Kaadhal 23

சித்தார்த்திடம் பேசிவிட்டு வந்த மேக்னாவிற்கு முகத்தில் அத்தனை சந்தோஷம் தாண்டவமாடியது.

தான் நினைத்தது நடக்கப் போகிறது என்ற ஒரு எண்ணமே அந்த சந்தோஷத்திற்கான காரணம் என்று நினைத்துக் கொண்டவள் அதே சந்தோஷமான மனநிலையுடன் தனது சிறை அறையை நோக்கி சென்றாள்.

ஆரம்பத்திலிருந்தே தான் எத்தனை முறை சித்தார்த்தை ஒதுக்கி இருந்திருக்கிறோம் என்று எண்ணிப் பார்த்துக் கொண்டவள்
“இந்த காலத்தில் இப்படி ஒரு நல்ல காவல் அதிகாரியா? இந்த சிறு வயதில் இன்ஸ்பெக்டர் ஸாருக்கு எவ்வளவு பொறுமை! நானும் இருக்கிறேனே! பொறுமைக்கு எனக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது ஆனா இவர் எவ்வளவு பொறுமையாக இருக்கிறார்?” என்று எண்ணி வியந்து போனாள்.

முதல் நாள் இரவு தான் அவனை தொலைபேசியூடாக மிரட்டியதை எண்ணிப் பார்த்துக் கொண்டவள் ஒரு முறை அவனை எண்ணி தன்னையும் அறியாமல் புன்னகைத்துக் கொண்டாள்.

‘இன்ஸ்பெக்டர் சார் எனக்கு ரொம்பப் பெரிய உதவி பண்ண போகிறார் அதற்கு பதிலாக அவருக்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன்?’ மனதுக்குள் பலமுறை தன்னைத்தானே கேட்டுக்கொண்டவள்

அதே மனநிலையுடன் நடந்து சென்று கொண்டிருக்கையில் அவளின் எதிரே வந்த அங்கே சிறையில் இருக்கும் இன்னொரு பெண்மணி
“என்ன மேக்னா முகத்தில் ஒரே சந்தோஷம் தாண்டவமாடுது யாரும் ரொம்ப நெருக்கமானவர்களை சந்தித்தாயா?” என்று கேட்க

அவரது கேள்வியில் ஒரு கணம் திகைத்துப் போய் நின்றவள்
“எ..என்ன கேட்டீங்க?” தடுமாற்றத்துடன் அவரைப் பார்த்து கேட்டாள்.

“இல்ல ரொம்ப சந்தோஷமா இருக்கிற மாதிரி இருக்கே! என்ன விஷயம் என்று கேட்டேன்?” அந்த பெண்மணியின் கேள்வியில் உடனே தன் முகத்தை சரி செய்து கொண்டவள்

“அப்படி எல்லாம் எதுவும் இல்ல நான் வழக்கம்போல தான் இருக்கிறேன்” என்று படபடப்புடன் கூறி விட்டு அங்கிருந்து சென்றுவிட

அவரோ சற்று குழப்பத்துடன் அவளைப் பார்த்துக் கொண்டு
‘இந்த பொண்ணுக்கு என்ன ஆச்சு காலையில் ஒரு மாதிரி இருக்கா! மத்தியானம் ஒரு மாதிரி இருக்கா! சாயங்காலம் இன்னொரு மாதிரி இருக்கா! எப்ப எந்த நேரத்தில் எப்படி இருப்பான்னு தெரியல?’ என எண்ணிக் கொண்டே அங்கிருந்து சென்று விட தனது அறைக்கு வந்த மேக்னாவிற்கோ முகமெல்லாம் வேர்த்து கொட்டியது.

