kaarkaala vaanavil-4

அத்தியாயம் – 4

அன்று வழக்கம்போல வேலை செய்யும் அலுவலகம் வந்து சேர்ந்தாள். மகிழ்வதனி ஒரு பிரபலமான சோப் தயாரிக்கும் நிறுவனத்தில் கடந்த ஒரு வருடமாக வேலை செய்து வருகிறாள். இந்த இடைபட்ட காலத்தில் ஒரு தொழிலை எடுத்து நடத்துவதற்கு தகுந்த திறமைகளை வளர்த்து கொண்டாள்.

அவள் நேராக எம்.டி. கேபினுக்கு செல்ல அங்கிருந்த சௌந்தராஜனிடம், “குட் மார்னிங் ஸார்..” என்றாள் புன்னகையுடன்.

“குட் மார்னிங் மகிழ்..” என்றவர் சிறிதுநேரம் அமைதியாக இருக்க அவள் தன் கேபினில் அமர்ந்து தன் வேலையை தொடங்கினாள். சௌந்தராஜன் எஸ். ஆர். நிறுவனத்தின் எம். டி. கிட்டதட்ட ஐம்பது வயதைக்கடந்து வந்தபிறகும் திறமையாக தொழிலை நடத்தி வருகிறார்.

அவரின் முகம் காலையிலிருந்து வாட்டமாக இருப்பதை கவனித்த மகிழ், “ஸார் ஏதாவது பிரச்சனையா?” என்று நேரடியாக அவள் கேட்க சட்டென்று நிமிர்ந்தார்.

மகிழ் முகத்தில் கலக்கத்தைக் கண்ட சௌந்தராஜன் கஷ்டப்பட்டு வரவழைத்த புன்னகையுடன், “ஒண்ணும் இல்லம்மா” என்றார். அவர் மகிழை தன் மகளாக நினைப்பதால் தன் துன்பத்தை அவளிடம் சொல்லாமல் மறைக்க நினைத்தார்.

“என்ன ஸார் என்னிடம் தயக்கம்?” என்று அவள் அக்கறையுடன் விசாரிக்க, “இந்த நிறுவனத்தை விற்க ஏற்பாடு பண்ணிருக்கேன் மகிழ். நாளைக்கு பேப்பரில் அட்வடைஸ்மென்ட் கொடுக்கணும்” என்று நெற்றியை வருடினார்.

அவர் சொன்ன விஷயம் அவளை திகைப்பில் ஆழ்த்தியது. தன் இரத்த சொந்தங்களைவிட அவர் அதிகம் நேசித்தது இந்த நிறுவனம் மட்டுமே. இந்த உண்மையை அவளிடம் அவரே பலமுறை சொல்லி இருக்கிறார்.

“என்ன சார் சொல்றீங்க” என்றவள் அதிர்ச்சியுடன் கேட்க, “ம்ம் ஆமா மகிழ். எனக்கு முதல் மாதிரி நிறுவனத்தை கவனிக்க முடியல. என் பசங்க இருவரும் வெளிநாட்டில் செட்டில் ஆகிட்டாங்க. நான் மட்டும் இங்கே இருந்து என்ன பண்ண போறேன்?” என்றவர் விரக்தியாக புன்னகைக்க அவளின் மனம் சிந்தனையில் ஆழ்ந்தது.

சிறிதுநேரம் அங்கே அமைதி நிலவியது. மகிழ் தான் அமர்ந்திருந்த கேபினில் இருந்து எழுந்து அவரின் எதிரே வந்து நிற்க அவர் அவளை புரியாத பார்வை பார்த்தார்.

“சார் நிறுவனத்தை விற்க போறீங்களா” என்றவள் தயக்கத்துடன் மீண்டும் கேட்க, “ஆமா மகிழ்” என்றார் உறுதியுடன்.

அவர் சொன்னதைக்கேட்டு மீண்டும் தன் கைகளை பிசைந்த மகிழ் ஏதோ சொல்ல வருவதும் பிறகு வேண்டாமென்று தலையசைத்துவிட்டு சுடிதார் சால்வையைக் கசக்குவதுமாக இருந்தாள்.

அவளின் செயலை கவனித்த சௌந்தராஜன், “மகிழ் என்ன விஷயம்? நேரடியாக சொல்லு” என்று அதட்டல் போடவே அது அவளிடம் சரியாக வேலை செய்தது.

“யாருக்கோ இந்த நிறுவனத்தை விற்க போறீங்க? அதுக்கு பதிலாக இந்த நிறுவனத்தை எனக்கே கொடுத்து விடுங்களேன்” நேரடியாக கேட்கவே அவரோ திகைப்பும் அதிர்ச்சியுமாக மகிழைப் பார்த்தார்.

