En kadhalin visai 31

என் காதலின் ஈர்ப்பு விசை

மேக்னாவிடம் தன் மனதில் இருந்த அவள் மீதான காதலை வெளிப்படுத்திய பிறகே சித்தார்த் சற்று நிம்மதியாக உணர்ந்தான்.

அவள் கண்களிலும் தன் மீதான காதலை பார்த்தவன் அவள் இன்னும் சரியான ஒரு முடிவுக்கு வர முடியாமல் குழப்பத்தில் இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டு அவளுக்கு சிறிது இடைவெளி கொடுக்கலாம் என்று முடிவுசெய்தான்.

மனதுக்குள் காதலை வைத்துக்கொண்டு வெளியில் சாதரணமாக இருப்பதுபோல் அவள் முன்னிலையில் அவனால் நடக்க முடியவில்லை.

மேக்னா தன் காதலை ஏற்றுக் கொண்டாலும் தன் அன்னையின் அனுமதி கிடைக்கும் வரை அதற்காக காத்திருக்க வேண்டும் என்று தன் மனதை வலுவேற்றிக் கொண்டவன் தன் காதலுக்கு பதிலாக அவள் எந்த வகையான முடிவெடுத்தாலும் மனதார அதற்கு கட்டுப்படவேண்டும் என்று தன்னைத்தானே தேற்றிக் கொண்டு தன் வீடு வந்து சேர்ந்து வெகு நாட்களுக்குப் பின்னர் சற்று நிம்மதியாக கண்ணயர்ந்தான்.

அதன்பிறகு வந்த நாட்களில் மேக்னாவும் அவனை சந்திக்கவில்லை அவனும் அவளை எந்த வகையிலும் தொந்தரவு செய்யவில்லை.

அவளாக நன்றாக யோசித்து ஒரு நல்ல முடிவுக்கு வரட்டும் என்று அவளை அவள் போக்கிலேயே விட்டவன் எப்போதும் போல தன் வேலைகளில் கவனத்தை செலுத்தத் தொடங்கினான்.

என்னதான் மேக்னாவை தொந்தரவு செய்யக்கூடாது என்று அவன் தன் மனதைக் கட்டிப் போட்டு வைத்திருந்தாலும் அவள் வீட்டைக் கடந்து செல்லும் போதெல்லாம் அவளைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் அவன் மனதில் எழாமல் இல்லை.

ஒவ்வொரு நாளும் இரவு வேளையில் தன் வீட்டின் பின்புறமாக இருக்கும் காகிதப் பூ பந்தலின் கீழே அமர்ந்திருப்பவன் அவளது வருகையை எதிர்பார்த்து காத்திருப்பான்.

ஆனால் அவன் எதிர்பார்ப்பு ஒரு நாளும் பூர்த்தி ஆனதில்லை.

வெளியே காத்திருந்த அந்த காவல் அதிகாரிக்கு தெரியாது அவன் காதலின் ஈர்ப்பு விசையான மேக்னா ஒவ்வொரு நாளும் அவள் அறைக்குள்ளேயே இருந்து அவனை கண்காணித்து கொண்டு இருப்பது.

என்ன தான் அவனை அவன் அறியாமல் அவள் பார்த்து கொண்டு இருந்தாலும் தான் செய்து முடிக்க வேண்டிய காரியத்தில் மட்டுமே தன் கவனம் இருக்க வேண்டும் என்று தன்னைத்தானே கட்டுப்படுத்தி வைத்திருந்தாலும் அவர்கள் இருவரது மனங்களும் வாலறுந்த காற்றாடியாக தடுமாற்றத்தில் தான் பயணித்துக் கொண்டிருந்தது.

****************************************

மேக்னாவிடம் சித்தார்த் தன் மனதை பகிர்ந்து ஒரு வாரம் கழித்து இருந்த நிலையில் அன்று அவன் வழக்கம் போல ஸ்டேஷனில் இருந்து தன் வேலைகளை செய்து கொண்டிருக்க வெகு நாட்கள் கழித்து ஜெஸ்ஸியிடமிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது.

