Kaalangalil aval vasantham 8 (2)

Kaalangalil aval vasantham 8 (2)

ஒன்று இது பிரச்சனையின் முடிவாக இருக்கலாம் அல்லது ஆரம்பமாகவும் இருக்கலாம்!

ஒருவேளை, இவனே அனுப்பி…. என்று யோசித்தவள், சந்தேகப்பார்வையோடு அவன் புறம் திரும்பி,

“நீங்கத் தான் அனுப்பினீங்களா பாஸ்?” இறங்கியக் குரலில் கேட்க,

“நீ எதுவுமே சொல்லவே இல்லையே…” குற்றம் சாட்டியவனுக்கு என்ன சொல்வது? உண்மைதானே?

இவனைத் தவிர வேறு யாருக்குத் தெரியும்? கண்டிப்பாகத் தெரியாதே என்று யோசித்தவள்,

“வேற யாரா இருக்கும் பாஸ்?” என்று கேட்க,

“அது உனக்கு வேண்டாம்… கண்ணை மூடித் தூங்கு…” என்று கண்களை மூடிப் பின்னால் சாய்ந்து கொண்டான்.

“அது எப்படி பாஸ் அப்படியே விட முடியும்? நான் யார்கிட்டவோ பத்து லட்சம் வாங்கி இருக்கேன்னு நீங்களா நினைச்சு இருந்தா என்னாகறது?” என்று கேட்க,

“அப்படியே வாங்கினா தான் என்ன?” அசால்ட்டாகக் கண்களை மூடியபடியே அவன் கேட்க,

“பாஸ்…” என்றவள் அதிர்ந்தாள்!

“எதுக்கு இவ்வளவு ரியாக்ஷன் ஆபீசர்?”

“உழைக்காத காசு ஒட்டாது பாஸ்!” குரலில் அழுத்தமிருந்தது.

“சரி…” என்று இழுத்தவன், “நேத்து கோவில்ல வெச்சு யாரை மீட் பண்ணினன்னு யோசிங்க மேடம்… ஆன்சர் கிடைக்கும்…” என்று கண்களை மூடியபடியே புதிர் போட,

புருவத்தைச் சுருக்கினாள் ப்ரீத்தா. சேர்மனையும் வைஷ்ணவியையும் மட்டுமல்லவா சந்தித்தது. அதை இவனிடம் சொல்லவே இல்லையே. அவர்களைச் சந்தித்ததை சொன்னால், வைஷ்ணவி இவனைப் பற்றித் தவறாகப் பேசியதை எல்லாம் சொல்ல வேண்டுமே என்ற சங்கடத்தில் தானே அவள் அந்தச் சந்திப்பை மறந்தது. அப்படியே என்றாலும் அது எதேச்சையாக நடந்த ஒரு விஷயம், அதற்கு அவ்வளவு கனம் கொடுக்கத் தேவையா என்ன?

“ப்ளான் பண்ணியெல்லாம் மீட் பண்ணல பாஸ். மனசு ரொம்ப கஷ்டமா இருக்குன்னு சாய்பாபா கோவிலுக்குப் போயிருந்தேன். அங்க அக்காவும் சேர்மனும் வந்திருந்தாங்க. அவ்வளவுதான்…” என்று சொல்ல,

“அவங்க கிட்ட நீ இந்தப் பிரச்சனைபற்றி எதுவுமே பேசலையா?” படுத்திருந்தபடியே அவன் கேட்க,

“உங்க கிட்டவே சொல்லல. அவங்க கிட்ட போயா சொல்லப் போறேன்?” என்று சற்று கோபத்தோடு கேட்டவள், “பெர்சனல் விஷயம் பாஸ். எப்படி அவ்வளவு ஈசியா ஷேர் பண்ண முடியும்?” என்று கேட்க, சட்டென்று கண்களைத் திறந்தபடி நிமிர்ந்து அமர்ந்தவன்,

“பெர்சனல்…! அதனால தான் நான் அவ்வளவு கேட்டும் என்னன்னு ஒரு வார்த்தைக் கூடச் சொல்லல. இல்லையா?” பிள்ளையார் பிடிக்கப் போய்க் குரங்கான கதையாக, எதையோ சொல்லப் போய் அவன் எதையோ பிடித்துக் கொண்டு தொங்க,

“அப்படி இல்ல பாஸ்…”

“என்ன நொப்படி இல்ல?” கோபம் தான் அவனுக்கு. எவ்வளவு முறை கேட்டும் வாயைத் திறக்காமல், அத்தனை அழுத்தம்! இப்போது பெர்சனலாம்!

