Uyir kadhal 15 A

Uyir kadhal 15 A

சிறிது நேரம் கழித்து அறையை விட்டு வெளியே வந்த மூவருக்குமே போதை வெகுவாக இறங்கியிருந்தது. தாங்கள் செய்த காரியத்தின் வீரியமும் புரிந்தது.

எப்பொழுது வேண்டுமானாலும் ஆனந்தன் வரக்கூடும். மயங்கிக் கிடக்கும் பூரணியை என்ன செய்வது? எப்படித் தப்பிப்பது என்று யோசிக்கத் துவங்கினர்.

முழு போதையில் நிதானமின்றி உளறியபடி கிடந்த தனாவைப் பார்த்த கிஷோரின் மூளைக்குள் திட்டம் ஒன்று உருவானது. தனாவின் கன்னத்தில் தட்டி அவனை எழுப்பி நிற்க வைத்தவன், கண்கள் சொருகித் தள்ளாடியபடி இருந்தவனை அந்த அறையினுள் அனுப்பி வைத்தான்.

தன்னிலை மறந்த மிதமிஞ்சிய போதையில் இருந்த தனாவுக்கும் மயங்கிய நிலையில் கிடந்த நண்பனின் வருங்கால மனைவி வெறும் பெண்ணாக மட்டுமே தெரிந்தது கொடுமையின் உச்சம்.

தனா வெளியே வருவதற்குள் தங்களுக்குள் திட்டத்தை தீட்டி முடித்திருந்தனர் மூவரும். நடந்த சம்பவத்தை தனாவின் புறம் திருப்பி விடுவது. தாங்கள் இங்கிருந்த சுவடே இல்லாமல் மாடிக்குச் செல்வது என்று முடிவெடுத்திருந்தனர்.

மேசை மேலிருந்த பொருட்களை எல்லாம் அப்புறப்படுத்திக் கொண்டிருக்கும்போது, மீண்டும் அழைப்புமணி ஒலித்தது. இம்முறை வேகமாக சென்று ஜன்னல் வழியாக பார்த்த ஜனார்த்தனனும் கிஷோரும் அதிர்ந்தனர். நன்கு கவிந்திருந்த இருளில் தெருவிளக்கொளியில் ஆனந்தன் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. மழையும் விடாமல் சோவென்று பெய்து கொண்டிருந்தது.

ஆனந்தனைப் பார்த்ததும் என்ன செய்ய என்று புரியாமல் அதிர்ச்சியில் உறைந்த மூவரும் மீண்டும் மீண்டும் ஒலித்த மணியில் வேறுவழியின்றி கதவைத் திறந்தனர்.

ஆனந்தன் வீட்டினுள் நுழையும் நேரம் சரியாக தனாவும் போதையோடு அறையிலிருந்து வெளியே வந்திருந்தான்.

மேஜை மேலிருந்த பொருட்களையும், மிதமிஞ்சிய போதையில் இருந்த தனாவையும் பார்த்த ஆனந்தனுக்கு மிகவும் கடுப்பானது.

“ஏன்டா? வெளியில லைட்டுகூடப் போடல. என்னடா பண்ணிக்கிட்டு இருந்தீங்க? நான் இல்லைன்னதும் இங்கயே ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டீங்களா? மாடிக்குப் போயிருக்க வேண்டியதுதானடா.” என்றபடி தனதறைக்குள் நுழைந்தவனுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

அறைக்குள் நுழைந்தவனுக்கு பூரணியின் நிலையைக் கண்டு உலகமே தட்டாமாலை சுற்றியது.

“பூரணி…” அலறியபடி அவளை ஒரு போர்வையால் போர்த்தியவன், அவளை அணைத்துக் கொண்டு கதறித் தீர்த்தான்.

ஆனந்தனின் பூரணி என்ற அலறலில் தனாவுக்கு சகலமும் ஆடிப்போனது. ஏறியிருந்த போதை சர்ரென்று இறங்க, “பூரணியா?” என்று அதிர்ந்தபடி அறைக்குள் சென்றிருந்தான்.