“ஹலோ ஜெஸ்ஸி! என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம்? அவ்வளவுக்கு மேடம் பிஸியா?”

“பிஸி எல்லாம் இல்லடா வீட்ல மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க அதுல உன்னோட பேசவே கிடைக்கலை”

“கங்கிராஜுலேசன் என்ன எல்லாம் செட் ஆகிடுச்சா?”

“கிட்டத்தட்ட”

“ஹேய்! சூப்பர் ஜெஸ்ஸி! யாரு மாப்பிள்ளை? என்ன பண்றாங்க? எப்ப கல்யாணம்? பார்த்தியா! இவ்வளவு நாளா பழகிட்டு ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்ல”

“ஹேய்! சித்! கொஞ்சம் இருடா எனக்கே இன்னிக்கு தான் கன்பார்ம் பண்ணிட்டு அப்பா சொன்னாங்க நம்ம டிசிபி சாரோட பையன் ஜார்ஜ் தான் மாப்பிள்ளை”

“ஓஹோ! சூப்பரு கடைசியில் போலிசும் போலிசும் சேர்ந்து ஒரு குடும்பத்தை நடத்த போறாங்களா? அப்போ கடைசியில் நீயும் கடி வாங்க போற என்ன தெரியாமல் கொண்டு போய் காலை விடப் போற அவ்வளவு தானே?”

“ஹைய்யோ! சித்! அதை நீ இன்னும் மறக்கலயா? அப்படியே ஞாபகம் வைத்து சொல்லுற!”

“அதை எப்படி நான் மறப்பேன்? எனி வே என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜெஸ்ஸி”

“உன் வாழ்த்துக்கள் எல்லாம் எனக்கு இப்போ தேவை இல்லை வர்ற ஞாயிற்றுக்கிழமை எங்க வீட்டில் நிச்சயதார்த்தம் ஏற்பாடு பண்ணியிருக்கு ஒழுங்கு மரியாதையா அம்மா, அப்பா எல்லோரையும் கூட்டிட்டு வந்து சேரு”

“என்ன இப்படி சொல்லிட்ட? கண்டிப்பாக வருவேன் நான் இல்லாம உன் கல்யாணம் நடக்குமா என்ன? வந்து உன்னை கதற விடமாட்டேன்?”

“அதையும் பார்த்துடலாம் அப்புறம் உன்னோட லவ் என்னாச்சு?” ஜெஸ்ஸியின் கேள்வியில் அவ்வளவு நேரமும் வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருந்த சித்தார்த் சட்டென்று அமைதியாகிப் போனான்.

“ஹலோ! சித்! லைனில் இருக்கியா?”

“ம்ம்ம்ம் இருக்கேன் சொல்லு”

“என்னாச்சு சித்தார்த் திடீர்னு சைலன்ட் ஆகிட்ட ஏதாவது பிரச்சினையா?”

“பிரச்சினைதான் ஜெஸ்ஸி” இதுநாள் வரை தங்கள் வீட்டிலும், மேக்னாவுடனும் நடந்த விடயங்களை எல்லாம் ஒன்று விடாமல் பகிர்ந்து கொண்டவன்

“இப்போ என்ன பண்ணறதுன்னு தெரியல ஜெஸ்ஸி அடுத்து என்ன செய்யப் போறேன்னும் தெரியல! ஒரே குழப்பமாக இருக்கு இதை யோசித்து யோசித்து ராத்திரியில் தூக்கமும் போச்சு”என்று கூறவும் அவனது கலங்கிய குரல் கேட்டு மறுமுனையில் ஜெஸ்ஸி அமைதியாகிப் போனாள்.

“சித்! நீ இவ்வளவு பீல் பண்ணி நான் பார்த்ததே இல்லையே இந்தளவிற்கு நீ பீல் பண்ண வேண்டிய அவசியமே இல்லை சித் மேக்னாவிற்கு உன்னை பிடித்திருந்தால் அவள் உனக்கு எப்பவோ சம்மதம் சொல்லி இருப்பாளே! அவளுக்கு இதில் எல்லாம் ஈடுபாடு இல்லையோ என்னவோ? நீதான் அவ என்ன முடிவு எடுத்தாலும் கட்டுப்படுவேன்னு சொல்லி இருக்கியே அப்புறம் என்ன?”

