Uyir kadhal 13

உயிர் காதலே உனக்காகவே 13

அந்த புகைப்படத்தைப் பார்த்ததும் ஹரிணியின் சிந்தனைகள் இங்கில்லை. கிட்டத்தட்ட பத்து பனிரென்டு வருடங்களுக்கு முன்பு சிறுமியாய் ஆனந்தனின் தோளில் தொற்றிக் கொண்டு மதுரை வீதிகளை வலம் வந்தது நியாபகம் வந்தது.

தன்னைத் தூக்கி வைத்துக் கொள்ள தனாவும் ஆனந்தனும் போடும் போட்டிகள் நினைவுக்கு வந்தன.

மதுரையில் திருவிழா நேரங்களில் இருவரது தோளிலும் மாறி மாறி தொற்றிக் கொண்டு, கண்ணில் பட்டதையெல்லாம் வாங்கிக் குவித்தது நினைவிருந்தது.

“டேய், இந்த குட்டி செல்லத்தை எங்க வீட்டுக்குத் தத்துக் குடுத்திடுங்கடா.” தன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டவாறு உரைத்த ஆனந்தனின் வார்த்தைகள் செவிக்குள்ளே எதிரொலிப்பதாய்.

“ஏன்? உங்க வீட்ல இருக்கற டிக்கெட் பத்தலையா உனக்கு. இவ எங்க வீட்டுக்கு ஒத்த தேவதை. எங்கம்மாவுக்கும் சித்திக்கும் உயிரு… உங்களுக்குத் தருவோமா? நீ வாடா ஹரிணி செல்லம்.” உரிமையுணர்வோடு தனா தன்னை இறுக்கிக் கொள்ள,

“டேய், எங்க வீட்ல எல்லாருமே என்னை விட பெரியவங்கடா. மாதவிகூட என்னைவிட பெருசு. இப்படி ஒரு குட்டித் தங்கச்சி இல்லையே என்கிட்ட.” அள்ளிக் கொண்டவனின் தோளில் வாகாய் சாய்ந்தபடி அவனது கண்ணாடியைக் கழட்டித் தான் அணிந்து கொண்டு சிரித்தது நினைவிருக்கிறது.

மதுரையில் ஆனந்தனின் வீட்டுக்கும் தனாவின் வீட்டுக்கும் இடையில் ஒற்றை சுவர் மட்டுமே தடுக்க. தனாவும் ஆனந்தனும் உயிர் நண்பர்களாய் பழகுவதைப் போல,

இரு வீட்டுப் பெரியவர்களும் நன்கு பழகிக் கொள்ள, ஹரிணிக்கு அந்நிய வீடாய் தோன்றியதில்லை ஆனந்தனின் வீடு. அங்கேயே உண்டு உறங்கியதுகூட உண்டு.

ஆனந்தனும் தனாவும் பள்ளி இறுதிவரை இணை பிரியாமல் ஒன்றாக படித்திருக்க, கல்லூரி செல்லும் போதுதான் பிரிந்திருந்தனர். ஆனந்தன் பொறியியல் தேர்ந்தெடுத்திருக்க,

தனா இளங்கலை அறிவியல் தேர்ந்தெடுத்திருந்தான். ஆனால் இருவருமே மதுரையிலேயே படித்ததால் கல்லூரி செல்லும் நேரம் தவிர்த்து ஒன்றாகவே இருப்பர்.

ஹரிணியின் தந்தைக்கு பெங்களூருவிற்கு மாற்றல் வரும்வரை அவர்களும் மதுரையில்தான் இருந்தனர்.

தனாவின் கல்லூரிப் படிப்பு முடிந்து வேலைக்குச் செல்லும்போதுதான் குடும்பத்தோடு திருச்சிக்கு மாறியிருந்தனர்.

ஆனந்தனின் நண்பர்களுக்கு என்றுமே அவன் ஹேப்பிதான். தனா அவனை ஹேப்பி என்று கூப்பிடுவதைப் பார்த்து இவளுக்குமே அவன் ஹேப்பிண்ணாதான்.

ஆசையாய் பாசமாய் தன்னைக் கொஞ்சும் ஹேப்பிண்ணாவின் நினைவுகள் மனப் பெட்டகத்தில் தூசி படிந்த ஓவியமாய் இருந்தது.
நேற்றிலிருந்து அவர் நியாபகம்தான்.

தான் சிக்மகளூர் காட்டில் சந்தித்தவன் ஹேப்பிண்ணாவை பெரிதும் நினைவுபடுத்த, பெரும் குழப்பம் அவளுக்கு. அவரைப் பார்த்தே பத்து பனிரெண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.

