Kaarkaala Vaanavil – 2

அத்தியாயம் – 2

குற்றாலத்தில் அம்மாவின் பெயரில் இருந்த ஒரு வீடும், ஒரு ஏக்கர் நிலமும் கார்குழலியின் வாழ்க்கைக்கு ஆதாரமாக மாறிப்போனது. மனோகரன் கார்டியன் என்று கையெழுத்து போட்டு, கார்குழலியின் தம்பி மற்றும் தங்கைகளைப் பள்ளியில் சேர்த்துவிட்டார்.

அவர் அடுத்த தெருவில் ஒரு வீட்டில் குடியேற மகிழ்வதனியை அங்கிருந்த பள்ளியில் மேல் படிப்பிற்கு சேர்க்க, “அப்பா கார்குழலியையும் சேர்த்து விடுங்கப்பா” மகள் கொஞ்சலாகக் கேட்க மனோகரன் அவளின் பேச்சிற்கு செவி சாய்த்தார்.

மறுநாள் மூவரும் கார்குழலியின் வீட்டிற்கு சென்றனர்.

அவளின் வீட்டைச்சுற்றி விவசாய நிலமும், அதற்கு அருகே குழலியின் வீடும் அமைந்திருந்தது. அந்த அமைதியான சூழல் மனதிற்கு இதமாக இருக்க வீட்டிற்கு நிழல் கொடுத்தது வாசலில் இருந்த வேப்பமரம்.

“குழலி” என்ற அழைப்புடன் அவர்கள் மூவரும் வீட்டிற்குள் நுழைய சரவணன் தான்,

“வாங்கப்பா.. வாங்கம்மா..” என்று அழைத்த சரவணன் தன் தங்கை அனிதாவிடம், “நீ போய் தொழுவத்தில் இருக்கும் அக்காவை வரச்சொல்லு” என்றான் பொறுப்பு உள்ளவனாக.

அவர்கள் மூவரும் அமரப் பாய்விரித்து போட்டுவிட்டு, தன் சின்னத் தங்கையிடம் “நீ போய் அவங்களுக்கு மோர் எடுத்துட்டு வா” என்றான்.

பின்னாடி தொழுவத்திற்கு ஓடிய அனிதா, “அக்கா உன்னைப் பார்க்க மகிழ் அக்கா, அவங்களோட அப்பா, அம்மா எல்லோரும் வந்திருக்காங்க” என்று குரல்கொடுக்க,  “நீ அவங்களோட போய் பேசிட்டு  இரு அனிதா. நான் இதோ வரேன்” என்றாள்.

காயத்ரி ஓடிச்சென்று வந்திருந்த மூவருக்கும் மோர் எடுத்து வந்து கொடுக்க, “படிப்பு  எல்லாம்  எப்படிப்பா போகுது” என்று விசாரித்தார் மனோகரன்.

“ம்ம் நல்லா போகுதுப்பா” அவன் சொல்லி முடிக்கும்போது வீட்டிற்குள் நுழைந்த குழலி, “என்னப்பா இவ்வளவு தூரம் வந்து இருக்கீங்க? நீங்க மகிழிடம் ஒரு வார்த்தை சொல்லியிருந்தா நான் வந்திருப்பேன் இல்ல” என்றாள் புன்னகையுடன்.

அதுவரை அமைதியாக இருந்த பரிமளா, “அது சரி  உங்க வீடு ஐம்பது மையிலுக்கு அந்தள்ள இருக்குதுங்கற நினைப்பா குழலி. ஒரு  வீதி முன்ன பின்ன.இது உனக்குத் தூரமா?” அவர் வேண்டுமென்றே கிண்டலடிக்க மகிழ் மட்டும் அமைதியாக குழலியின் முகம்  பார்த்தாள்.

அவளின் முகத்தில் சோர்வு உணர்ந்து, “வாடி வந்து உட்கார்ந்து பேசு” என்று அவளின் கையைப்பிடித்து அருகிலிருந்த முக்காலியில் அமர வைத்தாள். பரிமளா தன் கணவனிடம், ‘பேசுங்க’ என்றாள் விழிஜாடையில்.

இருவரின் முகத்தையும் கண்ட கார்குழலி, “அம்மா என்னன்னு சொல்லுங்க” என்றதும், “உன்னை நாங்க படிக்க வைக்க நினைக்கிறோம். நீயும் மகிழுடன் சேர்ந்து பள்ளிக்கூடம் போறீயா” என்றார் எந்தவிதமான எதிர்ப்பார்ப்பும் இல்லாத முகத்துடன்.

கார்குழலி அமைதியாக மூவரையும் விழிகளால் ஏறிட்டாள்.