அவளின் வயதில் அவர் விளையாட்டுத்தனமாக இருந்ததை இப்போது நினைத்து பார்த்தவர், “என்ன மகிழ் என்னவோ பஞ்சுமிட்டாய் வாங்கற மாதிரி சொல்ற” என்று சிரித்தபடி அவர் கூறவே அவளின் முகம் மாறியது.

“ஏன் சார்.. நான் எல்லாம் தொழில் நடத்த முடியாதா?” மார்பின் குறுக்கே கரங்களைக் கட்டிக்கொண்டு நின்றவளின் நேர் கொண்ட பார்வையும் அவரை திகைப்பில் ஆழ்த்தியது.

அதே நேரம் அவளின் கேள்வி அவருக்குள் சிந்தனையை உருவாக்கிட, “உன்னால் முடியுமா? இருபது லட்சம் இன்னைக்கு இந்த கம்பெனி ரெட்..” என்றதும் தன் கையில் இருந்த போனைப் பார்த்த மகிழ்வதனி சட்டென்று நிமிர்ந்து அவரின் முகம் பார்த்தாள்.

“ஒரு மணிநேரம் டைம் எடுத்துக்கவா சார்” என்றவள் கேட்க, “ம்ம் எடுத்துக்கோ” என்றார்.

அவளின் கேபினுக்கு சென்ற மகிழ்வதனி தன் அம்மா, அப்பாவிற்கு அழைத்து நிறுவனம் விற்கப்படும் விஷயத்தையும், தன்னோட  முடிவையும் கூறிவிட்டு அவர்களின் பதிலுக்காக காத்திருந்தாள்.

அடுத்த பத்து நிமிஷத்தில் போன் செய்த மனோகரன், “பாப்பா உன்னோட படித்த சர்டிபிகேட் வைத்து அப்பா உனக்கு தோழில் லோன் வாங்கி தரேன். அப்படியே ஷேர் மார்க்கெட்டில் இன்வெஸ்ட்மென்ட் பண்ண பத்திரத்தை விற்று பணம் தரேன்” என்று சொல்லிவிட்டு வைக்க அடுத்து அவளின் அம்மா பரிமளத்திடம் இருந்து போன் வந்தது.

“உன்னோட திருமணத்திற்கு ஐந்து லட்சம் ரொக்கமும், முப்பது சவரன் நகையும் சேர்த்து வெச்சிருக்கேன். அதை எல்லாமே எடுத்துக்கோ மகிழ்” என்றவர் மகளுக்கு பக்கபலமாக நின்றனர். அவர்களின் முடிவை கேட்டபிறகு அவள் தெளிவான ஒரு முடிவை எடுத்துக்கொண்டு அவரின் முன்னே சென்று நின்றாள்.

“சார் இந்த நிறுவனத்தை வாங்க நான் ரெடி..” என்றவளின் விழிகளில் தெரிந்த ஏதோவொரு விஷயம் அவரைக் கவர்ந்தது.

“ம்ம் பரவல்லயே நீ வேலை செய்த நிறுவனத்தை வாய்ப்பு கிடைத்தும் அதை தட்டி கழிக்காமல் நல்ல யூஸ் பண்ணிக்கிற.. எனிவே கன்க்ராட்ஸ்..” என்றவர் மனம் சந்தோஷத்தில் நிறைந்து போனது.

“இவ்வளவு நேரமும் மனதில் ஒரு பாரம் இருந்துச்சு மகிழ்..” என்றவரை அவள் கேள்வியாக நோக்கிட, “யாரோ ஒருவரிடம் இந்த நிறுவனத்தை கொடுத்துட்டு போறோமே. நாளைய பின்ன இதை எப்படி நிர்வாகம் பண்ண போறாங்களோ என்று மனசு பதறுச்சு” என்றவரின் முகத்தில் தெரிந்த நிம்மதியை கண்டு அவளின் மனம் தெளிவடைந்தது.

