Kaalangalil aval vasantham 4 (3)

 

அப்படியே கிளம்பி வந்திருப்பான் போல, ஜீன்ஸ், முழுக்கை டிஷர்ட்டிலேயே வந்திருந்தான். வேக நடையிட்டு, முழங்கை வரை டிஷர்ட்டை இழுத்தபடி, அவன் வந்த தோரணையை பார்த்தவர்களுக்கு என்னவாகுமோ என்ற கிலியை பரவச் செய்தது.

நிச்சயமாக அவனது கோபத்தின் உச்சி அது!

ஜிஎம் கேபினுக்குள் நுழையாமல், அவனது கேபினுக்குள் போக, அவனை நோக்கி அவசரமாகப் போனாள் ப்ரீத்தி.

“ஸ்டே கூல் பாஸ்…” என்று கிசுகிசுப்பாக கூற, அவனது சேரை தள்ளி விட்டு அமர்ந்த தோரணையிலேயே அவனது கோபம் வெளிப்படையாகத் தெரிந்தது.

“செல்வா…” அமர்ந்தவாக்கில் ஆஃபீஸ் உதவியாளரை சப்தமாக அழைக்க, எங்கிருந்தோ பறந்து வந்தான் செல்வம்.

“சர்…”

“அவங்களை இங்க வர சொல்லு…”

“எஸ் சர்…”

மூடிய அறையில் அவனுக்கெதிரில் வந்தமர்ந்த கிருஷ்ணன் நாயருக்கு அறுபதை தொட்டிருக்கலாம். ஜுபிடரோடு முப்பது வருடங்களுக்கும் மேலான பந்தம். இவனது பாட்டனார், தந்தை அடுத்து இவன் என மூன்றாவது தலைமுறையோடு வேலை பார்த்துக் கொண்டிருப்பதை பெருமையோடு உரைப்பவர். அவரோடு வந்திருந்த சாலமனுக்கும் அதே அனுபவம் உண்டு. அவர்களது அனுபவத்துக்கு அவர்களை இவன் போய் ஜிஎம் கேபினிலேயே பார்த்து இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு முக்கியமான ஒன்றை உணர்த்தியாக வேண்டும் என்பதை முடிவு செய்து கொண்டான்.

“சொல்லுங்க மிஸ்டர் நாயர்…” என்றவனை கூர்ந்து பார்த்தார் கிருஷ்ணன். ‘அங்கிள்’ எப்போது மிஸ்டர் நாயர் ஆனது?’

அதை கேட்க வாயெடுக்க, “இது ஜஸ்ட் ஒரு கேஷுவல் விசிட் தான் ஷான்…” என்றார், உடன் வந்த ஆப்ரஹாம் சாலமன்.

“என்கிட்ட ஏன் இன்பார்ம் பண்ணல?”

“இது பார்மல் இன்டெர்னல் ஆடிட் கிடையாதுப்பா… ஜஸ்ட் சின்ன கிளாரிபிகேஷனுக்கு…” நாயர் கூற, அவன் இறுக்கமாக மறுதலித்தான்.

“என்னோட நாலேட்ஜ் இல்லாம பார்மலோ, இன்பார்மலோ இன்டெர்னல் ஆடிட் இனிஷியெட் பண்ண நீங்க யார்? அதுவும் என்னோட கம்பெனில?” கூர்மையாக கேட்டவனை பார்த்த கிருஷ்ணன்,

“ஃபார் யுவர் இன்பர்மேஷன், இதுல வைஷ்ணவி உங்கப்பா எல்லாருமே ஷேர்ஹோல்டர்ஸ் அண்ட் டைரக்டர்ஸ் தான் ஷான். சோ அவங்களுக்கு இந்த கம்பெனில என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்க உரிமை இருக்கு…”

“எனக்கு ரிட்டன் இன்பர்மேஷன் குடுத்தீங்களா?”

மௌனமாக இருந்தார் கிருஷ்ணன் நாயர்.

“ஃபார் யுவர் கைண்ட் இன்பர்மேஷன், நீங்க எனக்கு இன்பார்ம் பண்ணி இருக்கணும், பிகாஸ் நான் தான் இங்க மேஜர் ஷேர் ஹோல்டர், வித் செவண்டி பர்சண்ட் ஆஃப் ஷேர்ஸ். அவங்களுக்கு ஏதாவது தெரிஞ்சுக்கணும்ன்னா ஏஜிஎம் மீட்டிங் இருக்கு, குவார்ட்டர்லி மீட்டிங் இருக்கு. என் கம்பெனில என்ன நடக்குதுன்னு அங்க தெரிஞ்சுக்கலாம். அதையெல்லாம் விட்டுட்டு நான் இல்லாதப்ப எதுக்காக என்னோட ஆஃபீஸை குடையறீங்க?”