ஒரு தோழி என்ற நிலையைத் தாண்டி மகிழ் செய்த உதவுகளும், மகளின்  சொல்லுக்கும் மறுப்பேச்சு பேசாமல் உதவி செய்யும் அவளின் பெற்றோரையும் பார்த்து அவளின் நெஞ்சு விம்மியது.

பெண் என்றாலே பாரம் என்று நினைக்கும் இந்தக் காலத்தில் அவர்கள் செய்த உதவியை அவளால் மறக்கவே முடியாது. இப்போது அவளைப் படிக்க வைக்கிறேன் என்று சொல்லும் அவர்களிக்கு அவள் என்ன கைமாறு செய்யப் போகிறாள்?

“அம்மா அதெல்லாம் வேண்டாம். இனிமேல் என் வாழ்க்கையை தம்பி தங்கைகளுக்காக வாழப் போகிறேன். நானும் பள்ளிக்கூடம் கிளம்பிவிட்டால் இவர்களைக் கவனிப்பது  யாரும்மா” நிதர்சனம் புரிந்து அவள் பதில் கொடுத்தாள்.

கணவனும்  மனைவியும் ஒருவரையொருவர் பார்த்துகொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் மகளைப் பார்க்க, “சரிடி அப்போ நீ டுடேரியல் போய்  படிக்கிறீயா? படிப்பு இல்லாமல் யாரும் நம்மை மதிக்கமாட்டாங்க குழலி” என்றாள் தோழியின் கரம்பிடித்து.

“இல்ல மகிழ்.. நீ நல்லா படி.. எனக்கு இதோ இருக்கு இரண்டு காளை மாடும், ஒரு கறவை மாடு,  நாலு ஆடுக்குட்டி, ஒரு ஏக்கர் நிலம்.. நான் சீக்கிரம் மேலே வந்துவிடுவேன்டி..” என்றாள் கண்களில் நம்பிக்கையுடன்.

அவளின் இந்த உறுதியை கண்டு பரிமளா, “இங்கே வாடாம்மா” என்றழைக்க குழலி அவரின் அருகே செல்ல அவளின் நெற்றியில் இதழ் ஒற்றி எடுத்தவர்,

“உன்னோட இந்த நம்பிக்கையும், தைரியமான பேச்சும் மனசுக்கு நிறைவா இருக்கு கண்ணம்மா. நீ என்ன உதவி வேண்டுமென்றாலும் தயங்காமல்  கேளு. நாங்க இருக்கோம்..” என்றவர் தன்னருகே அமர்ந்திருந்த மகளையும் இழுத்து அணைத்துக் கொண்டார்.

அப்புறம் சிறிதுநேரம் பேசிவிட்டு அவர்கள் கிளம்ப மகிழ் மட்டும் ஓடிவது, “நாளையிலிருந்து நான்  ஸ்கூல் போறேன் குழலி. உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன். மாலை இங்கேதான் நேரா வருவேன்” தோழியின் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்.

அவர்களை அனுப்பிவிட்டு  வீட்டிற்குள் நுழைந்த கார்குழலி தன்  தம்பி  தங்கைகளிடம், “நம்ம மேல நல்ல மதிப்பும் மரியாதையும் வெச்சி இருக்காங்க மனோ அப்பாவும், பரிமளா அம்மாவும் அதைக் காப்பாற்றுவீங்கன்னு நினைக்கிறேன்” என்றவள் பின் வாசலின் வழியாக கொள்ளை புறத்திற்கு சென்றாள்.

அந்த இடத்தில் ஒருபுறம் மாட்டு தொழுவம் இருக்க இன்னொரு  புறம் கிணறும் இருக்க நடுவே கொஞ்ச இடம் மட்டும் மீதியாக இருப்பதை கவனித்துவிட்டு அந்தபக்கம் போன செல்லதாயைப் பார்த்தும், “அக்கா” என்று அழைத்தாள்.

அவள் அழைத்த பெண்மணி நின்று, “என்னடி குழலி எதுக்கு இப்போ கூப்பிடற” என்று கேட்க, “அக்கா நம்ம பெரிய ஐயா வீட்டில் இரண்டு  வாழக்கன்னு கேட்ட கொடுப்பாங்களா” என்று கேட்டதும்,

“ம்ம் கிடைக்கும் ஜோடி வாழக்கன்னு 200 ரூபாய் கேட்பாங்க” என்றதும் சிந்தனையுடன் மீண்டும் வீட்டிற்குள் நுழைந்தாள். தன் தாய் இறக்கும்போது சேர்த்து வைத்த பணம் பத்தாயிரத்தில் ஒரு இரண்டாயிரம் ரூபாயை எடுத்துகொண்டு பெரிய பண்ணையார் வீட்டை நோக்கி நடந்தாள்.