‘எனக்கு ஏன் இவ்வளவு பதட்டம்?’ தனக்குத்தானே கேட்டுக்கொண்ட மேக்னாவின் கண்களுக்குள் சித்தார்த்தின் முகம் மின்னல் போல வந்து வெட்டிச் செல்ல அன்றொருநாள் அவனது கைகளுக்குள் தான் சுற்றம் மறந்து மயங்கி நின்றது எண்ணி தன் முதுகுத்தண்டு சில்லிட அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றாள்.

“ஒருவேளை நான் இன்ஸ்பெக்டர் ஸாரை? இல்லை! இல்லை! அப்படி எல்லாம் இருக்காது இருக்கவும் கூடாது அவர் எவ்வளவு நல்ல போலீஸ் அதிகாரி! நான் பல குற்றங்களை, கொலைகளை செய்த பாவி! நான் போய் அவரை! சேச்சே! அப்படி இருக்காது இருக்கவும் கூடாது நான் என் வாழ்க்கையில் இன்னொருவர் வாழ்க்கையை இனி பணயம் வைக்கவே கூடாது!” உறுதியாக தனக்கு கூறிக் கொண்டவள் தன் தலையை இரு கைகளாலும் தாங்கிக் கொண்டே அப்படியே அங்கிருந்த சுவற்றில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.

********************************************

சித்தார்த் மேக்னாவை சந்தித்துவிட்டு வந்து அன்றோடு ஒரு வாரம் கழித்து இருந்தது.

அந்த ஒரு வாரத்திற்குள் சித்தார்த் டிசிபி மணிவேலை சந்தித்து மேக்னாவின் வழக்கு தொடர்பாக இருந்த பல சிக்கல்களையும் குழப்பங்களையும் பற்றி அவருடன் கலந்துரையாடி இருந்தான்.

தங்கள் நண்பர்கள் ஒன்றுகூடலில் ஜெஸ்ஸியுடன் கலந்து கொண்டவன் அங்கு விசேட அதிதியாக வந்திருந்த மணிவேலுடன் மேக்னா பற்றி கலந்துரையாடி ஏசிபியினால் வர இருக்கும் ஆபத்துக்கள் பற்றியும் கூறியிருக்க அதையெல்லாம் கேட்டுக் கொண்டவர் அவர்களுக்கு உதவி செய்வதாக வாக்களித்திருந்தார்.

அங்கே சித்தார்த்துடன் பேசியிருந்த மணிவேல்
‘மேக்னாவின் வழக்கை திரும்ப வாதாட செய்வதற்கு முக்கியமான தடயங்கள் கிடைக்காத பட்சத்தில் கொலை செய்யப்பட்டவர்களதோ அல்லது கொலையாளியினதோ நெருங்கிய உறவினர்கள் அல்லது வேறு நண்பர்கள் யாராவது இந்த வழக்கில் சந்தேகம் இருப்பதாக மனுத் தாக்கல் செய்தால் இந்த வழக்கை மறுபடியும் விசாரிக்க செய்விக்க முடியும் அதற்கு ஏதாவது வழியைத் தேடி பாருங்கள்’ என்று கூறியிருந்தார்.

அவர் அவ்வாறு கூறி இருந்த நேரத்தில் சித்தார்த்தின் மனதிற்குள் நர்மதாவின் ஞாபகமே வந்து சென்றது.

நர்மதா இருக்கும் இடம் மேக்னாவிற்கு மட்டுமே தெரியும் என்பதால் அதைப்பற்றிப்பற்றி அவளிடம் பேசலாம் என்று எண்ணிக்கொண்டவன் அன்றே அவளுக்கு அழைக்க எண்ணிவிட்டு உடனே அதை செய்யாமல் தயங்கி நின்றான்.

ஏனெனில் அவள் தன்னை தனபாலன் வேவு பார்ப்பதாக கூறியிருக்க இந்த விடயத்தையும் அவர் அறிந்து கொண்டால் அதனால் நர்மதாவின் உயிருக்கு ஆபத்து வந்து விடலாம் என்று அஞ்சியவன் மேக்னாவை அடுத்த முறை சந்திக்கும்போது இதைப் பற்றி பேசலாம் என்று எண்ணி அந்த தயக்கத்திற்கு ஒரு முடிவு கட்டி இருந்தான்.

