Kumizhi-7

மௌனம்-7

இறுக்கமான இரவு இளகாமலேயே விடிந்திட, “கோதை இல்ல”த்தில் அன்றாடப் பணிகள் தொடங்கியிருந்தன. வேலை பார்ப்பவர்களைத் தவிர மற்றவர்களுக்கு அந்த விடியல் புத்துர்ணர்ச்சியைத் தரவில்லை.

முன்தினத்தின் தாக்கங்களும், தாக்குதல்களும் சிவனியாவின் உடலில் எதிரொலித்திட, சிவந்த தடிப்புகளும், அனலாய் அவயங்களும், கொதிப்பில் வீரியத்தைக் காட்டிக் கொண்டிருந்தன. இரவு முழுவதும் அவள் அனத்திய அனத்தலில் அவசர மருந்துகளும், கஷாயங்களும் பலனளிக்காமல் போக, மருத்துவமனைக்கு செல்ல அழைத்தும், சிவனியா மறுத்து, எழாமல் அடம் பிடித்துக் கொண்டே இருந்தாள்.

“அடம் பிடிக்காதே சிவாம்மா… நல்ல பொண்ணா எந்திருச்சு வரப்பாரு, இப்படியே விட்டா பின்னாடி பெருசா இழுத்து விட்ரும்டி”

“என்னால எந்திரிக்க முடியலம்மா, அப்பிடியே எந்திரிச்சாலும் நடக்க ரொம்ப சிரமமா இருக்கும். நீ மெடிக்கல்ல போய் மாத்திரை கேட்டு வாங்கிட்டு வா, அது சாப்பிட்டாலே சரியாகிடும்”

“சாதராண தலைவலிக்கும், வயித்துவலிக்குமே ஊரைக் கூட்டுறவ, எப்படி இவ்ளோ வலிய தாங்கிட்டு இருக்க?, எந்திருச்சு மொத உக்காரு, இது ஆஸ்பத்திரிக்கு போனா தான் சரி வரும். கிளம்புற வழியப்பாரு”

“சொன்னா புரிஞ்சுக்கோம்மா… என்னால முடியல” வார்த்தைகளும் முனகலாகவே வெளி வந்தன.

“சரி நான் போய் டாக்டர கூட்டிட்டு வரவா? கொஞ்சநேரம் தனியா இருந்துக்கிறியா? இப்போ வேலை நேரம் மேலே கூப்பிட்டா யாரும் வர மாட்டாங்க” இரவு முழுவதும் தன்னை எங்கும் அகலவிடாதவளிடம் செங்கமலம் கேட்க

“வேண்டாம்மா மாத்திரை மட்டும் போதும்”

“ஏண்டி இவ்ளோ அடம் பிடிக்கிறே?”

“டாக்டர் கிட்ட எப்டி என் முகத்தை காமிப்பேன்? இடுப்புல அடிப்பட்டத எப்டி சொல்ல? கேள்வி வரும், பதில் சொல்லணும், வேண்டாம்மா”

“அதுக்காக வலிய பொறுத்துட்டு இருப்பியா? நான் சமாளிக்கிறேன், கிளம்பு நீ!”

“ஐயோ வேண்டாம்மா… என்னால முடியல”

“இப்போ புலம்புடி நல்லா? உன்னை பாக்க பாக்க எனக்கும் ஆத்திரம் தான் வருது. பொண்ணா பொறந்தவ அடி வாங்குறது தகப்பன் இல்லன்னா கட்டின புருஷன் கையால இருக்கணும், கூடப்பொறந்தவனக் கூட தொட்டு பேச அனுமதிக்க கூடாது. ஆனா நீ பண்ணி வச்சுருக்கிற கூத்த எங்க போய் சொல்லி தொலைக்க? ஒருத்தர் தயவுல இருக்கோம்ங்கிற நினைப்பு கொஞ்சமாவது உனக்கு இருந்திருந்தா இப்படி ஆட்டம் போட்டிருப்பியாடி? அவனும் இப்படி நிக்க வச்சு கேள்வி கேட்டிருப்பானா? சும்மாவா சொன்னாங்க… ஒட்டி உறவாடினாலும், தனியா இருந்தா தான் மதிப்புன்னு. எல்லாம் நான் வாங்கிட்டு வந்த சாபம்டி, பொறந்த இடம், வாக்கப்பட்ட இடம்ன்னு எங்கேயும் நிம்மதியும் ஆதரவும் கிடைக்காதவளுக்கு, இங்கே மட்டும் அது கிடைக்கப் போகுதா என்ன? கையில பெண் குழந்தை இருக்குற பயம் என்னை வேற எதுவும் யோசிக்க விடல… உறவோட இருந்தா பாதுகாப்பா, ஆறுதலா இருக்கும்னு அவங்க கூப்பிட்டதும் வந்துட்டேன். எல்லாம் கைமீறி போனபிறகு தானே மூளைக்கு உரைக்குது” ஆற்றாமையில் புலம்பி கண்களும் கலங்கிட,

