KurumbuPaarvaiyile-31

குறும்பு பார்வையிலே – 31 (Final)

ஸ்ருதி அவன் கழுத்தில், தன் கைகளை மாலையாகக் கோர்த்துக் கொண்டாள். “ஆகாஷ்…” அவள் அழைக்க, ‘ஸ்ருதி முன்பு போல் இல்லை. இப்பொழுது நெருக்கத்தைக் காட்டுகிறாள் தான். ஆனால், குறும்பா.. என்ற அழைப்பு மட்டும் இல்லவே இல்லை.’ எண்ணியபடியே அவள் அழைப்புக்கு இசைந்து தலை அசைத்தான்.

அவள் வருத்தத்தை அவனால் இன்று கீதாவையும், கார்திக்கையும் பார்த்ததும் புரிந்து கொள்ள முடிந்தது. ‘குழந்தை விஷயம் தெரிந்து, எத்தனை எதிர்பார்ப்புகள், பயம், பதட்டத்தோடு வந்திருப்பாள். அதுவும், அன்று… ச்ச…’ என்று ஆகாஷ் மருகிக் கொண்டிருக்கையில், “விலகிப் போனால், சாபம்? அந்த சாபம் வேண்டாமுன்னு தான் என்னை நீங்க தேடி வரவே இல்லையா ஆகாஷ்?” அவள் கேட்க, “ச்… ச்சீ…” என்று அவளை இறுக அணைத்துக் கொண்டான்.

“அப்ப, நான் வேற யாரையாவது கல்யாணம் பண்ணிருப்பேன்னு. என் வாழ்க்கையில் தொந்திரவு பண்ணவேண்டாமுன்னு தியாகி ஆகிட்டிங்களோ?” ஸ்ருதி கடுப்பாகக் கேட்க, “நான் அவ்வளவு நல்லவன் எல்லாம் இல்லை.” ஆகாஷ் முணுமுணுத்தான்.

அவனுள் புதைந்து கொண்டே, அவன் சட்டையை கண்ணீரால் நனைத்துக்கொண்டே, “ஏன் ஆகாஷ் என்னைத் தேடி வரவே இல்லை?” அவள் ஏக்கமாக கேட்க, ஆகாஷின் மனம், ‘ஐயோ…’ என்று அலறியது.

அன்று வலுவாகத் தெரிந்த காரணங்கள் எல்லாம் இன்று வலுவிழந்து அவன் முன் தோற்றுக் கொண்டிருந்தது.

“கேட்குறேன்ல?” அவன் முன் பிடிவாதமாக நின்றாள் அவனின் பிடிவாதக்கார மனைவி.

“நீ செத்துருவேன்னு…” அவன் தடுமாற, “நான் எல்லாம் சாகுற ஆளா? என்னை பத்தி, உனக்கு தெரியாதா?”, அவன் மேல் சாய்ந்து கொண்டு, முகத்தை மட்டும் உயர்த்தி, அவன் முகம் பார்த்துக் கேட்டாள்.

“சாகுற ஆள் எல்லாம் இல்லை. நாலு பேரை சாக அடிக்குற ஆள்ன்னு தெரியும் தான்.” அவன் கண்கள் குறும்பாகச் சிரிக்க, ஸ்ருதி அவனைக் கோபமாக முறைக்க, அவள் கண்கள் பெரிதாக விரிந்தது.

“இப்படி எல்லாம் பார்க்காத. இது ஆபிஸ்.” என்று கூறிக்கொண்டு, அவளை நோக்கி அவன் குனிய, “ரூல்ஸ் எல்லாம் பிரேக் பண்ண கூடாது.” அவள் அவனை மிரட்டினாள்.

“எவன் போட்ட ரூல்ஸ்? நாங்க எல்லாம் உண்மையிலே ரூல்ஸை பிரேக் பண்ணவங்க.” என்று ஆகாஷ் புருவத்தை உயர்த்த, “இதுல பெருமை வேற?” ஸ்ருதி உதட்டைச் சுழித்தாள்.

