ஏதோ யோசனைகளுடன் கட்டிலில் அமர்ந்திருந்த தந்தையின் அருகில் சென்று, பவானி மண்டியிட்டு அமர்ந்தாள். நாதன் நிமிர்ந்து பார்க்க விரும்பவில்லை என்று தெரிந்தது.

பவானி, “அப்பா…” என்று மெதுவாக அழைத்துப் பார்த்தாள்.

‘பாலாவின் பேச்சை மீறி, அவள் பேசின பேச்சுக்கு ஏதேனும் காரணம் சொல்வாளோ?’ என்ற எண்ணத்தில் “என்னம்மா?” என்றார்.

“அப்பா, பெஞ்சு வரைக்கும் போயிட்டு வரட்டுமா?” என்று கொஞ்சமும் தடுமாற்றமின்றிக் கேட்டாள்.

‘இவளுக்கு எங்கிருந்து இத்தனை உறுதி வந்தது’ என்று எண்ணத்தில், நாதன் கலங்கினார்.

“எதுக்கு?? இப்பத்தான சரியாயிருக்கு பவானி. வீட்ல ரெஸ்ட் எடு” என்று நயமாக மறுத்துப் பார்த்தார்.

“இல்லைப்பா, நாலு நாளா வீட்லேயே இருந்து ஒரு மாதிரி இருக்குப்பா”

இவளின் இந்த மனநிலைக்காகவே, எத்தனை விடயங்களில் சம்மதம் இல்லை என்றாலும், சரி என்று சொல்ல வேண்டியுள்ளது – நாதனின் எண்ணம்.

“ப்ளீஸ் அப்பா, போயிட்டு சீக்கிரமா வந்துருவேன்” என்று கெஞ்சினாள்.

கொஞ்ச நாள் பேசியவனிற்காக, என் மகள் என்னிடமே கெஞ்சுகிறாளே? – நாதனின் எண்ணம்.

“ஜீவன் சார் வேற வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க”

‘ஓ! மதன் போனப் பிறகு இதுதான் பேசினார்களா??’ என்று நினைத்துக் கொண்டார்.

“அப்பா” என்று பவானியின் குரலில் கொஞ்சம் அடம் சேர்ந்து ஒலித்தது.

“சரி, போ. ஆனா அப்பா கொஞ்ச நேரம் கழிச்சு வந்து கூப்பிடுவேன்”

“ம்ம்ம் சரிப்பா” என்று நிறைவான மனதுடன் கூறினாள்.

“பவானி, ஜீவன் சார்கிட்ட அதுக்கு எவ்வளவு பணம் செலவாச்சுன்னு கேளு” என்று சொன்னார்.

“சரிப்பா” என்று சொல்லிக் கிளம்பி விட்டாள்.

பவானி சென்றதும், நாதனும் வள்ளிம்மா வீட்டை நோக்கிக் கிளம்பினார்.

*****
பவானி மலைச் சரிவில் நடக்கத் தொடங்கினாள். பலத்த மழைப் பொழிவிற்குப் பின் வானம், தூய வெள்ளை நிறத்தில் காட்சியளித்தது.

மெல்லிய கம்பி கம்பியாய் சாரல் மட்டுமே விழுந்தது. அந்த மலைப் பிரதேசம் முழுதும் நூறு சதவீதத்தை தாண்டிடும் அழகாய் தெரிந்தது.

பவானி நடந்து வரும் பாதைகளில் இருந்த புற்களில், மழைத்துளிகள் நின்று கொண்டிருந்தன. கால்களில் அணிந்திருந்த காலணியைக் கலட்டி இடது கையில் வைத்துக் கொண்டு, தன் பாதங்கள் புற்களில் நின்ற நீர்திவலைகளை உரசும்படி நடந்து வந்தாள்.

வலக்கரத்தால் மலைச் சாரலுடன் விளையாடிக் கொண்டே வந்தாள். இடையில் மலைச்சரிவின் பாதையில் நின்ற மரங்களுடன் ‘ஹைபைவ்’ செய்து கொண்டாள்.

மதனுடன் பேசியது பழையதை நியாபகப் படுத்தினாலும், பேசிய விடயம் ஒரு விதமான நிம்மதியை உணர்த்தியது.

அவள் வரும்போது, மஞ்சள் கல் இருக்கையில் ஜீவன் இல்லை. ‘வெயிட் பண்றேனு சொல்லிட்டு, எங்கே போனாரு?’ என்று யோசித்துக் கொண்டே நின்றாள்.

சற்று நேரத்திற்கு முன்பு நிரம்பி வழிந்த நிம்மதி, சட்டென்று வடிந்து போனது.

அன்று மழைப் பொழிவு அதிகம் என்பதால், இருக்கையில் பவானி அமரும் ஓரத்தில், மழை நீர் சிறுசிறு வட்டங்களாகத் தேங்கியிருந்தது. எனவே ஓரத்தில் அமராமல், கொஞ்சம் உள்ளே தள்ளி அமர்ந்தாள்.

