Kaalam Yaavum அன்பே 18

 காலம் யாவும் அன்பே 18

 

“ஆகாஷ் , நாம எதாவது ஹெல்ப் பண்ணுவோம் டா. பாவம் இயல். ஹெட் என்ன நினைக்கறாருன்னு தெரியாம ரொம்ப பீல் பண்றா. நீ ஹெட் கிட்ட பேசிப் பாரேன்” வந்தானா இயலின் வருத்தத்தைப் போக்க தன்னால் ஏதாவது முடியுமா என்று பார்த்தாள்.

“இங்க பாரு வந்தனா, லவ் ல மட்டும் புரோக்கர்ஸ் இருக்கக் கூடாது. நாம போய் சொன்னாலும் அது நல்லா இருக்காது, எனக்கு தெரிஞ்ச வரை ஹெட் இவ்ளோ ஈசியா பேசறதே இயல் வந்த பிறகு தான். அதே சமயம் அவருக்கு கொஞ்சம் அவ மேல இண்டரஸ்ட்டும் இருக்கு… இயல் அல்ரெடி அவர லவ் பண்றா… சோ ரெண்டு பெரும் மனசுவிட்டு பேசிக்கிட்டாலே சரி ஆயிடுவாங்க. நீ இயல் கிட்ட மொதல்ல மனசு விட்டு பேச சொல்லு. மத்தது தன்னால நடக்கும்”  பொறுப்பாக ஆகாஷ் பேசியதும் அது வந்தனாவிற்கு சரியாகவே பட்டது.

இயல் தன் அறைக்குச் சென்றவள் வெளியே வரவே இல்லை. கதவைத் தட்டி விட்டு வந்தனா உள்ளே செல்ல, இயல் ஒரு மூலையில் அமர்ந்து சுவரை வெறித்துக் கொண்டிருந்தாள்.

அவள் அழுது அலுத்திருப்பது நன்றாகவே தெரிந்தது. வந்தனா சென்று அவள் அருகில் அமர ,

“ எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கணும் வந்தனா..? நான் அவர் மேல ஆசப் பட்டது உண்மை தான். இப்பயும் அவர எனக்கு ரொம்ப பிடிக்குது. ஏன் எதுக்கு ங்கற காரணம் எல்லாம் தெரியாது. வயசுக் கோளாறு அப்டீனும் சொல்ல முடியாது. ஏன்னா என் பின்னாடி சுத்துன நிறைய பேர பாத்திருக்கேன். எல்லாரும் நல்லா தான் இருப்பாங்க. ஆனா யார் மேலயும் இப்படி ஒரு ஒட்டுதல், அவங்க மேல அக்கறை பட்டு அவங்களுக்காக வருத்தப் படறது எதுவும் எனக்குள்ள வந்ததில்ல. எல்லாம் இவர்கிட்ட மட்டும் தான். அவரு தண்ணீருக்குள்ள போனப்ப எனக்கு உசுரே போய்ட்ட மாதிரி இருந்துச்சு.

திரும்பி வந்த போது அவர் கண் திறக்கற வரைக்கும் என்னால பொறுக்க முடியல. என் உயிரையாவது எடுத்துக்கோ ஆண்டவான்னு மனசுக்குள்ள வேண்டிகிட்டு தான் இருந்தேன்.

ஆனா, அவருக்கு என் மேல காதல் வருமான்னு யோசிச்சப்ப தான் வலிச்சுது!

இப்போ நடந்த விஷயத்தை நான் எப்படி எடுத்துக்கறது?” கேவலுடன் வாரத்தைகள் வெளிவந்தது இயலுக்கு.

வந்தனா அவள் பேசி முடிக்கட்டும் என்று அமைதி காத்தாள்.

எச்சிலை விழுங்கி அழுகையை அடக்கியவள் மீண்டு பேசினாள்.

“என் காதலை மட்டும் வெச்சிகிட்டு அவரோட மனைவி ஆயிட்டதுக்கு சந்தோஷப் படறதா..இல்ல காதலே இல்லமா அவரோட வேலை நடக்க என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாருன்னு வருத்தப் படறதா?

