mm18

mm18

மயங்காதே மனமே 18

பொங்கிச் சிரித்த மனைவியைப் பார்த்த படியே இருந்தான் அபிமன்யு. கவலைகள் அத்தனையையும் தூக்கித் தூரப் போட்டு விட்டு, அவன் உயிர் பிழைத்தது ஒன்று மட்டுமே போதும் என்பது போல அமர்ந்திருந்தாள் கீதாஞ்சலி.

இடது கையை அசைக்க முடியாது என்பதால், வலது கையால் அவன் முகத்தை வருடிய படியே இருந்தாள். நான்கு நாட்களாக இருந்த இறுக்கம் வடிய, அவள் வாய் ஓயாமல் பேசியபடியே இருந்தது

அபிக்கு லேசாக எல்லாம் ஞாபகத்திற்கு வந்தது. வாகன நெரிசல் அதிகமாக இல்லாததால் தான் அத்தனை கவலையீனமாக காரை ஓட்டிக் கொண்டிருந்தான்

கடைசியாக கீதாஞ்சலியை முத்தமிட்டது நினைவிருந்தது. அதன் பிறகு என்ன நடந்தது என்று அவனுக்குத் தெரியாது. தான் எங்கோ பலமாக மோதியது மட்டுமே தெரியும். அந்த நிமிடத்திலும் கீதாஞ்சலிக்கு எதுவும் ஆகிவிடக் கூடாதே என்று அவன் மனது பதறியது துல்லியமாக நினைவிருந்தது.

அருகில் அமர்ந்து ஓயாமல் பேசிய படியே இருந்த மனைவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் அபிமன்யு. தாடை எலும்பு முறிந்திருந்ததால் அவனால் எதுவும் பேச முடியவில்லை. அப்போதுதான் உள்ளே நுழைந்த ஈஷ்வரன் அபியைப் பர்த்துப் புன்னகைத்தார்.

அபி, இப்போ எப்பிடி இருக்கு? எங்கேயாவது பெயின் இருக்கா?” கேட்ட ஈஷ்வரனை அமைதியாகப் பார்த்திருந்தான் அபி. வாய் திறந்து பதில் சொல்ல முடியாத வலி அவன் கண்களில் தெரிந்தது.

அபி, இப்போதான் நீங்க ரொம்ப தைரியமா இருக்கனும். இன்னும் கொஞ்ச நாளைக்குத் தான் பேசமுடியாம இருக்கும். மிஞ்சி மிஞ்சிப் போனா ஒரு மூனு மாசம், அதுக்கு முன்னாடியும் குணமாக சான்ஸ் இருக்கு.” பேச்சை நிறுத்திவிட்டு அபியை ஆழ்ந்து பார்த்தார் ஈஷ்வரன். அவன் கண்கள் ஆமோதிப்பது போல ஒரு முறை மூடித் திறந்தது.

குட். கைக்கு ஃபிசியோதெரபி பண்ணலாம் அபி. வலது கைல எந்த ப்ராப்ளமும் இல்லை. ஒரு ரெண்டு, மூனு நாள்லயே கை பழையபடி ஆகிரும். அதுக்கப்புறம் நீங்க பேச நினைக்குறதை எல்லாம் எழுதிக் காட்டலாம்.” டாக்டர் சொல்வதை கவனமாகக் கேட்டபடியே இருந்தாள் கீதாஞ்சலி.

கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும் அபி. ஆனா அதுவே ஒரு சில நாள்ல பழகிடும். இது ஒன்னும் வாழ்க்கை பூரா இருக்கப் போறதில்லையே. ஒரு தற்காலிக பிரச்சினை தானே. மனசை தளர விட்டுராதீங்க அபி. நீங்க ஃபிட்டா இருந்தா எல்லாம் கூடிய சீக்கிரமே சரியாகிடும்.” புன்னகையோடே சொன்ன ஈஷ்வரன் அபியின் தோளில் லேசாகத் தட்டிக் கொடுத்தார். அபியின் கண்களில் லேசான ஒரு அயர்வு தெரிந்தது

கீதாம்மா, அபி ரெஸ்ட் எடுக்கட்டும். அவருக்கு டயர்டா இருக்கும்.” சொல்லியபடியே வெளியே போனார் ஈஷ்வரன். கணவனின் வலது கையை, தனது வலது கையால் மென்மையாகப் பிடித்தாள் கீதாஞ்சலி