“………..”

“நீ அமைதியாக இருக்குறதைப் பார்த்தால் உன்னால அவளை மறந்து இருக்க முடியாது இல்லையா?”

“………..”

“சொல்லு சித்! அப்படித்தானே? சொல்லுடா!”

“ஆமா ஜெஸ்ஸி! என்னால அவளை மறக்க முடியாது ஆனா அம்மா!”

“சரி நீ முதலில் நான் சொல்லுவதை செய் ஞாயிற்றுக்கிழமை எங்க வீட்டிற்கு வரும்போது உன் கூட மேக்னாவையும் கூட்டிட்டு வா அவகிட்ட நேரடியாக இதைப் பற்றி கேட்கலாம் மனதிற்குள்ளேயே வைத்துக் கொண்டு இருக்க இது ஒண்ணும் சாதாரணமான விஷயம் இல்லை சித்! உன் வாழ்க்கை என் பிரண்ட்டோட வாழ்க்கையில் ஒரு பிரச்சினை வந்தால் அதை நான் தானே தீர்த்து வைக்கணும்”

“ப்ப்ப்பா! ஐஸ் ரொம்ப பாரமாக இருக்கு‌ ஜெஸ்ஸி” சித்தார்த் சிரித்துக்கொண்டே கூற

“டேய்! பிசாசு உனக்கு போய் உதவி செய்ய வந்தேனே என்ன சொல்லணும் எருமை!” மறுபுறம் ஜெஸ்ஸி அவனை சரமாரியாக திட்டத் தொடங்கினாள்.

“கூல்! கூல் ஜெஸ்ஸி! நான் ஞாயிற்றுக்கிழமை உன்னை வந்து சந்திக்கிறேன் பை த வே ரொம்ப தாங்க்ஸ் ம்மா! குழம்பிய குட்டை மாதிரி இருந்த மனதை கொஞ்சம் தெளிய வைத்து இருக்க”

“உன் தேங்க்ஸை தூக்கி பீரோல வச்சுக்கோ! ஒழுங்காக நான் சொன்னமாதிரி ஞாயிற்றுக்கிழமை வந்து சேரு அம்மா கிட்டயும் அப்பா கிட்டயும் மறக்காமல் சொல்லிடு சித்!”

“ஓகே ஜெஸ்ஸி கண்டிப்பாக!” ஜெஸ்ஸியிடம் தன் மனதிற்குள் இருந்த குழப்பங்களை எல்லாம் பகிர்ந்து கொண்டதன் பின்னர் சித்தார்த் மனதளவில் சற்று தெளிவாக உணர்ந்தான்.

அதே தெளிவான மனநிலையுடன் ஒரு கேஸ் விடயமான விசாரணைக்காக வெளியே செல்ல தயாராகி வந்தவன் அந்தத் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த மேக்னாவைப் பார்த்து ஆனந்த அதிர்ச்சியாகி நின்றான்.

‘இப்போ தான் இவளை பற்றி நினைத்தேன் கண் முன்னாடி வந்து நிற்குறா! திங்க் ஆஃப் தி டெவில்! கடவுளே! உங்க விளையாட்டுக்கு ஒரு அளவே இல்லாமல் போச்சு’ புன்னகையோடு வானத்தை பார்த்து பேசியவன்

“மேக்னா!” என்று அழைத்தவாறே அவள் சென்று கொண்டிருந்த பக்கமாக தன் வண்டியை எடுத்துக் கொண்டு சென்றான்.

தனக்குப் பரிச்சயமான குரல் ஒன்றில் தன் பெயரை கேட்கவே யோசனையுடன் திரும்பிப் பார்த்தவள் சித்தார்த்தை அங்கு பார்த்ததுமே முகமெல்லாம் வியர்த்து கொட்ட என்ன செய்வது என்று புரியாமல் அதிர்ச்சியாகி நின்றாள்.