“இதெல்லாம் என்னால தானே? இனிமே அதிகப்பிரசங்கியா நான் பேச மாட்டேன்ம்மா, பொறுப்பா இருக்க கத்துக்குறேன்ம்மா, நீ கவலபடாதே!”

“நீ நல்லா இருந்தா நான் எதுக்குடி கவலைப்பட போறேன்… நீ நல்ல பொண்ணுதானே… அம்மா கைப்பிடிச்சு கூட்டிட்டு போறேன்… ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வந்திரலாம்டா, திரும்பி வரும்போது உனக்கு வலியும் குறைஞ்சுடும், மெதுவா எழுந்திரிச்சுக்கோ…”

“கீழே போக வேணாம்மா… இவ்ளோ நடந்த பிறகு எப்படி முகத்த பார்த்து பேசுறதுன்னு தெரியலம்மா எனக்கு, நாம இங்கே இருக்க வேணாம்,”

“இப்ப உடம்ப சரி பண்ணிக்கோ சிவாம்மா, அடுத்து என்ன பண்றதுன்னு யோசிப்போம்” ஒரு வழியாய் மருத்துவமனைக்கு கிளம்பியவர்கள், கோதையிடம் சொல்ல கீழே வர, அவரோ பேசாமல் தலையசைப்பை மட்டுமே பதிலாக தந்தது இருவருக்கும் முகத்தில் அடித்தது போல் இருந்தது.

பெரியவர் ராமலிங்கம் மட்டுமே சிவனியாவின் நிலையை உணர்ந்து கவலை கொள்ள, அவரிடம் சொல்லி விட்டு கிளம்பினர்.

பல சமாளிப்புகள் மருத்துவரிடம் சொன்னாலும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

“இடது பக்கம் இடுப்புத் தசையில ரத்தக்கட்டு வர்ற அளவுக்கு பலமா எதுலயோ போய் மோதியிருக்காங்க, அதான் எந்திரிக்கவும் முடியாம வலி அதிகமாயிருக்கு. அடி வாங்கின அதிர்வு தான் உடம்பு முழுக்க சிவப்பு தடிப்பு வந்திருக்கு, வலதுகை மணிக்கட்டுல ரொம்ப இறுக்கி இருக்காங்க, அதான் அங்கே வீக்கம் கண்டிருக்கு” மருத்துவர் தெளிவாய் சொல்ல

“நான் தான்ய்யா இவ அதிகமா பேசுறான்னு ஒரு அரை விட்டேன், மாடி வீடு, வாசப்படி பக்கம் நின்னுட்டு இருந்தா அடிச்ச அடியில, அப்படியே படியில உருண்டு விழுந்துட்டா வேற எதுவும் நடக்கல” சமாளித்தார் தாய்.

“என்னமோ நீங்க சொல்றது நம்புற மாதிரி இல்ல, பொம்பள புள்ள விஷயம் ரொம்ப துருவிக் கேக்க விரும்பல” சொல்லியவர் ஒரு வாரத்திற்கான மருந்துகளை எழுதித் தந்து மீண்டும் வந்து பார்க்க சொன்னார்.

“ரொம்ப பத்திரமா இருக்கணும், கீழே படுக்க வேணாம், கட்டில் இருந்தா நல்லது. முடிஞ்சா வரைக்கும் குனியாம, நடக்காம இருக்கட்டும், ரெண்டு நாள்ல வலி குறையலன்னா எக்ஸ்ரே எடுத்து பார்ப்போம்” அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

வீட்டிற்கு இருவரும் ஆட்டோவில் வந்து சேரும் பொழுது மதிய உணவை கொண்டு செல்லவென பாண்டியன் வாசலில் நின்றிருக்க, இறங்கமுடியாமல், இறங்கி நின்றவளை தாங்கிப் பிடித்திட முன் வந்தான்.