அன்று மாலை வீட்டிற்கு திரும்பிய மகளை பார்த்தும், “வா மகிழ்” என்றவர் மகளுக்கு காபி போட சமையலறைக்குள் நுழைந்தார். அப்போது வீட்டிற்குள் வந்த தந்தையைக் கண்டதும்,

“அப்பா என்ன இன்னைக்கு சீக்கிரம் ஆபிஸில் இருந்து வந்திட்டீங்க” என்றவளின் அருகே அமர்ந்தவர், “இதில் சில கையெழுத்து போடுமா. நம்ம நாளைக்கே லோன் அப்லே பண்ணாதான் அடுத்த மாசம் பணம் கைக்கு கிடைக்கும்” என்றார்

அவளும் தந்தை கேட்ட இடத்தில் கையெழுத்து போட்டுத்தர காபியுடன் வந்த பரிமளா, “உனக்கு திருமணத்திற்கு ஆசை ஆசையாக பார்த்து  வாங்கிய நகை அனைத்தையும் பிஸ்னஸ்ல இன்வெஸ்ட்மென்ட் பண்ண போறேன்னு சொல்றீயே” என்றவர் ஆதங்கப்பட்டார்.

கல்யாண வயதில் மகளை திருமணம் செய்து அடுத்த வீட்டிற்கு அனுப்பும் நேரத்தில் மகள் இப்படி ஒரு முடிவை எடுப்பாள் என்று அவர் எதிர்ப்பார்க்கவில்லை. அவளின் திறமை தெரிந்தும் அவளை கைக்குள் வைத்திருப்பது சரியில்லை என்றவர் மனம் இடித்துரைத்தது.

“அம்மா நீங்க சொல்றது எல்லாமே சரிதான். பேங்க் மேனேஜர் மனோகரன் பொண்ணு மகிழ்வதனியைப் பற்றி ஊருக்குள் என்ன கதை கட்டி விட்டு இருக்காங்க தெரியும் இல்ல. தனியா பேசும் பைத்தியம், அவள் எல்லாம் பொண்ணே இல்ல, அவளுக்கு பேய் புடிச்சு இருக்குன்னு கலர் கலரா சொல்லிட்டு இருக்காங்க..” அவள் சொல்லும்போது அவரையும் அறியாமல் மனதின் ஓரத்தில் சுருக்கென்றது பரிமளாவிற்கு!

அவள் சொல்வதுபோலவே ஊருக்குள் அவளுக்கு பைத்தியம் என்ற முத்திரையை குத்திவிட்டனர். அதை நம்பி அவளை ஹோஸ்பிட்டல் கொண்டுபோய் சேர்த்து செக் பண்ணியதில் அவளுக்கு அப்படி எந்தவொரு பாதிப்பும் இல்லையென்று சொல்லிவிட்டனர்.

அதன்பிரகு வந்த மாப்பிள்ளை யாருமே அவளைக் கட்டிக்கொள்ள சம்மதிக்கவில்லை. அவளும் அதை பெரிதாக நினைக்காமல் இதோ இப்போது நிறுவனத்தை விலைக்கு வாங்கிறேன் என்று வந்து நிற்கும் மகளின் எதிர்காலத்தை நினைத்து கலங்கியது தாய் உள்ளம்.

“இப்போ உன் மகளை பொண்ணுகேட்டு வரும் தைரியம் இந்த ஜில்லாவில் யாருக்கும் இல்ல. அப்படியே ஒருத்தன் வரான்னு வெச்சாலும் அவன் அசலூர்காரனாக இருப்பான். சோ இப்போதைக்கு திருமண பேச்சு இல்ல. இனிமேல் ஆக வேண்டியதை கவனிக்க வேண்டியது..” என்று அவரின் வருத்தத்திற்கு முற்றுபுள்ளி வைத்தாள்.

அதற்கு மறுநாளில் இருந்தே அவளுக்கு பணத்தை திரட்டுவதே வெளியாகி போனது. அவரிடம் சொல்லப்பட்ட அதே தேதியில் அந்த நிறுவனத்தை வாங்கிவிட்டாள் மகிழ்வதனி.

அதன்பிறகு ஒரு மாதம் அங்கேயே தங்கி இருந்து தொழிலாளர்களில் நம்பிக்கையானவர்கள் பற்றிய விவரங்கள், நிறுவனத்தில் வேலை செய்பவர் எண்ணிக்கை, இலாபம் மற்றும் நஷ்டம் என்று அனைத்தையும் அவளிடம் பொறுப்புடன் ஒப்படைத்துவிட்டு அவர் விலகிக் கொண்டார்.

நிறுவனத்தில் சில மாற்றங்கள் மட்டும் செய்து அதை நிர்வாகம் செய்ய தொடங்கினாள் மகிழ். நாட்கள் அதன் போக்கில் செல்ல இரவு பகல் என்று பாராது தன் தூக்கத்தை தொலைத்து நிறுவனத்திற்காக உழைத்த மகளைக் கண்டு பரிமளா மட்டுமே கவலைப்பட்டார். ஒரு நல்ல வழிகாட்டியாக அவளின் அருகே இருந்து ஊக்கபடுத்தினார் மனோகரன்.

