நீயும் நானும் அன்பே…
அன்பு-11
காம்பவுண்டிற்குள் நவீனாவோடு நுழைந்தவன், முதலில் எதிர்கொண்டது புஷ்பாவைத்தான். அதுவரை அங்கு அவளைக் காணாமல் தேடியிருந்தவர், உள்ளுக்குள் நுழையும் வண்டியை அசிரத்தையாகவே பார்த்தார்.
எதேச்சையாக பின்னால் திரும்புவதுபோல, “வீனா! அத்தை உன்னைத்தான் தேடுறமாதிரி தெரியுது!”, என முனுமுனுப்பாக உள்ளுணர்வு சொன்னதை சிரத்தையோடு பெண்ணிடம் கூறியிருந்தான்.
முதுகில் இதமாகத் தன்னவனைத் தொட்டு, ‘நான் பாத்துக்குறேன்’ என்பதான செய்கையோடு சமாதானம் செய்த பெண் வண்டியைவிட்டு இறங்கியிருந்தாள்.
சங்கரின் பின்னாலிருந்து இறங்கி, எந்த உணர்வையும் முகத்தில் காட்டாமல் இறங்கி வந்தவளைக் கண்ட புஷ்பாவின் துளைக்கும் பார்வையை, சங்கர் கண்டு கொண்டான்.
புஷ்பா அத்தையின் முகத்தைப் பார்த்ததுமே, சங்கருக்கு மனதில் சங்கடம் உண்டாகியிருந்தது.
பெண்ணவள் முகத்தில் தயக்கமோ, கலக்கமோ இன்றி, எதுவும் நடவாததுபோல இலகுவாக தாயை நோக்கி வந்திருந்தாள்.
சங்கரும் நவீனாவின் பின்னே இறங்கி, இடைவெளிவிட்டு வந்திருந்தான்.
“எங்கடீ போன! புதுப் பழக்கமா இருக்கு! போறதுக்குமுன்ன சொல்லிட்டு போறதுக்கென்ன?”, வார்த்தைகள் ஒவ்வொன்றும் தழலாக புஷ்பாவிடமிருந்து வந்து விழுந்தது.
“இந்த காம்பவுண்ட விட்டுப் போறதுன்னா அவ்வளவு லேசான காரியமா…! யாராவது நம்ம வீட்டு ஆளுங்களோட பர்மிசன் இல்லாம, யாருக்கும் தெரியாம வெளிய போயிற முடியுமாம்மா!”, என சிரித்தபடியே கேட்ட நவீனாவை, எரிக்கும் பார்வை பார்த்தார் புஷ்பா.
“அதுக்கு…! எங்கிட்ட சொல்லாம போவீயா? ம்…”, என்று உறுமினார்.
“நாங் கிளம்பும்போது நீங்க எந்திரிக்கலைம்மா!, அதான் தூங்குற உங்கள டிஸ்ட்ரப் பண்ணலை!”, என்று விளக்கம் கூறினாள்.
“அப்டியென்ன அவசர வேலையா விடியுமுன்னே போன?”, விடாமல் கேட்டார் புஷ்பா.
“கூல்மா…! தாத்தாகிட்ட சொல்லிட்டுதான பண்ணைக்குப் போனேன்!”, என்று அலட்டாமல், தனது மிடியின் கோட்மாடல் உள்பகுதியில் கைநுழைத்து வெளியில் ஏதோ எடுக்க முனைபவளை, இமைக்காமல் பார்த்திருந்தார் புஷ்பா.
“இதத்தான் போயி கலெக்ட் பண்ணிட்டு வந்தேன். வேற பண்ணையில எனக்கென்ன வேலை!”, ஒட்டாமல் பேசியவளின் கையில் எடுத்து வைத்திருந்ததை
‘இது எதுக்கு?’, எனும்படியாக புரியாமல் பார்த்தார் புஷ்பா.
பெண்ணின் செய்கையில் ‘அங்க வந்து என்னை மண்ணுக்கு உரமா போடப் போறேனு உரக்கப் பேசிட்டு, இங்க வந்து பச்ச புள்ள கணக்கா போடூற டிராமாவப் பாறேன்! ஃபேரக்ஸ் சாப்பிடற ஃபேஸைக்காட்டி எங்க அத்தைய என்னவா ஏமாத்துது!’, என்று நவீனாவின் செயலில் ஒரு கனம் ஸ்தம்பித்திருந்தான் சங்கர்.
அத்தோடு சாந்தனுவை ஏலம் விடத் தொடங்கியவளை, “ஏய்! வயசில மூத்த பையனை இப்டி பேரு சொல்லிக் கூப்பிடாதன்னு உனக்கு எத்தனைவாட்டிச் சொல்றது?”, அதட்டினார் புஷ்பா.
“நான் எண்ணலைம்மா!”, என்று எந்த உணர்வையும் முகத்தில் காட்டாமல் சீரியசாக கூறியவளைக் கண்டு
“எல்லாம் உனக்கு விளையாட்டுத்தானா? சொல்றதை காதுல வாங்கவே மாட்டியா! ஒழுங்கா மச்சான்னு சொல்லுன்னு அன்னிக்கே சொன்னேன்ல!”, வழக்கம் பழக்கம் கற்றுக் கொடுத்தலை, கறாராகவே விடாமல் செய்தார் புஷ்பா.
“போங்கம்மா…! மச்சான்னுலாம் சொல்ல முடியாது!”, என்று சிணுங்கியவளை
“இனியொரு தரம் இப்டி தலையில அடிச்ச மாதிரி பேரு சொல்லிக் கூப்பிட்டத பாத்தேன்….! அப்டியே… வாயில போடுவேன்!”, என்று புஷ்பா கையை உயர்த்திக் கூற
“நான் சாந்தனுவைவிட பெரியவங்களான இவங்களையே இதுவரை அப்டிக் கூப்டதில்லை! நீங்க என்னனா…! சாந்தனுவைப் போயி மச்சானு கூப்ட சொல்லி ஜோக் பண்றீங்க!”, என்று முல்லையிடம் பேசிக் கொண்டிருந்தபடியே, நவீனாவின் நாடகத்தை கண்டும் காணாமல் ரசித்துக் கொண்டிருந்த சங்கரைக் கைகாட்டிப் பேசியிருந்தாள், நவீனா.