மூச்சுப் பேச்சில்லாமல் ஆனந்தனின் அணைப்பில் தொய்ந்து போய்க் கிடந்த பூரணியைப் பார்த்தவனுக்கு தான் அந்த நிமிடமே செத்துவிடக்கூடாதா என்று இருந்தது. என்னமாதிரியான ஒரு காரியத்தைச் செய்துவிட்டேன்.

உயிரோடு மறித்துப் போனவன் தலையிலடித்துக் கொண்டு அழ,
தாங்க முடியாத ரௌத்திரத்தோடு தனாவைப் பார்த்த ஆனந்தன்,

“என்னடா பண்ணி வச்சிருக்கீங்க என் பூரணிய? என்ன பண்ணி வச்சிருக்கீங்க?” கேட்டபடி சரமாறியாக தாக்கத் துவங்கினான்.

“என்னைக் கொன்னுடுடா… என்னைக் கொன்னுடு. வாழவே தகுதியில்லாதவன் நான்.” என்றபடி ஆனந்தன் அடித்த அடிகளை தடுக்காமல் வாங்கிக் கொண்டான் தனா.

சத்தம் கேட்டு ஆனந்தனைத் தடுக்க வந்த கிஷோருக்கும் ஜார்ஜூக்கும் ஜனார்த்தனனுக்கும் உதை விழுந்தது.

கட்டுக்கடங்காத ஆத்திரம் கொண்டு கண்மண் தெரியாமல் தாக்கிய ஆனந்தனை மூவராலும் சமாளிக்க முடியவில்லை. அந்தளவுக்கு ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தான் ஆனந்தன்.

ஆனந்தனைச் சமாளிக்க முடியாமல், அங்கே டீவியின் மீது அழகுக்காக வைக்கப் பட்டிருந்த பித்தளை ஃபிளவர்வாஷை எடுத்த கிஷோர், ஆனந்தனின் பின் மண்டையில் தன் பலம் கொண்ட மட்டும் தாக்க, தலையைப் பிடித்தவாறு சுருண்டு விழுந்தான் ஆனந்தன்.

ஆனந்தனை கிஷோர் தாக்கியதைப் பார்த்த தனா, “டேய், அவனை எதுக்குடா அடிச்ச?” என்றபடி கிஷோரின் மீது பாய்ந்து அவனைத் தாக்க, ஏற்கனவே ஆனந்தனிடம் அடிவாங்கி சோர்ந்தும் போதையின் பிடியிலும் இருந்த தனாவைச் சமாளிப்பது எளிதானது மற்ற இருவருக்கும்.
தனாவை அடித்து வீழ்த்தியவர்கள்,

“டேய், போதும் விடுங்க செத்துகித்துத் தொலையப் போறான்.” என்ற கிஷோரின் குரலில் விலகினர்.

உடலளவிலும் மனதளவிலும் வெகுவாக அடிவாங்கி சோர்ந்து தரையில் கிடந்தான் தனா. அவனது உள்ளமோ தலையில் அடிபட்டு ரத்தம் வழியக் கிடந்த தன் நண்பனைப் பார்த்து ஊமையாய் அழுதபடி இருந்தது.

“கிஷோர், அடுத்து என்ன செய்யறது? இந்த விஷயம் மட்டும் வெளிய வந்தா நாம ஐஏஎஸ் கனவை எல்லாம் மூட்டை கட்டி வச்சிட வேண்டியதுதான்.” ஜனார்த்தனனின் கலக்கமான குரலில் தாங்கள் இருக்கும் சூழ்நிலையின் உண்மை நிலவரம் புரிந்தது மற்ற இருவருக்கும்.

“எப்படி இங்க நடந்ததை மறைக்கப் போறோம்? இவனையும் அந்தப் பொண்ணையும் என்ன செய்யறது?” என்றபடி ஆனந்தனை காலால் தள்ளிய ஜார்ஜ், அசைவற்றுக் கிடந்த ஆனந்தனின் அருகில் அமர்ந்து அவனது நாசியில் கை வைத்துப் பார்த்தான்.