அப்பொழுதே பொறியியல் படித்து நல்ல வேலைக்குச் சென்றதாகதான் நியாபகம். அந்தக் காட்டில் நாடோடியாய் திரிய வேண்டிய அவசியம் என்ன? ஆனால், அது அவரில்லை என்று உறுதியாக ஒப்புக் கொள்ள மறுக்கும் இதயம்.

கண்களும் புருவமத்தி மச்சமும் ஆனந்தனை விடாமல் நினைவுபடுத்த, வெகுவாக குழம்பியபடி இருந்தவள், பெங்களூரு வந்ததும் முதல் வேலையாக தனாவுக்குதான் அழைத்திருந்தாள்.

“தனாண்ணா, ஹேப்பிண்ணா இப்ப எங்க இருக்காங்க?” எடுத்த எடுப்பிலேயே விசாரிக்க, தனா சட்டென்று அதிர்வதுகூடத் தெரிந்தது. ஏனென்றுதான் புரியவில்லை.

“எ… என்ன ஹரிணிம்மா திடீர்னு? அ… அவனைப் பத்திக் கேக்கற?”

“சும்மாதாண்ணா. என்னவோ திடீர்னு அவர் நியாபகம். ரொம்ப வருஷமாச்சுல்ல அவரைப் பார்த்து.

நாம மதுரையில இருக்கும்போது பார்த்தது. நீகூட அவரைப் பத்தி எதுவுமே பேசறதில்லை. இப்ப எங்கண்ணா இருக்காங்க?”
தொண்டையைக் கணைத்து சரி செய்து கொண்டவன், “ந… நானுமே பார்த்து ரொம்ப வருஷமாச்சுடா. அ… அவன் படிச்சு முடிக்கவும் வேலை கிடைச்சு ஃபாரின்ல போய் செட்டில் ஆகிட்டான்மா. அதுக்கப்புறம் அவனை நான் பார்க்கவே இல்லை. இப்பவும் ஃபாரின்லதான் இருக்கான். ஆனா எந்த கன்ட்ரின்னு தெரியலைடா.”

“ஓ… மதுரைக்குப் போனா தெரிஞ்சுக்கலாமே. நீ போய் பார்க்கலையாண்ணா?”

“எங்கடா நேரமிருக்கு? அவங்கவங்க அவங்கவங்க வேலையைப் பார்க்கத்தான் நேரம் சரியா இருக்கு. பார்க்கலாம் எதாவது விபரம் தெரிஞ்சா சொல்றேன்டா.” என்று அலைபேசியை வைத்திருந்தான்.

தனாவுடன் பேசியதில் சிக்மகளூரில் சந்தித்தவன் ஆனந்தன் இல்லை என்று எண்ணிக் கொண்டாலும் குழப்பம் முழுவதுமாய் தீர்ந்து விடவில்லை. சரண் கேட்கும்போதும்கூட இந்தக் குழப்பத்தில்தான் அவனிடம் உண்மைகளை மறைத்தது.

அவன் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். என்னை அந்த இக்கட்டில் இருந்து காப்பாற்றியவன்.

அவனைக் காட்டிக் கொடுப்பதில்லை என்று எண்ணிக் கொண்டாள்.

சரணாக கண்டுபிடித்தால் கண்டுபிடித்துக் கொள்ளட்டும் என்றுதான் வாயைத் திறக்காமல் அமர்ந்திருந்தது.

ஆனந்தனின் மென்மையான முகம் நினைவுக்கு வந்தது. தானாக முகம் கனிய, “ஹேப்பிண்ணா சோ கேரிங்… லவ்வபிள் பர்சன். என்மேல உயிரா இருப்பாங்க. ரொம்ப அமைதியானவங்க. அதிர்ந்துகூட பேசமாட்டாங்க.” பேசியவளை இடைமறித்த சுஜி,

“கூடவே செம ரொமான்டிக்… அதையும் சேர்த்துக்கோ. சும்மா உருகி உருகி கவிதையா எழுதியிருக்காரு.” டைரியின் பக்கங்களைப் புரட்டியவாறு சிலாகித்தவள்,

“வாழ்வில் பல உணர்வுகள், பல விதமாகத் தோன்றினாலும், காதல் என்ற ஒன்று மட்டும் நம் உயிரில் கலக்கும் அற்புதமான உணர்வு.

எனது 25 வருட வாழ்க்கையில் நான் உணர்ந்திராத அந்த அற்புத உணர்வுகள் அவள் முகத்தைப் பார்த்த நொடி பொங்கிப் பெருக,

அந்த நொடி என்னுள் ஆழமாய் அழுத்தமாய் தன் தடத்தைப் பதித்தவளை தடுக்கவியலாமல் தவித்தபடியிருந்தேன்.