ஜீவன், பவானியை அதிக நேரம் காக்க வைக்கவில்லை. அவனும் வந்தான்.

அவள் அமர்ந்திருக்கும் இடத்தைப் பார்த்தவன், ஏதோ யோசனையில் நின்று கொண்டே இருந்தான்.

“அந்தப் பக்கம், கொஞ்சம் தண்ணீ இருக்கு… அதான்… இன்னைக்கு இங்க… ”

“பரவால்ல” என்று சொல்லிய ஜீவன், இருக்கையின் மற்றொரு ஓரத்தில் அமர்ந்தான்.

தமிழிலுள்ள இருநூற்றி நாற்பத்தி ஏழு எழுத்துக்களும், அவர்கள் இருவருக்கும் உதவ மறுக்கின்றன தருணங்கள். – இவை.

“ஜீவன் சார்?” – பவானியின் குரல் எட்டாம் சுரமாய் ஒலித்தது.

“சொல்லு” – சிரத்தை இல்லாமல் வந்தது, ஜீவனின் குரல்.

“எங்க போயிருந்தீங்க?”

“நனைஞ்சிருந்தேன்ல அதான், டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்தேன்”

“ஓ! மறந்துட்டேன்”

அகரமுதலி சொற்கள் அனைத்தும், அவர்கள் இருவரையும் அம்போவென விட்ட தருணங்கள் – இவை.

“பவானி.. உன்” என்று ஏதோ சொல்ல வந்தவன், பாதியிலே நிறுத்தி விட்டான்.

“சொல்லுங்க சார்”

அவன் முகத்தைப் பார்த்தாள். அதில் முதல் நாள் இருந்த ‘எனக்காக மட்டும் நான்’ என்கின்ற தோற்றம் அறவே இல்லாமல் இருந்தது. அவனது முகம் ‘தனக்காக’ யோசிப்பது போல் இருந்தது.

“சார், நீங்க ஏதோ சொல்லணும்னு நினைக்கிறீங்களா??” – பவானி.

“ஏன் கேட்கிற? ” – ஒரு பெருமூச்சு விட்டபடியே, ஜீவன் கேட்டான்.

“இல்ல வீட்ல வெச்சும்… இப்படித்தான் என்னோட பேர் சொல்லிட்டு… எதுவும் சொல்லாம ஒருமாதிரி இருந்தீங்க. அதான் இங்க வரவான்னு கேட்டேன். இங்க வந்தும், அப்படியே செய்றீங்க… அதான்…”

தனது ஒவ்வொரு அசைவிற்கும் அருஞ்சொற்பொருள் தருகிறாளே?? என்று எண்ணினான்.

‘ப்ச்! ஒண்ணுமில்லை’ என்றவாறு தலையை ஆட்டிவிட்டு, கீழே உள்ள கேள்வியைக் கேட்டான்.

“பவானி, நாதன் சார் ஏதாவது சொன்னாங்களா?” என்று தயக்கம் நிறைந்த குரலில் கேட்டான்.

“இல்லையே சார்”

‘தான் இவ்வளவு பேசியும், நாதன் சார் எதுவும் கேட்கவில்லையா?’ என்று யோசிக்க ஆரம்பித்தான்.

“ஜீவன் சார்”

“சொல்லு”

“இப்பதான் நியாபகம் வந்தது. நீங்க வாங்கிட்டு வந்ததுக்கு எவ்வளவு ஆச்சுன்னு… அப்பா கேட்டு வரச் சொன்னாங்க”

பவானிக்காக வாங்கியது என்று சொல்லியும், நாதன் சார் பணம் தரப் பார்க்கிறார் என்றால், தான் சொல்லிய விடயத்தில், அவருக்கு உடன்பாடு இல்லை என்று ஜீவனுக்கு தெரிந்தது.

இதைச் சொல்லி, பவானியின் மனதைக் கஷ்டப்படுத்தக் கூடாது என்று நினைத்தான்.

“ஜீவன் சார். என்ன யோசிக்கிறீங்க?”

“பவானி, அதுக்கு ஏற்கனவே பதில் சொல்லிட்டேன்னு சொல்லு”

“புரியல சார்”

“ப்ச், நாதன் சாருக்குப் புரியும். நான் சொன்னதை மட்டும் சொல்லு ”

“ம்ம்ம் சரி”

‘இதற்கே இப்படி என்றால், என்னைப் பற்றிய உண்மைகள் தெரிய வரும் பொழுது, நிச்சயம் தன்னை ஏற்க மாட்டார்கள் என்று தோன்றியது. பவானிக்குத் தெரிந்ததால்?!?’ என்று வருந்தி யோசித்தபடியே, அவளைப் பார்த்தான்.