அந்தப் பெரியவர் சொன்ன பிறகு சுயநினைவே இல்லாம என் கழுத்துல தாலி கட்டி இருக்காரு வந்தனா… அதுக்கு அப்புறம் தான் நினைவு வந்து தான் என்ன காரியம் பண்ணிட்டோம்னு தலைல அடிச்சுகிட்டாரு.

நான் இப்போ என்ன செய்யறது… இதுக்கு மேல என் நிலைமை என்ன…

இப்போ  அவர் என்னை ஏத்துக்கிட்டாலும் அது காதலால இருக்காது. கட்டாயத்தால தான் இருக்கும்.

இப்படி ஒரு வாழ்க்கைய சத்தியமா நான் எதிர்ப்பார்க்கல. அவர நினச்சுட்டே கல்யாணம் பண்ணிக்காம எத்தனை நாள் வேணா வாழ்துடுவேன், ஆனா இது கொடுமை.”

வந்தனாவின் மடியில் படுத்து மீண்டும் அழுதாள்.

அவளின் அழுகை தாங்காமல் , வந்தனா ஆறுதல் படுத்தவும் முடியாமல் தவித்தாள்.

இருந்தாலும் அவளுக்குத் தெரிந்த வரையில் அவளைத் தேற்ற நினைத்து,

“இங்க பாரு இயல். அழாத…” அவளை எழுப்பி கண்ணைத் துடைத்து விட்டாள்.

“ ஹெட்க்கு உன்னை நிச்சயம் பிடிக்கும். பிடிக்காம அவர் கண்டிப்பா தாலி கட்டியிருக்க மாட்டாரு.”

அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று இயல் பார்க்க,

“ அவர் எத்தனையோ சோதனையக் கடந்து இந்த ஆராய்ச்சில இறங்கி இருக்காரு. கண்டிப்பா யோசிக்காம எதையும் செய்யற டைப் அவர் இல்ல. வீணா மனச போட்டுக் குழப்பிக் காத . அவரே உன்ன பிடிச்சித் தான் தாலி கட்டுனேன்னு கூடிய சீக்கிரம் சொல்லத் தான் போறாரு. நீ பாத்துட்டே இரு!”

அவளது தாடையைப் பிடித்து வந்தனா லேசான புன்னகையுடன் கூற,

வாகீயைப் பற்றி அறிந்தவளான அவளுக்கும் , அவன் யோசிக்காமல் செய்திருக்க மாட்டான் தான் என்ற நம்பிக்கை வந்தது.

“ இது நடக்குதோ இல்லையோ.. ஆனா உன்னோட வார்த்தைகள் எனக்கு கொஞ்சம் தெம்பா இருக்கு வந்தனா. தேங்க்ஸ்” என கரம் பற்ற,

“ ஹே! உங்க அப்பா கிட்ட இதைப் பத்தி சொல்லிட்டியா?” சற்று பதட்டமாகவே கேட்க,

“இல்ல வந்தனா.. எனக்கே ஒரு தெளிவில்ல, இதுல அவர் கிட்ட எப்படி இதை சொல்ல முடியும். அவரால தாங்கிக்க முடியாது.” சொல்லும் போதே கண்களில் மீண்டும் நீர் கோர்த்தது.

“ சரி சரி, சமாளிக்கலாம் அழாத” அவளைத் தோளில் சாய்த்துக் கொண்டு தேர்த்றினாள் வந்தனா.

வாகீசன் அந்த இடத்தை விட்டு வராமல் தன் காரின் பேனட் மேலேயே சாய்ந்து கொண்டு நின்றிருந்தான்.

‘அவசரப் பட்டுட்டியே வாகீ… ஒரு பொண்ணோட மனச புரிஞ்சிக்காம, அவளோட விருப்பம் இல்லாம தாலி கட்டறது எவ்வளவு பெரிய தப்பு.’ – ஒரு மனம்.

‘ இல்ல, அவளுக்கும் என்னைப் பிடிக்கும். நான் அவள ரொம்ப நேசிக்கறேன். அதுனால தான் என்னால தாலி கட்ட முடிஞ்சுது.’ – இன்னொரு மனம்.

இரண்டும் இப்படி கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டு வாகீயைக் குழப்பியது.

இதற்கெல்லாம் காரணம் அந்தப் பெரியவர் தான்.