ஆணென்ற கர்வம் அடியோடு அழிந்து போக, அவளிடம் மண்டியிட்ட மனதை மீட்கும் வழியறியாது தவிக்கும் சுகமான அவஸ்தையை எனக்குப் பரிசளித்தவள். அவள் என் தேவதை.

போன ஜென்ம பந்தத்தின் விட்டகுறை, தொட்டகுறையோ? பார்த்த முதல் பார்வையிலேயே ஒருத்தியால் இப்படி கொள்ளையடிக்க முடியுமா…?

என்னுள் நிகழும் மாற்றங்கள் அதிசயமாய் இருக்க… வாழும்நாள் முழுமைக்குமான பந்தம் இதுவென உள்ளம் உறுதி செய்ய…

அவளைப் பார்த்த நொடிகளில் இருந்து என் வாழ்க்கை நிகழ்வுகளின், உள்ளத்து உணர்வுகளின் எழுத்து வடிவமாய் இக்குறிப்பேடு…” ஏற்ற இறக்கத்தோடு முதல் பக்கத்தை வாசித்த சுஜி….

“வாவ்… செமயா ரசிச்சு எழுதியிருக்காரு. அவரோட லவ் ஸ்டோரி போல. அப்படியே கதை மாதிரியே எழுதியிருக்காரு பாரேன்.”

“ஹேப்பிண்ணா லவ் பண்ணாங்களா?” புன்னகையோடு சுஜியின் அருகில் தானும் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டவள் சுஜியோடு சேர்ந்து அந்த டைரியை படிக்கத் துவங்கினாள்.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்கள் கடிகார ஓசையையும் காகிதப் பக்கங்களைப் புரட்டும் ஓசையையும் தவிர வேறு ஓசையில்லாமல் நிசப்தமாயிருந்தது அறை. எழுதியிருந்தவரை படித்து முடித்திருந்தனர்.

“என்னடி பாதியோட முடிஞ்சிருச்சி? இதுக்கப்புறம் என்ன ஆச்சு? நல்ல நாவலைப் படிச்சிட்டு இருக்கறப்ப பாதியில பிடுங்கின மாதிரி இருக்கு.

அவர் கல்யாண செய்தியை பூரணிக்கிட்ட சொன்னாரா சொல்லலையாங்கறதை எழுதவே இல்லையே… ஒருவேளை அதுக்கப்புறம் எழுதக்கூட நேரமில்லாம லவ் பண்றதுல பிசியாகிட்டாரா?”

படபடவென்று சுஜி பேசிக் கொண்டிருக்க ஹரிணியின் முகமோ அதிர்வையும் குழப்பத்தையும் குத்தகைக்கு எடுத்திருந்தது.

‘நேற்று பேசும்போது தனா அண்ணன் சொன்னது என்ன? ஹேப்பிண்ணா ஃபாரினில் செட்டில் ஆகிவிட்டதாகத்தானே? ஆனால் இந்த டைரி கூறும் கதை வேறாக அல்லவா இருக்கிறது.

ஒருவேளை தனா அண்ணன் தெரியாமல் கூறியிருக்கலாமோ என்று தோன்றிய எண்ணத்தை உடனடியாக அழித்தாள்.

டைரியில்தான் தெளிவாக இருக்கிறதே ஆனந்தன் பெங்களூருவில் தங்கியிருந்ததே தனாவுடன்தான் என்று. அவன் தனாவை என்றுமே சேகர் என்றழைப்பது அவளுக்குத்தான் தெரியுமே.

ஆனால், தனா அண்ணன் ஏன் தன்னிடம் பொய் சொல்ல வேண்டும்? ஆனந்தனுக்கு என்னதான் ஆனது?’ யோசித்து யோசித்து மண்டையே வெடித்துவிடும் போல இருந்தது அவளுக்கு.

டைரியில் வேறு பக்கங்களில் ஏதேனும் எழுதியிருக்கிறதா என்று புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள் சுஜி. அந்த டைரியின் வெல்வெட் கவர் நீக்கும்படி இருக்கவும் அதை நீக்கிப் பார்த்தவளுக்கு சில புகைப்படங்கள் உள்ளே கிடைத்தன.

“ஏய், ஹரிணி இங்க பாரு இன்னும் கொஞ்சம் ஃபோட்டோஸ்லாம் உள்ள இருக்கு.” என்றபடி எடுத்துக் காட்டினாள் சுஜி. சிக்மகளூரில் ஆனந்தனும் பூரணியும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இருந்தன. கூடவே ஆனந்தன் தனது பயிற்சிவகுப்புத் தோழர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் சில இருந்தன.