ஆகாஷ் சிரிக்க, “நான் இல்லாமல் எப்படி இத்தனை வருஷம் இருந்த ஆகாஷ்?” அவள் யோசனை அதையே சுற்றி வந்தது.

அனைத்திலும், கேலியாக, விளையாட்டாக இருக்கும் ஆகாஷால், விட்டு சென்ற ஸ்ருதியை எளிதாக ஏற்றுக்கொள்ள முடிந்தது. ஆனால், ஸ்ருதியின் வருத்தம் மட்டும் நீண்டு கொண்டே போனது.

“நான் தினமும் படுக்கும் பொழுது, ஆகாஷ் நாளைக்கு வந்திருவான். வந்திருவான்னு நினைச்சிகிட்டே தூங்குவேன் தெரியுமா? கிருஷ் கிட்ட கூட சொல்லுவேன்? உங்க அப்பா சீக்கிரம் வந்திருவாங்கன்னு.” அவள் கூற, ‘நீ ஏன் என்னை விட்டுட்டு போன? அது தப்பில்லையா?’ என்று கேட்க ஆகாஷிற்கு தோன்றவில்லை.

“என்னை மன்னிச்சிரு டாலி. ஏதோவொரு கோபம்…” அவன் கூற, அவன் வாயை இவள் மூடினாள். “நமக்குள்ள என்ன மன்னிப்பு? கேட்கணும்ன்னு தோணுச்சு கேட்டுட்டேன்.” என்று அவள் கூற, “நான் கூட அன்னைக்கு மாதிரி கிஸ் கேட்குரியோன்னு நினைச்சிட்டேன்.” ஆகாஷ் அவள் கைகளை தன் கைகளுக்குள் பொதித்து கொண்டு கண்சிமிட்டினான்.

“கிஸ் வேணுமுன்னா, கையையா குடுப்பாங்க?” அவள் கண்சிமிட்ட, “அடி… பாவி…” அவன் அசந்து போனான்.

“நமக்கு சண்டையோ, சமாதானமோ எல்லாம் இந்த ஆஃபீசிலே தான் போல?” அவன் கேட்க, “நம்ம எப்ப சண்டை போட்டிருக்கோம்?” அவள் கேட்க, “அது தானே?” என்று இருவரும் ஹைபை செய்து கொண்டனர்.

நாட்கள், மாதங்களாக இனிமையாக உருண்டோட கீதா பிரசவ வலியோடு மருத்துவமனையில் இருந்தாள்.

கார்த்திக்கின் குடும்பம், ஆகாஷின் குடும்பம் என அனைவரும் காத்திருக்க, “வீல்…” என்ற சத்தத்தோடு குழந்தை வெளியே வந்தது. கார்த்திக் குழந்தையை ஆசையோடு பார்த்தான்.

‘எத்தனை வலிகள்? வேதனை…’ கீதா சோர்வாகப் படுத்திருந்தாள். ஆகாஷ் தன் தங்கையின் தலை கோதினான். கீதா, ஆகாஷை பார்த்துக் கண்கலங்கினாள்.

“ஏய்… என்ன?” என்று ஆகாஷ் தங்கையை அதட்ட, “ரொம்ப கஷ்டமா இருந்தது அண்ணா. கார்த்திக் என் கூட இருந்தாங்க. நீ அண்ணி கூட இருந்திருக்கணும் அண்ணா.” என்று அவள் அவனுக்கு மட்டும் கேட்கும்படி கூறினாள்.

ஆகாஷின் கண்களும் கலங்கியது. அனைவரின் கவனமும் குழந்தையிடம் இருக்க… ஆகாஷ், குழந்தையை ஆசையாகப் பெற்றுக்கொண்டான்.

“அப்பா… நானும் பிறக்கும் பொழுது இப்படி தான் இருந்தேனா?” கிருஷ் கேட்க, ஸ்ருதியின் நெஞ்சில் அவன் கேள்வி சுருக்கென்று தைத்தது.