இதற்கிடையில் யசோதா அவனிடம் அந்த புகைப்படத்தை பற்றி ஜாடைமாடையாக பலமுறை கேட்டிருக்க அந்த நேரங்களில் எல்லாம் அவருக்கு வாய்க்கு வந்த காரணங்களை பதிலாக கூறியவன் அவரது கேள்விக்கு உண்மையான பதிலை சொல்ல முடியாமல் திணறிப் போய் இருந்தான்.

மேக்னாவை இந்த வழக்கில் இருந்து வெளியே கொண்டு வந்ததன் பின்னர் அவரிடம் சுந்தரி, மேக்னா மற்றும் சம்பந்தன் பற்றிய உண்மையை கூறி விடலாம் என்று எண்ணிக் கொண்டவன் அதற்கான வேலைகளில் தன்னை மும்முரமாக ஈடுபடுத்திக் கொண்டான்.

மறுபுறம் மேக்னாவோ அன்று அவன் தன்னிடம் தாங்கள் சொல்லாமல் எதுவும் செய்யக்கூடாது என்று கூறியிருக்க முடிந்தளவு தன்னை பொறுமையாக வைத்துக்கொண்டு ஒவ்வொரு நாளும் சித்தார்த் வருவான் என்று அவனது வருகைக்காக ஆவலுடன் காத்திருக்க தொடங்கினாள்.

*********************************************

மேக்னாவை சித்தார்த் சந்திக்கும் நாள் அன்று இனிதே விடிந்தது.

அவன் அவளை சந்தித்துவிட்டு சென்று சரியாக ஒரு வாரம் கழித்து இருந்த நிலையில் இன்று எப்படியும் அவன் வந்து தன்னை சந்தித்து விடக்கூடும் என்ற முழு நம்பிக்கை தன் மனதிற்குள் தோன்ற மேக்னா ஆவலுடன் அன்றைய மாலைநேரத்து வருகையை எண்ணி காத்திருந்தாள்.

மறுபுறம் சித்தார்த்தும் அன்றைய நாள் காலை முதல் மாலை வரை ஒவ்வொரு மணித்துளியும் வெகு சிரமப்பட்டு நெட்டித் தள்ளி கொண்டு நின்றான்.

ஸ்டேஷனிலிருந்த ஒவ்வொரு வேலையிலும் தன்னை முடிந்த அளவு ஈடுபடுத்திக் கொண்டு வந்தவன் மனமோ அதில் எதிலுமே ஒன்றாமல் போக சலிப்போடு தனக்கென ஒதுக்கப்பட்ட அறைக்குள்ளேயே நடமாடித் திரிந்தவன் அங்கிருந்த கடிகாரத்தை பார்ப்பதும் வெளியே பார்ப்பதுமாக தன் நேரத்தை கடத்திக் கொண்டு இருந்தான்.

அதற்கு மேலும் அவனது பொறுமையை சோதிக்காமல் மாலை நேரம் இனிதே வந்து சேர்ந்தது.

அவசர அவசரமாக புறப்பட்டு ஜெஸ்ஸியின் வருகைக்காக கூட காத்திராமல் மத்திய சிறைச்சாலை நோக்கி புறப்பட்டவன் அங்கு சென்றதன் பின்னரே தன் தொலைபேசியில் இருந்து அவளுக்கு அழைப்பை மேற்கொண்டான்.