அந்தக் கணம், பவானியும் ஜீவனின் விழி பார்த்திருந்தாள். பவானியின் நயனங்கள், ஜீவனுக்கான நேயங்கள் தாங்கி நின்றன. அந்த நேயங்கள், ஜீவனை மேலும் நோகச் செய்தன.

“அப்பா என்னையப் பத்தி ஏதாவது சொன்னாங்களா?” – பவானியின் குரல் சற்றே தாழ்ந்திருந்தது.

“….”

“அதான் இப்படி இருக்கீங்களா?” – பவானியின் குரல் தயங்கியது.

“….”

“என் மேல பரிதாபப் பட்டுத்தான் இதெல்லாம் பண்றீங்களா??” – பவானியின் குரல் தழுதழுத்தது.

“…. ”

“பதில் சொல்ல மாட்டிங்களா??” – பவானியின் குரல் கெஞ்சியது.

“நாதன் சார், என்கிட்ட உன்னையப் பத்தி எல்லாம் சொன்னாங்க. ஆனா அதுக்காக நான் இப்படி இல்லை. ம்ம்ம்.. உன் மேல இருக்கிறதுக்குப் பேரு பரிதாபம் இல்லை” – ஜீவனின் குரலில் தடையேதுமில்லை.

“பரிதாபம் இல்லைன்னா?? வேற என்ன சார்?”

“தெரியலையே பவானி. தெரிஞ்சா, சொல்றேன்”

“ம்ம்ம் சரி. ஆனா பயமா இருக்கு?” – பவானியின் குரல் தடுமாறியது.

“பயப்படாத பவானி… பாலா ஏதாவது கேட்டாருன்னா, என்கிட்ட சொல்லு”

“என்ன கேட்பாங்க? மதன்கிட்ட நான் சொன்னதைப் பத்தியா?”

“ம்ம்ம்”

“சரி சொல்றேன். ஆனாலும் ரொம்ப பயமா இருக்கு. மதன் விஷயத்தில என்ன முடிவு எடுக்க?? ”

“கொஞ்சம் யோசிக்கணும் பவானி. எனக்கு டைம் கொடு”

“சரி”

‘சரி’ என்று வாய் வார்த்தை வந்தது. ‘சரியில்லை’ என்று வாடிய வதனம் காட்டியது. – இது பவானி பற்றியது.

அவளை, ஜீவன் உணர்ந்தான்.

“ப்ச், அதெல்லாம் விடு பவானி. நான் பார்த்துக்கிறேன். வாங்கிட்டு வந்த திங்க்ஸ் பார்த்தியா??”

“கொஞ்சம் பார்த்தேன்”

“அந்தக் கலர்ஸ் பிடிச்சிருக்கா??”

“ம்ம்ம், பிடிச்சிருக்கு”

“பவானி, அதை வச்சி என்னெல்லாம் பண்ணுவ? சொல்லேன்” – ஜீவனின் பேச்சு மட்டுமல்ல, அவனின் போக்கே பவானியின் மனநிலையை மாற்ற வேண்டும் என துடித்தது.

“த்ரெட் வச்சிக் கிளாத்தல டிசைன் போடுவேன். பட் இந்த மாதிரி டிசைன் போட்டு, ரொம்ப நாளாச்சு. என்னால முடியுமானே தெரியலை”

“அதெல்லாம் முடியும். ”

“ம்ம்ம் சரி. ஜீவன் சார்”

“சொல்லு”

“என்ன டிசைன் போட??”

“உனக்குப் பிடிச்சதைப் போடு”

“ம்ம்ம் சரி. நாளைக்கே ஒரு பிளவர் டிசைன் போட்டு வந்து உங்ககிட்ட காட்டறேன்”

“நாளைக்கா?? பவானி, நாளைக்கு நான் இங்க இருக்க மாட்டேன்”

“ஏன்? எங்க போறீங்க?” – பவானியின் குரல், ஜீவனின் பிரிவின் சோர்வைக் காட்டின.

“சும்மா, அப்டியே எங்கயாவது தனியா போய் இருந்திட்டு வருவேன்”

“தனியாவா? தனியா எங்க போறீங்க? பயமா இருக்காதா? சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவீங்க?”

பவானியின் ஒவ்வொரு கேள்விக்குப் பின்னே ஒளிந்திருந்த உணர்வுகள், ஜீவனை உலுக்கிப் பார்த்தது.

“அதெல்லாம் நான் பார்த்துகிறேன்” – ஜீவன்.

“எங்கனாவது சொல்லுங்களேன்??”

நிகண்டின் சொற்கள் ஜீவனை நிர்கதியாக விட்ட தருணங்கள் – இவை.

“சொல்ல விருப்பம் இல்லைன்னா..” – பவானி.