ஆகாஷ் குழந்தையை ஆசையாக பார்ப்பதை ஸ்ருதி தவிப்போடு பார்த்தாள்.

ஆகாஷ், தன் மகனின் கேள்விக்கு ஆமோதிப்பாகத் தலை அசைத்தான். அவன் கவனம் முழுவதும் தன் தங்கையிடம் இருந்தது. கார்த்திக் கீதாவுக்கு உதவியாக ஏதேதோ செய்து கொண்டிருந்தான். பேசிக்கொண்டிருந்தான்.

‘இதே போல் ஸ்ருதி அனைத்து வேதனைகளையும் தனித்துத் தாங்கி இருப்பாளோ? நான் இல்லையே அவளுக்குத் துணையாக.’ அவன் மனம் குற்ற உணர்ச்சியில் ரணமாகத் துடித்தது.

ஆகாஷ், ஸ்ருதியின் அருகே நின்று கொண்டான்.

“உங்க அண்ணன் வீட்ல, இப்ப எல்லாம் வல்லினம் இருக்கிற மாதிரி தெரியலியே? வெறும் உயிர்மெய் மட்டும் தானோ?” கார்த்திக் கேட்க, கீதா அவனை முறைத்துப் பார்த்தாள்.

“குழந்தையை அத்தை கிட்ட கொடுங்க. அத்தை தங்க வளையல் போட்டு முறை பண்ணனும்.” சுமதி அதிகாரமாகக் கூற, “அத்தை முறை எல்லாம் வைரதில்லே பண்ணிருவோம்.”  கம்பீரமாகப் பொறுப்பெடுத்துக் கொண்டு குழந்தையை வாங்கினாள் ஸ்ருதி.

‘கம்பீரம் குறையாமல் இசைந்து கொடுக்கும் இவள் தான் என் டாலி!’ ஆகாஷின் கண்களில் பெருமிதம்.

ஆவுடை பாட்டி அவர்களுக்குத் துணையாக மருத்துவமனையில் இருக்க, பலரும் அங்கு இருந்ததால் ஆகாஷ், கிருஷ் ஸ்ருதி இரவு வீடு திரும்பினர்.

மூவரும் குளித்துவிட்டு அவர்கள் அறையில் அமைதியாக இருந்தனர். எல்லார்க்கும் ஓர் மனநிலை. கிருஷ் மட்டும் யோசித்து, யோசித்து குழந்தை பற்றிய சந்தேகங்களைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

‘பிறக்கும் பொழுது பேபி கண் ஓபன் ஆகிருக்குமா? பிறக்கும் பொழுது பேபிக்கு நேம் தெரியுமா?’ என்று அவன் கேள்விகள் நீண்டு கொண்டே போக ஆகாஷ் அவனுக்கு பொறுமையாக பதில் சொல்லி கொண்டே இருக்க, கிருஷ் உறங்கிவிட்டான்.

“ஸ்ருதி…” ஆகாஷ் அழைக்க, அவளிடம் பதிலில்லை.

“ஸ்ருதி…” அருகே சென்று அவன் அவள் தோள்களை தொட, “அ…” என்று அவள் சற்று பதட்டமாகத் திரும்பினாள்.

“டாலி… என்ன ஆச்சு? ஏன் கண் கலங்குற? அத்தை நீ இத்தனை வருஷம் அழவே இல்லைன்னு சொன்னாங்க. ஆனால், நீ இப்ப அப்படி இல்லை.” அவன் கூற, “குறும்பா…” அவன் மேல் சாய்ந்து கொண்டு கதறினாள்.

‘குறும்பா…’ அவன் புன்னகைத்துக் கொண்டான். அவள் தலை கோதி, “அழறதுக்கு மட்டும் தான் டாலி, நீ என் கிட்ட வர.” அது கேலியா, வருத்தமா ஸ்ருதிக்கு தெரியவில்லை. அவன் முகம் பார்த்தாள்.