“டேய்! சித்தார்த் எங்கடா இருக்க? உன் ஸ்டேஷனுக்கு வந்து பார்த்தால் உன்னை காணோம் எஸ்.ஐ, கான்ஸ்டபிள் கிட்ட கேட்டா எங்கன்னு தெரியலன்னு சொல்றாங்க அப்படி எங்க தாண்டா போயிட்ட? இன்னிக்கு ரொம்ப முக்கியமான நாள் என்று தெரியும்தானே! எங்கடா போன?” ஜெஸ்ஸி படபடவென பொரிந்து தள்ளவும்

மறுபுறம் சிரித்துக் கொண்டவன்
“நான் ஆல்ரெடி சென்ட்ரலுக்கு முன்னாடி தான் வந்து நிற்கிறேன் நீயும் சீக்கிரம் இங்கே வா” என்று கூற

அவளோ
“அடப்பாவி! என் கிட்ட சொல்லாமல் எப்படிடா கிளம்பி போன?” என்று அதிர்ச்சி கலந்த குரலில் கேட்டாள்.

“இந்த விஷயத்தில் எல்லாம் நான் ரொம்ப வேகமாக தான் இருப்பேன் சரி! சரி! அதெல்லாம் அப்புறம் பேசலாம் நீ சீக்கிரமாக கிளம்பி வா நேரம் ஆகுது அப்புறம் மேக்னாவை சந்தித்து பேச வேண்டிய விடயங்களை எல்லாம் பேச முடியாமல் போய்விடும்”

“நீ அவசரப்பட்டுவதைப் பார்த்தால் இந்த கேஸ் விஷயமாக மேக்னாவை சந்திக்க போற மாதிரி இல்லையே! வேற ஏதோ!” வேண்டுமென்றே வேற ஏதோ என்ற வசனத்தில் ஜெஸ்ஸி அழுத்தம் கொடுக்க

மறுபுறம் புன்னகையுடன் தன் தலையை அழுந்த கோதிக் கொண்டவன்
“அம்மா! தாயே! உன் விசாரணை எல்லாம் அப்புறமாக வைத்து கொள்ளலாம் முதலில் சீக்கிரமா கிளம்பி வா நேரமாகிவிட்டது அப்புறம் விசிடிங் ஹவர்ஸ் முடிந்து விடப் போகுது” சற்று கெஞ்சலான குரலில் கூறவும் அவளும் அதற்கு மேல் மறுத்துப் பேசாமல் அங்கிருந்து புறப்பட்டாள்.

சித்தார்த்தை நீண்ட நேரம் காத்திருக்க வைக்காமல் சிறிது நேரத்திலேயே அங்கு வந்து சேர்ந்தவள் ஆர்வமாக அந்த சிறைச்சாலை வாயிலேயே பார்த்துக்கொண்டு நின்றவனின் அருகில் வந்து
“என்ன சார் ரொம்ப ஆர்வமா இருக்கீங்க போல?” சிறிது நக்கல் கலந்த தொனியில் கேட்க அவனோ என்ன சொல்வது என்று தெரியாமல் புன்னகையுடன் தன் தலையை குனிந்து கொண்டான்.

“ஐயோ! சித்! நீ வெட்கமெல்லாம் படுவியா? ஐயோ தாங்க முடியல!” போலியாக அதிர்ச்சியடைவது போல ஜெஸ்ஸி தன் நெஞ்சில் கை வைத்துக்கொள்ள

அவளது தலையில் செல்லமாக தட்டியவன்
“என்ன கலாய்க்குறதை விட்டுட்டு வந்த வேலையை பார்க்கலாம் வா!” என்று விட்டு முன்னால் செல்ல அவளும் புன்னகையுடன் அவனை பின் தொடர்ந்து சென்றாள்.

அங்கே சித்தார்த்தின் எதிர்பார்ப்பை பொய்க்காமல் அவர்கள் வரும் வழியை மேக்னாஆவலுடன் பார்த்துக் கொண்டு நின்றாள்.

அவள் கண்களில் தெரிந்த ஆர்வத்தை பார்த்ததும் சித்தார்த்தின் மனமோ அவன் அனுமதி இல்லாமல் எங்கெங்கோ பறந்து செல்ல ஆரம்பித்தது.