“ப்ச், அப்படியில்ல. சரி சொல்றேன். இந்த ரோட்ல, ஒரு அரை மணி நேரம் நடந்தா… ரைட் சைடுல.. ம்ம்… பாறையில சின்ன சின்ன படிக்கட்டு மாதிரி இருக்கும்”

“….”

“அதுல ஏறிப் போனா… ஒரு… ஒரு மணி நேரம் செம்மண்ல நடக்கணும். அதுக்கப்புறம்… பயங்கிற காடு, மரம், செடி… அப்படியே நடந்தா, மலைக்கு அந்தப் பக்கம் கூட இறங்கலாம்”

“ஓ”

“உனக்குத் தெரியுமா?”

“ம்கும்.. தெரியாது. நீங்க ஊருக்குப் புதுசுதான.. எப்படித் தெரியும்? ”

“ப்ச், தனியா இருக்கிற இடமெல்லாம் எனக்கு அத்துப்படி பவானி”

“ஓ! ஆனா ஏன் அங்கே போறீங்க?”

“கொஞ்சம் யோசிக்கணும் பவானி.”

“என்ன யோசிக்கணும் சார்?”

“என்னைப் பத்தி… ”

“ஓ”

“உன்னைப் பத்தி….”

“ம்ம்ம்”

வெகு நேர இடைவெளிக்குப் பின்னர், “நம்மளைப் பத்தியும் யோசிக்கட்டுமா, பவானி?” என்று எங்கோ பார்த்தபடிக் கேட்டான்.

சட்டென திரும்பி, பவானி ஜீவனைப் பார்த்தாள். ஆனால் ஜீவனோ தலை திருப்பவில்லை.

“யோசிங்க ஜீவன் சார்” – பவானியின் குரலில் நிச்சயத்தன்மை இருந்தது.

ஜீவன், நிம்மதியாகத் தலையைத் திருப்பிப் பவானியைப் பார்த்தான்.

“ஜீவன் சார், எத்தனை நாளு?” என்று நிலைகொள்ளாமல் கேட்டாள்.

“தெரியலை. எனக்கு எத்தனை நாள் தோணுதோ…” என்று பாதியிலே நிறுத்திவிட்டான்.

நிறுத்திய நொடிதனில் பவானி நிலைமையின் நிலைப்பாடு உணர்ந்திருந்தான்.

“பவானி…”

பவானி தலை நிமிர்ந்து, ஜீவனைப் பார்க்கவில்லை.

“பவானி என்னையப் பாரு??”

நிமிர்ந்து பார்த்தவளின் நயனங்கள் நீர்க் கோர்த்திருந்தன.

“பவானி… சொல்லு எத்தனை நாள்?.. உன்னால… ” என்று கேள்வியை முடிக்காமல் விட்டான்.

கேள்வியே தயக்கமாக கேட்கும் பொழுது, பதில் எப்படித் தாராளமாகச் சொல்ல முடியும். – இது நாமும் மலைப் பிரதேசமும்.

“ஒரு மூணு நாலு நாள்னா… ஓகேவா பவானி?”

நேர் கொண்டு ஜீவனைப் பார்த்த நயனங்களில், நீர்க்கோர்வை அதிகம் ஆயின.

“சரி பவானி. ஒரு ரெண்டு நாள்ல வந்துருவேன். சரியா? ஆனா, இனிமே அழக்கூடாது”

“ம்ம்ம். பார்த்துப் போயிட்டு வாங்க”

‘என்னைப் பற்றி அறிந்த பின்னும், இந்த அக்கறை அன்பு வேண்டும் பவானி’ என்று ஜீவனின் கண்கள் யாசித்தன.

“ஜீவன் சார்”

“சொல்லு”

“முதல் நாள் என்னைப் பார்த்தப்போ இருந்த மாதிரியே இருங்க. மதன் திட்றதோ… பாலாண்ணா பேசறதோ.. அப்பா கவலைப் படுறதோ… எனக்கு ஒண்ணும் புதுசில்ல. பழகியாச்சு. நீங்க என்னை நினைச்சு, உங்களை மாத்திக்காதீங்க. பார்க்கவே ரொம்ப கஷ்டமாயிருக்கு. விட்டுடுங்க சார்” என்று சொல்லியவள் கண்களில் இருந்து இரண்டு மூன்று கண்ணீர் சொட்டுகள் விழுந்தன.

ஏற்கனவே கண்ணீர் சிந்துகின்ற அவள் கண்கள், மேலும் கலங்காமல் கையாள வேண்டும் என்று ஜீவன் நினைத்தால், கீழ் கண்டவாறு நடந்து கொண்டான்.

“அப்படியெல்லாம் விட முடியலையே பவானிம்மா” என்று நாதன் பேசும் பாணியில் பேசினான்.

