KarisalKattuPenne14

கரிசல் காட்டுப் பெண்ணே 14

 

“எங்க வீட்டு பொண்ண நீ எப்படி லே தப்பா பாக்கலாம்? உண்ட வீட்டுக்கே ரெண்டகம் பண்றீயாலே?” என்று சங்கரன் ஸ்ரீராமின் சட்டையை பிடித்து இழுத்து ஆங்காரமாக கேட்க, உடல் முழுவதும் வியர்த்து நடுங்கி எழுந்து அமர்ந்தான் ஸ்ரீராம்.

‘அப்பாடா, வெறுங்கனவு தான்!’

கனவு‌ நிஜமாக அதிக நாள் இல்லை என்றும் தோன்ற, அவனுக்குள் கலக்கம் இன்னும் அதிகமானது.

இரவின் அரைகுறை தூக்கமும் காலையில் எழுந்ததில் இருந்து மனதை
மையமிட்டிடுந்த குழப்பங்களும் ஸ்ரீராமை ஒருபுறம் பலவீனபடுத்திக் கொண்டு இருந்தன.

சீதா கல்லூரி கிளம்பிய பிறகு, தயங்கி தான் சங்கரன் வீட்டிற்கு வந்தான். அங்கே அத்தையும் மாமாவும் அவனிடம் சாதாரணமாகவே பேசவும் தான் இவனுக்கு சற்று நிம்மதியாக இருந்தது.
இந்த நிம்மதியின் காலம் எவ்வளவு நேரம்?

மரகதம் பரிமாறிய காலை உணவை அரைகுறையாக சாப்பிட்டுவிட்டு, “நான் சாப்பிட வரலன்னாலும் சீதா கிட்ட சாப்பாடு கொடுத்து விடாதீங்க அத்த” என்று சொல்லி விட்டு அவர் பதிலுக்கு நிற்காமல் வெளியேறி வந்து விட்டிருந்தான்.

வழக்கம் போல கட்டிட பணிகள் நடந்தேறிக் கொண்டிருந்தன. வழக்கத்திற்கு மாறாக ஆங்கங்கே குசுகுசுவென்ற சலசலப்புகள் எழுவதும் இவனை பார்த்தும் அடங்குவதுமாக இருந்தன. அதனை கவனித்தவனுக்கு தலையை பிய்த்து கொண்டு கத்திவிடலாம் போல இருந்தது.

தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு வேறுவழி ஏதேனும் கிடைக்குமா, இவர்களின் வாயை ஒட்டுமொத்தமாக அடைக்க, என்று சற்று நிதானமாக யோசிக்க முயன்றான். உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூட முடியுமா என்ன?

மதிய உணவுக்கு கூட மரகதத்திடம் செல்லவில்லை. பசி எடுக்கத் தான் செய்தது எனினும் உணவு உண்ண மனம் வரவில்லை.

வேலையாட்கள் அனைவரும் சாப்பிட சென்றிருக்க, வெறிச்சோடி இருந்த கட்டிடத்தைச் சுற்றி கொண்டிருந்தான்.
பவுனு பாட்டி அவனுக்கான மதிய உணவோடு வந்திருந்தார்.

“மரகதம் உனக்கு சோறு கொடுத்து விட்டுச்சு ராசா, நீ பசி தாங்க மாட்டியாமில்ல, கைய கழுவிகிட்டு வந்து பசியாறு வாய்யா” என்றவர் சுத்தமான இடத்தில் தலைவாழை இலை விரித்து உணவை பரிமாறினார். ஸ்ரீராமும் மறுக்கவில்லை அமர்ந்து பசியாறினான்.

சிமெண்ட் பூச்சு வேலைகள் இன்னும் சில நாட்களில் முடிந்து விடும் தருவாயில் இருந்தன. அடுத்த வாரத்தில் தரையில் மார்பில்ஸ், டைல்ஸ் ஒட்டும் பணிகள் ஆரம்பமாக இருந்தன. தொடர் பணிகளை மேற்பார்வை இட்டபடி, வேலையில் மனதை செலுத்த முயன்றான் அவன்.

# # #

காலை நேரத்தில், அக்கம் பக்கத்து பெண்கள் சேர்ந்து மரகதம் வீட்டு மாடியில் சோற்று வற்றல் பிழிந்து கொண்டிருந்தனர். அவ்வப்போது இவ்வாறு சேர்ந்து செய்வது வழக்கம் தான்.