“கம்பெனி பணத்தை நீங்க டைவர்ட் பண்றதா, மிஸ்யூஸ் பண்றதா ரிப்போர்ட்ஸ் வந்திருக்கு ஷான். சோ உண்மை என்னன்னு தெரிஞ்சுக்க டைரக்டர்ஸுக்கு ரைட்ஸ் இருக்கு…”

“பண்ட்ஸ் டைவர்ட் பண்றது என்னுடைய தனிப்பட்ட உரிமை மிஸ்டர் நாயர். லாபம் வருதா இல்லையா? அதை மட்டும் டைரக்டர்ஸ் பார்த்தா போதும்…” என்று கத்தியை கிழித்தார் போல சொல்ல, தோளை குலுக்கிக் கொண்டார் அந்த நாயர்.

“அப்படி சொல்ல கூடாது. நமக்கு மொராலிட்டி முக்கியம்…”

அந்த பதிலில் அதிர்ந்தவன், “இங்க எதுக்கு மொராலிட்டிங்கற டெர்ம் வருது?” சூடாக சஷாங்கன் கேட்க,

“இந்த பிராஜக்ட்ல ரெண்டு ஃப்ளாட்டை ஏதோவொரு பொண்ணுக்கு நீங்க கொடுத்து இருக்கறதா டைரக்டர்ஸ் சொல்றாங்க ஷான்… அவங்க அதை முறையா பர்சேஸ் பண்ணாங்களா? இல்ல நீங்க ப்ரெசெண்ட் பண்ணதா?”

“அவங்க ஏதோவொரு பொண்ணு இல்ல…” என்று நிறுத்தியவன், சுற்றிலும் இருந்த ஜிஎம், ஏஜிஎம், ப்ரீத்தி ஆகியவர்களை பார்வையிட்டபடி சற்று இடைவெளி விட்டு, “என்னோட பார்ட்னர். வி ஆர் லிவிங் டூகெதர்…” கொஞ்சமும் தடுமாறாமல் சொல்ல, அவர்களது முகம், அதிர்ந்து உறைந்தது.

லிவிங் டூகெதர் என்பது இப்போது பரவி வரும் கலாச்சாரம் தான். ஆனால் பண்பாடுகளை கட்டிக் காக்கும் இந்த குடும்பத்திலா இப்படியொரு செயல்?

ஒரு பெருமூச்சொடு சாலமனை பார்த்த கிருஷ்ணன், சற்று சாய்ந்தமர்ந்து கொண்டார்.

அவன் இயல்பாக கூறியதை பிரீத்தியும் பார்த்துக் கொண்டுதானிருந்தாள். அவன் எதையும் மறைத்து வைக்க நினைக்கவில்லை. எதுவாக இருந்தாலும் அதை எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையும் சுயசார்பும் அவனுக்கு அதிகம்!

அதோடு தைரியம் மிக மிக அதிகம்!

“ஆனா இது லீகல் கிடையாதில்லையா?” விடாமல் நாயர் தான் கேட்டார்.

“லீகல் இல்லீகல் எல்லாம் நான் பார்த்துக்குவேன் மிஸ்டர் நாயர். என்னோட பெர்சனல் லைஃப் எப்படி இங்க வந்தது? அதை பற்றி யாரும் பேசறதை நான் அனுமதிக்க மாட்டேன். இன்டெரிம் ஆடிட் இங்க தேவையில்லை. அப்படி லீகலா இனிஷியெட் பண்ணனும்ன்னா ஒரு போர்ட் மீட்டிங் அரெஞ்ச் பண்ணுங்க. அங்க இதை பற்றி பேசுங்க. அப்புறமா நீங்க ஆடிட் பண்ணலாமா வேணாமான்னு முடிவு பண்ணலாம். இப்போதைக்கு எங்களை நாங்க பார்த்துக்கறோம். என்ன கேட்கணும்னாலும், டைரக்டர்ஸ் மீட்டிங்ல கேட்க சொல்லுங்க…” என்று முடிவாக முடித்துவிட, அதற்கும் மேல் என்ன பேசுவது என்று தெரியாமல் இருவரும் குழப்பமாக பார்த்துக் கொள்ள, ஜிஎம் விழித்தார்.

அந்த பதிலுக்குப் பின் வேறெதுவையும் கேட்க முனையவில்லை. இதற்கும் மேல் என்ன பேசுவதாம்?

கிருஷ்ணன் மட்டும் செல்பேசியில் பேசிவிட்டு வர, அவரை பார்த்து “மிஸ்டர் நாயர்…” என்றவன், “இன்டெரிம் ஆடிட் இனிஷியெட் பண்ணது யார்?” என்று கேட்க,

தோளை குலுக்கியவர், “என்னோட அனுபவம் அளவுக்கு கூட உனக்கு வயசில்ல ஷான்…”

“சோ வாட்?”