“என்னைச் சொல்ல விடுங்க…” என்றவள், “எப்படி இருந்தாலும் கடைசியா உங்க கிட்ட தான் வருவேன் பாஸ். எவ்வளவு தூரம் என்னால சமாளிக்க முடியுதுன்னு நானும் பார்க்கணும்ல…”

“இது ஜஸ்ட் லேம் எக்ஸ்கியுஸ்…” பல்லைக் கடித்துக் கொண்டு அவன் கூற,

“ஓகே அக்செப்ட் பண்ணிக்கறேன்…” உடனே ஒப்புக் கொண்டாள். விட்டால் இங்கேயே சாமியாடிவிடுவான் போல!

“நீ இப்ப அக்செப்ட் பண்ணிக்கிட்டதால நீ பண்ணது சரின்னு ஆகாது ப்ரீத்தி. உன் பார்வைக்கு வர்ற விஷயம் ஒவ்வொன்னும் எனக்கும் தெரியனும். உன்னை வெச்சு கேம் ப்ளே பண்ண நினைக்கறாங்கன்னா, அதுக்கு நீ தான் வழி பண்ணிக் குடுத்து இருக்க…” விடமாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தான்.

“சாரி பாஸ்…” மன்னிப்பு கேட்டுவிட்டாளாவது மலையிறங்குவானா என்றும் பார்த்தாள் ப்ரீத்தா.

“என்ன சாரி? உன்னோட பிரச்சனைய யாரோ ஒருத்தர் அவங்களுக்கு சாதகமா யூஸ் பண்ணிக்கலாம்ன்னு நினைச்சு இருக்காங்க. ஆனா என்கிட்டே இருந்து அந்தப் பிரச்சனைய மறைச்சு இருக்கன்னா நான் எப்படி எடுக்கறது?”

“இனிமே இப்படி பண்ண மாட்டேன்…” தலை குனிந்தபடியே ப்ரீத்தி கூறியதை அவனால் இன்னமும் ஏற்க முடியவில்லை.

அவள்மேல் மலையளவு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் இவளே அதை எப்படி அழிப்பது என்று எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்து விடுவாள் போல என்ற எண்ணம் தோன்றியபோது அவ்வளவு கோபம் வந்தது. அதைத் தாண்டி, தனக்குத் தெரியாமல் அவளிடம் எந்த ரகசியமும் இருக்கக் கூடாது என்பதை திண்மையாக நினைத்தான். ஒவ்வொரு சிறு விஷயத்தையும் அவனிடம் சொல்ல வேண்டும் என்பதை எதிர்பார்த்தான். அவளைத் தான் மனதளவில் அவ்வளவு நெருக்கமாக நினைக்கும்போது இவள் மட்டும் எப்படி தன்னைத் தள்ளிப் பார்க்க நினைக்கலாம் என்ற ஆங்காரம்.

“சரி இப்பவாவது என்ன பிரச்சனைன்னு சொல்லுவியா? இல்லைன்னா பெர்சனல்ன்னு மழுப்பிட்டு போவியா?” அவள் புறம் திரும்பி அத்தனை கடுப்பையும் அவனது குரலில் காட்டிக் கேட்க, அவள் தலை குனிந்து கொண்டாள்.

“கடைசியா உங்க கிட்ட தான் வந்து நின்றுப்பேன். எனக்கு வேற யாரைத் தெரியும்?” என்று அவள் கேட்ட தொனியில் அவனது மனமும் சற்று இறங்கியது. ஆனால் மறுமொழி எதுவும் பேசவில்லை.