“என்னாச்சு பாப்பா? உடம்புக்கு என்ன பண்ணுது? சொல்லி இருந்தா வண்டியில கூட்டிட்டு போயிருப்பேனே? தோள்ல கை போட்டுக்கோ மெதுவா கூட்டிட்டு போறேன்” மனம் பதற முன்தின பாதிப்புகள் எதுவும் இல்லாமல், சகஜமாய் பேசி அவள் கை தொட்டு, தன் தோளில் போட்டு கொள்வதற்காய் அவளை பிடிக்க,

“வயசுப்புள்ளய தொட்டுப் பேசுற பழக்கம் வேணாம் தம்பி, நான் கூட்டிட்டு போறேன், நீங்க சிரமப்பட வேணாம்” முகத்தில் அடித்தாற்ப் போல் செங்கமலம் பேசி, பெண்ணை கைத்தாங்கலாய் அழைத்துக் கொண்டு போனதில் பாண்டியனுக்கு மனதில் அடி வாங்கிய உணர்வு.

 

ஹோட்டலில் பாண்டியனின் மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்துக் கொண்டு இருந்தது. சிவனியாவின் பலவீனமான தோற்றம், அவனது கண்முன்னே தோன்றி   இம்சிக்க. அவள் நிலையினை நினைத்தே நடக்கும் நிகழ்வுகளை மறந்திருந்தான். எப்பொழுதும் பெருமையோடும் மரியாதையோடும், பார்த்தும் பேசியும் பழகிய அத்தை, தன்னை அந்நியமாய் பார்த்து பேசியது வேறு மனதை வதைத்து வைத்தது.

முன்தினம் சற்றும் யோசிக்காமல், தான் செய்த செயலின் வீரியம் இப்பொழுது தன் வலிமையைக் வெளிக்காட்ட, என்ன செய்து இதனை சரி செய்வது என தெரியாமல் விழி பிதுங்கி நின்றான்.

எந்த வேலையும் ஓடவில்லை அவனுக்கு. ஹோட்டலில் பணம் செலுத்த வந்தவர்களிடம் சில்லறையை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ கொடுத்து பலவித குளறுபடிகளை செய்து வைத்தான். அவனது தவிப்பினை கண்ட நண்பர்களும் என்னவென்று விசாரிக்க ஒன்றுமில்லை என்று மறுத்தானே ஒழிய தனது எண்ணங்களை பகிர்ந்து கொள்ளவில்லை. அவனது முன்தின செயல்களால் அவனை முறைத்து திரிந்த ரவியும் பொறுத்துப் பார்த்து நண்பனின் மன உளைச்சலை அறிய முன் வந்தான்.

“என்ன பாண்டியா? என்ன ஓடுது உன் மனசுல?”

“ஒண்ணுமில்ல ரவி!!”

“பார்த்தா அப்படி தெரியலையே? எதையோ மனசுல நினைச்சு குழப்பிட்டு இருக்கே! என்ன தான் ஆகுது உனக்கு சொல்லு பாண்டி?”

“என்னன்னு சொல்ல ரவி?” என்றவன் காலையில் சிவனியாவை பார்த்ததையும், தன் அத்தையின் பேச்சையும் நண்பனிடம் சொல்லி “அத்த இப்படி மூஞ்சில அடிச்ச மாதிரி பேசுவாங்கன்னு நான் எதிர்பார்க்கலடா. நான் அவ்வளவு அந்நியமா போயிட்டேனாடா? நான் அந்த மாதிரி ஆளாடா?” பாண்டியன் தன் மனதின் புலம்பலை வெளியே கொட்டிட

“உன்னை அடிக்காம விட்டாங்களேன்னு சந்தோசப் படுடா… நீ என்ன நல்ல காரியமா செஞ்சு வச்சுருக்கே, உன்னை கூப்பிட்டு விருந்து வைக்க?” – ரவி

“நான் எப்பவும் போல எல்லோருக்கும் சத்தம் போட்ற மாதிரி தான் பேச நினைச்சு, அது எப்படியோ வாய் தவறி தப்பா வந்துடுச்சுடா, சத்தியமா இப்படி ஆகும்னு நான் நினைச்சு பாக்கலடா” – பாண்டியன்

“பேச மட்டுமாடா செஞ்ச நீ? அரக்கனாட்டம் அடிச்சும் வைச்சுருக்கியேடா, உன்னோட பலத்த, கோபத்த எல்லாம் அந்த சின்ன பொண்ணுகிட்ட காமிச்சுருக்கியே, தாங்குவாளாடா என் தங்கச்சி? எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு உன்னை அடிச்சு துவைக்கனும்னு நினைக்கிறேன். என்ன பண்ணறது? உன்னோட உப்ப இவ்ளோ நாள் சாப்பிட்டுட்டேன்னு கொஞ்சம் அடக்கி வாசிக்கிறேன். இனிமே எதாவது அதிகப்படியா செஞ்சு வை உனக்கு இருக்குடா தீவாளி”  தன் கோப வார்த்தைகளால் அவனை தாக்கினான் ரவி.