“டேய், என்னடா பேச்சு மூச்சில்லாமக் கிடக்கிறான். செத்துட்டானா?” ஜார்ஜின் குரலில் அதிர்ந்து போனவர்கள், பூரணியையும் சோதித்துப் பார்க்க அவளும் மூச்சு பேச்சின்றி அசைவற்றுக் கிடந்தாள்.
தலையில் கைவைத்து அதிர்ந்து அமர்ந்துவிட்டான் கிஷோர்.

மேற்கொண்டு என்ன செய்வது என்றே புரியவில்லை அவனுக்கு.

“இரண்டு பேருமே செத்துப் போயிட்டாங்கன்னு நினைக்கிறேன். இப்ப என்னடா பண்றது. போலீஸ்ல மாட்டிக்கிட்டா நம்ம லைஃப்பே அவ்வளவுதான்.” நடுக்கமிருந்தது கிஷோரின் குரலில். என்ன செய்வது என்றே புரியாமல் தடுமாறி நின்றவர்களை கலைத்தது ஜார்ஜின் குரல்.

“கிஷோர், இவங்க ரெண்டு பேருமே அடிக்கடி சிக்மகளூர் மலைக்காட்டுக்குப் போவாங்க. இப்பவும் இவங்க ரெண்டு பேரையும் கார்ல வச்சு கொண்டுபோய் மலைமேல இருந்து கீழ தள்ளி விட்டுடலாம். ஆக்ஸிடென்ட் மாதிரி செட்டப் செய்துடலாம்டா.

மனித நடமாட்டமே இல்லாத பள்ளத்தாக்கெல்லாம் எனக்குத் தெரியும். அந்த மாதிரி ஏதாவது இடத்துல இருந்து உருட்டி விட்டுட்டா கண்டுபிடிக்கக்கூட முடியாது. ஆனா வேற எந்தப் பிரச்சினையும் வராம உங்க அப்பாவோட செல்வாக்கை வச்சு நீதான் காப்பாத்தனும்.” ஜார்ஜின் யோசனையில் நிமிர்ந்து அமர்ந்தான் கிஷோர்.

அப்போதைக்கு வேறு வழியும் இருப்பது போலத் தோன்றவில்லை அவர்களுக்கு. “இவனை என்ன செய்யறது?” என்று தனாவைச் சுட்டிக்காட்டி ஜனார்த்தனன் கேட்க,

“அவனையும் கூட சேர்த்து உருட்டி விட்ற வேண்டியதுதான்” என்றான் ஜார்ஜ்.

“இல்ல, அது சரி வராது. ஆனந்தன் வீட்ல இருந்து வர்றவங்களை சமாளிக்க இவன் இருந்தாகனும். இவனும் இல்லைன்னா இங்க என்ன நடந்ததுன்னு தோண்டுவாங்க. நம்ம வார்த்தைகளை நம்ப மாட்டாங்க. நாம கண்டிப்பா மாட்டிப்போம்” கிஷோரின் வார்த்தைகள் திருப்தி தரவில்லை ஜனார்த்தனனுக்கு.

“இவன் நமக்கு எப்படி ஹெல்ப் பண்ணுவான்? எனக்கு நம்பிக்கை இல்லை.”

“ஏன் பண்ண மாட்டான்? அவனோட குடும்பம் அவனுக்கு முக்கியம். நமக்கு எதிரா எதாவது பேசினான்னா அவன் குடும்பத்தையே உருத்தெரியாம அழிச்சிடுவோம்.

அதுமட்டுமில்ல நடந்த தப்புல அவனுக்கும்தான பங்கிருக்கு. போலீசுக்குப் போனா அவனும்தான மாட்டுவான்.” குற்றுயிராய் கிடந்த தனாவைப் பார்த்தபடி கூறினான் கிஷோர்.