எங்க போய் தொலஞ்சாரு.. இப்படி ஒரு இக்கட்டுல என்னை சிக்க வெச்சு, எல்லாம் புரியும்னு சொல்லிட்டுப் போயிட்டாரு ..

தாலி கட்டறதுக்கு முன்னாடி வரைக்கும் கூட நல்லா தான் இருந்தேன். இப்போ தன் ஒன்னும் புரிய மாட்டேங்குது.

தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

“ எங்க போயிட்டீங்க பெரியவரே! என் வாழ்க்கைல புதுசா கலகம் பண்ணிட்டீங்க. எனக்கு நீங்க பதில் சொல்லித் தான் ஆகணும்” ஏற்கனவே இந்த ஆராய்ச்சி ஒரு புறம் அவனை படுத்திக் கொண்டிருக்க, இவர் வேறு புது பிரச்சனையை கிளப்பியது பொறுக்காமல் அந்த இரவில், ஆளில்லாத அந்த நடு ரோட்டில் நின்று கத்திக் கொண்டிருந்தான்.

அப்போது சிரித்துக் கொண்டே அவன் ஜீப்பின் பின் புறத்திலிருந்து வந்தார் அந்தப் பெரியவர். அத்தனைப் பிரச்சனைக்கும் காரணமானர்,

அவன் கடுங்கோபத்தில் இருக்க, அவரின் சிரித்த முகம் இவனுக்கு எரிச்சலைக் கிளப்பியது.

“ என்ன வாகீஸ்வரா, இங்கயே நிக்கற… உன் பொண்டாட்டி கூட இருப்பன்னு நெனச்சேன்” அவரின் இந்தப் பேச்சு எரியும் அவன் மனதில் நெய் வார்த்தது.

“ நான் உங்க கிட்ட என்னென்னவோ கேட்கணும்னு வந்தேன். ஆனா, நீங்க என் மூளைய உங்க வசப் படுத்தி இப்படி ஒரு காரியம் செய்ய வெச்சுட்டீங்க. அந்தப் பொண்ணு மனசு என்ன பாடுபடும்!” அவரின் முகத்தை அருவருப்பாகப் பார்த்தான்.

“உன் கோபம் நியாமே இல்ல. உங்க ரெண்டு பேருக்கும் நான் நல்லது தான் பண்ணிருக்கேன். அதுக்கு நீ எனக்கு நன்றி தான் சொல்லணும். உன் மனசுலயும் அவ இருக்கா, அவ மனசுலயும் நீ தான் இருக்க… அது உனக்குத் தெரியுமா!” சிரித்தபடியே பெரியவர் அவனிடம் சொல்ல,

ஒரு நொடி அவன் மனதில் ஆயிரம் பறவைகள் பறந்தது. ‘அவ மனசுல நான் இருக்கேனா’

“ என்ன ..!” உண்மை தானா என்பது போல அவரைப் பார்க்க, அவனது கோபம் இப்போது காணாமல் போனது.

இப்போதே இயலைக் காண வேண்டும் போல் இருந்தது. அவளுக்கும் என்னைப் பிடித்திருக்கிறதா என்று அவள் வாயாலே தெரிந்து கொள்ள வேண்டும். தான் இவ்வாறு நடந்து கொண்டதற்கு முதலில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று மனம் அவளிடம் பறந்து சென்றது.

அதைப் புரிந்து கொண்ட பெரியவர், “நிஜமா தான். சரி. அது உங்க விஷயம், நீங்களே பார்த்துக்கோங்க. என்னை கோபமா கூப்பிட்ட, நான் அதற்கு பதில் சொல்லிட்டேன். நான் கிளம்பறேன்” என விடை பெற்றார்.

அவரின் அசைவு அவனை நடப்பிற்குக் கொண்டு வர,

“ஐயா, ஒரு நிமிஷம்” அவரை நிறுத்தினான்.

