவும் வேண்டாம்.” – எதிர்முனை.

“…..”

“இங்க பாரு, உன்கூட என்னால வாழ முடியாது”

“…..”

“புரிஞ்சுக்கோ. நீ எப்போ அழுவ… எப்போ சிரிப்ப… எப்போ எங்க போய் உட்காருவன்னு… யோசிச்சிக்கிட்டே வாழ முடியாது”

“…..”

“காலம் முழுசும், இந்தமாதிரிப் பிரச்சினை இருக்கிற பொண்ணோட என்னால வாழவே முடியாது”

“…..”

“எங்கம்மா எனக்கு வேற பொண்ணு பார்க்கிறாங்க”

“…..”

“தயவு செஞ்சி டிவோர்ஸ் பேப்பர்ல சைன் போடு”

“…..”

“இரு, எங்கம்மா பேசுவாங்க ” என்று அலைபேசியைத் தன் தாயிடம் கொடுத்தான்.

“…..”

“இந்தா பவானி, ஒரு மாசம் உன்னைய வச்சி மல்லுக்கட்டினதே போதும் போதும்னு ஆயிருச்சு”

“…..”

“இன்னும் எங்க உயிரை வாங்காத”

“…..”

“அண்ணா சொன்னான்… அப்பா சொல்றாங்கன்னு, இன்னும் இழுத்தடிச்ச, அப்புறம் யாரையும் நான் கேட்க மாட்டேன். என் பையனுக்கு வேறவொரு கல்யாணம் பண்ணி வச்சிருவேன்”

“…..”

“உன்னைய புரிஞ்சிக்கிட்டு வாழ்க்கை நடத்திர அளவுக்குப் புத்தி எங்களுக்கில்லை”

“…..”

“எங்களை வுட்ரும்மா”

“…..”

“நான் சொல்றது புரியுதா??”

“…..”

“இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு வருவோம். டிவோர்ஸ் பேப்பர்ல சைன் பண்ண ரெடியா இரு” என்று, என்றோ துண்டிக்கப்பட்ட உறவில், இன்று உரையாடல் துண்டிக்கப்பட்டது.

ஒரு விடயம் நமது கவனத்திற்காக! இந்த உரையாடல் முழுவதும் பேசியவர்களின் குரல்கள், அவர்கள் பேசிய வார்த்தைகளை விடக் கடினமானதாக இருந்தது.

*****
சற்று நேரத்திற்குப் பின், உள்ளே வந்த தந்தையிடம் அலைபேசியைக் கொடுத்தாள்.

“என்ன சொல்லறாரு மாப்பிள்ளை?”

பதில் சொல்ல முடியாத இடங்களில் மௌனங்கள் பதிலாகின்றன.

“நீ ஏதாவது பேசினியா?”

பதில் தேவையில்லாத இடங்களில் வேறொரு கேள்வி பதிலாகிறது. அந்தக் கேள்வி கீழே.

“அப்பா நான் பெஞ்சு வரைக்கும் போயிட்டு வரட்டுமா?”

“ம்ம்ம்ம் சரிம்மா.” என்று மிகுந்த யோசனையுடனே சம்மதித்தார்.

“வேறெங்கையும் போகக் கூடாது. அப்பா கொஞ்ச நேரத்தில வந்து கூப்பிடுறேன்”

“சரிப்பா” என்று சொல்லிக் கைகளில் ஒரு பன்னிரெண்டு ரூபாய், சில்லறையாக எடுத்துக்கொண்டு வெளியேறினாள்.

இது எப்பொழுதும் நடப்பதுதான். பவானி, அந்த கல் இருக்கையில் சென்று அமர்வதும், அவளின் சற்று நேரத் தனிமைக்குப் பின் நாதன் சென்று அழைத்து வருவதும்…

*****

மலைச் சரிவின் பாதைகளில் நடந்து வந்து, மேடான நிலப்பரப்பை அடைந்தாள். தன் ஆஸ்தான மஞ்சள் கல் இருக்கை இருக்கும் இடத்திற்குச் சென்றாள்.