நீங்க தூங்குங்க அபி. நான் உங்க பக்கத்திலேயே இருக்கேன். நீங்க எதைப் பத்தியும் கவலைப் படாம அமைதியா இருங்க. எல்லாம் கூடிய சீக்கிரமே சரியாகிடும்.” கனிவோடும், காதலோடும் சொன்னாள் பெண். அவள் பேச்சில் அவன் கண்கள் லேசாகக் கலங்கியது

நீங்க எதுக்கும் கலங்கக் கூடாது அபி. உங்களுக்கு நான் இருக்கேன். எத்தனை கஷ்டம் வந்தாலும் அதை நாம ரெண்டு பேரும் சேந்து தாங்கலாம் அபி. இது ஒரு சின்னப் பிரச்சினை தான். நீங்க பெருசா எதையும் நினைச்சு வருத்தப் படக் கூடாது.” குழந்தைக்குச் சொல்வது போல நிறுத்தி நிதானமாகச் சொன்னவள், அவன் கன்னத்தில் மெதுவாக இதழ் பதித்தாள். அந்த இதமான ஸ்பரிசத்தில் அபியின் கண்கள் சுகமாக மூடியது.

ICU விட்டு வெளியே வந்தாள் கீதாஞ்சலி. ஈஷ்வரன் அவளுக்காகக் காத்திருந்தார். இவளைக் கண்டவுடன் வெற்றி ஓடி வந்தான்

மேடம், எப்பிடி இருக்கீங்க மேடம்? சாருக்கு இப்போ எப்பிடி இருக்கு? நீங்க எதுக்கும் கவலைப் படாதீங்க மேடம். சாருக்கு ஒன்னும் ஆகாது. நாங்கெல்லாம் கும்பிடுற கடவுள் அத்தனை சீக்கிரம் சாருக்கு கெட்டது நடக்க விடாது மேடம். எத்தனை குடும்பங்களை வாழ வெச்சிருக்காங்க. அவங்களுக்கு ஒன்னும் ஆகாது மேடம்.” மூச்சு விடாமல் பேசி முடித்தான் வெற்றி. அவன் அக்கறையில் உள்ளம் குளிர்ந்தது கீதாஞ்சலிக்கு.

ரொம்ப தாங்ஸ் வெற்றி. உங்க எல்லாரோட பிரார்த்தனையும் வீண் போகாது.”

கண்டிப்பா மேடம். ஃபாக்டரிக்கு வந்து பாருங்க. அங்க இருக்கிற அத்தனை பேரும் உங்க ரெண்டு பேருக்காகவும் வேண்டிக்கிட்டே இருக்காங்க.” அந்தப் பாசத்தில் நெகிழ்ந்து போனவள் லேசாகச் செருமிக் கொண்டாள்.

வெற்றி, இன்னொரு முக்கியமான விஷயம்.”

சொல்லுங்க மேடம்?”

சார் இருந்தா ஃபாக்டரி எப்பிடி நடக்குமோ, அதே மாதிரி இப்பவும் ஃபாக்டரி நடக்கனும். எந்தப் பின்னடைவும் இருக்கக் கூடாது.”

கே மேடம்.”

இன்னும் ஒரு வாரத்துல சார் உங்களுக்கு வேண்டிய இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் குடுப்பாங்க. அதுவரைக்கும் இருக்கிற ஆர்டர்ஸை பண்ணுங்க.” 

இப்போ கைல இருக்கிற ஆர்டரே இன்னும் ஒரு மாதத்துக்கு தாங்கும் மேடம்.”

குட். அப்போ எந்தப் பிரச்சினையும் இல்லையில்லை. மானஜர் கிட்ட பேசுங்க. நானும் சார் அப்பாகிட்ட பேசிட்டு உங்களுக்கு கால் பண்ணுறேன்.”

கே மேடம்.” பவ்வியமாக பதில் சொன்ன வெற்றி தன் முதலாளியின் மனைவியை வியப்பாகப் பார்த்தான். வியப்பாகப் பார்த்தது வெற்றி மட்டுமல்ல, ஈஷ்வரனும் தான். நிலமையை வெகு திறமையாகக் கையாளும் அந்தப் பெண்ணின் மேல் ஒரு தனி மரியாதையே உருவானது.