“இ.. இன்ஸ்பெக்டர் சார் நீங்க இங்க?”

“அதை நான் தான் உன் கிட்ட கேட்கணும் இது என் கன்ட்ரோலில் இருக்கும் ஏரியா!”

“ஓஹ்! ஸாரி எனக்கு தெரியாது இன்ஸ்பெக்டர் சார்”

“அது பரவாயில்லை ஆமா நீங்க என்ன இந்த பக்கம்?”

“அது… அது… ஒரு வேலை விஷயமாக ஒருத்தரை பார்க்க வந்தேன்”

“அப்படியா?” அவளது வியர்வை அரும்பிய முகம் அவனுக்கு ஏனோ வித்தியாசமாக பட சந்தேகமாக அவளை பார்த்து கொண்டு நின்றான்.

“இந்த ஏரியாவில் யாரு வேலை தர்றாங்க?”

“அ.. அது எனக்கு தெரிந்த ஒரு ஆளு”

“ஓஹ்! அப்போ சென்னையில் உனக்கு தெரிந்த ஆட்கள் எல்லாம் இருக்காங்களா?” அவனது துளைத்தெடுக்கும் பார்வையில் தன் முகத்தில் இருந்த வியர்வை துளிகளை துடைத்து கொண்டவள்

“அது தனபாலன் மூலமாக தெரிந்த ஆட்கள் தான்” தட்டுத் தடுமாறிய படி அவனைப் பார்த்து புன்னகைத்த படியே கூறினாள்.

“மேக்னா! உங்க மனதில் இன்னமும் அந்த தனபாலனை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கா?” சித்தார்த்தின் கேள்வியில் அதிர்ச்சியாக அவனை நிமிர்ந்து பார்த்தவள்

“இல்லை இல்லை! இன்ஸ்பெக்டர் சார்! அப்படியெல்லாம் எதுவுமே இல்லையே” முயன்று தன்னை இயல்பாக காட்டிக் கொள்வது போல கூற அவளது நடவடிக்கைகளிலேயே அவளின் மனதிற்குள் இருந்த விடயங்கள் அவனுக்கு நன்றாக புலப்பட்டது.

“உன்னோட இந்த தடுமாற்றமே உன் மனதில் இருக்குறதை சொல்லுது மேக்னா! தனபாலனோட அத்தியாயம் முடிந்து போன விஷயம் அவன் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கே போனாலும் அவனால் வெளியே வர முடியாது அந்தளவிற்கு குற்றங்கள் அந்த ஆளு பண்ணி இருக்கான் இந்த கொலைக்காக மட்டும்தான் நாங்க அவனை கைது பண்ண பண்ணதா நினைத்து இருக்கியா? சத்தியமாக இல்லை அவனை இதற்கு முதலில் சட்டரீதியாக எதுவும் பண்ண முடியாத நிலைமையில் தான் எங்க காவல்துறை இருந்தது இப்போ நீ கொடுத்த இந்த கொலை வழக்கு தான் எங்களுக்கு ஒரு துருப்புச் சீட்டாக அவனை கைது பண்ண உதவி இருக்கு அத்தனை சீக்கிரத்தில் அந்த ஆளை வெளியேறி வர நாங்க விடமாட்டோம் அவனுக்கு மரணம் வரைக்கும் ஜெயில் தான் வாழ்க்கை

அதனாலே நீ வீணாக உன் வாழ்க்கையை கெடுத்துக் கொள்ளாதே! இப்போ உன் கூட நர்மதா இருக்கா அவளுக்கு நீ தான் துணையாக இருக்கணும் உனக்கும், அவளுக்கும் ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வழியைப் பாரு அதை விட்டுட்டு இந்த தேவையில்லாத எண்ணங்களை எல்லாம் உன் மனதில் வளர்த்துக் கொள்ளாதே! அவன் பண்ண தப்புக்கு தண்டனை கிடைச்சாச்சு இனிமேலாவது நீ ஆசைப்பட்ட மாதிரி ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ளு மேக்னா!” சித்தார்த் பேசப் பேச அதை எல்லாம் கேட்டு கொண்டு எதுவும் பேசாமல் முகம் வாட அமைதியாக நின்றவள்

