kaarkaala vaanvil-5

kaarkaala vaanvil-5

அத்தியாயம் – 5

ஆங்கில இசை மெதுவாக கசிய கலர் கலரான லைட் வெளிச்சத்தில் ஆண், பெண் பேதம் இல்லாமல் ஆடிக்கொண்டு இருக்க இன்னொரு புறம் போதையோடு அமர்ந்திருந்தனர் இளைஞர் பட்டாளம்.

நாளைய தலைமுறை என்று சொல்லப்படும் இவர்கள் அனைவரும் காலச்சாரம் பற்றிய கருத்தை தவறாக புரிந்து வைத்திருந்தனர். தந்தையின் சம்பாத்தியத்தில் கார், பணம், பதவி, பங்களா என்று வாழும் பணக்கார குடும்பத்தின் வாரிசுகள்.

அனைவரையும் பார்த்தபடியே சிகரெட்டை பற்ற வைத்த கார்த்திக், “என்ன வேந்தா எல்லோரையும் வேடிக்கை பார்த்துட்டு உட்கார்ந்து இருக்கிற” என்று கேள்வியாக புருவம் உயர்த்தினான்.

“வேற என்ன பண்ணனும்னு சொல்ற” என்று கேள்வியாக புருவம் உயர்த்தினான் வேந்தன்.

“என் லவ் சக்ஸஸ் ஆகிருச்சு என்று பார்ட்டி வெச்சேன். நீ மட்டும் எதையும் குடிக்காமல் அமைதியாக இருக்கிற” என்று புன்னகையுடன் விசாரிக்க வேந்தனின் மனதில் அண்ணனின் முகம் தோன்றி மறைந்தது.

“இல்ல எனக்கு தண்ணி மற்றும் சிகரெட் விஷயம் எல்லாம் எனக்கு ஒத்துவராது” என்று கூறவே வேந்தனின் பார்வை அங்கிருந்தவர்களை சுற்றி வந்தது.

“என்னடா எல்லோரையும் ஒரு மாதிரி பார்க்கிற” அவன் சிகரெட்டை இழுத்தபடியே கேட்க,

“ஒண்ணுமில்ல மச்சி. இங்கே இந்த ஆட்டம் போட்டுட்டு நாளைக்கு வரபோகும் மனைவியிடம் எப்படி நான் உத்தமன்னு நிருபீக்கிறாங்க என்ற கேள்விக்கு விடை தேடிட்டு இருக்கேன்டா” என்றபடி சேரில் சாய்ந்து கம்பீரமாக அமர்ந்தான் மேகவேந்தன்.

“அது இந்த காலத்து பசங்களுக்கு கைவந்த கலை மச்சி” காலரைத் தூக்கிவிட்டு கூறியவன் தன் முன்னிருந்த முழு பாட்டில் சரக்கையும் வாய்க்குள் ஊத்திக் கொண்டான்.

அந்தநேரத்தில் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தவனைக் கண்டதும் கார்த்திக் புருவங்கள் கேள்வியாக சுருங்கியது.

“டேய் மச்சி உங்க அண்ணாவுக்கு க்ளப் வர பழக்கம்  இல்லன்னு சொன்ன.. அங்கே  பாரு உங்க அண்ணா வரும் வேகத்தை..” போதையில்  உளற சட்டென்று திரும்பிப்  பார்த்தான்.

அவன் திரும்பிப் பார்க்க கோபத்தில் விழி இரண்டும் சிவக்க உள்ளே நுழைந்த தமையனைக் கண்டதும், “அண்ணா” என்றவன் எழுந்து நின்றான்.

அங்கே வேந்தனை எதிர்ப்பார்க்காதவனின் பார்வை அனல் பறக்க கண்டு, “என்னண்ணா பிரச்சனை” என்று அவன் விசாரிக்கும் முன்னே கார்த்திக் கன்னத்தில் பளார் என்று ஒரு அறைவிட அதில் அடித்த மொத்த போதையும் இறங்கிவிட தன் முன்னே நின்றவனை அடையாளம் கண்டு பயத்துடன் எழுந்து நின்றான்.

அதை எதிர்பார்க்காத அனைவரும் அவனை திரும்பிப் பார்க்க, “ஸாரி” என்று பொதுவாக கூறியவன் கார்த்திக்கை இழுத்துக்கொண்டு வெளியே வர அண்ணனை பின் தொடர்ந்தான் வேந்தன்.

