Kaarkaala Vaanavil – 1

Kaarkaala Vaanavil – 1

கார்கால வானவில்

அத்தியாயம் – 1

சில்லென்ற தென்றலும், கார்கால குளிரையும் கலைக்கும் எண்ணத்தோடு கிழக்கே உதித்தான் கதிரவன். அவன் என்னதான் முயன்றும் கூட, குற்றாலத்தின் குளிரை குறைக்க முடியவில்லை. ஐந்திணை என்று அழைக்கப்படும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை என்ற ஐந்தில் முதல் மூன்றையும் தன்னுள் அடக்கி இன்றும் இயற்கை வளத்துடன் காட்சியளிக்கிறது.

கிழக்கு வானம் மெல்ல சிவந்து செவ்வானமாக மாறிக் கொண்டிருந்தது. விடியல் வேளையில் இரைதேடி பறவைகள் வானத்தில் பறந்து செல்ல, எங்கிருந்தோ கேட்ட குயிலின் சத்தம் மனதை நனைத்தது. சில்லென்ற தென்றல் தீண்டிச் சென்றது. அந்த வழியில் செல்லும் மண்பாதை வழியாக இரண்டு வாண்டுகளும் கைக்கோர்த்துக்கொண்டு குளக்கரையை நோக்கிச் சென்றது.

“டேய் இப்போ எதுக்கு என்னைக் குளக்கரைக்கு கூட்டிட்டு போற சொல்லுடா” என்றாள் மகிழ் அவனோடு கைகோர்த்து நடந்தபடி.

“ம்ம் நான் எங்கே ஸ்கூலில் நீச்சல் போட்டியில் முதல் பரிசு வாங்கினேன் என்று சொன்னதை நீ நம்பல இல்ல” என்றான்.

“ஆமா.. நான் நம்பல.. இப்போ அதுக்கு என்ன பண்ண போற” என்று கேட்க அவளிடம் கடிகாரத்தைக் கொடுத்துவிட்டு, “இதில் பத்து நிமிஷம் கணக்கு வெச்சுக்கோ, அதுக்குள் நான் இந்தப் படித்துறையிலிருந்து நீந்தி எதிர்புறம் உள்ள படித்துறையை தொட்டுட்டுவிட்டு வரேன்” என்றான்.

அதுவரை அவனின் பேச்சை விளையாட்டாக நினைத்த மகிழின் முகத்தில் பதட்டம் அதிகரிக்க அவனின் கையை இறுக்கிப் பிடித்துகொண்டு, “நீ ஒண்ணும் போக வேண்டாம்.. நீதான் வின்னர்னு நான் ஒத்துக்கறேன்” என்றாள்.

இரட்டை ஜடையில் மஞ்சள் நிற ரிப்பனை வைத்துக் கட்டிக்கொண்டு, பச்சை நிற பாவாடை சட்டையில் அவனின் கைபிடித்து கெஞ்சியவளை பார்க்க அவனுக்குப் பாவமாகவும் இருந்தபோதும், அவன் அவளின் பேச்சைக் கேட்கவில்லை.

அவளின் கன்னத்தை பிடித்து வலிக்காமல் கிள்ளியவன், “மகிழ் இதுக்கு எல்லாம் பயப்படாமல் நீ இங்கேயே நின்னு பாரு” என்றவன் தன் சட்டையைக் கழட்டி குளக்கரை படியில் வைத்துவிட்டு தண்ணீருக்குள் இறங்க, “வேண்டாம்டா சொன்னா கேளு” என்றாள் அவள்  பதட்டத்துடன்.

“நீ டைம் வை. நான் போய் சீக்கிரம் அக்கரை படித்துறையை தொட்டுட்டு வரேன்” என்று சொல்ல அவளோ பதட்டத்துடன் ஆற்றைப் பார்த்தாள். கண்ணுக்கு எட்டிய தூரம்வரை அவன் சொன்ன படித்துரையை காணவில்லை.

தண்ணீரும் வேகமாக ஓடிக்கொண்டிருக்க அதைப் பார்த்தவளின் கண்கள் கலங்கிட, “நீ வந்திருடா.. நம்ம வீட்டிற்கு போலாம்” என்று அவள் அழைக்க அவனோ மறுப்பாகத் தலையசைத்துவிட்டு தண்ணீருக்குள் குதித்தான்.