வெற்றி ஒரு புறமும், ஈஷ்வரன் மறுபுறமும் நடந்து வர, கார் பார்க்கிங்கிற்கு வந்திருந்தாள் கீதாஞ்சலி. காலில் இருந்த சின்னச் சின்ன சிராய்ப்புகளால் அத்தனை வேகமாக அவளால் நடக்க முடியவில்லை.

கீதாம்மா.” அந்தக் குரலில் அப்படியே நின்றாள் கீதாஞ்சலி. குரல் வந்த திசையில் திரும்பிப் பார்த்த வெற்றி வேங்கையாகிப் போனான். எதிரே நின்ற கதிரின் ஷேர்ட்டை கொத்தாகப் பிடித்தவன், அவனை உலுக்கி எடுத்தான்

எதுக்குடா இப்போ இங்க வந்திருக்கே? இன்னும் என்ன பண்ணுறதுக்கு வந்திருக்கே?” அவன் ஆவேசத்தில் கதிர் அசரவில்லை. அமைதியாக கீதாஞ்சலியைப் பார்த்தபடியே நின்றான்.

வெற்றி, விடு அந்தப் பையனை. உனக்கு எத்தனை தரம் சொன்னாலும் புரியாதா? எதுக்கு உன் லெவலை விட்டு கீழ இறங்குற?” இருவரையும் பிரித்து விட்டார் ஈஷ்வரன்.

கீதாம்மா, இந்த அண்ணனை நீங்க தப்பா நினைக்குறீங்களாம்மா?” அந்தக் குரலில் கீதாஞ்சலி புன்னகைத்தாள்.

நான் யாரையுமே தப்பா நினைக்கலை அண்ணா.”

கீதாம்மா.”

என் அபிக்கு எதுவும் ஆகலைண்ணா. போய் சொல்லுங்க, யாரு இதைப் பண்ணினாங்களோ அவங்க கிட்ட போய்ச் சொல்லுங்க. என் அபிக்கு ஒன்னுமே ஆகல்லைன்னு போய்ச் சொல்லுங்க.” அமைதியாக, சிரித்த முகத்துடன் சொன்னாள் கீதாஞ்சலி.

ஆனா ஒன்னு மட்டும் உறுதிண்ணா. அபி எழுந்து நின்னு இனி வைக்குற ஒவ்வொரு அடியும், இதைப் பண்ணினவங்களுக்கு வைக்குற மரண அடியாத்தான் இருக்கும்.” அந்தக் குரலில் கதிரின் முகம் கவலையைக் காட்டியது.

அபியே அவங்களை மன்னிச்சாலும், நான் அவங்களை மன்னிக்கிறதா இல்லை. வெற்றி, காரை எடு.” இப்போது ஆவேசமாகக் குரலை உயர்த்திப் பேசியவள், காரிற்குள் ஏறி அமர்ந்து கொண்டாள்.

கதிருக்குப் பக்கத்தில் நின்ற காரை கீதாஞ்சலிக்கு நன்றாக அடையாளம் தெரிந்தது. அது மித்ரனின் கார். டின்டட் க்ளாஸையும் தாண்டி உள்ளே மித்ரன் இருப்பதை அவள் கண்டு கொண்டிருந்தாள்

அத்தனை ஆவேசம் வந்தது. எவ்வளவு மரியாதை வைத்திருந்தாள். அபி அவ்வளவு தூரம் இவனைப் பற்றி சொன்ன போது கூட, மித்ரனுக்காக வாதாடினாளே. எத்தனை சின்னத்தனமாக நடந்திருக்கிறான். நினைக்க மனம் மிகவும் வேதனைப்பட்டது.

அதேநேரம் காரிற்குள் இருந்த மித்ரன் புன்னகைத்தான். அவளின் கோபமும், வெறியும் அவனுக்கு சிரிப்பாக இருந்தது. அவளின் நிமிர்வு அவனுக்கு அவ்வளவு பிடித்திருந்தது.

இந்த நிலையிலும் அபியின் மனைவியாக அவள் பேசியது வருத்தத்தைக் கொடுப்பதற்குப் பதிலாக, அவள் மேல் பெயர் தெரியாத ஒரு ஆர்வத்தையே கொடுத்தது.

சிறுபிள்ளை போல அவள் பேசிச் சென்றது அவனுக்கு அத்தனை சுவாரசியமாக இருந்தது. பெண்தானே… என்று அலட்சியமாக நினைத்த மித்ரனுக்குப் புரியவில்லை, தான் ஒரு பலமான எதிரியை சம்பாதித்துக் கொண்டது.