“என்னடா நினைச்சிட்டு இருக்கிற மனசில்? மும்பை வந்துட்ட நீ செய்கின்ற தப்பு ஊருக்கு தெரியாது என்ற நினைப்பா?” என்றவன் கோபத்தில் உறும வேந்தனின் பார்வை கார்த்திக் மீது கேள்வியாக படிந்தது.

அண்ணனின் கோபமும், கார்த்திக்  அமைதியும் வேந்தனின் மனதில் கேள்வியை எழுப்ப, “என்னடா பண்ணி வெச்சா? அதுவும் அண்ணா கோபப்படும் அளவிற்கு” என்று வேந்தன் கோபத்தில் பல்லைக் கடித்தான்.

“நான் காலேஜ் படிக்கும்போது ஒரு பொண்ணை லவ் பண்ணேன் வேந்தா. மும்பை வரும்போது அவளை கல்யாணம் பண்ணிட்டு அங்கேயே விட்டுட்டு வந்துட்டேன்..” என்றவன் சொல்ல அப்போதும் செழியனின் பார்வை கார்த்திக் மீது நிலைப்பதைக் கண்டு வேந்தன் தன் நண்பனை முறைத்தான்.

தன் நண்பனை அண்ணனிடம் விட்டுகொடுக்க மனம் வராமல், “அண்ணா லவ் பண்ண பொண்ணை மேரேஜ் பண்ணிட்டு மும்பை வந்ததுக்காகவா அவனை அடிச்ச” என்று புரியாமல் கேட்டான்.

அவன் இப்போது நேரடியாக தன் தம்பியை முறைக்க, ‘என்ன பண்ணி வெச்சான்னு தெரியல. இவன் வேற கோபத்தில் என்னை முறைக்கிறான்.. டேய் கடன்காரா என்ன காரியம் பண்ணி வெச்சிட்டு வந்தே’ என்று கோபத்தில் இவன் நண்பனை முறைத்தான்.

“அவ இப்போ கசீவாக இருக்கிற..” என்றவன் தொடர்ந்து, “இப்போ நம்ம கம்பெனி ஸ்டாப் சாராவை லவ் பண்றேன்னு நேற்றுதான் ப்ரப்போஸ் பண்ணேன்” என்றவன் ஒரு வழியாக உண்மையை உரைக்க கார்த்திக் மறுகன்னத்தில் பளார் என்று ஒரு அறைவிட்டான்.

“நீ செய்வது உனக்கே தப்புன்னு தெரியல. உன்னை நம்பி வாழ்க்கையை ஒப்படைத்த பொண்ணு அங்கே உயிருக்கு போராட்டிட்டு இருக்கிற.. நீ இங்கே சாராவுக்கு லவ் ப்ரபோஸ் பண்ணிட்டேன்னு பார்ட்டி கொடுத்திட்டு இருக்கிற” செழியன் கோபத்தில் வார்த்தையை கடித்து துப்பினான்.

“உன்னை எங்க அண்ணா அடிச்சது தப்பே இல்ல..”  தன் தமையனுக்கு சப்போர்ட் செய்ய, “அண்ணா தேவிக்கு என்னாச்சு” என்று அவன் பயத்துடன் கேட்டான் கார்த்திக்.

“ஏன் நீ  செய்துவிட்டு வந்த காரியம் தெரியாது..” அவன் அழுத்தமாக கேட்க தலைகுனிந்து நின்றான்.

தேவியை கல்யாணம் முடிந்த மறுகணமே கணவன்  என்ற உரிமையை காட்டிவிட்டு வந்திருந்தான். அங்கே அவன் காட்டிய உரிமை அவளின் வயிற்றில் கருவாக மாறி எட்டு மாதம் ஆகிவிட்டது. அவனை தேடிவந்த அவளின் பெற்றோரிடம் சாராவை லவ் பண்ற விஷயத்தை கூறினான்.

அதைக் கேட்டு அந்தப் பெண் தற்கொலைக்கு முயற்சி செய்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாள். அந்த உண்மையை தன் தந்தையின் மூலம் அறிந்துகொண்ட செழியன் இப்போது கார்த்திக்கை நிற்க வைத்து கேள்வி கேட்டுக் கொண்டிருந்தான்.

“அண்ணா நான் செய்தது தவறுதான்” என்று கார்த்திக் உண்மையை ஒப்புகொள்ள, “டேய் செழியா நான் அப்பாவுக்கு கால் பண்ணி சொல்றேன். நீ கார்த்திக்கை கூட்டிட்டு குற்றாலம் கிளம்பு” என்றான்.