அவள் பதட்டத்துடன் நேரத்தை வைத்துகொண்டு சோகமாகப் படித்துறையில் அமர்ந்து அவனின் வரவை எதிர் பார்த்தாள். ஒருபுறம் அவளின் மனம் பயத்தில் படபடவென்று துடிக்க, இன்னொரு புறம் நேரம் ஓடிக்கொண்டே இருந்தது.

அப்போது அவள் படித்துறையில் இருப்பதைப் பார்த்த தர்மசீலன், “ஏய் மகிழ் எங்க சின்னவன் உன்னோடதானே வந்தான்” என்று சிந்தனையோடு கேட்க அவளோ திடீரென்று கேட்ட குரலில் திட்டுக்கிட்டுப் போய் திருதிருவென்று விழித்தாள்.

அவளின் பார்வை சரியில்லை என்று உணர்ந்து, “என்னம்மா மகிழ் பதில் சொல்லாமல் நிற்கிற” தன் கையில் இருந்த கடிக்காரத்தைப் பார்த்துப் பயந்தபடி,

“தண்ணிக்குள் நீந்திக் காட்டுறேன்னு சொல்லிட்டு ஆற்றில் இறங்கி போயிட்டான் தாத்தா” என்றாள் பயத்தில் கைகால்கள் வெடவெடக்க.

அவள் சொன்னதைக் கேட்டு அதிர்ந்த பெரியவர், “ஏய் என்ன மகிழ் சொல்ற? அவனுக்கு அவ்வளவு நீச்சல் தெரியாதே” என்று வேகமாக ஆற்றில் சிறுவனைத் தேடினர். அவளின் பதட்டம் அதிகரிக்க மீண்டும் மேலே வந்தவரின் பார்வையில் விழுந்தார் செந்தூரன்.

“ஏலே செந்தூரா நம்ம சின்னவன் தண்ணீருக்குள் நீச்சலடிக்க இறங்கி காணாமல் போயிட்டான். நீ சீக்கிரம் ஊருக்குள் போய் நல்லா நீச்சல் தெரிந்த ஆளுகளைக் கூட்டிட்டு வாப்பா” என்றதும் அவன் தகவல் சொல்ல ஓடினான்.

சற்றுநேரத்தில் அங்கே ஆண்களின் கூட்டம் திரண்டுவிட யார் தேடியும் அவன் கிடைக்கவில்லை. அங்கே நடப்பவற்றை படித்துறையில் நின்று பார்த்த மகிழுக்கு பயம் அதிகமாகிவிட அவளோ அழுக தொடங்கிவிட்டாள்.

கொஞ்சநேரத்தில் நீருக்குள் இருந்து வெளியே வந்த பெரியவர், “ஐயோ புள்ளை இறந்து போயிடுச்சோ என்னவோ தெரியலயே” என்று புலம்ப அதைக் கேட்டதும் மகிழ் தன்னையும் அறியாமல் தலைசுற்றி கீழே விழுந்தாள்.

அதைக் கண்டதும் தர்மசீலன், “ஐயோ நம்ம மனோகரனின் பொண்ணு மயக்கம் போட்டு விழுந்துவிட்டதே” என்று அவர் பதறியபடி கையில் ஏந்தும் பொழுதே அவளின் தாய் பரிமளம் விஷயமறிந்து ஓடி வந்தார்.

“வதனி எழுந்திரும்மா” என்று மகளை முகத்தில் தட்டியும் அவள் விழி திறக்கவில்லை. இந்த விஷயம் அறியாத அவளின் அம்மா இருவரும் வதனியை ஊருக்குள் தேடிக் கொண்டிருந்தனர். மனோகரனுக்கு தென்காசியில் வேலை கிடைக்க குடும்பத்துடன் கிளம்பியபோது மகளை காணவில்லை என்றதும் அவர்களின் மனம் பதறியது.

“வதனி.. வதனி” இருவரும் மகளைதேடும் போது எல்லோரும் ஆற்றங்கரை நோக்கி ஓடுவதைக் கண்டு, “என்னப்பா எல்லோரும் எங்கே போறீங்க” என்று விசாரித்தார் மனோகரன்.

“நம்ம தர்மசீலன் ஐயாவின் பேரன்நீச்சலடிக்க ஆறுக்குள் இறங்கி இருக்கான். பிள்ளை ஏதோ சுழலில் சிக்கிருச்சு போல இன்னும் வெளியே வரல. அதன்  ஐயா நம்ம ஊரு பசங்களை எல்லாம் வந்து தேட சொல்லியிருக்காரு” என்றான் செந்தூரன்.