பெண்ணின் வார்த்தைகளில் ஒரு காதை வைத்திருந்தவனுக்கும், ‘அட… இத்தனை நாளா இதைக் கவனிக்கலையே! இதுவரை என்ன சொல்லிக் கூப்பிடுதுனு கூடத் தெரியாம…! செம்மறி ஆடு கணக்கா ஆளைப் பாத்ததும் தலையாட்டுற வேலைய மட்டும் பாத்திருக்கேனா…! எப்டி இப்டி ஆனேன்? என்னன்னவோ ஜாலம் பண்ணுது மோகினி!’ புரியாமல் சங்கர்
புஷ்பா திரும்பி நோக்கிவிட்டு, அங்கு தாயிடம் பேசிக்கொண்டிருந்த சங்கரை நோக்கியவர், “அடிக் கழுதை! இவ்வளவு பெரிய ஆள…! மரியாதை இல்லாம பேசறதோட, பேரு சொல்லுவியா? இனி அப்டி பேசமாட்டேன்னு வாயில போடுடீ!”, என்க
புஷ்பாவின் வாயில் சட்டென்று தனது கையால் விளையாட்டிற்கு அடித்தவள் சிரித்தபடியே, “இது போதுமாம்மா!”, என்றபடியே அங்கு வந்த சாந்தனுவை நோக்கி நகர்ந்திருந்தாள்.
சங்கர் வந்த சிரிப்பை அடக்கப் பெரும்பாடுபட்டிருந்தான்.
“இந்தா சாந்தனு…! ஹெர்பேரியத்துக்கு வேணுனு சொன்ன ஃபிளார்ஸ் எல்லாம் லீஃபோட சரியா இருக்கானு பாத்துக்கோ!”, என்று கொடுத்துவிட்டு முறைத்தவாறே நின்றிருந்த தாயை நோக்கினாள்.
“காலையிலேயே என்னோட எல்லா வேலையும் பெர்ஃபெக்டா முடிச்சிட்டேன்மா!”, என்று தனது கைகளைத் தட்டி கையில் ஒட்டியிருந்ததாக எண்ணிய மண்ணை உதறியவள், தாயைக் கட்டிக் கொண்டு செல்லம் கொஞ்சினாள்.
‘ஊருக்கு வா…! அங்க வச்சு உனக்கு இருக்கு!’, என்று தற்போதைய சூழலை எண்ணி, அடுத்த கட்ட நிகழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்ததோடு, மனதிற்குள் நினைத்துக் கொண்டவர்,
“இன்னும் சின்னப் புள்ளையா நீ!”, என்று கடிந்தவாறே மகளை தன்னிடமிருந்து பிரித்து விட்டார்.
நவீனாவை அதற்குமேல் எதுவும் பேசாமல், “வா வந்து சாப்பிடு நேரமாச்சு!”, என்று அங்கிருந்து நகர்ந்திருந்தார் புஷ்பா.
சாந்தனுவும் புரியாமல் நின்றிருந்தான். அன்று பேச்சுவாக்கில் இவற்றையெல்லாம் இனி சேகரிக்க வேண்டும் என்று மட்டுமே சொல்லியிருந்தான்.
பதிலுக்கு பெண், “உன் ஹெர்பேரிய கலெக்சனுக்கு நானும் ஹெல்ப் பண்றேன்”, என்றவளை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை.
இவளானால், எள் எனுமுன் எண்ணெய் வந்தது என்பதுபோல, பேச்சைத் துவங்கிய ஒரு வாரத்திற்குள் கையில் சேகரித்துக் கொடுத்ததை, ஆச்சர்யமாகப் பார்த்திருந்தான்.
சங்கருக்கும் ஷாக் கொடுத்திருந்தாள் நவீனா. பெண் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திணறுவாள் என்று நினைத்தே, ‘என்ன செய்கிறாள்’ என பின்னோடு வந்தவன், பெண்ணின் செயலில் திணறியிருந்தான்.
ஆம். அவள் அங்கு இருக்கும் வரை எதையும் கையில் வைத்திருந்ததை பார்த்ததாக நினைவில் இல்லை.
எப்போது போய் பறித்தாள்? பறித்ததை எங்கு வைத்திருந்தாள்? எதுவும் தனக்கு தெரிந்திருக்கவில்லை?
‘செம கேடியே தான்…!’, சங்கர் தனது சங்கடம் தீர்த்தவளை, சந்தோசமாக நினைவில் கொண்டு வந்து, ஆத்தாவிடம் பேசிவிட்டு, ‘இது சமாளிச்சுக்கும்! நாமதான் இனி இதுகிட்ட உசாரா இருக்கணும்!’ என எண்ணியவாறே அகன்றிருந்தான்.
புஷ்பா அத்தையின் பார்வை தன்னைத் தொடருவதை உணர்ந்தவன், எதையும் உணர்ந்ததாகக் காட்டிக் கொள்ளாமல் இயல்பாக தனது தாயைத் தேடிப் போனான்.
//////////
மற்ற அத்தைகளைப்போல புஷ்பா இல்லை என்பதை, வந்த ஓரிரு வாரங்களில் புரிந்து கொண்டிருந்தான் சங்கர்.
தனது பெண்ணை இந்த வீட்டில் மணமுடித்துக் கொடுக்கும் எண்ணம் இருக்கிறதோ இல்லையோ, ஆனால் அனைத்திலும் ஒரு வரைமுறையோடு கூடிய பேச்சு, செயல் என மற்றவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்ததைக் கவனித்திருந்தான்.
அதனால்தான், காரைக்குடிக்கு அடிக்கடி சென்றாலும், அவர்களது வீட்டிற்குச் செல்வதை பெரும்பாலும் தவிர்த்திருந்தான்.
இது புரியாமல் வந்து தன்னிடம் பேசிய நவீனாவிடம், எதையும் விளக்க அவன் முற்படவில்லை.
விரைவில் அறிந்து கொள்ளுவாள் என்று விட்டுவிட்டான்.