“நான் உன்னைவிட்டுட்டு போயிருக்க கூடாதில்லை? நீங்க இப்படி எல்லாம் கிருஷை பார்க்கவே இல்லைல?” அவள் குற்ற உணர்ச்சியோடு கேட்க, “நான் உன்னைத் தேடி வந்திருந்தா பார்த்திருக்கலாமே ஸ்ருதி.” அவன் அவளைச் சமாதானம் செய்தான்.

எதற்காகச் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள் என்ற காரணமே பிசுபிசுத்துக் கொண்டிருந்தது.

“உங்களுக்கு தான் குழந்தை விஷயம் தெரியாதே?” அவள் கேட்க, “நான் என் டாலிக்காக வந்திருக்கனும் தானே?” அவன் கேட்க, “குறும்பா…” அவள் முணுமுணுத்தாள்.

“இதை கேட்டு எத்தனை வருஷங்கள்?” அவன் கேட்க, ஸ்ருதி தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள்.

‘என்ன யோசனை?’ என்பது போல், அவன் புருவங்கள் உயர்த்த, “அடுத்த குழந்தைக்கு நான் ஒரு வேலை கூட பார்க்க மாட்டேன். பிறந்ததில் இருந்து, எல்லா வேலையும் உங்களுக்கு தான் ஓகேவா?” அவள் செய்த தவற்றுக்கு எளிதாக அவள் வழி கண்டுபிடித்துக் கூறிவிட்டாள்.

அவன் மறுப்பாகத் தலை அசைத்தான். ‘ஏன்?’ என்பது போல் அவள் புருவங்களை உயர்த்த, “அதுக்கும் முன்னாடி வேற கடமை இருக்கு.” அவன் கூற, ‘என்ன?’ என்பது போல் அவனைப் பார்த்தாள் ஸ்ருதி.

“நீ குழந்தை விஷயத்தை சொல்லும் பொழுது, நான் உன்னை தாங்கணும். உனக்கு ஒன்னொன்னும் பார்த்து பார்த்து செய்யணும். உன் வலிகளை நான் சுமக்கனும். ஊரை கூட்டி, உனக்கு வளைகாப்பு பண்ணனும். உன்னை உங்க வீட்டுக்கு அனுப்பவே மாட்டேன். என் கூடவே இருக்கணும்.” அவன் கூற, ஸ்ருதி அவனை மௌனமாகப் பார்த்தாள்.

“என்ன சொல்ற?” என்று அவன் கேட்க, “உங்க கேரக்ட்டருக்கு இந்த பேச்சு செட் ஆகலை.” அவள் கேலி பேச, “ஒய்…” என்று அவன் அவள் காதை திருக, “நாங்களும் கலாய்ப்போமில்லை.” என்று கண்சிமிட்டிச் சிரித்தாள் ஸ்ருதி.

அவர்கள் பேசிக்கொண்டே இருக்க, மணி பன்னிரண்டை எட்டியது.

அவன் “ஹாப்பி பர்த்டே டாலி…” பரிசுப்பொருளை நீட்டினான்.

ஸ்ருதி அவனை பார்க்க, “ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி வாங்காம போய்ட்டியா, இன்னைக்கு செலவு மிச்சம்.” அவன் கேலியில் அவன் கைகளை தட்டினாள் ஸ்ருதி.

சந்தோஷமாக வாங்கிக் கொண்டான் ஆகாஷ்.

அவள் அதைப் பிரிக்க, பழுப்பு நிறத்தில் ஒரு செடி. ஸ்ருதி அவனைப் புரியாமல் பார்த்தாள். ‘கண்டுபிடி…’ என்று அவன் அவளைச் சவாலாகப் பார்த்தான்.

அவள் அதை கைகளில் ஏந்தினாள். “குறும்பா… டாலி…” என்று பல முறை அழைத்துப் பார்த்தாள். ஒரு பயனுமில்லை. “குறும்பா.. லவ் யு சோ மச்…” என்று கூறிப்பார்த்தாள். அப்படியும் எந்த பயனுமில்லை.