அந்தப் புகைப்படங்களைப் பார்த்த ஹரிணியும் சுஜியும் அதிர்ச்சியோடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“ஹரிணி இதுல இருக்கறவங்க…” குழப்பத்தோடும் அதிர்ச்சியோடும் சுஜி வினவ,
அவளுக்குக் குறையாத அதிர்ச்சியோடு பதிலளித்தாள் ஹரிணி, “இது கலெக்டர் கிஷோர்.

இது ரேணு அண்ணன் ஜனார்த்தனன். இது அந்த ஃபாரஸ்ட் ஆபிசர் ஜார்ஜா இருக்கனும். இது ஹேப்பிண்ணா. இ… இது எங்க தனாண்ணா.”

“தனாண்ணாவா?” புகைப்படத்தை உற்றுப் பார்த்த சுஜி வெகுவாக அதிர்ச்சியடைய, “ம்ம் ஆமாம். அந்த டைரில சேகர்னு எழுதியிருக்கறது எங்க தனா அண்ணாவைதான். அவரோட முழு பேரு தனசேகர்.”

“என்னடி இது? இந்த ஃபோட்டோல இருக்கற மூனு பேர் கொலை செய்யப்பட்டு இருக்காங்க. எதுக்காக இந்த கொலைகள் நடக்குது. யார் பண்றாங்க?” சுஜி அதிர்விலிருந்து வெளிவராமல் புலம்ப,

பதில் சொல்லாமல் அந்தப் புகைப்படத்தையே பார்த்திருந்தாள் ஹரிணி. பந்தயக் குதிரையின் வேகத்தில் அவளது மனம் யோசித்துக் கொண்டிருந்தது.

ஆரம்பத்தில் இருந்து நடந்த அனைத்தையும் வரிசையாக மனதுக்குள் ஓட்டிப் பார்த்தாள்.

என்னதான் நடக்கிறது என்னைச் சுற்றி? மறைக்கப்பட்ட உண்மை எதையோ காலம் என்மூலமாக வெளிக்கொணர நினைக்கிறதோ…?

அனைத்துக் கொலைகளையும் செய்வது ஆனந்தன் என்பது புரிகிறது. ஆனால் எதற்காக? அவருடைய தோற்றமே சிதைந்து போய் நாடோடி போல அந்தக் காட்டினுள் அலைவது எதற்காக? பூரணி எங்கே போனாள்?

ஆனந்தனுக்கு என்னதான் ஆனது? விடையறியாக் கேள்விகள் சுற்றிச் சுழன்றன.

இற்றுவிடும்படி வலித்த தலையைப் பிடித்துக் கொண்டவள், சுஜி அலைபேசியை எடுத்து யாருக்கோ அழைக்கப் போவதைப் பார்த்து,

“யாருக்கு ஃபோன் பண்ற?”

“சரணுக்கு. அவர்கிட்ட இதையெல்லாம் சொல்லுவோம். இந்த கேஸ்ல அவருக்கு எதாவது க்ளு கிடைக்கும்… அதுமட்டுமில்ல தனா அண்ணனுக்கும் உங்க ஹேப்பிண்ணாவுக்கும் இதை தெரியப்படுத்தி அலர்ட் பண்ணனும்…

கொலைகாரனோட அடுத்த டார்கெட் அவங்களாகூட இருக்கலாம். தனா அண்ணன்கிட்ட கேட்டா எதாவது விபரம் தெரிய வருமில்ல.”

“இல்ல பண்ணாத.” என்றபடி அலைபேசியை வாங்கி வைத்தாள்.

குழப்பத்தோடு ஹரிணியைப் பார்த்த சுஜி, “ஏன்டி? அவர்கிட்ட சொன்னா இந்தப் பிரச்சனைக்கு நல்ல சொல்யூஷன் கிடைக்கும்.”

வெகு தயக்கமாக சுஜியைப் பார்த்த ஹரிணி, “நான் உங்ககிட்ட சில விஷயங்கள் சொல்லாம மறைச்சிட்டேன் சுஜி.”

“மறைச்சிட்டியா? என்னடி சொல்ற? எதை மறைச்ச?”

“சிக்மகளூர் காட்டுக்குள்ள நான் ஹேப்பிண்ணாவ பார்த்தேன். என்னை சஞ்சய் மகேஷ்கிட்டயிருந்து காப்பாத்தினதே அவர்தான்.

ஆனா, அவர் என்கிட்ட பேசவே இல்ல… நான் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் சொல்லல. அவர் முகம் முழுக்க தழும்புகளோட சுத்தமா மாறி இருக்குது. அடையாளமே தெரியல. அவர் குரல்கூட மாறிடுச்சி.