அதற்குரிய நேரமும் வந்திருந்தது என்பதை புஷ்பாவின் துருவும் பார்வையில் சங்கர் புரிந்து கொண்டான்.
ஆனால் பெண் என்ன செய்தாள் என்பது சங்கருக்குத் தெரியவில்லை.
////////////
காயத்திரி வீட்டிலும் முடிந்தவரை முயற்சித்து, தோல்வியைத் தழுவிய முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, வெளியில் மாப்பிள்ளை பார்த்து பெண்ணை கரையேற்றியிருந்தார்கள்.
கோபம் இருந்தது. ஆனால் எல்லாம் சரியான நேரம் அமையும்போது பார்த்துக் கொள்ளலாம் என தங்களைத் தேற்றியிருந்தனர்.
மனமே இல்லாமல், ‘என் பாவம் உங்களை சும்மா விடாது’, என்று சாபம் விட்டே சென்றிருந்தாள் பெண்.
அடுத்தடுத்த அத்தைகளின் வீடுகளில் இருந்து, சங்கருக்கு தங்களது பெண்ணை திருமணம் செய்து வைக்கும் முயற்சிகள் தொடர்ந்த வண்ணம் இருந்தது.
அடுத்து தேனாம்பிகை என்பவளை சங்கருக்கு மணமுடிக்க, தாஸையும், சசிகலாவையும் தாஜா செய்யும் பணியில் இறங்கியிருந்தார்கள்.
‘இப்ப என்ன வயசு? இன்னும் நாலஞ்சு வருசம் போகட்டும்’ என கணக்கை நீட்டித்தே, யாரும் பிடி கொடுக்காது பேசிய போதும், விடாமல் வந்து நச்சரிப்பு தொடர்ந்தது.
“ஆளுதான் வாட்டசாட்டமா வளந்துருச்சே! இப்ப… வயசுல பண்ணாம வேற எப்ப பண்ணப் போறீக?” என்ற கேள்விகள் வந்து குவிந்திருந்தது.
சிலரது உடல் வாகு, முப்பது வயதிலும் பதினெட்டு வயது இளைஞனைப் போல இருக்கும். சிலர் இருபது வயதில் இருபத்தைந்து வயது மதிக்கத்த தோற்றத்தைக் கொண்டிருப்பர்.
இரண்டாவது ஒன்றில் பொருந்திய சங்கரை, நழுவவிடாமல் இருக்க, நிலங்களும், பொருட்களும், சில சுகபோகங்களையும் ஆசைகாட்டி, தங்களது எண்ணத்திற்கு இசைய வைக்க வேண்டி, தங்களால் உண்டான முயற்சிகளை மேற்கொண்டனர்.
அன்னம்மாளிடமும் வந்து தங்களது எண்ணத்தை செயல்படுத்த ஒத்துழைக்குமாறு வந்து நின்றிருந்தனர்.
இது குறைவான வருடக் கணக்கிலான வித்தியாசம் என்பதால், காயத்திரிக்கு கூறியதையே மற்ற இரு பேத்திகளுக்கும் கூறி அனுப்பியிருந்தார் அன்னம்மாள்.
ஒரு நபரை மட்டும் பிரச்சனைக்குரிய பட்டியலில் இருந்து முழுமையாக வெளியில் எடுத்த மகிழ்வோடு, அதைக் காட்டிக் கொள்ளாமல் வலம் வந்தான் சங்கர்.
அத்தனை அத்தைகளும், தங்களது பெண்ணை இந்த வீட்டிற்கு தாரைவார்த்துக் கொடுக்க நீ, நான் என்று போட்டி போட்டு காத்திருக்கையில், தனக்காக எந்த சிரத்தையும் மேற்கொள்ளாத புஷ்பா அத்தையை ஏனோ சங்கருக்கு பிடித்திருந்தது.
புஷ்பா அதுபோல எந்த நோக்கோடும், சங்கரிடம் பேசவில்லை என்பதை தெளிவாகப் புரிந்து கொண்டிருந்தவனுக்கு, சற்று ஏமாற்றமாகக் கூட இருந்தது.
‘அத்தைக்கு ஏன் தன்னை மருமகனாக்கிக் கொள்ளும் அபிப்ராயம் இல்லை’, என்ற கேள்வியும் இருந்தது.
‘வீனாவுக்கு இன்னும் கல்யாணத்துக்கு வயசிருக்கு. அதுக்குள்ள இதைப்பத்தி பேச வேணானு அத்தை இருக்காங்கபோல’, என தன்னையே தேற்றியிருந்தான் சங்கர்.
/////
காரைக்குடி திரும்பியபின்பு
யாருமற்ற நேரத்தில் பெண்ணை தனியே அழைத்து கண்டித்திருந்தார் புஷ்பா.
“இப்டி வயசுப் பையனோட பைக்ல போறது, வரது எல்லாம் தப்பு நவீனா. அது கிராமம். டக்குனு வாயில வர்றதப் பேசிருவாங்க. என்னதான் அத்தை பொண்ணுனாலும் நீ இன்னும் சின்னப் பொண்ணு இல்லை!”, என்று மகளிடம் ஆரம்பிக்க
தாயை சற்றுநேரம் அமைதியாகப் பார்த்தவள்,
“நான் ரெகுலராவ அவங்களோட போறேன். இப்பதான் ஃபர்ஸ்ட் டைம் அவங்களோட வந்திருக்கேன்”, என்று சூழலை இலகுவாக்க முயற்சித்தாள் பெண்.
“இருந்தாலும் அப்டி நீ வந்திருக்கக்கூடாது”, என்று தனது வார்த்தையில் திடமாக நின்றவரை,
“இனி அப்டி வரலைம்மா! ஆனா ஒரு விசயம் உங்ககிட்ட கேக்கணும்?”, என்று கேட்ட மகளை திணுசாகப் பார்த்திருந்தார் புஷ்பா.
“ஆச்சிக்கும், தாத்தாவுக்குமே அவங்களை பாத்துக்கறதே கஷ்டம்! அவங்க எப்டி என்னைப் பார்த்துப்பாங்கனு… அவங்களை நம்பி என்னை லாஸ்ட் இயர் அங்க விட்டீங்க?