“சித்தார்த் கண்ணா! கொஞ்சம் அடக்கி வாசி கண்ணா! முகத்தில் ஜொள்ளு ரொம்ப வழியுது தொடைச்சுக்கோ!” ஜெஸ்ஸி ரகசியமாக அவனது காதில் கூற
அவளை முறைத்துப் பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தோடு திரும்பியவன் அவளது கேலியான பார்வையில் உடனே தன் முகத்தை மேக்னாவின் புறம் திருப்பிக் கொண்டான்.

“இன்ஸ்பெக்டர் சார் நீங்க சொன்ன மாதிரி நீங்களாக என்னை தொடர்பு கொள்ளும் வரைக்கும் நான் நானாக இந்த விடயத்தை பற்றி எதுவுமே செய்யவில்லை உங்க கிட்ட இருந்து பதில் வரும் என்று இந்த ஒரு வாரமாக காத்துகிட்டே இருந்தேன்” மேக்னா சிறிது முகம் வாட கவலையுடன் கூறவும்

“அப்படியா! நானும் இந்த ஒரு வாரமாக உங்களை சந்திப்பதற்காக ரொம்ப ஆவலாக காத்திருந்தேன் மேக்னா இந்த ஒரு வாரத்துக்கு இடையில் நான் ஏதாவது அவசரமாக செய்து அது உங்களுக்கு பிரச்சினையாக வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த ஒரு வாரமாக உங்களை சந்திக்க வரவில்லை உங்களை ரொம்ப காக்க வைத்துவிட்டேனா?” சித்தார்த் அவளது முக வாட்டத்தை தாளாமல் உடனே அவளுக்கு பதில் அளித்துவிட்டு மீண்டும் அவளை கேள்வியாக நோக்கினான்.

“இல்லை இல்லை இன்ஸ்பெக்டர் சார் அப்படி எல்லாம் எதுவும் இல்லை” மேக்னா அவசரமாக மறுத்துக் கூற அவனோ புன்னகையுடன் அவளை பார்த்துக் கொண்டு நின்றான்.

அந்த நொடி அவர்கள் இருவரது பார்வையும் ஒரே நேர்கோட்டில் சந்திக்க மறுபுறம் ஜெஸ்ஸியோ அங்கு நடப்பவற்றை விசித்திரமாக பார்த்துக் கொண்டு நின்றாள்.

‘அடக் கடவுளே! இங்கே என்னையா நடக்குது நடுவில் நான் ஒருத்தி நிற்கிறேன் அதை பற்றி கொஞ்சம் கூட கவலையே இல்லாமல் இதுங்க ரெண்டும் ஏதோ பாக்கில் வைத்து சாவகாசமாக லவ் டயலாக் பேசுற மாதிரி பேசிகிட்டே இருக்காங்க கடவுளே! முடியல’ தனக்குள்ளேயே புலம்பிக் கொண்டு சித்தார்த்தின் புறமும் மேக்னாவின் புறமும் மாறி மாறி திரும்பிப் பார்த்தவள் ஒரு நிலைக்கு மேல் பொறுக்க முடியாமல் தன் தொண்டையை செருமினாள்.

ஜெஸ்ஸியின் சத்தம் கேட்டு உடனே மேக்னா தன் இயல்பு நிலைக்கு வந்துவிட சித்தார்த் மாத்திரம் அவளையே பார்த்துக் கொண்டு நின்றான்.

தான் சுற்றம் மறந்து சித்தார்த்தை பார்த்துக் கொண்டு நின்றதை எண்ணி ஜெஸ்ஸியை நேர் கொண்டு பார்க்க முடியாமல் மேக்னா தன் பார்வையை தாழ்த்திக் கொள்ள அவளோ அவன் புறம் திரும்பிப் பார்த்துவிட்டு தன் தலையில் கட்டிக் கொண்டாள்.