எனக்கு அவர்தானான்னு பயங்கர சந்தேகம் இருந்தது. ஆனா அந்த கண்களும், அவரோட ரெண்டு புருவத்துக்கு மத்தியில இருக்கற மச்சமும் அவர்தான்னு நினைக்க வச்சுது

இங்க ஊருக்கு வந்ததுமே முதல்ல தனா அண்ணனுக்குதான் ஃபோன் போட்டேன். ஆனா தனா அண்ணன் ஹேப்பிண்ணா ஃபாரின்ல செட்டில் ஆகிட்டாருன்னு சொன்னாங்க. சரி அப்ப காட்டுல பார்த்தது வேற யாரோன்னு நினைச்சேன். என்னைக் காப்பாத்துனவரை காட்டிக் கொடுக்க மனமில்லாமதான் சரண்கிட்ட சொல்லாம மறைச்சேன்.

ஆனா இப்ப… இந்த டைரியில இருக்கற விஷயத்தைப் பார்த்தா தனா அண்ணன் சொன்னது பொய்.

ஹேப்பிண்ணா ஃபாரின்ல இருந்து வந்து பெங்களூர்ல எங்க தனாண்ணா கூடதான் தங்கியிருந்திருக்காங்க.
தனா அண்ணன் ஏன் பொய் சொல்லனும்? ஹேப்பிண்ணாவுக்கு என்னதான் ஆச்சு? பூரணி எங்க? இதெல்லாம் முதல்ல தெரிஞ்சுக்கனும், அப்புறம்தான் சரண்கிட்ட சொல்லனும்.”

“என்னடி சொல்ற? அப்ப ஹேப்பிண்ணாவுக்கு என்ன ஆச்சுன்னு உங்க தனா அண்ணனுக்குத் தெரிஞ்சிருக்கும் இல்ல? மறுபடி அவருக்கு ஃபோன் போட்டு கேட்டுப் பார்க்கலாமா? இல்லன்னா சரண்கிட்ட சொன்னா அவர் விசாரிப்பாருல்ல?”

“இல்ல… தனாண்ணா என்கிட்ட எதையோ மறைக்குது. நாம கேட்டாலும் சொல்லாது. சரண்கிட்ட இப்ப விஷயத்தை சொன்னா தேவையில்லாம தனா அண்ணன் மேல சந்தேகப்படுவாரு. அவர் போலீசா எங்கண்ணனை விசாரிக்கறதை நான் விரும்பல சுஜி.

நாம மதுரைக்குப் போய் ஹேப்பிண்ணா வீட்ல விசாரிக்கலாம்.

ஒருவேளை தனாண்ணா சொல்றமாதிரி அவங்க நிஜமாவே ஃபாரின்ல இருந்தா அவங்களுக்கும் தனா அண்ணனுக்கும் இந்த கொலைகளைப் பத்தியும் கொலைகாரனைப்பத்தியும் அலர்ட் பண்ணிட்டு சரணுக்கும் தகவல் சொல்லலாம்.”

“என்னடி குழப்புற? அப்ப காட்டுல பார்த்தது யாரு?”

“சுஜி என்னை எதுவுமே கேட்காத. எனக்கே பயங்கர குழப்பமாதான் இருக்கு. எனக்கு இப்ப ஹேப்பிண்ணாவுக்கு என்ன ஆச்சுன்னு தெரிஞ்சுக்கனும். அதுக்கு மதுரைக்கு போகனும். நீ கூட வர்றியா?”

“ம்ம்… வரேன். ஆனா மதுரையில அவங்க வீடு எங்க இருக்குன்னு உனக்கு நியாபகம் இருக்கா?”

“ம்ம்… ஓரளவுக்கு நியாபகம் இருக்கு. இந்த டைரியிலதான் பாண்டியன் ஸ்டோர்ஸ்னு போட்ருக்கே. அங்க போய் விசாரிச்சுக்கலாம்.”

ஊருக்குச் செல்லத் தேவையானவற்றை மளமளவென்று எடுத்து வைத்தனர். கிளம்பி வெளியில் வந்ததும் திலகவதிக்கு அழைத்த ஹரிணி, “அத்தை, எனக்கு அம்மாவை பார்க்கனும் போல இருக்கு. ஊருக்கு கிளம்புறேன். இரண்டு நாள்ல திரும்பி வந்துடுவேன். போயிட்டு வரேன் அத்தை.”

“தனியாவா போற? நான் வேணும்னா கூட வரேன்மா.”

“இல்லத்தை தனியா போகல. சுஜியும் கூட வர்றா.”

“சரிம்மா பத்திரமா போயிட்டு வாங்க. சரண்கிட்ட சொல்லிட்டியா?”

“…” பதில் சொல்லாமல் ஹரிணி நிற்கவும் கோபத்தில் நிற்கிறாள் என்றெண்ணிக்கொண்டு,

“சரி… நான் சொல்லிக்கறேன்மா. அவனும் சிக்மகளூர் போயிருக்கான்.”