தன் தமையனின் பேச்சிற்கு வேந்தன்  என்றுமே மறுப்பு சொன்னதில்லை என்பதால் அவனும் சம்மதமாக தலையசைக்க, “ஹே லுக் நம்மள  ஒரு பொண்ணு விரும்பினால் அவளை நேசிக்கிறது தப்பில்ல. ஆனால் அவளை ஏமாற்றிட்டு வாழணும்னு நினைப்பது தான் தப்பு” செழியன் கோபத்துடன் அங்கிருந்து நகர்ந்தான்.

“அண்ணா கார்  கீ” என்ற வேந்தனின் குரல்கேட்டு, “இந்தா பார்த்து ஜாக்கிரதையா போ. இவன் அங்கே போய் ஏதாவது கோல்மால் பண்ண மகனே உனக்கும் சேர்த்து அடி விழுகும் நினைவில் வெச்சுக்கோ” அவனின் மிரட்டலில் சிரித்தான் வேந்தன்.

“அண்ணா நான் இவனுக்கு சப்போர்ட் இனிமேல் போடமாட்டேன். அம்மா மேலே பிராமிஸ்” என்ற தம்பியைப் பார்த்து தன்னை மீறி சிரித்த செழியன் கார் கீயை தூக்கி போடவே கேச் பிடித்தவன்,

“ஆமா மணி உன்னை கேட்டா நான் என்ன அண்ணா சொல்றது” என்று அவன் மீண்டும் சந்தேகம் கேட்க, “பெரிய அண்ணன் கேட்ட நான் சீக்கிரமே அங்கே வரேன்னு சொல்லு” என்றவன் தன் கார் டிரைவருக்கு போன் செய்து வர சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான்.

“டேய் அண்ணாவின் கோபம் தெரிந்தும் உண்மையை மறைச்சு கன்னம் வீங்கும் அளவிற்கு வாங்கிக் கொண்டாயே” என்று கூறியபடி வேந்தன் கார்த்திக்கை தன்னோடு அழைத்துக்கொண்டு குற்றாலம் நோக்கி பயணமானான்.

பிரம்மாண்டமான மாளிகையின் உள்ளே நுழைந்ததும் செழியன் வீட்டிற்குள் செல்ல அங்கே மயான அமைதி நிலவியது. இரண்டே ஆண்கள் தங்கி இருக்க அவ்வளவு பெரிய வீட்டை வாங்கி கொடுத்திருந்தார் தர்மசீலன்.

அவன் வருவதைக் கண்ட சிங்காரம், “தம்பி சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா” என்று அக்கறையுடன் கேட்க மறுப்பாக தலையசைத்துவிட்டு வேகமாக மாடி ஏறிவிட்டான். தன்னறைக்கு சென்ற செழியன் தன் அண்ணனுக்கு போன் செய்து தம்பியுடன் கார்த்திக்கை ஊருக்கு அனுப்பிவிட்ட விஷயத்தைக் கூறினான்.

பிரபலமான பத்திரிகை ஒன்றில் மகிழ்வதனியின் பேட்டியை படித்தவனின் புருவங்கள் கேள்வியாக சுருங்கியது. முன்னணி இடத்தில் ஒரு பெண் என்ற எண்ணமே அவனின் மனதை அசைத்துப் பார்த்தது. அவனோ சிந்தனையோடு வெகுநேரம் தூங்காமல் விழித்திருந்தான்.

மறுநாள் காலைப்பொழுது அழகாக விடிந்தது.

தர்மசீலனின் வீடே பரபரப்புடன் காணப்பட்டது. செண்பகம் அங்கிருக்கும் வேலையாட்களை ஒரு  வழி செய்வதைக் கண்டு தர்மசீலனுக்கு சிரிப்பு வந்தது.

“ஏலே செந்தூரா நம்ம கடைக்குட்டி ஊரில் இருந்து வருவதா தகவல் வந்திருக்குல. அவன் வருவதற்குள் தடபுடலாக விருந்து ரெடி பண்ணி ஆகணும்” என்று வீட்டில் இருந்த அனைவரையும் விரட்டி விரட்டி வேலை வாங்கிக் கொண்டிருந்தார் செண்பகம்.