பட்டென்று பவானி முகம் மாறியது. கண்ணீரைத் துடைத்தாள். முகம் கடுமையானது. கண் இரண்டையும் சுருக்கிக் கொண்டு கோபத்தைக் காட்டினாள்.

“ஏன்? எதுவுமே சொல்ல மாட்டிக்க பவானிம்மா?”

“அப்படிக் கூப்பிடாதீங்க”

“ஏன்? எதுக்கு? நாதன் சார் மட்டும்தான் அப்படிக் கூப்பிடனுமா?”

“அதென்ன?? நாதன் சார்… ‘உங்க அப்பா’ அப்படின்னு சொல்ல வேண்டியதுதானே”

“பாருடா!! பவானிம்மா கோபத்தை”

“அப்படிச் சொல்லாதீங்க”

“சரி, சொல்லலை. ஆனா சில நேரம் எனக்கே தெரியாம வந்துரும். அதெல்லாம் கண்டுக்க கூடாது”

இன்னும் பவானி முகத்தில் கோபம் தெரிந்தது.

“பவானி.. ”

கோபம் குறையவில்லை.

“ப்ச்! பவானி ரிலாக்ஸாக ஏதாவது கேம் விளையாடலாமா?? ”

“ஒண்ணும் வேண்டாம்”

“ம்ம்ம், சரி.. ஒரு ஜோக் சொல்லவா?”

என்னவாவது செய்து, பவானியைப் புன்னகை புரியச் செய்ய வேண்டும் என்பதே ஜீவன் சாரின் குறிக்கோள் – இது நாமும் மலைப்பிரதேசமும்!

“பவானி?” என்று சொல்லிக் கொண்டே, அவள் முன்னே வந்து மண்டியிட்டு அமர்ந்தான்.

“சரி சொல்லுங்க. ஆனால் மேலே உட்கார்ந்து சொல்லுங்க”

“பரவால்ல பவானி”

கோபம் குறைந்து, ஜீவன் பேசுவதைக் கேட்கும் நிலைக்கு வந்தாள்.

“புயலடிக்கிறப்ப ஒருத்தன் அழுக்குச் சட்டையைப் பிடிச்சுக்கிட்டு நின்னான். ஏன்னு சொல்லு?”

பவானி யோசித்தாள்.

“தெரியலை சார்” – பவானி.

“ஏன்னா? அப்பதான புயல் கரையைக் கடக்கும். எப்படி?”

பவானி சிரிக்கவில்லை.
ஜீவன் சார்!! ஏன் இப்படி?? – இது நாமும் மலைப்பிரதேசமும்.

“எப்படி இருக்கு??” – ஜீவன்.

“நீங்க சொல்ற ஜோக்கு, உங்க கேம் மாதிரிதான் இருக்கு”

“அப்படின்னா?”

ஐயோ! ஜீவன் சார்! இதற்கு விளக்கம் வேறு கேட்கிறீர்களா? – இடையில் புகுந்து நாமும் மலைப் பிரதேசமும்.

சற்று நொடிக்களில், ஜீவனுக்குப் புரிந்தது போல. மெல்லிய புன்னகை புரிந்தான். சிரிப்பு மறுக்கும் ஜீவனின் இதழ்களைச் சிரிக்க வைத்துவிட்டாள்.

மாற்றத்தைக் கொண்டு வருகின்ற முயற்சிகளில், ஜீவனை விட பவானி முன்னேறிச் செல்கிறாளோ?

அதே கணத்தில் அப்பக்கமாகத் தேநீர் சைக்கிள் வண்டி வந்தது. ஜீவன் கை காட்டி நிப்பாட்டினான்.

“ம்ம்ம் பவானி.. ரொம்ப நாளாச்சு.. டீ குடிக்கலாமா?”

“ம்ம்”

ஜீவன் எழுந்தான்.

“ஜீவன் சார்”

‘என்ன?’ என்பதுபோல் பார்த்தான்.

பன்னிரெண்டு ரூபாய் காசுகளை உள்ளங்கையில் வைத்து நீட்டினாள், பவானி.

ஒரு முழு வினாடிக்கு, ‘எப்படி எடுக்க?’ என்று தயங்கி நின்றான், ஜீவன்.

பவானி, ஜீவனது வலக்கரத்தின் ஒற்றை விரல் பிடித்து திருப்பினாள். பின் ஒவ்வொரு காசாக, ஜீவனது உள்ளங்கையில் வைத்தாள்.

தனிமையை மட்டுமே ரசிக்கத் தெரிந்த ஜீவன், பவானியின் இந்தச் சின்னஞ்சிறு விளையாட்டையும் ரசிக்க ஆரம்பித்தான்.

ஜீவனின் தனிமைத் தரணியில் வந்த முதல் அதிசயம் – பவானி!

விழுமிய ரசனை மிகுந்த காட்சி – இது, இதனைப் பார்க்கின்ற நாமும் மலைப்பிரதேசமும்!