கைவேலை கையோடிக்க, வாய் பாட்டிற்கு ஊர்கதை அளந்து கொண்டிருக்க, பேச்சு எங்கெங்கோ சென்று பெரிய வீட்டில் வந்து நின்றது.

“வீடாம் வீடு ஊரு உலகத்துல காணாத வீடு… பாக்கவே கண்ணு விரியுது, தெருவையும் நிறைச்சு உசந்து நிக்குது பெரிய வீடு” வெற்றிலை பழக்கத்தில் சிவந்திருந்த வாயோடு பவுனு பாட்டி சிலாக்கிக்க,

“எத்தனை அற்புதமா வீடு அமைஞ்சிருக்கு, ஒத்த ஆளா, எல்லாத்தையும் பாத்து பாத்து செய்யுது ராமு புள்ள, பழக்கத்துலயும் மனசு வெள்ள” பக்கத்து வீட்டு பூவாத்தாவும் மனதார பாராட்டினார்.

“ஆமால்ல, பேங்களூருல பெரிய படிப்பெல்லாம் படிச்சிட்டு வந்திருக்கு, ஆனாலும் எந்த தெனாவெட்டும் இல்லாம மனுசாளுக்கிட்ட எம்புட்டு மறுவாதையா பேசுது அந்த புள்ள” இது எதிர்த்த வீட்டு மணிக்கொடியின் பேச்சு.

“பார்க்கவும் கண்ணுக்கு அழகா இல்ல இருக்காரு, அந்த முரட்டு பயலுங்கள‌ ஒத்த ஆளா அடிச்சு‌ துவச்சு‌ இருக்காரு, காள கிட்ட இருந்து நம்ம சீதாவ காப்பாத்தினது கூட அவக தானாம்மா?” அவர்களில் இளம்பெண் ஒருத்தி ஆர்வமாக கேட்க, மரகதம் நிறைவாய் புன்னகைத்து கொண்டார். தன் பிள்ளையின் பெருமையை ஊரார் புகழும் போது ஒரு தாய்க்குள் ஏற்படும்‌ நிறைவான சந்தோசம் அது.

“ம்க்கும் இந்த மவராசன கட்டிக்க எந்த மவராசிக்கு கொடுத்து வச்சிருக்கோ?” மேலும் அவள் அலுத்துக் கொள்ள, அங்கே கலகலக்கும் சிரிப்பு சத்தம்.

“அந்த கொடுத்த வச்ச மகராசி நம்ம சீதா தான் வேற யாரு?” என்று அன்னம்மாள்‌ பதில் தர, மரகதத்தின் முகம் வெளிரி போனது.

“என்ன அன்னமாக்கா, இப்படி தப்பா பேசுறீக? எம்ம புள்ளங்கள தப்புந்தவறுமா பேசினா, நாக்கழுகி போவும்” என்று மரகதம் ஆதங்கமாக பேச,

“ஆமா போடி, ராமும் சீதாளும் சோடியா வண்டியில வாரதை தான் நான் பார்த்தேனே, உள்ளதை சொன்னா பொல்லாப்பு” அன்னம்மாள் முகவாயை கோணி தோளில் இடித்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார்.

மரகதம் நெறுப்பு குழியில் நின்றிருப்பதைப் போல, கலங்கி நின்றிருந்தார். ஏதேதோ எண்ணி அவருள்ளம் பதைபதைத்தது.

# # #

“அண்ணே, இங்குட்டு கொஞ்சம் வாரது, குத்து கல்லாட்டம் நிக்கேன், என்னய கண்டுக்காம அப்படியே போறீக” வையாபுரி, சங்கரனை பார்த்து குரல் கொடுக்க,

“என்ன விசயம் சீக்கிரம் சொல்லுல, வயகாட்டுல தண்ணீ பாய்ச்ச போவணும்” சற்று அலுத்தபடி அவன் தேநீர் கடையில் வந்து உட்கார்ந்தார் சங்கரன்.

மதியவேலை என்பதால் வையாபுரி தேநீர் கடை வெறிச்சோடி இருந்தது.

“அட போலாம் ண்ணே, நான் என்ன உம்ம பிடிச்சா வச்சுக்க போறேன், ஒரு டீ ஆத்தவா” என்றான்.

“வேணான்னா விடவா போற? போடு”

கண்ணாடி டம்ளரில் அவன் நீட்டிய தேநீரை, ஏறு வெயிலின் வெக்கையையும் பொருட்படுத்தாது சுடசுட உறிஞ்சிக் கொண்டார்.

