திலக்கின் விழிகளும், அவள் விழிகளும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைய, நொடிகள் நிமிடங்களாக நீண்டு கொண்டே போனது.
‘இருவரில் யார் முதலில் மீண்டு கொள்கிறார்கள்?’ என்ற கேள்வியோடு அங்கு அன்பின் மௌனம் நீடிக்க, திலக் நின்று கொண்டிருந்த நெருக்கத்தில் பூங்கோதையின் இதயம் வேகமாகத் துடித்து அவளைச் சுயநினைவுக்குக் கொண்டு வந்தது.
இருபக்கமும் திலக்கின் கைகள் அவளுக்கு அரணாக இருக்க, சிறிதும் அசைய முடியாமல் பூங்கோதையின் தலை கவிழ்ந்து கொள்ள, திலக்கை தன்னை மீட்டுக் கொண்டான்.
“ம்… க்கும்…” என்று தன்னை சுதாரித்துக் கொண்ட திலக், “பி… யூ… ட்… டீ…” நிதானமாக அழைத்து தன்னை இன்னும் மீட்டுக் கொண்டான் திலக்.
“உன்னை பார்த்தா எல்லாம் மறந்திறேன் பியூட்டி.” என்று அவளுக்கும், தனக்கும் சமாதானம் கூறிக்கொண்டு, நான் கேட்ட கேள்விக்குப் பதில் என்று கேட்டுக்கொண்டே அவளை இடையோடு சேர்த்து அணைத்தான் திலக்.
பூங்கோதை தன் கண்களை இறுக மூடிக்கொண்டாள். “நானும் சொல்ல மாட்டேன். நீங்களும் பார்க்கக் கூடாது.” அதிகாரமாக ஒலித்தது அவள் குரல். அந்த குரலிலும் சிறு நடுக்கம். அதை மறைக்க முயற்சித்து தோற்றுப் போனாள் பூங்கோதை.
ஏனோ பூங்கோதையின் அதிகாரம், அவனுக்குக் கோபத்தை வரவழைக்கவில்லை. மாறாக, அவன் முகத்தில் மெல்லிய புன்னகை.
அவள் அதிகாரத்திற்கு, அவனின் அத்தனை அணுக்களும் கட்டுப்பட்டு, “நீ சொன்னா சரித்தேன் பியூட்டி.” என்று அவன் விட்டுக்கொடுக்க, மூடிய கண்களைப் பெரிதாக விரித்து அவனைப் பிரமிப்பாகப் பார்த்தாள் பூங்கோதை.
தோற்றுப் போன அவள் உணர்ச்சியை மறக்கடித்து அவள் மனதிற்கு வெற்றி வாகையைச் சூடினான் திலக். பூங்கோதையின் கணவனாக!
திலக் புருவம் உயர்த்தி புன்னகைக்க, பூங்கோதை தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். வலுக்கட்டாயமாக அவள் முகத்தை தன் பக்கம் திருப்பினான் திலக்.
“பியூட்டி…” என்று அவன் உல்லாசமாக அழைக்க, “ம்…” என்று பூங்கோதை அவனை விழி உயர்த்தி பார்த்தாள்.
“நாம்ம மாடியில் போய் பேசிட்டு இருக்கலாமா?” என்று திலக் கேட்க, பூங்கோதை பிடிவாதமாக தன் தலையை இரு பக்கமும் அசைத்து மறுப்பு தெரிவித்து அழுத்தமாகச் சுவரோடு சாய்ந்து நின்றாள்.
பூங்கோதையை திலக் அலேக்காக தூக்க, அவள் திமிர அவன் பிடி இறுகியது.
“ஐயோ… மிலிட்டரி…” என்று பூங்கோதை அலற, “மிலிட்டரின்னு கூப்பிட இவ்வுளவு நேரமா?” என்று அவன் பிடிமானத்தை விடாமல் அவளை நோக்கிக் கேள்வியாகக் கேட்டபடியே மாடிப் படிகளை நோக்கி நடந்தான் திலக்.
பூங்கோதை பிடிமானத்திற்கு வேறு வழியின்றி அவன் கழுத்தில் தன் கைகளை மாலையாகக் கோர்த்து, “என்னை கீழ விடேன் மிலிட்டரி. நான் வரேன். ஆச்சி இருக்காக.” என்று அவன் காதில் அவள் கிசுகிசுத்தாள்.