தயங்கியபடியே தந்தை கொண்டு வந்த பிரச்சனையையும், நடேசனின் மிரட்டலையும், முன்தினம் நடந்த பஞ்சாயத்தையும், தந்தையின் தற்கொலை மிரட்டலையும் கூற, அவளை ஆழ்ந்து பார்த்தான். அவள் நிமிர்ந்து பார்க்கவே இல்லை. பார்க்க முடியவில்லை. சங்கடமாக இருந்தது.

மெளனமாகத் தனது செல்பேசியை எடுத்து, தனக்கு வந்த படத்தைக் திறந்து, அவளிடம் பேசியைக் கொடுத்தான்.

அது வைஷ்ணவியின் அக்கௌன்ட்டிலிருந்து சந்திரமோகன், அதாவது அவளது தந்தையின் அக்கௌன்ட்டுக்கு பத்து லட்சம் போனதன் ஸ்க்ரீன்ஷாட்.

அதிர்ந்தாள் ப்ரீத்தா!

இதில் வைஷ்ணவி எப்படி வந்தார்?

அவளுக்குப் புரியவில்லை!

“வைஷு என்கிட்டே சொன்னா ப்ரீத்தி. எல்லாத்துக்கும் விலை இருக்காம்…” என்றவன், “அந்த விலையைக் கொடுத்து யாரையும் வாங்கிடலாமாம்…” என்று நிறுத்தி, அவளது கண்களை நேராகப் பார்த்தவன், “அப்படித்தான் கம்பெனி விஷயம் மொத்தமும் அவ கிட்ட இருக்காம்…” என்று கூற, ப்ரீத்தா வாயடைத்துப் போனாள்!

வைஷ்ணவி வாங்கியதாகக் கூறியது யாரை? தன்னையா? அதற்கான விலை தான் அந்தப் பத்து லட்சமா?

சற்று நேரம் பிரம்மைப் பிடித்தார் போல அமர்ந்திருந்தவள்,

“பாஸ்… எனக்கொரு எட்டரை லட்சம் தர முடியுமா?” என்று கேட்க, அவன் புன்னகையோடு புருவத்தை உயர்த்திப் பார்த்தான்.

“ஏன்?”

“முன்னாடி ஆஃபீஸ்ல வாங்கின லோன இப்ப முக்கால்வாசி முடிக்கப் போறேன் பாஸ். இப்ப நீங்கக் கொடுத்தா, அதை எத்தனை இன்ஸ்டால்மெண்ட்ல நீங்க ரீபே பண்ண சொல்றீங்களோ, அப்படியே ரீபே பண்ணிடறேன். அது எவ்வளவு வருஷமா இருந்தாலும் பரவால்ல. கட்டாயமா நான் கடனை அடைச்சுருவேன். என்னால இந்தப் பணத்தை சுமக்க முடியாது. வேண்டாம் எனக்கு. நான் விலை போகமாட்டேன்… முடியவே முடியாது…”

முகம் செக்க செவேலென்று சிவந்து விட்டது. மூக்கு விடைக்க, உதடுகள் துடித்தது. அது கோபமா, ஆக்ரோஷமா? அவனால் பிரித்தறிய முடியவில்லை.

இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் உழைக்கத் தயார் அவள். ஆனால் வைஷ்ணவி தனக்கு விலையென்று சொன்ன அந்தப் பத்து லட்சத்தை வைத்திருக்கும் ஒவ்வொரு நொடியும் அவளது உயிர் கொஞ்சம் கொஞ்சமாகப் போய்விடும் போல இருந்தது.

அவளின் அந்தக் குணம் தான் அவனை என்னவோ செய்தது! அப்படியே தாயின் மறுபதிப்பு…! ஸ்ரீமதியால் சிலவற்றை எப்போதுமே ஏற்றுக் கொள்ள முடிந்ததில்லை. கணவன் தனக்கு உண்மையாக இல்லையென்ற உண்மை தெரிந்த அந்தக் கணத்திலேயே அவரது இதயம் துடிப்பதை நிறுத்தியிருந்தது.

“எனக்கு விலை கிடையாது மதுப்பா…”

அப்போது அவர் கூறியவை இப்போதும் இவனது காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.