“என்னடா மச்சான் ஜென்ம விரோதிகிட்ட பேசுற மாதிரி பேசி வைக்குற? நம்ம ஃப்ரெண்ட்ஷிப் அவ்ளோ தானாடா? எனக்கு தோள் குடுக்க மாட்டியாடா நீ? எனக்கு ஆறுதல் சொல்வேன்னு நினைச்சு உன்கிட்ட சொன்னா, என்னை கொலை பண்ணற ரேஞ்சுக்கு பேசி வைக்கிறியேடா!! நான் பாவமா தெரியலையாடா உன் கண்ணுக்கு?” பாண்டியன் புலம்பலைத் தொடர

“நீ பாவமா? நல்லா வாயில வந்துரப்போகுது மச்சி… நிப்பாட்டு உன் புலம்பல! கொஞ்சம் யோசிச்சு தான் பாரேன்… அவளுக்கு அண்ணன், தம்பி, அப்பா இப்படி யாரவது இருந்திருந்தா உன்னோட நிலைமை என்ன? உன்னை கொன்னு போட அவங்களுக்கு ரொம்ப நேரம் ஆகாது. இப்பவும் அவங்க அம்மா ஒரு கம்ப்ளைன்ட் குடுக்கட்டும், அப்பறம் உன் நிலைமை கொஞ்சம் யோசி!! சாட்சிக்கு நிறைய பேர் இருக்காங்க. இப்பவும் பசங்க கிட்ட நேத்து நடந்தத சொல்லி, கொஞ்சம் உசுப்பேத்தி விட்டேன்னா, நான் சொன்னத செஞ்சுட்டு தான் அவங்க மறு வேலை பார்ப்பாங்க… சிவா பேசினதும் தப்பு தான், ஆனா அதெல்லாம் இப்போ பெரிய விசயமா அவங்க எடுத்துக்க மாட்டாங்க. ஏற்கனவே தங்கச்சி இங்கே வந்துட்டு போறவ தானேன்னு தான் மனசுல நினைப்பாங்க. ஆனா நீ செஞ்ச காரியம் எப்படி பட்டது? இனிமேலாவது கொஞ்சம் கோபத்தை அடக்க பழகிக்கோ” ரவி நடப்பை எடுத்துரைத்தான்.

“சரிடா… எனக்கு அட்வைஸ் பண்றத விட்டுட்டு, சிவனி எப்படி இருக்கான்னு போய் பாருடா! இங்கே எனக்கு வேலை ஓட மாட்டேங்குது, மனசுல அவ முகம் வந்து இம்சை பண்ணுதுடா” புலம்புபவனை “இவன் தான் நேற்றைய தினம் அவளிடம் அத்தனை கடுமையை காட்டியவனா?” என அதிசயமாக பார்த்து வைத்தான்.

“சரி சரி புலம்பாதே! நானே போகணும்ன்னு தான் நினைச்சேன், இங்கே வேலை இழுத்துருச்சு. சாயந்திரம் போயிட்டு வரேன்” கண்டிக்கவும் செய்து, அதே சமயத்தில் ஆறுதல் தரவும் மறக்கவில்லை பாண்டியனின் நட்பு.

“டேய் நாளைக்கு நிச்சயத்தை வச்சுட்டு இப்படி புலம்பிட்டு நிக்காதே! நேரத்துக்கு வீட்டுக்கு போய் தூங்கி, கொஞ்சம் பளிச்சுன்னு வச்சுக்கோ உன் முகத்த, அப்போதான் நாளைக்கு நீதான் மாப்பிள்ளைன்னு கொஞ்சமாவது நம்புவாங்க. ஏதோ தின்ன மாதிரி இருக்குற மூஞ்சிய காமிச்சிட்டு அங்கே வந்து நின்னேன்னு வச்சுக்கோ உன்னை வில்லனா பார்த்து வைச்சு பொண்ணு ஓடிரப்போகுது.” – ரவி

“இப்ப இருக்குற நிலமைக்கு அது மட்டுந்தான் எனக்கு குறைச்சல்… அதெல்லாம் நாங்க எப்படி வரணுமோ அப்படி வந்து சேருவோம் மச்சி… இப்போ ஆகுற வேலையைப் பாரு” பாண்டியன் அவனை வேலையில் தள்ளினான்.