‘கடைக்குட்டி பேரன் வரான்னு சொன்னதும் இவ பதினாறு வயசு புள்ள மாதிரி ஓடி ஓடி வேலை பார்க்கிறா’ என்று உள்ளுக்குள் நினைத்த தர்மசீலன் தன் அருகே யாரோ அமரும் ஆரவாரம் கேட்டு திரும்ப, “என்னப்பா அம்மா எல்லோரையும் பம்பரமாக சுத்தவிட்டுட்டு இருக்காங்க” என்றார் அங்கே நடப்பதைப் பார்த்தபடி.

“அப்பா நைட் செழியன் போன் பண்ணி நம்ம வேந்தன் வருவதைப் பற்றி தகவல் சொன்னான். நான் தெரியாதனமாக அதை பாட்டிகிட்ட உளறிட்டேன். அப்போது இருந்து இதோ இப்படித்தான் இருக்காங்க” என்றான் மணிவண்ணன் தன் பாட்டியைப் பார்த்தபடி.

“அட என்ன ஆத்தா உன் பேரன் வரான்னு சொன்னதும் எங்களை இப்படி வேலை வாங்கற..” என்று செல்லத்தாய் சிலுப்புகொண்டு போக,

“அக்கா நீங்க மற்ற நேரத்தில் வேலை செய்யலன்னு நாங்க யாராவது ஏதாவது கேட்டிருப்போம். இன்னைக்கு என்ற தம்பி ஊரில் இருந்து வரான். இத்தனை நாளாக ருசியான சாப்பாட்டை சாப்பிட்டு இருப்பானோ என்னவோ?” என்று வருத்தத்துடன் கூறிய பெரிய பேரனினை இமைக்க மறந்து பார்த்தார் தர்மசீலன்.

மற்றவர்கள் மதிக்கும் அளவிற்கு நடக்கும் தன் பெரிய பேரனின் மீது அவருக்கு எப்போதும் ஒரு நல்ல எண்ணம் உண்டு. ஆனால் ஊருக்குள் அரசல்புரசலாக சொல்லப்படும் விஷயங்கள் உண்மையா பொய்யா என்று தெரியாமல் சிந்தனையுடன் குழப்பத்தில் இருக்கிறார்.

“இந்நேரம் கார்த்திக் மருத்துவமனையில் விட்டுவிட்டு தம்பி நேராக இங்கேதான் வருவான். சீக்கிரம் எல்லாம் ரெடி பண்ணுங்க. அதுக்குள் நான் ரைஸ்மில் வரைக்கும் போயிட்டு வரேன்..” என்றவன் தன் புல்லட்டில் அங்கிருந்து கிளம்பினான்.

குணசீலன் – பூரணி தம்பதிகளுக்கு மூன்று வாரிசு. முதல் வாரிசு மணிவண்ணன் இருபத்தி எட்டு வயதாகியும் இன்னும் திருமணம் இல்லாமல் இருக்கிறான்.  பத்தாம் வகுப்புக்கு மேல் படிப்பு வரவில்லை என்றதும் தாத்தா மற்றும் அப்பாவுடன் இணைந்து விவசாயம் செய்ய கற்றுகொண்டு இன்று ஊரே மதிக்கும் அளவிற்கு இருக்கிறான்.

இவனுக்கு அடுத்து நம்ம இளஞ்செழியன். எஸ்.வி. இண்டர்ஸ்ரிஸ் எம்.டி. மும்பையில் அவனின் கம்பெனிதான் முதல் இடத்தில் இருந்தது. செழியன் என்றாலே நேர்வழியில் செல்பவன். இந்த துறையில் அவள் இவ்வளவு சீக்கிரம் முன்னணி இடத்தைப் பிடிக்க ஒரே காரணம் அவனின் பொறுமை மட்டுமே.

வீட்டின் கடைக்குட்டி இளவேந்தன் எஸ்.வி. இண்டர்ஸ்ரிஸ் ஜி. எம். அண்ணனுக்கு தப்பாத தம்பி இவனை சொல்லலாம். அவனோடு ஹாஸ்டலில் தங்கிப் படித்தவன் தன் படிப்பை முடித்தும் அண்ணனின் கரம்பிடித்து தொழில் துறையில் அடியெடுத்து வைத்தான்.

அதே நேரத்தில் படிப்பை முடித்துவிட்டு அண்ணனோடு சேர்ந்து தொழிலில் இறங்கிவிட்ட வேந்தனுக்கு குற்றாலம் பக்கம் வந்தே பத்து வருடங்களுக்கு பக்கம் ஆகிவிட்டது.