அந்த ஊரின் பெரிய பண்ணையார் என்று சொன்னாலே அதில் முதலில் ஞாபகத்திற்கு வருவது தர்மசீலனின் முகம் தான். அவர் பெயர் போலவே தர்மம் செய்யும் குணம் உடையவர்.

அவரின் வீடு நாலாபுறமும் வயல்வெளிக்கு நடுவே தன் வீட்டைக் கம்பீரத்துடன் அமைத்திருக்க வீட்டின் கேட் அருகே இரண்டு தென்னங்கன்று விண்ணை தொட்டு கொண்டிருந்தது.

அவள் மெல்ல கேட்டிற்குள் நுழைந்த அங்கே வேலை செய்த பெண்மணியிடம், “ஐயா வீட்டில் இருக்காங்களா” என்று தயக்கத்துடன் கேட்க அவளின் குரல்கேட்டு சமையலறையிலிருந்து எட்டிப்பார்த்தார் செண்பகம். தர்மசீலனின் மனைவி.

“யாரது” என்று அவர் வாசலுக்கு வர, “அம்மா எனக்கு இருபது தென்னங்கன்னும், பத்து வாழக்கன்னும் வேணும்” என்றதும் அவர் புன்னகையுடன் அவளின் அருகே வந்தார்.

“இந்த வயசில் விவசாயம் பண்ண போறேன்னு சொன்னதும் இல்லாமல் அதற்கு தேவையானவற்றை வாங்க வந்திருக்கிற இல்ல..” அவளை வாசலில் நிற்க வைத்துவிட்டு, “பூரணி” என்று வீட்டிற்குள் குரல் கொடுத்தார்.

தர்மசீலன் – செண்பகத்தின் ஒரே  மகனான குணசீலனின் மனைவி பூரணி. அடுத்த நிமிஷம் அவர் வாசலுக்கு வந்து தன் அத்தையிடம், “என்னங்கத்தை” என்று பணிவுடன் கேட்டாள்.

“இந்தப் பொண்ணு பேரு கார்குழலி. நம்ம செல்வியோட மக. இவளுக்கு இருபது வாழக்கன்னும், இருபது தென்னங்கன்னும், அப்படியே ஒரு படி விதை நெல்லும் எடுத்துவிட்டு  வாம்மா” என்றார்.

அவர்கள் இருவரும் பேசுவதை பார்த்தபடி நின்றிருந்தவளை  இழுத்து அங்கிருந்த படியில் அமர வைத்த செண்பகம், “என்னோட  மருமகளுக்கு நல்ல கைராசி கண்ணு. அவ கையாள நீ விதை வாங்கி விளைச்சல் பண்ணின நீ நல்ல நிலைக்கு வந்திருவ” என்றவர் பாசத்துடன் கார்குழலியின் முகத்தை வருடினார்.

சிறிது நேரத்தில் அத்தை சொன்னதை எல்லாம் வேலைகாரர்களிடம் கொடுத்து அனுப்பிவிட்டு விதை நெல்லுடன் வந்த பூரணி, “வா குழலி.. இந்த விதை நெல்லு.. நீ சீக்கிரமே நல்ல நிலைக்கு வரணும்” என்ற ஆசிர்வாதத்துடன் அவளுக்கு நெல்லை கொடுத்த்தார்.

அவள் அதை வாங்கிகொண்டு மரக்கன்றுகளுக்கு பணம் கொடுக்க, “இது வேண்டாம் புள்ள. நீ சின்னப் பொண்ணு இந்த விவசாயத்தில் எத்தனை கஷ்டம் இருக்குமுன்னு எங்களுக்கும் தெரியும். நீ பணத்தை பத்திரமா வை கூலி கொடுக்கத் தேவைப்படும்” என்று சொல்லி மாமியாரும், மருமகளும் குழலியை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

அன்று வாங்கி வந்த மரங்களைப் பின்னாடி இருந்த கொஞ்ச இடத்தில் கொண்டு வந்து வைத்தவள், மறுநாளிலிருந்து நிலத்தை கடப்பாரையால்  கொத்திப் புல்லை பிடிங்கி வீசிவிட்டு நிலத்தை சுத்தம் செய்தாள். மறுநாள் இரண்டு காளை மாடுகளைக் கொண்டு நிலத்தை உழும் வேலையைத் தொடங்கிவிட்டாள்.