  • °•°•°•°     •°•°•°•°     •°•°•°•°     •°•°•°•°     •°•°•°•°     •°•°•°•°     •°•°•°•°     

கார் வீட்டிற்கு முன் வந்து நின்றது. வெற்றி கதவைத் திறக்க மெதுவாக இறங்கினாள் கீதாஞ்சலி. ஒட்டுமொத்த குடும்பமும் ஓடி வந்து இவள் வருகையை ஆவலோடு பார்த்திருந்தது.

கீதாஞ்சலியின் குடும்பமும் இங்கே தான் வந்திருந்தார்கள். இன்றைக்கு அவள் வீட்டுக்கு வருகிறாள் என்று தகவல் சொல்லவும், அறிவழகன் அவளை அவர்கள் வீட்டுக்கு அழைத்திருந்தார். ஆனால் பெண் மறுத்துவிட்டாள்.

அவள் இறங்கும் வரை பொறுத்திருந்த சீமா அவள் இறங்கி உள்ளே வரவும், அவளைக் கட்டிக்கொண்டார். ஓவென அழுதபடி அவள் உடல் முழுவதும் தடவிக் கொடுத்தவர், அவளை அப்படியே மீண்டும் கட்டிக் கொண்டார்.

கீதாம்மாஅபி எங்கம்மா? எம்பையன் எங்கம்மா? ரெண்டு பேரும் ஒன்னா போய்ட்டு நீ மட்டும் தனியா வந்திருக்கியேம்மாஎன் அபி எங்கேம்மா?” வாய்விட்டுக் கதறினார் சீமா.

சுற்றி நின்ற அத்தனை பேரின் கண்களும் கலங்கியது. கீதாஞ்சலியின் பக்கத்தில் வந்த ரஞ்சனி, அம்மாவை அவளிடமிருந்து விலக்கி விட்டு உள்ளே அழைத்துச் சென்றாள். மிகவும் சிரமப்பட்டு நடந்து வந்த கீதாஞ்சலி அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து கொண்டாள். சூழ்நிலை மிகவும் கனமாக இருந்தது. யாரும் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தார்கள்.

தாத்தா, பாட்டியை நிமிர்ந்து பார்த்தாள். இந்த நான்கு நாட்களில் ஏதோ நான்கு வயது கூடியது போல இருந்தது அவர்களின் தோற்றம். நாராயணன் ஒட்டுமொத்தமாக உடைந்து போயிருந்தார். சீமாவைப் பற்றிக் கேட்க எதுவும் இருக்கவில்லை. பார்த்தாலே புரிந்தது, அழுதழுதே கரைந்து போயிருக்கிறார் என்று.

கீதா, வாட் ஹாப்பன்ட் டு மாமா?” தருணின் மழலையில் தலை திருப்பினாள் கீதாஞ்சலி. கேள்வியோடு நின்ற சிறுவனைப் பார்த்த போது கண்கள் குளமானது. லேசாகப் புன்னகைத்தவள்,

நத்திங் தருண்…” என்றாள். மேற்கொண்டு பேச வாய் வரவில்லை. கீதாவை விட்டு விட்டு பாட்டியிடம் போனான் தருண். கடந்த சில நாட்களாக வீட்டில் இருக்கும் அசாதாரண சூழ்நிலை அந்தக் குழந்தையை வெகுவாகப் பாதித்திருந்தது. அழுதபடியே இருந்த பாட்டியின் அருகில் போனவன் அவர் கண்களைத் துடைத்து விட்டான்

பாட்டி, டோன்ட் க்ரை…” சொல்லிய குழந்தையைக் கட்டியணைத்த படி மீண்டும் அழ ஆரம்பித்தார் சீமா. தருணின் உதடுகளும் பிதுங்கியது. ஈஷ்வரன் வந்து மகனை வாங்கிக் கொண்டு தோட்டத்திற்குள் போய் விட்டார்

ஐயோ அபி…” கதறியழுத சீமாவின் குரலில் கண்களை அழுந்த மூடினாள் கீதாஞ்சலி. அந்தக் குரல் அவளை நிலை குலையச் செய்தது

அத்தை! போதும்நிறுத்துறீங்களா…!” அத்தனை சத்தமாக கீதாஞ்சலி பேசி அந்த வீட்டில் இதுவரை யாரும் கேட்டதில்லை. குண்டூசி விழுந்தால் கூட கேட்குமளவிற்கு நிசப்தம் அந்த இடத்தில் குடிகொண்டது.