கிஷோரின் மிரட்டல் வார்த்தைகளைக் கேட்ட தனா கையாலாகாத்தனத்தோடு, கண்களில் வழிந்த கண்ணீரோடு, அவனை வெறித்தான். ஆனந்தன் உயிரோடு இல்லை என்ற செய்தி வேறு அவனை வெகுவாக முடக்கிப் போட்டிருந்தது.

முடிவெடுத்ததும் ஆனந்தன் மற்றும் பூரணியின் உடலைக் கொண்டுசென்று காரில் வைத்தவர்கள், தனாவையும் இழுத்துக் கொண்டு வந்து காரில் ஏற்றினர்.

நள்ளிரவை நெருங்கும் நேரத்தில் அந்தக் கார் சிக்மகளூரை நெருங்கிக் கொண்டிருந்தது. ஜார்ஜின் தந்தை வனத்துறை அலுவலராய் இருந்ததால் பெரிதாக எந்த சிக்கலுமின்றி மலையேறியவர்கள், சுற்றுலா பயணிகள் வழக்கமாக செல்லும் பகுதியைத் தவிர்த்து அடர்ந்த காடுகள் இருந்த மலையுச்சியை நோக்கிச் சென்றனர்.

மலை உச்சியை அடைந்ததும் காரை விட்டு இறங்கியவர்கள், தனாவை இழுத்து வந்து அவனையே காரைத் தள்ளிவிடச் சொல்லவும், மறுத்தவனை வெகுவாக மிரட்டி செய்ய வைத்தனர். அது மட்டுமின்றி தனா காரைத் தள்ளி விட்டதை தங்களின் அலைபேசியில் ஃபோட்டோவும் வீடியோவும் எடுத்து வைத்துக் கொண்டனர்.

“நாங்க சொல்றதை கேட்டு நடந்துக்கலைன்னா இந்த ஃபோட்டோ, வீடியோ எல்லாமே போலீசுக்குப் போகும். நீதான் கொலை செய்தன்னு ஈசியா நம்ப வைப்போம். அதுமட்டுமில்ல உன் குடும்பத்துல ஒருத்தவங்ககூட உயிரோட இருக்க முடியாது. புரிஞ்சுதா?”

மிரட்டியவர்களை எதிர்த்து எதுவுமே செய்ய முடியாமல் போனது தனாவால். ஆனந்தனையும் பூரணியையும் காணவில்லை என்று தேடிய போலீசுக்கு ஒருவாரம் கழித்தே அவர்கள் மரணமடைந்ததை கண்டுபிடிக்க முடிந்தது. கிஷோர் மற்றும் ஜனார்த்தனனின் பெற்றோர்களின் செல்வாக்கை வைத்து ஆனந்தனின் மரணம், விபத்து வழக்காக பதியப்பட்டது. அந்த வழக்கும் வெகு விரைவில் மூடப்பட்டது.

அதன்பிறகு நால்வருமே அந்த வீட்டையும் காலி செய்துவிட்டு பயிற்சி வகுப்பையும் பாதியிலேயே விட்டுவிட்டு அவரவர் ஊருக்குச் சென்றனர். எந்த காலத்திலும் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ள வேண்டாம் என்றும், அப்படிச் சந்தித்துக் கொண்டால் தேவையில்லாத பிரச்சனைகள் வரக்கூடும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

ஆனந்தனின் இழப்பு தனாவை மோசமாக பாதித்தபோதும், செல்வாக்கான பின்னணி கொண்ட அவர்களை எதிர்த்து எதுவும் செய்யமுடியாது என்ற உண்மையும், அப்படியே போலீசுக்குப் போனாலும் தான் மட்டும்தான் குற்றவாளியாக்கப் படுவோம் என்பது புரிந்ததாலும், தன் குடும்பத்துக்கு அவர்களால் எந்த ஆபத்தும் வந்துவிடுமோ என்ற பயத்தாலும் தன் மனசாட்சிக்கு விரோதமாக ஆனந்தனின் இறப்பு பற்றிய உண்மைகளை மறைத்தான் தனா.