“நம்ம சீதா கண்ணால பேச்சு எப்படி போகுது அண்ணே” தன் வியர்த்த முகத்தை துண்டால் துடைத்து விட்டபடி அவரின் முன் பென்ச்சில் உட்கார்ந்து கேட்டான்.

“என்னத்த சொல்ல, இப்படி அப்படின்னு தள்ளிட்டே போவுது, தெய்வ குத்தமா இருக்குமோன்னு விளக்கு போட போன இடத்தில பிரச்சனை ஆகி நொந்து போனது தான் மிச்சம்… வாடி கிடக்க புள்ள முகத்த கண்கொண்டு பாக்க முடியல” – மகளின் திருமண கடமையை எண்ணி ஒரு தந்தையின் புலம்பல் இது.

“விசனபடாதண்ணே, யாருக்கு யாருன்னு விதிச்சு வச்சதை நம்மால மாத்த முடியுமா?” தத்துவம் பேசியவன், “ஆமா,‌ நம்ம அக்காவும் மாமாவும் வந்து போனாகளே, நல்ல சேதி ஏதும் தந்தாகளா?” ஆர்வமாக கேட்டான்.

“சீதா படிப்பு முடிஞ்சதும் நாள் குறிக்கலாம்னு சொல்லிட்டு போயிருக்காக” இவர் குரல் இறங்கியே ஒலித்தது.

“நான் சொல்லுதேன்னு தப்பா எடுத்துக்காதண்ணே, எனக்கென்னவோ ராமகிருஷ்ணன் வேணும்னே கண்ணாலத்தை தட்டி கழிக்கிற மாதிரி தான் தோணுது”

“அப்படியெல்லாம் ஏதுமில்ல பா, இன்னும் நாள் கூடி வரல அதான்”

“எதுக்கு அவனையே புடிச்சு தொங்கறீக”

“வேறென்ன செய்ய? பெத்த பொண்ணு நல்லா வாழணும் இல்ல”

“நம்ம ஸ்ரீராமும், சீதாவும் ஒண்ணும்மண்ணா பழகுதுங்க, இவகளை சேர்த்து விடுங்க ண்ணே” என்றவன் கன்னத்தில் ஓங்கி அறை விட்டிருந்தார் சங்கரன்.

“எங்க வீட்டு புள்ளங்கள பத்தி இனிமே தப்புந்தவறுமா பேசிட்டு திரிஞ்ச மவனே வகுந்துடுவேன் வகுந்து” என்று கொதித்து பேசியவர், தேநீருக்கான காசை வைத்து விட்டு, தோளிலிருந்த துண்டை உதறி கொண்டு கோபமாக நடந்து சென்றார்.

“நீங்க கண்ண கட்டிக்கிட்டா பூலோகத்துல இருக்கறவக கண்ணும் இருண்டு போயிடுமோ? நேத்து ராத்திரி கூட சீதா புள்ள ராமுவ பாக்க வந்துட்டு போச்சு, நானே பாத்தேன்ற…” வையாபுரி ஆற்றாமல் அவர் பின்னால் குரல் கொடுத்தபடி இருக்க, அவருக்கு இப்படியே பூமி‌ பிளந்து தன்னை விழுங்கி விடாதா என்று அவமானமாய் இருந்தது.

தங்களின் வீட்டு முற்றத்தில் கணவனும் மனைவியும் ஆளுக்கொரு மூலையில் கவலை அப்பிய முகத்துடன் உட்கார்ந்து இருந்தனர்.

மரகதத்திடம் சிறு விசும்பல் சத்தம். “ராத்திரி நேரம் அதுவுமா வயசு புள்ள கையிலையா சோறு கொடுத்து அனுப்புவ கழுத” சங்கரன் தாழ்ந்த குரலாக தான் கண்டித்து கேட்டார்.

“புள்ள பசியா இருக்குமேன்னு கொடுத்துவிட்டேன் கூட சக்தியும் தான் போனான். இப்படி நாக்கு மேல பல்ல போட்டு பேசுவாங்கன்னு நான் என்னத்த கண்டேன்?” மரகதமும் குரலை உயர்த்தாமல் மூக்கு உறிஞ்சியபடி பதில் தந்தார்.

“ம்ம்” என்று தலையசைத்தவர் முகமும் வாடி வதங்கி போயிருந்தது.

திருமணம் ஆகாத பெண் பிள்ளை மீது இப்படி ஒரு புரளி பேச்சு கிளம்பி இருக்கிறதே, இது எங்கு சென்று முடியுமோ என்ற பயபீதி அவர்களை பிடித்துக் கொண்டது.