“சரி அத்தை ஊருக்கு போயிட்டு ஃபோன் போடுறேன்.” என்றவள் அலைபேசியை அணைத்துவிட்டு சுஜியுடன் இணைந்து ஹாஸ்டலை விட்டு வெளியேறினாள். ஆட்டோ ஒன்றை அமர்த்திக் கொண்டு இருவரும் பஸ்நிலையம் வந்தனர்.

மதுரை செல்லும் பஸ்ஸில் ஏறி அமர்ந்தவர்களுக்கு விடியலில் தாங்கள் சந்திக்கப் போகும் உண்மைகள் என்னென்ன என்றெண்ணி மலைப்பாக இருந்தது.

சிக்மகளூர் கெம்மணங்குண்டி வனச்சரகத்துக்குட்பட்ட காவல் நிலையத்தில் சரணும் ரகுவும் அமர்ந்து கொலை செய்யப்பட்ட வனத்துறை அதிகாரி ஜார்ஜின் பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் அவரைப் பற்றிய தகவல்கள் அடங்கிய கோப்புகளை கவனமாக படித்துக் கொண்டிருந்தனர்.

பெங்களூருவில் ஜனார்த்தனன் கொலைசெய்யப்பட்ட மாலில் இருந்து வெளியேறி அரசுப் பேருந்து ஒன்றில் ஏறிய கொலையாளியை சிசிடிவி மூலம் உறுதி செய்தவர்கள்,

அந்தப் பேருந்து செல்லும் அனைத்து வழிகளிலும் உள்ள கண்காணிப்பு கேமராவை கண்காணிக்கச் சொல்லி ரகுவின் தலைமையில் ஒரு குழுவை அமைத்திருந்தனர்.

அந்தக் குழுவினர் விடாமல் அனைத்து கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்ததில் இறுதியாக அந்தக் கொலையாளி சிக்மகளூர் செல்லும் பேருந்தில் ஏறியதாக தகவல் கொடுத்திருந்தனர்.

“அவன் பெங்களூரு மெஜஸ்டிக் பேருந்து நிலையத்தில் இருந்து சிக்மகளூர் பேருந்து ஏறியவரை சிசிடிவி பதிவுகள் இருக்கு சார்.

ஆனா அதன்பிறகு இன்னும்துல்லியமா அவன் எங்க இறங்கியிருப்பான்கிறதை எங்களால கண்டுபிடிக்க முடியல சார்.” என்று கூறியிருந்தான் ரகு.

ஆக கொலையாளி சிக்மகளூரைச் சார்ந்தவனாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என்று எண்ணியிருந்தான் சரண். இப்போது இந்த வன அலுவலர் ஜார்ஜின் கொலை அதை உறுதிப்படுத்தியது.

சஞ்சயின் தந்தை வனத்துறை அமைச்சர் ஆகையால் அவனை அடித்தது யார் என்று கண்டுபிடிக்கச் சொல்லி வேறு பிரஷர் மேல் பிரஷர் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

சஞ்சயின் காரில் கிடந்த ஹரிணியின் ஷால் ஒரு முக்கிய எவிடன்ஸ். சரணின் பார்வைக்கு உடனடியாக இந்தக் கேஸ் வந்ததாலேயே சரியாய் போனது.

இல்லையென்றால் அமைச்சரின் ஆட்கள் மூலமாக வேறு ஹரிணிக்குப் பிரச்சனைகள் வரக்கூடும்.

அதை நினைத்தாலே டென்ஷன் ஏறியது சரணுக்கு.

தேவையில்லாமல் பிரச்சனைகளில் போய் சிக்கியது மட்டுமல்லாமல், நடந்த உண்மையைக் கூறாமல் அடமெண்ட்டாக நின்ற ஹரிணியின் மீது கட்டுக்கடங்காத ஆத்திரம் வந்தது அவனுக்கு.

இவளுக்கு எந்தப் பிரச்சினையும் வரக்கூடாது என்று தான் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்து கொண்டிருக்க, இவளானால் நிலைமையின் தீவிரம் தெரியாமல் உண்மையை மறைக்கிறாள்.

தீரனும் அவள் பொய் சொல்கிறாள் என்று தெரிந்தும் அவளுக்குதான் சப்போர்ட் செய்கிறார். திலகவதியை கேட்கவே வேண்டாம்… மிகுந்த கடுப்பாயிருந்தது அவனுக்கு.

யாரென்று கண்டுபிடித்துவிட்டு அவளிடம் பேசிக் கொள்கிறேன் என்று உள்ளுக்குள் கருவிக் கொண்டவன் மீண்டும் விசாரணைக்காக சிக்மகளூர் வந்திருந்தான்.