இன்று வானிலை கொஞ்சம் காற்றறிக்கை வாசித்ததால், அந்த இருக்கை முழுவதும் காய்ந்த இலைகளால் நிரப்பப் பட்டிருந்தன. ஒவ்வொரு இலையாக எடுத்துவிட்டு, தன் புடவை முந்தானையை வைத்து துடைத்தாள்.

ஜீவன் அமர்ந்திருக்கும் பக்கத்தைக் கொஞ்சம் அதீத அக்கறைக் கொண்டு சுத்தம் செய்தாளோ??

பின்னர் பன்னிரெண்டு ரூபாயை உள்ளங்கையில் மடித்து வைத்துக் கொண்டு, இருக்கையின் ஓரத்தில் அமர்ந்தாள்.

பவானி, தேநீர் வண்டிக்காகக் காத்திருக்கின்றாள் என்றால், அது நிச்சயம் உண்மையல்ல!!

அன்று தேநீர் வண்டி மட்டுமே வந்தது. சற்று நேரக் காத்திருப்பின் தோல்விக்குப் பின், நாதன் வந்து பவானியை அழைத்துச் சென்றார்.

அடுத்தடுத்த வந்த நாட்களிலும், இதுபோலவே இருக்கை ஓரத்தின் காத்திருப்பு வெறும் காத்திருப்பாய் முடிந்தது.

நான்காவது நாளில் …

பவானி வருகையின் போதே, அங்கே ஜீவன் அமர்ந்திருந்தான். அவனைப் பார்த்ததும், ஒரு நிம்மதியுடன் நடந்து வந்தாள்.

இன்று ஜீவன், இருக்கையின் நடுவில் அமர்ந்திருந்தான். நன்றாகக் கால் மேல் கால் போட்டுக் கொண்டு, இரு கைகளைப் பின்புறம் இருந்த சாய்வின் மேலே நீட்டியபடி அமர்ந்திருந்தான். அவன் தலை வான் நோக்கிப் பார்த்திருந்தன. இரு இமைகளும் தத்தம் கருமணிகளை மூடியிருந்தன.

ஜீவன், தன் தூய பெருந்துணையான தனிமையை ரசிக்கின்றான்.

அந்த ரசிப்பின் தோரணையில், படு ‘மேன்லியாக’ இருந்தான் ஜீவன்.

இன்று சிறுவர்கள் யாரும் பார்த்துச் சொல்ல இல்லாததால், இது பார்க்கின்ற நமக்குத் தோன்றியது.

இருக்கை அருகில் வந்த பவானி, எந்தவித சங்கோஜமின்றி, ஒரு ஓரத்தில் அமர்ந்து கொண்டாள்.

நீட்டி வைக்கப்பட்டிருந்த கைகளின் மேல், பவானியின் கார்குழலின் பின்னல்கள் லேசாக உரசியதால், சட்டென்று உணர்வுகள் வந்து, கண்களைத் திறந்தான்.

அணிச்சைச் செயலாய் ‘ப்ச்’ என்று சொல்லி எழுந்தவன், இருக்கையின் ஓரத்தில் சென்று அமர்ந்தான்.

நாம் வியக்கும் அளவு ஒன்றுமில்லை! இதுதான் ஜீவன்.

முதன் முதலில் ஜீவன் சாரைச் சந்தித்த நாள், ஒரு விடயத்தில், நாம் முடிவுக்கு வராமல் இருந்தோம் இல்லையா?! அதுதான், ஜீவன் சாரின் சட்டையைப் பற்றியது.

அதன் பின்னர் இன்றைய தினமே, நாம் அவரைச் சந்திப்பதால், இதைப்பற்றி ஒரு முடிவுக்கு வந்து விடலாம்.

ஜீவன் சார் இன்றும் சட்டையின் மேலிரண்டு பொத்தான்களைப் போடவேயில்லை. ஆகையால் அவர் என்றுமே இப்படித்தான்!!

பவானிதான், “குட்மார்னிங் ஜீவன் சார்” என்றாள்.

குரல் வந்த திசை நோக்கித் திரும்பியவன், யோசித்தபடியே இருந்தான்.

பின், “மார்னிங். வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா??… பாலா, பல்லவி, மதன், அப்புறம் நாதன் சார்” என்று கேட்டான்.