“ஏனுங்க மாமா, நானு ஒண்ணு கேக்கவா”

“கேளு புள்ள”

“நம்ம புள்ளங்க மேல, நீங்களும் சந்தேகப்படுறீகளா மாமா?” பயத்துடனே மரகதம் கேட்க,

அவரை நிமிர்ந்து பார்த்த சங்கரன், “நம்ம புள்ளங்க மேல நானே எப்படி சந்தேகபடுவேன் புள்ள, அப்படி நான் சந்தேகப்பட்டா நம்ம வளர்ப்பு மேல‌ தான் சந்தேகப்படணும்” என்றவரின் உறுதியான பதிலில் மரகதம் முகமும் சற்று தெளிந்தது.

“ஆமா மாமா, ரெண்டும் வெள்ளந்தியா பழகுதுங்க, அவக நினப்புல கூட குத்தம் இருக்காது மாமா, இந்த கூறுகெட்ட ஜனங்க தான் இட்டு கட்டி பேசி, கறந்த பாலை, கல்லா பார்க்குதுங்க” என்றவரின் கண்ணில் நிற்காமல் கண்ணீர் பெருகியது தங்கள் பிள்ளைகளின் நல்வாழ்வை நினைத்து.

“யாரை குத்தம் சொல்லி என்னவாக போகுது புள்ள, இந்த பேச்ச இன்னும் வளர விட்டா குடும்ப மானம் சந்தி சிரிச்சு போகும், அப்புறம் நாம நாண்டுகிட்டு சாக வேண்டியது தான்…” என்றவர் சொல்ல, மரகதம் எழுந்தோடி வந்து கணவனின் வாயை பொத்தினார்.

“பொறுக்காத கடுஞ்சொல்லு சொல்லாதீக மாமா, இந்த புரளி பேச்சு நம்ம புள்ளங்க காதுக்கு எட்டறதுக்குள்ள ஏதாவது வழி யோசிங்க மாமா” என்று ஆறுதல் கூற, சங்கரனுக்கும் அதுவே சரியேனப்பட்டது.

“ஆமா புள்ள, இந்த பேச்செல்லாம் சீதாவுக்கு தெரிஞ்சா பாவம் புள்ள கலங்கி போயிடும்… தப்பி தவறி நம்ம ஸ்ரீராம் காதுல இந்த பேச்சு விழுந்தா புள்ள நொறுங்கி போயிடும், தன்னால தான் இதெல்லாம்னு யோசிச்சு உடைஞ்சு போயிடும் பாவம்” என்று தங்கள் பிள்ளைகளின் மனதை உணர்ந்து வருத்தப்பட்டு சொன்னார்.

“ஸ்ரீராம் ரோஷகாரன், சீதா அவனை அடிச்சதுக்கு மாச கணக்கா பேசாம இருந்து இப்ப தான் பேசி இருக்கான். இந்த புரளி கேட்டுச்சுன்னா புள்ள நம்ம விட்டு விலகியே போயிடுவான் மாமா” என்று கலங்கினார்.

“கவலைபடாத மரகதம்,‌ நாளைக்கு வெள்ளனே மெட்ராஸுக்கு போயி, அக்கா, மாமா கிட்ட நிச்சய‌ தேதி குறிச்சிப்புட்டு வந்திடுறேன். அடுத்த வாரத்தில கூட ரெண்டு முகூர்த்த நாளு வருது, சீதா, ராமகிருஷ்ணன் நிச்சயம் முடிஞ்சதுனா இந்த புரளி பேச்செல்லாம் மழை பேஞ்ச காட்டு தீயாட்டம் அடங்கி போயிடும்” என்று நம்பிக்கையோடு சொன்னார்.

“சரிங்க மாமா, அப்படியே செயிங்க” என்ற மரகதம் முகமும் தெளிந்தது.

இவர்கள் பேச்சை கேட்டபடி வெளிவாசலில் நின்றிருந்த ஸ்ரீராம், மனம் நெகிழ்ந்தவனாய் அங்கிருந்து வெளியே நடந்தான்.

இவர்கள் பாசம் எத்தகையது? ஊரே தவறாக பேசும் போதும் கூட தங்கள் வளர்ப்பின் மீது அவர்கள் கொண்டிருக்கும் தளராத நம்பிக்கை எத்தகையது?