சற்று வயது முதிர்ந்த வனத்துறை அதிகாரி ஒருவர்தான் ஜார்ஜ் கொலையுண்டு கிடந்ததையும் சஞ்சய் மற்றும் மகேஷ் அடிபட்டுக் கிடந்ததையும் பார்த்ததை விவரித்துக் கொண்டிருந்தார். கவனமாகக் கேட்டுக் கொண்டான் சரண்.

“அங்க பாதுகாப்பு கேமரா எதுவும் இருக்கா சார்? அதை செக் பண்ணீங்களா?”

“மொத்தமா இங்க காட்டுக்குள்ள நாற்பது கேமரா இருக்கு சார். அருவிக்கரையில ஒன்னு இருக்கு. ஆனா அது பழுதாயிருக்கு. சுற்றுலா வர்றவங்க உடைச்சிடறாங்க.
அதைத் தவிர மீதியெல்லாம் காட்டுக்குள்ள வனவிலங்குகள் நடமாட்டத்தைக் கண்காணிக்க வைக்கப்பட்டிருக்கு சார்.

கொலை நடந்த இடத்துல எந்த கேமராவும் இல்ல சார். அந்தப் பகுதிக்கு கொஞ்சம் பக்கத்துல இருக்கற கேமராவையெல்லாம் செக் பண்ணிட்டோம். எதுவுமே சந்தேகப்படற மாதிரி பதிவாகல சார்.”

“ஜார்ஜ் இந்தப் பகுதிக்கு வனத்துறை அதிகாரியா வந்து எவ்வளவு நாளாகுது?”

“ஒரு வாரம்தான் சார் ஆகுது. இதுக்கு முன்ன அஸ்ஸாம்ல இருந்துருக்காரு.”
உயிரை விடுவதற்காகவே இங்கு மாற்றலாகி வந்தான் போல என்றெண்ணிப் பெருமூச்சு விட்டவன் அந்த அதிகாரியிடம் விடைபெற்றுக் கொண்டான்.

காவல் நிலையத்தில் வழக்கு சம்பந்தமாக திரட்டிக் கொடுத்த அனைத்து கோப்புகளையும் பெற்றுக் கொண்டு வெளியே வந்தனர் சரணும் ரகுவும்.

“ரகு, நீ சிக்மகளூர்ல ஜார்ஜ் வீட்டுக்குப் போய் அவரோட பேரண்ட்ஸ்கிட்ட அவரைப் பத்தி அவரோட இளமைப் பருவத்தைப்பத்தி விசாரிச்சு ரிப்போர்ட் ரெடி பண்ணுங்க. ஒரு சின்ன விஷயம்கூட விட்டுட வேண்டாம்.

சொந்த ஊருக்கு ஒருவாரம் முன்னாடிதான் மாற்றலாகி வந்திருக்காரு பாவம். ரொம்பவே துக்கத்துல இருப்பாங்க. கொஞ்சம் பக்குவமாவே விசாரிங்க.

நான் இந்த மலை முகட்டு மேல இருக்கற சத்ய சஞ்சீவினி வைத்திய சாலைக்குப் போய் கொஞ்சம் விசாரணை நடத்த வேண்டி இருக்கு, அதை முடிச்சிட்டு வரேன்.”

ரகுவிற்கு கட்டளைப் பிறப்பித்துவிட்டு தனது வாகனத்தில் ஏறி அருவிக்கரை வரை வந்தவன், வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி மலை உச்சியை நோக்கி நடக்கலானான்.

காற்றில் குளுமையோடு மெல்லிய தூறலும் இருந்தது. நனையாமல் இருக்க ஜெர்க்கின் போட்டிருந்தாலும் அதை மீறி உடலுக்குள் குளிர் ஊடுருவியது. நிதானமாக நடந்து மலை உச்சியை அடைந்தவனின் பார்வையில் பட்டது சத்ய சஞ்சீவினி வைத்திய சாலை என்று கன்னடத்தில் பொறிக்கப்பட்ட பெயர் பலகை.

மிகவும் அமைதியான அந்த சூழலில் பலர் தியானம் செய்து கொண்டிருந்தனர். தனது காலணிகளைக் கழட்டி விட்டுவிட்டு உள்ளே சென்றவனை வரவேற்றது வயது முதிர்ந்த துறவியே.

அவருக்கு வணக்கம் வைத்தவன் தன்னைப்பற்றிய விபரங்களைக் கூறிவிட்டு, வழக்கு ஒன்றுக்குத் தேவையான விபரங்களை விசாரிக்க வந்துள்ளதாக கூறினான்.

“கேளுங்க தம்பி.”