“ம்ம்ம்” என்று சொல்லிக் கொண்டு, தலையாட்டலில் ஒருவித அழுத்தம் கொடுத்தாள்.

“நீ எப்படி இருக்க.. ?” என்று ஒற்றைக் கண்ணைச் சுருக்கி… நெற்றிப் பொட்டில் தட்டிக் கொண்டு, ” ப்ச் பேர் மறந்திருச்சு. உன் பேரென்ன?? ” என்று கேட்டான்.

‘ஏனையவர்கள் பெயர்கள் நியாபகம் இருக்கிறது? எனது பெயர் மறந்து விட்டதா?’ என்பது போன்று கூர்ந்துப் பார்த்தாள்.

“என்ன பேரு சொல்லு?” – ஜீவன், அழுத்திக் கேட்டான்.

பவானியின் முகம், சிறிதளவு வருத்தம் கொண்டது போல் தெரிந்தது.

“பவானி நல்லா இருக்கியா?” என்று கேட்டான்.

மனதில் ஒரு மகிழ்வோடு, ஜீவனைப் பார்த்தாள்.

“மறந்திட்டேன்னு நினைச்சியா?”

தீர்க்கமாய் ஒரு பார்வைப் பார்த்து, ‘ஆமாம்’ என்பது போல் தலை ஆட்டினாள்.

“ப்ச்! அதெப்படி உன்னைய மறக்க முடியும்னு சொல்லு”

“ஏன் ஜீவன் சார்?” – பவானியின் குரல் மெல்லியதாக ஒலித்தது.

“அன்னைக்கு இங்க நான் தனியா இருக்கிறப்போ, நீ வந்து அழுதேல”

“ம்ம்ம்”

“அது, எனக்கு ரொம்ப டிஸ்டபன்ஸா இருந்திச்சு. அதான் உன்னைய மறக்கவே முடியாது” என்று உண்மை பேசினான்.

“ஓ! இன்னைக்கும் அப்படித்தான் பீல் பண்றீங்களா சார்?? ”

அவள் கேட்ட பின்தான், தான் எப்படி உணர்ந்தோம் என்று யோசிக்க ஆரம்பித்தான்.

“இல்லை” – யோசிப்பின் முடிவில் ஜீவன்.

காலச் சக்கரத்தில், கடிகாரத்தின் முட்கள் மௌனமாகப் பயணித்துக் கொண்டிருந்த தருணங்கள் – இவை.

பலத்த தயக்கத்திற்குப் பிறகு, “ஜீவன் சார், நீங்க எப்படி இருக்கீங்க?” என்று சிரமம் எடுத்துச் சிறு குரலில் கேட்டாள், பவானி.

‘தன்னிடம் இப்படி ஒரு கேள்வியை இதுவரை யாரும் கேட்கவில்லையே?? இவள் ஏன் கேட்கிறாள்?’ என்று கோபம் வந்தது.

அந்தக் கோபத்தில் வெளிப்பாடாய், “ப்ச்..” என்று ஆரம்பித்தவன், பவானியின் முகத்தில் என்ன கண்டானோ…”இருக்கேன் பவானி” என்று முடித்தான்.

“நீங்க மூனு நாளா வரவே இல்லையே? ஏன்?” – பவானி.

“புரியலை பவானி”

“இங்க மூனு நாளா வரலையே.. ”

“தேடினியா பவானி”

‘ஆமாம் தேடினேன்’ என்று தலையை மேலும் கீழும் ஆட்டி வைத்து ஒத்துக் கொண்டாள்.

ஜீவன் சார் யோசித்தார்.

“ஏன் பவானி? நான் உன்னைய வெயிட் பண்ணச் சொன்னேனா?”

“இல்லை சார்”

“அப்புறம் எதுக்குத் தேவையில்லாம தேடிகிட்டிருந்த??”

இந்தப் பதிலைச் சொன்னதோடு மட்டும் விடாமல், ‘இது தேவையில்லாத வேலை’ என்பது போல் அலட்சிய உடல் மொழியால், அவளை அமைதியாக்கினான்.

அதீத காற்றினால், காய்ந்த சிறகுகள் சலசலக்கும் ஓசையைத் தவிர வேறெதுவும் கேட்கவில்லை.