அவள் காதல் மொழியில் அவன் கிறங்கி, “ஆச்சி இருக்கிறதுதேன் பிரச்சனையா? ஆச்சியை உங்க வீட்டுக்கு அனுப்பிருவோமா ? அவுக ரெண்டு பெரும் கதை பேசட்டும்.” என்று அவள் ஸ்பரிசத்தை ரசித்தபடி படி ஏறினான் திலக்.
“மிலிட்டரி உனக்கெதுக்கு சிரமம். நான் நடந்து வரேன்.” என்று பூங்கோதை சமரசம் பேச, “நீ பேருக்கு ஏத்தாப்புல பூ மாதிரி இருக்க… இந்த லட்சணத்தில் எனக்கு சிரமம் வேறையா?” என்று அவன் கேலி பேசிக் கொண்டே, அங்கிருந்த கயிற்றுக் கட்டில் அருகே அவளை இறக்கி விட்டான் திலக்.
அவன் கைகளிலிருந்து இறங்கிய பூங்கோதை சேலையைச் சரி செய்து கொள்ள, அவன் கண்கள் அவள் இடையை அவள் அறியாமல் நோட்டமிட பூங்கோதை தன் புன்னகையை மறைத்துக் கொண்டு அவனைப் பார்த்தாள்.
‘இவளிடம் அந்த மணி இருக்கிறதா? இல்லையா? இவளுக்கு என் மேல் விருப்பம் இருக்கிறதா? இல்லையா? இன்று காலையில் நான் இவள் கண்களில் பார்த்ததென்ன? காதலன், கணவனாக அவள் முன் நிற்கும் பொழுதும் இவள் மனம் மாறவில்லையா?’ போன்ற கேள்விக் கணைகளை அவன் அறிவு அள்ளி வீசியது.
இருள் நிறைந்த வானம். வெள்ளிக் கதிர்களைப் போல் ஒளி வீசிய நிலா. மெலிதான தென்றல். அந்த தென்றலில் அசைந்த மரங்கள்.
தன் மனைவியைத் தோளோடு அணைத்துக் கொண்டான் திலக். அவர்களுக்குள் மௌன நிலை.
திலக் மனம் திறந்து பேச ஆரம்பித்தான். “இந்த மாதிரி வேளையில் வானத்தை பார்த்திட்டு படுத்திருக்கியா பியூட்டி?” என்று கேட்டான் திலக்.
மறுப்பாகத் தலை அசைத்து, “ராத்திரி நேரம் வெளிய வந்தா ஆச்சி வைவாக…” என்று பூங்கோதை கூற,
“ரொம்ப அழகா இருக்குல்ல?” என்று திலக் கேட்க, “ம்…” கொட்டினாள் பூங்கோதை.
“பிடிச்சிருக்கா பியூட்டி?” என்று திலக் கேட்க, தன் தலையை மேலும் கீழும் அசைத்தாள் பூங்கோதை.
அவள் தலை அசைப்பையும், அந்த ரம்மியமான நிலவொளியில் ரசித்துச் சிரித்தான் திலக்.
“அப்பா, அம்மா காலத்துக்கு அப்புறம் தனிமை. ஆச்சி இருந்தாலும், நமக்கு ஈடு கொடுக்க முடியுமா?” என்று கேட்டு இடைவெளி விட்டு, “உனக்கு தெரியாததா?” என்று புன்னகையோடு கேள்வியாக திலக் நிறுத்த பூங்கோதையும் புன்னகைத்துக் கொண்டாள்.
அங்கிருந்த திண்டில் திலக் அமர்ந்து, பூங்கோதையையும் தன் அருகே அமர்த்திக் கொண்டான்.
“இந்த மாதிரி நிலவை பார்த்து பெரும்பாலான நாட்கள் படுத்திருக்கேன் பியூட்டி. ஆனால், அந்த நிலவு இவ்வுளவு அழகா இருக்காது. இவ்வுளவு ரம்மியமா இருக்காது. ஆபத்தான நிலவு தான். மிலிட்டரிகாரனுக்கு பயம் கிடையாது. ஆனாலும், ஒரு அச்சம் இருக்கத்தேன் செய்யும். எப்ப என்ன தாக்குதல் நடக்குமுன்னு தெரியாது. எப்பவுமே, ஒரு எச்சரிக்கை உணர்வோடு இருப்போம்.” என்று திலக் கூற, பூங்கோதையின் உடல் நடுங்கியது.