“இங்க வர்மக்கலை கத்துத் தரப்படுதுன்னு கேள்விப்பட்டேன். எத்தனை வருடங்களா கத்துத்தரப்படுது? இதுவரை யார்யாரெல்லாம் கத்துக்கிட்டாங்கன்னு லிஸ்ட் தரமுடியுமா?”

“இந்த வைத்தியசாலை கிட்டத்தட்ட இருபது வருடங்களா இருக்குப்பா. வர்மக்கலையை முறையா கத்துக்கறவங்க ரொம்பவும் குறைவுதான். இதுவரை ஒரு இருபது பேர்கிட்ட இந்த கலையை கத்துக்கிட்டு இங்கிருந்து போயிருப்பாங்க. அவங்க தகவல்கள் என்கிட்ட இருக்கு. எதுக்குப்பா இந்த தகவல்கள்?”

சில நிமிடங்கள் செலவழித்து வழக்கின் விபரங்களையும் கொலையாளியைப் பற்றிய சந்தேகத்தையும் கூறினான்.

“வர்மக்கலையை இங்க கத்துக்கறவங்ககிட்ட தற்காப்புக்காகதான் பயன்படுத்தனும்னு சொல்லிக் கொடுக்கும் போதே சொல்லுவோம்.

நீ சொல்றதைக் கேட்கும்போது வருத்தமா இருக்கு. கேரளாவுலயும் சில இடங்கள்ல வர்மக்கலையை சொல்லித் தராங்கப்பா.”

“அங்கயும் விசாரணை நடக்குதுங்கய்யா.”
அந்தத் துறவி கொடுத்த தகவல்கள் அடங்கிய ஃபைலைப் பெற்றுக் கொண்டவன், “வேற ஏதாவது தகவல்கள் தேவைன்னாலும் வந்து கேட்டுக்கறேன் ஐயா.”

“சரிப்பா”
அவரிடம் விடைபெற்றவன் வெளியே வர, அப்போது குடிலுக்குள் வந்த உருவம் தடுமாறி விழப்போக தாங்கிப் பிடித்தான்.

“பார்த்து பார்த்து பத்திரமா…”
பதறிய சரணை ஏறிட்டுப் பார்த்தவன் ஒரு தலையசைப்போடு கால்களை நகர்த்தி உள்ளே போக, அவனைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே வெளியே வந்தான். உடன் வந்த துறவியிடம்,

“இவரும் வைத்தியரா? இவர் முகம் ஏன் இப்படி இருக்கு?”

“கிட்டத்தட்ட எட்டு வருஷத்துக்கு முன்ன மலைஜாதி ஜனங்க இவனை குற்றுயிரும் குலையுயிருமாகக் கொண்டு வந்தாங்க. உயிரைத்தவிர உடம்புல எதுவுமே இல்ல. அஞ்சு வருஷமா சுயநினைவில்லாம கிடந்தான்.

மூனு வருஷத்துக்கு முன்னதான் கண்விழிச்சான். தான் யாருங்கறதே நினைவுல இல்லை அவனுக்கு. முகமெல்லாம் சிதைஞ்சு உடம்பு எலும்புகள்லாம் நொறுங்கி கிடந்த அவன் பிழைச்சதே பெரிய அதிசயம்தான்.

கண்விழிச்சதிலிருந்து இங்கதான் இருக்கான். இங்கயே வைத்தியக் கலை வர்மக்கலை கத்துக்கறான். எப்பவாவது தோணினா மலையை விட்டு கீழ இறங்குவான் இல்லைன்னா இங்கயேதான் இருப்பான்.”

“அவரை யாருமே தேடி வரலையா? போலீஸ்ல கம்ப்ளெயிண்ட் பண்ணலையா நீங்க?”

“அப்பவே போலீஸ்ல கம்ப்ளெயிண்ட் கொடுத்துட்டோம். அவனுக்கு தான் யாருன்னு தெரியல. முகமும் அவனோட உண்மையான முகமில்ல… அதனால விளம்பரம் எதுவும் கொடுக்க முடியல…

அதுவுமில்லாம யாருமே அவனைத் தேடி வரல. அப்படியே இங்கயே இருக்கட்டும்னு விட்டுட்டோம்.”
மனம் கனத்துப் போனது சரணுக்கு.

‘யாரோ எவரோ? இவன் உயிரோடு இருப்பதே தெரியாமல் இவனது குடும்பத்தினர் எவ்வளவு வருத்தத்தில் இருப்பார்கள்?’

எண்ணிக் கொண்டவன், இந்தக் கேஸ் முடிஞ்சதும் இவனைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்க வேண்டும் என்று எண்ணியபடி துறவியிடம் விடைபெற்று மலையைவிட்டு இறங்கத் துவங்கினான்.

வேட்டை தொடரும்…