பவானியின் அமைதி கண்டவன், என்ன நினைத்தானோ, “ப்ராப்ளம் எல்லாம் சால்வுடா பவானி” என்று கேட்டு வைத்தான்.

“ம்ன்” என்று உதடு திறக்காமல் கேள்வி கேட்டாள்.

“மதன்… அந்தப் ப்ராப்ளம்…”

‘இல்லை’ என்று பதில் வரைந்து காட்டினாள்.

“ஆக்சுவலா என்ன ப்ராப்ளம்??”

“மதனுக்கு என்னையப் பிடிக்கல. நான் இப்படி… அவருக்குப் பிடிக்கல. அதான் டிவோர்ஸ் கேட்கிறாரு”

“கரெக்ட். அவரோட மைண்ட் அப்படி இருக்கு. அதுக்கு என்ன செய்ய??”

“ஆனா, பாலாண்ணா டிவோர்ஸ் கொடுக்கக் கூடாதுன்னு சொல்லறாரு”

“இதுவும் கரெக்ட்தான பவானி. ஒரு அண்ணனா, அவரோட தங்கச்சி வாழ்க்கை செட்டில் ஆகணும்னுதான நினைப்பாரு”

“ஆனா எனக்கு குழப்பமா இருக்கு”

“அப்கோர்ஸ் இருக்கும்”

“எனக்கு என்ன முடிவு எடுக்கன்னு தெரியல. நான் என்ன பண்ண, ஜீவன் சார்?”

“ஏற்கனவே ரெண்டு பேர், உனக்காக முடிவு எடுத்திருக்காங்க. இதுல நான் வேறயா??”

ஜீவனின் பதிலால், பவானியின் மனது பாதிக்கப்பட்டது. யோசிக்க ஆரம்பித்தாள்.

“என்ன யோசிக்கிற??” – ஜீவன்.

“இல்லை, மதன் முடிவு எடுக்கச் சொல்லறாரு. அதான் ..”

“மதன் கேட்டா, கொஞ்சம் குழப்பமா இருக்குது. தெளிவானதுக்கு அப்புறம் முடிவு எடுக்கிறேன்னு சொல்லு”

ஜீவன் உதட்டிலிருந்து சொன்ன வார்த்தைகள், பவானி உள்ளம் வரைச் சென்றது.

“ம்ம்ம் சரி. மத்தவங்க கேட்டா??”

“ப்ச்…மத்தவங்கன்னா யாரு??”

“ம்ம், பாலண்ணா,பல்லவி, அண்ணி அவங்க அம்மா அப்பா, ம்ம் மதன், மதனோட அம்மா. மதனோட… ”

“போதும் போதும், இவங்க எல்லாரும் கொஸ்டின் பண்ணுவாங்களா?”

“ம்ம்”

“பவானி, ஆளுக்கொரு பதிலெல்லாம் யோசிக்க முடியாது. மொத்தமா எல்லார்கிட்டேயும் இதே சொல்லு”

“ம்ம்ம், தேங்க்ஸ்”

“தேங்க்ஸ் வேண்டாம். எனக்கு ஒரு பதில் சொல்ல முடியுமா? ”

“ம்ம்ம்”

“பவானி, இங்க ஏதாவது நல்ல ஹோட்டல் தெரிஞ்சா சொல்லேன்”

“ஹோட்டல்லதான் சாப்பிடுவீங்களா?” – கேள்வி கேட்டாள் பவானி.

“நான் பதில் சொல்லச் சொன்னேன் பவானி ”

“ஓ! ஸாரி. வள்ளிம்மா வீட்டுலருந்து, நேராப் போனீங்கனா ரைட் சைடு திரும்பினா … ”

“அது தெரியும். வேற??” என்று அவள் பேச்சை பாதியிலேயே நிறுத்தினான்.

“பாலண்ணா சொல்லுவாரு, அங்க நல்லா இருக்கும்னு. அதோட, அன்பா அக்கறையாக் கவனிப்பாங்களாம்”

“ம்ம்ம். தெரியும்”

“அப்புறம் ஏன் வேற ஹோட்டல்?”