ஆனாலும், இத்தனை வருடங்களில் மெல்லக் கொல்லும் விஷம் போல அவனது மனசாட்சியே அவனைக் கொன்று கொண்டிருக்கிறது என்பதுதான் நிஜம். நண்பனின் அழிவுக்குத் தான்தான் காரணம் என்பதால் தனக்கென ஒரு வாழ்க்கை கிடையாது என்பதில் உறுதியாக நின்றுவிட்டான்.

தற்போது நிகழும் நிகழ்வுகள் தனாவையும் வெகுவாக குழப்பியுள்ளதைக் கூறியவன், கிஷோரும் ஜனார்த்தனனும் கொலை செய்யப்பட்டபோது யாரோ அவர்களது பணியின் நிமித்தம் தோன்றிய எதிரி என்றெண்ணிக் கொண்டவனுக்கு, ஜார்ஜின் கொலை பெரும் அதிர்ச்சியையும் அதே நேரத்தில் பெரும் நிம்மதியையும் அளித்தது.

மூவரின் கொலை வழக்கையும் சரண் விசாரிப்பதை தெரிந்து கொண்டவன், வழக்கு விபரங்களை அறிந்து கொள்ள தனக்கு நம்பிக்கையான ஒருவனை பின்தொடரச் சொல்லியிருப்பதையும் கூறினான்.

தனா நடந்ததைச் சொல்லி முடிக்கும்போது அறையில் பெருத்த அமைதி நிலவியது. ஹரிணியும் சுஜியும் விடுபட முடியாத ஒரு அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தனர்.

என்ன தவறு செய்தார்கள் ஆனந்தனும் பூரணியும்? அவர்களுக்கு ஏன் இப்படி ஒரு நிலைமை?
மோசமான சிலரின் தகாத ஆசைக்கு பலியான பூரணியும், நண்பர்கள் என்று நம்பியவர்களாலேயே பெரும் துயரை அடைந்த ஆனந்தனும் ஹரிணியின் மனக்கண் முன் வந்து சென்றனர்.

‘தன் தனா அண்ணன் மட்டும் அன்று மது அருந்தாமல் இருந்திருந்தால், சூழ்நிலையை அவதானித்து பூரணி சற்று எச்சரிக்கையாக இருந்திருந்தால், சொன்ன நேரத்திற்கு ஆனந்தனால் வரமுடிந்திருந்தால், அநியாயமாக அவர்களது வாழ்க்கை அழிந்து போயிருக்காதே’ எண்ண எண்ண மனக்குமுறலை அடக்க முடியவில்லை அவளால்.

ஒட்டுமொத்த கோபமும் தனா மேல் திரும்பியது. இவ்வளவு மோசமான கோழையாக அவனை சற்றும் எண்ணியிராதவளுக்கு தன் அண்ணன் மீது தான் வைத்திருந்த பிம்பம் உடைவதைத் தாங்க முடியவில்லை.

“என்ன காரியம் பண்ணி வச்சிருக்க? உன்னை என் அண்ணன்னு சொல்லவே எனக்கு வெட்கமா இருக்கு. ஹேப்பிண்ணாவோட வாழ்க்கைய அழிச்சிட்டு கொஞ்சம்கூட குற்றவுணர்ச்சி இல்லாம எப்படி இருக்க முடிஞ்சது உன்னால?” வெடித்தாள் ஹரிணி.

“ஹரிணிம்மா, நான் தினம் தினம் குற்றவுணர்ச்சியில செத்துக்கிட்டு இருக்கேன்டா. நான் பண்ணது தப்புதான். அந்த நேரத்துல என்னால வேற எதுவுமே செய்ய முடியலடா.” முகத்தை மூடிக்கொண்டு கதறினான் தனா.