“அதானே பார்த்தேன் என்னாடா ரொம்ப நேரம் பேசிட்டு இருக்கானே? சோகத்துல கொஞ்சம் நல்லவன் எட்டி பாக்குறான் போலன்னு  சந்தோசப் பட்டேன், ஆப்பு வச்சிட்டியேடா! இவ்ளோ நேரம் அம்பிக்கு தம்பியா பேசிட்டு இப்போ அந்நியனுக்கு அண்ணனா தள்ளி விடுறேடா நீ!! அரைநொடியில மூளைய மாத்தி வச்சுக்கிரியேடா?” சீண்டிய படியே வேலையை பார்க்க சென்றான்.

மருத்துவமனை சென்று வந்த நாளின் மாலை நேரம் முதல் சிவனியாவின் கைபேசிக்கு வந்த அழைப்புகள், தாய், மகள் இருவரையும் கதி கலங்கச் வைத்தது.

பல புதிய எண்களில் இருந்து வந்த பலநபர்களின் கேட்கவே கூச வைக்கும் பேச்சுக்கள், இதுவரை காதில் கேட்டிராத வார்த்தைகள், அவர்களை பெரும் சங்கடத்தில் ஆழ்த்தி வைத்தது. யார் எவர் என்று தெரியாத அறியாத நபர்களின் குரல்களாய் பேச்சில் தெரிய, அறியாத கெட்ட பழக்கங்களை அவர்கள் வாய் மொழியாக கேட்டு சிவனியாவின் மனதை அதிரச் செய்தது.

இதற்கு தீர்வு காண இப்பொழுது யாரை பார்த்து, என்ன சொல்லி உதவி கேட்பது என்ற பெரும் கவலையும் அவர்களை திணறடித்தன. முன்தினம் பாண்டியனை முறைத்துக் கொண்டு பேசிவிட்டு, அவனிடம் இன்று போய் நிற்க அவர்களின் தன்மானம் இடம் கொடுக்கவில்லை. நிலைமையை எடுத்துச் சொன்னால், ஓடி வந்து உதவும் நல்ல மனிதர்கள் சுற்றிலும் இருந்தாலும், தங்கள் நிலையை கடை விரிக்க இருவரும் விரும்பவில்லை.

நிமிடத்திற்கு நிமிடம் வருகின்ற ஊர் பேர் தெரியாத அழைப்புகளால், தன் பெண்ணின்  வாழ்க்கைக்கு பேரும் பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்ற பதபதைப்பும் ஒரு தாயாய் செங்கமலத்தை தாக்க, அந்த நேரத்தில் தான் அநாதரவாய் நிற்கும் நிலை அவரையே சுட்டுப் பொசுக்கியது. உற்றார், உறவினர்கள் ஆதரவுடன் தன் வாழ்க்கை பயணம் அமைந்திருந்தால், இப்பொழுது இந்த நிலை தமக்கு ஏற்பட்டு இருக்காதோ என்ற எண்ணமும் அந்த சமயத்தில் தோன்றாமல் இல்லை.

என்ன செய்வது என்று தெரியாமல் அமர்ந்திருக்கும் தாயை பார்த்த சிவனியாவிற்கும், அந்த நேரம் தங்களது ஆதரவற்ற நிலை தெளிவாய் தெரிய, பிரச்னையை தீர்க்கும் வழிவகைகளை யோசிக்க தொடங்கினாள். உடம்பின் நோவை விட, இப்பொழுது மனதின் நோவு அதிகமாய் அழுத்தம் கொடுத்தது. கண்ணுக்கு தெரியாத வகையில் வந்த இன்னல்கள் உடம்பின் பலவீனத்தை மறக்கடிக்கச் செய்திருந்தது.

இதற்கு ஒரு முடிவினை எடுத்தே ஆகவேண்டும் என்ற வைராக்கியம் மனதில் எழ, தன் தாயை வற்புறுத்தி அழைத்துக் கொண்டு அவள் சென்றது மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்க்குட்பட்ட காவல் நிலையத்திற்கு தான்.