“அதான் வேண்டாம்”

“எது? ”

“பவானி, சாப்பிடறப்ப எதுக்கு அன்பு, அக்கறைங்கிற எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ். ப்ச் அதெல்லாம் வேண்டாம். எனக்கெல்லாம் சாப்பாடு… ” என்று பாதியிலே நிறுத்தி விட்டான்.

ஜீவன் மனம் ஏதோ ஒரு ஆதங்கத்தை உணர்ந்தது. அந்த ஆதங்கம் அவன் முகம் முழுவதையும் அவமானமாகக் காட்டியது.

“வீட்ல சமைக்க மாட்டீங்களா??” – பவானி.

“ம்கும்” என்று சொன்னவன் இன்னும் சகஜ நிலைக்கு வரவில்லை.

“ஏன்?? ”

“ப்ச், என்கிட்ட கிட்சன் பிராப்பர்ட்டீஸ் இல்லை”

“அது கிட்சன் யூடென்சில்ஸ் சார்”

“ஹே பவானி! நீ என்ன படிச்சிருக்க?” என்று கேட்டவனின் முகம் சகஜமாக மாறியிருந்தது.

“பி. ஏ. இங்கிலிஷ்”

“ஓ! இங்கதானா??”

“ம்ம்ம்”

“ஜீவன் சார், உங்களைப் பத்தி எதுவும் சொல்ல மாட்டீங்களா?”

இக்கணம் ஜீவனின் முகம் முழுதும் கடுமையாக மாறியது.

அதைக் கண்டவள், “சார், சொல்ல விருப்பமில்லைன்னா விட்டுடுங்க” என்று மெதுவாகச் சொன்னாள்.

“சத்தியமா விருப்பமில்லை” என்று மெத்தனமாகச் சொன்னான்.

அவன் பதிலை விட, அதைச் சொன்ன விதம்தான் பவானிக்கு வலித்தது. அது, அவள் வடிவான வட்ட முகத்தை வாட்டமாக்கியது.

ஆனால், ஓர் நாள் இதே பெண்ணிடம்தான் தன் வாழ்வின் வலிகளையெல்லாம் விழிநீர் சிந்தச் சிந்தச் சொல்லப் போகிறான் என்று நம்புவோமாக!!

வானிலையில் ஒரு சிறு மாற்றம்… சீரும் காற்று மறைந்து, சில்லென்ற காற்று வீசத் துவங்கியது. அந்தக் காற்று, பவானியின் தேகத்தைச் சில்லிடச் செய்தது.

இன்று பவானியின் உளநிலையின் உணர்வு சமநிலையில் இருந்ததால், முகத்தில் ஒரு தெளிவு தெரிந்தது.

வாடைக் காற்று அதிகமானதால், அதைத் தாங்க முடியாமல், ஒருகணம் ‘ஸ்ஸ்’ என்று சொல்லித் தன் புடவை முந்தானைக் கொண்டு தேகத்தை மூடினாள்.

பனிக்காற்றால், உலர்ந்த போன தன் இதழ்களை.. நாவால் லேசாக வருடிக் கொடுத்தாள்.

இவையாவும், நம் கவனத்திற்கும் வந்தது.

ஜீவன் சாரும் பார்த்துக் கொண்டே இருந்தார்.

“பவானி” – ஜீவன்.

நம் கவனத்திற்கு வந்தது, ஜீவன் சார் கருத்திற்குச் சென்றிருக்கிறது போல.
ஏதோ அதைப் பற்றிச் சொல்லப் போகிறார்!

“ம்ம்ம்” – பவானி.

“நீ, இதே ஊர்தானா??” – ஜீவன்.

சம்பந்தம் இல்லாமல் இந்தக் கேள்வி எதற்காக?? சரி! அவர் பாணியில் ஏதாவது சொல்லுவார்!!

“ம்ம்ம். ஏன் கேட்டீங்க சார்??” – பவானி.

“இல்லை, உன்னால இந்தக் குளிரைக் கூடத் தாங்க முடியலையே! அதான் கேட்டேன்”

“ஓ”

“பேசாம, நாதன் சார் மாதிரி எப்பவும் ஸ்வெட்டர் போட்டே இருக்கலாம்ல” என்று, அவள் தந்தையை வம்பிற்கு இழுத்தான்.