“இவனை வெச்சிக்கிட்டு!” சிறிது கோபமாக அவனது தோளில் தட்டியவள்

“டேய்! சித்! என்னடா பண்ணிட்டிருக்க? வந்த வேலையை கவனிக்காமல்” சற்று அதட்டலாக கூறவும்

அவனோ
“ஆஹ்! எ..என்ன ஜெஸ்ஸி கேட்ட?” கனவிலிருந்து விழித்தவனைப் போல திருதிருவென்று விழித்துக் கொண்டே அவளைப் பார்த்து கேட்டான்.

“சாமி! முடியலடா வந்த வேலையை பாருடா” ஜெஸ்ஸி சற்றே சலிப்புடன் கூறவும்

“ஓகே ஓகே கூல்!” அவளது தோளில் புன்னகையுடன் தட்டிக்கொடுத்தவன் மேக்னாவின் புறம் திரும்பி டிசிபி மணிவேலை சந்தித்தது முதல் அவர் கூறியது வரை எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் கூறி முடித்தான்.

“ஓஹோ! அப்படி என்றால் இந்த கேஸை திரும்ப கோர்ட்டில் விசாரணைக்கு கொண்டு வரவேண்டுமென்றால் வேறு யாராவது இந்த வழக்கை திரும்ப விசாரிக்க சொல்லி மனு தாக்கல் செய்ய வேண்டும் இல்லையா?” யோசனையூடே அவர்களை பார்த்துக் கேட்ட மேக்னா சித்தார்த்தின் புறம் திருப்பி

“எனக்குத் தான் இந்த ஊரில் வேறு யாருமே இல்லையே! அப்படி இருக்கும்போது யாரிடம் போய் சென்று இதை செய்ய சொல்லி கேட்பது? என்று கேட்டாள்.

“ஏன் மேக்னா இந்த ஊரை தவிர்த்து வேறு ஊரில் உங்களுக்குத் தெரிந்தவர் யாருமே இல்லையா?” ஜெஸ்ஸி அவளைக் கேள்வியாக நோக்க

சிறிது குழப்பத்துடன் அவளைப் பார்த்தவள்
“இந்த ஊரை தவிர வேறு ஊரில் என்றால் ராணியம்மா தான் இருக்காங்க அவருக்கு இதைப்பற்றி எதுவும் தெரியாது பிறகு எப்படி சென்று அவரிடம் கேட்பது? அதுவுமில்லாமல் அவருக்கு இதைப் பற்றி தெரிய வேண்டாம் ப்ளீஸ்!” வேகமாக கூறிவிட்டு ஜெஸ்ஸியை நோக்கி இரு கரம் கூப்பி கெஞ்சுதலாக கேட்டாள்.

“நாங்க ராணி அம்மாவை சொல்லவில்லை மேக்னா இதையெல்லாம் பற்றி தெரிந்த இன்னொருவரைப் பற்றி கூறுகிறோம்” அவளை நோக்கி இரண்டு அடி எடுத்து வைத்து வந்து நின்றவாறே சித்தார்த் கூறவும்

“இன்னொருவரா?” என்று யோசித்தவள்

அவர்கள் யாரைப் பற்றி கூறுகிறார்கள் என தெரிந்ததும்
“நர்மதாவா?” கேள்வியாக அவர்களை நோக்கினாள்.

சித்தார்த் மற்றும் ஜெஸ்ஸி அவளைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைக்க “நோ! நோ! அது மட்டும் வேண்டாம்” சற்று தடுமாற்றத்துடன் அங்கிருந்த கம்பியை இறுகப் பற்றிக் கொண்டவள்

“அது நடக்காது நடக்கவும் கூடாது” மறுப்பாக தலையசைத்தவாறே மிரட்டலான குரலில் அவர்களைப் பார்த்து கூற அவர்கள் இருவருமோ அவளது மிரட்டலான குரலைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றனர்…….