அதைகேட்டு அவர்கள் இருவருக்கும் திக்கென்று இருக்க தன் மகளை  வேறு காணவில்லை என்ற பதட்டப்படும்போது, “மனோகரா உன் மகளைக் கூட, அந்தப் படித்துறையில் பார்த்தேன்பா” என்றார்.

கணவன் – மனைவி இருவரும் வரும்போது தர்மசீலன் மகளைக் கையில் வைத்துக்கொண்டு கண்ணீரோடு அமர்ந்திருப்பது கண்டு, “வதனி.. வதனி..” என்று தட்டியும் அவள் கண்விழிக்காமல் இருக்க பதறியபடி மகளை ஏந்திக்கொண்டு மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர்.

அங்கே அவளுக்கு மருத்துவம் செய்த டாக்டர், “பிள்ளை எதையோ கண்டு அதிர்ச்சியில் மயக்கமடைந்து இருக்கிறாள் வேற ஒண்ணும் இல்ல” என்று சொல்லி இருவரின் வயிற்றிலும் பாலை வார்த்தார்.

அதன்பிறகு மகிழை தென்காசியில் இருந்த ஒரு ஸ்கூலில் சேர்த்து விட்டுவிட்டு தங்களின் வேலையைக் கவனித்தனர். மனோகரன் பேங்க் மேனேஜர், பரிமளா ஸ்கூல் டீச்சர்.

அவள் வேலை செய்யும் பள்ளியில் தான் இப்போது மகளையும் சேர்த்து இருந்தனர். அன்று பள்ளிகூடத்திற்கு மகிழின் தோழிகள் யாரும் வரவில்லை. அதனால் அவள் மட்டும் தனியாக அமர்ந்து சாப்பிட தன்னருகே யாரோ அமரும் ஆரவாரம் கேட்டு திரும்பிப் பார்த்தாள்.

பள்ளி சீருடையில் தன்னருகே அமர்ந்தவனின் முகம் பார்த்தும் அவளின் முகமும் சட்டென்று மலர்ந்தது.

“வாடா இப்போதான் உன்னை நினைச்சேன்” என்றவள் டிப்பனை திறந்து சட்டினியை பணியாரத்தின் மீது ஊற்றினாள்.

“என்னை எதற்கு நீ தேடின” என்று அவளின் மீது பார்வையை படரவிட்டபடி அவன் கேட்க, “வேற எதுக்கு உன்னைத் தேட போறேன். இன்னைக்கு அம்மா குழி பணியாரம் செஞ்சாங்க. நீதான் விரும்பிச் சாப்பிடுவியே அதன் உன்னைத் தேடிட்டே இருந்தேன்” என்றாள் இயல்பான புன்னகையோடு.

அவள் பணியாரத்தை மூன்றை எடுத்து டிப்பன் பாக்ஸ் மூடியில் வைத்து அவனின் முன்னே வைக்கவும், “வதனி நானும் உன்னோடு சாப்பிட  வரவா” என்ற குரல்கேட்டு அவள் திரும்பிப் பார்த்தாள்.

அவளின் வகுப்புத் தோழி கார்குழலில் கையில் ஸ்கூல் சத்துணவுடன் நின்றிருந்தாள். அவள் தன்னருகே அமர்ந்திருந்தவனைப் பாவமாகப் பார்க்க, “நீ அவங்களோட சாப்பிடு நான் அப்புறம் வரேன்” என்று  சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டான்.

அவள் யாரையோ தேடுவதைக் கவனித்த கார்குழலி, “நான் உன்னோடு சேர்ந்து சாப்பிடலாம் இல்ல” என்றாள் ஒரு மாதிரியான குரலில்.

அவளின் கேள்வி மனதை பிசைய, “வா குழலி.. இது என்ன கேள்வி” என்று அவளின் கையைப்பிடித்து அருகே அவளை அருகே அமர வைத்தாள்.

அவள் ஸ்கூல் சத்துணவை சாப்பிட, “எனக்கும் கொடு” என்று அவளின் முன்னே கைநீட்ட, “இந்த சாப்பாடு உனக்கு வேண்டாம் மகிழ். நீ டீச்சரோட பொண்ணு” என்றாள்.