“ இன்னும் என்ன !” திரும்பாமலே கேட்க,

“நீங்க யாரு. எப்படி உங்களுக்கு இதெல்லாம் தெரியும். உங்களுக்கும் இந்தக் கோயிலுக்கும் என்ன சம்மந்தம். எனக்கு வந்த கனவு உண்மையா. இதைத் தான் நான் கேட்க வந்தேன். ஆனா நடந்தது வேற.. இப்போ சொல்லுங்க! நான் அத்தனை சீக்கிரம் யாரையும் நம்ப மாட்டேன். ஆனா உங்க மேல தானா நம்பிக்கை வந்து தான் நான் திரும்பி இங்க வந்தேன். இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்? நீங்க சித்தரா?”

அவனது கேள்விக் கணைகள் பெரியவரை நோக்கிப் பாய்ந்து கொண்டே இருந்தது.

“ எல்லாத்தையும் நான் சொல்லி நீ தெரிஞ்சுக்கக் கூடாது. உனக்கே புரியும் காலம் வந்துடுச்சு. நேரா உன் மனைவி கிட்ட போ, அவ கையால அந்த அஞ்சு கல்லையும் எடுத்து வர சொல்லு, நீ அந்த நீருக்குள்ள இறங்கி அந்தக் கல்லை வாங்கிகிட்டு அந்த இடத்துல போய் அதை சேர்த்துடு. அதுக்கப்றம் உனக்கே எல்லாம் தெரியவரும். நான் உன்னை அப்பறம் சந்திக்கறேன்.”  அவசரமாக அனைத்தையும் கூறிவிட்டுக் கிளம்பினார்.

‘இவர பாத்ததுலேந்து குழப்பம் அதிகமாகுதே தவிர குறைஞ்ச பாடில்ல. ஆனா இவர் சொல்றத கேட்கணும்னு மட்டும் ஏன் தோணுது’ யோசித்தபடியே வீடு வந்து சேர்ந்தான்.

வாகீசன் இயல் எங்கே என்று தேட, ஹாலிலேயே அமர்ந்திருந்த ஆகாஷ்,

“அவ ரூம்ல தான் இருக்கா ஹெட். நீங்க போய் பேசுங்க” என அவனைப் புரிந்து கொண்டு சொன்னான்.

கண்களால் நன்றி சொல்லிவிட்டு அவள் அறையைத் தேடிச் சென்றான் வாகீசன். அங்கே வந்தனாவின் மடியில் சாய்ந்தபடி இயல் படுத்திருக்க,

அவனைக் கண்டதும் வந்தனா இயலை எழுப்பிவிட்டு அங்கிருந்து வெளியேறினாள்.

கதவை லேசாக மூடிவிட்டு அவளிடம் வந்தான் வாகீசன்.

எப்போதும் புதிதாகப் பூத்த பூ போல இருப்பவள், சில மணி நேரத்திலேயே வாடிய பூவைப் போல் காட்சியளித்தாள். அவன் கட்டிய தாலி கழுத்தில் இருக்க தானாகவே ஒரு உரிமை வந்தது. அவனது செயல் அவளுக்கு எவ்வளவு மன வேதனை அளித்திருக்கும் என்பதை அவன் உணராமல் இல்லை. இருந்தாலும் அவளைத் தேற்ற ,

“ என்னை மன்னிச்சிடு இயல். நான் அப்படி நடந்திருக்கக் கூடாது. என்னோட வேலை நடக்கணும்னு சுயநலத்தால மட்டும் நான் அப்படி செய்யல, எனக்குள்ள ஏதோ ஒன்னு … எப்படி சொல்றது, உன்னை என்கிட்ட இருந்து யாரும் எடுத்துப்பாங்களோன்னு ஒரு பயம். அது உனக்கு இப்போ சொன்னா புரியாது.

நான் அந்தத் தண்ணீருக்குள்ள போன பிறகு எனக்கு ஏற்பட்ட அனுபவம் அப்படி யோசிக்க வெச்சிடுச்சு” அவன் சொல்லிக் கொண்டே போக, இயலுக்கு ஒன்று புரியவில்லை.

‘எதுக்கு பயப்படனும். யார் எடுத்துக்கப் போறாங்க… என்ன நடந்துச்சு நீருக்குள்ள, அதுனால தான் எனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்காங்களான்னு கேட்டாரா…’ அவன் முகத்தையே பார்த்தபடி இருந்தாள்.