அவள் இதழ்கள் கூறாததை, கண்கள் மறைக்க நினைத்ததை பூங்கோதையின் உடல் மொழி காட்டிவிட்டது. அதை திலக்கும் உணர்ந்து கொண்டான்.
‘பியூட்டி சொல்ல வேண்டும். அவள் வாயால், அவள் எனக்கான அன்பை சொல்ல வேண்டும்.’ என்ற இறுமாப்பு திலக்கின் மனதில் எழ, ஏதும் தெரியாதது போல், பூங்கோதையை ஆறுதல் படுத்த, அவளை தன்னோடு இறுக்கிக் கொண்டான் திலக்.
பூங்கோதை தன்னை சுதாரித்துக் கொண்டாள்.
“நீ எதுக்கும் பயப்பட கூடாது பியூட்டி. எனக்கு ஒன்னும் ஆவது. நான் உன்னை எதுக்கும் கஷ்டப்படுத்தவே மாட்டேன். என் மனசில் இன்னைக்கி, நேத்து நீ இல்லை. பல வருஷமா இருக்க… என் சேவை மட்டும்தென் தேசத்துக்கு. என் உயிர், மனம், சகலமும் இந்த பியூட்டிக்குதென்.” என்று திலக் கூற, ஒரு நொடி தன்னை மறந்து அவனைப் பார்த்தாள் பூங்கோதை.
பின், பரந்து விரிந்த வானத்தையும் நட்சத்திரத்தையும் பார்த்தாள் பூங்கோதை. ‘இறந்தவர்கள் எல்லாம் நட்சத்திரங்கள் ஆவார்கள் என்றால், என் அம்மாவும் மேல இருந்து எனக்கு அமைந்த இந்த வாழ்க்கையை பார்ப்பாகளா?’ என்ற கேள்வியும் அவள் மனதின் ஓரத்தில் எட்டிப் பார்த்தது.
பூங்கோதையின் என்ன ஓட்டத்தைக் கலைத்தது அவன் குரல்.
“எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் பியூட்டி.” திலக்கின் பேச்சு எங்கோ தாவியது.
அப்பொழுது பொத்தென்ற சத்தம்.
மாமரத்திலிருந்து, மாங்காய் பொத்தென்று விழ, பூங்கோதை அவனை ரகசியமாகப் பார்த்தாள்.
அருகே இருந்த மரத்தில் அவளைச் சாய்த்தான் திலக்.
பூங்கோதை அவனை மிரட்சியோடு பார்க்க, “என்னை மன்னிச்சிரு பியூட்டி. அன்னைக்கு, உன் சம்மதம் இல்லாமல் அப்படி பண்ணது தப்புதேன்.” என்று அவள் கன்னம் உரசி, சமாதானம் பேசினான் திலக்.
‘இதுதேன் மன்னிப்பு கேட்குற லட்சணமாக்கும்?’ என்ற எண்ணத்தோடு அவள் அவனைப் பார்க்க, “இன்னைக்கி உன் சம்மதத்தோடு?” என்று அவள் சம்மத்திற்க்காக காத்து நின்றான் திலக்.
பூங்கோதையின் இதயம் வேகமாகத் துடிக்க, மரம் மீது சாய்ந்து அவள் முகம் குங்குங்கமாக சிவக்க அவள் முகசிவப்பை சம்மதமாக எடுத்துக் கொண்டு அவள் இதழ்களை தன் வசமாக்கினான் திலக்.
பல நொடிகளுக்குப் பின் அவன் நிமிர, அவன் முகத்தை பார்ப்பதை தவிர்த்து அவன் மார்பில் சாய்ந்தாள் பூங்கோதை.
“பியூட்டி… பியூட்டி… பியூட்டி…” திலக்கின் உதடுகள் வேறு எதையும் உச்சரிக்கவில்லை.
“நான் எதாவது தப்பு பண்ணிருந்தா என்னை மன்னிச்சிரு பியூட்டி. உன் கிட்ட என் மனதை வெளிப்படுத்த எனக்கு வேறு வழி தெரியலை. எனக்கு கால அவகாசமும் கம்மி பியூட்டி. அதுதேன் எதாவது அவசரப்பட்டு பண்ணிருப்பேன். நான் சுயநலவாதிதேன். என் தேசம். அதுக்காக எதையும் பண்ணுவேன்.