“அன்னைக்கு மட்டும் நீங்க போதையில இல்லாம இருந்திருந்தா இப்படி நடந்திருக்குமா தனாண்ணா? உங்க நண்பனோட அழிவுக்கு நீங்களே காரணமாகிட்டீங்களே.” சுஜியின் வருத்தமான பேச்சு மனதை வெகுவாகத் தைத்தது தனாவுக்கு.

“என்ன பேசற சுஜி? குடிச்சிருந்தா தாய்க்கும் தாரத்துக்கும் வித்தியாசம் தெரியாமப் போயிடுமா? சோத்துக்குப் பதிலா வேற எதையாவது சாப்பிடுவாரா?” வெகுவாக கோபமிருந்தது ஹரிணியின் குரலில்.
க்

“ஹரிணிம்மா நான் செஞ்சது தப்புதான்… அண்ணனை மன்னிச்சிடுடா.” மன்றாடினான் தனா. தன் தங்கையின் பார்வையிலிருந்து தான் கீழிறங்கியது தாங்க முடியவில்லை அவனால்.

“மன்னிப்பா? நீ செய்த காரியத்துக்கு உனக்கு மன்னிப்பு எப்படிண்ணா கிடைக்கும்? குடிச்சிருந்தா எந்தப் பொண்ணாயிருந்தாலும் வித்தியாசம் தெரியாதா?
ஒருவேளை அன்னைக்குப் பூரணி இருந்த இடத்துல நான் இருந்தாலும் எனக்கும் அதுதான் நிலைமையா? என்கிட்டயும் நீ அப்படிதான் நடந்துப்பியா?”

“ஹரிணி…”
ஹரிணியின் ரௌத்திரமான கேள்வியில் பொடிப் பொடியாய் உதிர்ந்து போனான் தனா. மிகப் பெரிய அதிர்ச்சியாய் தாக்கியது அவளது கேள்வி. ஹரிணியின் பார்வையில் தான் என்னவாய் இருக்கிறோம்… தாங்கவே முடியவில்லை அவனால். அதிர்ந்த பார்வையோடு அசையாமல் அமர்ந்துவிட்டான்.

“உங்க நாலு பேரால ஹேப்பிண்ணா எவ்வளவு கஷ்டம் அனுபவிச்சு, இத்தனை வருஷமா தன் பெத்தவங்களைக் கூடப் போய் பார்க்காம அந்த காட்டுல பைத்தியம் மாதிரி அலைஞ்சிக்கிட்டு இருக்கார் தெரியுமா?

அந்த மூனு பேரும் செய்த தப்புக்குத் தண்டனையா அவங்களைப் பழிவாங்குனது ஹேப்பிண்ணாதான்.”
இன்னதென்று விவரிக்க முடியாத உணர்வு தனாவுக்குள். தன் நண்பன் உயிரோடிருக்கிறான் என்ற செய்தி உள்ளுக்குள் இத்தனை நாட்களாக குடைந்து கொண்டிருந்த தவிப்பை லேசாக ஆற்றுப்படுத்தியது. அசையாத பார்வையோடு ஹரிணியைப் பார்த்திருந்தான்.

“நீ செய்த தப்புக்கான தண்டனையும் உனக்குக் கிடைக்கனும். நான் கிடைக்க வைப்பேன். இப்பவே நான் சரணுக்கு ஃபோன் பண்றேன். எனக்கு இப்படி ஒரு அண்ணனே இல்லைன்னு நினைச்சுக்கறேன்.” அழுகையோடு கூறியவள் எழுந்து அறைக்குள் சென்றிருந்தாள்.

ஹரிணியின் வார்த்தைகளில் வெகுவாக அதிர்ந்து அமர்ந்திருந்த தனாவைப் பார்த்த சுஜியும் எழுந்து ஹரிணியின் பின்னே சென்றாள்.

அசைவில்லாத நிலைத்த பார்வையோடு தளர்ந்து போய் அமர்ந்திருந்தான் தனா.

—வேட்டை தொடரும்.

error: Content is protected !!