“ உனக்கு இப்போ சொன்னாலும் எதுவும் புரியாது. சீக்கிரமே எல்லாத்தையும் சொல்லி புரிய வைக்கறேன். ஆனா, உன் சம்மதம் இல்லாம உன் கழுத்துல தாலி கட்டுனது தப்பு. அது எனக்கு நல்லாவே தெறியும்.

என்னால இப்போதிக்கு ஒன்னு தான் சொல்ல முடியும். எனக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு. இன்னிக்கு உனக்கு நான் தாலி கட்டலனாலும், என்னிக்காவது ஒரு நாள் உன் சம்மதத்தோட அதை நான் நிச்சயம் செஞ்சிருப்பேன் . அது எனக்கே இப்போ தான் புரியுது .

எஸ்… ஐ ஸ்டார்டெட் டு ஃபால்  ஃபார் யூ… (I started to fall for you). உன்கூட இருக்கறப்ப என்னால மத்தவங்க கிட்ட இருக்கற மாதிரி strictஆ இருக்க முடியல. அன்னிக்கு ஆகாஷ் உன் கைய பிடிச்சப்ப அவ்ளோ கோபம் வந்துச்சு. அவனுக்கு நீ கண்ணுல தூசி எடுத்தப்பவும் அப்படித் தான் இருந்துச்சு.

இதுக்கெல்லாம் உன் மேல எனக்கு இருந்த பீலிங்க்ஸ் தான் காரணம். அதை நிறைய முறை நான் கண்ட்ரோல் பண்ண நினைச்சிருக்கேன்.  என்னையும் அறியாம அது இன்னிக்கு வெளில வந்துடுச்சு.” விரக்திப் புன்னகை ஒன்றை சிந்தி,

இது உனக்கு சமாதானமமா நான் சொல்லல, என் மனசுல நீ இருக்க, அது தான் உண்மை. அதை நீ புரிஞ்சுக்கணும்.

யோசிச்சு ஒரு பதில் சொல்லு.

உனக்கு எவ்வளவு நாள் , ஏன் மாசக்கணக்கு இல்ல வருஷக் கணக்கு கூட ஆகட்டும், என்னை புரிஞ்சிக்க டைம் எடுத்துக்கோ. அதுவரைக்கும் உன்னை நான் எந்த வகையிலும் தொல்லை செய்யமாட்டேன். எனக்கு என்ன தண்டனை குடுத்தாலும் நான் ஏத்துக்கறேன்.

உடனே உன்னை கன்வின்ஸ் பண்ண நான் இதெல்லாம் சொல்லல, ஆனா இதுல ஆரப் போட்டு சொல்ல எதுவுமே இல்ல. அதுனால தான் உன்கிட்ட தெளிவா சொல்லிட்டேன்.

அவன் பேசியது அவளுக்கு ஒரு கூடப் பூவைத் தலையில் கொட்டியது போலக் குளிர்ந்துகொண்டிருந்தது.

‘அவர் என்னை நேசிக்கறாரா! இத்தனை சீக்கிரம் அதை அவர் வாயால சொல்லவும் செஞ்சுட்டாரே !நாமளும் அவரை விரும்பறதா சொல்லிடலாம் ’ என ஆசையாகத் தன் காதலைச் சொல்ல வாய் திறப்பதற்கு முன் ,

வாகீசனும், அவளின் முகத்தைக் கண்டு அவள் மனத்தைக் கண்டுபிடித்து விட்டான்.

ஆனாலும் , அந்தப் பெரியவர் சொன்னது போல அவளுக்கும் என்னைப் பிடிச்சிருந்தா இப்போவே சொல்லிருப்பாளே, ஆனா வாயத் திறக்க மாட்டேங்கறாளே, இவள எப்படியாவது சொல்ல வைக்கணும்’

அவள் யோசித்த இரண்டு நிமிடம் கூட அவனுக்கு அதிகமாய்ப் பட, அவசரப்பட்டு வாய் விட்டான்.

 

“நான் உன் கழுத்துல கட்டறப்ப  தாலின்னு அதுக்கு மதிப்புக் குடுத்துத் தான் கட்டினேன். ஆனா உன் சம்மதம் இல்லாம நடந்தது. அதுனால அதை கழிட்டி எறியவும் உனக்கு நான் பெர்மிஷன் தரேன். என்னைப் பிடிக்கலானா நீ எப்போ வேணா அதை சொல்லிடலாம். பிடிக்காத அந்தத் தாலிய கழட்டிடலாம்.” அவளுக்குள் இருக்கும் ஈகோவைத் தெரியாமல் தீண்டிக் கொண்டிருந்தான்.