அதே மாதிரி அன்னைக்கி, யாரோ ஒருத்தியா நீ இருக்கும் போது எனக்கு எதுவும் தோணலை பியூட்டி. இன்னைக்கி என் மனைவி எதுக்கும் நீ வருத்தப்பட கூடாதுன்னு என் மனசு துடிக்குது பியூட்டி.” என்று தன் மார்பில் சாய்ந்திருந்த மனைவியின் தலை கோதி கூறினான் திலக்.
அவளை தன்னோடு, தன்னுள் புதைத்துக் கொள்ளும் வேகம் அவனிடம்.
பூங்கோதை விலக, அவள் கண்களில் இரண்டு சொட்டு கண்ணீர். அதை அவனறியாமால் அவள் மறைக்க நினைத்து குனிந்து கொண்டாள் பூங்கோதை.
பூங்கோதை அறியவில்லை அந்த கண்ணீர், அதன் தடத்தை அவன் மார்பிலும் பதித்திருக்கும் என்று.
அந்த கண்ணீரின் ஈரம் அவன் மார்பில் ஈரத்தை மட்டுமின்றி சிந்தனையும் பதித்துச் சென்றது.
‘ஒருவேளை, பியூட்டிக்கு என்னை பிடிக்கலையோ?’ என்ற கேள்வி அவன் மனதில் தோன்ற, அவளை ஆழமாகப் பார்த்தான் திலக்.
‘இல்லை… அப்படி எல்லாம் இருக்காது.’ என்று அவன் அறிவு அடித்துக் கூறியது.
அவன் மனமோ, அவள் மனம் அறியாமல் இருதலைகொள்ளியாகக் தவிக்க ஆரம்பித்தது.
பூங்கோதையை அவள் போக்கில் விட அவன் அறிவு எச்சரிக்கை, ‘அப்படி என்னால் முடியுமா?’ என்ற கேள்வியோடு மனம் தவித்தது.
“தூங்குவோமா?” என்ற திலக்கின் கேள்விக்கு பூங்கோதை தலை அசைக்க, “பேச மாட்டியா பியூட்டி?” என்று ஏக்கமாகக் கேட்டான் திலக்.
“என்ன பேச மிலிட்டரி? அதுதேன், எனக்கும் சேர்த்து நீங்களே பேசுத்தீகளே?” என்று பழைய பூங்கோதையாக அவள் கூற, ‘இவளுக்கு என்னை பிடிக்காமல் இல்லை…’ என்று அவன் மனம் அடித்துக் கூற, திலக்கின் உற்சாகம் மீண்டது.
அந்த கயிற்றுக் கட்டிலில் அவன் கைவளைவில் அவள் படுக்க, அவன் கதை பேச, “ம்…” கொட்டியபடியே கண்ணுறங்கினாள் அவன் மனைவி.
“நான் பேசியது பிடிக்கலையா பியூட்டி? அவ்வுளவு போர் அடிச்சிட்டேனா பியூட்டி?” என்று தூங்கிக் கொண்டிருக்கும் மனைவியின் புருவத்தை நீவியபடி, அவன் கேட்டான்.
பாவம் அவன் அறியவில்லை, அவன் மனைவி இன்று பாதுகாப்பாக உணர்ந்து விவரம் தெரிந்த நாட்களுக்குப் பின் முதல் முறையாக நிம்மதியாக உறங்குகிறாள் என்று!
ஆனால், திலக்கின் மனதில் காதலனாக இருக்கும் பொழுது தோன்றாத சந்தேகங்களும், குழப்பங்களும் கணவனாக மாறியபின் தோன்றி அவன் தூக்கத்தைத் தொலைக்கச் செய்தது.
‘ஏன் அழுதா? என்ன பிரச்சனை?’ என்ற கேள்வி அவன் மனதில் தோன்றி பூதாகரமாக அவன் முன் நின்றது.
அவள் அவனை தனக்கான அரணாக நினைக்க…
அவன் அவனைத் தேசத்தின் அரணாக நினைக்க…
விதி இவர்களுக்கு முரணாக நினைக்க…
அருகே காத்திருப்பது எதுவோ?
வா… அருகே வா! வரும்….
For discounts in the shop section, please contact mspublications1@gmail.com Dismiss