“ஐ யம் ஸாரி இன்ஸ்பெக்டர் சார்! நான் திரும்ப திரும்ப தப்பான வழியில் தான் என் வாழ்க்கையை கொண்டு போகப் பார்க்கிறேன் நான் எவ்வளவு முயன்றும் அந்த தனபாலன் மீது இருக்கும் கோபம் மட்டும் மாறவே மாட்டேங்குது நான் ரொம்ப தப்பான பொண்ணு இல்லை?” விரக்தியாக எங்கோ ஒரு மூலையை வெறித்துப் பார்த்துக் கொண்டே கூற

தன் வண்டியில் இருந்து இறங்கி அவள் முன்னால் வந்து நின்று அவள் கண்களை நேருக்கு நேராக பார்த்தபடியே
“நீ தப்பானவ இல்லை மேக்னா! தப்பை தட்டிக் கேட்குறவ ஆனா அதற்கு நீ தேர்ந்தெடுத்த வழிமுறைகள் தான் தப்பு உன்னை தப்பானவன்னு சொன்னால் அநியாயத்தை தட்டிக் கேட்கும் எல்லா தைரியமான பெண்களையும் தப்புன்னு தான் சொல்லணும் நீ ஒன்னும் சமூகத்திற்கு சேவை செய்யுற நல்லவங்களை தண்டிக்கவில்லையே! நீ அவங்களை தண்டித்த முறைகள் தான் கொஞ்சம் முரணானது அதை நீ உணர்ந்து திருந்தி வாழ்ந்தாலே போதும் தப்பை தட்டிக் கேட்க நிறைய நல்ல வழிகள் இருக்கு அதை இனிமேல் பின்பற்ற பாரு இனிமே உன் மனதில் எந்த ஒரு கெட்ட சிந்தனைகளும் இருக்க கூடாது சரியா?” கேள்வியாக அவளைப் பார்க்க அவளும் புன்னகையுடன் அவனைப் பார்த்து தலையசைத்தாள்.

“சரி இன்ஸ்பெக்டர் சார் நான் வீட்டுக்கு கிளம்புறேன் உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி! நான் என்ன தப்பு செய்தாலும் அதை உடனே எனக்கு எடுத்து சொல்லி புரிய வைக்குறீங்க ரொம்ப நன்றி!”

“நன்றி எல்லாம் வேண்டாம் மேக்னா இது என்னோட கடமை! என் காதலுக்கான கடமை” சித்தார்த்தின் கூற்றில் அவள் முகத்தில் இருந்த புன்னகை சட்டென்று மறைந்து குழப்பம் சூழ்ந்து கொண்டது.

“என்னாச்சு மேக்னா?”

“ஒ… ஒண்ணும் இல்ல இன்ஸ்பெக்டர் சார் நான் வர்றேன்” அவனை நிமிர்ந்தும் பார்க்காமல் மேக்னா அங்கிருந்து வேகமாக செல்லப் போக

“மேக்னா ஒரு நிமிஷம்!” என்றவாறே அவள் முன்னால் வந்து நின்றவன்

“வர்ற ஞாயிற்றுக்கிழமை ஜெஸ்ஸிக்கு நிச்சயதார்த்தம் அதற்கு உங்களையும் வரச்சொல்லி சொன்னா” என்று கூறவும்

“நான் எதற்கு சார் அங்கே எல்லாம்?”என்று அவனைப் பார்த்து கூறப் போனவள் அவனது காதல் நிறைந்த பார்வையில் ஏதோ ஒன்று தடுக்க எதுவும் பேசாமல் சரியென்று தலையசைத்து விட்டு சென்று விட இப்போது குழம்பிப் போய் நிற்பது சித்தார்த்தின் முறையாகிப் போனது.