“அது… அது…! அதான் மாமா அத்தைலாம் இருந்தாங்கல்ல! இந்த வருசமும் தொந்திரவு குடுக்கக்கூடாதுன்னுதான் அம்மா இங்க வந்துட்டேன்!”, என்று சமாளித்தவரை
“எனக்கு என்ன வேணுனோ, இல்லை எதும் வாங்கிட்டு வரணுமானோ இதுவரை மாமா எதுவும் கேட்டதில்லை!
நானும் இதுவரை அவங்ககிட்ட எதுவும் சொன்னதில்லை!
தாத்தா, ஆச்சி ரெண்டுபேரும் எங்கிட்ட கேட்டு, அப்புறம், சசி அத்தை இல்லைனா அவங்க பையங்கிட்டதான சொல்லி விடுவாங்க…!”
இது புஷ்பா அறிந்திராதது. தான் ஒப்படைத்தது தன் பெற்றோரிடம்தான். தங்களது முட்டாள்தனத்திற்கு யாரையும் கைகாட்ட இயலாது.
மேலும், தான் ஒன்று நினைத்து மகளைக் கண்டிக்க முனைந்து, தங்களது தவறான முடிவால், தற்போது பெண்ணை கடுமையாக பேச முடியாமல், பேச்சை முடிவுக்குக் கொண்டு வர எண்ணினார்.
அதற்குள், “இப்பல்லாம் ஆச்சிங்க அங்க என்னை ரெண்டு நாள் விடச் சொன்னாகூட விடாம கூட்டிட்டு வந்திரீங்க ஏன்?”, பெண்ணிற்கு வந்த திடீர் சந்தேகம்
“இப்பதான் நான் இங்க இருக்கேன்ல…! அவங்களை எதுக்கு இன்னும் தொந்திரவு பண்ணனும்தான்…! விடலை!”, இலகுவாகவே பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கோடு பேசினார் புஷ்பா.
“என்னை அங்க விட்டுருந்தப்போ, சசி அத்தையும், அவங்க பையனுந்தான் கேரா பாத்துட்டாங்க!”
பெண்ணிடம் இதுவரை மேம்போக்காக கேட்டு தெரிந்தவரை சங்கடமாகத் தோன்றாதது, இன்று விளக்கமாக நடந்ததைத் தெரிந்து கொண்டவுடன் சங்கடமாக இருந்தது.
தங்களது கணக்கு தப்பிதமாக ஆனதில் வருத்தமிருந்தபோதிலும், இனி அதை நீட்டிக்க விரும்பவில்லை புஷ்பா.
“உன்னை பேச வேணானு சொல்லலை நவீனா! அவசியத்துக்கு பேசு! ஆனா இப்டி பைக்ல தனியா சேந்து போறது, வரது தப்பு!”, கண்டிப்பாக வந்தது குரல்.
“அப்ப இதுவரை ஆச்சி, தாத்தா எல்லாம் எதுவும் சொல்லலை!”, அடுத்த ஐயத்தை கேட்டிருந்தாள்.
“…”, என்ன பதில் சொல்ல எனத் தெரியாமல் விழித்தவர்,
“நீயா புத்திசாலியா நடந்துப்பேன்னு நினைச்சு சொல்லாம விட்டுருந்திருப்பாங்க…! நீ இன்னிக்குதான சங்கருகூட வந்தேன்னு சொன்ன…! இப்ப நான் அங்க இல்லைனா உங்கிட்ட இதைப்பத்தி சொல்லிருப்பாங்க!”. என்று சாதூர்யமாக பேசியிருந்தார்.
அதற்குமேல் பெண்ணிடம் இதைப் பற்றிய பேச்சை வளர்க்கும் எண்ணமின்றி
“சரி, அது முடிஞ்சு போனது நவீனா! இனி அது எதுக்கு! இனிமே பாத்து நடந்துக்கோ!”, என்றவர்
“சாந்தனு நாளைக்கு ஈவினிங்தான் இங்க வருமுன்னு உங்க அத்தை சொல்லி விட்டாங்க. நாளைக்கு உனக்கு ஸ்கூலுக்கு போகணுமில்ல! வேணுங்கறதை போயி எடுத்து வையி!”, என்றவாறு நகரத் துவங்க
“சாந்தனுக்கு நான் கலெக்ட் பண்ணித்தரதா சொல்லியிருந்தேன்மா. அதான் தாத்தாகிட்ட சொல்லி அங்க போயி கலெக்ட் பண்ணிட்டு, வரும்போது அவங்ககூட வந்தேன்!”, மகளின் பேச்சில் நின்றவர் பாவம்போல கூறிய மகளை தலையை ஆதூரமாகத் தடவி
“இனி அப்டி எல்லாம் பண்ணைக்கு தனியா போகக்கூடாது நவீனா!”, என்று கட்டளையாகவே கூறியிருந்தார் புஷ்பா.
“ம்…”, என்று தலையை ஆட்டி ஆமோதித்த மகளை
“இனி அம்மா எதுவும் கூப்பிட்டு சொல்ற அளவுக்கு நடந்துக்காத! இன்னும் நீ சின்னப்புள்ள இல்ல!”, என்று வலியுறுத்திக் கூறிவிட்டு புஷ்பா அகன்றிருந்தார்.
பெண்ணுக்கு கள்ளம் புகுந்து, இயல்பாக தன்னை மறைத்துப் பேசியதில் மனதில் வருத்தம் மிகுந்திருந்தது.
‘எப்டி இருந்த நான், இப்டி மாறிட்டேன். இதப்புரிஞ்சிட்டுத்தான் அவங்க என்னை பாக்காம போயிருக்காங்க. நான் வேற போயி சங்கடப்படுத்திட்டேன்’ நவீனா
அன்று முழுவதும் மனதில் இதைப் பற்றிய சிந்தனை நிரம்பியிருந்தது.
‘ரெண்டு பேருக்குமே பிரச்சனை வராம என்ன செய்யணுமோ அந்த மாதிரி இனி நடந்துக்கணும்!’, என்று பெண்ணாகவே ஒரு முடிவுக்கு வந்திருந்தாள்.