அவளிடமிருந்து இப்படியொரு பதிலை எதிர்ப்பார்த்த மகிழ், “டீச்சர் பொண்ணு சத்துணவு சாப்பிட கூடாதோ” என்று வீம்புடன் கேட்டவள் தன்னிடமிருந்த பணியாரத்தை அவளிடம் கொடுத்துவிட்டு சத்துணவு சாப்பாட்டை ரசித்து சாப்பிட்டாள்.

அவள் தன் உணவை ரசித்து உண்பதைக் கண்ட கார்குழலிக்கு கண்கள் கலங்கிட, “ஷ்.. குழலி ஒழுங்கா பணியாரத்தை சாப்பிடுடி” அவளை அதட்டி சாப்பிட வைத்தாள் மகிழ்.

அவர்கள் இருவரும் சாப்பிடும்போது வீட்டின் விஷயத்தைப் பேச தொடங்க, “உன் கூட பிறந்தவங்க எத்தனை  பேரு மகிழ்” என்று கார்குழலி ஆர்வத்துடன் கேட்டாள்.

“எங்க வீட்டில் நான் மட்டும் தான்” என்றாள்.

“ஓ.. எங்க வீட்டில் நான் எனக்கு அப்புறம் என் தம்பி சரவணன், அப்புறம் என் தங்கை அனிதா மற்றும் காயத்ரி மொத்தம் மூன்று பேர்..” தன் குடும்பம்பற்றி கூற மகிழ் ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டு இருந்தாள்.

“உங்க அப்பா, அம்மா என்ன வேலை செய்யறாங்க குழலி” சட்டென்று அவளின் முகம் வாடிவிட, “என்னாச்சு” தோழியின் கரம்பிடித்து அழுத்தம் கொடுத்தபடி கேட்டாள்.

“அப்பா தற்கொலை பண்ணி இறந்துட்டாரு மகிழ்..” என்றாள் கண்கள் கலங்க.

அதன்பிறகு தன் தவறை உணர்ந்து, “ஸாரிடி நான் இதை வேண்டுமென்றே கேட்கல” மெல்லிய குரலில் சங்கடத்துடன் கூறினாள்.

“ப்ச் விடு மகிழ். அப்பாவிக்கு விவசாயத்தில் பெரிய நஷ்டம். பேங்கில் வாங்கி லோனை கட்ட முடியாமல் பூச்சி மருந்து குடிச்சி இறந்துட்டாரு” என்றாள்.

இன்று விவசாயிகளின் நிலை இப்படித்தான் இருக்கிறது என்று அவர்கள் இருவருக்கும் தெரியவில்லை. சிறிதுநேரம் அங்கே அமைதி நிலவியது.

“அம்மா” என்றாள் மகிழ் கேள்வியாக.

“இப்போ அவங்கதான் விவசாயம் பார்த்து என்னையும், என் தம்பிகளையும் படிக்க வைக்கிறாங்க” என்றாள் தலையைக் குனிந்தபடி.

அப்படி கஷ்டப்பட்டு பிள்ளையைப் படிக்க வைக்கும் அவரை நினைத்து மகிழுக்கு பெருமையாக இருக்க, “உங்க அம்மா சூப்பர் உமன்” அவளையும் அறியாமல்  சிரித்துவிட்டாள் கார்குழலி.

அதன்பிறகு அவர்களின் இடையே அழகாக நட்பு ஆழமாக மலர்ந்தது.

அன்று மாலை வீட்டிற்கு வந்த மகிழ் தன் தந்தையின் வரவை எதிர்ப்பார்த்தபடி வாசலில் அமர்ந்திருந்தாள். அவளின் இந்தச் செயல் பரிமளாவிற்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.

“என்னடா செல்லம் வாசலில் வந்து உட்கார்ந்து இருக்கீங்க?” என்று கையில் முளை கட்டிய பச்சைபயிறுடன் மகளின் அருகே வந்து அமர்ந்தார்.

“அம்மா என் ஃபிரெண்ட் கார்குழலி. அவங்க அப்பா தற்கொலை பண்ணி இறந்துட்டாதா சொன்னா” என்றதும் பரிமளாவிற்கு மகளின் மனம் புரிந்து போனது.

“இப்போ என்ன பண்ணலாம் வதனி” மகளிடம் அவர் கேட்க, “நம்ம அப்பாகிட்ட சொல்லி அவங்களுக்கு லோன் ஏற்பாடு பண்ணலாம் அம்மா” என்றாள் மகள் கண்ணில் ஆர்வம்  மின்ன.