ரவிச்சந்தரனை நிறுவனத்திற்குள் கொண்டு வந்ததையும், கிரிக்கெட் வாரியத்துக்குள் கொண்டு வந்ததையும் அவர் விரும்பவே இல்லை. ஏனென்றால் தந்தையை விட அந்த கிரிக்கெட் என்பது தாயின் உயிர். கடைசி வரை ரவியை அவர் நம்பவே இல்லை. அவர் நம்பாதவனை தமக்கை எப்படி நம்பினாள் என்று இதுவரை அவனுக்குத் தெரியவில்லை. அவளைவிட இப்போது வரை தந்தை எப்படி நம்புகிறார் என்பதையும் அவனால் நம்பவே முடியவில்லை.

பணம், பகட்டு என்று எதுவுமே ஸ்ரீமதியின் இயல்பை மாற்றியதில்லை! அது அவரைப் பொறுத்தவரை அளவுகோலும் அல்ல.

இவள் போலத்தான், கடைசி வரை உழைப்பையும் விட்டுக்கொடுத்ததில்லை. அவர் இருந்த வரை நிறுவனத்தின் அத்தனையும் அவரது விரலிடுக்கிலிருந்திருக்கிறது. அவருக்குத் தெரியாமல் ஒரு குண்டூசிக் கூட வெளியே சென்றதில்லை.

எளிமையான காட்டன் புடவையை உடுத்திக்கொண்டு, கம்பீரமாகத் தொழிற்கூடங்களில் அவர் வலம் வருவதை கண்டிருக்கிறான்!

எவ்வளவுக்கெவ்வளவு அன்பைக் கொட்டுகிறாரோ, அதே அளவு கண்டிப்பையும் பிடிவாதத்தையும் காட்டியிருக்கிறார்.

அவர் மிக முக்கியமாகப் போதித்தது… யாருடைய நம்பிக்கையையும் உடைத்து விடாதே என்பது மட்டும் தான்!

அது தான் வாழ்க்கையை முடித்துக் கொள்ளுமளவு வலியைத் தந்துவிடும்! இனியும் இருக்க வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பி விடும்.

அந்த ஸ்ரீமதி தான் இவள் உருவில் தன்னருகில் அமர்ந்திருக்கிறாரோ என்ற எண்ணம் அவனையும் அறியாமல் ஏற்பட, கண்களை மூடிக் கொண்டான். மூடிய கண்களுக்குள் குளம் கட்டியது.

தாயின் நினைவு!

அவர் விட்டுச் சென்ற மீதங்கள்!

ஆழமான காயங்கள் கூட ஆறலாம். ஆனால் அதன் வடுக்கள் மறைவதில்லை!

கைகள் இறுகியது. தனிமையிலிருந்திருந்தால் கையிலிருப்பதை எல்லாம் சுக்கு நூறாக உடைத்திருப்பான். அவனிடமிருந்து அவன்தாயை பிரித்த விதியை, அந்த விதியைச் செய்தவர்களை எல்லாம் சுட்டுப் பொசுக்கும் ஆத்திரம் வந்தது.

இருக்கும் இடத்தை நினைவு படுத்திக் கொண்டான். தன்னைத்தானே மீட்டுக் கொண்டவன், தலையை அழுத்தமாகக் கோதி விட்டான்.

“பயணிகள் சீட்பெல்ட்டை அணியவும். சென்னையை அடைந்து விட்டோம். விமானம் இப்போது தரையிறங்கப் போகிறது…” மைக்கில் கேப்டன் ஆங்கிலத்தில் கூற, சீட் பெல்ட்டை அணிந்தபடி,

“இதை நீ சொல்லணுமா? வைஷு அக்கௌன்ட்டுக்கு அந்தப் பணத்தை அனுப்பி…” என்றவன், வாட்சை திருப்பிப் பார்த்து, “ஏழு மணி நேரமாகுது…” என்று அவளது கண்களை ஊடுருவிப் பார்த்தபடி கூற,

அவனை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த ப்ரீத்தியின் உதடுகள் சிவந்து, கண்கள் கலங்கி, கண்ணீர் சரசரவெனக் கீழே இறங்கி, அவனது கையில் பட்டுத் தெறித்தது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!