கிட்டதட்ட இரண்டு வருடங்கள் மின்னல் வேகத்தில் ஓடி மறைந்திட அவளின் நிறுவனம் அணைத்து நிறுவனங்களையும் பின்னே தள்ளிவிட்டு முதல் இடத்தைப் பிடித்தது. அந்த சமயத்தில் படிப்பை முடித்துவிட்டு வந்த சரவணாவிற்கும் தன் நிறுவனத்தில் நல்ல ஒரு வேலையை கொடுத்தாள்.

இந்த இரண்டு வருடத்தில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் டாப் டென்னில் ஒன்றாக கொண்டு வந்துவிட்டாள். இந்த மாதிரி தருணத்தில் எதிர்பாராத விதமாக அவள் ஒரு முக்கியமான மீட்டிங் விஷயமாக மும்பை செல்லவேண்டிய சூழல் உருவானது.

அவள் ஊருக்கு செல்ல தயாராகி கொண்டிருக்க, “அம்மா.. அம்மா” என்ற அழைப்புடன் வீட்டிற்குள் நுழைந்தாள் கார்குழலி.

“வாம்மா குழலி என்ன இந்த நேரத்தில் வந்திருக்கிற” என்றார் மனோகரன்.

“அப்பா இன்னைக்கு மகிழ் மும்பை கிளம்புவதாக சொன்னீங்க. அதன் கோவிலுக்கு போயிட்டு அப்படியே அவளையும் பார்த்துட்டு போலாம்னு வந்தேன்” என்றவள் பேசியபடியே மகிழின் அறைக்குள் நுழைந்தாள்.

பிளாக் கலர் டாப், டார்க் கீரீன் கலர் சுடிதாரில் தயாராகி கொண்டிருந்த மகிழைப் பார்த்த குழலி, “என்ன எம். டி. மேடம். மும்பை பிளைட் பிடிக்க ரெடி ஆகிட்டிங்க போலவே” என்றவள் கிண்டலடிக்க சட்டென்று திரும்பினாள்.

“வா குழலி எங்கே உன்னை பார்க்காமல் ஊருக்குப் போய்விடுவேனோ என்ற கவலையில் இருந்தேன்..” என்றவள் குழலியின் கன்னம் இரண்டையும் பிடித்து கிள்ளிவிட்டு, “இப்போ ஹாப்பியா கிளம்புவேன்” என்ற தோழியின் முகத்தில் இருந்த தெளிவும், புதிய கம்பீரமும் மனதிற்கு நிறைவாக இருந்தது.

“நீ பத்திரமாக ஊருக்குப் போறேன்னு சொன்னதும் உன்னை பார்க்காமல் இருக்க முடியல” என்றவள் தன்னிடம்  இருந்த திருநீறை எடுத்து மகிழின் நெற்றியில் வைத்துவிட்டாள்.

“தேங்க்ஸ் குழலி” என்ற மகிழை பார்த்து புன்னகைத்தவளோ, “விஸ் யூ ஆல் தி பெஸ்ட். நீ போகின்ற காரியம் கண்டிப்பா உனக்கு சக்ஸாக முடியும்” என்று நம்பிக்கை கொடுத்த தோழியை தோளோடு அணைத்துகொண்டாள்.

அப்போது அறைக்குள் நுழைந்த பரிமளா, “என்ன குழலி பண்ற” என்று கேட்க, “மகிழ் கிளம்ப தேவையானவற்றை எடுத்து வைக்கிறேன் அம்மா” என்றாள்.

மெரூன் கலர் பிளவுஸ் மற்றும் பாவாடைக்கு ஏற்றார்போல அரக்கு மஞ்சள் நிறத்தில் தாவணி அணிந்து புன்னகையோடு நின்றவளையும், தன் மகளையும் பார்த்த பரிமளா, “உங்க இருவருக்கும் திருமணம் செய்து வைக்கணும். நீ செடிகொடியோடு வாழ்ந்தா, இதோ இவ கம்பெனி ஃபைலை வாழறா. இரண்டு பொண்ணுங்களுக்கும் கல்யாணம் பண்ணி பார்க்கணும் என்ற என்னோட தவிப்பு எனக்கு மட்டும் தான் தெரியும்” என்றார்.