தன் சொந்த மண்ணில் கால் பதித்த வேந்தன் தாத்தாவிடம் சொல்லி டிரைவரை அனுப்ப சொல்லிவிட்டு அங்கிருந்து ஊருக்குள் மெல்ல நடக்க தொடங்கினான். அந்த ஊர் எப்போதும் போலவே கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் பசுமையோடு இருப்பது அவனின் மனதிற்கு இதமாக இருந்தது.

மும்பையில் திரும்பிய இடமெங்கும் போக்குவரத்து நெரிசல், வானத்தை தொடும் கட்டிடங்கள் என்று பார்த்து பழகிய வேந்தனுக்கு இந்த பசுமை பிடித்திருந்தது. அங்கிருந்த ஆற்றில் பசங்க எல்லாம் பல்டி அடிப்பதைப் பார்த்து ரசித்தபடி நடந்தான்.

அப்போது எந்த தெருவின் வழியாக வீட்டிற்கு போவது என்ற குழப்பம் அவனுக்கு வர தூரத்தில் நடந்து சென்ற பெண்ணைப் பார்த்தான். பாவாடை தாவணியில் பார்க்க அழகாக இருந்தாள்.

அவள் அருகே வந்ததும், “இந்த பெரிய வீட்டுக்கு எப்படி போறது” என்று கேட்டவனை ஏறஇறங்க பார்த்த குழலியோ, “ஊருக்கு புதுசா” என்றாள்.

அவனும் தலையை மேலும் கீழும் ஆட்டுவதைப் பார்த்து, “இதோ இந்தப்பக்கம் நேராக போ. கடைசியாக வரும் பெரியவீடு தான் நீ கேட்ட அட்ரஸ்” என்றவள் புல்லுக்கட்டுடன் செல்வதைப் பார்த்து வேந்தனின் பார்வையில் ரசனை கூடியது.

அவள் சென்றபிறகு, “சொந்த வீட்டுக்கு வழி தெரியாமல் நின்ற ஒரே படிச்ச முட்டாள் நானாகத்தான் இருப்பேன்” என்றவன் புலம்பியபடி அங்கிருந்து நகர்ந்தான்.

அவன் வீட்டிற்கு செல்லும் வழியில் புல்லட் சத்தம் கேட்டு பட்டென்று திரும்பியவனோ, “அண்ணா” என்றான்.

அவனைப் பார்த்தும், “டேய் வேந்தா காரில் வரேன்னு செழியன் சொன்னான்” என்றவனின் பின்னோடு ஏறியமர்ந்தவனோ, “ஊருக்கு வரும்வரை காரில் தான் வந்தேன்” என்று முகத்தைப் பாவமாக வைத்துகொண்டான்.

“அப்புறம் எப்படி நடந்துவர” என்றவன் குறுக்குவிசாரணையில் இறங்க, “ஹி.. ஹி.. ஆர்வகோளாறு அண்ணா. நம்ம ஊர் சுற்றி பார்த்தபடி போலன்னு சொல்லிட்டு டிரைவரை வரச்சொல்லி காரை அனுப்பிவிட்டு நடந்தே வரேன்” என்றான்.

அவன் வளர்ந்தபோதும் இன்னும் குழந்தைத்தனம் மாறாமல் இருப்பதை நினைத்து வாய்விட்டு சிரித்த மணிவண்ணன், “ஆர்வகோளாறில் இப்படியாடா பண்ணுவ” என்று கிண்டலடித்தவன், “செழியன் எப்படி இருக்கான்” என்று விசாரிக்கவும் மறக்கவில்லை.

“அண்ணா மும்பையை ஒரு வழி பண்ணிட்டு இருக்கான்” அவன் பெருமையாக கூறுவதை ரசித்தபடி வண்டியை வீட்டின் முன்னாடி நிறுத்திவிட்டு இறங்கினான்.

அதற்குள் ஆரத்தி தட்டுடன் வந்த பூரணி தன் மகனுக்கு ஆரத்தி எடுத்துவிட்டு நகர குணசீலன் மகனை ஆரத்தழுவி கொண்டார். அதன்பிறகு செண்பகம் பேரனைப் பார்த்தும் கண்ணீர்விட வீடே நிறைந்து தான் போனது. மறுநாள் வழக்கம்போல அங்கிருந்த இடங்களை சுற்றிப் பார்க்க கிளம்பினான்.

 

error: Content is protected !!