அறிவுக்கும், மனதிற்கு இடையிலான போராட்டம் நீடித்து, மனம் அதற்கிசைவான, அறிவுக்கு ஏற்ற முடிவை இறுதியாக்கி, உறுதியாகியிருந்தாள் நவீனா.
////////////
அடுத்து வந்த நாள்களில் நவீனா படிப்பைத் தவிர வேறு சிந்திக்கவில்லை. ஆனாலும் மந்தி மனதை கடிவாளமிட்டு இழுத்து வருவாள்.
சாந்தனுவிற்கு, ஆண்டு இறுதித் தேர்வு துவங்கியிருந்தது. தேர்வுகள் முடிந்த கையோடு மதுரைக்கு கிளம்பியிருந்தான்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு என்பதால், பெண்ணும் தனது படிப்பில் கவனம் செலுத்தியிருந்தாள்.
மருத்துவம் படிக்க வேண்டி, நுழைவுத்தேர்வு வகுப்பிற்காக மதுரைக்கு கிளம்பிய சாந்தனுவை, சங்கர் அழைத்துச் சென்றிருந்தான்.
ஒன்றரை மாதங்கள் வகுப்புகள் முடிந்து, நுழைவுத் தேர்வும் எழுதிய பிறகே சாந்தனு ஊருக்குத் திரும்பியிருந்தான்.
பெண்ணும் கர்மசிரத்தையோடு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொண்டிருந்தாள்.
தேர்வு முடிவுகள் அனைத்தும் வந்தது. சாந்தனு தொண்ணூறு சதவீதத்திற்கு மேல் எடுத்திருந்தான். பெண் எண்பது சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்திருந்தாள்.
மோனிகாவும் அதே அளவு மதிப்பெண்கள் பெற்றிருந்தாள்.
சாந்தனு விரும்பியவாறே நுழைவுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று, மருத்துவம் படிக்க மதுரையில் இடம் கிடைத்து, சேர்ந்திருந்தான்.
மதுரையில் மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியில் தங்கி மருத்துவம் பயிலத் துவங்கியிருந்தான் சாந்தனு.
பெண் அதே பள்ளியில் தனது மேல்நிலைக்கல்வியைத் துவங்கியிருந்தாள். கடந்த ஆண்டு முழுவதும் சாந்தனுவோடு இணைந்து தனித்தனி மிதிவண்டியில் பள்ளிக்கு சென்று வந்திருக்க, இந்த ஆண்டு தனது தம்பியையும் உடன் அழைத்துக் கொண்டு செல்லத் துவங்கியிருந்தாள் நவீனா.
சாந்தனு மாதம் ஒரு முறை மானகிரி வரும்போது, இடையிடையே காரைக்குடி வந்து செல்வான். சாந்தனுவின் தோற்றம், நடை உடை தோற்றம் மாறக் கண்டவள், மருத்துவம் பற்றிய தனது ஐயத்தை சாந்தனுவிடம் வரும்போதெல்லாம் வினவினாள்.
சாந்தனுவும் மிகப் பொறுமையாகவே பதிலளித்தான். பெண்ணுக்கும் மருத்துவம் போக வேண்டும் என்கிற வெறி வந்திருந்தது.
பெண்ணும் தனது அவாவை சாந்தனுவிடம் வெளியிட, இலகுவான வழிமுறைகளை, பெண்ணுக்கு மறையாமல் பகிர்ந்தான் சாந்தனு.
மேல்நிலைக் கல்வி பயிலத் துவங்கியது முதலே, ஆச்சி, தாத்தா இருவரும் தன்னை மானகிரிக்கு அழைத்துவரச் சொன்னாலும், அவர்களை இங்கு வரச் சொல்லி காணுவதை மட்டுமே வாடிக்கையாக்கி இருந்தாள் நவீனா.
நிச்சயமாக இருவரையும் அழைத்து வருவது சங்கராக மட்டுமே இருக்கும் என்பதில் பெண்ணுக்கு சந்தேகமில்லை!
சங்கரைப் பார்ப்பதோடு சரி! மரியாதைக்காக என்றில்லாமல், தாய்க்காக வந்தவுடன் தலையை அசைத்து வாருங்கள் என்பதான தலையசைப்பு. செல்லும்போது ஒரு தலையசைப்பு. அவ்வளவே!
சங்கருக்குமே ஆச்சர்யம்! எப்படி தன்னிடம் அன்று பண்ணையில் வந்து பேசிவிட்டு, இப்படி அமைதியாகிவிட்டாள் என்று!
வைராக்கியமாக இருந்தவளை எந்த விதத்திலும், சலனப்படுத்த முயலவில்லை சங்கர். ஆனால் சலனமில்லாதிருந்த அவன் மனதில் காற்றுபோல பெண்ணின் நினைவிருந்ததால் சலனத்தோடே சங்கமித்திருந்தான்.
பெண் மானகிரிக்குச் செல்வதை முற்றிலும் தவிர்த்திருந்தாள்.
பெண்ணைக் கண்டும், காணாமல் சங்கர் தவித்திருந்தான்.
சில வேளைகளில் மோனிகாவை பள்ளியில் விட்டுச் செல்ல, அல்லது அழைத்துச் செல்ல என வருபவனிடம்கூட எதுவும் பேசமாட்டாள் நவீனா.
சங்கராக எதாவது கேட்டால், பதில்! அதற்குமேல் வளவளப் பேச்சை எல்லாம் பெண் விட்டிருந்தாள். ஆனால் அனைத்தையும் விட்டிருந்தவளின், பார்வை சொல்லும் சேதி புதியதாக இருந்ததையும் கண்டு கொண்டிருந்தான் சங்கர்!
புதிராக இருந்தவளின்
புத்த வேடம்
புரிந்தது…!
அடாவடியாக இருந்தவளின்
அமைதி உருவம்
ஆகர்ஷித்தது!
விளையாட்டாக இருந்தவளின்
விழிமொழி
வீழ்த்தியது!
மோனிகாவிற்கு விபரம் சற்று புரியத்துவங்கி, “எங்க அண்ணன் பாவம். இப்பவே அதப்பாத்தா எங்கண்ணை கட்டுது…!”, என்று ஒரு முறை கூறி வம்பு வளர்த்தவள்
“அது மனசுல நினைச்ச புள்ளையக் கட்டுனா எங்கண்ணனனோட நிலை இன்னும் என்னாகுமோ தெரியலை!”, என பூடகமாகப் பேசிச் சிரித்தாள்.