“இனிஷியெட் பண்ணது மிஸஸ் வைஷ்ணவி…” என்று நிறுத்தியவர், “உங்க அக்காவுக்கு கூட நீங்க என்ன பண்றீங்கன்னு தெரியக் கூடாதுன்னு நினைக்கறீங்க… அப்படின்னா அது சரியான விஷயமான்னு யோசிங்க…”

“ஐ ஆம் லீஸ்ட் பாதர்ட்…” என்றவனின் முகத்தில் அத்தனை வெறுப்பு மண்டிக் கிடந்தது.

அவனிடம் கைக்கொடுத்து விடைபெறுவதற்கு முன் பிரீத்தியை பார்த்த கிருஷ்ணன் நாயர்,

“டேக் கேர் ப்ரீத்தி…” என்று அவளிடம் கூறியவர், இவன் புறம் திரும்பி, “செம புத்திசாலி. மாதேஷ் கிட்ட சொல்லி பிரீத்தியை முதல்ல ஹெட் ஆஃபீஸுக்கு ஆட்டயப் போடச் சொல்லப் போறேன்…” தளர்வாக சிரித்தபடி கூற, சஷாங்கனுக்கும் அவன் கொண்டிருந்த இறுக்கம் குறைந்தது.

“சான்ஸே இல்ல மிஸ்டர் நாயர்…” என்று அவளையும் பார்த்தபடி புன்னகைத்தான்.

அவனது அந்த புன்னகையைப் பார்த்தபின் தான் இவளது இறுக்கம் தளர்ந்தது. ஆனால் ஜிஎம்மின் முகம் இறுகியது.

*****

‘போகும் பாதை தூரமில்லை

வாழும் வாழ்க்கை பாரமில்லை

சாய்ந்து தோள் கொடு

இறைவன் உந்தன் காலடியில்

இருள் விலகும் அக ஒளியில்’

பிசாசு பட பாடலை மூன்றாவது முறையாக ரிப்பீட் மோடில் கண்களை மூடியபடி கேட்டுக் கொண்டிருந்தான் சஷாங்கன். அந்த வயலின் இசை அவனுக்கு பிடிக்கும். மனதை ஆற்றிக் கொண்டிருந்தது.

ப்ரீத்தி தான் காரோட்டிக் கொண்டிருந்தாள். மணி ஏழாகி இருந்தது.

அவனுக்கு மனம் சரியில்லை என்றால் அவளிடம் காரைக் கொடுத்துவிடுவது அடிக்கடி நடப்பதுதான். பொதுவாக அவனது காரை டிரைவர்களிடம் கொடுப்பதே இல்லை. எத்தனையோ முக்கியமான விஷயங்களை பேசுவது காரில் தான். சைட்டுக்கும், அலுவலகத்துக்கும் பயணம் செய்யும் நேரத்தில் தான் பெரும்பாலும் செல்பேசி பேச்சுக்களும் நடக்கும். அதனால் அவன் டிரைவர் இருப்பதை விரும்ப மாட்டான். ஆனால் ப்ரீத்தி எப்போதும் இருப்பாள். அவளிடம் பேசும் விஷயங்களும், அவளிருக்கும் போது பேசும் விஷயங்களும், எதுவுமே வெளியில் சிறு துரும்பு கூட கசிந்ததில்லை. கசியவும் விட மாட்டாள்.

ஆடிட்டர்கள் இருவரும் போன பின், ஜிஎம்மை வெளுத்து வாங்கியிருந்தான் தனிமையில்.

“எப்படி நீங்க பைல்ஸ எடுத்து குடுத்தீங்க மிஸ்டர் வாசுதேவன்?”

“அவங்க கேட்டாங்க. அதான் குடுத்தேன் சர்…”

“அவங்க கேட்டா எதை வேணும்னாலும் குடுத்துடுவீங்களா?”

“வைஷ்ணவி மேடமும், சேர்மன் சாரும் இனிஷியெட் பண்ணியிருக்காங்க. அதை எப்படி நான் டிஸ்ஒபே பண்ண முடியும் சர்?”

“நீங்க ஜுபிடர் ரியல்ட்டர்ஸுக்கு ஜிஎம், மிஸ்டர் வாசுதேவன். யூ ஆர் வொர்க்கிங் ஃபார் மீ. அவங்களுக்கு தான் நீங்க லாயலா இருக்க முடியும்ன்னா அங்க போயிடலாம்…” இறுகிய முகத்தோடு கூறியவனை நேராக பார்த்தவர்,

“சாரி சர். இனிமே இப்படி நடக்காம பார்த்துக்கறேன்…” என்று தலை குனிந்தபடி கூறிப் போனார்.