அவன் கடைசியாகச் சொன்னது அவளுக்கு முகத்தில் தீ அள்ளிக் கொட்டியது போல ஆனது.

அவன் பேசப் பேச அப்போதே தன் காதலையும் சொல்ல நினைத்தவள், இப்போது அந்த உணர்வு வற்றிப் போக,

‘என்னைப் பத்தி இன்னும் சரியா புரிஞ்சுக்கல. என்னை பாத்தா கழட்டி எறிஞ்சுட்டு போறவ மாதிரி இருக்கா’ என்று பொருமல் வந்தது.

ஆகவே இப்போது ஒத்துக்கொள்ளக் கூடாது , கொஞ்ச நாள் போகட்டும், தன்னை அவன் முழுதாகப் புரிந்து கொண்ட பிறகு சொல்லலாம் என்று இருந்துவிட்டாள். அவனது வார்த்தையில் வெகுண்டவள்,

“ எனக்குப் பெர்மிஷன் நீங்க தர வேண்டாம். வேலைல மட்டும் தான் உங்க பெர்மிஷன் நான் எதிர்பார்க்கனும், இது வாழ்க்கை. எனக்கும் என்ன செய்யணும்னு தெரியும். எனக்கு டைம் கண்டிப்பா வேணும்!” தன்னைக் காயப் படுத்தியவனை காயப்படுத்த வேண்டுமென்றே இவ்வாறு பேசினாள்.

 

அவளது பேச்சு அவன் கோபத்தையும் ஈகோ வையும் உரச,

‘என்ன திமிர் பாரு! போனா போகுது சின்ன பொண்ணு ஃபீல் பண்ணக் கூடாதுன்னு நானே வந்து பிடிச்சிருக்குன்னு சொன்ன பிறகு கூட என்ன தில்லா நிக்கறா.  உனக்கு என்னைப் பிடிச்சிருக்குன்னு எனக்கு ஏற்கனவே தெரியும் டி. அதை உடனே ஒத்துக்கிட்டா உனக்கு கவுரவம் போய்டும். அன்னிக்கு ஹெல்பர்ன்னு சொன்னதுக்கே ரோஷம் வந்து பேசாம இருந்தவ தான நீ! உன்ன சொல்ல வைக்கறேன் டி. !’ மனதில் அவளுக்கே தெரியாமல் சவால் விட்டான்.

உடனே பேச்சை மாற்றி,

“சரி! இப்போ என்ன பண்ணலாம்? என் வீட்ல நான் எதுவும் இப்போ சொல்ல முடியாது. நீ ஒரு வேளை என்னை பிடிக்கலன்னு சொல்லிட்டா, அவங்களுக்கு தேவை இல்லமா சங்கடம் தான். நீயும் தாலிய கழட்டி குடுத்துட்டு போய்டலாம். யாருக்கும் எதுவும் தெறியாது.

நீ எப்படி? உங்க அப்பா கிட்ட சொல்லப் போறியா?” வேண்டுமென்றே அவளை சீண்டினான்.

“ நிச்சயமா இல்ல, நீங்க சொன்ன மாதிரி கழட்டி குடுத்துட்டு போறதுனா , அவர் சம்மதிக்க மாட்டார். தாலியோட மதிப்பு தெரிஞ்சவங்க. அதுனால அவர் கிட்ட நான் சொல்ல மாட்டேன்”

இருவரும் சிலிர்த்துக் கொண்டு நின்றனர்.

“ஊ…..ஃப்” பெருமூச்சை விட்டு அவள் சீண்டலை உணர்ந்தவன், உள்ளே தனக்கு சரி சமமாய் அவள் நிற்பதை ரசிக்கவே செய்தான்.