அங்கே இருப்பவர்களுக்கு பாண்டியன் மட்டுமே பரிச்சயம். இவர்கள் அவனுக்கு வேண்டப்பட்டவர்கள் என்பது அங்கே உள்ளவர்களுக்கு தெரியாது. அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பதை முதலில் கேட்டு, அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்தார் அங்கே பொறுப்பில் உள்ள காவல் அதிகாரி.

“ஒத்தகடையில இருக்குறவங்க இங்கே ஏன்மா வந்தீங்க? உங்க ஏரியா ஸ்டேசனுக்கு போங்கம்மா! இங்கே பஸ் ஸ்டாண்ட் சம்மந்தப்பட்ட கேஸ் மட்டும் தான் எடுப்போம்”

“தெரியும் சார்… ஆனா எனக்கு பிரச்சனையே இங்கே உள்ளவங்க தான் உண்டு பண்றாங்கன்னு தோணுது. அதான் இங்கே நேரா வந்துட்டேன்” – சிவனியா

“எத வச்சு சொல்றேம்மா?” – காவல் அதிகாரி

“எங்க மாமா இங்கே ஹோட்டல் வச்சுருக்காரு சார், அவரையும் என்னையும் சேர்த்து தான், யார் யாரோ தப்பா பேசி வைக்கிறாங்க” என்றவள் பாண்டியனின் விவரங்களைச் சொல்லி, தவறான நபர்களால் வரும் அழைப்புகளையும், அவர்களின் தரம் தாழ்ந்த பேச்சுக்களையும் திக்கித் திணறி சொல்லி வைத்தாள். எக்காரணம் கொண்டும் முன்தினம் நடந்ததை சொல்லவில்லை என்றாலும் அதை அறிந்து வைத்திருந்தவர்கள்

“அந்த பொண்ணு நீதானாம்மா? உன் ஃப்ரெண்ட் அழகா உன்ன கோர்த்து விட்டு போயிருச்சு. அவ அடுத்து உனக்கு போன் பண்ணாளா?”

“இல்ல சார்… அவ பத்தின விவரம் எனக்கு இது வரைக்கும் தெரியல?”

“சரி அத விடு, உன்னோட விசயத்துக்கு வருவோம் ஃபோன் குடு, அந்த நம்பர் என்னன்னு சொல்லு?”

“ரெண்டு பேர் பேசுனத ரெகார்ட் பண்ணி வச்சுருக்கேன் சார்… இது வரைக்கும் பத்து பேர் மேல போன் பண்ணி அப்டி பேசியிருக்காங்க”

“சரிம்மா நான் என்னான்னு பார்த்து பாண்டியன் கிட்ட சொல்லி அனுப்புறேன் இப்போ நீங்க கிளம்புங்க”

“இல்ல சார்… நாளைக்கு நானே நேர்ல வந்து தெரிஞ்சுக்குறேன்” ஏதோ ஒரு தயக்கம் மனதில் உண்டாக, மீண்டும் அவனிடத்தில் போய் நிற்க அவள் மனம் இடம் தரவில்லை. அவனை தவிர்க்கவே அவ்வாறு சொல்லி வைத்தாள்.

“இத பாரும்மா… நீ நினைக்கிற மாதிரி இது சாதாரண விஷயம் கிடையாது, இப்போதைக்கு உன்னோட போன்ல வர்ற கால்(call) வைச்சு தான், அதோட லோகேசன்(location) பார்த்து வைக்கணும். இந்த வேலை சைபர் க்ரைம்ல தான் செய்வாங்க. நியாயமா பார்த்தா உங்கள நேர அங்கே தான் அனுப்பனும். நீ பாண்டியன் பேர சொல்றதால நான் உங்கள உக்கார வச்சு பேசிட்டு இருக்கேன். நீங்க போய் பாண்டியன அனுப்புங்க” என அவர்களை அனுப்பி விட, இருவரும் மேற்கொண்டு என்ன செய்வது என்ற ஒரு வித யோசனையுடனே வெளியே வந்தனர்,

அந்த சமயத்தில் கதிரின் கைப்பேசி வாங்கிய ரசீதை எடுத்துகொண்டு, அவனது கைபேசி காணாமல் போன விடயத்தை கூற பாண்டியன் வந்தான். உடன் கதிரும் ரவியும் சேர்ந்து வந்தனர்.

அங்கே இருந்து வெளிய வந்த இரு பெண்களையும் பார்த்து “நேற்று நடந்ததற்கு இன்று புகார் கொடுக்க வந்திருக்கிறார்களோ?” என அவனது அவசர புத்தி தப்பாமல், தப்பாக யோசித்து வைத்தது.