அவனுக்குத் தெரியும், அவரது நன்றியெல்லாம் சேர்மன் மாதேஸ்வரனிடம் தான் என்பது. அதை தெரிந்தும் தான் எதுவும் செய்யாமல் விட்டிருக்கிறான். மன்னிப்புக் கேட்டு விட்டு போனாலும், அவர் கண்டிப்பாக அவனது தந்தைக்காக தான் இருப்பார்.

இவர்கள் எல்லாம் காலம் காலமாக அதே நிறுவனத்தில் இருப்பவர்கள். அவர்களை மாற்ற முடியாது. மாற்றவும் அவன் நினைக்கவில்லை. தந்தை சம்பந்தப்பட்ட எதுவுமே தனது அலுவலகத்தில் இருக்கக் கூடாது என்று நினைத்திருந்தால், முழுமையாக அலுவலகத்தை மாற்றி அமைத்திருப்பான்.

அவன் அப்படி நினைக்கவில்லை என்பது தான் உண்மை!

“உங்க போன் என்னாச்சு பாஸ்?”

காலையில் அவள் கேட்க நினைத்த கேள்வியை காரோட்டிக் கொண்டு கேட்டாள்.

“நீ கூப்பிட்டப்ப ஸ்வேதா கிட்ட இருந்துதாம்…” கண்களை மூடியபடியே கூறினான்.

“ஏன் அவங்க கட் பண்ணாங்க?” அமைதியாகத்தான் கேட்டாள்.

“அவளோட கசின் கிட்ட பேசறதுக்கு டிஸ்டர்பா இருந்துதாம்…” என்றவனது குரலில் லேசான கசப்பு.

“இது தப்பு பாஸ்…” நேரடியாக கூறினாள்.

“ஹும்ம்…” ஒப்புக் கொண்டான். தவறென்றால் பிரீத்தியை பொறுத்தமட்டில் அது தவறு தான். அதை மறைத்து, பூசி மொழுகி எல்லாம் கூற மாட்டாள். மரியாதை எவ்வளவு உண்டோ, அதே அளவு நேரடியான பேச்சும் உண்டு!

ஆனால் இன்று ஸ்வேதா செய்ததை அவனால் சற்றும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காலை முதலே அவளது செய்கைகள் சரியாகவே இல்லை. அதன் உச்சகட்டமாக ஃபோன் காலை கட் செய்வதெல்லாம் எந்த வகையில் சேர்த்தி? ப்ரீத்தி மட்டும் இவனது இன்னொரு எண்ணுக்கு அழைக்காமல் இருந்திருந்தால், இன்றைக்கு மிகப் பெரிய தலைகுனிவாக அல்லவா இருந்திருக்கும்?

“ஈஸிஆரா பாஸ்?” ஸ்வேதாவின் வீட்டுக்கு போகிறானா அல்லது வேறு எங்குமா என்று கேட்டாள். அவனை அங்கு விட்டுவிட்டு, ஊபர் பிடித்து ஹாஸ்டல் வந்ததும் நடந்திருக்கிறது. அதற்காக பெரிதாக அலட்டிக் கொண்டதில்லை.

“இல்ல… எங்கயாவது போ ப்ரீத்தி. லாங் டிரைவ்…” கண்களை மூடியபடியே கூறியவனை திரும்பிப் பார்த்தவள், எதுவும் பேசாமல் ஈஸிஆர் பீச் ரோட்டில் காரை விட்டாள்.

கருணை மார்பில் சுனை கொண்டவர் யார்

அன்னை பாலென்றாளே!

அருளின் ஊற்றைக் கண்திறந்தவர் யார்

இறைவன் உயிரென்றாரே!

பெரும் கை ஆசியிலும்

இரு கை ஓசையிலும்

புவி எங்கும் புன்னகை பூக்கட்டுமே!

பாடலை அனுபவித்துக் கேட்டுக் கொண்டிருந்தான்.

“நான் தப்பு பண்றேனா ப்ரீத்தி?” அமைதியை உடைத்தபடி அவன் கேட்க, மீண்டும் அவனைப் பார்த்தாள்.

“ஏன் பாஸ்?”

“சொல்லு…”

“எந்த விஷயத்துல?”

“ஸ்வேதா…”

“தப்பு சரிக்கு எந்த ஸ்டண்டர்ட் டெஃபெனிஷனும் இல்ல பாஸ்…”

“நான் ஜெனரல் டெஃபெனிஷன் கேக்கலை. நீ டிஃபைன் பண்ணு ப்ரீத்தி…”

சஷாங்கனுக்கு அவளால் பதில் கூற முடியவில்லை. தவறு என்பதையோ தவறில்லை என்பதையோ அவளால் எப்படி கூற முடியும்? அதை ஒப்புக் கொள்வானா என்பதை காட்டிலும், அந்த விஷயத்துக்குள் அவள் போக விரும்பவில்லை.