எதுக்கு இப்போ ஒப்பாரி வைக்குறீங்க?” காட்டமாகக் கேட்டாள் மருமகள்

கீதாம்மாஅபி…” மீண்டும் அழ ஆரம்பித்தார் சீமா.

ஆமாஅபிக்கு என்ன? நல்லாத்தானே இருக்காங்க, நீங்க எதுக்கு இப்போ இப்பிடிக் கிடந்து அழுது புலம்புறீங்க.” அந்தக் குரலில் அங்கிருந்த அத்தனை பேரும் ஆச்சரியமாக கீதாஞ்சலியைப் பார்த்தார்கள்

அத்தைநான் சொல்லுறதை நல்லாக் கேட்டுக்கோங்க. என் அபிக்கு ஒன்னும் ஆகல்லை, ஆகவும் நான் விடமாட்டேன். டாக்டர் அண்ணா அடிச்சு சொல்லிட்டாங்க, அபி உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லைன்னு. எனக்கு அது போதும்.” பேசியபடியே எழுந்து நின்றவள், சற்றே நிதானித்தாள்.

இன்னும் எத்தனை நாளைக்கு அவங்க ஹாஸ்பிடல்ல இருக்கனும்னு எனக்குத் தெரியாது. ஆனா கூடிய சீக்கிரம் வீட்டுக்கு வந்திருவாங்க. அவங்க என்ன கோலத்துல வந்தாலும், அதை இந்த வீடு எந்தக் கவலையும் இல்லாம ஏத்துக்கனும்.” கண்களில் உறுதியோடு கர்ஜித்தது அந்தப் பெண் சிங்கம்.

இன்று வரை அவளோடு அத்தனை ஒட்டுதல் இல்லாத அன்னக்ஷ்மி அவளருகில் வந்து அவளைக் கட்டிக் கொண்டார். கண்களைத் துடைத்துக் கொண்டவர்

அதான் உம் மருமகளே எல்லாம் சொல்லிட்டா இல்லை. அதுக்கப்புறமும் எதுக்கு நொய் நொய்ன்னு அழுதுக்கிட்டே இருக்கே? உம் பையனை இன்னைக்குப் பாக்கலாம்னு ஈஷ்வரன் தம்பி சொன்னாங்கல்லை, அதுக்கான ஏற்பாடுகளை பண்ணாம அழுது புலம்புறே.” என்றார் மகளைப் பார்த்து.

நாராயணன் அருகில் போனாள் கீதாஞ்சலி. எப்போதும் ஒரு கனிவான புன்னகையோடு நகரும் மனிதர் இன்று அவள் தலையை வருடிக் கொடுத்தார்.

மாமா…”

சொல்லும்மா…”

அபியோட ஃபாக்டரில எந்தப் பின்னடைவும் வரக்கூடாது மாமா. அந்தத் தொழிலைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாது. ஆனாதெரிஞ்சுக்குவேன். நீங்க சொல்லிக் குடுங்க, நான் கத்துக்கிறேன். அபி திரும்ப பழையபடி ஃபாக்டரிக்குப் போகும் போது, அங்க எந்தப் பிரச்சினையும் இருக்கக் கூடாது மாமா.” உறுதியாகச் சொன்ன பெண்ணைப் பார்த்து தைரியமாகப் புன்னகைத்தார் நாராயணன்

எம் பையன் திரும்ப ஃபாக்டரிக்குப் போகும் போது, அங்க முன்னேற்றம் மட்டும் தாம்மா இருக்கும். எனக்கு அதுல எந்த சந்தேகமும் இல்லை. ஏன்னா அதுவரை தொழிலை நடத்தப் போறது எம் மருமகள்.” நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு பெருமையாகச் சொன்னார் நாராயணன். அந்த வார்த்தைகளில் கீதாஞ்சலியின் கண்கள் கலங்கியது

உம் மாமியாரை அந்த அதட்டு அதட்டிட்டு, நீ எதுக்கு அம்மணி கண்ணு கலங்குறே?” அவர் பேச்சில் புன்னகைத்தாள் மருமகள்.