“உன்னை பாக்க வீட்டுக்கு போயிட்டு வரேன், நீ இங்கே என்ன பண்ற?” ரவி சிவனியாவிடம் கேட்க

“ஒரு சின்ன பிரச்சனைண்ணே… அதான் இங்கே விவரம் சொல்ல வந்தோம்!”- சிவனியா,

இதை கேட்ட பாண்டியனுக்குமே அதிர்ச்சி. பிரச்சனை என்னவென்று தெரியவில்லை தான். ஆனால் இருவரும் தான் இருப்பதை மறந்து, தங்கள் பிரச்சனைகளை தீர்க்க காவல் நிலையம் வரை வந்ததை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியதை போல் அவன் கோபத்தில், அவர்களை முறைத்து விட்டு, முகத்தை திருப்பிக் கொண்டு நின்று, அவர்கள் பேசுவதை கேட்க தொடங்கினான். காலையில் இவள் நிலையை நினைத்து துடித்தவன், இப்பொழுது அவளை ஏறெடுத்தும் பார்க்காமல், வேறுபக்கம் பார்த்து வைத்தான்.

“இங்கே வந்து சொல்ற அளவுக்கு என்ன பிரச்சனைம்மா உனக்கு?” – ரவி

“ அது…” சற்று தயங்கியவளை பாண்டியன் முறைத்து பார்க்க, அந்த பார்வையே அவளை சொல்ல வைத்தது.

“இன்னைக்கு மதியத்துக்கு மேல வர்ற போனேல்லாம் காது கொடுத்து கேக்க முடியலண்ணே! அப்படி அசிங்க அசிங்கமா பேசி வைக்கிறாங்க… எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல? அம்மா ஏற்கனவே நேத்து நடந்ததுக்கு புலம்பிட்டு இருக்காங்க, இதுல இப்படி வேற வருதுன்னு தெரிஞ்சு ரொம்ப உடைஞ்சு போயிட்டாங்கண்ணே… பொம்பளைங்க மட்டுமே தனியா இருந்தா தப்பான்னே? இப்படி தான் நடந்துப்பாங்களாண்னே?” யாரையும் ஏறெடுத்தும் பார்க்காமல் தன் குமுறல்களை எல்லாம் அங்கே இறக்கி வைக்க

“என்ன தங்கச்சி என்னென்னமோ பேசிட்டு இருக்கே? யார் என்ன சொன்னா? யார் என்னா பேசினா சொல்லுமா?” – ரவி

“சொல்லவே வாய் கூசுது எனக்கு, ஏதோ விளம்பரம் பேர சொல்லி தப்பு தப்பா பேசுறாங்க, அவங்க பேசினத ரெகார்ட் பண்ணி உள்ளே குடுத்துட்டு வந்திருக்கேன், இதுக்கு மேல என்னால சொல்ல முடியல” தவிப்பாய் முடித்து விட்டாள்.

இப்படியெல்லாம் தன் நிலைமை தரம் தாழ்ந்து விட்டதே என்ற பரிதவிப்பும், அதனோடு உண்டான கழிவிரக்கமும் அவளை வதைத்து எடுக்க, இருக்கின்ற இடத்தையும் மறந்து அவளது விழிகள் கண்ணீரில் மிதந்தாலும் அதை வெளியிடா வண்ணம் பல்லை கடித்துக் கொண்டே தன்னை அடக்கிக் கொண்டாள்.

ஆறுதலாய் தோள் சாயவும் யாரும் இல்லை அவளுக்கு. இவளது தவிப்பினைப் பார்த்து செங்கமலம் தான் கண்ணீர் விட ஆரம்பித்தார். பெண்களின் நிலையை பார்த்த ஆண்களுக்கு சொல்லில் அடங்கா கோபம் அப்பொழுதே கொந்தளிக்க ஆரம்பித்தது.

“எவன்டா அவன்? என் வீட்டுப் பொண்ணுகிட்ட தப்பா பேசி வச்சது? நம்ம பசங்கள கூப்பிடு ரவி!! தேடி பிடிச்சு அந்த ——– பயலுகள கொன்னு போட்டுட்டு மத்த வேலைய பாக்குறேன்” சொன்ன பாண்டியன், தன் கோபத்தை அடக்க படாதபாடு பட்டுக் கொண்டிருந்தான்

“கொஞ்சம் பொறுமையா இரு பாண்டி! உள்ளே போய் விவரத்த கேட்டு சீக்கிரம் கண்டுபிடிக்க சொல்லுவோம் நீ உள்ளே வா, சிவாம்மா நீயும் வா” ரவியுடன் அனைவரும் உள்ளே சென்றனர்.