வேறு யாராவது இருந்தால் வதந்தியை கேள்விப்பட்டதும் ஸ்ரீராமின் சட்டையைப் பிடித்து, நம்பிக்கை துரோகம் செய்தவன் என்ற முத்திரை குத்தி தெருவில் தள்ளி இருப்பார்கள். ஆனால், பெற்ற பிள்ளைகளுக்கு இணையாக தன்மீதும் குறையாத அன்பும் நம்பிக்கையும் கொண்டிருப்பவர்களுக்கு தன்னால் இயன்றதை செய்தே ஆகவேண்டும் என்று உறுதி ஏற்றுக் கொண்டான்.

ஒரு முடிவோடு தன் கைப்பேசியை இயக்கினான்.

“ஹாலோ ஸ்ரீ, எப்படிடா இருக்க? மிஸ் யூ பேட்லி” மறுமுனையில் ஆர்ப்பாட்டமாய் ஆரம்பித்த குரல் முடிவில் இறங்கி ஒலித்தது.

“நீ உடனே கிளம்பி எங்க கிராமத்துக்கு வா டெடி” இவன் பட்டென்று சொல்ல அவள் குழம்பினாள்.

“என்னடா திடீர்னு வர சொல்ற?” அவள் வியக்க,

“போனை எடுத்ததும் மிஸ் யூனு உருகின இல்ல, இப்ப வர சொன்னா ஏன் ப்ரேக் போடுற?” அவன் குரலில் எரிச்சல் இருந்தது. தான் அழைத்தும் அவள் தயங்குகிறாளே என்ற உரிமை கோபமும் தெறித்தது.

“இப்படி திடீர்னு வர சொன்னா நான் யோசிக்க வேணாமா?”

“அதெல்லாம் ஒரு மண்ணும் வேணா, யோசிக்கறதெல்லாம் மூளை இருக்கிறவங்க செய்யறது”

“டேய், என்ன ஓட்டறயா?”

அவள் குதிப்பதை காதில் வாங்காமல், “ஆன்ட்டி, அங்கிள்கிட்ட நான் சொல்லிக்கிறேன், நீ உடனே கிளம்பி வர” என்று முடிவாக சொன்னான்.

“ஹலோ ஸ்டாப், ஃபர்ஸ்ட் எனக்கு ரீசன் சொல்லு. அப்ப தான் நான் வரணுமா வேணாவா சொல்ல முடியும்!”

“ரீசன் சொன்னா தான் வருவியா? அவ்ளோ தானா?”

“ஓவரா சீன போடாதே, உனக்கு நான் வரணும்னா ஒழுங்கா ரீசன் சொல்லு” அவள் பிடிவாதமாக நின்றாள்.

இவன் சற்று தன்னை நிதானப்படுத்திக் கொண்டு, தன்னையும் சீதாவையும் பற்றி இங்கு தவறான வதந்திகள் உலவுவதையும், இதனால் மாமா, அத்தையின் மன உளைச்சல் பற்றியும் சொன்னான்.

“அடாபாவி… நான் கூட என்மேல எக்கசக்க லவ் பொங்கி வந்து தான் கூப்புறன்னு நினச்சேன் டா, உன் ப்ரண்ட் கல்யாணம் நடக்கறத்துக்காக என்னை கூப்புற இல்ல, போடா”

“ஏய், வீடு ஃபினிஷிங் வொர்க் போயிட்டு இருக்கு, அதனால டைட் ஷெடியூல்ல இருக்கேன். இல்லனா நேரா அங்க வந்து உன்ன காரில தூக்கி போட்டுட்டு இங்க வந்திருப்பேன், ஒழுங்கா நீ நாளைக்கு இங்க இருக்கணும்” அவன் மிரட்டலாக சொல்ல,

“அச்சோ நான் பயந்துட்டேன், போடா” என்று போக்கு காட்டியவள்,‌ “நான் அங்க வந்தா எனக்கு என்ன கிடைக்கும்?” என்று பேரம் பேசினாள்.

“ம்ம் ரெண்டு கன்னமும் சிவக்கிற மாதிரி அறை கிடைக்கும், கடுப்பேத்தாதடி ராட்சசி, வந்து தொலைடி, நீ என்ன கேட்டாலும் வாங்கி தந்து தொலைக்கிறேன்”

“ஜஸ்ட் கூல் அமுல் பேபி, லவ்வர் கிட்ட இப்படி எரிஞ்சு விழ கூடாது, ஆசையா, அன்பா, கொஞ்சம் ஹஸ்கியா பேசணும் புரியுதா?” அவள் பாடம் எடுக்க,

“ஏய் நீ இப்படியே உளரிட்டு இருடி, நான் முதல்ல உன்ன பிரேகப் பண்றேன்” அவன் கடுப்படிக்க,

“ஹாஹா அவ்ளோ தைரியமா டா உனக்கு? பாரு பாரு பண்ணித்தான் பாரு மச்சி?” அவள் குரலிலேயே தெனாவெட்டு தெரிந்தது.