மறுநாள் வழக்கம்போலப் பள்ளிக்கூடம் சென்ற மகிழ் எதிர்ப்பார்த்தபடி வயலின் ஓரத்தில் நின்றிருந்தான். அவனைக் கண்டதும் அவள் முகம் வெக்கத்தில் சிவக்க மெல்ல நடந்தாள்.

அவள் அவனைக் கடந்து செல்ல நினைக்கும்போது, “வதனி” என்று அவளைத் தடுத்தது அவனின் குரல்.

அவள் மெல்ல திரும்பிப் பார்வையால் என்னவென்று கேட்க, “இங்கே வா” என்றான்.

அவள் மறுப்பாகத் தலையசைத்துவிட்டு இரண்டு அடி எடுத்து வைக்க அவளின் அருகே வந்தவன் அவளின் கரம்பிடித்து தடுத்தான்.

“என்ன வதனி நீ வர வர என்னோடு பேசாமல் போற, என்ன காரணம்ன்னு தெரியனும் சொல்லு” என்றான் வருத்தம் தோய்ந்த குரலில்.

அவனின் வருத்தம் அவளைப் பாதிக்க, “நான் பெரிய பொண்ணு ஆகிட்டேன். பசங்க கூட பேசக்கூடாதுன்னு அம்மா சொன்னாங்கடா. அதன் உங்கூட பேசவும் தயக்கமா இருக்கு” என்றாள் தலையைக் குனிந்தபடி.

அவளின் முகத்தை ஒரு விரல்கொண்டு நிமிர்த்தி அவளின் பார்வையை சந்தித்தவனோ, “நானும் தான் பெரிய பையன் ஆகிட்டேன். என்னைப் பொண்ணுங்க கூட பேசக்கூடாதுன்னு எங்க அம்மா சொல்லவே இல்லையேடி” என்றதும் அவளின் முகம் வேகத்தில் சிவந்துவிட்டது.

அவனின் கரத்திலிருந்து தன் கரத்தை உருவிக்கொண்டு ஒரே ஓட்டமாக ஓடிய மகிழை பார்த்து, “வதனி பதில் சொல்லிட்டு போடீ” என்றவனின் சிரிப்பொலி அவளைத் தொடர்ந்து வந்தது.

அவளின் உள்ளம் படபடக்க ஓடிவரவே, “ஏய் மெதுவா வராமல் எதுக்குடி இப்படி ஓடிவர” என்று கேட்டனர் மற்ற தோழிகள்.

“இல்ல ஸ்கூலுக்கு லேட் ஆச்சு இல்ல.  அதாண்டி வேகமாக ஓடிவந்தேன்” என்று அவர்களைச் சமாளித்த வதனி மெல்ல திரும்பி பார்க்க அவனோ குறும்புடன் அவளைப் பார்த்து கண்ணடிக்க இவளுக்கு குப்பென்று வேர்த்தது.

மார்பின் குறுக்கே அவன் கைகளைக் கட்டிக்கொண்டு அவன் நின்ற தோற்றம் அவளின் ஆழ்மனதில் இடம்பிடித்தது.

அவள் பின்னாடி திரும்பிப் பார்த்தபடியே நடப்பதைக் கண்ட சௌந்தர்யா, “யாரை பார்க்கற” என்ற கேள்வியுடன் பின்னால் திரும்பிப் பார்க்க அங்கே யாரையும் காணவில்லை.

ஆனால் மகிழ்வதனி திரும்பிப் பார்க்கும்போது அவன் சிரித்தபடி பின் தொடர்ந்தான். சாண்டில் கலர் சர்ட், ப்ளூ கலர் ஜீன்ஸ் அணிந்து வசீகரமான புன்னகையோடு தன்னை வருவதைக் கவனித்தவளோ  அவனிடமிருந்து தப்பிக்க வேகமாக நடக்க தொடங்கினாள்.

அன்று மாலை வீட்டிற்கு வரும் வழியில் கார்குழலியின் வீட்டிற்கு சென்ற மகிழ்வதனி, “இந்தப் புக்கில் விவசாயம் செய்வது பற்றி விளக்கமாகக் கொடுத்து இருக்காங்க” புத்தகத்தை அவளிடம் கொடுத்துவிட்டு தன்னருகே எழுதிக் கொண்டிருந்த அனிதாவிடம்,

“இன்னைக்கு என்ன ஹோம் வொர்க் கொடுத்தாங்க” என்றதும் அவள் கணக்கு நோட்டை எடுத்து அவளிடம் கொடுத்தாள். அவள் தங்கைக்குக் கணக்கு சொல்லி தருவதைப் புன்னகையோடு பார்த்த கார்குழலி தன் தம்பியை  அழைத்தாள்.