அந்த செடியை கைகளில் ஏந்தினாள். அங்குமிங்கும்  தொட்டுப் பார்த்தாள். “ம்…” ஒரு பயனுமில்லை. ஆகாஷை முறைத்துப் பார்த்தாள் ஸ்ருதி.

“இப்படி எல்லாம் பார்த்தாலும் வராது.” அவன் அவளை இன்னும் சீண்டினான்.

அவன் கைகளில் கொடுத்தாள். அது பழுப்பு நிற செடியாக மட்டுமே இருந்தது.  நொடியில் அவள் கண்களில் மின்னல்.

‘அவள் கண்டுபிடித்து விட்டாள்.’ என்று அவன் கண்டுகொண்டான்.  அவளும் அதைத் தொட, இருவரின் கைகளும் அதில் பட, அந்த செடியில் குட்டி குட்டி இலைகளும், குட்டி குட்டி ரோஜா பூக்களும் பூத்து குலுங்கின.

அவள் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது. கருவிழிகள், இலைகளுக்கும், பூக்களுக்குப் பின்னும் சுழன்றது.  “செயற்கைன்னு சொல்லவே முடியாது. இயற்கை மாதிரி இருக்கு.” அவள் குரலில் பாராட்டு.

அவள் கைகளை தன் கைகளுக்குள் செடியோடு சேர்த்து பிடித்து கொண்டு, “நீ என் கூட இருந்தா மட்டும் தான் என் வாழ்க்கை இப்படி பூத்து குலுங்கும்.” அவன் குரலில் காதல் வழிய, ஸ்ருதி அதை அவள் கைகளில் வாங்கி கொண்டாள்.

“இதை இப்படி பாதுக்காக்க வேண்டியது என் பொறுப்பு.” அவள் அன்பு மேலோங்க கூற, அவன் அவள் நெற்றியில் இதழ் பதித்து , “ஹாப்பி பர்த்டே டாலி.” அவன் கூற, “செம்மையா பண்ணிருக்கீங்க.” அவள் அவனைப் பாராட்டினாள்.

“உன்னை விடவா?” அவன் கேட்க, “நானெல்லாம் ஜூஜிபி.” அவள் கூற, ‘இவள் ஜூஜிபியா?’ அவன் அவளை மெச்சுதலாகப் பார்த்தான்.

“நீங்க இன்னும் நிறைய ரோபோட் பண்ணிருக்கலாம்.” ஸ்ருதி கூற, “ரோபோட் பக்கம் போனாலே உன் ஞாபகம். அது தான்… “அவன் தடுமாறினான்.

“இனி பண்ணிடுவோம்.” அவள் அவனிடம் உறுதியாக கூற, “வெயிட்டிங் டாலி…” அவன் கைகளை விரிக்க, அவனுள் அவள் புதைந்து கொண்டாள்.

மறுநாள் காலையில், ஆகாஷ் கிருஷ், ஸ்ருதி இருவரையும் எழுப்பினான்.

“நான் ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் நிம்மதியா தூங்குறேன். அது பொறுக்கலியா?” உருண்டு அவன் மடியில் படுத்துக்கொண்டே கேட்டாள் ஸ்ருதி.

ஆகாஷ், வாஞ்சையோடு அவளை பார்த்தான். கிருஷ் தூக்கத்தில் ஆகாஷ் மீது கைகளைப் போட்டான்.

ஆகாஷ் சற்று உணர்ச்சிவசப்பட்டான். “டாலி…” அவள் காதில் அவன் கிசுகிசுக்க, “ம்…” தூக்க கலக்கத்தில் அவள் கூற, “யாரும் நிம்மதியா இருக்க கூடாதுங்கிறது தான் என் கொள்கை.” அவன் மீண்டும் கிசுகிக்க, அவள் எழுந்தமர்ந்து அவனைக் கோபமாகப் பார்த்தாள்.