“ரொம்பப் பேசாத!”, என்பதோடு அதற்குமேல் வாயைத் திறந்தாளில்லை.
இதற்கிடையில், சங்கர் வீட்டில் இருந்தவாறு விவசாயம் மட்டுமே பார்ப்பதால், திருமணப் பேச்சுகள் பற்றிய விசாரிப்புகள் தொடர்ந்தவண்ணம் இருந்தது.
அதனை, தற்காலிகமாக தள்ளிவைக்கும் எண்ணம் சங்கருக்கு வந்திட, தான் பயின்ற வேளாண் கல்லூரியில் முதுவேளாண் கல்வி கற்பதைத் தொடர்ந்ததோடு, பகுதிநேர விரிவுரையாளராகவும் பணியில் சேர்ந்திருந்தான்.
பெண்ணும், அடுத்து வந்த வருடத்தில் முழுக்க, முழுக்க படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தியிருந்தாள். நுழைவுத்தேர்வு எழுதி விடுமுறையில் இருந்தவளை வந்து பார்த்த சாந்தனு,
“கண்டிப்பா இந்த கட்ஆஃப்கு மெடிசன் உனக்கு கிடைச்சிரும்”, என்று ஊக்கமூட்டியிருந்தான்.
சாந்தனுவின் வாய் வார்த்தையோடு, நல்ல மதிப்பெண்களையும் நவீனா பெற்றிருந்தமையால், பெண்ணுக்கு மருத்துவம் இலகுவாகக் கிடைத்திருந்தது.
வெற்றிக்கு ஏக சந்தோசம். பெண் சல்லிக்காசு செலவு வைக்காமல் நல்ல மதிப்பெண்களைப் பெற்று அதன் வாயிலாக மருத்துவம் சென்றதில்.
வேண்டிய அனைத்தையும், அன்னையும், தந்தையும் மகள் கேட்காமலே வாங்கிக் குவித்தனர். பெண்ணைப் பற்றிய சந்தோசத்தில் மனதில் மட்டற்ற மகிழ்ச்சியோடு வலம் வந்தனர்.
இதைப் படி, அதைப் படி என்று எந்தத் திணிப்பும் இல்லாமல், தங்களது எதிர்பார்ப்பு என்றில்லாது அவளாகவே மருத்துவத்தை தேர்ந்தெடுத்ததில் அளவற்ற மகிழ்ச்சி பெற்றோரிடையே இழையோடியிருந்தது.
மோனிகா எண்பது சதவீத மதிப்பெண்கள் எடுத்தும், இளஅறிவியல் கணினி அறிவியல் படிப்பதாகக் கூறி காரைக்குடியிலேயே சேர்ந்திருந்தாள்.
/////////////
கல்லூரிக்குள் நுழைந்தவளுக்கு மனதில் ஏக பயம். ரேகிங்…! சாந்தனுவிடம் முன்பே அதைப்பற்றிக் கேட்டிருந்தாள் நவீனா.
சாந்தனுவோ, “அது ஒரு ஜாலிக்காக பண்றது. ஈஸியா எடுத்துட்டா ஒன்னுமில்ல! அவங்க சொல்றதை செஞ்சா விட்ர போறாங்க!”, என்று இலகுவாகக் கூறியிருந்தான்.
ஆனாலும் பெண்ணுக்கு பயம் போகவில்லை. முதல் நாள் சீனியர்களிடம் மாட்டிக் கொண்டவள், இயன்றவரை சமாளித்திருந்தாள்.
சாந்தனு பெண்ணிடம் எதுவும் கூறாதபோதும், சீனியர் மாணவர்களிடம் நவீனா பற்றிக் கூறியிருந்தான். ஆகையால் எளிதான டாஸ்குகளோடு விடைபெற்றிருந்தாள்.
சென்று இரண்டு மாதங்கள் வரை அம்மாஞ்சி வேடமிட்டு தெரிந்தவள், அடுத்து சீனியர் சாந்தனுவின் ரிலேட்டிவ் என்கிற மாட்டாத நேம் போர்டுடன் பயமின்றி வலம் வந்தாள்.
சாந்தனுவும், நவீனாவிற்கு வேண்டிய அனைத்தையும் செய்து கொடுத்திருந்தான்.
நூற்றைம்பது மாணாக்கர்களைக் கொண்ட அவளது வகுப்பில் உள்ள மாணாக்கர்களின் பெயரை அறிந்து கொள்ளவும், அவர்களது சொந்த இருப்பிடம் பற்றிய தகவல் அறிந்து கொள்ளவும், பாடங்களையும் அதன் நோக்கங்களையும், மருத்துவத்தின் உன்னதத்தையும் உணர்ந்துகொள்ளவே இரண்டு மாதங்கள் முடிந்திருந்தது.
ஆய்வக வகுப்புகள் பெண்ணை மிகவும் சோதனைக்குள்ளாக்கியது.
முதல் ஆய்வக வகுப்பில் கலந்து கொண்டு வந்தவள் நேராக சாந்தனுவைத் தேடி வந்திருந்தாள்.
“ஏன் சாந்தனு, எம்மேல உனக்கு எதாவது காண்டாயிருந்தியா?”
“ஏன் அப்டி கேக்கற நவீனா”, என்ன கேள்வி இது என்று பார்த்திருந்தவன் சந்தேகத்தை கேட்டிருந்தான்.
“இல்லை இப்டி ஒரு கொடூரமான லேப் பத்தி எங்கிட்ட நீ இதுவரை சொன்னதே இல்லையே! எனக்கு ரொம்ப அருவெருப்பா இருக்கு. பயமாவும் இருக்கு. செத்த பொணத்தை கடாவர்ல இருந்து அப்டியே எடுத்துட்டு வந்து, கைய மட்டும் கட் பண்ணி இது இன்னிக்குனு கொடுக்கறாங்க!”, விட்டாள் அழுதுவிடுபவள்போல பேசினாள்.