அவளின் உதவி செய்யும் எண்ணம் அவருக்குப் புரிந்துபோக, “சரிடா நான் அப்பா வந்தும் பேசி என்ன  பண்ணலாம் என்று சொல்றேன்” என்று மகளின் தலையைக் கலைத்தபடி அவர் புன்னகையுடன் சொல்ல அவளும்  சரியென்று தலையசைத்தாள்.

மாலை ஆறு மணிபோல வீடு திரும்பிய கணவனுக்குக் காபியை கொடுத்தபடி அருகே அவரின் அருகே அமர்ந்த பரிமளாமகள் சொன்ன விஷயத்தை அவரிடம் கூற, “அவங்களை பேங்க் வரச்சொல்லு. என்ன நிலவரம் என்று பார்த்துட்டு சொல்றேன்.” என்றார் சிந்தனையுடன்.

மறுநாள் பள்ளிக்குக் கிளம்பிய மகளிடம், “கார்குழலி அம்மாவைப் பேங்க் போய் அப்பாவைப் பார்க்கச் சொல்லு மகிழ்” என்றார்.

“தேங்க்ஸ் அம்மா” என்று கூறியவள் பள்ளிக்குச் சென்றதும் இந்த விஷயத்தை சொல்ல கார்குழலியை தேட அவளோ ஹெச். எம். ரூம் வாசலில் பதட்டத்துடன் நின்றிருப்பது கண்டு,

“குழலி நீ இங்கே என்ன பண்ற” என்று கேட்க அவள் ஃபீஸ் கட்டாத விஷயத்தை குற்றஉணர்வுடன் கூற வதனி சென்று தாயிடம் சொல்லி அவளுக்கு எக்ஸாம் பீஸ் கட்ட  வைத்தாள்.

அதற்கு அடுத்தநாளே கார்குழலியின் தாயார் செல்வி நேரடியாக வந்து மகிழின் அம்மாவைச் சந்தித்து பணத்தை கொடுத்து நன்றி கூறினார்.

“மகிழ்வதனி தோழிக்கு உதவி செய்ய நினைத்து அவங்க தந்தையிடம் பேசி உங்களுக்கு மானியம் கிடைக்க ஏற்பாடு பண்ணி இருக்கிறா. நீங்க நேராகப் பேங்க் போய் என் கணவரைப் பாருங்க” என்று செல்வியை அனுப்பி வைத்தார் பரிமளா.

அவளின் தாயாருக்கு பயிர் காப்பிட்டு திட்டத்தில் மானியம் வாங்கி கொடுத்தாள். அடுத்து விவசாயம் செய்யப் பருவகால பயிர் லோன் வாங்கி தந்தாள்.

தன் அம்மாவிடம் பேசி குழலியின் தாய் செல்விக்கு சின்ன சின்ன உதவிகள் செய்தாள். அவர்களின் நட்பு ஒருபடி வளர்ந்து இரண்டு குடும்பமும் நன்றாக நட்புடன் வளர்ந்தது.

மகிழ்வதனி – கார்குழலி இருவரும் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் வாங்குவதோடு நிற்காமல் பள்ளிகூடத்தில் வைக்கப்படும் போட்டிகளில் ஆர்வமாகக் கலந்து கொண்டனர். கார்குழலிக்கு விளையாட்டில் ஆர்வமில்லை என்றபோதும் தோழிக்காகப் போட்டிகளில் கலந்து கொண்டாள்.

இப்படி நாட்கள் விரைந்திட திடீரென்று ஒரு நாள் எதிர்ப்பாராத விதமாக, கார்குழலியின் தாயார் மாரடைப்பு காரணமாக இறந்தார். அந்த இழப்பின் காரணமாக  அவளின் படிப்பு பத்தாம் வகுப்புடன் தடைபட்டுவிட குடும்ப பாரம் முழுக்க அவனின் தலையில் விழுந்தது.

கார்குழலி தன் சொந்த ஊரான குற்றாலத்தில் தன் தாயின் பெயரில் இருக்கும் விவசாய நிலத்தைப் பராமரிக்க அவள் தென்காசியிலிருந்து கிளம்பினாள் தன் தம்பி தங்கைகளுடன். அவளுக்கு உதவ நினைத்த மகிழ்வதனி தன் தாய் தந்தையிடம் சொல்லி வேலை மாற்றம் வாங்கி குற்றாலத்திற்கு வந்து சேர்ந்தாள்.

வானவில் வரும்….

error: Content is protected !!