“கிளம்பு… கிளம்பு… நாம ஒரு இடத்துக்கு போறோம்.” அவன் கூற, “ஹாஸ்பிடல் போகணும். கீதாவை பார்க்கணும்.” அவள் கூற, “அம்மா… பாட்டி… கார்த்திக்… அவங்க அம்மா… எல்லாரும் இருக்காங்க. நீங்க கிளம்புங்க.” என்று கூறி அவர்களைக் கிளப்பி அழைத்துச் சென்றான் ஆகாஷ்.

அவர்களோடு டாமும்!

அவர்கள் அந்த அதிகாலை நேரத்தில், பெசன்ட்நகர் கடற்கரைக்குச் சென்றனர். “பீச்…” கிருஷ் ஆர்பரித்தான்.

ஸ்ருதி அவனைக் காதலோடு பார்த்தாள்.

டாம் சிப்பியைத் தேடும் வேலையில் தீவிரமாக இறங்கியது. கிருஷ், ஆகாஷ் இருவரும் கடற்கரையில் விளையாட, ஸ்ருதி டாமோடு சேர்ந்து சிப்பியைத் தேடினாள்.

அன்று போல், சிப்பியைத் தேடும் மும்முரத்தில் கடல் அலையில் அவள் தடுமாற, அவளை தன் பக்கம் இழுத்தான் ஆகாஷ். நிலை தடுமாறி, அவன் மீது சரிந்தாள் ஸ்ருதி.

மணலின் நறநறப்பு ஸ்ருதியின் தேகத்தைத் தீண்டிவிடாமல், அன்று போல் இன்றும் ஆகாஷ் அவளைத் தனதாக்கிக் கொண்டான்.

ஸ்ருதி அவனைப் பற்றுக் கோலாக அவன் தோள்களைப் பற்றிக்கொண்டாள். அவள் விழிகளில் இன்று அச்சமில்லை. காதலும்… வெட்கமும்! காதல் அந்த குறும்பு கண்களைப் பார்த்த நொடி இன்னும் அதிகமானது.

“மீ டூ…” அந்த கடல்நீரில் மொந்தென்று அவர்கள் மீது விழுந்தான் கிருஷ்.

“டேய்… நான் தாங்க மாட்டேன். குறும்பு செய்யாத கிருஷ்…” சுகமாகக் கெஞ்சினான் ஆகாஷ்.

‘யாரும் வந்துவிடுவார்களோ?’ என்று விலக எத்தனித்தாள் ஸ்ருதி.

“நான் அப்படி தான் குறும்பு பண்ணுவேன்.” கூறிக்கொண்டு எழுந்து தன் தந்தையை முறைத்தான் கிருஷ்.

“குறும்பு ரொம்ப ஜாஸ்த்தியான ரசிக்காது.” என்று ஆகாஷ், கிருஷை மிரட்ட, “குறும்பே இல்லைனா வாழ்க்கை ருசிக்காது.” அவன் செவிகளில் அவள் சிரித்துக்கொண்டே முணுமுணுத்தாள்.

“அப்படி?” என்று அவன் குறும்பு புன்னகையோடு கண்களைச் சிமிட்டினான். அவன் கண்சிமிட்டலில் அவள் புன்னகைக்க, தாய், தந்தையின் இன்முகத்தில் கிருஷும் புன்னகைத்தான்.

அவர்கள் வாழ்வில், இனி என்றென்றும் புன்னகை மட்டுமே!

குறும்புகள் இல்லா வாழ்க்கை ருசிக்காது…

குறும்புகள் எல்லை மீறும் பொழுது வாழ்க்கை ரசிக்காது…

மற்றவர் மனம் கோணாமல், குறும்பு பார்வையோடு பயணிப்போம்…

நம் வாழ்வில் என்றென்றும் புன்னகை பூ பூத்துக் குலுங்கட்டும்…

இப்படிக்கு அகிலா கண்ணன்.