“ஓகே! இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். நான் மறுபடியும் அந்தப் பெரியவர பார்த்தேன். நீ தான் என்கிட்ட இருக்கற அந்த அஞ்சு கல்லையும் கொண்டு வந்து குடுக்கணுமாம். அதாவது என்னோட பொண்டாட்டி தரனும்.” அதில் சற்று அழுத்தம் கொடுத்து, அதை நான் அந்த தண்ணீருக்குள்ள வைக்கணும்னு சொன்னாரு.

நீ தாலிய கழட்றதுக்கு முன்னாடி இத செஞ்சுட்டா பெட்டெர்ன்னு நினைக்கறேன்.” அவளை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே சொல்ல,

அவள் முறைத்துக் கொண்டிருந்தாள்.

இத்தனை நேரம் அவனுக்காக அழுததென்ன, இப்போது அவன் முன்னே சண்டைக்கு நிற்பதென்ன!

இதெல்லாம் காதல் என்று உணர்ந்தும் அவளுக்கு அவனைச் சீண்டும் எண்ணமே முன்னே நின்றது.

“இந்த நேரத்துல கூட உங்க வேலை நடந்தா போதும்னு நினைக்கறீங்க” அவன் மீதே பழி போட,

அவள் அருகில் நெருங்கி வந்தான். கழுத்தில் அவன் கட்டிய தாலி கழுத்தில் தொங்க நின்றிருந்தாள். அதைக் கண்டதும் அவள் இப்போது தனது மனைவி என்ற நினைப்பு மிதமிஞ்சி பொங்கியது.

அவன் அருகில் வர வர பின்னே நகர்ந்தவள், சுவரோடு ஒட்டிக் கொள்ள, வாகீ அவளை நெருங்கி நின்று, அந்தத் தாலியை எடுத்துக் காட்டி,

“வேற என்ன பண்றது, நீ உன் லைஃப் பத்தி யோசிக்க மட்டும் தான்  டைம் கேட்ட, வேலைக்கு இல்ல.  நான் என்னோட விருப்பத்தை சொல்லிட்டேன். அதுனால நிம்மதியா வேலை பார்க்கப் போறேன். சோ நீ பதில் சொல்ல டைம் எடுத்துக்கோ ,பட் வேலை நடக்கணும்.” தாலியை மீண்டும் விட்டு விட,

இப்போது இரண்டு கையையும் அவளுக்கு அரண் போல சுவரில் வைத்து நின்றவன்,

“என் ரூம்க்கு வந்து அந்த கல்ல எடுத்துக்கோ! இப்போ நான் மறுபடியும் அந்தக் கோவிலுக்குப் போகணும். அங்க வந்து கல்லைக் குடுத்துட்டு, நீ வீட்டுக்கு வந்து யோசி.” என்றான்.

அவன் நெருங்கியதில் அவன் மூச்சுக் காற்று மேல பட்டுத் தவித்தவள், அவன் மீண்டு இப்போது நீருக்குள் இறங்கப் போவதை நினைத்து பயந்தாள்.

அவள் அவனை நிமிர்ந்து பார்க்க, அவனோ சட்டென விலகித் தன் அறைக்குச் சென்றான்.

அவனோடு பின்னே சென்றவள், அவனது அறையில் இருந்த அந்த ஐந்து கற்களையும் எடுத்துக் கொண்டாள்.

வாகீ, ஆகாஷையும் வந்தனாவையும் கிளம்பச் சொல்ல,

மறுபேச்சின்றி கிளம்பினர். வாகீசன் தெளிவைக் கண்டு ஆகாஷுக்குப் புரிந்தது, அவன் இயலை எப்படியும் சமாளித்திருப்பான் என்று.

இயலும் வேறு வழி இன்றி அவன் வண்டியில் ஏறிக்கொள்ள,

“முன்னாடி உட்கார்ரியா  இயல்” ஆகாஷ் இயலை வேண்டுமென்றே கேட்க, வாகீ உதட்டை மடக்கிச் சிரித்தான்.

அதைக் கண்டவள் பல்லைக் கடித்து,

‘அவன் கூட்டாளி தான நீ, பின்ன எப்படி பேசுவ’ மனதில் ஆகாஷை  திட்டியவள்,

“நோ தேங்க்ஸ்” எனப் பின்னால் ஏறினாள்.

கோவிலை அடைந்ததும் வாகீ ஆகாஷிடம் சிலவற்றைக் கூறினான்.