******

வள்ளிம்மா வீட்டிற்கு முன்பு, நாதன் அழைப்பு மணியை அழுத்திவிட்டுக் காத்துக் கொண்டிருந்தார்.

வள்ளிம்மா வந்து கதவைத் திறந்துவிட்டு, “வாங்க நாதன்.” என்று உள்ளே அழைத்தார்.

“வணக்கம் வள்ளிம்மா” என்றவாரே உள்ளே சென்றார்.

“வணக்கம். எப்படி இருக்கீங்க?”

“ம்ம், இருக்கேன்”

“உட்காருங்க” என்று

“பவானி எப்படி இருக்கா??”

“முன்னைக்கு இப்ப பரவால்ல”

“அப்புறம் என்ன நாதன்! சந்தோஷமா இருங்க ”

“ஆனா, மதனும் பாலாவும் அப்படியே இருக்காங்களே”

“விடுங்க நாதன். மதன்லாம் ஒரு ஆளுன்னு… அவனை நம்பிகிட்டு”

“பொண்ண கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்கேனே! வேறென்ன செய்ய??” என்று ஒரு தந்தையாகச் சொல்லிப் பார்த்தார்.

“ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தருக்கு விருப்பம் இருக்கணும். இங்க ரெண்டு பேருக்கும் விருப்பம் இல்ல. விட்டுடுங்க, அதான் நல்லது” என்று எளிதாகச் சொன்னார்.

“ஆனா பாலா… அப்படி நினைக்க மாட்டிக்கிறான். பவானி, மதன்கூட வாழனும்னு சொல்றான்”

“அவன் பவானிக்கு அண்ணன்தான். அவனுக்கு என்ன உரிமையிருக்கு? பொண்ணுக்கு அப்பா நீங்கதான் முடிவு எடுக்கனும். ”

“சரிதான் நீங்க சொல்றது”

“நானும் பவானிகிட்ட பேசி ரொம்ப நாளாச்சி. ஒரு நாள் வந்து பேசுறேன்”

“கண்டிப்பா வாங்க.என்னையத் தவிர வேற யார்கிட்டயும் பேச மாட்டிக்கிறா”

“அப்படியா? ”

“ஆமா. ஏன் பாலா, பல்லவி ரெண்டு பேர்கூடக் கூட பேசறதில்லை”

“பல்லவிக்குப் புரியலை. சின்னப் பொண்ணு. பாலாவைப் பத்தி என்ன சொல்லன்னு தெரியலை? ”

வள்ளிம்மாவிற்கு நாதனின் குடும்ப விடயங்கள், நன்றாகவே தெரியும். காரணம், இவர் பாலாவின் மனைவி வழி உறவு. இருந்தும் பாலாவின் மனைவி குடும்பத்தாரைப் போல், பவானியைப் புறக்கணிக்க மாட்டார்.

“அதான் நீங்களாவது வந்து பேசினா.. நல்லா இருக்கும்” – நாதன்.

“சரி சரி.. வரேன். சொல்லுங்க நாதன் என்ன விஷயமா வந்தீங்க?”

“உங்ககிட்ட ஒன்னு கேட்கணும்”

“கேளுங்க”

“ம்ம்… அது …உங்க வீட்டுக்கு புதுசா குடி வந்திருக்காரே ஜீவன். அவர் யாரு? அவரைப் பத்தி தெரியுமா?”

“ஏன் கேட்கறீங்க?”

“எப்படிச் சொல்லன்னு தெரியலை. ஆனா நீங்கெல்லாம் பவானிக்கு நல்லது நினைப்பீங்க, அதனால சொல்றேன்”

“ம்ம்ம் சொல்லுங்க”

“வள்ளிம்மா, நான் சொன்னேன்ல… பவானி யார்கிட்டயும் பேசவே மாட்டிக்கான்னு.”

“ஆமாம்”

“ஆனா, நம்ம பவானி இப்பெல்லாம் இவர்கூட பேசுறா”

“நம்ம பவானியா?” என்று ஆச்சரியப் பட்டார் வள்ளிம்மா.

“ம்ம்ம். எனக்கும் ஆச்சிரியம்தான். அதான், அவரைப் பத்தித் தெரிஞ்சா சொல்லுங்களேன்”

“எனக்கும் ரொம்பத் தெரியாது. ஆனா வீடு வாடகைக்கு கேட்டு வரும்போது ஒன்னு சொன்னாரு… ”

“என்ன? என்ன சொன்னாரு?”

“அது.. சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சில வருஷம் இருந்தாராம்”

“அங்கேயா??” என்று அதிர்ந்து சொல்லி, அன்றைய தினத்திற்கானக் கடைசி அதிர்ச்சி அடைந்தார்.