“அப்ப எப்டி உனக்கு ஹுயூமன் பிஸியாலஜி தெரியும். நாடி, நரம்பு, ரத்தம், சதை எது எங்க, எப்டி இருக்குனு உனக்குத் தெரியணுமில்ல! ஆரம்பத்துல அப்டிதான் இருக்கும். போகப்போக எல்லாம் சரியாகிரும்!”, என தேற்றினான் சாந்தனு.
“நீ லேப் போயி அத தொட்டா போயி குளிப்பியா?”
“ரொம்ப முக்கியம்… இப்ப அது! டாக்டராயிட்டா தினம் எத்தனையோ பர்த், டெத், ஆச்சிடெண்ட், இப்டி பலதரப்பட்ட பேசண்ட்ஸ் நாம பாத்துத்தான் ஆகனும். அதுக்காக ஒவ்வொரு இன்சிடென்கும் பின்ன போயி குளிச்சா, என்னாத்துக்கு ஆகறது டாக்டர்!”, என்று சிரித்தவனை
“ஏமாத்திட்டே டாக்டர்…! எங்கிட்ட இதையெல்லாம் முன்னாடியே சொல்லியிருந்தா…! இந்தப் பக்கமே வந்திட்டுருந்துருக்க மாட்டேன் டாக்டர்!”, என்று முகம் சுருக்கி அமர்ந்திருந்தவளை வற்புறுத்தி வெளியே அழைத்து வந்து, இதமாகப் பேசி, தேற்றி, மீண்டும் அவளது விடுதியில் கொண்டு விட்டுவிட்டு தன்னிருப்பிடம் திரும்பியிருந்தான் சாந்தனு.
வகுப்புகள் துவங்கிய சில வாரங்களில், அருவெருப்பு எல்லாம் மாறி, பெண் ஓரளவு இயல்பிற்கு திரும்பியிருந்தாள்.
முன்பைவிட, தொலைபேசி அழைப்பு இலகுவாகியிருந்ததால், தினசரி விடுதியில் இருந்து வீட்டிற்கு அழைத்துச் பேசிக் கொண்டார்கள் இருவருமே.
மாதம் ஒரு முறை என்பதைவிட, தொடர்ச்சியாக விடுமுறை இருந்தால் மட்டுமே ஊருக்குச் செல்வதை வாடிக்கையாக்கியிருந்தார்கள் இருவரும்.
சாந்தனுவின் தேற்றலில் ஒருவாராக தேறியிருந்தவள், படிப்பில் சற்று கவனம் செலுத்த தன்னை தயார் செய்தாள்.
கல்வி சார்ந்த விடயங்களை சாந்தனுவிடம் இதுவரை சாதித்தவள், இருவரும் வாரயிறுதியில் வெளியே சென்றபோது, சங்கரைப் பற்றி முதன் முறையாக மனந் திறந்திருந்தாள்.
“பக்கத்திலேயே இருந்தும் எனக்குத் தெரியலை!”, என்று வருத்தத்தோடு கேட்டுத் தெரிந்து கொண்டவன்
“அப்ப எங்க அண்ணன், இதனாலதான் கல்யாணம் வேணானு இப்ப சொல்லுதா!”, என்று வியந்திருந்தான்.
“ம்…”, என்ற நவீனாவின் வெட்கம் கலந்த மகிழ்வான தலையாட்டலைக் கண்டவனுக்கும், அவளின் சந்தோசம் ஒட்டிக் கொண்டது.
மதுரையில் மூவரும் இருந்தாலும், இதுவரை சந்தித்தலை பற்றி எண்ணியிருக்கவில்லை.
ஏனெனில் வாரயிருதி நாளில் பெரும்பாலும், சங்கர் மானகிரி சென்று வருவான்.
மதுரை வேளாண் கல்லூரியில் பணியில் இருந்தவன், வாரயிறுதி நாளோடு கூடிய தீபாவளி விடுமுறையை முன்னிட்டு ஊருக்குச் செல்வதாக இருந்தான் சங்கர்.
காரை கடந்த முறை ஊரிலிருந்து எடுத்து வந்திருந்தவன், பண்ணைக்கு தேவையான முக்கிய பொருட்களோடு ஊருக்குக் கிளம்பும் உத்தேசத்தில் இருந்தான்.
அதேவேளை சாந்தனு, நவீனா இருவரும் ஊருக்கு வருவார்கள் என்பதால், சாந்தனுவை அழைத்துப் பேசியிருந்தான் சங்கர்.
வேலை முடிந்து சாந்தனுவையும் வந்து அழைத்துக் கொள்வதாக கூறியிருந்தான்.
பணியை முடித்துக் கொண்டு, விடுதியில் தங்கியிருந்த மாணவர்களை அனுப்பிவிட்டு வரச் சற்று தாமதமாகத் திரும்பியவன் சாந்தனுவை வந்து அழைத்துப்போக வந்திருந்தான்.
தன்னோடு, நவீனாவும் ஊருக்கு வருகிறாள் என்றவுடன், “இப்பவே லேட்டாயிருச்சு சாந்தனு! இப்ப போயி அவ ஹாஸ்டல்ல பிக்கப் பண்ணி, லேட்டா வீட்டுக்குப் போகணுமே!”, என்று தயங்கியவனை
“போன் பண்ணிக் கேக்கறேன்னா! அது வரேன்னு சொன்னா கூட்டிட்டுப் போவோம். இல்லைனா நாளைக்கு அதுவே கிளம்பி வரட்டும். சொல்லாம விட்டுட்டுப்போனா அவ்ளோதான்!”, என்ற பயந்து கூறியவனை பார்த்துச் சிரித்தவனைக் கண்டு சாந்தனுவிற்கும் சிரிப்பு தொற்றிக் கொண்டது.
“விட்டுட்டுப் போனா கொன்னுருவேன் டாக்டர், எவ்வளவு லேட்டானாலும் ஊருக்கு வந்திருவேன்னு வீட்டுக்கு போன் பண்ணிச் சொல்லிட்டேன்”, என நவீனா நங்கூரமாக பதில் கூறியிருந்தாள்.
நீண்ட நெடிய நாளுக்குப் பிறகு நவீனாவை அன்று சந்தித்தான். பெண்ணிடம் நிறைய மாற்றங்கள்.