அதற்கு பயந்த ஆகாஷ்,

“ ஹெட், நீங்க கவலைப் படாதீங்க, நான் பாத்துகறேன்” என தைரியம் சொல்ல,

இப்போது நீருக்குள் இறங்கி நின்றான் வாகீ. அந்தப் பெரியவர் சொன்னது போல, இயலிடமிருந்து அந்தக் கற்களைப் பெற்றுக் கொண்டான்.

என்ன தான் கோபம் போல நடித்தாலும், இப்போது மீண்டும் அவன் நீருக்குள் செல்வதால் அவளுக்கும் சற்று பயமாகவே இருந்தது.

கடவுளை வேண்டிக் கொண்டு அவன் நீருக்குள் செல்வதைப் பார்த்தாள்.

அந்தக் கற்களை ஒரு சிறு பையில் போட்டு அதை தனது உடைக்குள் வைத்துக் கொண்டான். டைட்டாக இருக்கும் அந்த ஸ்விம் சூட் கற்கள் தொலையாமல் இருக்க உதவும் என்பதால்.

நீந்தி நீந்தி அலுத்தவன், கடைசியாக அந்த இடத்தைக் கண்டு கொண்டான்.

இப்போது கற்களை வெளியே எடுத்தான். ஏற்கனவே தான் தொட்ட அந்த முதல் துவாரத்த்தில் இப்போது ஒரு கல்லைப் பதித்தான்.  ஷாக் அடிக்கும் என எதிர்ப்பார்த்து அது நடக்காமல் போனது.

அதே போல அடுத்தடுத்த கல்லை வைக்க எல்லாம் அந்தத் துவாரத்தில் கச்சிதமாகப் பொருந்தியது.

ஐந்தும் வைத்த பின் எதுவும் நடக்காமல் இருக்க, வாகீக்கு ஏமாற்றமாக இருந்தது.

சட்டென பின்னால் திரும்ப, அங்கே ஒரு கதவு போன்ற மாயை உருவானது.

இப்போது புரிந்தது. இந்தக் கற்கள் தான் அந்த சாவி. அதை பொருத்தியதும், கதவு தென்பட, நீந்திக் கொண்டே அந்தக் கதவைத் திறந்தான்.

வீடு போலத் தெரிந்தது. பழைய காலத்து வீடு. அந்தக் காலத்து பொருட்கள்.

உள்ளே ஒருவன் பைஜாமா ஜிப்பா போட்டு நின்றிருந்தான். அவனைத் தொட்டுத் திருப்ப, அதிர்ச்சியடைந்தான் வாகீசன்.

அங்கிருந்தது அவனே தான்.

தன்னையே கண்டான். ‘நானா..!’ அதிர்ந்தவன், அருகில் பார்க்க, பாகிரதி !

பாகிரதியை அவளது இடையோடு சேர்த்தணைத்து நின்றான் அவளது கணவன்.

இவனைக் கண்டு சிரிக்க, வாகீசன் தலை சுற்றிப் போய் நின்றான்.

‘அப்போ பாகிரதியின் கணவன் நானா!’

“உங்க பேர் என்ன?” அவன் பேசியது அவனுக்கே எங்கோ பாதாளத்தில் கேட்க,

“ நான் இந்திரவர்மன். நீயும் நானே !” அழகாகச் சிரித்தான்.

வாகீசனின் கையைப் பிடிக்க, அவனுக்கு தலை சுற்றி எங்கோ செல்வது போல இருந்தது.

திருவாசகம்:

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90

பொருள்:
போற்றுதல்கள் செய்து, புகழ் கூறித் தம்முடைய பொய்கள் ஒழிய உண்மையே ஆன அடியவர்கள்
மீண்டும் இவ்வுலகுக்கு வந்து வினை நிறைந்த பிறவியில் சிக்குறாது
மாயையால் ஆன இவ்வுடலின் கட்டுமானத்தை அழிக்க வல்லானே !
வேறு எதுவுமற்றதாகிய இருளில் கூத்து ஆடுகின்ற நாதனே !
தில்லை என்னும் சிதம்பரத்தில் ஆடுபவனே ! தென்பாண்டி நாட்டை உடையவனே !