அவன், “அக்கா” என்ற அழைப்புடன்  அவளின் அருகே வர, “சரவணா உனக்கு என்ன சந்தேகம் வந்தாலும் மகிழ் அக்காகிட்ட கேளுடா. அவ நல்லா சொல்லி தருவா” என்று கூறியவள் பின்னாடி அடுப்பில் வைத்திருந்த சீம்பாலை கொண்டு வந்து மகிழிடம் கொடுத்தாள்.

“ஏய் சீம்பால் இல்ல இது” என்று அவள் ஆசையாக வாங்கி சாப்பிட, “நம்ம பட்டு இன்னைக்கு தான் கண்ணு போட்டுச்சு.. அதன் சீம்பால் காய்ச்சி வெச்சேன்” அவள் கூறியபடி தோழியை அழைத்துசென்று மாட்டையும், கன்னு குட்டியையும் காட்டினாள்.

வெள்ளை கன்றுக்குட்டியை ஆரத்தழுவி, “எங்க வீட்டிற்கு புதிய வரவாக வந்திருக்க குட்டி. உனக்கு என்ன பேரு வைக்கலாம்..” என்று தீவிரமாகச் சிந்தித்த மகிழ், “நிதி” என்று பெயர் வைத்தாள்.

அவளின் குழந்தைத்தனமான பேச்சை கண்டு வாய்விட்டு சிரித்த குழலி, “கன்னுக்குட்டிக்கு நிதி என்று பெயர் வைக்கிற மகிழ். நீ தேறிவிடுவாய்” என்று சொல்லிவிட்டு மீண்டும் கலகலவென்று சிரித்தாள்.

அவள் வாய்விட்டு கவலை இல்லாமல் சிரிப்பதைக் கண்ட மகிழ், “என் பெயரில் இருக்கிற மகிழ்ச்சியை இன்னைக்கு தான் குழலி உன் முகத்தில் பார்க்கறேன்” நிறைவுடன் கூறினாள்.

அதற்குள் வானம் இருட்டிவிட வீட்டிற்கு கிளம்பிய மகிழ் தன் தோழியிடம்  சில புத்தகத்தைக் கொடுத்து, “இதெல்லாம் அம்மா உன்னிடம் கொடுக்கச் சொன்னாங்க..” என்று பாட புத்தகத்தை அவளிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சிட்டென்று பறந்துவிட்டாள்.

இரவு வீட்டிற்கு வந்த மகளுக்கு உணவைக் கொடுத்துவிட்டு அவளுக்கு சொல்லி கொடுக்க பக்கத்தில் அமர்ந்த பரிமளம், “மகிழ் நீ இப்போ எடுத்திருக்கும் குரூப் ஆர்ட்ஸ் வித் கம்பியூட்டர் சயின்ஸ். இதை படிக்கும் பொழுதே நீ மற்ற கம்பியூட்டர் கோர்ஸ் சேர்த்து படிச்சா நல்லது..” என்றார்.

“சரிம்மா” என்றவள் எழுதும் வேலையைத் தொடர, “நெக்ஸ்ட் நாளையிலிருந்து உனக்கு இங்கே யோகா அண்ட் கராத்தே கிளாஸ் ஏற்பாடு பண்ணியிருக்கேன்” என்று சொல்ல அவள்  வகுப்புப் பாடத்தை முடித்துவிட்டு படுக்கையில் சென்று படுத்தாள்.

பரிமளா அவளின் முகத்தையே கேள்வியாக நோக்கிட, “மார்னிங் சீக்கிரம் எழுப்பி விடுங்க அம்மா. நான் கராத்தே கிளாஸ் அண்ட் யோகா கிளாஸ் இரண்டும் போறேன்” என்று கூறிவிட்டு படுத்து உறங்கிவிட்டாள்.

மறுநாளிலிருந்து யோகா, கராத்தே மற்றும் ஸ்விம்மிங் மூன்றுமே கற்றுக்கொண்டாள் மகிழ்வதனி.

ஒருப்பக்கம் கார்குழலி தன் விவசாயத்தை கண்ணும் கருத்துமாகப் பார்க்க இன்னொருபுறம் இவள் படிப்பில் கவனம் செலுத்தினாள்.

அன்று காலை அதே படித்துறைக்கு வந்த மகிழ் தன்னையும் அறியாமல் சிலநிமிடம் அங்கே சோகத்துடன் அமர்ந்தாள். அவன் சொன்ன வார்த்தைகள் இன்றும்  அவளின் காதோரம் ஒலிக்க பெருமூச்சுடன் அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்.

நாட்கள் ரெக்கை கட்டிக்கொண்டு பறந்தது.