குழலி மண்ணோடு உத்தம் செய்து ஜெய்த்தால், மகிழ் மனிதர்களோடு போட்டிபோட்டு வெற்றி வாகையை வென்றாள். இரண்டு வருடமும் அவள்பட்ட கஷ்டங்களை அருகே இருந்து பார்த்தாள் குழலி. வெற்றி பெற வேண்டும் என்றால் தனக்கு எதிரே இருப்பவன் என்ன கணக்கு வைத்திருக்கிறான் என்பதை அவளின் இடத்திலிருந்து யோசிக்க வேண்டும்.

அந்த மாதிரி ஒவ்வொரு முறையும் அவள் போராடிய போராட்டமும், அயராத உழைப்பும் அவளை நல்ல நிலைக்கு கொண்டு வந்திருந்தது. சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல சின்ன நிறுவனமாக இருந்ததை இன்று முன்னணி நிறுவன பட்டியலில் இடம்பிடிக்க வைத்த மகிழின் உழைப்பை கண்டு குழலிக்கு பெருமையாக இருந்தது.

அவரின் பேச்சில் இரண்டு பெண்களும் தங்களை மீறி சிரித்துவிட்டு, “அம்மா சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கிறோம்” என்று இருவரும் ஒரே நேரத்தில் கூறினார்கள். அதன்பிறகு தான் பரிமளாவின் முகத்தில் தெளிவு பிறந்தது.

அன்று மதியம் காரில் தூத்துக்குடி சென்று அங்கிருந்து சென்னைக்கு பிளைட்டில் சென்றாள். சென்னையிலிருந்து நேரடி பிளைட்டில் மும்பை சென்று மகிழ் அங்கிருந்த ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கினாள்.

மறுநாள் அவளின் கம்பெனி மீட்டிங்கை வெற்றிகரமாக முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பும் சமயத்தில் இருள் சூழ்ந்த அந்த வராண்டாவில் அவள் மட்டும் தனியாக செல்ல, “மகிழ்” என்ற அழைப்புகேட்டு அவள் சட்டென்று திரும்பிப் பார்த்தாள்.

“இந்த அடியேனை கண்டுகொள்ளாமல் செல்வது நியாயமோ” என்றவனை கண்டதும், “வாங்க ஸார்.. இப்போதான் என்னை பார்க்க வர நேரம் கிடைத்ததோ” என்றவளும் அவனை சளைக்காமல் வம்பிற்கு இழுத்தாள்.

“ம்ம்.. இப்போதான் நீ என்னை நினைச்ச நானும் உன் கண்முன்னாடி வந்துட்டேன்” என்றவனோடு அவள் மெல்ல நடந்தனர்.

“ம்ம் என்னைப்பற்றி நல்லாவே தெரிஞ்சி வெச்சிருக்கிற” என்றவளிடம், “இங்கே பக்கத்தில் டிஸ்கொத் இருக்கு.. வா நம்ம இருவரும் போலாம்” என்றான் கண்களில் குறும்பு மின்ன.

“அப்பா சாமி ஆளைவிடு. இன்னும் ஒரு வாரம் இங்கே தங்கியிருந்து வந்த வேலையை முடித்துவிட்டு ஊருக்குப் போகணும்” என்றவள் நடந்தபடியே கூறினான். அப்போது அவர்களை நோக்கி ஒரு உருவம் வருவதை கவனித்தாள் மகிழ்.

ஆறடி உயரத்தில் அகன்ற மார்புடன், திரண்ட தோள்களோடும் தன்னை நோக்கி வந்தவனை அடையாளம் கண்டுகொண்டவள் தன்னருகே நின்றவனை திரும்பிப் பார்த்தாள்.

அவளின் பார்வையை கண்டு, “என்னாச்சு மகிழ்” என்றதும் மறுப்பாக தலையசைத்துவிட்டு, “ஒண்ணுமில்ல..” என்றவாளோ தன்னை நோக்கி வருபவனை இமைக்காமல் நோக்கியபடி முன்னேறினாள்.

அவன் அவளைக் கடந்து செல்லும்போது இவளின் பார்வை உணர்ந்து கேள்வியாக புருவம் உயர்த்தினான். அவளோ அவனை கண்டுகொள்ளாமல் அங்கிருந்து சென்றாள்.

அவள் பார்க்கிங் வந்தும் டிரைவரை காரை எடுக்க சொல்லிவிட்டு பின்பக்கம் கதவைத் திறந்து ஏற அவளுக்கு முன்னாடி அங்கிருந்த அவனின் உருவம் அவளைப் பார்த்து பளிச்சென்று புன்னகைத்தது.

“மகிழ் இப்போ பீல் பெட்டரா..” அவளின் கையில் அழுத்தம் கொடுக்க அதை உணர்ந்து அவளும் ஒப்புதலாக தலையசைத்தாள்.