“வாப்பா பாண்டியா! நானே உன்ன கூப்பிடனும்னு நினைச்சேன், நீயே வந்துட்ட… இந்த பொண்ணு சொன்ன கம்ப்ளைன்ட் சம்மந்தமா தான் ஆபிஸ்ல பேசிட்டு இருக்கேன்” அங்கே உள்ளே ஏட்டையா சொல்ல

“ரொம்ப தேங்க்ஸ் சார், அதோட நான் சொல்றதையும் கொஞ்சம் சேர்த்து பாருங்க சார்” என்ற பாண்டியன், தான் கொண்டு வந்த ரசீதை அவர்களிடம் காண்பித்து, “நேத்து நடந்த பிரச்சனையில இவன் மொபைல் மிஸ் ஆயிடுச்சு” என கதிரை காண்பித்தவன் “அதோட பில்(bill) தான் இது, நான்தான் சட்டைபையில வச்சுட்டு போய் மிஸ் பண்ணிட்டேன். அப்புறம் இவன் ஒரு பிரச்சனை சொல்றான் அதுவும் என்னன்னு பாக்கணும் சார். டேய் சொல்லுடா” என கதிரை அழைக்க

“அது… இன்னைக்கு என்னோட பேஷ்புக்(facebook) ஐடீல இருந்து, ரெண்டு விளம்பர போஸ்டர் ஷேர்(share) ஆகிருக்கு சார்… நானும் சிவா அக்காவும் சேர்ந்து நிக்கிற மாதிரி போஸ்டர் ஒண்ணு, பாண்டி அண்ணனும் அக்காவும் சேர்ந்து நிக்கிற மாதிரி இன்னொன்னும் இருக்கு…” சொல்லியபடியே அந்த முகநூல் பதிவை பாண்டியன் கைபேசியில் இருந்து அதிகாரிக்கு காட்டினான்.

அது ஒரு மூன்றாம் தரமான விளம்பரம். இரு பாலினருக்கும் மனதிலும் உடலிலும் கிளர்ச்சியை தூண்டும் வகையிலான ஒரு மருந்தை அறிமுகப்படுத்தி, அதனை உபயோகிப்பவர்கள் என்று இரண்டு விளம்பர படங்கள் பகிரப் பட்டிருந்தன. அந்த இரு போஸ்டர்களிலும் பெண்ணாய் சிவனியா இருக்க, பாண்டியனும், கதிரும் ஒவ்வொன்றிலும் ஜோடியாய் இருந்தனர். இதில் வரம்பு மீறிய செயலாக “இந்த மருந்தை உபயோகித்தால் ____________________________ “ போன்ற மனதாலும் படிக்க முடியாத வாசகங்கள் இடம் பெற்று, சந்தேகங்களை தீர்த்திட தொடர்பு கொள்ளவென்று சிவனியாவின் கைபேசி எண் கீழே இணைக்கப் பட்டிருந்தது. இந்த பதிவைப் பார்த்து தான் சிவனியாவிற்கு தப்பான நபர்களால் அழைப்பு வந்தது என எல்லோராலும் ஊகிக்க முடிந்தது.

இதையெல்லாம் கேட்டும், பார்த்தும் கொண்டிருந்த செங்கமலம் மன அழுத்தம் தாங்க முடியாமல் அந்த இடத்திலேயே பொங்கி விட்டார்.

“இன்னும் என்னென்ன கூத்து பண்ணி வச்சுருக்கீங்கடா? ஒரு பொண்ணு சிரிச்சு பேசினா இப்படிதான்னு முடிவு கட்டுவீங்களா? நல்லா இருப்பீங்களாடா நீங்க? பொம்பளைங்க சுதந்திரமா இருக்க இங்கே வழியே இல்லையாடா?” உணர்ச்சி மேலீட்டால் பாண்டியனின் சட்டையைப் பிடித்து உலுக்கி எடுத்து விட்டார்.

“நாங்க என்ன பாவம்டா பண்ணோம்? இப்டி என் பொண்ணை அசிங்கப்படுத்தி அழகு பாக்குறீங்க? இதுக்கு நீங்க அவள கொன்னே போட்டிருக்கலாம்” என பாண்டியனை குற்றவாளியாய் எண்ணி தன் மனக்குமுறல்களை கொட்டி தீர்த்து விட்டார்.

*******************

error: Content is protected !!