இவனும் சிரித்து விட்டான், “ஏ போக்கிரி, நான் டென்சன்ல பேசிட்டு இருக்கேன், நீ காமெடி பண்ணிட்டு இருக்க, என் கியூட் டேடி இல்ல, ப்ளீஸ் பேபி கிளம்பி வா… எனக்கும் உன்ன பார்க்கணும் போல இருக்குடீ…” ஸ்ரீராம் ஆழமான குரலாய் சொல்ல அவளும் உருகி தான் போனாள்.

அவ்வப்போது இருவரும் பேசிக் கொண்டாலும் இங்கு வந்த பிறகு அதிகம் பேச முடிவதில்லை. அத்தோடு வீடியோ கால் செய்வதற்கும் இங்கு நெட்வொர்க் பிரச்சனை காரணமாக சரிவர கிளியாரிட்டி கிடைப்பதில்லை. எனவே இந்த ஆறு மாதங்களில் இருவரும் தங்கள் பிரிவை உளமார உணர்ந்து இருந்தனர்.

“ஓகே ஸ்ரீ, நான் வரேன்” என்று அவள் சம்மதம் சொல்ல, இவனுக்கு அப்பாடா என்றிருந்தது.

“குட் கேர்ள், ம்ம் அப்புறம் இது கிராமம் வரும்போது ஒழுங்கா டிரஸ் பண்ணிட்டு வா, அங்க போடுற மாதிரி ஃபேஷன் டிரஸ்ஸோட வந்த, இங்க எல்லாரும் உன்ன ஏலியன் மாதிரி பார்த்து வைப்பாங்க, புரியுதா” என்று சொல்ல,

“டேய் போடா, போடா, எனக்கு எப்படி வரணும்னு நல்லா தெரியும்” என்று குரலில் பந்தா காட்டிவிட்டு வைத்தாள் கீர்த்திவாஷினி.

இவனும் அழைப்பை வைத்து விட்டு நிமிர, மாலை பேருந்தில் இருந்து இறங்கி நடந்து வந்துக் கொண்டிருந்த சீதாவை பார்த்து, எந்த நெருடலும் இல்லாமல் சிநேக புன்னகை விரித்தான்.

அவ்வழியே செல்லும் போது பெரிய வீட்டை பார்த்து கொண்டே நடப்பது சீதாவின் பழக்கம்.

இப்போதும் பெரிய வீட்டை பார்க்க, சிமெண்ட் பூச்சு முடிந்து நிமிர்ந்து நின்றது. வெளியே நின்றிருந்த ஸ்ரீராமின் முகமலர்ச்சியைக் கண்டு இவளின் முகமும் இதமாய் மலர்ந்தது.

உடன் வந்திருந்த தோழி கயல்விழி, “உன் ஹீரோவ‌ சைட் அடிச்சது போதும் நடைய எட்டி போடு பசி கொல்லுது வூட்டுக்கு போயி அம்ம செஞ்சு வச்சிருக்கறதை முதல்ல சாப்பிடனும்” என்றாள்.

“சின்னாவ நான் புதுசா பார்க்கற மாதிரி பேசுற,‌ எனக்கு அவன் ஃப்ரண்டா தான் தெரியிறான். உனக்கு ஹீரோவா தெரிஞ்சா நீ சைட் அடிச்சுக்கோ” சளைக்காமல் பேசினாள் சீதா.

“நிசமாவாடி சொல்லுத? உனக்கும் அவகளுக்கும் நடுவுல ஒண்ணுங் கிடையாதா?”

“நீ இட்டு கட்டற மாதிரி எதுவும் இல்ல” என்றவள், “உன்னபத்தி வேணும்னா சின்னா காதுல போட்டு வைக்கவா சொல்லு” தோழியையும் வம்புக்கு இழுத்தாள்.

“ஆள விடு தாயீ, என் ஆத்தா என்னை விளைக்குமாத்துல வகுந்துடும். நான் போறேன்” கயல்விழி பிய்த்து கொண்டு முன்னேறி ஓடிவிட, சீதா அவளை பார்த்து சிரித்தபடியே வீட்டிற்குள் வந்தாள்.

# # #

வருவாள்…