‘ஒரு வேளை மேக்னாவிற்கு உண்மையாகவே எந்த ஈடுபாடும் இல்லையா?’ அந்த எண்ணம் அவன் மனதிற்குள் எழும்போதே ஏதோ ஓர் இனம் புரியாத வலி அவன் மனம் முழுவதும் பரவி அவனை இம்சிக்க ஆரம்பிக்க தன் முன்னால் நடந்து செல்லும் மேக்னாவையே பார்த்துக்கொண்டு நின்றவன் பெருமூச்சு ஒன்றை விட்டபடியே தன் வண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றான்.

மறுபுறம் வீதியால் நடந்து சென்றுகொண்டிருந்த மேக்னாவின் மனதிற்குள்ளோ ஆயிரம் கேள்விகள் எழுந்தது.

‘நான் இன்ஸ்பெக்டர் சாருக்கு தகுதியானவளா?

அவர் எவ்வளவு நல்லவராக இருக்கிறார்? எவ்வளவோ நல்ல விடயங்களை செய்து இருக்கிறார்? ஆனால் நான் என் வாழ்வில் இதுவரை ஒரு நல்ல விடயம் கூட செய்ததில்லையே!

நான் செய்த நல்ல விடயங்களிலும் ஒரு தவறு இருந்து கொண்டே தானே இருக்கின்றது!

இன்ஸ்பெக்டர் சார் என்னை நான் செய்த தவறுகளை மறந்து என்னை ஏற்றுக்கொண்டாலும் அவர் வீட்டில் என்னை ஏற்றுக் கொள்வார்களா?

அவர்கள் வீட்டின் அருகில் தங்க வைப்பதற்கே அவர் அத்தனை தூரம் போராட வேண்டியிருந்தது இதில் அவர் வாழ்க்கையில் என்னை நுழைய விடுவார்களா?

நான் செய்த தவறுகள் எல்லாம் எல்லோருக்கும் தெரிய வந்தால் இப்போது போல என்னுடன் எல்லோரும் பழகுவார்களா?’

‘அப்போ உன் மனதில் இன்ஸ்பெக்டர் சார் மீது எந்த அபிப்பிராயமும், எண்ணமும் இல்லையா?’ அவள் மனச்சாட்சி அவளை பார்த்து கேள்வி எழுப்ப

விரக்தியாக புன்னகைத்து கொண்டவள்
‘அபிப்பிராயம் இருந்தாலும் அதை வெளிப்படையாக என்னால் சொல்ல முடியாத ஒரு நிலையில் அல்லவா நான் இப்போது இருக்கிறேன்?’ தன் மனசாட்சிக்கு பதிலளித்த படியே பின்னால் திரும்பி பார்த்தாள்.

சிறிது நேரத்திற்கு முன்னர் சித்தார்த் நின்றுகொண்டிருந்த அந்த இடம் வெறுமையாக காணப்பட்டது.

‘இன்ஸ்பெக்டர் சார் உங்க மேல எனக்கு எனக்கும் விருப்பம் இருக்கு ஆனால் அதை சொல்லத்தான் என்னால் முடியவில்லை என் மனதிற்குள் இருக்கும் குழப்பங்களை எல்லாம் உங்களிடம் நான் கூற தயாராக இருக்கிறேன் அதற்குப் பிறகும் உங்களுக்கு என் மேல் இந்த காதல் இருந்து உங்கள் வீட்டிலும் எல்லோரும் என்னை மனதார ஏற்றுக் கொண்டால் நானும் உங்களை என் மனதார ஏற்றுக் கொள்வேன்’ வெறுமையாக இருந்த அந்த இடத்தை பார்த்தபடியே தன் மனதிற்குள் கூறிக் கொண்டவள் அடுத்த தடவை அவனை சந்திக்கும் போது தன்னைப் பற்றிய எல்லா உண்மைகளையும் கூறிவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு தன் வீட்டை நோக்கி புறப்பட்டுச் சென்றாள்……