தன் பாசமான தந்தையைப் பற்றிச் சொன்னதும், ஜீவனைப் பார்த்துக் கண்களைச் சுருக்கிக் கோபத்தைக் காண்பித்தாள், பவானி.

அட! என்ன ஜீவன் சார் நீங்களும் உங்களது வசனங்களும்!! வாடைக் காற்றைப் பற்றிப் பேசுவதற்காகவா இத்தனைக் கேள்விகள்??

அவள் கோபம் கண்டவன், “பவானி” என்று அழைத்துப் பார்த்தான்.

“…..” – பவானி பதில் எழுதவில்லை.

“பவானி, இப்படிச் சொன்னா நீ சிரிப்ப… சந்தோஷப் படுவன்னு… நினைச்சு சொன்னேன்”

பவானி இதழ்கள் விரிய, ஜீவனின் இருதயம் மெனக்கெடல் எடுக்கிறது.

அவன் பதில் கேட்ட பின்பும், பவானி உம்மென்றே முகத்தை வைத்திருந்தாள்.

“பவானி, நீ சிரிக்கவே மாட்டியா?? ”

‘ஜீவன், நீங்க இதைக் கேட்கலாமா?’ என்ற எண்ணம் வருகிறது, நமக்கு!!

ஆனால், பவானியின் மௌனத்தில் மாற்றமில்லை.

அந்நேரம் தேநீர் சைக்கிள் வண்டி வந்தது. அன்று போல், இன்றும் கை அசைத்து நிறுத்தினான்.

வண்டி நின்றவுடன், எழுந்து செல்லப் போனவன், பவானியைப் பார்த்தான். ஒரு சமாதான முயற்சி செய்து பார்க்கலாமே என்று தோன்றியது…

எனவே ஜீவன், “பவானி, டீ குடிக்கலாமா?” என்று கேட்டான்.

சட்டென்று, “ம்ம் சரி” என்று மௌனம் கலைத்தாள் பவானி.

‘சரியா’ என்பது போல் அதிர்ந்தான். பவானி மறுத்து விடுவாள் என நினைத்தே கேட்டவன், அவளின் சம்மதம் கேட்டு, அப்படியே நின்றான்.

“ஜீவன் சார், இன்னைக்கு நான் காசு எடுத்திட்டு வந்திருக்கேன்” – பவானி.

இதைக் கேட்ட, ஜீவனின் உள்ளம் குறைந்த அளவில் குதூகலம் கொண்டது. அது வார்த்தையாய் வெளியே வந்தது. அந்த வாக்கியம் கீழே…

“பவானி, உன்ன மாதிரி என்னைய புரிஞ்சிக்கிட்டவங்க யாரும் இல்லை” என்று சிலாகித்துச் சொன்னான்.

இதைக் கேட்டவளும் சிறப்பாக உணர்ந்தாள்.

இத்தனை வருடம் கூடவே வளர்ந்த அண்ணனும், கட்டியவனும் ‘புரிந்து கொள்’ என்று சொன்னார்கள்.

ஆனால் தன்னைப் பார்த்த இரண்டாவது முறையே, ஜீவனின் ‘புரிஞ்சிக்கிட்ட’ என்ற வார்த்தையில் மனம் இதமாக உணர்ந்தது.

அவனின் ஒற்றை வாக்கியம், அவளின் ஓராயிரம் வருத்தங்களைப் போக்கியது.

“பவானி, என்ன யோசிக்கிற?? காசைக் கொடு” – ஜீவன்.

பவானி, தன் உள்ளங்கையில் மடித்து வைத்திருந்த காசுகளை, ஜீவனை நோக்கி நீட்டினாள்.

ஆனால், ஜீவனோ சில்லறைகளை எடுக்கவில்லை. மாறாக தன் உள்ளங் கையை நீட்டினான்.

‘என்ன?’ என்பது போல் கண்களால் கேள்வி கேட்டாள்.

‘இதுல காசை வை’ என்பது போல் புருவங்களால் பதில் எழுதினான்.

பன்னிரெண்டு ரூபாய், ஒரு சிறிய இடைவெளியில், பவானியின் கையிலிருந்து ஜீவன் சாரின் கைகளுக்குப் பரிமாற்றம் ஆனது!