“இவ்வளவுதான் சொன்னாரு. நான் வேற எதுவும் கேட்கலை”

“என்ன? என்ன தப்பு?? பண்ணிட்டு அங்க போனாராம். அது தெரியுமா?” – நாதனின் பதற்றம் நிறைந்த கேள்வி.

“இல்ல நாதன். அது தெரியாது.”

“…. ”

“அவர் இதைச் சொன்னதும்… என் பசங்ககிட்ட கேட்டேன்”

“….”

“அவர் என்ன வேலை செய்றாருன்னு என் பசங்க கேட்கச் சொன்னாங்க. ”

“… ”

“அப்புறம் கொஞ்ச நேரம் என் பசங்க அவர்கிட்ட போஃன்ல பேசினாங்க”

“…. ”

“அவங்களுக்கு பெரிசா ஆட்சேபனை ஏதும் இல்லை”

“….. ”

“ஆனா, ‘கொஞ்ச நாள் பாருங்கம்மா, ஏதும் தப்பா தெரிஞ்சா… வெளியே அனுப்பிடுங்கன்னு’ சொன்னாங்க”

“…. ”

“நானும் இத்தனை நாள் பார்த்ததுல, அவரோட நடவடிக்கையில, பார்வைல எதுவும் தப்பா தெரியலை. அதனால நீங்களும் குழம்பாதீங்க”

“நல்லது”

“இதெல்லாம் யோசிக்காதீங்க. நான் பவானிகிட்ட பேசறேன்”

“சரி.. சரி.. நான் வரேன் வள்ளிம்மா” என்று சட்டெனச் சொல்ல, நாதன் கிளம்பிவிட்டார்.

*****

வீட்டின் வெளியே வந்த நாதனிடம் எண்ணிலடங்கா எண்ண ஓட்டங்கள்…

என்ன தவறு இழைத்துவிட்டு இவன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்குச் சென்றிருப்பான்.

சிறு வயதிலேயே தவறு செய்பவன், வளர்ந்த வயதில் என்னவெல்லாம் செய்வான். இப்படி ஒருவனைப் போய் பவானி நம்புகிறாளே?

ஏற்கனவே ஒருவனிடம் அடிபட்டு வந்திருப்பவள், இவனும் அவளை ஏமாற்றிவிட்டால்??
ஒருவேளை, மனநிலை சரியில்லாத பெண் எளிதாக ஏமாற்றலாம் என்று நினைக்கிறானோ??
அதற்காகத்தான் இதெல்லாம் செய்கிறானோ??

நல்ல குடும்பச் சூழலில் வளர்ந்த மதனுக்கே, பவானியைப் பற்றிப் புரிந்து கொள்ள முடியவில்லை. அத்தகைய சூழலில் வளர்ந்த ஜீவன் எப்படி இருப்பான்? பவானியைப் எப்படிப் புரிந்து கொள்வான்?

நினைத்தேன்! அவனைப் பார்த்தாலே வித்தியாசமாகத்தான் தெரிந்தது. சட்டையைப் போட்டிடும் விதமே சொல்லிவிடும், அவன் எப்படி என்று!

இல்லை… இல்லை.. இதை வளர விடக்கூடாது! என் பவானியை யாரும் திரும்பக் கஷ்டப் படுத்தக் கூடாது.

என் மகள்! இதன் பின்னும் கண்ணீர் சிந்தக் கூடாது. நான் உயிரோடு இருக்கும் வரை, பவானியை நானே பார்த்துக் கொள்வேன்.

இதை அழுத்திச் சொன்னால், பவானி மனநிலை பாதிக்கப்படும். அன்பாய் புரிய வைக்க வேண்டும்!

இப்படியே எண்ணிக்கொண்டு, விரைவாக வீடு நோக்கி நடந்தார். தீடீரென்று, பவானி வீட்டில் இருக்க மாட்டாளே என்று தோன்றியது .

தோன்றியவுடன் இன்னும் வேகமாக இருக்கையை நோக்கி நடந்தார்.

******
அங்கே ஜீவனும் பவானியும் பேசிக் கொண்டிருந்தனர்.

நாதன், “பவானி” என்று அழைத்துக் கொண்டே, இருவரின் அருகே சென்றார்.

“அப்பா” – பவானி.

“வீட்டுக்குப் போகலாமா?”

“ஏன்ப்பா? இப்போதான வந்தேன். இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சி வரேனே?”

“இல்லை பவானி. போதும்… ரெஸ்ட் எடுக்கணும். வீட்டுக்கு வா” என்று பதமாகச் சொல்லிப் பார்த்தார்.

“நாலு நாளா வீட்ல படுத்தே இருந்தது ஒரு மாதிரி இருக்குப்பா. இன்னும் கொஞ்ச நேரம்… ”

“பவானிம்மா.. அப்பா சொன்னா கேட்கணும். வாம்மா போலாம்” என்று பாசத்தோடு அழைத்தார்.