அண்ணீ…” அந்த வார்த்தையில் அதிசயப்பட்ட ரஞ்சனி சட்டென்று திரும்பிப் பார்த்தாள். இத்தனை நாளும் கீதாஞ்சலி அவளை அப்படி அழைத்ததில்லை. ஓடி வந்தவளிடம்,

நான் எங்க ரூமுக்கு போகனும். எனக்கு மாடியேற கொஞ்சம் ஹெல்ப் பண்ணுறீங்களா?” என்றாள். தலையாட்டிய ரஞ்சனி கைப்பிடியாக அழைத்துச் செல்ல, மேலேயிருந்த அவர்களின் ரூமிற்குப் போனாள் கீதாஞ்சலி. போகும் தங்கள் மகளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி நின்றார்கள் அறிவழகனும், மஞ்சுளாவும்.

ரூமைத் திறந்தாள் கீதாஞ்சலி. முகத்தில் வந்து மோதிய அந்த வாசத்தில் அபியே நிறைந்திருந்தான். பார்க்கும் இடமெல்லாம் அவன் ஞாபங்களே தோன்றியது

கதவை மூடிவிட்டு கட்டிலில் வந்து அமர்ந்து கொண்டாள். எத்தனை ஆட்டம் போட்டான் அன்று! கிச்சனில் உட்கார்ந்த படி அவளைச் சீண்டிக் கொண்டே இருந்தானே. ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாத சீமா,

அபிபாவம்டா அவ. எதுக்கு இப்பிடி கலாய்க்குற? காஃபி குடிச்சா பரவாயில்லை, நீ கொஞ்ச நேரம் ஜாகிங் பண்ணிட்டு வா.” என்று முதுகில் பிடித்து தள்ளாத குறையாக அனுப்பி வைத்திருந்தார்.

ஃபாக்டரிக்குப் போகவேண்டும் என்று அவன் சொல்லி இருந்ததால் ரூமிற்கு வந்து அலமாரியை நோண்டிக் கொண்டிருந்தாள் கீதாஞ்சலி. பின்னோடு அவளை அணைத்து, அவள் கூந்தலுக்குள் முகம் புதைத்துக் கொண்டான். அந்த ஸ்பரிசத்தில் திடுக்கிட்டவள்,

அபி, நீங்க ஜாகிங் போகல்லை?” என்றாள்.

ஆமா, அதுதான் இப்போ ரொம்ப முக்கியம். அம்மாடி, எதுக்கு நீங்க இப்போ என்னை துரத்துறதிலேயே குறியா இருக்கீங்க?”

நான் ஒன்னும் துரத்தலை. ஃபாக்டரிக்குப் போகனும்னு சொன்னீங்க இல்லையா? அதான் லேட் ஆகுமேன்னு…” முடிக்காமல் இழுத்த மனைவியை இன்னும் கொஞ்சம் இறுக்கிக் கொண்டான்

கொஞ்சம் லேட்டானா தப்பில்லைடி எம்பொண்டாட்டி…” நீட்டி முழக்கியவனை ஆச்சரியமாகப் பார்த்தாள்.

என்ன வாடி, போடீங்கிறீங்க?”

ஏன்? சொல்லக் கூடாதா?”

ம்ஹூம்வேணாம், எனக்குப் பிடிக்காது.”

இங்கப்பாரு அம்மாடி, நேத்து ராத்திரி கூடத்தான்…” ஏதோ வில்லங்கமாகச் சொல்லப் போனவனை சட்டென்று தடுத்திருந்தாள் மனைவி. தன் வாய் மூடியிருந்த அவள் கையை விலக்கி, அந்தக் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டவன்

மீதிக் கச்சேரியை இன்னைக்கு வச்சுக்கிறேன்.” என்று சொல்லிவிட்டு பாத்ரூமிற்குள் போயிருந்தான்.

இப்போது எல்லாம் படம் போல மனக்கண்ணில் ஓடியது கீதாஞ்சலிக்கு. எத்தனை ஆசைகளோடு அன்றைய இரவிற்காகக் காத்திருந்தான். லேசாகத் தலை வலிப்பது போலிருந்தது. நேற்றைய நிகழ்வுகளைத் தூக்கித் தூரப் போட்டுவிட்டு, நாளைக்கான ஏற்பாடுகளில் மனதைச் செலுத்தினாள்

பக்கத்தில் இருந்த அவன் தலையணையில் முகத்தைப் புதைத்துக் கொண்ட போது, ஏதோ அவனே பக்கமிருப்பதைப் போல அத்தனை சுகமாக இருந்தது. லேசாகக் கண்ணயர்ந்தாள் கீதாஞ்சலி.

 

 

 

 

error: Content is protected !!