தன்னவள், தனக்கானவள் கம்பீரமாக வருவதைக் கண்டவனுக்கு உள்ளம் நெகிழ்ந்தது சங்கருக்கு.
தம்பி அருகில் இருப்பதால் கண்டும் காணாததுபோல வண்டியை ஓட்டியவனை, பெண் அணு அணுவாய் ஆராய்ந்ததை சங்கர் அறிந்திருக்கவில்லை.
சாந்தனுவிற்கு ஆச்சர்யமாக இருந்தது. சங்கரின் கண்கள் வெளிப்படுத்திய உணர்வைக் கண்டவனுக்கு, இத்தனை வருசமா இதைக் கவனிக்கலையே என்றிருந்தது.
அண்ணன், தம்பி இருவரும், அவரவர் துறை சார்ந்த பேச்சினைத் தவிர்த்து, மதுரையின் மகத்துவங்களைத் துவங்கி, ட்ராஃபிக், கிரிக்கெட், எகனாமி என்று ஏதேதோ பேசியபடி வந்தார்கள். பெண் எதுவும் பேசாமல் அமைதியாக வந்தாள்.
“சாந்தனு, இப்பவே மணி எட்டரை. சாப்பிட்டு வீட்டுக்கு கிளம்பினா நல்லது. இல்லைனா… பசிக்குதுனு இடையில எங்கயும் வண்டிய நிப்பாட்டவும் முடியாது. அப்டியே இடம் இருந்து வண்டிய நிப்பாட்டிட்டு, அங்க போயி சாப்டாலும், நல்ல சாப்பாடு கிடைக்காது!”, என்று அன்றைய நிலையை விளக்கினான் சங்கர்.
சாந்தனுவும் ஒப்புதல்தர, கோரிப்பாளையம் அருகில் வண்டியை நிறுத்தியிருந்தான் சங்கர். வண்டியிலிருந்து இறங்கிய சங்கரோடு, சாந்தனுவும் இறங்கியிருந்தான்.
“வா நவீனா! லேட் நைட் போயி வீட்ல சாப்பிடறதுக்கு இங்கேயே சாப்பிடறலாம்!”, என்றபடியே அண்ணனோடு பேசியவாறு சென்றிருந்தான் சாந்தனு. நவீனா மட்டும் இறங்காமல் காருக்குள்ளேயே அமர்ந்திருந்தாள்.
முன்னே சென்றவன், பெண்ணைக் காணாது சாந்தனுவிடம், “எங்கடா அது?”, என்று கேட்க
“வரும்னே!”, என்றவாறு தமையனோடு பேசியவாறு முன்னேறியிருந்தான்.
இருவரும் சென்று கைகழுவி அமர்ந்தும் வராதவளை, சாந்தனுவிடம், “எங்கனு பாருடா! வண்டிக்குள்ள தூங்கிருச்சோ!”, என்று சங்கர் கூற
“இதோ போயி பாக்கறேன்னா!”, என்று வெளியில் வந்து காருக்குள் அமர்ந்திருந்தவளை அழைக்க
“எனக்கு பசியில்லை!”, என்றவளை பொய்யுரைக்கிறாள் என்பது தெரிய புரியாமல்,
“ஏன், என்னாச்சு…! முகத்தைப் பாத்தாலே டயர்டாதான் இருக்க…! அப்புறம் பசிக்கலைங்கற…! இறங்கி வா…!”, என்று அழைக்க
“இல்லை சாந்தனு…! எனக்கு பசிக்கலை! நீ போயி சாப்பிடு!”, என்றவளுக்கு ஏனோ தன்னை மீறி அழுகை வரும்போல இருந்தது.
“எதுக்கு நவீனா இப்ப அழற மாதிரி பேசற! உடம்புக்கு எதுனா முடியலையா!”, என்று தலையில் தொட்டுப் பார்த்தவன், அவளுக்கு வேறு ஏதோ பிரச்சனை என்று அமைதியாகிவிட்டிருந்தான்.
“மனசுதான் சரியில்லை…! நீ போ!”, என்று விரட்டியவளை, எவ்வளவு அழைத்தும் வரவில்லை.
சாந்தனுவிற்கு உண்மையாகவே புரியவில்லை.
புரியாதவன், அப்டியே போயி சங்கரிடம் ஒப்பிக்க, கோபத்தோடு எழுந்தவனைக் கண்டு, “என்னனு தெரியலைனா…! டாக்டர் எப்பவும் இப்டி பண்ணாது!”, என்றவனை
“நீ உனக்கு வேணுங்கறதை ஆர்டர் பண்ணு…! இதோ டாக்டரோட வரேன்!”, என்றுவிட்டு காருக்கு வந்தவன்
கதவைத் திறந்து, “டாக்டர்… பசிக்கலையா! இப்பவே இங்க ஒன்பது மணியானா வீட்டுக்கு போக இன்னும் நேரமாகும். அங்க போயி சாப்பிடற வரை நீங்க பசி தாங்க மாட்டீங்க!”, என்று ஏக மரியாதையோடு பேசியவனிடம் எந்த பதிலும் பேசாமல் மௌனமாக இருந்தவளைக் கண்டு
டிரைவர் இருக்கையில் ஏறி காருக்குள் அமர்ந்தவன், “என்னாச்சு டாக்டர்…! ஏன் இப்டி பண்றீங்க!”, என்று அதே மரியாதையோடு மீண்டும் கேட்க
அதற்குள் கண்களில் நீரோடு, “உங்க தம்பிய மட்டுந்தான சாப்பிடக் கூப்டீங்க…! என்னையக் கூப்டவே இல்லை! நானெல்லாம் எங்க உங்க கண்ணுக்கு தெரியப் போறேன்!”, என்று ஆரம்பித்தவளை
“ஐயோடா!” ‘ரெண்டு வருசமா நல்லாத்தானே இருந்தா! இப்ப திடீர்னு மோகினிக்கு என்ன ஆச்சு!’ என்று பார்த்திருந்தான்.
வேதாளம் திரும்பவும் வேலையைக் காட்டத் துவங்கியிருந்ததை உணர்ந்தவன் என்ன செய்தான்…!
அடுத்த பதிவில்…!
/////////