அந்த வார்த்தைகள் வந்த குரலின் தொணியில் பவானி கட்டுப்பட்டாள்.

“அப்பா, இன்னொரு விஷயம். அந்த திங்க்ஸுக்கு எவ்வளவு ஆச்சுன்னு கேட்டீங்கள? ”

நாதன் ‘ஆமாம்’ என்பது போல் பவானியைப் பார்த்தார். ஜீவனும் பவானியைப் பார்த்தான்.

“அதுக்கு உங்ககிட்ட ஏற்கனவே பதில் சொல்லியாச்சுன்னு ஜீவன் சார் சொன்னாங்க”

ஒரு நொடி, ஒரே ஒரு நொடி.. நாதன் மற்றும் ஜீவன் பார்வைகள் சந்தித்துக் கொண்டன.
‘உன் வாழ்க்கை எனக்குத் தெரியும்’ – இது நாதனின் பார்வை.
‘உங்கள் விருப்பம் எனக்குத் தெரியும்’ – இது ஜீவனின் பார்வை.

“அதெல்லாம் அப்பா பார்த்துப்பேன். நீ வாம்மா” – நாதன்.

பவானி, ‘என்ன செய்ய?’ என்று திரும்பி ஜீவனைப் பார்த்தாள்.

“நாங்க பேசிக்கிறோம் பவானி. நீ இதை யோசிக்காத” – ஜீவன்.

‘நல்லவன் மாதிரி, என்ன ஒரு பேச்சு’ என்று எண்ணிக்கொண்டார், நாதன்.

“பவானி வாம்மா” – நாதன்.

இன்னும் பவானி தயங்கினாள்.

“பவானி நீ போ. இன்னொரு நாள் பேசலாம்” – ஜீவன்.

“ம்ம்.. சரி.. போயிட்டு வரேன்” என்று ஜீவனிடம் விடைபெற்றுக் கொண்டு, தந்தையுடன் நடக்க ஆரம்பித்தாள்.

ஜீவனும் நாதனும் விடைபெறும் தருவாயிலும் பேசவில்லை.

ஜீவனோ, பவானி செல்வதையே பார்த்திருந்தான்.

நாதனோ, பவானியின் தலையை அன்பாக வருடியபடியே அழைத்துச் சென்றார். தனது அதீத அன்பினால், ஜீவனின் புறம், பவானி திரும்பாமல் பார்த்துக்கொண்டார்.

பவானிக்கு தன் தந்தையின் அன்பு மட்டுமே தெரிந்தது. எனவே திரும்பத் தோன்றவில்லை.

ஜீவன், பவானி திரும்புவாள் என்று பார்த்துக் கொண்டே இருந்தான்… பவானி திரும்பவேயில்லை..

******
ஏமாற்றத்துடன் அமர்ந்தான்.
மனம் மலைப்பிரதேசத்தில் இருந்து மனப்பிரதேசத்திற்குத் தாவியது.
தனக்குத் தானே, ஜீவன் சில கேள்விகள் கேட்டுக் கொண்டான். அந்தக் கேள்விகள் பின்வருவன!

பவானியின் திருமண பந்தத்தை ஒட்ட வைக்கும் முயற்சியில் இருக்கும் பாலாவைத் தாண்டி, பவானியுடன், தான் எந்த மாதிரியான பந்தத்தை ஏற்படித்திட முடியும்?

பவானிக்காகச் சாதரண பொருள்கள் வாங்கித் தருவதையே விரும்பாத நாதன், தன்னை ஒரு பொறுப்பான இடத்தில் வைத்துப் பார்ப்பாரா?

தன்னைப் பற்றிய உண்மைகள் தெரிய வரும் போது, பவானி எப்படி உணர்வாள்? இதே உறுதியோடு இருப்பாளா? அல்லது உருக்குலைந்து போவாளோ?

எல்லாவற்றையும் விட! தான் இதற்கு தகுதியானவனா? தன்னால் இதைச் சமாளிக்க முடியுமா??

விடையில்லா வினாக்கள் ஜீவனின் மனப்பிரதேசத்தில் ‘அவனுக்கான’ மனச்சுமையைக் கூட்டியது.

விடைகள் எழுதியே ஆக வேண்டும் என்கின்ற விருப்பங்கள், ஜீவனின் மனப்பிரதேசத்தில் ‘அவளுக்கான’ மனச்சரிவைக் காட்டியது.

மனப்பிரதேசத்தின் கவலைக் காலநிலையை, கழுத்து நரம்புகள் புடைக்க, எச்சிலை விழுங்கி சமாளித்தான் ஜீவன்.

இருந்தும் ‘பவானி’ என்று நினைவில் லேசாக… மிக லேசாக ஜீவன் சாரின் கண்ணீர் காணாத கண்கள் கலங்க ஆரம்பித்தன.

error: Content is protected !!